Advertisement

சாரல் 2

          “சித்தப்பா.. ப்ளீஸ் ப்ளீஸ்… ஊருகிட்ட போகும் போது நான் டிரைவ் பண்றேனே..” என உலக நாதனிடம் சொல்லிக் கொண்டு இருந்தாள் அமுதினி. “என்னது…நீ ஓட்டப் போறியா… அதெல்லாம் வேண்டாம்… ” என செல்லக் கனிப் பதற… செல்வராணியோ,

“ஏன் கா பதறுர.. பாப்பா அழகா ஒட்டக் கத்துக்கிட்டா.. போன தடவை ஊருக்கு வந்தப்ப தென்னந்தோப்பு வரைக்கும் அவதான் ஓட்டினா…” என முன் சீட்டிலிருந்த அமுதினியோடு ஹைஃபைக் கொடுக்க …

“நீங்க எல்லாரும் கொடுக்கிற செல்லம் தான் இவ சொன்னப் பேச்சே கேட்காம இருக்கக் காரணம்…. கொழுந்தன், உங்க அண்ணன் இப்போதைக்கு மாப்ள பார்க்க மாட்டாரு..மக சொல்லட்டும் மக சொல்லட்டும்னு … இவ பேச்சை எல்லாம் கேட்க முடியாது… நீங்க பாருங்க மேற்கொண்டு பேசலாம்…” எனும் போதே அமுதினி சொன்ன திருப்பம் வந்திருக்க … உலகநாதன் வண்டியை நிறுத்தியிருக்க வேகமாக இறங்கி மறுபுறம் வந்த அமுதினி ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து வண்டியோட்ட ஆரம்பித்து விட்டாள்.

பையன்கள் இருவரும் , “அக்கா இன்னும்… இன்னும் ஸ்பீடுக்கா…” என கூறி அவளை உற்சாகப்படுத்த … செல்வராணி பயந்தாலும் வெளியில் காட்டாமல் , “அவனுங்க சொல்றதெல்லாம் கேட்காதம்மா.. நீ மெல்லமா போ…” என மகளுக்கு ஆதரவாக பேச … செல்லக்கனியோ.. கண்களை இறுக்கமூடி கடவுள்களிடம் வேண்டுதல் வைக்க ஆரம்பித்தவர் , அவள் வண்டியை நிறுத்தியதும் தான் கண்களைத் திறந்தார்.

இத்தனை நேர பயம் யாவும் கோபமாகவும் அழுகையாகவும் மாறி , அவளை அடிக்கப் போக , அவரிடமிருந்து தப்பித்து வேகமாக இறங்கி வீட்டிற்குள் சென்றாள் அமுதினி.தங்கையிடம்…

” ராணி… உங்க அத்தான் மாப்பிள்ளை பார்க்க கேட்கிறாங்க….இவ என்னடானா ஒரு ப்புரபசல் போட்டுருக்கேன்னு சொல்றா… கூட படிச்ச யாரையும் விரும்புறியானு கேட்டா … அப்படியெல்லாம் யாரும் இல்ல.. ஆனா கூட படிச்சப் பொண்ணோட சொந்தக்கார பையன பிடிக்குமாம். ஆனா அது விருப்பமா , காதலானு எல்லாம் தெரியாதாம்.” என்ற புலம்பலில் உலக நாதனுக்கு சிரிப்பு வரப் பார்க்க , செல்வராணி கண்களால் முறைத்துப் பார்க்கவும் முகத்தை அமைதியாக வைத்துக் கொண்டார். கனியோ ,

“இவ பிடித்தமா காதலானு யோசிச்சு ஒரு முடிவுக்கு வரதுக்குள்ள நாம மாப்ளப் பார்த்து கட்டி வச்சிரலாம்னு முடிவு பண்ணிட்டேன். என்ன படிக்கணுமோ… எல்லாத்தையும் இவ கல்யாணம் பண்ணதும் படிக்கட்டும்…அம்மா சேகர் அண்ணன் சின்ன பையன் லண்டன்ல டாக்டரா இருக்கிறதா சொன்னாங்க.. நீயும் கொழுந்தனுமா போய் பேசிப் பாருங்க.. எல்லாம் சரியா இருந்தா உங்க அத்தானையும் நாளைக்கு வரச் சொல்லிப் பேசுவோம்…” என்று விட்டு வீட்டினுள் சென்றார். 

