Advertisement

ஓம் நமச்சிவாய..

மலரே மன்னிப்பாயா

அத்தியாயம் ஆறு..

 அதோ இதோ என்று திருமணம் நடக்க வேண்டும் என்று நினைத்த அனைவரின் நினைப்பையும் பொய்யாக்காமல் திருமண நாளும் வந்தது..

நிலா சென்னையிலேயே இருந்தபடியால் அவளுக்கு தேவையான அனைத்தும் பாட்டி பணம் அனுப்பியதில் வாங்கி வைத்துக் கொண்டாள்..

 திருமணத்திற்கு ஒரு கிழமையின் முன்பு பாட்டியும் சென்னைக்கு வந்து விட்டார்..

 

வரதராஜன் தாயை தனது வீட்டுக்கு வருமாறு அழைத்தார்.. ஆனால் அவர்போகவில்லை .. வரதன் இரண்டாவது திருமணம் முடித்ததில் மதி பாட்டிக்கு எந்த வருத்தமும் இல்லை.. ஒரேடியாக நிலாவை ஒதுக்கியே வைத்து விட்டானே மகன் என்று வருத்தம் மட்டுமே வரதன் மேல் உள்ளது.. அதனால் தற்பொழுது தான் பேத்தி தனித்து விட்டாளோ என்று வெகுவாக யோசித்தார்.. தன் பேத்திக்கு அனுமதி இல்லாத இடத்தில் அவருக்கு போக விரும்பாமல் வரதன் அழைத்தும் மறுத்துவிட்டார்..

 திருமண மண்டபத்திற்கு அருகிலேயே தற்காலிகமாக திருமணம் முடியும் வரை ஓர் சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கே நிலா மற்றும் நித்யாவுடன் தங்கி கொண்டார்..

அந்த வீடு அனைத்திற்கும் அவர்களுக்கு வசதியாக இருந்தது..

 சந்துருவின் அம்மா தீர்மானித்தபடி திருமணத்திற்கு முதல் நாள் மாலை நிச்சயதார்த்தம் அனைவரும் எதிர்பார்த்த படி விமர்சையாக நடந்து முடிந்தது..

  வரவேற்பும் இரவு ஏழு மணி அளவில் ஆரம்பித்தது.. ஏனோ கடமைக்கு என்று நிலா சந்துருவின் அருகில் நின்றாள்..

 சந்துரு நிலா கைபேசியிலும் நேரிலும் பேசாததை ஏதோ பெண்களுக்கே உரிய வெட்கம் என்று நினைத்துக் கொண்டான்.. திருமணம் முடித்து சொந்தம் ஆகியதும் அவளிடம் பேசி அவனை பற்றி புரிய வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்து விட்டு விட்டான்..

 சந்துரு அவனது திருமணத்தை மகிழ்ச்சியாகவே எதிர்நோக்கினான்.. வாழ்வில் ஒரு முறை நடக்கும் இந்த நிகழ்வை சந்தோஷமாக வரவேற்று புன்முறுவலுடன் தலையசைத்து அனைவரின் வாழ்த்தையும் ஏற்று நிலாவின் கையை பற்றிக்கொண்டு நின்றான்..

 சந்துருவின் சார்பாக அவனது நண்பர்கள் மற்றும் சொந்தங்கள் அனைவரையும் அவன் வரவேற்று முக்கியமானவர்களை மட்டும் நிலாவிற்கு அறிமுகப்படுத்தி வைத்தான்..

 நிலா சார்பாக வெளியில் இருந்து வேறு யாரும் வரவில்லை..

 வரதராஜனும் அவரது குடும்பமும் மதிப்பாட்டியும் நித்தியாவும் மட்டுமே நிலாவின் சொந்தமாக நின்றார்கள்..

 மனதில் விருப்பமில்லாமல் கட்டாயத்திற்காக ஏனோதானோ என்று அலட்சியமாக போட்டோவிற்கு போஸ் கொடுத்தாள் நிலா..

 வந்தவர்கள் அனைவரும் உணவு உண்டு விட்டு திருமண ஜோடியோடு நின்று போட்டோ எடுத்துக் கொண்டு அவர்கள் எடுத்து வந்த பரிசு பொருட்களையும் வழங்கிவிட்டு கலைந்து சென்றார்கள்..

 நேரம் இரவு 11 மணியை நெருங்கியது..

  நிலா சைட்டில் அதிக ஆட்கள் இல்லாததால் சந்துருவின் குடும்பத்தார்களும் நெருங்கிய சொந்தங்களும் நிலாவின் குடும்பத்தார் மட்டும் மண்டபத்தில் தங்கி இருந்தார்கள்..

