மறந்து போ என் மனமே

அத்தியாயம்



வெண்மதி அவள் அக்கா ஜெயாவுக்கு அழைத்துப் பேசினாள். “அக்கா அப்பாவை இனி நானும் கொஞ்ச நாள் வச்சுப் பார்த்துக்கிறேன். நீயே எவ்வளவு நாள் பார்ப்ப.” 


இரு நீயே இப்பத்தான் தனிக் குடித்தனம் வந்திருக்க. கொஞ்ச நாள் போகட்டும் முதல்ல உங்க புருஷன் பொண்டாட்டிக்குள்ள எல்லாம் சரியாகட்டும். அப்புறம் அப்பா அங்க வந்து தங்கட்டும். நானே பார்த்து அனுப்பி வைக்கிறேன்.” என்றால் ஜெயா


இந்த வீட்டுக்கு வேறு பணம் கொடுக்க வேண்டும். வட்டிக்குக் கொடுத்த பணம் உடனே எல்லாம் திருப்பிக் கேட்க முடியாது என அவளுக்குத் தெரியும்


இரவு வந்த கணவனுக்கு உணவுப் பரிமாறியவள், அவன் உண்டு முடித்து எழுந்ததும், பீரோவில் இருந்த அவளது நகைகளை எடுத்து வந்து தந்தாள்


வீட்டுக்கு வேற பணம் கொடுக்கணும் இல்லஇதை வச்சுக்கோங்க. வித்தாலும் பரவாயில்லை. நான் கவரிங்க் நகை கூடப் போட்டுக்குவேன் எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை.” என்றாள்.
இதுதான் மனைவிக்கும் மற்றவளுக்கும் உள்ள வித்தியாசம் அல்லவா…. இளமாறனுக்கு இப்போது புரிந்தது


இல்லை வேண்டாம் நான் சமாளிச்சுப்பேன்.” என்றான்


வேற யாரு கிட்டையோ கடன் வாங்கிறதுக்கு நம்ம நகையை வைக்கிறதுக்கு என்ன? இதையே வச்சுக்கோங்க.” என வெண்மதி வற்புறுத்தி கொடுத்தாள்


அப்போது பணத்திற்கு வேறு வழியில்லை. அதனால் நகைகளை எடுத்துக் கொண்டான். ஆனால் விற்கவில்லைபேங்கில் அடகுதான் வைத்தான். அந்தப் பணத்தோடு கையில் இருந்த பணத்தையும் சேர்த்து மாணிக்கத்திடம் வீட்டுக்குக் கொடுத்தான்


கடைக்கு மேலே தானே வீடு. இளமாறனே மகள்கள் இருவரையும் பள்ளியில் சென்று விட்டு, மாலையும் அவனே அழைத்து வந்தான். பள்ளியில் இருந்து வரும்போது எதாவது தின்பண்டங்கள் வாங்கித் தருவான். மகள்களும் தந்தையுடன் மீண்டும் இணக்கமாக இருந்தனர்


அலுவலகம் செல்பவர்கள் சில நேரம் காலையே வண்டி பஞ்சர் போட, டயருக்கு காத்தடிக்க என்று வருவார்கள் என்பதால்காலை ஏழு மணிக்கே ஒரு பையன் மட்டும் வந்து கடையைத் திறத்து விடுவான். அதனால் அவன் மட்டும் மாலை சீக்கிரம் கிளம்பி விடுவான். மற்றவன் ஒன்பது மணிக்கு வந்து இரவு எட்டு ஒன்பது வரை இருப்பான். அதே போலத் தான் அந்தக் கடையிலும்


இப்போது கடைக்கு மேலேயே வீடு என்பதால்இரவு கடையில் வேலை செய்யும் பையன் கிளம்பியதும், வெண்மதியும் பிள்ளைகளும் கடையில் வந்து இருப்பார்கள். இளமாறன் பழுது பார்க்கும் வண்டி எதாவது இருந்தால் பழுது பார்த்துக் கொண்டிருப்பான்


இளமாறன் அவனுக்குத் தேவைப்படும் பழுது பார்க்கும் சாதனங்களை மகள்களிடம் சொல்லி எடுத்து தர சொல்வான். அவர்களும் எடுத்து வந்து தருவார்கள்


பழைய வண்டிகளை வாங்கி அதைப் பழுது பார்த்து, தேவையான பாகங்களை மாற்றிச் சர்விஸ் செய்து விற்றால் நல்ல லாபம். அப்படியொரு வண்டிக்கு தான் இப்போது வேலைப் பார்த்துக் கொண்டிருந்தான். வெண்மதி ஒரு சேரில் உட்கார்ந்து கணவனைத் தான் ஆராய்ந்து கொண்டிருந்தாள்


