Advertisement

 ஓம் நமச்சிவாய..

 மலரே மன்னிப்பாயா 01

 சென்னை கடலோரப் பகுதி குப்பம் என்றும் இல்லாமல் நாகரிகத்தோடு இருக்கும் ஊர் என்றும் இல்லாமல் நாகரிகத்திற்கும் நவீன வசதிக்கும் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் ஊர் அது..

 அந்த ஊரில் நடேசன் சகுந்தலா தம்பதிகளின் வீடு பத்துக்கு பத்து அடி கொண்ட இரண்டு அறை, சிறிய அளவிலான சமையலறை, சிறிய ஹால் என சாதாரணமான ஒரு சிறிய குடும்பம் வாழ்வதற்கு ஏற்ற சிறிய வீடு.. அதுவும் சுனாமியால் பாதிக்கப்பட்டதன் பின் தப்பிய மீனவர்களுக்கு என்று தமிழக அரசால் கொடுக்கப்பட்ட வீடு..

 வீட்டுச் சுவர்களுக்கு வர்ணம் பூசி பல வருடங்கள் கடந்துவிட்டது.. மழை பெய்தால் தண்ணீர் வீட்டுக்குள் தேங்கி நிற்கும்.. சுவர்களும் நிலங்களும் வெடித்து அவர்களின் ஊதாரி தனத்தை எடுத்துக்காட்டியது..

 புதிதாக தங்களுக்கு என்று ஒரு வீடு கட்டுவதற்கு வசதிகள் இல்லாவிடினும் அதை அரசு நிறைவேற்றி கொடுத்ததும் அந்த வீட்டையும் வர்ணம் திட்டி அழகாக வடிவமைத்து வைத்திருக்காமல் ஏனோதானோ என்று கவனிப்பு இல்லாமல் இருந்தது அந்த வீடு..

நடேசன் சகுந்தலா தம்பதிகளுக்கு உதயராகவன். குமரன். சுவாதி என மூன்று மக்கள்.. நடேசன் கடற் தொழிலாளி [மீனவர்] அவருக்கு பத்து வயது இருக்கும் பொழுதே வெற்றிலை பாக்கு போடுதல் பீடி குடித்தல் போன்ற பழக்கங்கள் ஆரம்பம் ஆகிவிட்டது.. அதிலிருந்து சில ஆண்டுகள் கழித்து குடியும் ஆரம்பமாகிவிட்டது..

 பாடுபட்டு உழைக்கும் பணத்தில் அவரின் தேவைக்கு பணத்தை எடுத்து விட்டு தான் மிகுதி பணத்தை சகுந்தலாவிடம் கொடுப்பார்..

 நடேசன் கொடுக்கும் பணம் குடும்ப செலவிற்கே பற்றாக்குறையாக இருக்கும்.. மீன்பிடி படகின் உரிமையாளர் மீன்களை பணம் கொடுத்து வாங்கி கருவாடு போடுவதற்கு சகுந்தலா தலைமையில் சில பெண்களை வைத்து மீன்களை துப்புரவு செய்து அதை கருவாடு பதத்திற்கு காயவைத்து பதப்படுத்தி தமிழ்நாடு மற்றும் ஏனைய பிரதேசங்களுக்கு ஏற்றுமதி செய்கிறார்..

  தலைமை வகிப்பதால் சகுந்தலாவுக்கு ஏனைய பெண்களை விட சற்று அதிகமாகவே பணம் கிடைக்கும்.. ஆனால் அவரின் சம்பள பணம் இவ்வளவு வரும் என்று வீட்டிற்கோ கணவன்கோ தெரியப்படுத்தாமல் சொற்ப பணத்தை மட்டும் சம்பளமாக கூறி வைத்துள்ளார்..

 சகுந்தலாவின் உடன் இணைந்து வேலை செய்யும் பெண்கள் சகுந்தலாவின் வாய்க்கு பயந்து சகுந்தலாவின் உண்மையான சம்பள பணத்தை நடேசனிடமோ அவர்களின் பிள்ளைகளிடமும் கூற மாட்டார்கள்..

