Advertisement

ஓம் நமச்சிவாய.

அத்தியாயம் 4.

 ராகவன் அடித்து விட்டு சென்றதும் அங்கிருந்து சற்றும் நகராமல் பிரம்மை பிடித்தது போன்று நின்ற நிலாவை நித்தி நிகழ்வுக்கு கொண்டு வந்தாள்.

 சற்று நேரத்தின் பின் தான் என்ன நேர்ந்தது என்பதை புரிந்து கொண்ட நிலா வேகமாக ராகவன் பைக் எடுக்கும் இடத்தில் இருப்பதை பார்த்துவிட்டு அங்கே சென்று சொடக்குபோட்டு அவனை அழைத்தாள்..

 அப்பொழுது திரும்பி பார்க்காமல் அவன் பைக்கை வெளியே எடுக்கும் முயற்சியில் இருந்தான்..

” ஹலோ மிஸ்டர் உதய ராகவன். உங்களைத்தான் சார் காது கேட்காதா?.. என்ன நீங்க பாட்டுக்கு வந்தீங்க திட்டினீங்க அடிச்சீங்க அப்புறம் போயிட்டே இருக்கீங்க.. என்ன நினைச்சிட்டு இருக்கீங்க உங்க மனசுல?.. என்னை அடிக்கிறதுக்கு கை நீட்ட யார் சார் நீங்க?.. இல்லை தெரியாமத்தான் கேக்குறேன் யார் நீங்க?.. பெத்திங்களா? வளர்த்தீங்களா? படிக்க வச்சீங்களா? சாப்பாடு கொடுத்தீங்களா? நல்ல துணிமணி எடுத்து கொடுத்தீங்களா? இல்ல நண்பனா? அண்ணன் தம்பியா? சொந்தமா? பந்தமா? மாமனா? மச்சானா? இதுல யார் நீங்க?.. நான் அடுத்து மானங்கெட்டவனே என்று சொல்றதுக்கு முதல் நீங்க எனக்கு அடிச்சதுக்கு பதில் சொல்லியே ஆகணும்.. நீங்க ப்ரொபஸ்ரா இருங்க காலேஜ் கேட் வரைக்கும்தான் அதெல்லாம்.. நான் ஏதாவது தவறு செஞ்சிருந்தா ப்ரொபசர் என்ற முறையில் நீங்கள் தட்டி கேட்டு இருக்கலாம். அது கொஞ்சம் ஏற்றுக்கொள்ள வேண்டியது தான்.. ஆனா நான் என்ன தவறு செய்தேன்?.. பொங்கல் கொஞ்சம் என் கை விரலில் ஒட்டி இருந்தது அதை நான் சப்பி சாப்பிட்டது உங்களுக்கு ஏன் சார் குத்துது?.. தெரியாத்தனமா வந்து உங்க மேல மோதிட்டேன். அதுக்கு நான் சாரி கேட்டு இருப்பேன்.. முதல் என்ன ஏதுன்னு நான் யோசிக்கும் முன்னவே நீங்க கை நீட்டி அடிச்சிட்டீங்க.. இப்ப எனக்கு நீங்க சரியான பதில் சொல்லாட்டி சம்பந்தமே இல்லாமல் நீங்க எனக்கு அடிச்சதுக்கு நான் போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ண போறேன்.. எப்படி வசதி இப்ப பதில் சொல்லுங்க.. வாய் திறக்காமல் இருக்கிறீங்க வாயில முட்டை எதுவும் அடைச்சு இருக்கா என்ன? ” என்றாள் அடி வாங்கிய அவமானம் ஒரு பக்கம் அவனது திமிர் தனம் கொடுத்த கோவம் ஒரு பக்கம் என்று சம விகித உணர்வில் இடுப்பில் கை வைத்து அவளது துப்பட்டாவை கையில் வைத்து சுழற்றிக்கொண்டு நின்று கேள்வி கேட்டாள் பிறைநிலா..