இளமாறன் பத்தாவது முடித்து டி யையில் தொழில் கல்வி முடித்தவன். சில நாட்கள் வெளியே வேலைப் பார்த்தாலும், மற்றவரிடம் வேலைப் பார்ப்பது அவனுக்கு ஒத்து வராததால்சொந்த கடை வைத்தான்


வேலையில் திறமைசாலி தான். அதனால் தான் ஒரு கடை இரண்டு கடையானது. ஆள் பார்க்கவும் நன்றாக இருப்பான்


நல்லாத்தானே இருந்தான், ஏன் இப்படி ஆனான்? என யோசித்துக் கொண்டிருந்தாள்


தன்னை விட அந்தச் சுந்தரியை ஏன் பிடித்தது? தான் என்ன குறை வைத்தோம். தன்னைப் பிடிக்காமல் போனதால் தானே இன்னொரு பெண்ணைப் பிடித்தது என எதை எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள்


நான் மாடிக்கு போறேன்.” என அவள் சட்டென்று எழுந்து சென்று விடஇளமாறன் மனைவியைத்தான் யோசனையாகப் பார்த்தான்


அவனும் வேலையை மறுநாளுக்கு ஒத்திவைத்தவன், கடையைப் பூட்டி விட்டு மகள்களை அழைத்துக் கொண்டு மாடிக்குச் சென்றான்


கணவனுக்கும் மகள்களுக்கும் உணவு பரிமாறியவள், அவள் உண்ணாமல் உட்கார்ந்து இருந்தாள். அவர்கள் உண்ட பிறகும் அவள் உண்ணவில்லை. எல்லாவற்றையும் அவள் எடுத்து வைக்க… 


நீ சாப்பிடலையா?” என இளமாறன் கேட்க


எனக்குப் பசிக்கலை.” என்றாள்


ஏற்கனவே ஆள் மெலிவு தான். இப்போது இன்னும் மெலிந்து போனாள். மகள்களுக்கு முன்பு எதுவும் கேட்க வேண்டாம் என நினைத்தவன், மகள்கள் உறங்கும் வரை அமைதியாக இருந்தான்


மகள்களுக்கு மறுநாள் பள்ளி செல்ல எல்லாம் எடுத்து வைத்து விட்டு நைட்டி மாற்றிக் கொண்டு வந்த வெண்மதி, படுக்கப் பாய் விரிக்ககட்டிலில் மகள்களின் அருகே படுத்திருந்தவன், “போய்ச் சாப்பிட்டு வா மதி.” என்றான்


ஒருநாள் சாப்பிடலைனா ஒன்னும் ஆகாது.” என்றால் சுள்லென்று


சொன்னா கேளு…” என அவன் அழுத்தி சொல்ல… 


என் மேல அக்கறை இருக்க மாதிரி எல்லாம் நடிக்க வேண்டாம். உங்களுக்கு என்னைப் பிடிக்காது. எனக்கு அது தெரியும். இல்லைனா இன்னொரு பெண்ணுகிட்ட அப்படிப் பழகி இருக்க மாட்டீங்க.” 


வெண்மதி நன்றாகத்தான் இருப்பாள். திடிரென்று எதையாவது நினைத்து அவளையே வருத்திக் கொள்வாள். இன்று இளமாறன் பக்கம் அது கோபமாகத் திரும்பியது. அதனால் மனதில் இருந்த ஆதங்கத்தை நெருப்பாகக் கொட்டினாள்


இப்பவும் என் மேல இருக்க அன்புனால எல்லாம் நீங்க மாறலை எனக்குத் தெரியும்.” 


அப்போ எதுக்காக மாறினேன்.” என்றபடி இளமாறன் எழுந்து உட்கார… 


உங்க பிள்ளைகளுக்காகத் தான். அவங்களுக்கு அம்மா வேணும்னு. இது கூட எனக்குத் தெரியாதா?” 


நான் நினைச்சிருந்தா உனக்குத் தெரியாம சுந்தரியோட தொடர்பை என்னால தொடர்ந்திருக்க முடியும். இப்பவும் உனக்குத் தெரியுமாநான் அவளை விட்டுட்டேன்னு.” கணவன் சொன்னதைக் கேட்டு வெண்மதி திடுக்கிட்டு பார்க்க… 


இப்ப புரியுதா…. என் பொண்ணுங்களுக்காக மட்டும் இல்லை…. உனக்காகவும் தான் விட்டேன். எனக்கே தெரிஞ்சுது நான் செய்யுறது தப்புன்னு.” 


