Advertisement

சாரல் 1

                  செங்குருதி சேயோனே

                   வங்கொடிய வேலோனே

                   செவ்வலறி தோளோனே

                    என் குடிய காப்போனே..

பாட்டு அதிரத் துவங்க மெத்தையிலிருந்த தலையணையை இரு காதோடும் அழுத்திப் பிடித்துக் கொண்டு… மறுபக்கம் புரண்டுக் கொண்டிருந்தவள் தோளைப் பிடித்து உலுக்கிக் கொண்டே , “அம்மு எழுந்திரி ,, எவ்வளவு நேரம் அலாரம் அடிக்குது.. முருகன் பாட்டு வைக்கச் சொன்னா.. டம்டம்னு சத்தம் தான் வருது ” என்ற செல்லக்கனியிடம் , கண்களை மூடியவாறே..

“செல்லம் ப்ளீஸ்… இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேனே.. இதுவும் முருகன் பாட்டு தான்..அலாரம் கட் பண்ணுங்க..” என்றதும் முதுகில் சுள்ளென வலியெடுக்க , முதுகைத் தடவிக் கொண்டே , “ஏன் மா ஒரு டாக்டரப் போட்டு இப்படி அடிக்கலாமா… நல்லா கேட்டுப்பாருங்க.. அதுவும் முருகன் பாட்டு தான் …” என பின்புறமாக வலதுக்கரத்தைக் கொண்டு போய் தடவிக் கொண்டே எழுந்தமர்ந்த அமுதினி செல்லக்கனியின் மடியில் மீண்டும் படுத்துக் கொண்டாள்.

“பெத்தவள பேர் சொல்லாத பேர் சொல்லாதனு எத்தனை தடவை சொல்றது… நீ எவ்வளவு பெரிய டாக்டரானாலும் எனக்கு பொண்ணுதான்டி… சரி எழுந்திரி ஊருலருந்து கார்த்தி வந்துட்டான்னு அக்கா ஃபோன் பண்ணினாங்க.. அதே போல எங்க விசு அண்ணன் மகனும் மருமகளும் கூட வந்துட்டாங்க. முதல்ல யாரைப் போய் பார்க்கப் போகலாம்னு சொல்லு.. எல்லாம் உன் முடிவு தான்.” என்றதும், பட்டென எழுந்துக் கொண்டவள் ,

” ஹை… திவி மைனி , செளமியக்கா , வித்யா மைனி எல்லாரும் வந்துருக்காங்களா…” என்றவளின் கூந்தலை ஒதுக்கி விட்டவாறே…

“நம்ம பானுவுக்கும் இது ரெண்டாம் பிரசவம் … தேதி நெருங்கினதால எல்லாரும் கொடை ( சித்திரையில் தென் மாவட்ட கிராமத்துக் கோவில்களில் நடக்கும் திருவிழா) முடிஞ்சாக் கூட ஒரு வாரம் இருந்துட்டுத்தான் போவாக… ” என்றதும் துள்ளிக் கொண்டு எழுந்தவள்,

“ம்மா.. பானுக்காவும் இங்க தான் இருக்காகளா.. முதல்லயே சொல்லக் கூடாது. நேத்துக் காலையில ஊருல வந்து இறங்கினதுலருந்து..உன்னையப் பாக்க பவுனுஆச்சி வந்துருக்காக…மல்லியத்தை வந்துருக்காக.. ஜெயந்தி சித்தி வந்துருக்காகக… வாம்மா மின்னல் னு என்னைய கொஞ்ச நேரம் கூட தூங்கவிடல… கூடவே கால் வலிக்கு வைத்தியம் பாரு, வயித்து வலிக்கு வைத்தியம் பாருனு அத்தனை சொந்தக்காரங்களையும் கொண்டு வந்து நிப்பாட்டிட்ட.. கொஞ்சம் கூட ரெஸ்டே இல்லமா… ” என்றவளிடம் ,

