Advertisement

சாரல் 4

            ” ஒரு நிமிஷம் ஆன்ட்டி… ” என்ற லக்ஷிதா அமுதினியின் காதில் அவளது ஃபோனை வைத்து , ” விஜி … உங்கம்மாதான் … உன் ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் லயே இருக்குது போல… ” என்றவாறுக் கொடுத்தாள்.

“ம்மா…ஒரு எமர்ஜென்ஸி கேஸ் … மைனி யோட ஆப்ரேஷன் தியேட்டர்ல இருந்தேன். இப்பதான் ரூமுக்கு வந்தேன்.” என்றவளிடம் ,

“அம்மு .. உங்க ஆச்சி சென்னைக்கு வர சம்மதிச்சுட்டாங்க.. என்னால இப்பக்கூட நம்ப முடியலன பாரேன்.. ” எப்படி மா… தனிவீடு கிடைச்சுருச்சா… அபார்ட்மென்ட் எல்லாம் ஆச்சிக்கு  செட் ஆகாதே… “

“அதான் அம்மு சொல்ல வந்தேன்.. நம்ம பானு மாப்பிள்ளைக்கு தெரிஞ்ச பையனோட தனிவீடு ஒன்னு இருக்குதாம். அதுவும் புதுசு அம்மு… நல்லா விசாலமா நம்ம வீடு மாதிரியே கட்டி வச்சுருக்காரு.. வீடியோலப் பார்த்தோம்.. உனக்கும் அப்பாவ அனுப்பச் சொல்றேன். எதுக்கும் நீயும் தம்பியும் நேர்லப் பார்த்து பிடிச்சதுனு சொன்னா உடனே ரிஜிஸ்டர் பண்ணிரலாம்.”

“ம்மா உங்களுக்கெல்லாம் பிடிச்சா சரிதான்..” 

“எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அம்மு… அந்த தம்பி ரொம்ப நல்ல குணசாலியா இருக்காங்க.. குமாருக்காக தான் இப்படி அவசரமா பார்க்குறோம்னு தெரிஞ்சதும் … ரிஜிஸ்ட்ரேஷன் எப்ப வேணா வச்சுக்கலாம் உடனே வந்து குடியிருங்கனு சொல்றாரு.. ” என்றவர் மேலும் பேசிவிட்டு வைத்து விட்டார். அவர் வைத்ததும் தான் ,

“ரகு அத்தானுக்கு தெரிஞ்சவங்களா… அட இப்பதான் நியாபகம் வருது தாமரை நம்பர் ரகு அத்தானுக்கு அனுப்புறேன்னு மிஸ்டர்பட்டர் சொன்னாரு.. அனுப்பலயோ… பேசிட்டு இருக்கும் போதே மிஸ்டர் பட்டருக்கு அத்தனை ஃபோன் வருது. எங்கே என்னைய நியாபகம் வச்சு அனுப்புறது.. ” என தோள்களை குலுக்கிக் கொண்டாள் அமுதினி.

சண்முகம் அனுப்பியிருந்த வீடியோவைப் பார்த்தவள் அசந்து தான் விட்டாள். அந்தளவு பார்த்து பார்த்து தங்கள் சொந்த உபயோகத்துக்காக கட்டப்பட்டிருந்த வீடு என்பதனை வீடியோவிலேயே நன்கு உணர முடிந்தது.

அந்த வார இறுதியில் வீட்டைப் பார்க்க அனைவரும் சென்னைக்கு கிளம்பி வந்திருந்தனர். அனைவரும் கார்த்தி திவ்யா வீட்டில் வந்து தங்கியவர்கள் மதியத்திற்கு மேல் அமுதினியையும் விஜயகுமாரையும் அழைத்துக் கொண்டு புது வீட்டைக் காணச் சென்றனர்.

ரகு தான் அழைத்துச் சென்றான்.அது ஒரு லக்சூரி வில்லா எனப்படும் விலையுயர்ந்த.. ஆடம்பரமான.. தனித்தனி வீடுகள் இருக்கக் கூடிய இடமாக இருந்தது. நகரிலிருந்து சற்று தள்ளி இருந்தாலும் இருவரது கல்லூரிகளுக்கும் விரைவாக சென்று வரும் தூரத்தில்  இருந்ததோடு வீடும் , சுற்றுப் புறமும் அனைவருக்கும் பிடித்துப் போனது.

