Advertisement

சாரல் 5

            ” ராணி அரிசி எல்லாம் தயார் தானே.. ராஜா கற்பூரம் புது பாக்கெட் எடு…” என கனி அதிகாலை நான்கு மணியளவில் பம்பரமாக சுழன்றுக் கொண்டிருந்தார். எல்லாம் தயாராக கார்த்தி வீட்டினர் அனைவரும் காரில் வந்து இறங்கினர். புது வீட்டின் முன்புறத் தோட்டத்தில் ஷாமியானா போடப்பட்டிருந்தது.செந்தூரம்மாளுக்கு வசதியாக சாய்வு நாற்காலி போடப்பட்டு இருக்க அதில் தான் பெரிய பார்டர் வைத்த பட்டுப்புடவை அணிந்து வசதியாக அமர்ந்திருந்து மகள்களை வேலை வாங்கிக் கொண்டு இருந்தார்.

வந்திருந்தவர்கள் அனைவரும் அங்கு அமர்ந்திருந்தனர்.ரகுவும் பானுமதியும் தங்கள் குழந்தைகளோடு வர , திவ்யா , செளமினி மக்கள் என வீடே கல கல என இருந்தது. ராணி”குமார் அக்காவ அழைச்சுட்டு வாப்பா… பூஜை ஆரம்பிக்கப் போகுது.” எனவும் அந்த வீட்டின் மாடியறையில் புடவைக் கட்டிக் கொண்டு வருகிறேன் என்று சென்றவளை அழைத்து வரச் சென்றான் குமார்.

“அக்கா… பெரியம்மா ரொம்ப நேரமா தேடுறாங்க … நீயும் உட்காரணுமாம்.. வா…” எனக் கதவைத் தட்ட … அதிகாலையிலும் தேவதையாக அறையிலிருந்து வெளியே வந்தாள் அமுதினி.

“என்னடா இப்படி புகை மூட்டமா இருக்கு.., “ஏன் கா உன் மேக்கப் வேஸ்ட் ஆகிடுமா…” அவன் தோளில் தட்டியவள் , “ஒன்லி லிப்ஸ்டிக் குமாரு.. கண் எரியுமே.. அதான் யோசிக்கிறேன்” என்றாறு படியிலிருந்து இறங்கி வர வர … அவளைப் பார்த்த செல்லக் கனிக்கு கோபம் அதிகமாகியது. அருகில் வந்து அமர்ந்தவளை முறைத்த செல்லக்கனியிடம் ,

“எதுக்கு இந்த ஆங்ரி பேர்ட் முகம் மா…” என மெல்லக் கிசுகிசுக்க கனியோ கோபத்தில் திரும்பிக் கொண்டார். பூஜை முடிந்து அமுதினியை வீடு முழுவதும் தீபம் எடுத்துப் போகச் சொல்ல.. கூடவே எழுந்து வந்த கனி ஒவ்வொரு அறையாக அவளுடன் வந்தவர் , யாருமில்லாத ஒரு அறையில் கற்பூரத் தட்டை காட்டும் போது ,மெல்லியக் குரலில் ,

” உன்னைய புடவை தானே கட்டச் சொன்னேன். அதுவும் புதுப் புடவைய  கிழிச்சு பாவாடை தச்சு, தாவணியா போட்டுருக்க.. ஏன்டி இப்படிப் பண்ற… “

“அம்மா நல்லாப் பாருங்க… நான் யூடியுப் பார்த்து புடவைய தான் தாவணி மாதிரி கட்டியிருக்கேன் டூ இன் ஒன் ஆக்கும்.” என அழகாக புன்னகைக்க , செல்லக் கனிக்கு தலை சுற்ற ஆரம்பித்து விட்டது.

