Advertisement

 ஓம் நமச்சிவாய..

 அத்தியாயம் 2.

 உதயராகவன் வீட்டில் முதல் இரவு அறை..

 அந்த பத்துக்கு பத்து அறை எந்த ஆடம்பரமான மேல் பூச்சுமின்றி தினமும் இருப்பது போன்று இன்றும் இருந்தது..

ஒரு சின்ன மாற்றம் அந்த அறையில் உதயராகவனும் குமரனும் இருப்பார்கள். இன்று குமரனுக்கு பதிலாக உதயராகவனின் புது மனைவியாக பிறைநிலா அந்த அறையில் இருந்தாள்..

 ஒரு நாளில் அவளது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றத்தை அவளால் ஜீரணிக்க முடியாமல் அதுவேறு மனதை அடுத்து வாழ்கை எவ்வாறு இருக்கும் என்ற பயம் வேறு மனதை பிசைந்தது.. உடல் அசதியிலும் அறையின் ஒவ்வாமை தன்மையும் சேர்ந்து தூக்கம் வராமல் அவளை பாடாய்படுத்தியது..

 மூச்சு முட்டும் நிலையில் சுவாசிக்க சிரமப்படுவது போன்று இருந்தாள்..

 தலையணை ஒன்றை கையில் எடுத்து முதுகுக்கு வைக்க எடுத்தவள் தலையணையில் ஏற்பட்ட துர்நாற்றத்தில் அதை தூர போட்டுவிட்டு ஜன்னல் அருகே சாய்ந்து இருந்துகொண்டாள் நிலா..

 நிலா அழுகிறாள் என்பதற்கு சாட்சியாக கண்ணோரம் நீர் துளிகள் அவளது மடியில் விழுந்தது..

 தாலி கட்டிய பின் அவளுக்கு தாலி கட்டியவனை தற்பொழுது வரை அவள் பார்க்கவில்லை..

 பல கஷ்டங்களை கடந்து வந்த போதும் அவள் இதுவரையும் அழுததில்லை. இன்று அவளுக்கு ஏற்பட்ட துக்கம் அவளை அறியாமலே கண்ணீராக வெளிபட்டுவிட்டது..

 இனி என்றும் தான் எதற்கும் அழக்கூடாது என்ற முடிவினை உறுதியாக எடுத்துவிட்டு கண்ணீரைத் துடைத்து விட்டு சிறு புன்னகை புரிந்து நிமிர்ந்து இருந்தாள் நிலா.. அடுத்து அவள் நடத்த இருக்கும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் முன் இறுதி முறையாக அவளது வாழ்வினை ஒருமுறை நினைவு கூர்ந்து அதில் அவள் விட்ட பிழைகள் அவளுக்கு மற்றவர்களால் இழைக்கப்பட்ட அநீதிகள் அனைத்தையும் ஒருமுறை மீண்டும் அசை போட்டு விட்டு அதில் இருக்கும் பிளஸ் மற்றும் மைனஸ் பாகுபடுத்தி மைனசையும் பிளஸ் ஆக மாற்ற நினைவுகளை முன்னோக்கி செலுத்தினாள்..

பல வருடங்களுக்கு முன்..

 நடராஜன் தில்லை ராஜன் இருவரும் சிறு வயது முதல் நெருங்கிய நண்பர்கள்..

 இருவரும் பெற்றோர்கள் இல்லாமல் ஆசிரமத்தில் வளர்ந்தவர்கள்.. அவரின் குணங்கள் பண்புகள் மற்றொருவருக்கு பிடித்து இருவரும் நட்புக்கரம் நீட்டி இன்று வரை நட்பில் விரிசல் இல்லாமல் வளர்ந்தார்கள்..

 அவர்களது படிப்பு திறமையை பார்த்து ஸ்காலர்ஷிப் மூலம் படிக்க வாய்ப்பு கிடைத்தது இருவருக்கும்..

எந்த ஒரு செயல் செய்வதாக இருந்தாலும் இருவரும் அதைப் பற்றி தீவிரமாக சிந்தித்து அதனால் வரும் நன்மை தீமை இரண்டையும் ஆராய்ந்த பின்பே அதில் ஈடுபடுவார்கள்..