“சொந்தக்காரங்களா இருந்தாலும் நீ டாக்டராகிட்ட … அப்ப அவங்க வைத்தியம் பார்க்கத்தானே சொல்லுவாங்க… அதுவும் டாக்டர்னா நேரங்காலம் பார்க்காம வேலை செய்யணும்ல… இப்பவே பழகிக்கோ..” என்றவாறு போர்வையை மடிக்க ஆரம்பித்தவரிடம் ,

“ஒரு நேரம் டாக்டரானாலும் என் பொண்ணுனு சொல்ற.. இன்னொரு நேரம்.. என் பொண்ணா இருந்தாலும் டாக்டருங்கிற… போம்மா… நான் போய் பானுக்காவப் பார்த்துட்டு வாறேன்…” என்றவாறு குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள்.

குளித்துக் கிளம்பி வந்தவளை , சாப்பாட்டு மேசையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த சண்முகநாதன் ,

“பாப்பா என்னம்மா சீக்கிரம் எழுந்துட்ட.. வந்து சாப்பிடுமா … ” என மகளை அழைத்தார். “அப்…பா…” என அவர் அருகில் வந்து அமர்ந்தவளுக்கு , தன் கையிலிருந்த தோசையினை ஊட்டி விட்டுக் கொண்டே…

“என்னம்மா முடிவு பண்ணியிருக்க … கோயமுத்தூர் போறியா.. சென்னைக்கு போறியா… இல்ல இங்கேயே இருக்கிறியா … எதுனாலும் உன் விருப்பம் தான் … அதோட அப்பா ஆசையையும் கொஞ்சம் நிறைவேத்தப் பார்க்கலாமே… ” என்றவருக்குப் பதிலாக..

“ப்பா… முதல்ல கிராஜூவேஷன் வாங்கிறுறேன் … அப்புறம் இப்போதைக்கு நம்ம ஊர்ல இருக்கிற திவி மைனி ஹாஸ்பிடலுக்குப் போறேன்… அப்புறம் பிஜி நீட் எக்ஸாம் முடிச்சதும் எங்க கிடைக்குதோ அங்க படிக்கிறேன் பா… அப்புறம்… ” என்றவள் எழுந்துக் கொண்டே …

“ஒரு ப்ரபசல் பண்ணியிருக்கேன் பார்க்கலாம் .. அதுக்கூட எனக்குப் பிடிச்ச கோர்ஸ் கிடைச்சு படிச்சு முடிச்சப் பிறகு தான்..” என்றவாறு வெளியே செல்லப் போனவளை , உணவுப் பரிமாறிக் கொண்டிருந்த செல்லக்கனி,

“என்னடி சொல்ற… ” எனப் பதற… சண்முகமோ ..”கனி… ” என கண்களை மேலும் பேசாதே என்பது போல் காட்டவும் … அவரை முறைத்துக் கொண்டே , மகளிடம் ..

“சாயந்திரம் எங்க ஊர் கொடைக்குப் போகணும் அம்மு… சீக்கிரம் வந்துடு.. ஆச்சி உனக்காக முளைப்பாரிப் போட்டு வச்சுருக்காகளாம்..” என்றவரிடம் ‘சரி’ என தலையசைத்து விட்டுச் சென்றாள். வெளிவாசலை அடைந்தவள் கண்ணில் அவளது சித்தப்பா மகன் பதினெட்டு வயது நிரம்பப் போகும் விஜயகுமார் ஒரு விலையுயர்ந்த மோட்டார் சைக்கிளில் வீட்டு வளாகத்திற்குள் நுழையப் போவது தெரிந்ததும்,

“ஏல நில்லு நில்லு… ” என அவனை நிறுத்திக் கொண்டே … ” எப்படில சித்தப்பா தந்தாங்க… பைக்கைத் தொடவே விட மாட்டாங்களே… இறங்கு ” என்றவாறே அவனிடமிருந்து அந்த புல்லட்டை வாங்கிக் கொண்டவளிடம் ,

“எக்காஆஆ… பெரியம்மா பார்த்தா திட்டப் போறாக… போச்சுப் போ ராஜன் பார்த்துட்டு வீட்டுக்குள்ள போறான்   ” என்றவனிடம், பைக்கில் அமர்ந்து ஸ்டார்ட் செய்துக்கொண்டே , “ஸ்பீக்கர் பாக்ஸ வந்து கவனிச்சுக்கிறேன்.. அதுவரை ‘பார்த்துக்கலாம் ‘..” என விக்ரம் படத்தில் வரும் நடிகர் கமல் பாணியில் கண் சிமிட்டியவள் வண்டியை இயக்கிச் சென்று விட்டாள்.