வீட்டில் எங்கும் .எதிலும் தாமரைப் பூவின் உருவம்தான். சன்னல் கம்பிகளாகட்டும் , வாசற் மரக் கதவுகளாகட்டும் என எதிலும் தாமரைப்பூ தான்.

“ஏம்மா இந்த ஓனர் என்ன அந்தக் கட்சியில இருக்காரா…எங்கேப் பார்த்தாலும் தாமரை மலர்ந்துருக்கு ” என கிண்டல் செய்தாலும் ,

“இப்படிப் பார்த்து பார்த்து கட்டின வீட்டை விற்கப் போறாங்கனா.. ஏதும் காரணம் இருக்கப் போகுது… அப்புறம் வாங்கிட்டு ,பேய் இருக்கு பிசாசு இருக்குனு சொல்லிடாதீங்க…”என அந்த சின்னத்தைக் கொண்ட கட்சிப் பெயரைக் கூறி தம்பிகளிடமும் பேசிக் கொண்டிருந்தவளுக்கு வழக்கம் போல் முதுகில் அடியோடு ,

” ஒன்னு வாங்கும் போது நல்ல விதமா பேசு… அதெல்லாம் நல்லா விசாரிச்சுட்டோம் … அந்த தம்பிக்கு கல்யாணம் முடிஞ்சு இங்க குடித்தனம் வர தான் வீட்ட சீக்கிரமா முடிக்கச் சொன்னாங்களாம்… ஆனா இப்ப வெளிநாட்டுக்கு எங்கேயோ போகப்போறார் போல.. அதான் இதைக் கொடுத்துட்டுக் கிளம்பப் போறார்.” என்றவர் பக்கத்தில் இருந்த மற்றொரு வீட்டைக் காண்பித்து ,

” இந்த வீடும் அவர் வீடு தான்னு  ரகு தம்பி சொன்னார்.இந்த வீட்ல இருந்துதான் புது வீட்டைப் பார்த்து பார்த்து கட்டியிருக்காங்க போல.. இப்ப என்னனா மெட்ராஸுக்கு வந்தாப் போனா தங்க அந்த வீடுப் போதும்னு சொல்லி தான் இந்த வீட்டை விற்கிறார், 

முதல்ல உன் சித்தி பெயர்ல தான் வாங்குறதா இருந்தது அப்புறம் உங்கப்பா தான் நான் அம்முவுக்காக வாங்குறேன்னு சொல்லி இப்ப அதற்கான ஏற்பாடுகள் நடக்குது ..” என்று விட்டார்.

அவர்கள் கிளம்புகையில் ரகுவும் வந்து இணைந்துக் கொண்டான். அவனைக் கண்டதும் தன்னாலயே தேவராஜனின் நியாபகம் வந்து தோழியின் எண்ணை அனுப்பினானா எனக் கேட்கத் தோன்றியது.

“என்னங்கடா இது… ஃபிரண்ட் நம்பர் கேட்க ஃபிரண்ட் தான நியாபகம் வரணும் … எனக்கு உல்டாவா மிஸ்டர் பட்டர் நியாபகத்துல வாறாரு.. சைட் அடிச்சதால இருக்கும்…” என தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டவள் , ரகுவை நெருங்கி தேவராஜன் எண் ஏதும் அனுப்பினானா எனக் கேட்கவும் முடிவு செய்து அருகில் வர கூடவே தம்பிமார் இருவரும் ஆளுக்கொரு புறமாக வந்து நின்றனர்.

“அடடா இந்த வானரங்கள வச்சுட்டு நான் ஃபிரண்டோட கஸின் நம்பரக் கேட்டா … இந்தக் கஸின் தான் அந்தக் கஸினானு கேட்டு வைக்கும்ங்க.. அதோட இந்த ஸ்பீக்கர் பாக்ஸ் இருக்கே.. ” என யோசித்தவள் , விஜயராஜனின் கையைப் பிடித்துக் கொண்டே ,

“தம்பு… இதைக் கொஞ்சம் கார்ல சார்ஜ் போடேன்…” என்று செல்ஃபோனைத் தர,

அவனது “தம்பு” என்ற அன்பான அழைப்பிலேயே அவள் தன்னை நகரச் சொல்கிறாள் என்பதை உணர்ந்தவன் , “முடியாது போ.. நான் இங்க தான் நிற்பேன்…” என்று விட , கடுப்பானவள் , “ரொம்ப அறிவு … போடா… ” என்று விட்டு அவள் நகர்ந்து விட்டாள்.ரகுவிடம் என்ன முயன்றும் தனியாகப் பேசவும் வாய்ப்பில்லாமல் போனது. அப்படியே பேசப் போனாலும் ராஜன் வேண்டுமென்றே கூடவே வந்தான்.