 நித்யாவும் பாட்டியும் வரவேற்பு முடிந்ததும் நிலாவை அழைத்துக் கொண்டு அறைக்கு சென்று விட்டார்கள்..

 வரதனும் அவரது குடும்பத்தோடு அறைக்கு சென்றுவிட்டார்..

 தந்தைக்கு தெரிந்தால் திட்டுவார் என்று யாருக்கும் சொல்லாமல் தாய், தந்தையின் கண்ணிற்கு முன் அவனது அறைக்கு சென்று விட்டு அரை மணி நேரத்தில் அனைவரும் களைத்து உறங்கிய பின் நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி பேச்சுலர் பார்ட்டி வைப்பதற்காக வெளியே ஓர் இடத்தை தேர்வு செய்து அங்கே நண்பர்களை சத்தம் இல்லாமல் பெற்றோர்க்கு தெரியாமல் அழைத்துக் கொண்டு சென்று விட்டான் சந்துரு..

திருமணத்திற்கு வேலை செய்த களைப்பினால் அனைவரும் விடிந்தால் திருமணம் என்னும் நிலையில் சற்று நேரமாவது இந்த உடலுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று உறங்கி விட்டார்கள்..

 சந்துருவுடன் அவனது தந்தையோ அல்லது அவனது தம்பியோ உடன் இருந்து இந்த பார்ட்டியை தடுத்திருக்கலாம்.. அதன் மூலம் பின்பு வரும் பிரச்சினைகளையும் வராமல் பண்ணிருக்கலாம்.. காலம் அதன் செயலை அனைவரின் கண்ணையும் உறக்கம் என்னும் மாய வலையை போட்டு முடிவிட்டு அதன் செயலை வெற்றிகரமாக செய்து முடித்தது..

 நண்பர்கள் அனைவரும் சந்தோஷமாகவே பார்ட்டியை கொண்டாடினார்கள்.. விடிந்தால் திருமணம் எனும் நிலையில் சந்துரு குடிக்க மாட்டேன் என்று கூறியவனை.. காட்டாயப்படுத்தி சிறிதளவேனும் குடிக்குமாறு கூறினார்கள்.. அவன் எவ்வளவோ வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் பார்ட்டி வைத்த அவனே குடிக்காமல் இருப்பது முறையாகாது என்று இல்லாதது பொல்லாதது அனைத்தையும் கூறி நண்பர்கள் அனைவரும் அவனை சுற்றி வளைத்து அமிக்கிப்பிடித்து அவனது வாயில் சரக்கை ஊற்றி விட்டார்கள்..

 அங்கிருந்தவர்கள் அனைவருக்கும் அதிக போதை ஏறி அவரவர்கள் அங்கங்கே புரண்டு படுத்து விட்டார்கள்..

 சந்துரு வெளியே வந்தது இவ்வாறு குடித்தது அனைத்தும் பெற்றோருக்கு தெரிந்தால் பெரும் பிரச்சனையாகிவிடும் என்று நினைத்து எப்படியேனும் இங்கிருந்து அறைக்கு சென்று விடலாம் பின் குளித்து எலுமிச்சை பழச்சாறு அறைக்கு வரவைத்து குடித்து போதையை தெளிய வைத்து யாருக்கும் சந்தேகம் வராத அளவு நடந்து கொள்ளலாம் என்று நினைத்து காரில் ஏறி புறப்பட்டான்..

 ஒரு மனிதன் எப்பொழுதும் அவசரத்திலும் நிதானம் இல்லாமலும் எடுக்கும் முடிவு அவனுக்கு ஆபத்திலேயே முடியும் என்பது முடிவின் இறுதியில் மட்டுமே அவர்களுக்கு தெரியும்..

 இளம் வயதிலேயே அவனது உயிர் பறிக்கப்பட வேண்டும் என்பது விதி ஆயிற்றே.. அதை யாராலும் தடுக்க முடியாது போனது.. அதிக போதையில் காரை செலுத்திய சந்துருவின் உயிரை பறிப்பதற்கு என்றே டேங்கர் லாரி ஒன்று எதிரே வந்து அவனின் காரின் மீது மோதி விபத்துக்குள்ளாகியது..

 திடீரென்று நடந்த விபத்தில் அவ்விடத்திலேயே அவனது உயிரும் பிரிந்து விட்டது..

 நண்பர்கள் அவனை கட்டாயப்படுத்தாமல் இருந்திருக்கலாம்..

 சந்துருவாவது சற்று பொறுமையாக இருந்து விடியும் தருவாயில் வந்திருக்கலாம்..

 திருமணம் முடித்து சந்தோசமாக வாழ வேண்டும் என்று நினைத்த ஓர் மனிதனின் உயிர் உதவி இல்லாமல் உடலை விட்டு பிரிக்கப்பட்டது..