“என்னடி சொல்ற … புடவைதானா…” எனும் போதே ராஜன் வேகமாக வந்தவன் , ” பெரியம்மா … அரவிந்த்தத்தானும் , வித்யாக்காவும் வந்துருக்காங்க.” என்றதும் கனி கிளம்பியவர் , “அம்மு சீக்கிரம் வா” என்று விட்டுச் செல்லப் போக ,

“என்னமா சென்னைல உள்ளவங்கள மட்டும் தான் அழைச்சிருக்குனு சொன்னீங்க … இப்ப கோயமுத்தூர்ல இருந்தெல்லாம் வாறாங்க…” என்றதும் ,

” எல்லாம் காரணமா தான் … சேலைய சேலை மாதிரி கட்டுனு சொன்னேன் கேட்டியா…” என்றவர் அந்த அறையை விட்டு வெளியே சென்றார். வீடு முழுவதும் புகை மூட்டம் … கண் எரிச்சலில் எதிரில் இருப்பவர்களை அடையாளம் காண்பதே சிரமமாக இருந்தது. வீட்டிற்கு வந்தவர்கள் அனைவரையும் உபசரித்து புதுப்பானையில் பால் பொங்க விட்டு, சிறு சிறு டம்ளர்களில் அனைவருக்கும் எடுத்துச் சென்றனர்.

முதலில் வீட்டினுள் அமர்ந்திருந்தவர்களுக்கு எடுத்துச் செல்ல , செல்வராணி , “அம்மு வா ..வா … அரவிந்தும் வித்யாவும் உடனே கிளம்பணும் சொல்றாங்க என்றபடி அவள் கூடவே தோள் பிடித்து சென்றார் .

“சித்தி … நானே வாறேன்..சினிமால,டிராமால பொண்ணு பார்க்க வரப்ப பிடிச்சுட்டு வர மாதிரி வரீங்க..” என்றவளிடம் ,

“இல்ல அம்மு … கப் எல்லாம் பத்திரமா பிடிக்கணும்ல அதான் கூடவே வாறேன்.” என , “அப்படியா… அப்ப ஒரு செகன்ட் இதைப் பிடிங்க” என்றவள், ராணியிடம் அந்த தட்டைக் கொடுத்து விட்டு முன்னே நடந்து விட்டாள். “அம்மு… அம்மு ” என்ற ராணியின் அழைப்பைக் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை.

ஒவ்வொரு அறையாக கற்பூரம் காட்டியதாலும் , ஹோம புகையும் சேர்ந்து வீடு முழுவதும் புகை மூட்டமாக இருக்க பெரும்பாலான உறவினர்கள் வெளியே தான் அமர்ந்திருந்தனர். “ஐயோ கண்ணு பயங்கரமா எரியுது சித்தி.. நானும் வெளியே போறேன்…  நீங்களே எல்லாருக்கும் கொடுத்துடுங்க” என்றவளின் கண்ணில், தூரத்தில். திரும்பி நின்ற ரகுவின் கையில் அவனது ஆறுமாத குழந்தை இருப்பது தெரிய அவளை வாங்கும் ஆசையில் , வேகமாக வெளியே வந்தவள் ,

“அத்தான் பாப்பாவ என்கிட்டக் கொடுங்க” என்றவாறு அவன் முன்புறம் சென்று நின்றாள். குழந்தையை வாங்க கை நீட்டியவள் பார்த்தது பார்த்தபடி நின்றதோடு “தேவாத்தான்…” என்று வேறு சொல்லியவள் மனதில் ,

“இதென்னடா அம்முவுக்கு வந்த சோதனை புகை மூட்டத்துல ஹீரோயின் தான ஹீரோவுக்குத் தெரிவா.. எனக்கு ஹீரோவேத் தெரியறார்.. ” என நினைத்தவள் , இரண்டு நாட்களாக தேவா நினைவு அதிகம் வருவதால் இப்படித் தோன்றுகிறதோ…” என எண்ணிக் கொண்டே நீட்டிய கரங்களை இழுத்து தன் கண்கள் இரண்டையும் கசக்கிப் பார்க்க, இப்போது ரகுவும்  அருகில் வந்தவன் மகளை வாங்கிக் கொண்டான்.