இதைக் கவனித்த விஜய குமார் , “அக்கா.. என்ன ராஜன் உன்னையே சுத்தி சுத்தி வாறான் …ஏதோ இருக்கு..” என சுட்டு விரலால் அவன் நெற்றியைத் தட்டிக் கொள்ள,

“அச்சோ இவனுக்கு தெரிஞ்சா , அந்த ஃபிரண்ட் இந்த ஃபிரண்டானு கேட்டு ‘காதல் ‘கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சுடுவானே… ” பல்லைக் கடித்தவள் , ” ஒரு விரல்ல தட்டினா மூளை வேலை செய்யாது … இப்ப வேலை செய்யுதா பாரு” என அவன் தலையில் வேகமாக தட்டிவிட்டு நகர்ந்துக் கொண்டாள்.

நேரம் சென்றுக் கொண்டே இருக்க , சற்றுத் தள்ளி நின்று ரகு மொபைலில் பேசிவிட்டு வந்தவன், சண்முகத்திடம் ,

 “மாமா.. ஒரு அரை மணி நேரம் மட்டும் வெய்ட் பண்ணினால் பார்த்துட்டுப் போயிடலாம். வார இறுதிங்கிறதால பைபாஸ்லக் கூட டிராஃபிக் ஜாம் ஆகுது.” என வீட்டு உரிமையாளரை சந்திக்க வைக்க முயற்சி செய்தான்.

ஆனால் அமுதினி தனக்கு இரவுப் பணிக்கு கட்டாயம் செல்ல வேண்டி இருப்பதால் தன்னால் வெகு நேரம் இருக்க முடியாது எனக் கூறி விடவே அவர்கள் கிளம்ப வேண்டிய சூழல் வந்தது.  விஜயகுமாரும் , விஜயராஜனும் கூட தங்களால் காத்திருக்க முடியாது எனக் கூறி விட , சண்முகமும் செல்லக்கனியும் இருந்து வீட்டு உரிமையாளரைப் பார்த்துப் பேசிவிட்டு வருவதாக கூறி விட, சிறியவர்களை அழைத்துக் கொண்டு உலக நாதனும் செல்வராணியும் கிளம்பி விட்டனர். 

இரண்டு வாரங்கள் வேகமாக செல்ல பத்திரப் பதிவு செய்ய வந்தக் குடும்பத்தினர் அந்த வாரமே கிரகப்பிரவேசம் செய்ய ஏற்பாடுகள் செய்தனர். “அம்மு வீட்ல ஏதாவது மாத்தணும்னா சொல்லு இப்பவே மாத்திரலாம்…”

“அம்மா ஃபியுச்சர்ல நான் வீட்டு முன்னால கிளினிக் வைக்கிறது போல ரெண்டு வாசல் போட்டு , அது இருக்கிறதே தெரியாம அழகா ஆஃபிஸ் ரூம்னு ஒன்னு  கட்டியிருக்கு பார்த்தீங்களா.. அதுவும் அப்படியே டாக்டர்ஸ் ஆ இருக்கிறவங்களுக்கு செட் ஆகிறது போல…அதனாலயே எனக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு மா..” என்றதும் மகிழ்ந்தவர் , அவள் கையில் புடவை ஒன்றையும் கொடுத்து,

“அம்மு கிரகப்பிரவேசத்துக்கு கட்டுறது போல ஜாக்கெட் சீக்கிரம் தைச்சுரு” எனவும் ,

“என்ன சேலையா …ஆமா எப்பவும் விசேஷம்னா தாவணி தானம்மா தருவ… இப்ப என்ன சேலை.. ஐ அம் ஜஸ்ட் டிவன்டி டூ அன்ட் ஹால்ஃப் மா… போ நான் தாவணி வேணும்னா கட்டுறேன்..” என்றதும்,

“அம்மூ… எனக்கு நிறைய வேலை இருக்கு.. உங்க ஆச்சிய கூப்பிட்டுட்டு வரப்ப கார் வசதியிருக்காது அதனால ட்ரைன் தான்.. கூட வர ஆள் பார்க்கணும்… அவங்களுக்கு டிக்கட் பார்க்கணும்… என்னென்ன எடுத்து வரணும்னு யோசிக்கனும்.. இப்படி இங்க வரதுக்குள்ள நிறைய வேலைகளைப் பார்க்கணும்.. உன்னைய கவனிச்சுட்டே இருக்க முடியாது… தயவுசெய்து ஏட்டிக்கு போட்டியா எதுவும் பண்ணி என்னை டென்ஷனாக்காத.. ” என ஏகப்பட்ட அறிவுரைகள் கூறி கிளம்பி விட்டார்.