 இன்னும் விதியின் செயல் முடியவில்லை என்பது போல்..

 அவர்களின் வரவேற்பு க்கு வந்து அடுத்த நாள் திருமணத்திற்கு வருவதாக கூறிச் சென்ற வரதனின் நண்பர் டாக்டர் ராமனின் கார் வரவேற்பு முடிந்ததும் மருத்துவமனைக்கு சென்று மருத்துவமனையில் இருந்து மீண்டும் வீட்டுக்கு செல்லும் வழியில் தான் இவ் விபத்து நடைபெற்றது..

 இடித்ததும் டேங்கர்லாரியுடன் டிரைவர் அங்கிருந்து சென்று விட்டான்..

அந்த வழியாக வந்த டாக்டர் ராமனின் கார் டிரைவர் விபத்து நடந்திருப்பதாக கூறியதும் டாக்டர் காரை நிறுத்த சொன்னார்..

 தெரு விளக்கு மற்றும் டார்ச் லைட்டின் மூலம் யார் என்று ராமன் அடையாளம் தெரிந்து கொண்டதும் அந்த நேரத்தில் உடனடியாக வரதனுக்கு கைபேசியில் அழைப்பு விடுத்தார்..

 அப்பொழுதுதான் வரதன் திருமணத்திற்கு எதுவும் மகளுக்கு செலவு செய்யவில்லை என்றும் அனைத்தும் அவளுக்கென்று அவரது தந்தை மற்றும் மாமனார் கொடுத்த பணம் தான் என்றும் அவரின் மகள் என்பதால் திருமணத்தை முன் நின்று நடத்துவது மட்டும் தான் அவர் என்றும் கூறி ஓரளவுக்கு சுப்புலட்சுமியை சமாதானப்படுத்தி விட்டு உறங்குவதற்கு கண்ணயர்ந்தார்..

 அப்பொழுது தான் டாக்டர் ராமனிடம் இருந்து கைபேசியின் மூலம் அழைப்பு வந்தது..

 இப்பொழுது தான் சொல்லிவிட்டு இங்கிருந்து சென்ற நண்பர் மீண்டும் அழைக்கிறார் என்றதும் உடனே எடுத்து என்னவென்று கேட்டார் வரதன்..

 டாக்டர் ராமன் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக வருமாறு வரதனை அழைத்தார்..

 என்னவென்று கேட்டபடி அவசரமாக அங்கிருந்து ஹாஸ்பிடல் சென்றார் வரதன்..

 டிரைவரின் உதவியுடன் ராமன் சந்துருவை அவரது காரில் ஏற்றிக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு சென்றார்..

 அவரது மருத்துவமனையில் சேர்த்தால் பின்பு எதுவும் பிரச்சினை வந்து விடும் என்று கருதி அரசு மருத்துவமனையில் சேர்த்து விட்டார்..

 அரசு மருத்துவமனையில் இருந்து அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு அழைப்பு விடுத்து ஆக்சிடென்ட் கேஸ் ஒன்று வந்திருப்பதாக கூறினார்கள்..

 அழைப்பை ஏற்று போலீஸும் அப்பொழுது வந்து பார்த்து விட்டு விபத்து நடந்த உடனே உயிர் பிரிந்து விட்டது என்பதை டாக்டர் மற்றும் போலீஸ் இருவரும் உறுதிப்படுத்தினார்கள்..

 தற்பொழுதுதான் சுப்புலட்சுமிக்கு அனைத்தையும் தெளிவுபடுத்தி ஓரளவிற்கு அவரை அமைதிபடுத்தி வைத்திருந்தார் வரதன்..

 மீண்டும் மாப்பிள்ளை இறந்து பெண்ணின் திருமணம் பெண்ணிற்கு ராசி சரியில்லை மாப்பிள்ளை இறந்து விட்டான் என்று அவதூராக மக்கள் பேசி திருமணம் நின்று விட்டால் மீண்டும் முதலில் இருந்து மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க போராட வேண்டும் என்று அனைத்தையும் கருத்தில் கொண்டு துரிதமாக ஒரு முடிவை எடுத்தார் வரதன்..

  அரசு மருத்துவர் மற்றும் ராமன் போலீஸ் மற்றும் வாட் பாய் என அனைவருக்கும் பணத்தையும் கொடுத்து மகள் திருமணத்திற்கு தயாராகி இருப்பதும் தற்போது மாப்பிள்ளை இறந்து விட்டான் என்று தெரிந்தால் மகளின் வாழ்கை கேள்விக்குறி ஆகிவிடும் என்று தற்போதைய நிலையை எடுத்து கூறி சந்துருவின் இறப்பை வெளியே யாருக்கும் அவர் சொல்லும் வரை தெரியப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார் வரதன்..