திட்டம் போட்டு எதுவும் ஆரம்பிக்கலை. சும்மா பேச ஆரம்பிச்சதுஅது வேற மாதிரி மாற ஆரம்பிச்சது. எனக்கே இதெல்லாம் சரியில்லைன்னு தெரியும். ஆனா விட முடியலை.”

 
இப்ப எனக்குப் புரியுது, சுந்தரி என்னோட பழகினது திட்டம் போட்டுத்தான். அவளை மட்டுமே குறை சொல்ல முடியாது. இடம் கொடுத்தது நானும் தான்.” 


நீ எனக்கு முக்கியம் இல்லைன்னு நினைச்சிருந்தா…. நான் உன்னைத் தேடி ஒரு நாள் முழுக்க நாய் மாதிரி அலைஞ்சிருக்க மாட்டேன்.”

உன்னை இழக்க விரும்பாமத்தான் சுந்தரியோட பழக்கத்தை விட்டேன்.”  

இப்பவும் சொல்றேன், உனக்குத் தெரியாம என்னால சுந்தரியோட உறவை தொடர்ந்திருக்க முடியும்.”


நான் என்னை நியாயபடுத்தலை. நான் செஞ்சதை நீ செஞ்சிருந்தாஎனக்கு எப்படி இருந்திருக்கும்னு, எனக்கு புரியாம இல்லை.” 


நான் செஞ்சது தப்பு. அதை உணர்ந்து தான் விட்டுட்டேன்.” 


உன்னை எனக்குப் பிடிக்காது அதனாலதான், அப்படி இப்படின்னு நீயே நினைச்சுக்காத.” 


ஏன் இப்படி நடந்துகிட்டேன்னு காரணம் எனக்கே தெரியலைதெரியாத போது உன்கிட்ட என்ன சொல்றது.” 


அதுதான் பேசாம தள்ளி போட்டுட்டே இருந்தேன்.” 


நான் உன்னை விரும்பி தான் கல்யாணம் பண்ணேன். ஆனாலும் நமக்குள்ள ஒரு இடைவெளி வந்திடுச்சு. அது உண்மை தான்.” 


முடிஞ்சா என்னை மன்னிச்சிடு.” என்றவன், விளக்கனைத்துப் பாயில் படுத்துக்கொண்டான்


வெண்மதி சுவற்றில் சாய்ந்தபடியே உட்கார்ந்து இருந்தாள்


இவனோடு தான் வாழ்வது என்றாகிவிட்டது, திரும்பத் திரும்ப அதையே நினைத்து, குத்தி காட்டி பேசி, சண்டை பிடித்து மட்டும் என்னவாகி விடப் போகிறது. ஒன்று இவனே வேண்டாம் என்று விட்டு செல்ல வேண்டும். அல்லது எல்லாவற்றையும் மறந்து சேர்ந்து வாழ வேண்டும். அவனே இனி இது போல நடக்காது எனச் சொல்லும் போது…. நாமும் என் அதையே பிடித்துத் தொங்க வேண்டும் என நினைத்தவள், கடவுளே எனக்கு அதெல்லாம் மறந்து போகணும், நினைவே வரக் கூடாது என்று வேண்டிக் கொண்டாள்


போய்ச் சாப்பிடு மதி. அப்பத்தான் தூக்கம் வரும்.” என கணவன் சொல்லவெண்மதி எழுந்து சென்றாள்


தட்டில் உணவோடு வந்து ஹாலில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டு உண்டாள். இளமாறன் அவள் உண்டுவிட்டு வரட்டும் என்று படுத்திருந்தவன், உறங்கிப் போனான்


அவன் அப்பா அம்மாவையும் வாரம் ஒருமுறை சென்று பார்த்துவிட்டு வருவான். செல்லும் போது அவர்களுக்கு எதாவது வாங்கிக்கொண்டு செல்வான். பணமாகக் கொடுத்தால் அதையும் மகள்களுக்குத் தான் கொடுப்பார். பிறகு தாங்கள் உண்ண கூட எதுவும் இல்லை என்பார்


மூன்று மாதங்கள் சென்றிருக்கும், இன்னும் கணவனை முழுமையாக ஏற்றுகொள்ள வெண்மதிக்கு மனம் வரவில்லை. இளமாறனுக்கும் தான் செய்த தவறு ஒன்றும் சின்னது அல்ல எனப் புரிந்துதான் இருந்தது