தன் அண்ணியையே பார்த்துக் கொண்டிருந்த உலகநாதன் சிரிப்பை அடக்க பெரும்பாடுபட்டார். மனைவியிடம் ,

“அம்முவப் பார்த்தியா காதலாப் பிடித்தமானு தெரியாமலே ப்ரபோஸ் பண்ணியிருக்காளாம்..மனசுல எதையும் போட்டு மறைச்சு குழம்பாம பாப்பா தெளிவா தான் இருக்கா.. ஆனா மைனியப் போட்டு குழப்பி விட்டுருக்கா.. என் அண்ணன் பொண்ணு டி அவ …. புத்திசாலிதனத்துக்கு குறைச்சலா என்ன..” என சிரிக்க ,

“அவ என் அக்கா பொண்ணும் தான்.. ” என்ற மனைவியைக் கண்டு மேலும் சிரித்தவர், கட்டுப்படுத்திக் கொண்டு..”எங்கண்ணனுக்கு மட்டுமில்ல எனக்கும் அம்மு  இன்னும்  குழந்தை தான்…” என்றவர் செல்லக் கனி வீட்டினுள் இருப்பதை எட்டிப் பார்த்து உறுதி செய்துக் கொண்டவர் ,

“அந்த பையன சைட் அடிச்சது … அவன் கிட்ட கல்யாணத்துக்கு பொண்ணு தேடினா என்னையும் யோசிங்கனு .. வரும் போது சொன்னது வரை என்கிட்டயும் ஷேர் பண்ணினா என் பொண்ணு.. எனக்கும் அண்ணனுக்கும் அவ ஆசை என்னவோ அதுதான்.. விளையாட்டுப் பொண்ணா இருக்கானு மைனி பயந்துட்டே இருக்காங்க… ஜானகி அக்கா பொண்ணுக்கு பிரசவம் பார்த்ததிலயே தெரியலயா… அவ பொறுப்பான பொண்ணுதான்னு… அவ எங்க வீட்டு மகாலெட்சுமி டி … நீ தான் உங்க அக்காவுக்கு புரிய வைக்கணும்… ” என்றவரை ஆமோதித்த செல்வராணி,

“ஆனாலும் அக்காவுக்காக சேகர் அண்ணன் வீட்டுக்குப் போய் பேசிப் பார்ப்போமாங்க…” என்ற மனைவியைப் பார்த்து சிரித்துக் கொண்டே …

” எப்படியும் நீ உங்க அக்கா பக்கம் தான் பேசுவ… சரி போகலாம்…” என்றவாறு இருவரும் வீட்டுக்குள் சென்றனர். உள்ளே வந்தவர்களை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்றார் செந்துரம்மாள். மகள்கள் இருவரையும் ஒரே வீட்டில் மருமகள்களாக்கிய நிம்மதியில் இருப்பவர். கணவனை  இரண்டு வருடங்களுக்கு முன்பு இழந்து தனியாக தான் அந்த வீட்டில் இருக்கிறார். மகள்கள் தங்களோடு வந்து இருக்கச் சொல்லியும் கேட்கவில்லை.

“நீங்கலாம் வரப் போக தாய் வீடுனு ஒன்னு வேணுமில்லயா… அதோட இந்த வீட்ட விட்டு என்னால எங்கேயும் வரமுடியாது.. ” என்றவர்  அக்கம் பக்கம் இருக்கும் உறவினர்களை துணைக்கு வைத்து விவசாயம் பார்த்து வருகிறார். அமுதினி , ” ஆச்சி… ” என ஓடிப்போய் கட்டிக் கொண்டாள். பேத்தியைக் கண்டு உச்சி முகர்ந்தவர் ,

“கனி..லெட்சுமி மைனிய இளவயசுல பார்த்த மாதிரியே என் பேத்தியும் இருக்கா.. வா.. தாயி.. எங்க முளைப்பாரி எடுக்க வராம போயிருவியோனு பயந்துட்டே இருந்தேன்.”