 பள்ளியிலும் சரி கல்லூரியிலும் சரி இருவரும் ஒரே தொகுப்பு பாடத்தை எடுத்து படித்து பின்பு கல்லூரி படிப்பும் முடித்து பின் வங்கியில் ஒரு நல் உள்ளத்தின் உதவியால் கிடைத்த வங்கி கடனின் மூலம் புதிய ஜவுளிக்கடை ஆரம்பித்தார்கள் இருவரும் இணைந்து..

 தில்லை ராஜன் ஒவ்வொரு ஆடைகளும் தரமானதாகவும் வியாபாரத்திற்கு என விலை குறைந்த இடத்தில் கிடைக்கும் என்று அதைப் பற்றிய தகவல்களை அறிந்து அவரே நேரில் சென்று குழந்தைகள், சிறுவர்கள்,பெண்கள், ஆண்கள், என ஒவ்வொருவருக்கும் தேவையான ஆடைகளை அவரே தேர்வு செய்து பணம் செலுத்தி கடையின் முகவரியை கொடுத்து டெலிவரி செய்யும் படி கூறிவிட்டு அவர் வந்து விடுவார்..

 நடராஜன் கடையில் வரவு செலவு கணக்குகள் ஆடைகள் வாங்க வேண்டியவைகள் தற்பொழுது கடையில் இருக்கும் ஆடைகளின் எண்ணிக்கைகள் எந்த ஆடை மக்களை அதிகம் ஈர்த்துள்ளது எது தற்பொழுது பேஷன் ஆடைகள்.. அனைத்து விதமான தகவல்களையும் அவரின் வசம் வைத்து இருவரும் சரியான முறையில் திட்டமிட்டு அவர்கள் ஆரம்பித்த முதல் பிசினஸை வெற்றிகரமாக நடத்தினார்கள்..

 பிசினஸ் ஆரம்பித்து வாங்கிய வங்கி கடனையும் அடைத்து அவர்களுக்கு என்று ஓர் அளவான வீட்டையும் வாங்கி வீட்டுக்கு தேவையான பொருட்களையும் வாங்கி அவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து காலி செய்து அங்கு குடியேறினார்கள்..

 இருவரும் ஒரே வயதை ஒத்தவர்கள் என்பதால் திருமண வயதை எட்டியதும் அவர்களின் ஒற்றுமை நட்பின் தன்மை நேர்மை என அனைத்தையும் அறிந்து கொண்ட அந்த வங்கி மேலாளர் நண்பர்கள் இருவரையும் கோவிலுக்கு வரவழைத்து அவரின் மகள் பூர்ணிமாவின் புகைப்படத்தை இவரிடமும் காட்டினார்..

 பூர்ணிமாவை பற்றி சில தகவல்களை கூறி இருவரில் யார் தன் மகளை திருமணம் செய்து கொண்டாலும் அவருக்கு சம்மதம் என்று கூறினார்..

 அதற்கு நண்பர்கள் இருவரும் வைத்த ஒரே நிபந்தனை அவர்களின் நட்பை பிரிக்காத இரண்டு பெண்களை அவர்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறினார்கள்..

 அதற்கு அவரும் சம்மதித்து அன்றே அவரது மகள் பூர்ணிமாவிடம் நண்பர்கள் இருவரையும் பற்றி வங்கி மேலாளர் கதிரேசன் கூறினார்.. பூர்ணிமாவுக்கும் தில்லை ராஜனை முதல் பார்வையிலேயே பிடித்து விட தந்தையிடம் அவளது பிடித்ததை கூறினாள்..

 நண்பர்கள் இருவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி.. தில்லைராஜனுக்கு பார்த்ததும் பூர்ணிமாவை பிடித்து விட நண்பனிடம் கூறிவிட்டார்.. நடராஜனும் ஒத்துக்கொண்டு பூர்ணிமாவின் மூலம் அவளது உற்ற தோழி மதிநிலாவை நடராஜனுக்கு பெண் கேட்டு இருவருக்கும் ஒரே மேடையில் ஒரே முகூர்த்தத்தில் திருமணம் நடந்தது..