தான் செய்த தவறுக்கு மன்னிப்பை வேண்டி ஐயப்பனுக்கு மாலை அணிந்து கொண்டான். நாற்பத்தி எட்டு நாட்கள் கடுமையான விரதம். வெண்மதியும் கணவனோடு சேர்ந்து விரதம் இருந்தாள்


காலை சாமிக்கு நெய்வேத்தியம் செய்யப் பொங்கல், கேசரி என எதாவது செய்வாள். அதை மட்டுமே கொஞ்சமாக உண்டுவிட்டு இளமாறன் கடைக்குச் செல்வான். மதியம் வாழை இலையில் சாதம், குழம்பு, கூட்டு, பொரியல் எல்லாம் வைத்து, அந்த ஒரு வேலை மட்டும் நன்றாக உண்ணுவான். மாலை மீண்டும் குளித்துப் பூஜைக்குச் செல்வான். திரும்ப இரவில் பால் பழம் மட்டும் உண்டு விட்டு ஹாலிலேயே படுத்து உறங்கி விடுவான்


பிள்ளைகள் தான் முதலில் அசைவம் இல்லையெனச் சினுங்கினர். ஆனால் வெண்மதி காய்கரியிலேயே வறுவல் பொரியல் என விதவிதமாகச் சமைக்கபிறகு அவர்களும் சைவ உணவை விரும்பி உண்டனர்


கணவன் நல்லபடியாக மலைக்குச் சென்று வர வேண்டும் என வெண்மதியும் தினமுமே கோவிலுக்குச் சென்று வந்தாள்


இவர்கள் வீட்டிலும் ஒருநாள் மற்ற சுவாமிகளை அழைத்துப் பூஜை செய்தனர். வெண்மதியே சுத்தபத்தமாக விருந்து சமைத்திருந்தாள். அவர்களே பரிமாறிக்கொண்டு உண்டனர்


மாப்பிள்ளை மலைக்குச் செல்வதால்வெண்மதியின் தந்தை இங்கே வந்து சின்ன மகளோடு சிறிது நாட்கள் தங்கினார். மருமகன் மலைக்குச் சென்று விட்டு வரும் வரையில் இங்கே தங்குவதாக இருந்தது


இளமாறன் நல்லபடியா மலைக்குச் சென்று விட்டுத் திரும்பினான். அவனே பிரசாதம் எடுத்துக் கொண்டு அவர்கள் வீட்டுக்கு கிளம்ப…. “நானும் உங்க அப்பா அம்மாவை பார்க்க வரேன் மாப்பிள்ளை.” என அவன் மாமனாரும் உடன் கிளம்ப… 


மாமியார் தந்தையிடம் என்ன பேசுவாரோ என்ற கவலையில் வெண்மதி இருக்க…. “நான்தான் கூடப் போறேன் இல்லை. நான் பார்த்துக்கிறேன்.” என்றான் இளமாறன்


மகனுடன் வந்த சம்பந்தியைப் பார்த்ததும் வசந்தாவுக்கு பற்றிக் கொண்டு வந்தது. “மகள் தனிக்குடித்தனம் வந்ததும், இங்க வந்து டேரா போட்டுட்டாரா…” எனக் கொதித்துதான் போனார். வாங்க எனப் பெயருக்கு கேட்டு விட்டு அமைதியாக இருக்கஇளமாறனின் தந்தை தான் சம்பந்தியுடன் பேசிக்கொண்டு இருந்தார்


இளமாறன் பிரசாதத்தைக் கொடுக்க… “எங்களைப் பூஜைக்குக் கூடக் கூப்பிடலை.” என வசந்தா கோபித்துக்கொள்ள… 


முதல் வருஷம் வீட்ல சின்னப் பூஜையாவது செய்வோம்னு, ஒரு பத்து பதினைஞ்சு சாமிகளை மட்டும் தான் கூப்பிட்டோம். உன்னைக் கூப்பிட்டாரஞ்சிதாவை கூப்பிடு, மணிமேகலையைக் கூப்பிடுன்னு இழுத்து விடுவஅதுவே நிறையப் பேர் ஆகிடும். அதுதான் கூப்பிடலை.” என்றான்


மாமா வந்திருக்காருஅவருக்கு ஒரு காபி போட்டுக் கொடு.” என்றான். வசந்தா முனங்கிக்கொண்டே சென்று தான் காப்பிப் போட்டுக் கொண்டு வந்து கொடுத்தார்


உங்க பொண்ணு பார்த்தீங்களாதனிக் குடித்தனம் போயிட்டாவயசான காலத்தில நாங்க என்ன பன்னுவோம்னு எல்லாம் யோசிக்கலை.” என்றதும், வெண்மதியின் தந்தை என்ன சொல்வது எனத் தெரியாமல் சங்கடமாகப் பார்க்க… 


இப்ப எதுக்கு ஆரம்பிக்கிற? வீட்டு வேலைப் பண்ண ஆள் வச்சிருக்க. அதுக்குப் பணம் நான் கொடுக்கிறேன். சமையல் மட்டும் தானே பண்றஅது கூடப் பண்ண மாட்டியா?” 


