Advertisement

 ஓம் நமச்சிவாய.

 அத்தியாயம் 3..

 15 வருடங்களுக்கு முன்பு வரதன் தனது தாய் மதிநிலாவிடம் மகள் பிறை நிலாவை ஒப்படைத்து விட்டு இரண்டாவது மனைவியான சுப்புலட்சுமி உடன் சென்னைக்கு நிரந்தரமாக குடியேறிவிட்டார்..

 கணவனை இழந்து மகளின் போக்கினால் மனம் உடைந்து போன பூர்ணிமா கோயில்களுக்கு பணி செய்ய கோவில் யாத்திரை சென்று விட்டார்..

 நடராஜன் தில்லை ராஜன் இறந்த சோகத்தில் நோய்வாய் பட்டவர் உற்ற நண்பரை இழந்து. பின் மகன் வாழ்க்கை திசை மாறிப் போனதை பார்த்தபின் பேத்தி பிறை நிலா தனித்து தவித்து நின்றதை பார்த்துவிட்டு நண்பனின் முடிவை அவரும் எடுத்தார்..

 அவரின் சொத்தையும் இரண்டாக பிரித்து பேத்தியின் பெயரில் ஒரு பாதியும் மகனின் பேரில் ஒரு பாதியும் கொடுத்தார்..

 காலமும் அவர்கள் வளர்த்த பிள்ளைகளும் அவர்களுக்கு கற்றுத் தந்த பாடத்தில் இனி யாரையும் நம்பாமல் அவர்களின் காலத்தின் பின் அவர்களின் பேத்தி பிறைநிலா யாரின் தயவும் இன்றி சொந்த காலில் அவளின் தேவைகளை அவள் பார்த்து அவளின் வாழ்க்கையை அவள் வாழ வேண்டும் என நினைத்து சொத்துக்களை அவளின் பேரிலும் நகை மற்றும் பணத்தை மனைவி மதிநிலா மற்றும் பேத்தியின் பெயரிலும் இணைத்து வங்கியில் கணக்கு ஆரம்பித்து அங்கே பாதுகாப்பாக வைத்துவிட்டார்..

 மகனுக்கு இனி மகளை பற்றி கவலை தேவையில்லை அவனின் விருப்பத்திற்கு அவன் எடுத்த முடிவின் பேரில் அந்த வாழ்க்கையை சிறப்பாக வாழட்டும் அவனது புது மனைவி குடும்பம் குழந்தைகள் என வாழ வேண்டும் என ஆசீர்வதித்து அனைத்தையும் மதிநிலாவிடம் ஒப்படைத்து விட்டு உலகத்திற்கு வந்ததன் நோக்கம் முடிந்தது என நினைத்து உயிர் நண்பரைக்காண அவரின் உடலில் இருந்து இன்னுயிரை பிரித்து சென்று விட்டார் நடராஜன்..

 கணவனின் பிரிவை வாழ்வில் ஓட்டத்தில் ஏற்றுக்கொண்டு அவரின் பிரியத்திற்குரிய பேத்தி பிறை நிலாவிடம் அவர் ஆறுதல் தேடிக் கொண்டார் மதி பாட்டி..

 அந்த ஐந்து வயதிலேயே தாய் தந்தையர் ஏன் சண்டை பிடித்தார்கள் பிரிந்து சென்றார்கள் தான் ஏன் தனிமைப்பட்டோம். என எதுவும் தெரியாமல் ஐந்து வயது வரை தாய் தந்தை பாட்டி தாத்தா என சிட்டுக்குருவி போன்று சிறகடித்து பறந்த குழந்தையின் மனது இன்று தனித்து ஒரே ஒரு பாட்டியுடன் இருக்கும் பொழுது உறவுகளுக்காக ஏங்கினாள்..

 தாய் இருந்தும் பிறை நிலா மதி இடம் வளர்ந்தபடியால் அவளுக்கு தாயின் பிரிவை பற்றி கவலை தெரியவில்லை.. தினமும் வேலை முடிந்து வீட்டுக்கு வரும் வரதன் குழந்தைக்கு உணவுகள் மற்றும் ஐஸ்கிரீம் என வாங்கி வந்து அவளுடன் நேரம் செலவழித்து பேசி விளையாடி என இருந்தவர் நீண்ட நாட்களாக அவளை பார்க்க வராமல் போனதால் குழந்தை மனதளவில் தவித்துப் போனாள்..