 அவள் பல கேள்விகள் கேட்டு விட்டாள். ஆனால் இன்னும் அவனது தரப்பில் இருந்து எவ்வித பதிலோ அசைவுகளோ எதுவும் இல்லாமல் அவனது வேலையான வாகன நிறுத்தும் இடத்தில் மாட்டியிருந்த அவனது பைக்கை எந்த சேதாரமும் இல்லாமல் மெதுவாக எடுக்க முயற்சிதான்..

 அவனது பொறுமையும் பறந்ததோ என்னவோ.? ” ஏய் என்னடி இப்ப குய்யோ முய்யோனு வந்ததிலிருந்து கத்திகிட்டே இருக்க. என்ன பிரச்சனை உனக்கு? ஆமா அடிச்சேன் தான் ஒரு வயசு பையன் மேல நாகரீகம் இல்லாமல் வந்து இடிக்கிற?. இதுவே நான் உன் மேல இடிச்சுட்டு தெரியாம இடிச்சிட்டேன் என்று சொல்லி சாரி கேட்டா நீ ஏற்றுக் கொள்ளுவியா? சொல்லுடி ஏற்றுக்கொள்ளுவியா? எனக்கு நீ தெரியாம தான் இடிச்சனு தெரியும் அதுவும் நீ ஒரு பொண்ணு அதனால ஒரு அடியோடு விட்டேன்னு சந்தோஷப்பட்டு இடத்தை காலி பண்ணு. வந்துட்டா மாமானா மச்சானானு உயிரை எடுக்க ஏன் புருஷனானு மட்டும் கேட்காம விட்டுட்ட. மானங்கெட்டவனே என்று சொன்னதுக்கே இன்னொன்னு சப்புனு வச்சிருப்பேன் கன்னத்துல ஏதோ பாவம் என்று விட்டுட்டு போறேன்.. நல்லவேளை நீ புருஷன் என்று கேட்கலை உன்னை மாதிரி ஒருத்தி எல்லாம் எனக்கு பொண்டாட்டியா வந்தா நான் கல்யாணமே பண்ணிக்காம இருந்துடுவேன்.. ” என்று சத்தம் போட்டுவிட்டு அவனது பைக்குக்கு எந்த சேதாரமும் இல்லாமல் எடுத்துவிட்டு நண்பனை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டான் ராகவ்..

அவள் எவ்வளவு கேட்டும் பதில் சொல்லாமல் சென்ற கோபத்தில் தரையில் காலை உதைத்து ” சேட் திமிர் பிடிச்ச குந்தாணிக்கிழவன்.. உன் திமிரை அடக்கல நானும் பிறைநிலா இல்லை இருவாத்தி வரேன்..” என்று கூறி விட்டு அருகில் வந்த நித்தியுடன் அங்கிருந்து சென்றுவிட்டாள்..

பிறைநிலாவிற்கு முதல் நாளின் எந்த வித தாக்கமும் இல்லாமல் அடுத்த நாள் அழகான காலை பொழுதாக விடிந்தது..

 காலேஜில் அவனது வகுப்பில் அவனும் அவளை கண்டு கொள்ளவில்லை..

 அவளும் பெரிதும் அலட்டிக் கொள்ளவில்லை..

 இவ்வாறு சிறு சிறு உரசல்கள் இருந்தும் இல்லாதவாறு அவர்களின் நாட்கள் சென்று கொண்டிருந்தது.. இரண்டாவது வருடம் ஆரம்பித்து மூன்று மாதம் முடிந்த பின் சேர்ந்தது போன்று வந்த மூன்று நாள் லீவில் பிறை நிலா பாட்டியை பார்க்க ஊருக்கு சென்று இருந்தாள்..

 அவளை வேண்டாம் என்று பாட்டியிடம் விட்டுச் சென்ற தந்தையை அவளே நேரில் சென்று பார்க்க விரும்பவில்லை..

 அவள் சென்னைக்கு படிக்க வந்து ஒன்றரை வருடம் ஆகிவிட்டது.. வரதராஜன் சுப்புலட்சுமி குடும்பம் வசிக்கும் இடமும் வீடும் அவளுக்கு நன்றாக தெரியும்.. தெரிந்து இருந்தும் போக விரும்பவில்லை..