“அடடா நிஜமே தானா…” என உள்ளம் துள்ள தேவாவைப் பார்த்துப் பேசப் போகும் போது , செல்லக் கனி அவள் கையைப் பிடித்திருந்தவர் தேவாவிடம் ,”தம்பி ஒரு பத்து நிமிஷம்.. சாப்பிட்டுட்டே போங்க தம்பி… “எனக் கூறியவாறு , “வா அம்மு ” என இழுத்துக் கொண்டு சென்றார்.

“சாப்பிட்டு போங்க தம்பியா …. அவங்கள உங்களுக்குத் தெரியுமா மா..” என நடந்துக் கொண்டே அமுதினி கேட்கவும் , ” தெரியாம… அவர்கிட்ட இருந்து தான இந்த வீட்டையே வாங்கி இருக்கோம். சரி…உன்னைய பால் எடுத்துட்டுத் தானே வரச் சொன்னேன். இங்க வந்து நின்னுட்டு இருக்க… வா.. உன்னையப் பார்த்துப் பேசணும்னு வித்யா சொன்னா…” என்றவளுக்கு ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியமாக ,

“என்ன… அவங்க கிட்ட வாங்கினதா … அப்ப  மிஸ்டர்பட்டர் கட்டின வீடா… ” என ஒரு நொடி மகிழ்ச்சியில் உள்ளம் துள்ள… அடுத்த நொடியே.. அவங்க கல்யாணத்துக்காக கட்டினவீடுனு தானே முன்ன சொன்னாங்க.. அப்ப கல்யாணம் நடந்துட்டா என்ன… இல்லையே நிறைய பிரச்சினைகள்… இவங்களுக்கு அடிபட்டு கைக் கூட இன்னும் சரியாகல… அச்சோ என் தலை வெடிச்சுரும் போலயே… ப்ச்… அம்மு… ரெண்டே நாள்ல காதல் தோல்வி உனக்கு வேணுமா…”மனம் என்னவோ செய்ய, முன்னால் பேசிக் கொண்டிருந்தவர்களை கவனிக்கவில்லை.

செல்வராணி அவள் தோள் பிடித்து , “அம்மு வித்யா சொல்றா பாரு…” என்றதும் தான், “என்ன… என்னக்கா சொன்னீங்க..” என்றதும், புன்னகைத்த வித்யா, இது நம்ம சேகர் மாமா பையன் பிரதீப் , லண்டன்ல எஃப் ஆர் சி பி பண்ணினாங்க… சென்னைல எனக்கு ஜூனியர் பேட்ஜ் தான்.” என்றவள் தற்போது மருத்துவ கருத்தரங்கிற்காக இந்தியா வந்திருப்பதை தெரிவிக்க , ஒரு மருத்துவராக கருத்தரங்கு குறித்து அரவிந்த் , வித்யா, பிரதீப் மட்டுமல்லாது திவ்யா, செளமினி என சாதாரணமாக கலந்துரையாட ஆரம்பித்து விட்டாள்.

அமுதினி சாதாரணமாகப் பேசினாலும் பிரதீப்பின் கண்கள் அவளைத் தொட்டுத் தொட்டுச் செல்வதை மற்றவர்கள் கவனித்து தான் இருந்தார்கள். ஆனால் அமுதினியின் கண்களோ சற்றுத் தள்ளி அப்பா சித்தப்பா , ரகு, மற்றும் தீபக்கோடு தீவிரமாக ஏதோ விவாதித்துக் கொண்டிருந்த தேவாவைத்தான் கவனிக்கத் தோன்றியது. 

“பட்டருக்கு கல்யாணமாகிருச்சா… இல்லையா.. இந்த தாமரை என்னனா.. அவ காதலிச்சத திலோ மைனிக்கு சொல்லலங்கிற கோபத்துல அவகிட்ட பேசக்கூட இல்லை, அதனால இங்க என்ன நடக்குதுனே தெரியலனு குடும்ப பிரச்சினையா சொல்றா… அப்போ அம்மாகிட்ட கேட்டா.. ஐயோ வேண்டாம் வேண்டாம்…ரகு அத்தானக் கேட்க வேண்டியதுதான்… ஆனா எப்படி…” இப்படித்தான் அமுதினியின் யோசனைகள் சென்றது.