 தினமும் மதிப்பாட்டி நிலாவை குளிக்க வைத்து காலை உணவு கொடுத்து அருகில் இருக்கும் பள்ளிக்கு அழைத்து சென்று விட்டு அங்கிருக்கும் ஜவுளி கடைக்கு சென்று விடுவார்..

 நிலாவிற்கு பள்ளி முடியும் நேரம் அவரே நேரில் சென்று அழைத்துக்கொண்டு மீண்டும் அவளை கடைக்கு அழைத்து வந்து விடுவார்..

 மற்ற குழந்தைகளை பார்த்து தாய் தகப்பன் உடன் குழந்தைகள் சிரித்து பேசுவது விளையாடுவது மற்ற குழந்தைகள் விடுமுறை நாட்களில் சொந்தங்கள் வீட்டுக்கு சென்று வந்ததை பற்றியும் அவர்களுக்கு கிடைத்த பரிசு பொருட்களை பற்றியும் சுற்றுலா சென்றதைப் பற்றியும் கூறி மகிழ்வார்கள்..

 அனைத்தையும் அவர்களின் வாயால் கேட்பதோடு சரி ஏன் தனக்கு அவ்வாறு ஒரு இன்பமயமான வாழ்க்கை அமையவில்லை என யாரிடம் கேட்பது என்று தெரியாமல் அவள் மனதில் உள்ளே அதை புதைத்து விட்டாள்..

 உறவுகளுக்கான தேடலும் ஏக்கமும் அங்கே அவளுக்கு ஆரம்பித்தது..

 காலங்கள் யாருக்கும் நிற்காமல் ஓடியதில் அவளும் குழந்தை பருவத்தில் இருந்து வயதுக்கு வந்தாள்..

 அதுவும் தோழிகள் சடங்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வந்தவர்கள் வைத்த பரிசுகள் என அனைத்தையும் கூறும்பொழுது ஏன் பாட்டி அவ்வாறு எதுவும் செய்யவில்லை என்று நினைத்து வருந்தினாள்..

 மதி ஒன்றை நினைத்து அவளை தன் கைக்குள் பொத்தி வளர்த்தார் என்றால்.

 அவளோ அது தான் கூண்டுக்குள் சிறைப்பட்டிருப்பது போன்று உணர்ந்தாள்..

 மதிக்கு கணவர் வாழ்ந்த வீட்டையோ அந்த ஊரையோ விட்டு வேறு எங்கும் செல்ல விருப்பமில்லை..

 ஊரில் இருந்து கொண்டு ஓடிப்போனவள் மகள் என்ற பெயர் தனது பேத்தியின் மனதை காயப்படுத்தி விடும் என்று அவளை கோவிலைத் தவிர வேறு எங்கும் பொது இடங்களுக்கு அழைத்துச் செல்ல மாட்டார்..

 அவளுக்கு வேண்டிய வித விதமான ஆடைகளில் இருந்து படிப்பு மற்றும் தேவையான அளவு நகைகள் அவளுக்கு பிடித்த உணவு வகைகள் எதிலும் மதி குறை வைத்ததில்லை..

 அவருக்கு வயோதிகத்தால் அவளுடன் இணைந்து விளையாட முடியாததால் சிறிது நேரம் மாலையில் அருகில் இருக்கும் பார்க்கிற்கு அழைத்துச் செல்வார்..

 கொஞ்ச நாட்களுக்குப் பின் அவள் தனியாக விளையாட நேர்ந்ததால் அவள் அங்கு செல்ல விரும்பவில்லை.. அதுவும் தடைப்பட்டது..

 அவள் சடங்கானதும் மதி வரதனுக்கு அழைத்து விஷயத்தை கூறினார்.. வரதராஜனோ இந்த முறையும் மகளைப் பார்க்க வரவில்லை..