“எப்படி ஆச்சி வராம இருப்பேன்… போன ரெண்டு வருஷமும் பரிட்சை இருந்தது.. அதான் வர முடியல… இன்னைக்கு உங்களுக்காகவே பாவாடை தாவணி எல்லாம் எடுத்துட்டு வந்துருக்கேன்ல…” என்றவள், “ம்மா நான் போய் குழலி அத்தைய பார்த்துட்டு வாறேன்..” என்றவாறு தம்பிகளுடன் வெளியே கிளம்பி விட்டாள்.

அவள் கிளம்பியதும் செல்லக் கனி தன் தாயிடம் , “அம்மா நீங்க சொன்னது போல சேகர் அண்ணன் பையன அம்முவுக்கு பார்க்கலாம்னு இருக்கேன். படிச்சாலும் கல்யாணம் பண்ணிட்டு படிக்கட்டும் … அவுக அப்பா அப்புறமா வருவார்.. நீங்க உறுதியா சொல்லிருங்க… ” என அவர் பொறுப்பில் மகளின் திருமணத்தை விட்டுவிட்டார் செல்லக் கனி.

மாலை முளைப்பாரி எடுத்துச் செல்ல மருத்துவரான வித்யாவும் தயாராகி மூன்றரை வயது மகளையும் கையில் பிடித்தவாறு அறையை விட்டு வெளியே வர… அரவிந்தின் கையிலிருந்த ஆறுமாத மகன் தாயைத் தேடி சினுங்க ஆரம்பித்து விட்டான்.

வேகமாக மகனை வாங்கியவளிடம், கிசுகிசுப்பாக” கேண்டி … சேலையில… ம்..ம்..” என கண் சிமிட்ட , “அத்..தான்.” என சிணுங்கியவாறு அறைக்குள் சென்றவள் மீது காதல் இன்னும் அதிகமாகியது. மகனின் பசியமர்த்தி புடவை முந்தானையை இடுப்பில் செருகிக் கொண்டு தலையில் முளைப்பாரியை சுமந்துக் கொண்டு கோவிலுக்குச் செல்கையில் வித்யா அரவிந்த் இருவருக்கும் முதன் முதலாக தங்களை இணைத்த அந்த திருவிழா நாட்கள் கண் முன் வந்து மகிழ்வைக் கொடுத்தது.

முளைப்பாரி தூக்கிக் கொண்டு நடந்த வித்யாவின் அருகில் , “அக்கா… ” என்றவாறு  வந்து நின்றாள் அமுதினி … பல வருடங்கள் கழித்துப் பார்த்ததும் … “ஹேய் அம்மு .. எங்க கல்யாணத்துல பார்த்தது… அப்புறம் இப்பதான் பார்க்கிறேன்… எப்படி இருக்க… பாட்டி உன்னையப் பத்தி சொல்லிட்டு இருந்தாங்க… எப்படி கோயமுத்தூர் வறியா… இல்ல சென்னைல படிக்கிறதா இருந்தா அங்க இருக்கிற நம்ம பிரான்ச்ல ஜாய்ன் பண்ணிக்கோ..” என்றவளிடம் ,

“அக்கா … அதை அப்புறம் பார்க்கலாம் … வரூ மைனி வரலயா.. குட்டீஸ் பார்க்க ஆசைப்பட்டேன்.. ” என்றவளிடம் ,