உணவு பந்தி ஆரம்பிக்கும் வேளையில் , ஏதோ அவசர வேலை எனக் கூறி தேவா உணவருந்தாமலே சண்முகநாதனிடம் சொல்லிக் கொண்டு செல்ல முயல , செல்லக் கனியோ… ” வெறும் வயிறா எப்படி தம்பி அனுப்ப முடியும்… ஒரு வாய் சாப்பிட்டுட்டுப் போங்க..”

“பரவாயில்ல ஆன்ட்டி… முக்கியமான வீடியோ கால்… நான் வந்து சாப்பிடுறேன்… ரகுவரன் சொல்லுங்க” என அவனை துணைக்கு அழைக்க ,தேவாவை அனுப்பி வைத்தான் ரகு.

ஆனாலும் செல்லக் கனி மனம் கேளாமல் வேகமாக உள்ளே சென்று, சில மூடியப் பாத்திரங்களை ஒரு கட்டைப்பையில் வைத்துக் கொண்டு வந்தவர், ,

” ரகு , அந்த தம்பி சாப்பிடாம போயிருச்சு.சூடா இருக்கும் போதே சாப்பிடட்டும்.  இதைக் பக்கத்துல கொடுத்துட்டு வரலாம் வாப்பா…” எனும் போதே ராணி அழைத்தார். ,மகனைக் கையில் வைத்திருந்தவன் , “அத்தை நீங்க வந்தவங்கள கவனிங்க , நான் போய் கொடுத்துட்டு வாறேன்.” என்றவன் அந்தப் பையை வாங்கிக் கொண்டு மகனை கீழே இறக்கி விட முயல, அவன் மகனோ கீழே இறங்க மாட்டேன் என தந்தையின் கழுத்தைக் கட்டிக் கொண்டான். 

சற்றுத் தள்ளி இருந்ததால் அவர்கள் என்னப் பேசிக் கொண்டார்கள் என்பது அமுதினிக்குத் தெரியாது. ஆனால் உணவைக் கொண்டுப் போகச் சொல்கிறார் , என்பதை  கவனித்திருந்த அமுதினி , ” சான்ஸ மிஸ் பண்ணாத அம்மு..அவங்க மேரிட் ஆர் அன்மேரிட் இதை மட்டும் தெரிஞ்சுக்கலாம் வா.. ” என தனக்குத்தானே சொல்லிக் கொண்டு வேகமாக ரகு அருகில் சென்று ,

“ஸ்ரீ சித்திக்கிட்ட வாங்க.. நாம மாடிக்குப் போய் விளையாடலாம்…” என குழந்தையை தூக்க முயல , குழந்தையோ , “மாத்தேன். அப்பாட்ட… ” என மழலையில் அடம் பிடித்து அவனிடமிருந்து இறங்காமலே இருக்க , கனியையும் ராணி அழைத்துக் கொண்டே இருக்கவும் ,

,”அம்மா சித்தி கூபிட்டுட்டே இருக்காங்க நீங்க போய் அங்க கவனிங்க ,நானும் ராஜனும் கொண்டு போய் கொடுக்கிறோம்” என பாத்திரங்கள் இருந்த பையை வாங்கிக் கொண்டவள் , ஃபோனை நோண்டிக் கொண்டிருந்த விஜயராஜனை அழைத்தாள். அவர்கள் இருவரும் வெளியே செல்கிறார்கள் என்றதும் , கார்த்தியிடம் பேசிக் கொண்டிருந்த ரகுவின் மகன் அமுதினியோடு செல்ல அடம் பிடிக்க , விஜயராஜன் அவனைத் தூக்கிக் கொண்டான்.