 ஆரம்பத்தில் ஒருமுறை மதி வரதராஜன் வந்து நிலாவை பார்த்து சென்றால் மீண்டும் அவள் தகப்பனை எதிர்பார்ப்பாள் அந்த ஏக்கம் அவளது மனதில் தங்கிவிடும் அடிக்கொரு முறை வரதராஜன் வந்து நிலாவை பார்க்க வேண்டாம் என்று கூறினார்..

 தகப்பன் தன்னை இடையில் வந்து சந்தித்தால் எங்கு இருக்கிறார் என்ற தகவல்களை அவளுக்கு கூற வேண்டியது வரும் பிரிந்து சென்று வேறு ஒரு குடும்பத்துடன் இணைந்து இருக்கிறார் என்ற உண்மை அவளுக்கு மனததை காயப்படுத்தும் என்று கூற மறுத்துவிட்டார்..

நிலா வளர்ந்த பின் வரதராஜன் தொழிலுக்காக வெளிநாட்டுக்கு சென்று இருப்பதாகவே மதி கூறினார்..

 மதி பாட்டியின் தங்கை அவர்களது பிள்ளைகள் குறிப்பிட்ட ஆட்களை வைத்து நிலாவிற்கு மஞ்சள் நீராட்டு விழா வீட்டோடு சிறிய அளவில் செய்து முடித்தார்..

 ஞாபகார்த்தமாக இரண்டு புகைப்படம் எடுத்து வைத்திருந்தார்..

 ஆசைகளும் ஏக்கங்களும் பல இருந்தும் அவள் எதையும் வெளிகாட்டி பாட்டியின் மனதை கஷ்டப்படுத்த விரும்பாமல் அனைத்தையும் அவளது மனதிலேயே புதைத்து வைத்தாள்..

 அவள் வளர்ந்து பள்ளி கல்வி முடிந்ததும் கல்லூரியில் இணைந்து அக்கவுண்ட்ஸ் பாடத்தை எடுத்து படிக்குமாறு பாட்டி கூறியும் அதைக் கேட்காமல் திருச்சியில் இருந்து மிகவும் போர் அடித்து விட்டது. என்று கூறி அடம்பிடித்து ஹாஸ்டலில் புதிய நண்பர்களுடன் புதிய சூழலில் சென்னையில் இருக்கும் கலைக் கல்லூரியில் படிக்க விரும்புவதாக கூறி இதோ முதலாம் வருடத்திற்கு அடி எடுத்து வைத்து விட்டாள்..

 விவரங்கள் தெரிந்த வயதில் ஊராரின் பேச்சின் மூலம் அனைத்தையும் அறிந்து கொண்டாள்..

தாய் மற்றும் தந்தையை பற்றி அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தாலும் தந்தை இருந்தும் அவளை இது காலம் வரை பார்க்க வராததை நினைத்து அவர் மீது அதிக கோபத்தை வளர்த்துக் கொண்டாள்..

 சென்னைக்கு வர காரணமும் தந்தை வரதராஜனை சந்தித்து நன்றாக மானம் நோகும்படி நறுக்கு தெரிதாற் போல் நான்கு கேள்வி கேட்க வேண்டும் என்றுதான் வந்தாள் நிலா..

 மிதியும் நிலாவை சென்னைக்கு அனுப்ப ஒரு காரணம் இருந்தது. இவ்வளவு காலமும் தன்னோடு இருந்த பேத்தி தன் காலத்தின் பின் தனித்து இருக்க விரும்பாமல் இதுவரை காலமும் அவர்தான் வரதராஜனை பார்க்காமல் தடுத்து வைத்தார்..

இருவரும் சந்தித்தால் இருவருக்கும் பாதிப்பு என நினைத்து தடுத்தார்..

 ஆனால் இப்பொழுது பேத்தி தனித்து விடுவாள் என்று பயந்து இனியாவது தந்தையை பார்த்து தந்தையுடன் அனுசரணையாக பேசி புதிதாக அவளுக்கு கிடைக்க இருக்கும் தங்கை மற்றும் தம்பி என்று உறவுகளோடு இணைந்து வாழட்டும் என நினைத்தார்..