 சிலரின் வாழ்க்கையில் பெண்கள் ஓர் வரம்.. இருவரின் நல்ல மனதிற்கு அவர்களுக்கு அமைந்த மனைவிகளும் தேவதை பெண்கள் என்றே கூற வேண்டும்..

 திருச்சியில் குறுகிய காலத்தில் அவர்களது ஜவுளிக்கடை மக்களிடத்தில் மிகவும் பிரசித்தி பெற்றுவிட்டது..

 பெண்கள் வந்த நேரம் அவர்களின் பெயர்களும் ஊரில் நடக்கும் அனைத்து நல்லது கெட்டதிலும் தலைமை வகிக்கும் பொறுப்பினை அவர்களுக்கு பெற்று தந்தார்கள்..

 அனைத்திலும் வெற்றியின் மேல் வெற்றியாக அவர்களை வந்து சேர்ந்தது..

சிறு வயதில் தாய் தகப்பன் சகோதரர்கள் சொந்தங்கள் என யாரும் இல்லாமல் வளர்ந்த இருவரும் அவர்களுக்கான திருமண வாழ்க்கையில் விட்டு கொடுத்து மனைவியை தாங்கி மகிழ்ச்சியாகவே வாழ்ந்தார்கள்..

 நடராஜன் மதிநிலா தம்பதியருக்கு அடுத்த பத்தாவது மாதமே செல்வ புதல்வன் பிறந்தான்.. அவனுக்கு வரதராஜன் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள்..

 ஐந்து வருடங்களும் வரதராஜன் மட்டுமே இரண்டு தம்பதியர்களுக்கும் ஒரே குழந்தை..

 திருச்சியில் இருந்து மதுரை தேனி திருநெல்வேலி கோயம்புத்தூர் சேலம் தஞ்சாவூர் ஆகிய ஐந்து ஊர்களிலும் வருடம் ஒரு ஊரில் புது கிளைகள் ஆரம்பித்தார்கள்..

 ஐந்து வருடம் கழித்து தில்லைராஜன் பூர்ணிமா தம்பதிகளின் பிள்ளை இல்லை என்ற கவலையை தீர்ப்பதற்காக பூர்ணிமா கருத்தரித்தார்..

 நண்பர்கள் இருவரும் அருகருகே புதிய வீடு கட்டி இருவரும் ஒற்றுமையாகவே அவர்களது பிள்ளைகளுடன் அவர்களது வாழ்க்கையை கழித்தார்கள்..

 நண்பர்களாக இருந்தவர்கள் சொந்தமாக மாற நினைத்து தில்லை ராஜனும் நடராஜனும் சம்மந்திகளாக அவர்களது பிள்ளைகளை திருமண பந்தத்தில் இணைக்க திட்டமிட்டார்கள்..

 தில்லை ராஜனின் மகள் மாதவிக்கும் நடராஜனின் மகன் வரதனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது..

 வரதராஜனுக்கு வரும் மனைவி அவரது தாயைப் போன்று அமைதியான குணத்துடனும் குடும்பத்தை திறம்பட நடத்தி அவரது தொழிலில் அவருக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று நினைத்தார்..

 ஆனால் அவர் நினைப்பிற்கு எதிர்மறாக இருந்தார் மாதவி..

 அவருக்கு அடக்க ஒடுக்கமான பெண்ணாக இருக்க சற்றும் விருப்பமில்லை.. பெண்களின் சுதந்திரம் எது என சரியான அறிவை அவர் பெற்று இருக்கவில்லை.. மாதவியின் தாய் பூர்ணிமா ஆயிரம் அறிவுரைகள் கூறியும் மகள் கேட்கவில்லை.. தாயின் குணத்தில் பாதி கூட மாதவிக்கு இருக்கவில்லை..