தனிக் குடித்தனம் போனது எனக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு. நீ அவளை எதாவது சொல்லுவபதிலுக்கு அவ என்கிட்டே புலம்புவாஇப்போ அந்தத் தொல்லை எல்லாம் இல்லை. அவ பாட்டுக்கு வேலையைப் பண்ணிட்டு, பசங்களை ஒழுங்கா படிக்க வச்சிட்டு இருக்கா…” 


உனக்கு அது பொறுக்கலையா? பேசாம இரு.” எனச் சொல்லிவிட்டு மாமனாரை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டான்


வெண்மதியின் தந்தைக்கு என்ன தெரியும் பாவம் அவர். “ஏன் மா நீ கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போயிருக்கலாம் இல்லஉன் மாமியார் ரொம்ப வருத்தபட்டாங்க. வயசான காலத்தில அவங்க எப்படிச் சமைச்சு சாப்பிடுவாங்க.” 


நீங்க தனியா வந்திருக்கக் கூடாது.” என்றதும்


ஏன் தனியா வந்தோம்னு காரணத்தைச் சொல்லலையா பா…” என வெண்மதி கேட்க, அவள் கேட்பதிலேயே அவள் தந்தைக்குத் தவறு மகள் மீது இல்லை எனப் புரிந்தது


அவங்க எப்படியோ இருக்கட்டும் மாஆனா நாமும் அப்படி இருக்க வேண்டாம். திரும்ப ஒண்ணா இருக்கலைனாலும், நாள் கிழமைக்கு நீயே சமைச்சுக் கொடு.” என்றார். வெண்மதியும் சரி என்றாள்


மறுநாளே வெண்மதியின் தந்தை மதுரைக்குக் கிளம்பி சென்று விட்டார்


அந்த வாரம் ஞாயிறுக் கிழமை அசைவம் சமைப்பதற்கு என்ன வாங்கி வர என இளமாறன் கேட்க

உங்க அப்பா அம்மாவுக்கும் சேர்த்து வாங்கிட்டு வாங்க, நான்னே சமைச்சுக் கொடுக்கிறேன்.” என்ற வெண்மதியை இளமாறன் ஆச்சர்யமாகப் பார்க்க… 


நான் எங்க அப்பாகிட்ட சமைச்சுக் கொடுகிறேன்னு சொல்லிட்டேன். அதுதான் வேற எதுவுமில்லை. உங்க அம்மா மேல எனக்குப் பாசம் எல்லாம் வந்திடலை…” என்றாள் சடவாக


நீ இஷ்டம் இல்லாம கஷ்டப்பட்டு எல்லாம் செய்ய வேண்டாம் மதி.” 


கஷ்டம் எல்லாம் ஒன்னும் இல்லை. நான் எங்க அப்பாகிட்ட சொல்லிட்டேன். நானே செஞ்சு தரேன்.” என்றாள் இந்த முறை அமைதியாக


இப்பவே வேண்டாம், எங்க அம்மா திரும்ப ஆட ஆரம்பிச்சிடுவாங்க. கொஞ்ச நாள் போகட்டும். அவங்களுக்கு உடம்புக்கு எல்லாம் ஒன்னும் இல்லை நல்லத்தான் இருக்காங்க. நீதான் வீட்டு வேலைக்குக் கூட ஆள் வைக்காம எல்லா வேலையும் பண்ற…. இதுல இந்த வேலை வேறையா? எதாவது பண்டிகை நாளுக்கு வேணா செஞ்சு கொடு.” என்றவன், எப்போதும் போல இங்கே வீட்டுக்கு வாங்கும் போது, அவன் அம்மாவுக்கும் சேர்த்து வாங்கிக் கொண்டு போய்க் கொடுத்து விட்டு வந்தான்


கணவனை நினைத்து வெண்மதிக்கு வியப்பே….. தனக்காக எல்லாம் கணவன் யோசிக்கிறானே என ஆச்சர்யமாக இருந்தது