அதற்குள் அமுதினி வண்டியை இயக்கிச் செல்வதைக் கண்ட விஜயக்குமாரின் இளைய சகோதரன் பதினைந்து வயது விஜயராஜன் வேகமாக செல்லக்கனியிடம் சென்று , ” பெரியம்மா அக்கா புல்லட் ஓட்டிட்டுப் போறா… ” என்று விட… அவர் கணவனிடம் புலம்பிக் கொண்டே, வெளியே வந்து , “அம்மு நில்லு… ” என சத்தமிடும் போதே அவள் சென்றிருந்தாள்.

சண்முகநாதன் நெல்லையில் மிகப் பெரிய ஜவுளிக்கடை மற்றும் பாத்திரக் கடைகளின் உரிமையாளர் ஆவார்… கூடவே விவசாயமும் செய்து வருகிறார். அவர்களின் ஒரே மகள் தான் அமுதினி. மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த வருடம் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு வந்திருக்கிறாள்.

வீட்டின் அருகிலேயே அவரது உடன் பிறந்த இளைய சகோதரன் உலகநாதன் குடும்பமும் வசித்தது.உலகநாதனின் மனைவி செல்வராணியும் செல்லக் கனியும் கூட உடன் பிறந்த சகோதரிகளே.

உலகநாதனுக்கு இரும்பு மற்றும் மர வியாபரங்கள் உண்டு. அவர்களது தந்தை முன்பே சகோதரர்கள் இருவருக்கும் சொத்துக்களை சமமாக பிரித்துக் கொடுத்து விட்டுத்தான் சென்றிருந்தார். அந்தக் குடும்பத்திலேயே ஒரே பெண் குழந்தையாக இருந்ததால் அமுதினிக்கு குடும்பத்தாரிடம் சலுகைகள் நிறையவே உண்டு.

அவள் விரும்பிய மருத்துவ படிப்பை முடித்ததும் திருமண ஏற்பாடுகள் செய்ய .முயன்ற சண்முகநாதனிடம் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்று கூறியிருந்த அமுதினியிடம் , அவள் யாரையும் விரும்பியிருந்தாலும் மணமுடித்து வைக்கத் தயாராகவே இருந்தார். ஆனால் முதுநிலை படிப்பில் சேர்ந்த பின் திருமணம் குறித்துப் பேசிக் கொள்ளலாம் என்று விட்டாள். அதுவரை அவர்களது உறவினர்கள் நடத்தும் மருத்துவமனையில் பணி புரியலாம் என்ற எண்ணத்தில் இருந்தவள் தான், உறவினர்கள் அனைவரும் திருவிழாவிற்காக ஊருக்கு வந்திருப்பதை அறிந்து இப்போதுக் காணச் சென்றுக் கொண்டிருக்கிறாள்.

    தனது மாமியார் வீட்டின் எதிரில்  பழைய வீட்டை இடித்து விட்டு  கட்டப்பட்டிருந்த தனது அம்மா வீட்டின் முன்புறத் தோட்டத்தில் மூன்று வயது மகனை சிறிய சைக்கிளில் விளையாட விட்டுக் கொண்டிருந்த பானுமதி, கையில் சிறிய கிண்ணத்தில் இருந்த இட்லியோடு மகனின் பின்னோடு சுற்றிக் கொண்டிருந்தாள்.

வெளியே புல்லட் வண்டியின் சத்தம் கேட்கவும் , ” ம்மா அப்பா.. பைக் போத்தேன்.” என்ற மகன் தனது சிறிய பொம்மை சைக்கிளை விட்டு இறங்கி வெளிவாசற் கதவு அருகே நடக்க … பானுவும் யார் வருகிறார்கள் எனப் பார்த்தவள் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி.