 ஆனால் பேத்தி செய்து வைக்கப் போகும் வேலைக்கு அந்த சொந்தம் அவளுக்கு நிரந்தரமாக கிடைக்கப் போவதில்லை என்று அறியாமல் சென்னைக்கு அவளை அனுப்பி வைத்து விட்டார்..

 கலைக் கல்லூரியில் சேர்ந்த ஒரு வருடத்தின் பின் நித்யாவும் நிலாவும் தோழிகளாக இணைந்தார்கள்..

கல்லூரியில் சேர்ந்த ஆரம்பத்தில் அவளும் யாருடனும் பேசிக்கொள்ளவில்லை யாரும் அவளுடனும் பேசவில்லை தனித்தே இருந்தாள்..

 அவளின் தனிமைக்கு காரணம் பயம்.

 அவளது நண்பர்கள் கூட்டத்தில் யாரேனும் அவர்களை கேட்டு அவளின் பெற்றோர்களைப் பற்றி கூறி அந்த ரகசியம் அவளைத் தாண்டி அனைவருக்கும் தெரிந்து அவளை பரிகாசம் செய்வார்கள் என்று பயந்து தான் யாருடனும் அவள் தோழமையோடு பழகவில்லை..

நித்யா இரண்டாம் வருடத்தில் தான் கல்லூரியில் வந்து இணைந்தாள்..

 அவள் வந்ததும் நிலாவின் இருக்கைக்கு அடுத்த இருக்கை தான் அவளுக்கு கிடைத்தது..

 அங்கே சிறிய அறிமுக படலம் ஆரம்பித்து சிறிது சிறிதாக பேசி ஓர் ஆரம்ப கட்ட நட்பை வளர்த்துக் கொண்டார்கள்..

 இவ்வாறு இருக்க நிலா சென்னைக்கு வந்து ஒரு வருடம் கடந்தும் அவளது தந்தையை காண முடியவில்லை..

 விடுமுறை நேரத்தில் திருச்சிக்கு சென்று பாட்டியுடன் நேரத்தை செலவழித்து விட்டு வருவாள்..

 இரண்டாம் வருடத்தின் ஆரம்பத்தில்.

 அங்கே ஆரம்பித்தது பிறை நிலாவில் வாழ்க்கைக்கான சோதனை காலம்..

 இரண்டாம் வருடத்தின் தமிழ் பேராசிரியர். உதயராகவன்.

 கல்லூரி ஆரம்பித்து முதல் பாடமே தமிழ் தான்..

 ராகவன் கிளாஸ் ரூமிற்குள் வர சலசலப்பான சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தது.

 சீனியர் மாணவர்கள் அவனைப் பற்றி கூறியதை இவர்களும் ஓரளவிற்கு தெரிந்து வைத்திருந்தார்கள்.

 இந்த மாணவர்களுக்கு அவன் புதியவன்.

அவன் வந்து நின்றதும் அனைவரும் எழுந்து நின்றார்கள்.

 நமது நாயகியோ அதை கவனிக்காமல் ஏதோ ஒரு ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள்..

அவனது லேசர் விழிகளில் அவள் அவனை கண்டுகொள்ளாமல் இருந்தது தப்பவில்லை..

சற்று நேரத்தின் பின்னே வித்தியாசத்தை உணர்ந்த நித்யா நிலாவின் கைகளை சுரண்டி எழுந்து கொள்ளுமாறு கூறினாள்.

 இன்று கோவிலுக்கு சென்று இரண்டு புளியோதரை வாங்கி நன்றாக உண்ண வேண்டும் என்று சிந்தனையில் இருந்தவளை நித்யா சுரண்டி கலைத்ததும் கோபத்துடன் அவளை முறைத்து பார்த்துவிட்டு சுற்றி பார்வை சுழற்றினாள்..

 நிலாவின் பார்வை சுழற்சி இறுதியாக அனல் கக்கும் ராகவனின் பார்வையோடு இணைந்தது..

அவள் புளியோதரை வாங்கும் கனவு கண்டு கொண்டிருந்ததை நினைத்து தலையில் தட்டி எழுந்து நின்றாள்..

‘ வாவ்..! வாட் எ ஹேண்ட்சம் மேன். ‘ என்று வாயை சற்று பிளந்தாள் நிலா..