அங்கு வேலை செய்யும் பெண்களின் குடும்ப கஷ்டங்கள் மற்றும் அவர்களின் தேவைகளை நிறைவு செய்வதற்கு சகுந்தலாவிடம் வட்டிக்கு பணம் பெற்றுக் கொள்வார்கள்..

 மாதந்தோறும் பணம் வாங்கிய அந்த நாளுக்கு ஒரு நாள் தவறாமல் வட்டி பணம் கொடுத்து விட வேண்டும். இல்லையென்றால் சகுந்தலா கேட்கும் தகாத வார்த்தைகளுக்கு உயிர் வாழ்வதே கவலைக்கிடமாகிவிடும்..

 சகுந்தலாவை பார்த்தால் அவரின் குணாதிசயங்களை யாரும் இலகுவாக மதிப்பிட முடியாது.. எப்பொழுதும் மங்களகரமாக சிரித்த முகத்துடன் தான் இருப்பார்.. சொற்ப பணத்தில் குடும்பத்தை நடத்த முடியாது குடும்ப கஷ்டம் என்கிற கவலை அவரது முகத்திலோ செயலிலோ சிறிதும் வெளிப்படாது..

 புதிதாக வருபவர்களோ இல்லை சகுந்தலாவை பார்ப்பவர்களோ அவரை அன்பானவர். மிகவும் நல்லவர். உதவி செய்யக் கூடியவர். என்று இலகுவாக நம்பி விடுவார்கள்.. ஆனால் அவருடன் இணைந்து பழகியவர்களுக்கு மட்டுமே அவரது உண்மையான குணம் தெரியும்..[ அம்புட்டும் விஷம் ]

 சகுந்தலா அவரின் குடும்ப நிலைமையை எப்பொழுதும் கஷ்ட சூழ்நிலையிலேயே வைத்திருப்பார்.. அவரது சொற்ப சம்பளம் நடேசன் தரும் சொற்ப பணமும் தினமும் மூன்று வேளை உணவு உட்கொள்வதற்கும் தீபாவளி பொங்கல் என்று பண்டிகை நாட்களுக்கு மிகவும் குறைந்த விலையில் ஆடைகளை எடுத்து உடுத்தி மகிழ்வதற்கும் மட்டுமே அவரிடம் இருக்கும் பணம் போதுமாக இருக்கும் என்று வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தெரியப்படுத்தி வைத்துள்ளார்..

 அவரிடம் இருக்கும் முதல் மற்றும் வட்டி பணத்தில் புதிதாக ஒரு வீடு கட்டி வளமான ஒரு வாழ்வை சந்தோஷமாக குடும்பத்தோடு வாழ முடியும்.. ஆனால் அதைச் செய்யாமல் பணத்தை யாருக்கு எதற்காக சேர்த்து வைத்திருக்கிறார் என்றே தெரியாமல் வட்டிக்கு விட்டு குடும்பத்தாரிடம் உண்மையான வருமானத்தையும் கையில் இருக்கும் பணத்தையும் கூறாமல் மறைத்து அடைகாத்து வருகிறார்..

 ஊரும் நடேசனும் அறிந்து நடேசன் வாங்கி கொடுத்த ஐந்து பவுன் தாலிச் செயின் மற்றும் சகுந்தலா சீட்டு பிடித்து அவருக்கு மேலும் ஒரு ஐந்து பவுன் நகை மகள் சுவாதிக்கு ஒரு ஐந்து பவுன் நகை வைத்திருக்கிறார் என்றே அனைவரும் அறிவர் ஆனால் வங்கி லாக்கரில் நகைகளும் கணக்கில் இருக்கும் மொத்த பணமும் சகுந்தலாவை தவிர வேறு யாருமே அறிந்து இருக்கமாட்டார்கள் …

 சகுந்தலாவின் வீடு அவ்வாறு ஒரு கோலத்தில் இருக்கும் என்றால் வீட்டில் இருக்கும் பொருட்களோ அவரிடம் வட்டிக்கு வாங்குபவர்கள் வீட்டில் கூட அதிக பொருட்கள் இருக்கும் அதில் பாதி பொருட்கள் கூட சகுந்தலாவின் வீட்டில் இல்லை..