கிரகப்பிரவேசத்திற்கு இரு நாட்கள் முன்பு  அமுதினிக்கு கல்லூரி விடுமுறை விடப்பட்டிருந்தது. எனவே தினமும் மாலையில் மருத்துவமனை செல்பவள் அன்று காலையிலேயே பணிக்கு கிளம்பி விட்டாள். பணி முடிந்து மாலையில் சௌமினியோடு அலைப்பேசியில் உரையாடியவாறே நடந்து வந்துக் கொண்டிருந்தவள், ஃபிஸியோதெரபிஸ்ட் இருக்கும் அறையைக் கடக்கும் போது அந்த அறையிலிருந்து தேவராஜன் ஒரு மஞ்சள் நிற ஸ்மைலி முகமிட்ட பந்தை கையில் வைத்து அழுத்தியவாறே வெளியே வர , இருவரும் எதிர்பாராதவாறு இடித்துக் கொண்டார்கள்.

“சாரி.. சாரி.. ” என ஒரே நேரத்தில் தடுமாறி நின்றுக் கொண்டே கூறிய இருவருமே பின்புதான் முகம் பார்த்தனர்.அமுதினி அவனைப் பார்த்த ஆச்சரியத்தில், ” மிஸ்டர் பட்டர்… ” என வாய்விட்டே கூறி விழிகளை அழகாக விரித்தாள்.

அவள் கண்களைப் பார்த்த தேவா, உடனேயே கீழே உருண்டு ஓடிய பந்தை எடுக்கப் போனான். உடனேயே சுதாரித்தவள் , அவன் பின்னேயே சென்று , “ஒரு செகன்ட் ப்ளீஸ்… ரகு அத்தானுக்கு  தாமரை நம்பர் அனுப்பறேன் சொன்னீங்க, உங்க வேலை பிஸில மறந்துருக்கலாம், தாமரையும் சென்னைல தான் இருக்காளா ” என அவனது மனைவியாகி இருக்கலாம் என்ற எண்ணத்தில் கேட்டு, … இப்பக் கொடுக்கறீங்களா..”என தன் அலைப்பேசியில் எண்களை அழுத்த தயாராகினாள்.

எல்லாவற்றையும் மறந்து வாழ முயற்சிப்பவனிடம் தாமரையின் எண்ணைக் கேட்டால் , ‘ஊஃப்” என தலையை வேறுபுறம் திருப்பி தன் உணர்வுகளை அடக்கியவன் கடகடவென எண்களைச் சொல்லிவிட்டு , அன்றுப் போலவே , “எக்ஸ்கியூஸ் மீ” என்று விட்டு வேகமாக நடக்க துவங்கினான்.

“இது என்னடா.. இவ்வளவு ஃபாஸ்ட்… ” என யோசித்தவாறே கொடுத்த எண்ணிற்கு அழைப்பு விடுக்க , அது ஆதவன் பெயரைக் காட்டியது , “என்ன ட்ருகாலர் அவங்க அண்ணன் பெயரைக் காட்டுது.. அவர் நம்பரோ ” என எண்ணமிடும் போதே  ஆதவனின் கம்பீரக் குரல் வர ,

“ஹலோ அண்ணா நான் தாமரை ஃபிரண்ட் விஜயலெட்சுமி … ” என தன்னை அறிமுகம் செய்துக்கொண்டு அவனது தந்தை மறைவிற்கு வருத்தம் தெரிவித்தவள் ,

“அண்ணா கேம்ப்ல சொல்லிட்டுக் கூட கிளம்ப முடியல.. அவ ஃபோனும் சுவிட்ச் ஆஃப்… இப்பக்கூட திலோ மைனி அண்ணன சென்னை ஹாஸ்பிட்டல்லப் பார்த்ததும் உங்க நம்பர் வாங்கினேன்.. ” என  அமுதினி தாமரையைக் குறித்துக் கேட்கவும் , ஆதவனுக்கு என்னக் கூறுவதென்றே தெரியவில்லை.

