மறந்து போ என் மனமே 8 6792 மறந்து போ என் மனமே அத்தியாயம் 8 இளமாறன் இரண்டு மூன்று நாட்கள் யாரோடும் பேசாமல் இறுக்கமாகவே இருந்தான். சுந்தரி மீது அவ்வளவு கோபத்தில் இருந்தான். இவன் அவளை தேடி சென்று சண்டை போட்டு, அது வேறு பிரச்சனை ஆகி விடப் போகிறது என நினைத்த வெண்மதி, “கோபத்துல நீங்க எதாவது செஞ்சிட்டு என்னையும் பிள்ளைகளையும் தெருவுல நிறுத்திடாதீங்க. நீங்க இருக்கும் போதே… உங்க அம்மா எப்படி பேசினாங்கன்னு உங்களுக்கு தெரியும்.” “காசு பணம் எனக்கு வேணாம். எனக்கு நிம்மதி வேணும். அவளை எங்காவது நீங்க தேடி போனீங்கன்னு தெரிஞ்சிது, அவ்வளவு தான் சொலிட்டேன்.” என வெண்மதி ஒருநாள் கத்தி விட்டாள். “போறேன்னு உன்கிட்ட சொன்னேனா டி…. உன் வேலையைப் பாரு.” என இளமாறனும் பதிலுக்கு கத்தினான். இருப்பது ஒரு அறை தானே… பிள்ளைகள் முன்னிலையில் தான் இருவரும் சண்டையிட்டனர். மாணிக்கம் எதற்கும் சுந்தரி மீது காவல் நிலையத்தில், பணம் வாங்கிவிட்டு கொடுக்காமல் தலைமறைவாகி விட்டதாக புகார் கொடுக்க சொன்னார். சுந்தரியிடம் இருந்து பணத்தை வாங்க முடியாது. ஆனால் பின்னாளில் அவளால் எதுவும் பிரச்சனை இல்லாமல் இருக்கட்டும் என்றே சொன்னார். இளமாறனும் புகார் கொடுத்திருந்தான். இளமாறன் கடை வேலையில் தன்னை மூழ்கடித்துக் கொண்டான். இப்படியே விட்டால் சரி வராது என நினைத்த வெண்மதி, வரலட்சுமியை பள்ளிக்கு அவளே அழைத்துச் சென்றாள். உள்ளே செல்லவே ஒரே அழுகை… அம்மா இங்கேயே வெளியே உட்கார்ந்திருக்கேன் எனச் சொல்லி… உள்ளே கொண்டு போய் விட்டாள். வரலக்ஷ்மி அப்போதும் அழுகை தான். ஆனால் டீச்சருக்கு பயந்து அழுகையை நிறுத்தியவள், வெளியே ஜன்னல் வழியாக அம்மா இருக்கிறாளா என அடிக்கடி பார்த்தும் கொண்டாள். மகளுக்காக வெண்மதி பள்ளியிலேயே உட்கார்ந்திருந்தாள். மதிய உணவுக்கு வந்த இளமாறன் அவனே உணவை போட்டுக் கொண்டு உண்டான். மூன்று நாட்கள் சென்று வரலக்ஷ்மி அழாமல் பள்ளி செல்ல ஆரம்பித்தாள். ஏற்கனவே சுந்தரியிடம் பணத்தை இழந்திருக்கிறான். புது வீட்டிற்குக் கொடுக்கப் பணம் இருக்கிறதோ என்ற கவலையில் வெண்மதி தனி வீடு பார்ப்பது பற்றி எதுவும் கணவனிடம் கேட்கவில்லை. மாடி ஏறியதும் இருந்த சின்ன ஹாலை பூஜை அறையாக உபயோகித்தவள், இருந்த பெரிய அறையில் ஒரு பக்கம் படுக்கையறையாகவும் மறுபக்கம் சமையல் அறையாகவும் உபயோகித்தாள். அந்தச் சின்ன இடத்தையுமே