 அவர்களது உழைப்பில் ஐந்து பேருக்கும் ஐந்து பாய் தலையணை மற்றும் போர்வை. இன்னும் சிறிது காலமே உயிர் வாழ்வேன் என்று கட்டியம் கட்டிக் கூறும் படியான நான்கு பிளாஸ்டிக் கதிரைகள் ஆளுக்கு ஒரு வீதம் ஐந்து உணவு தட்டுக்கள் சமைக்கும் சொற்ப பாத்திரங்கள் பழைய காலத்து டிவி அரசால் வழங்கப்படும் கேபிள் கனெக்சன் என வீட்டுக்கு தேவையான அடிப்படை பொருட்கள் ஓரளவிற்கு அவ்வீட்டில் இருக்கிறது..

 எல் இ டி டிவி பிரிட்ஜ் வாஷிங் மெஷின் மாடல் கிச்சன் வர்ணம் பூசிய அலங்காரம் செய்த ஆடம்பரமான வீடு என்பன கைக்கு எட்டும் தூரத்தில் இருந்தும் அதை நாடாமல் ஏன் இந்த ஏழ்மை வாழ்க்கை அவரும் வாழ்ந்து குடும்பத்தாரையும் கஷ்டப்படுத்துகிறார் என்று குடும்பத்தினர்கோ வேறு யாருக்குமே தெரியாது..

 இவ்வாறு அவர்களது வாழ்க்கை பிள்ளைகள் மூவரும் வளர்ந்த பிறகும் தொடர்கிறது..

 நடேசன் சகுந்தலா தம்பதியினர் திருமணம் முடித்து அடுத்த பத்தாவது மாதமே உதயராகவன் பிறந்து விட்டான்..

 அவனுக்கு அடுத்து மூன்று வருடத்தின் பின் குமரனும்.. எட்டு வருடத்தின் பின் சுவாதியும் பிறந்தார்கள்..

 இதோ உதயராகவன் முப்பது வயது. குமரன் 27 வயது. சுவாதி 19 வயது. என மூன்று பிள்ளைகளும் வளர்ந்து அவர்கள் அவர்களது படிப்பு தொழில் என வளர்ந்து விட்டார்கள்..

 நமது கதையின் நாயகன் உதயராகவன் ஆண் என்ற திமிர் அதிகம் உடையவன்.. அவனைப் பற்றிய வர்ணனைகளை கதையின் போக்கில் நாயகியின் மூலம் தெரிந்து கொள்ளலாம்..

 தட்டு தடுமாறி படித்து பப்ளிக் எக்ஸாம்களில் பார்டரில் பாஸ் பண்ணி காலேஜ் சென்று அங்கும் தட்டு தடுமாறி படித்து அவனே எதிர்பாராத அளவு பி ஏ பாஸ் ஆகிவிட்டான்..

 இதோ தற்பொழுது சென்னையில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் தமிழ் பேராசிரியராக பணியாற்றுகிறான்.. கல்லூரி சென்று மீண்டும் வெளியே வரும் வரை மட்டுமே அவன் பேராசிரியர்.. கல்லூரியில் இருந்து வெளியேறியதும் பேராசிரியர் ராகவ் காணாமல் போய் திமிர் பிடித்த உதய் வெளியே வந்து விடுவான்..

 அவனோடு வேலை செய்யும் சக பேராசிரியர்களோ இல்லை அவனை நன்கு தெரிந்த மாணவர்களோ பேராசிரியராக இருக்கும் ராகவிற்கும் வீட்டிலும் இருக்கும் உதய்க்கும் குறைந்தது நூறு வித்தியாசங்கள் கூறுவார்கள்..

 ஏன் அவன் அவ்வாறு இருக்கிறான் என்பதும் அவனுக்கே தெரியும்..

 குமரன் ஏழாம் வகுப்போடு வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று அடித்த ஆசிரியரின் மண்டையை கல்லால் அடித்து உடைத்து விட்டு அவனது படிப்பை நிறுத்திவிட்டான்.. அப்போது இருந்து தந்தையோடு கடலுக்கு செல்ல ஆரம்பித்து விட்டான்..