“பேபி பிறந்து ஒரு மாசம் தானே ஆகுது.. அலைச்சல் வேண்டாம்னு தான்…” என குடும்ப விவரங்கள் பேசிக் கொண்டே கோவிலை வந்தடைந்திருந்தனர். அரவிந்திடமிருந்து அவன் மகளை வாங்கி , “குட்டி மா… சித்திக் கூட வாறீங்களா… நாம… ” என்றவள் சற்றுத் தள்ளி விற்பனை செய்துக்கொண்டிருந்த பஞ்சுமிட்டாயைக் காண்பித்து ,

” பஞ்சு மிட்டாய் வாங்கப் போலாமா…” என்றாள். புதிதாகப் பார்த்தவளிடம் செல்லத் தயங்கிருந்த குழந்தையிடம் அரவிந்த் , “போங்க… சித்தி கேண்டி வாங்கித் தருவாங்க.. ஸ்வீ..ட்டா இருக்கும்” என்றதும் அவன் மகள் ,

“ம்மா.. கேண்டி … ” என தாயை தந்தை அழைக்கும் சொல்லைச் மழலையில் மிளற்ற ..வித்யாவோ அரவிந்தை முறைத்து விட்டு ,

” சித்திக் கூட போங்க.. ” எனஅவர்களை அனுப்பி விட்டு ,அரவிந்தைப் பார்த்து , “அத்.. தான் … உங்க பொண்ணப் பாருங்க அம்மு கிட்ட அம்மா கேண்டிங்கிறா .. இனி குழந்தைங்க முன்னாடி அப்படிக் கூப்பிடாதிங்க….” ,

” நான் என்ன சொன்னேன்’ கேண்டி ஸ்வீட்னு தானே சொன்னேன்…” என கண் சிமிட்ட… “அய்யோ கோவில்ல வச்சு … ” என அவன் தோளைத் தட்டியவள் ,

“உங்கள… அதை விடுங்க… பிரதீப்புக்கு அம்முவ கேட்கலாம்னு பெரியவங்க பேசிக்கிட்டாங்க… அவ படிக்கணும்னு சொல்றாளாம் … இப்ப கிளம்பறதக்கு முன்னக் கூட அம்முவ கன்வின்ஸ் பண்ணுனு கனி சித்தி சொல்றாங்க… நான் என்ன பண்ண..” என்றவளிடம் ,

“கல்யாண விஷயத்துல நாம யாரையும் கன்வின்ஸ் பண்ணக் கூடாது.. நீ சாதரணமா பிரதீப் பத்தி பேசிப் பார் … முடிஞ்சா அவன் தீபாவளிக்கு இந்தியா வருவான்னு நினைக்கிறேன்.. அப்போ நாம ரெண்டு பேரையும் மீட் பண்ண வைக்கலாம்.. அதுவரை அத்தைய வெய்ட் பண்ண சொல்லு…” என்று விட்டான்.

அரவிந்த் கூறுவதும் வித்யாவிற்கு சரியாகவேப்பட.. அவளும் கனியிடம் பிரதீப் இந்தியா வரும் வரை பொறுத்திருப்போம் என்று விட்டாள்.உலகநாதனும் செல்வராணியும் கூட அதையேக் கூற .. அரை மனதோடு செல்லக்கனியும் ஒத்துக் கொண்டார்.

ஒரு வழியாக ஊர் திருவிழாவெல்லாம் முடிந்து , சொந்த ஊரில் இருந்த திவ்யஸ்ரீயின் மருத்துவமனையிலேயே பயிற்சிக்காக சேர்ந்துக் கொண்டாள். உயர் படிப்பைப் பொறுத்து வெளியூர் சென்றுக் கொள்ளலாம் என இருந்தவள் குடும்பத்தாரோடு மகிழ்ச்சியாகவே நாட்களைக் கடத்தினாள்.

விஜயகுமாருக்கு சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் பொறியியல் பயில இடம் கிடைக்க , அவனை அங்கு கல்லூரி விடுதியிலேயேத் தங்க விட்டனர். 