“இது தான் காதல் படுத்தும் பாடா.. முருகா எனக்கு காதல் தோல்வியெல்லாம் கொடுத்துராத..மீ பாவம்… ” என யோசித்தவாறே நடக்க … விஜயராஜனோ செல்ஃபோனில் மும்முரமாக இருந்தான். தேவா வீட்டு வாசற் கதவு திறந்தே இருக்க…வெளியில் இருந்த அழைப்பு மணியை அழுத்தும் முன் ,

“இருலே… இரு லே” என விஜயராஜனின் சத்தத்தில் திடுக்கிட்டு அருகில் பார்த்தவள் அவன் செல்ஃபோனில் விளையாடுவதைப் பார்த்து அவனை முதுகில் அடித்தவாறு,

” பப்ளிக் எக்ஸாம் வச்சுட்டு … மைன்கிராஃப்ட்… இரு உன்னைய சித்தப்பா கிட்ட போட்டுக் கொடுக்கிறேன்…” என்ற போது, அவனது அலைப்பேசி கீழே விழுந்து விட , விஜயராஜன் குழந்தையை கீழே விட்டவன் ,

” அச்சோ.. அம்மாவோட ஃபோனுக்கா… உன்னைய இரு பெரியம்மாகிட்ட சொல்றேன்… ரிப்பேர் ஆச்சு நீ தான் ஃபோன் வாங்கிக் கொடுக்கணும்” என்றவன் அதனை எடுத்துக் கொண்டு , “போ… நான் வீட்டுக்குப் போறேன்…” எனக் கூறி விட்டு நிற்காமல் சென்றான். 

இறங்கிய குழந்தையும், “சித்தி … சித்தி ” என அவள் புடவையை இழுக்க ஆரம்பித்து விட்டான். புடவையின் மடிப்புகள் ஒரு பக்கம் நழுவ …. குழந்தையும் வீட்டினுள் ஒட..பதற்றத்தில் , சாப்பாட்டுப் பையினைக் கீழே வைத்து விட்டு ,

“ராஜன் …ராஜன் ..டேய் ராஜன்.. “எனக் கத்தியவள் குழந்தையையும் பிடிக்க வீட்டினுள் ஓடி வந்தாள். அதே நேரம் தனது படுக்கை அறையில் லேப்டாப்பில் மும்முரமாக ஏதோ டைப் செய்துக்கொண்டிருந்த தேவராஜன் , தன்னைத் தான் யாரும் அழைக்கிறார்களோ என நினைத்து அறையை விட்டு வெளியே வந்தான். ஆனால் வீட்டினுள் குழந்தை ஓடி வருவதைக் கண்டவன், எதிரில் இருக்கும் சிறிய கண்ணாடி மேசையில் குழந்தை இடித்து விடாமல் இருக்க குழந்தையைத் தூக்க வேகமாக நடந்து வந்தான்.

 இதனால் குழந்தையின் பின்னால் வந்த அமுதினியை கவனிக்காமல் அவள் மீது  மோதினாலும் குழந்தையை சிறிய சோஃபாவில் தள்ளி விட்டதோடு அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பிடித்தவாறு நீளவாக்கில் இருக்கும் பெரிய சோஃபாவில் தொப்பென விழுந்தனர்.

ஆழமாக உள் செல்லும் சோஃபாவில் விழுந்தததால் எழுவது சிரமமே, இருவருமே ஒருவரை ஒருவர்  பிடித்து தான் எழ வேண்டும். ஆனால் யாரைப் பிடித்து யார்  எழுவது … அதோடு அவனது ஒரு கை வேறு வலியைக் கொடுத்து, ‘ஷ்…” என முகம் சுருக்கவும் ,அமுதினியும் தான் இருக்கும் நிலையை மறந்து , “ஐயோ கை… ” என்றதும் ,தேவா அவள் முகம் பார்க்க , அமுதினியும் அப்போதுதான் மிக அருகில் இருந்த அவன்  முகத்தைப் பார்த்தாள். 