 அவன் உழைத்த பணம் மொத்தமும் அவனது சூது விளையாட்டுக்கே போதவில்லை.. வீட்டிற்கு செலவிற்கோ தாயிடம் கூட அவனது உழைப்பில் பாதி பணம் கூட கொடுக்க மாட்டான்.. அவன் உழைக்கும் பணம் மொத்தமும் சூதில் தோற்றுவிட்டு சகுந்தலாவிடமும் பணம் கேட்டு சண்டை பிடித்து தர்க்கம் பண்ணி அவனுக்கு வேண்டிய பணத்தை பெற்றுக் கொண்டே அங்கிருந்து சூது விளையாட்டுக்கு மீண்டும் செல்வான்..

 இவ்வாறு அவன் உழைத்த பணத்தில் அவன் தோற்ற பணம் இலட்சக்கணக்கில் வரும்.. அத்தனை பணத்தையும் ஒன்று திரட்டி வைத்திருந்தால் இந்நேரம் அவன் சொந்த போட் எடுத்து அவன் தொழில் செய்து ஒரு முதலாளியாக இருந்திருப்பான்.. [ தாய்க்கு தெரிந்த காசின் அருமை மகனுக்கு தெரியாத கூமுட்டை கழுதை ]

  அவனின் நடவடிக்கையை சகுந்தலாவும் ஓரளவுக்கு கண்டித்து விட்டு அவன் திருந்துவதாக இல்லை என்று தெரிந்ததும் எக்கேடும் கெட்டு ஒழியட்டும் என்று தண்ணீர் தெளித்து விடாத குறையாக விட்டுவிட்டார்..

ஆரம்பத்தில் நடேசன் கண்டித்தார் தான் ஆனால் அவர் குடிப்பது பற்றி கூறி சண்டை பிடித்த பின் அவரும் அன்பின் கண்டிக்காமல் அவன் போக்கில் விட்டு விட்டார்..

 குமரனும் சற்று ஒருவரின் பேச்சை காது கொடுத்து கேட்டு பயம் கொள்வது என்றால் சகுந்தலாவின் தங்கை நிர்மலாவிடம் மட்டுமே.. அவரோ திருமணம் முடித்து திருச்சியில் இருப்பதால் இவனை கண்டிக்க நேரில் வர முடியாது என்பதால் போனில் இவனிடம் அடிக்கடி திட்டி பேசி கண்டித்து விடுவார்.. அவரின் சொல்லை கேட்டு இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாட்கள் வீட்டில் தொழில் செய்து அடக்க ஒடுக்கமாக இருப்பான் அதன் பின் மீண்டும் சென்று விடுவான்..[ எருமை மாட்டில் மழை பெய்யும் நிலை தான் இந்த குமரனின் நிலை ]

 சுவாதி பற்றி கூற வேண்டும் என்றால் சகுந்தலாவின் ஜெராக்ஸ்.. வாய்ப்பேச்சு மற்றும் பொறாமை மற்றவர்களை பற்றி குறை கூறுதல் போன்ற செயல்களுக்கு பி எச் டி பட்டம் கொடுத்தால் அது முதலாவதாக இவளுக்கு தான் கொடுக்க வேண்டும்..

 சுவாதிக்கும் படிப்பு வராமல் பத்தாவதுடன் நின்று விட்டாள்.. சகுந்தலாவுக்கு உதவியாக வீட்டில் இருக்கிறாள்.. 

இவ்வாறு விசித்திரமாக இவர்களது குடும்பம் இருக்க இந்த குடும்பத்தில் நமது நாயகன் உதயராகவனுக்கும் நாயகி பிறைநிலாவிற்கும் எவ்வாறு திருமணம் நடக்கிறது அவர்களது வாழ்க்கை எவ்வாறு செல்கிறது.. குமரன் மற்றும் சுவாதியின் வாழ்க்கை எவ்வாறு செல்கிறது என்பதையும் கதையில் தொடர்ந்து காண்பதற்கு என்னோடு இணைந்திருங்கள்.. 

 

Advertisement