 பரந்து விரிந்த சென்னையில் கோவில் பார்க்கிலோ பீச்சிலோ மால்களிலோ எங்காவது தந்தையை சந்திக்கலாம் அப்போது பேசிக் கொள்ளலாம் என காத்திருந்தாள்.. ஆனால் அதற்கும் வாய்ப்பு அமையவில்லை..

 அன்று மாலை தான் அவள் வீட்டுக்கு போய் சேர்ந்தாள்.. சேர்ந்ததும் சற்று நேரத்தில் மதி பாட்டி நாளை அவளை பெண் பார்க்க வருவதாக கூறினார்..

” ஏன் பாட்டி இப்பதானே எனக்கு 19 வயசு என்ன அவசரம்.. உங்க மகனுக்கு செய்ய வேண்டிய கடமை எனக்கு இன்னும் இருக்கு. அதை முடிக்காமல் மாப்பிள்ளை யாரு என்னன்னு தெரியாமல் உங்க மகனை மாதிரி ஒருத்தர நான் கல்யாணம் பண்ணிக்க விரும்பவில்லை..” என்றாள் பிறை நிலா..

 பேத்தியின் சுடு சொல்லில் பாட்டியின் மனது காயப்பட்டு இருந்தாலும் பேத்தியின் வலி என்ன என்பதை அவர் கண்கூடாக கண்டவர் ஆயிற்றே..

 எவ்வளவுதான் அவர் நன்றாக அன்பாக சந்தோசமாக பார்த்துக் கொண்டாலும் ஒரு குழந்தையின் மனதில் தந்தை தாயின் இடத்தை யாராலும் நிரப்ப இயலாது..

” அப்படி இல்லடா கண்ணு பாட்டிக்கு ரொம்ப வயசாயிடுச்சு இல்லடா உடம்பு முடியல நான் கண்ணு மூட முதல் உனக்கு கல்யாணம் பண்ணி நீ சந்தோஷமா வாழ்வதை பார்த்துவிட்டால் நான் நிம்மதியா தாத்தாவிடம் போய் சேர்ந்துடுவேன்.. நான் இருக்கும் போது உனக்கு பிடிக்காத ஒருத்தனை நீ கட்டிக்க சம்மதிப்பேனா?..” என்றார் அவளது முகத்தை தடவி உச்சி முகர்ந்தபடி..

” யார் பாட்டி மாப்பிள்ளை பார்த்தது “

” எனக்கு வேறு யாருடா தெரியும் என் மகன் கிட்ட தான் சொல்லி இருந்தேன் அவன் பார்த்த சம்மந்தம் தான்.. ” என்றார்.. 

” ஏன் பாட்டி இப்படி?. எனக்கு பிடிக்காதுன்னு தெரிஞ்சும் இந்த வேலையை செய்றீங்க அந்த ஆளை எனக்கு சுத்தமா பிடிக்காதுன்னு உங்களுக்கே தெரியும். அப்படி இருந்தும் அவர் பார்த்த மாப்பிள்ளை அவர மாதிரியே எனக்கு ஏதாவது நடந்தால் என் பிள்ளையை விட்டுட்டு இன்னொரு பொண்ணை கல்யாணம் கட்டிக்கிட்டு போயிருவான்.. அப்புறம் என்னை மாதிரி இன்னொரு நிலா தேவையில்லை.. என்னை வளர்க்க நீங்க இருந்தீங்க. என் பிள்ளைக்கு அப்படி யாரும் இல்லையே?.. அந்த ஆள் மாப்பிள்ளை பார்த்து இருந்தால் அப்படி ஒரு கல்யாண வாழ்க்கை எனக்கு தேவையில்லை நாளைக்கு அவங்களை வரவேண்டாம் சொல்லிடுங்க பாட்டி.” என்றாள் அவளது பேச்சில் மன வருத்தம் வெளிப்படையாக தெரிந்தது..