நாட்கள் செல்ல அமுதினிக்கும் உயர் கல்விப் பயில சென்னையின் பிரபல மருத்துவக் கல்லூரியிலேயே இடம் கிடைக்க அவளும் சென்னைக்கு கிளம்பினாள்.

பைகளை அடுக்கிக் கொண்டே , “ஏன்டி இப்பவாது திருநெல்வேலி காலேஜ்ல சேர்ந்துக்கோனு சொன்னா கேட்கிறியா..”

“ம்மா… டாப்மோஸ்ட் காலேஜ்ல எனக்கு சீட் கிடைச்சிருக்கு அதை நினைச்சு சந்தோஷப்படுநத விட்டுட்டு … அப்பா கிட்ட இருக்கிற காசுக்கு நீ என்னைய பார்க்கணும் சொல்றப்ப எல்லாம் ஃபிளைட் ஏறிடுவேன்.. ” என்றவளிடம் ,

“ப்ச் போடி… ” என மகள் தனியே தங்கப் போகும் கவலையில் இருந்தவரை … தோளோடு கட்டிக் கொண்ட அமுதினி ,

” செல்லம்ல… அப்பாவ கவனிங்க.. நான் பத்திரமா இருந்துக்குவேன்… என் கிளாஸ்மேட்ஸ் ரெண்டு பேர் கூட தானே தங்கப் போறேன். என் சீனியர் ரெண்டு பேர்னு பாதுகாப்பா இருப்பேன் மா.. கிளாஸ் முடிச்சுட்டு திவி மைனி ஹாஸ்பிட்டல் போய் பிராக்டிஸ் பண்ணப் போறேன். மொத்தத்துல நைட் தூங்க மட்டும் தான் மா வீடு எடுத்து தங்கறோம்..”

” உனக்கு கல்யாணம் பண்ணி அனுப்பினா மட்டும் தான் எனக்கு நிம்மதி … யாரையோ பிடிச்சுருக்குனு சொல்ற.. அவங்க யாரா இருந்தாலும்.. உன் சந்தோஷத்துக்காக நாங்கப் போய் பேசுறோம்னு சொல்லியாச்சு .. அதுவும் வேண்டாம்.. அவங்க இன்னும் பதில் சொல்லலனு சொல்ற … ” என்ற செல்லக்கனி கோபமாக , 

“அப்படி பதில் சொல்லாதவன் பின்னால போய் கெஞ்ச சொல்றியா…எந்த வீட்லயாவது பொட்டப்புள்ளைக்கு இவ்வளவு சுதந்திரம் கொடுப்பாங்களா…. நாங்க கொடுத்துருக்கோம்.. உன் மேல நம்பிக்கை இருக்கப் போய் தானே.. என் பொண்ணு தேர்வு தப்பா இருக்காதுனு தானே…” என்றவரின் குரல் இறங்கி..

“ப்ச் … கிளம்புறப்ப புலம்பக் கூடாது தான் … ஆனா நாளும் பொழுதும் வேகமா ஓடுதே அம்மு … நீ சொல்றத நாங்க கேட்கிறது போல  நாங்க சொல்றத நீயும் கேட்கணுமில்ல..யோசிச்சு பார்த்து முடிவு சொல்லு.. ஒருத்தர் கையில உன்னைப் பிடிச்சுக் கொடுக்கிற வரை எனக்கு நிம்மதி இல்ல அம்மு ….” என்றவரிடம் ,

” எப்படி பிடிச்சு கொடுப்ப மா.. இப்படியா இல்ல இப்படியா ..” என கையப் பிடித்தும் , செல்லக்கனியை கட்டிப்பிடித்தும் காட்டிய மகளை , ” உன்னை….” என்றவர் செல்ல அடிக் கொடுத்து நகர்ந்து விட்டார்.