 அவர்களும் பணத்திற்காகவும் ஒரு பெண்ணின் வாழ்க்கை என்றும் சந்துருவின் இறப்பை மறைக்க ஒத்துக் கொண்டார்கள்..

 வரதன் எதுவும் தெரியாதது போன்று மண்டபத்திற்கு வந்து சுப்புலட்சுமியின் தம்பியை [சித்தியின் மகன்] திருமணத்திற்கு சம்மதிக்க வைக்குமாறு சுப்புலட்சுமியிடம் அனைத்தையும் கூறி கெஞ்சிக் கொண்டு இருந்தார்.. 

 சுப்புலட்சுமி ஒரே பதிலாக நிலா அவர் தம்பிக்கு வேண்டாம் என்றும் எப்பொழுதும் அவரின் வாழ்க்கைக்குள் நிலாவை அழைத்துச் செல்ல அவர் விரும்பவில்லை என்றும் தீவிரமாக கூறி மறுத்து விட்டார்..

 இந்த சந்தர்ப்பத்தில் திருமணத்தை நிறுத்தினால் சிக்கலாகி மீண்டும் அவளின் திருமணம் பொறுப்பு என்று ஆரம்பித்து அவருக்கும் சுப்புலட்சுமிக்கும் இடையில் பிரச்சினைகள் அதிகமாகிவிடும் என்பதால் யாரையாவது அவளுக்கு இன்றே திருமணம் செய்து வைத்து அவளின் பொறுப்பில் இருந்து விடுபட வேண்டும்.. ஆனாலும் யாரை மாப்பிள்ளை ஆக்குவது என்று தீவிர யோசனையில் இருந்தார்..

 திருமணத்திற்கு நேரம் குறைவாக இருப்பதால் நிலாவிற்கு அலங்காரங்கள் ஆரம்பித்தது..

 சந்துரு தயாராகி விட்டனா என்று பார்ப்பதற்காக அவனது அறைக்கு வந்த அவனது தந்தை அவனைக் காணவில்லை என்று அரை மற்றும் மண்டபம் முழுவதும் தேடிவிட்டு அவரது மனைவியிடம் வந்து கூறினார்..

 சந்துருவின் அம்மா மற்றும் அவனது குடும்பம் என அனைவரும் அவனை யாருக்கும் தெரியாமல் தேடினார்கள்..

 பெண் வீட்டாருக்கு மாப்பிள்ளை காணவில்லை என்று தெரிந்தால் அவமானமாகி திருமணம் நின்று விடும் மற்றும் அனைத்து சொத்திற்கும் ஒரே பெண்ணாகிய நிலா கைவிட்டு போய்விடுவாள் என்று அவர்களும் யாருக்கும் தெரியாமல் அவனைத் தேடினார்கள்..

 அவர்கள் பல வழியில் குழம்பிப் போய் விட்டார்கள் அவனுக்கு வேறு காதல் எதுவும் இல்லை என்று குடும்பத்தில் அனைவருக்கும் தெரியும்..

 நிலாவை பிடிக்கவில்லை கட்டாய திருமணம் என்று கூறுவதற்கும் வழி இல்லை.. தம்பியிடம் சந்துரு நிலாவைப் பற்றி அதிகமாகவும் திருமண வாழ்க்கை பற்றி சந்தோசமாக பகிர்ந்துள்ளான்..

பின்பு இந்த திருமண நேரத்தில் அவன் எங்கே சென்றான்.. என்ற குழப்பத்தில் சந்துருவின் தந்தை தெரிந்த போலீஸ் ஒருவரிடம் ரகசியமாக அவனை காணவில்லை என்பதை கூறினார்..

 திருமணத்திற்கான நேரம் நெருங்கி மாப்பிள்ளையை அழைத்து வருமாறு ஐயா கூறினார்..

 ஐயர் கூறி சற்று நேரத்தின் பின்பும் சந்துரு வராததால் எதுவும் தெரியாதது போன்று வரதன் சந்துருவின் பெற்றோரிடம் சென்று எங்கே என்று கேட்டார்..

 அவர்களும் இனியும் மறைத்து வேலை இல்லை என்று நினைத்து அவனை அறையில் காணவில்லை எங்கு சென்றான். என்றும் தெரியவில்லை என்று அவர்களுக்கு தெரிந்த உண்மையை கூறினார்கள்..

 திருமணத்திற்கு நல்ல நேரம் முடிய இன்னும் சற்று நேரமே உள்ளதாக ஐயர் சத்தமாக கூறினார்..

 அப்பொழுது வரை வரதனுக்கு யாரை மாப்பிள்ளையாக ஆக்குவது என்ற எந்தவிதமான வாய்ப்பும் அமையவில்லை..

Advertisement