” போதும் டா தங்கம் இதுக்கு மேல நீ இனி எதுவும் பேசாத என்னால தாங்கிக்க முடியாது.. அம்மா அப்பா இல்லை என்ற குறையை தவிர இந்த பாட்டி உனக்கு வேற என்னடா குறை வைத்தேன்?.. ” என்றார் மதி

” நான் உங்களை காயப்படுத்த எதுவுமே பேசல பாட்டி என்னோட மன காயத்தை ஏதோ சொல்லி புலம்பிட்டேன்.. இனி எதுவும் நான் மறுத்து பேசல பாட்டி உங்களுக்கு எது விருப்பமோ அதன்படி செய்யுங்க இந்த ஒரு விஷயத்திலாவது நான் உங்களுக்கு பிடிச்சதை செய்ததா இருக்கட்டும்.. ” என்று கூறி அவரது மனதை ஆறுதல் படுத்தி விட்டு அவளது வாழ்க்கையை பணயம் வைத்து சென்றாள் பாவை..

 ஏன்டா இங்கே வந்தோம் என்கின்ற நிலைக்கு யோசிக்க ஆரம்பித்துவிட்டாள் நிலா..

 19 வயதில் அவளுக்கு கல்யாண வாழ்க்கை என்பது ஏனோ அவளால் சரியாக எடுத்துக் கொள்ள முடியவில்லை..

 தனிமைப்படுத்தப்பட்டவளுக்கு சொந்தம் தேவைதான். ஆனால் இன்னும் படிப்பு முடியவில்லை. அவளது சிறிய ஆசையான ஆசிரியர் தொழிலுக்கு எந்த ஒரு ஆரம்பமும் இல்லை. அதற்கு இடையில் திருமணமா? இது சரி வருமா? என்று தீவிரமாக யோசித்தாள்..

 பாட்டியிடம் உறுதியாக கூறிவிட்ட பின் தீவிரமாக யோசித்து என்ன பயன் என்று யோசனையில் இருந்து களைந்து படிப்பதற்கான பாட புத்தகத்தை எடுத்து பக்கங்களை புரட்ட ஆரம்பித்தாள்.. எடுத்த உடனே அவனது முகம் தான் கண்ணெதிரே தோன்றியது.. ” சீ இந்த வாத்தியோட பெரிய தொல்லை. எங்க போனாலும் நிம்மதியா இருக்க விடாம பின் தொடர்ந்து வர்ற மாதிரி நினைப்பிலும் வந்துட்டு இருக்கான்.. இவன் திமிரு அடக்கறதுக்கு நாம ஏதாவது பண்ணாட்டி இவன் நமக்கு இப்படித்தான் ரொம்ப டார்ச்சர் கொடுத்துக்கிட்டு இருப்பான்.. இவனுக்கு ஒரு வழி பண்ணனும்..” இன்று மனதினுள் அவனுக்கு அர்ச்சனை பண்ணிவிட்டு எடுத்த புத்தகத்தை மீண்டும் அதே இடத்தில் வைத்துவிட்டு அவளுக்கு பிடித்த எஸ் பி பாலசுப்பிரமணியம் அவரின் மெல்லிசையை மெல்லிய சத்தத்தில் வைத்து கேட்க ஆரம்பித்தாள்..

 மனசுக்கு பிடிச்ச இன்னிசை பாடலை அவள் கேட்டால் அவளால் குழப்பத்தில் இருந்து சற்று விடுபட்டு தெளிவான முடிவை எடுக்க முடியும் இது அவளது பாட்டியின் கூற்றாகும்..

 திருமண ஏற்பாடு ஆரம்பித்ததும் அவளது சூழ்நிலைக்கு ஏற்றவாறு பாட்டும் அமைந்தது..

* எனக்கென பிறந்தவ றெக்ககட்டி பறந்தவ இவதான்.  

* நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னா புரியுமா.

* வளையோசை சலசல சலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது.

* சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் ஆகாய பூக்கள் தூவும் காலம்.

* காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா.

* கேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி.

* கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்..

* நீ பாதி நான் பாதி கண்ணே அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே..

* முத்து மணி மாலை உன்னை தொட்டு தொட்டு தாலாட்ட வெட்கத்தில சேலை கொஞ்சம் விட்டு விட்டு போராட.

* மலரே மௌனமா மௌனமே வேதமா மலர்கள் பேசுமா?

 என்ற பாடல் தொகுப்பை கேட்டுக் கொண்டிருந்தாள்..

நிலாவின் அறை அருகே வந்தவர் மீண்டும் அங்கிருந்து ஹாலுக்கு வந்தார்.. இந்த குழப்பத்தில் அடுத்து அவள் என்ன செய்வாள் என்று தெரிந்த மதிப்பாட்டி அவளை தொல்லை செய்யாமல் அவரது மகனுடன் கைபேசியில் பேச நினைத்து அழைத்தார்..

 அவருக்காக திருமணத்திற்கு அவள் சம்மதித்துள்ளாள். என்பது பாட்டிக்கு நன்றாக தெரியும்.. அவருக்கும் வயது முதிர்வால் அனைவருக்கும் வரக்கூடிய பிரஷர்,சுகர்,மூச்சுத் திணறல் போன்ற நோய்கள் அவருக்கும் வந்தது.. எப்பொழுது அவரின் மூச்சு நிற்கும் என்று தெரியாத நிலையில் பேத்தியை ஒரு நல்லவனிடம் கரை சேர்க்க வேண்டும் என்பதே அவருடைய தற்பொழுதைய பேராசை என்றும் கூறலாம்..

 அவரின் வார்த்தைக்காக அவரை நம்பி திருமணத்திற்கு சம்மதம் சொன்ன பேத்தியின் வாழ்க்கை நல்ல முறையில் அமையுமா? என்று மீண்டும் மகனிடம் கேட்டு தெளிவு படுத்திக் கொள்ளவும். பேத்திக்கு வரும் கணவன் எவ்வாறு இருக்க வேண்டும் என்று அவளது எண்ணத்திற்கு ஏற்றவாறு வரும் மாப்பிள்ளை இருக்கிறானா?. என்றும் மாப்பிள்ளையை பற்றிய இன்னும் சில பல தகவல்களையும் தெரிந்து கொள்ள மகனுக்கு அழைத்தார்..

மூன்று முறை அழைப்பு விடுத்தும் வரதராஜன் எடுக்காமல் விட்டதால் பாட்டியின் மனம் சற்று சுணங்கிவிட்டது..

 வரதராஜன் இரண்டாவது திருமணம் முடித்து சென்றதன் பின் விரல் விட்டு எண்ணிவிடும் அளவே மகனை அவர் பார்த்திருக்கிறார்..

 மகளைத்தான் பார்க்க நினைக்கவில்லை பெற்ற தாயையுமா மறந்து விட்டான். என்கிற கோபம் அவரது மனதில் உள்ளது..

 இதுவே பேத்தியும் இல்லாத நேரத்தில் அவருக்கு உடல்நிலை கோளாறு ஏற்பட்டால் உடனடியாக யாரை அணுகுவது. மகனும் அவரது அழைப்பை ஏற்காமல் விட்டால் யாரும் இன்றி தனித்தே அவரது மரணம் நிகழும் என்கிற பயமும் அவருக்கு வர ஆரம்பித்தது..

 ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான சூழ்நிலையிலும் பிரச்சினைகளிலும் சிக்கி இருக்கின்றார்கள்..

 யார் யாருடைய பிரச்சனையை தீர்த்து வைக்கிறார்கள். யார் யாருக்கு ஆறுதலாக உள்ளார்கள். என்பதை போகப்போக தெரிந்து கொள்ளலாம்..

 எவ்வாறு இந்த சண்டைக்கோழிகளுக்கு திருமணம் நடந்தது என்பதை என்னோடு தொடர்ந்து இணைந்து தெரிந்து கொள்ளுங்கள்..

Advertisement