எதிரில் இருந்த கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டே , தலைமுடியை ஒதுக்கியவள் , “அவ்வளவு டெரரா இல்லையே… ப்ரபஸ் பண்ணின நாளிலிருந்து தாமரை ஃபோன் ஸ்விட்ச் ஆஃப்னு வருது…ஒரு வேளை… ” என யோசித்தவள் ,

“அப்படியிருக்குமோ… அதான் என் மேல காண்டாகிட்டாளோ… பார்க்கலாம்.. பார்க்கலாம்” என்றவாறு சென்னைக்கு கிளம்பி விட்டாள். சென்னை வாழ்க்கை அமுதினிக்கு இலகுவாகிவிட, விஜயகுமார் தான் மிகுந்த சிரமத்திற்குள்ளானான்.விடுதி உணவு உடலுக்கு ஒத்துக் கொள்ளாமல் அடிக்கடி உடல் நலக் கோளாருக்கு உள்ளானவனை மருத்துவமனையில் சேர்க்கும் அளவிற்கு வந்துவிட்டது.

திவ்யாவின் மருத்துவமனையில் தான் சேர்க்க , குடும்பமே கிளம்பி வந்து விட்டனர். அன்றுக் கல்லூரி முடிந்து மாலை மருத்துவமனை வந்தவள் தம்பியைப் பார்த்து விட்டு திவ்யா அறையை நோக்கிச் சென்றாள்.

வெளியே நின்ற செவிலியர் , “உள்ளே பேஷன்ட் இருக்கிறாங்க மேம்…” என்றதும் வாசல் அருகே இருந்த சுவற்றில் சாய்ந்தவாறே காத்திருந்தவள், கதவு திறக்கவும் , திரும்பி உள்ளே செல்லத் தயாராக , முழங்கையிலிருந்து மணிக்கட்டு வரையிலான கைவலி பெல்ட் ஒன்றை அணிந்து ரகுவரனிடம் பேசிக் கொண்டே வெளியே வந்தவனைக் கண்டு பேச மறந்து நின்று விட்டாள்.

அவன் கையிலிருந்த . கைப்பேசியும் சரியாக ஒலிக்க ஆரம்பிக்க , ரகுவிடம் “ஒரு நிமிஷம் ” என்றவாறு காதில் ஃபோனை வைத்துக் கொண்டு நகர்ந்து விட்டான்.

ரகு தான் அவளைப் பார்த்துப் புன்னகைத்தவன், “அம்மு எப்படி மா இருக்கிற… ” என்றதும் பதில் சொல்வதற்குள் ரகுவை திவ்யா அழைப்பதாகக் கூறவும் அவனும் உள்ளே சென்று விட… மருத்துவ மனையின் பெரிய காரிடரில் நடந்துக் கொண்டேப் பேசியவனின் முன் வேகமாக ஓடிச் சென்று நின்றாள் அமுதினி.

காதில் அலைப்பேசியை வைத்திருந்தவன் சட்டென காதில் இருந்து எடுத்து , ‘என்ன’ என்பதாகப் பார்த்தான். ஜீன்ஸ் குர்தாவில் சிறு பெண்ணாக இருந்தாலும் , அவள் போட்டிருந்த வெள்ளைக் கோட்டும், கையில் வைத்திருந்த ஸ்டெதஸ்கோப்பும் மருத்துவர் என்பதை பறைசாற்ற,

“சொல்லுங்க டாக்டர் ..” என்றான் தேவராஜன்.

என் எழுத்தை அறிந்த என் அபிமான வாசகர்களே …

                   1990 களில் இருந்த தேவராஜன் இன்றைய காலக்கட்டத்தில் இருந்திருந்தால் என்ற கற்பனையே இந்தக் கதை உருவாகக் காரணம்..இந்த இரு அத்தியாயங்களிலும் சிறு கதாபாத்திரங்களாக வந்த திவ்யஸ்ரீ (என் இதயமே நீ தானே) இசை ( சில்லென்ற காதலின் அலை), வித்யா ( தூவுதே தேன்மழை) இவர்களது காதலுக்கு ஈடாக தேவராஜன் அமுதினியின் காதலும் இருக்கும் என்ற நம்பிக்கையில் …

                                                 தொடர்கிறேன்…

Advertisement