“அம்மூ … எப்ப வந்த … ” என கேட்க…” போக்கா…போக்கா… நான் உன்கிட்ட பேச வரல … என் செல்லக்குட்டியப் பார்க்க வந்தேன்…” என்றவாறு பைக்கிலிருந்து இறங்கி வந்து பானுவின் மகனைத் தூக்கியவள் , “ஸ்ரீ குட்டி சித்திக் கூட பைக்ல வறீங்களா” என்றவாறே ‘பைக்’ அருகில் சென்றாள்.

“பைக்லயா… அம்மு வேண்டாம்… அவனுக்கு உட்காரத் தெரியாது… ” எனக் கூடவே வந்த பானுமதியிடம் , “அதெல்லாம் நான் கவனமா பிடிச்சுக்குவேன் …” என சொல்லும் போதே மற்றொரு கார் வீட்டிற்குள் வரப் பார்க்க… அமுதினியின் கையிலிருந்த ஸ்ரீ , “ப்பா…” என இறங்கி காரின் அருகேச் சென்றான்.

காரிலிருந்து இறங்கி மகனைத் தூக்கிக் கொண்ட ரகுவைக் கண்ட அமுதினி , “ஹாய் அத்தான் எப்படி இருக்கீங்க… ” என்றவள் ரகுவிடம் சில வார்த்தைகள் பேசிவிட்டு பானுவிடம் ,

“திவி மைனி வந்துருக்கிறதா அம்மா சொன்னாங்க … ” என்றவாறே,குழந்தையை ‘வா’ என அழைக்க “வரமாட்டேன்” என்பதாக தந்தையின் கழுத்தை கட்டிக் கொண்டான் ரகுவின் மகன். அவனின் செய்கையில் புன்னகைத்த அமுதினி ,

“பாருக்கா அவங்கப்பாவப் பார்த்ததும் என் கூட வர மாட்டேன்கிறதை ” என்றவாறு பானுவைப் பார்க்க , பானுவோ வியர்வை வழிய பல்லைக் கடித்தவாறு காரில் கையூன்றி நின்றாள்.அமுதினி , ” அக்கா…” என பதற்றத்துடன் அருகில் செல்லவும், ரகுவும் , ” இசை” என்றவாறு மனைவியின் அருகில் சென்றான்.

“பா… பாஸ்” என மூச்சு வாங்கியவளைப் பார்த்ததுமே அமுதினி , ” அத்தான் அக்காக்கு பெய்ன் ஆரம்பிச்சுட்டுப் போல … வாங்க ஹாஸ்பிட்டல் போகலாம்…” என துரிதப்படுத்த , “அம்மா… ” என வீட்டை நோக்கி சீதாவை சத்தமாக அழைத்தான் ரகுவரன்

அவனது தோளைப் பிடித்துக் கொண்டே , “அத்தை.. மாமா.. கோவிலுக்கு போயிருக்காங்க..” என்ற பானுவை கார் கதவைத் திறந்து அமர வைத்த அமுதினி ,

“அத்தான்… வயிறு இறங்கினது போல இருக்கு.. நாம உடனே ஹாஸ்பிட்டல் கிளம்பலாம்..” என்றவள் ஸ்ரீயை வாங்கிக் கொண்டு தானும் உள்ளே அமர்ந்துக் கொண்டாள். வேகமாக நெல்லை செல்லும் நெடுஞ்சாலையில் கட்டப்பட்டிருந்த டிகே (DK ) மருத்துவமனைக்குள் நுழைந்தனர்.

செல்லும் போதே மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்க அவர்களும் வெளியே சக்கர நாற்காலியை வைத்துக் கொண்டு தயாராக இருந்தனர்.  மருத்துவர்களான திவ்யாவும் செளமினியும் விடுமுறைக்காக ஊருக்கு வந்து இருக்க இன்றிலிருந்து ஒரு பதினைந்து நாட்களுக்கு ஜோயலையும் மெர்சியையும் அவர்களது சொந்த ஊருக்கு விடுமுறையில் அனுப்பியிருந்தனர்.