 பெண்களின் சுதந்திரம் என்பது அரைகுறை ஆடை அணிவது அடம்பரமான காரில் வலம் வருவது. கை நிறைய பணப்புழக்கமும் சமூக சேவை என்ற பெயரில் மாதர்சங்கம் கூட்டங்கள் போட்டு பெண்களின் சுதந்திரத்திற்கு போராடுவது பெண்களை இழிவுபடுத்துவர்கள் துஷ்பிரயோகம் பண்ணுபவர்கள் என்று அவர்களை கைது செய்து தண்டனை வாங்கிக் கொடுப்பது என்று அது மட்டுமே பெண்களின் சுதந்திரம் என மாதவி தவறாக நினைத்து குடும்பத்தில் இருந்து சற்று ஒதுங்கியே இருந்துவிட்டார்..

 இதற்கிடையில் தில்லைராஜனும் சரி பூர்ணிமாவும் சரி நல்ல தாய் தந்தையராகவே இருந்து வந்தார்கள்..

 அவர்களின் எந்த நல்ல குணத்தையும் மாதவி எடுத்துக் கொள்ளாமல் நாகரிக உலகத்தில் நாகரிகமாக வாழ விரும்பி அவரின் வாழ்வை அவரே அழிக்க ஆரம்பித்து விட்டார்..

 ஒன்றாக பழகி ஒன்றாக வாழ்வதால் வரதராஜனுக்கு மாதவியின் குணம் நன்கு தெரியும்..

  நடராஜனையும் மதிநிலாவையும் வைத்து அவருக்கு வரும் மனைவி எவ்வாறு இருக்க வேண்டும் என்று விருப்பத்தை கூறினார்.. அதற்கு மாதவி சற்றும் பொருந்தமாட்டாள் என்றும் கூறினார்..

 ஆனால் நடராஜன் நண்பரின் மனம் நோக வைக்க விரும்பாமல் வரதராஜனை சமாதானம் செய்து மாதவியை அவருக்கு திருமணம் செய்து வைத்தார்கள்..

 வரதராஜனும் அவரால் அந்த குடும்பத்தின் ஒற்றுமையும் சந்தோசமும் பரிபோக விரும்பாமல் திருமணம் செய்து வாழ்ந்து அவரின் அன்பால் மாதவியை மாற்றிவிடலாம் பெண் சுதந்திரம் எது உரிமை எது என தெரியப்படுத்தி விடலாம் என்று நினைத்து திருமண வாழ்க்கையில் ஈடுபட்டார்..

 இருவருக்கும் திருமணம் முடிந்து வாழ்க்கையை ஆரம்பித்தார்கள்..

 வரதராஜன் எதிர்பார்த்ததில் சற்றும் மாதவி பொருந்தவில்லை..[ தெரிஞ்ச விஷயம் தானே. நாய் வாலை நிமித்த முடியாதே ]

 தாய் வீடு மாமியார் வீடு என பாகுபாடோ தெரியாத மனிதர்களோ வேறு தொலைவு ஊர்களோ அப்படி எதுவும் இல்லாமல் அவர் வாழ்ந்த வீட்டுக்கு அடுத்த வீடுக்கு வந்தது மட்டும் அவரது வாழ்வில் நடந்த ஒரே மாற்றமாகும்..

 அதனால் அவருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.. அவரின் கொள்கைகள் என நினைத்திருக்கும் உதவாக்கரை செயலுக்கு மதிநிலா தடை கூறியும் அதை மாதவி பொருட்படுத்தவில்லை..

 காலங்கள் யாருக்கும் காத்திருக்காமல் மாதவி திருமணம் முடித்து இரண்டு வருடத்தின் பின் கருத்தரித்தார்..

 இரண்டு குடும்பமும் மாதவி கருத்தரித்தது சந்தோஷமாக கொண்டாடினார்கள்..

 இரண்டு குடும்பம் போன்று வரதராஜனும் குழந்தை பிறந்த பின் மனைவி திருந்தி விடுவார் என நம்பினார்..