 அவனது முறைப்பை பார்த்து வாயை மூடிவிட்டு ” ஐயோ ஐயோ இந்த சிடும் மூஞ்சி என்ன திட்டி வைக்கப் போறான்னு தெரியலையே இப்படியா புளியோதரைல மயங்கி போயிருப்படி நிலா மானம் போச்சே. என்று மனதினுள் நினைத்து விட்டு. ‘ கு. கு. கு.. குட் மார்னிங் சார்.’ என்றாள்..

 அவளது குட் மார்னிங்கை கணக்கிலேயே எடுக்காமல் கையசைத்து அனைவரையும் இருக்கையில் அமர வைத்து விட்டு அவனைப் பற்றி சிறு அறிமுகம் கொடுத்தான்..

” நான் உதயராகவன் பி ஏ பட்டதாரி.

 சொந்த ஊர் சென்னை..

 கடந்த மூன்று வருடமாக இந்த காலேஜில் பேராசிரியராக பணியாற்றுகிறேன்..” என்று கூறிவிட்டு இருக்கையில் அமர்ந்தான்..

 அடுத்து அவன் எதுவும் பேசாததால் ஒரு மாணவன் எழுந்து தன்னை பற்றிய அறிமுகத்தை ஆரம்பிக்கும் பொழுது கைநீட்டி அதை தடுத்து

” நீ என்ன பெரிய சாதனை பண்ணி கிழிச்ச. உன்னை நீ அறிமுகப்படுத்தி கொள்ளும் அளவுக்கு. உங்க ஆட்டிட்யூட் மற்றும் நீங்க எடுக்கிற மார்க்ஸ் மூலம் முக்கியமானவங்களை மட்டும் எனக்கு ஞாபகப்படுத்தி வைத்திருந்தா போதும். ” என்று அவன் கூறியதும் அந்த மாணவனோடு சேர்த்து மற்ற மாணவர்களின் முகமும் வாடிவிட்டது..

 இரண்டாம் வருடத்தின் ஆரம்பம் அன்றே மிகவும் கலகலப்பாக ஆரம்பித்தது பிறைநிலாவிற்கு.

 அவனது பாடம் முடிந்தும் இடைவேளை நேரங்கள் மற்றும் கல்லூரி முடிந்தும் அவனது திமிர்த்தனத்தை பற்றி நித்யாவிடம் குறை கூறிக் கொண்டே இருந்தாள்..

 நிலாவிற்கு கோயில் பிரசாதம் அன்னதானம் என்றால் அலாதி பிரியம்.. வெட்க படாமல் மீண்டும் கேட்டு வாங்கி உண்பாள்..

 நிலாவிற்கு இரண்டு தாத்தாக்களின் சொத்துகளும் சேர்த்து அவளுக்கு கொடுக்கப்பட்ட சொத்துக்கு அவள் வேலைக்கு செல்ல வேண்டிய அவசியமே இல்லை..

 ஆனாலும் அவளுக்கு பள்ளி ஆசிரியராக விருப்பம்..

 அதற்கு அவள் வைத்திருக்கும் ஓர் அரிய காரணம் நித்யாவை கோவத்தின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றது..

” நித்தி என்னை பற்றி உனக்கு நல்லாவே தெரியும்.. எனக்கு ரெண்டே ரெண்டு ஆசைதான். பெரிய கூட்டு குடும்பத்தில் என்னோட திருமணம் நடக்கணும்.. அம்மா அப்பா பாசத்தை மாமியார் மாமனார் தெரியணும்.. தங்கச்சி அண்ணன் தம்பி பாசத்தை கொழுந்தனார் நாத்தனார்கிட்ட அனுபவிக்கணும்.. அப்புறம் எனக்கு குறைந்தது ஐந்து பிள்ளைகளாவது பெத்துக்கணும்.. வீடு சொந்தங்களாளும் பிள்ளைகளாலும் நிறைஞ்சிருக்கணும்..