ரகு வந்து இறங்கியதும் சீதாவிற்கு அழைத்ததோடு திவ்யாவும் செளமினியும் கூட வழியில் இருக்கிறார்கள் என்பதை அறிந்துக் கொண்டு பிரசவ அறை செல்லப் போக , அமுதினி ஏற்கனவே பானுமதியோடு உள்ளே நுழைந்திருந்தாள்.

சென்னையில் மகப்பேறு மருத்துவத்தில் பெயர் வாங்கிய திவ்யாவும் செளமினியும் வேக வேகமாக மருத்துவமனை வந்து பிரசவ அறையை நெருங்கும் போது அமுதினி கையில் பானுமதியின் புதல்வி இருந்தாள். ஈன்றவளின் அதே நிம்மதியும் மகிழ்ச்சியும் பிரசவம் பார்த்தவளின் முகத்திலும் தெரிந்தது.

பிரசவ அறைக்குள் நுழைந்த தோழியர் இருவரும் குழந்தையை கையில் வைத்திருந்தவளைத் தட்டிக் கொடுத்து ,பானுமதியைக் கவனித்துக் கொண்டனர். குழந்தையை செவிலியர்  சுத்தப்படுத்த வாங்கவும் தான் உணர்வுக்கு வந்தாள் அமுதினி.

மருத்துவ மாணவியாக பிரசவம் பார்க்கையில் துணைக்கு நின்றிருக்கிறாள். ஆனால் முதல் முறை தனியாக பிரசவம் பார்த்தது பெரு மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தது.  

திவ்யா பானுமதியிடம் , “சில்லு ஜானகி அத்தை தான் வந்துருக்காங்க பார்… ” என வயிற்றுச் சுமை இறக்கிய சோர்வில் இருந்தவளிடம் கூறவும் … புன்னகையோடு கண் அயர்ந்தாள் ரகுவரனின் ‘இசை’ .

செளமினி , ” ஒய் அமுல் பேபி .. என்ன தனியா பிரசவம் பார்த்துட்ட போல… மெர்சிக்கூட பிராக்டிஸ் பண்ண இங்கேயே இருக்கியா… எங்க கூட சென்னைக்கு வாரீயா…” என்றவளிடம் ,

“எக்காஆஆ… நான் இப்ப மெலிஞ்சுட்டேன்… இப்பவும் அமுல் பேபி மாதிரியா இருக்கேன்…” என சிணுங்கியவள் , ” பி.ஜி.  ஜாய்ன்  பண்றதப் பொறுத்து முடிவு பண்ணனும் கா…” என்றவளிடம் செளமினி பானுவைக் காண்பித்து ,

“எங்களுக்கு அவ சில்லுக் கருப்பட்டினா… நீ எப்பவும் எங்களுக்கு அமுல் பேபி தான் அம்மு…” என புன்னகைத்தாள் செளமினி.

அதற்குள் பானுவுக்கு குழந்தைப் பிறந்த விவரம் அறிந்து அனைவரும் மருத்துவமனையில் குழுமி விட்டனர். அதில் செல்லக்கனியும் செல்வராணியும் கூட இருந்தனர். செல்வராணி அக்கா மகளை கட்டிப் பிடித்து முத்தமிட்டு திருஷ்டி கழித்தவர் ,

“பாப்பா நீ பெரிய டாக்டராவனு எனக்குத் தெரியும்மா.. நீ எங்க படிக்கணும்னு சொல்லு அங்கேயே சேர்ந்துக்கலாம்..” பின்னாடியே செல்லக் கனியும் விஜயராஜனும் அருகில் வர , விஜயகுமார் , “அக்கா பைக் சாவியக் கொடு பெரியம்மா கிட்ட திட்ட நீ வாங்கிக்கோ…” என்றவாறு கை நீட்ட , தனது பேன்ட் பாக்கெட்டில் இருந்து எடுத்துக் கொடுத்தவள் , அருகில் நின்ற ராஜனிடம் ,