 அதற்கும் வாய்ப்பில்லாமல் மாதவிக்கு பெண் குழந்தை பிறந்தும் அதற்கு பால் கொடுக்காமல் குழந்தையின் வளர்ப்பில் கவனம் செலுத்தாமல் மீண்டும் அவரது சமூகசேவை சுதந்திரம் என குழந்தை பிறந்து மூன்றாவது மாதத்தில் இருந்து ஆரம்பித்துவிட்டார்..

 வரதராஜன் தாயின் பேரை எடுத்து குழந்தைக்கு பிறை நிலா என பெயர் வைத்தார்..

 பூர்ணிமாவின் தந்தை நோய்வாய்ப்பட்டிருந்த கதிரேசன் இறந்துவிட பூர்ணிமா சிறிது காலம் தாயின் வீட்டில் இருந்தார்..

 பிறை நிலாவின் முழு பொறுப்பும் மதிநிலாவிடம் வந்துவிட்டது..

 அன்பான மனைவி அழகான அமைதியான குடும்பம் அவரின் தொழிலில் சரி பாதியாக தோள் கொடுத்து துணை நிற்கும் துணைவி இலக்கணமாக தாய் மதநிலா மற்றும் அத்தை பூர்ணிமா இருவரைப் போன்று தனக்கும் ஒரு மனைவி வேண்டும் என்று அவர் நினைத்தது ஒரு குற்றமா என தவித்துப் போனார் வரதராஜன்..

 தில்லை ராஜனும் நடராஜனும் மகளை கண்டிக்க முடிந்த அளவு கண்டித்து பார்த்தார்கள் அதற்கான எல்லையை மாதவி தாண்டி விட்டார்..

 வரதராஜன் வேலை முடிந்து களைப்பாக வந்தால் குழந்தையின் சிரிப்பில் அதன் அழுகையில் களைப்பை மறந்து குழந்தையுடன் சற்று நேரம் செலவழித்து விட்டு அவரது அலுவலக வேலையை அவரது அறையில் இருந்து பார்க்க சென்று விடுவார்..

 வராதராஜனை கவனிப்பது அனைத்தும் அவரின் தாய் மதிநிலா தான்..

 மாதவி மாலை ஆறு ஏழு மணிக்கு மேல் தான் வீட்டிற்கு வருவார்.. அவரை சுத்தம் செய்து குளித்து அதன் பின் இருக்கும் உணவை உண்டு விட்டு கைபேசியை எடுத்துக் கொண்டு தனி அறைக்கு சென்று நண்பர்களுடன் அரட்டை அடித்து அன்றைய நாளை முடித்து உறங்கி விடுவார்..

 யாராலும் மாதவியை திருத்த முடியவில்லை அன்பாகவும் சரி அதிகாரமும் காட்டிப் பார்த்து விட்டார்கள்.. ஒரு பெண்ணின் உண்மை சுதந்திரம் எது என அவர் கண் திறந்து காண மறுத்துவிட்டார்..

 காலம் மீண்டும் யாருக்கும் காத்திருக்காமல் பிறை நிலாவிற்கு ஐந்து வயது முடிந்துவிட்டது..

 இதற்கு மேலும் மாதவிக்கு காலம் கொடுப்பது வீண் என உணர்ந்து காத்திருந்து அவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டு தொழில் நஷ்டம் ஏற்பட்டு என பலதை சந்தித்து விட்டார் வரதராஜன்..

 தன்னால் தான் ஆசையாக வளர்த்த மருமகனின் வாழ்க்கை மகளால் வீணாகியதை எண்ணி மனம் நொடிந்து தில்லைராஜன் இறந்துவிட்டார்..

 உயிரான நண்பனின் உயிர் பிரிந்ததும் நடராஜனும் நோய்வாய் பட்டு விட்டார்..

 இதற்கு மேலும் யாருக்கும் காத்து இருக்காமல் தன் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று ஒத்த முடிவை எடுத்த வரதராஜன் மாதவியை விவாகரத்து செய்தார்..

 குழந்தை பிறை நிலா நிரந்தரமாக பாட்டி மதிநிலாவின் பொறுப்பானாள்..