அதற்குள் அடிபடவில்லை என்றாலும், விழுந்ததால் அழுத குழந்தையின் சத்தத்தில்  தான் இருவரும் தங்களை உணர்ந்து எழ முயற்சிக்க… அது முடியாமல் போனது.

அதுவும் அவர்கள் அப்போது இருந்த நிலை இருவருக்குமே ஒருவிதப் பதற்றத்தைக் கொடுக்க , வேகமாக அமுதினியைத் தள்ளி விட்டு தரையில் கையூன்றி எழுந்தவன் , அமுதினியையும் ஒற்றை கையால் அவளது முழங்கையைப் பிடித்து எழுப்பி விட்டுக் கொண்டே , அழுத குழந்தையைத் தூக்கிக் கொண்டு வாசற்கதவை நோக்கிச் சென்றுக் கொண்டே , ” சீக்கிரம் வெளியே வாங்க டாக்டர் …” என்றவாறு வெளியேறி விட்டான்.

என்ன நடந்தது என்று யோசிப்பதற்குள்ளாகவே எல்லாம் நடந்து இருக்க… வெளியே செல்லப் போனவள் அப்போதுதான் தன்னை , தன் நிலையை உணர்ந்தாள். மருத்துவராக இருந்தாலும் , அனைத்தையும் சாதாரணமாக எடுத்துக் கொண்டு விளையாட்டுத்தனமாகப் பேசினாலும் , புடவை முழுவதும் அவிழ்ந்து… அலுங்கிய தோற்றத்தில் நின்றவளுக்கு கண்ணில் நீர் முட்டியது. வேகமாக புடவையை சுருட்டியவள் அத்தனைப் பெரிய ஹாலில், நல்ல வெளிச்சத்தில் நின்று சரியாக கட்டிக் கொள்ள மனமின்றி அருகே இருந்த தேவாவின் படுக்கையறைக்குள்ளேயே  வேகமாக நுழைந்து , வேக வேகமாக புடவைக்கட்ட ஆரம்பித்தாள்.

இங்கு இருப்பதே தவறாகத் தோன்ற வெளியே வந்தவளுக்கு  அவன் முகம் பார்க்க தயக்கமாக இருந்தாலும் தேவாவை எப்போதும் பிடிக்கும் , இப்போது அவனது கண்ணியத்தை நேரிலேயே உணர்ந்தவளுக்கு இப்போது மிக மிகப் பிடித்தது. 

குழந்தையைப் பார்த்துக் கை நீட்ட , உடனே வந்த குழந்தையைத் தூக்கிக் கொண்டு வெளி வாசலை நெருங்கியவளிடம்,

“ஒரு நிமிஷம் டாக்டர் … ஏன் கூப்பிட்டீங்கனு தெரிஞ்சுக்கலாமா..” காரணமில்லாமல் அவள் வந்திருக்க மாட்டாள் என்பதை அறிந்ததாலயேக் கேட்டான். அப்படியே நின்றவள் , ” கூப்பிட்டேனா…” என யோசித்து, பின் நியாபகம் வந்தவளாக , திரும்பிப் பார்த்து ,

“அது.. அம்மா சாப்பிட தந்து விட்டாங்க..” என வாசல் அருகே இருந்த பையைக் காண்பித்தவளுக்கு அவன் முகம் பார்த்ததும் சற்று முன் நடந்தது எல்லாம் மறந்துவிட்டது. மீண்டும் அவன் அருகில் வந்தவள், “ஆனா நான் அதுக்காக வரல… ” எனப் புன்னகைத்தவள்,

“நீங்க மேரிட் ஆ… அன்மேரிட் ஆனு தெரிஞ்சுக்க வந்தேன்” என்றவளைத் தீவிரமாக மிகத் தீவிரமாகப் பார்த்தான் தேவராஜன்.

                                                                            மெல்லிய சாரலாக ..

Advertisement