” இருல.. உனக்கு வாங்கிக் கொடுத்த பிளேஸ்டேஷன்லாம் எடுத்துட்டுப் போய் சித்தப்பா குடோன்ல போடுறேன்..” என்றவளை ,

“பெரியம்மா அக்கா மிரட்டுறா..” என்றவனின் கையைப் பிடித்துக் கொண்ட செல்லக்கனி,

“பிள்ளைய மிரட்டாதடி…வண்டிய எடுத்துட்டுப் போனது தப்புதான்.. இனி இப்படிப் பண்ணாத … ஊருக்கு கிளம்பணும் வா…” என்றவாறு அழைத்துச் சென்றாலும் ,

“அம்மு.. நல்ல காரியம் தான் பண்ணியிருக்க.. ஆனா இப்படி பெரிய வண்டியெல்லாம் ஓட்டாத.. எல்லாம் உங்கப்பா கொடுக்கிற செல்லம்… ” எனும் போதே வழியில் இருந்த புளிய மரத்திலிருந்து புளியை குதித்து பறித்து வாயில் போட்டவளை,

“டாக்டருக்குப் படிச்சவ மாதிரி நடந்துக்கோ.. அம்மு.” என தலையில் ஒரு கொட்டையும் வைக்க…

“ஷ் … தலை வலிக்குது மா… மண்டைல கொட்டும் போது மட்டும் நான் டாக்டரா தெரியலயா உனக்கு..சும்மா டாக்டருக்கு படிச்சவ அதை செய்யாத இதை செய்யாதனுட்டு.. டாக்டரானாலும் நானும் சாதாரண மனுஷிதான்… பைக் ஓட்டுறதால.. புளியங்காய் சாப்பிடுறதால என்ன பிரச்சினை வரப்போகுது..” என்றவாறே நடக்க ஆரம்பித்தாள்.

அங்கு அமுதினி பானுமதிக்கு பிரசவம் பார்த்தது அதற்குள் அக்கம் பக்க உறவுகளுக்கு தெரிந்து விட அவர்கள் வீட்டிற்கு வருவதற்குள்ளாகவே உறவுகள் வந்து விட்டனர்.

“கனி .. என் பேத்தி தான் ஜானகி மவளுக்கு பிரசவம் பார்த்தாளாமே….”ஒவ்வொருவராக வந்து இன்றும் முதல் நாளைப் போல் சூழ்ந்துக் கொண்டனர். அருகில் இருந்த விஜயகுமாரிடம் ,

“என்னல… நான் வீட்டுக்கு வரதுக்குள்ள ஊரே கூடிட்டாக.. ” என்றவளிடம் விஜயராஜன் , “அக்கா நான் தான் மாரி ஆச்சிட்ட சொன்னேன்…” எனவும்” “ஸ்பீக்கர் பாக்ஸ் ..உன்ன ….” என பல்லைக் கடித்து , அருகிலிருந்த அவளது சித்தப்பா வீட்டிற்குள் ஓட , அவள் என்ன செய்யப் போகிறாள் என்பதை உணர்ந்த விஜயராஜன் , ” பெரியம்மாஆஆ..” என கத்த ஆரம்பித்தான்.

அதற்குள் சண்முகநாதனும் வந்தவர் , “கனி என் பொண்ண இன்னும் விளையாட்டுப் பிள்ளையாவே இருக்கானு கவலைப்படுவியே இப்ப பார்த்தியா..” எனப் பெருமையாக சொன்னவரிடம் , அமுதினி இருந்த திசையை கண்களால் காட்டிய செல்லக்கனி தலையிலடித்துக் கொண்டு, “சீக்கிரம் மாப்ள பாருங்க ஆமா..” என கணவனிடம் கூறிவிட்டு  சிறுவனிடம் சண்டைப் போடும் மகளை நோக்கி நடந்தார்.

அதே நேரம்… விபத்தில் சிக்கி தலையிலும் உடலிலும் பலத்த காயங்களுடன் மதுரையிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த மூன்று நாட்களாக கண் திறவாமல்  அவசர சிகிச்சைப் பிரிவில்  இருந்த தேவராஜன் மெல்ல கண் விழித்தான்.

Advertisement