 விவாகரத்து நடந்த மூன்றாவது மாதம் வரதராஜன் அவரது அலுவலகத்தில் பணியாற்றும் சுப்புலட்சுமியை அவரது விருப்பம் அனைத்தையும் கூறி திருமணம் செய்ய கேட்டார்..

சுப்புலட்சுமி இயல்பிலேயே அமைதியான பண்பான குணம் கொண்டவர்.. வரதராஜனின் விருப்பத்தை நிறைவேற்றுவது ஒன்றும் அவருக்கு அவ்வளவு கடினமான விஷயம் இல்லை..

 ஆனால் திருமணத்திற்கு அவரும் ஒரு நிபந்தனை வைத்தார்.. பிறைநிலாவின் பொறுப்பை அவர் பார்த்துக் கொள்ள மாட்டார் என்றும் பிறை நிலாவிற்கு அனைத்து கடமைகளையும் தந்தையாக வரதராஜனை செய்யும் படியும் அவரை எதற்கும் ஈடுபடுத்த வேண்டாம் என்றும். பிறை நிலாவிற்கும் அவருக்கும் எவ்வித தொடர்பும் சம்பந்தமும் ஏற்பட விரும்பவில்லை என்றும் இதற்கு சம்மதித்தால் இத்திருமணம் எந்த ஒரு தடையும் இல்லாமல் நிகழும் என்றும் கூறினார்..

 லட்சுமியின் நிபந்தனையை வரதன் தாய் மதிநிலவிடமும் தந்தை நடராஜனிடமும் கூறினார்..

 மதிநிலா அனைத்தையும் சற்று நேரம் சிந்தித்துப் பார்த்தார்..

 பிறைநிலாவை காரணம் காட்டி அவரது மகனின் வாழ்க்கை வீணாகப் போவதை அவர் விரும்பவில்லை..

 குழந்தை பிறைநிலாவிற்கு தாயும் சரியில்லை தந்தையுடன் இருக்க சம்மதித்தால் சித்தியின் கொடுமை நடக்கும் அதைக் குழந்தை அனுபவிக்க அவருக்கு விருப்பமில்லை..

 அவரைவிட குழந்தையை யாரும் நன்றாக பார்த்துக் கொள்ளப் போவதில்லை என்பதை நன்றாக உணர்ந்து வரதராஜனின் வாழ்கை செழிக்க சம்மதித்தார்..

 பெரியவர்களின் சம்மதத்தோடு வரதராஜன் சுப்புலட்சுமி திருமணம் எளிமையாக நடைபெற்றது..

 விவாகரத்து முடிந்ததுமே தில்லைராஜனின் சொத்தில் பாதியை மாதவி கேட்டு சண்டை போடவும் தாய் பூர்ணிமா இரண்டு பாகமாக பிரித்து கொடுக்க மாதவி வாங்கியவுடன் அங்கிருந்து சென்று விட்டார்..

 மற்ற பாதி சொத்து பிறை நிலாவின் பேரில் பதிவு செய்யப்பட்டது..

 நண்பர்களின் சொத்து இரண்டாக பிரிக்கப்பட்டதனால் நடராஜனின் சொத்து அனைத்தும் வரதனுக்கு வந்து சேர்ந்தது..

 அவர்கள் அமைத்த ஜவுளி கடைகளின் கிளைகளையும் மகளின் சொத்தை தனியாகவும் அவருடைய சொத்தை தனியாகவும் வரதராஜன் பார்த்துக்கொண்டார்..

 பிறைநிலாவிற்கு 5 வயது இருக்கும் பொழுது வரதராஜன் சென்னையில் ஒரு கிளை அமைத்து சுப்புலட்சுமியுடன் அங்கே குடியேறிவிட்டார்..

 பிறைநிலா பாட்டி மதிநிலாவுடன் அவரின் பாதுகாப்பில் வளர்க்கப்பட்டாள்..

 தாய் மற்றும் தந்தையின் பிரிவில் ஓர் பச்சிளம் குழந்தை தனித்து விடப்பட்டாள்..

Advertisement