அங்கு தாமரையைக் கொண்டு மிகப் பெரிய பிரச்சினை செல்வதை உடனே தெரிவிக்க முடியாத சூழ்நிலை… மாதங்கள் கடந்து விட்டது இனி பிரச்சினைகள் வராது தான்.. வரவிடாமல் அவன் பார்த்துக் கொள்வான் என்பதில் உறுதியாக இருந்தததாலும் , தங்கையின் நெருங்கிய தோழி விஜயலெட்சுமி என்பதை அறிந்தவன் என்பதாலும் தங்கையின் எண்ணை அவளுக்கு பகிர்ந்தான்.

அந்த எண்ணிற்கு அழைத்துப் பார்க்க.. அது தொடர்பு எல்லைக்கு அப்பால் என்ற தகவலையேத் தர, பின்னர் பேசிக் கொள்ளலாம் என்று இருந்தவளுக்கு குடும்பத்தினரிடமிருந்து வந்த அழைப்புகளும், விழாவிற்கான வேலைகளும் தாமரையிடம் பேசுவதை தள்ளிப் போட வைத்தது.

அன்று இரவு பதினோரு மணியளவில் அந்த எண்ணிலிருந்து அழைப்பு , உடனேயே எடுத்து விட்டவள், தாமரையின் குரலைக் கேட்டதும் மகிழ, தாமரையோ அழ ஆரம்பித்து விட்டாள். தாமரையின் குணம் அறிந்தவளாதலால் அவளின் தந்தையின் மறைவிற்கு ஆறுதல் கூறிவிட்டு,

“சரி.. சரி.. உன் அத்தானப் பார்த்தேன்.. ” என்றதும் தனது அருகில் உறங்கும் விஜயைப் பார்த்து நாணம் கொண்ட தாமரை , பதில் சொல்வதற்குள் , அமுதினி ,

“ஏன்டி நான் அவரை சைட் அடிச்சத சொல்லி வச்சியா… என்கிட்டப் பேசவே பயப்படுற மாதிரி தெரியுது…” என்றதும் குழப்பத்திற்குள்ளான தாமரை , பின் புரிந்து , “ஓ நீ தேவா அத்தானை சொல்றியா…” என தாமரை அதன் பின் கொடுத்த தகவல்கள் அதிர்ச்சியைக் கொடுத்தாலும், தேவா தாமரையின் கணவன் இல்லை என்றது மனதில் ஆழமாகப் பதிந்து ..தாமரையிடம் பேசி முடித்த பின்னும் அவன் பிம்பமே கண்ணில் தோன்றியது.

அதுவும் அவன் தான் தங்களைக் காப்பாற்றினான் என்பது அமுதினியின் இதயத்தில் ஆழமாகப் பதிந்து, “அச்சோ மிஸ்டர் பட்டர்… நீ ரொம்ப இல்ல.. ரொம்ப ரொம்ப நல்லவனா இருக்கியே… ” என நினைத்தவளுக்கு புன்முறுவல் தோன்ற… அந்த இரவிலும் பால்கனியில் சுவற்றில் சாய்ந்து அமர்ந்துப் பேசியிருந்தவளுக்கு , வீசிய மெல்லிய காற்றையும் ரசிக்கத் தோன்ற.. சட்டென நிமர்ந்து அமர்ந்தாள்.

“இது என்ன … குமார் சொன்ன ஃபீலிங்ஸ் எல்லாம் எனக்கும் வருது… பட்டர் தாமரையோட ஹஸ்பன்ட் இல்லைனு நான் ஏன் சந்தோஷப்படனும்.. அவர் ரொம்ப நல்லவருனு நான் ஏன் பெருமைப்படணும்.. அப்படினா … அப்படினா இதுக்கு பெயர் தான் காதலா… காதல் … அட ரொம்ப அமைதி …. படிப்ப தவிர எதுவுமே தெரியாதுனு நினைச்சுட்டு இருந்த தாமரைக்கே காதல் வரும் போது … எனக்கு வராதா… எஸ்.. நானும் காதலிக்க தான் செய்யுறேன்..” என துள்ளளோடு எழுந்தவள் , ரகு மூலமாக தேவாவை அணுக ஆயத்தமானாள்.

                                                            காதல் சாரல் வீசும் …

     

Advertisement