இரண்டாவது குழந்தைகள் பள்ளிக்கூடத்துக்கு ஆசிரியராகணும் ஆசிரியர் வேலை என் மனசுக்கு பிடிச்சது.. இன்னொரு காரணமும் இருக்கு திங்களிலிருந்து வெள்ளி வரை மட்டும் வேலை சனி ஞாயிறு விடுமுறை. காலாண்டு அரையாண்டு சம்பளத்தோட மாத விடுமுறை அப்புறம் இன்னும் நிறைய சலுகைகள் இருக்கு.. வேலைக்கு போகணும் ஆனா மனசுக்கு பிடிச்ச தொல்லை இல்லாத வேலையாகவும் இருக்கணும் எனக்கு அப்படி பிடிச்ச வேலை தான் ஆசிரியர் வேலை.. இந்த ரெண்டு ஆசையும் நிறைவேறிடுச்சுன்னா நான் தான் ரொம்ப அதிர்ஷ்டகாரி.. ” என்றாள் சந்தோஷத்தோடு.. 

 கோவிலுக்கு வந்தார்கள் ஆனால் புளியோதரை அவர்கள் வந்த நேரத்திற்கு கிடைக்கவில்லை.

 இறைவனின் ஆசிர்வாதம் அவளுக்கு இருக்கிறது என்பதை காட்டுவது போன்று ஒருவரின் மூலம் அவளுக்கு சிறிய அளவு சக்கரை பொங்கல் கிடைத்தது..

 அதில் சிறிய அளவை நித்யாவிற்கு கொடுத்துவிட்டு மிச்சம் இருந்ததை உண்டு விட்டு சர்க்கரைப் பொங்கலின் தித்திப்பில் விரலில் இருந்ததை வாயில் வைத்து சப்பி கொண்டிருந்தாள்..

 நண்பனின் கட்டாயத்தினால் நண்பனுக்கு திருமணத்திற்கு பெண் கிடைத்ததும் வேண்டுதலை நிறைவேற்ற நண்பனுடன் கோவிலுக்கு வந்த ராகவனின் பார்வையில் நிலா வாயில் விரலை வைத்து சப்பி கொண்டு இருந்ததை கண்டு விட்டான்..

 யாரும் பார்ப்பவர்கள் கேலி செய்வார்கள் என்று எண்ணமெல்லாம் நிலாவிற்கு இல்லை அவளுக்கு பிடித்தது அவளது விரலில் இருந்த சர்க்கரை பொங்கலை அவள் சப்பி சாப்பிடாள்.. 

ஆனால் அது ராகவனை முகம் சுளிக்க வைத்தது..

 நண்பனை விட்டு விலகி அவளது அருகில் சென்று ” ஏய் அறிவில்லை இப்படி பப்ளிக் பிளேஸ்ல வச்சு குட்டிப்பாப்பா மாதிரி அன்டீஷன்டா பிஹேவ் பண்ற. கொஞ்சமாவது பெரிய பொண்ணா வயசுக்கு ஏத்த மாதிரி நடந்து கொள்.. ” என்று அவள் அவன் வந்ததை கூட உணரும் முன் அவனே திட்டி விட்டு சென்று விட்டான்..

 இவளோ ஏன் திட்டினான் எதற்கு திட்டினான் என்ற காரணம் தெரியாமல் கண்களை உருட்டி விழித்துக் கொண்டு நின்றாள்..

” சர்க்கரை பொங்கல் சாப்பிட்டது ஒரு குற்றமாடி நித்தி.. அவரே வந்தாரு திட்டினாரு போய்ட்டார்.. ” என்றாள் சோகமாக..

 நிலாவின் சோக முகத்தை பார்த்து நித்தி சிரித்துக் கொண்டிருக்க தோழியின் சிரிப்பை பொறுக்காமல் அவளை அடிக்க துரத்தியவள் யார் என்று அறியாமல் ராகவனின் மீது மோதி நின்றாள் நிலா..

 மோதியவளை சற்று தள்ளி நிறுத்தி மக்கள் கூடியிருந்த கோயிலில் பெண் என்றும் பார்க்காமல் கன்னத்தில் அறைந்து அவளை சற்று தள்ளி விட்டு அங்கிருந்து சென்றான் ராகவ்..

 ஏன் திட்டினான் என்று தெரியாமல் விழித்தது போன்று ஏன் அடித்தான் என்றும் தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள் நிலா..

Advertisement