நன்றாகத்தான் வைத்திருந்தாள். அவளே கீழே வாசலை கூட்டி கோலம் போட்டு விடுவாள். அதனால் வசந்தாவுக்கு அந்த வேலை மிச்சம்தான். இளமாறன் வீட்டுக்கு வாங்கும் போது கறி, மீன், தின்பண்டங்கள் என அம்மாவுக்கும் தான் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தான். அதைச் சமைப்பதற்குக் கூட வசந்தாவுக்குச் சோம்பேறியாக இருந்தது. மருமகளே செய்து கொடுத்து விட்டால் நன்றாக இருக்கும் என நினைத்து, “எனக்கு ஏன் இதெல்லாம் வாங்கிட்டு வர? எனக்கு இதெல்லாம் வைக்க எங்க தெம்பு இருக்கு.” என ஒருநாள் ஜாடையாகச் சொல்லி பார்த்தார். மாமியாரின் எண்ணம் வெண்மதிக்குப் புரியாமல் இல்லை. தான் இன்னும் முட்டாளாகவே இருப்போம் என இவர் எப்படி எதிர்ப்பார்க்கிறார் என நினைத்தவள், “வயசான காலத்தில் கறி, மீன் எல்லாம் ஜீரணம் ஆகாது. வேணா காய்கறி வாங்கிக் கொடுங்க.” என்றால் கணவனிடம். வசந்தாவுக்குக் காய்கறி தொண்டையில் இறங்காது. சைவம் செய்யும் அன்றைக்கு அப்பளம் சிப்ஸ் என எதாவது வைத்துக் கொண்டு தான் உண்ணுவார். அம்மாவை பற்றி இளமாறனுக்குத் தெரியாதா என்ன? மனைவி வேண்டுமென்றே சொல்வதும் புரிந்து தான் இருந்தது. “அம்மா, நீ நினைக்கிறது எல்லாம் நடக்காது. ஒழுங்கா ஆக்கி சாப்பிடுறதுன்னா சொல்லு, உனக்கும் சேர்த்து வாங்கி வரேன்.” எனச் சொல்லிவிட்டுச் சென்றான். அலுவலகம் செல்பவர்கள் எல்லாம் ஞாயிற்றுக்கிழமையில் தான் வண்டியை செர்விஸ் விடுவார்கள் என்று அன்று கடைக்கு விடுமுறை கொடுப்பது இல்லை. அன்று மட்டும் அல்ல… என்றுமே விடுமுறை இல்லை. கடைப்பையன்கள் வாரத்தில் ஆளுக்கு ஒரு நாள் விடுமுறை எடுத்துக் கொள்வார்கள். அது தவிர முக்கியமான பண்டிகை நாட்களில் மட்டும் கடையைத் திறப்பது இல்லை. முன்பெல்லாம் இளமாறனும் சேர்ந்து தான் கடையில் வேலைப் பார்ப்பான். கையில் ஓரளவு பணம் புழங்க, ஆட்களை வைத்துக் கொண்டு வேலை வாங்கினான். இப்போது சுந்தரியால் ஏற்பட்ட நட்டத்தைச் சீர்படுத்த அவனுமே சேர்ந்து வேலை பார்த்தான். ஒன்பது மணிக்கு வேலை ஆட்கள் கிளம்பி விட்டாலும், இவன் இரவு பத்து பத்தரை மணி வரை இருந்து வேலைப் பார்த்து விட்டு தான் வருவான். கணவனும் மனைவியும் தொழில், வீடு, பிள்ளைகள் என இடையில் ஏற்பட்ட சறுக்கலை சீராக்கிக் கொண்டு இருந்தாலும், அவர்களுக்குள் எதுவும் சரியாகவில்லை. தாமரை இலை தண்ணீர் போல ஒட்டியும், ஒட்டாத நிலைதான். அதைப் பேசி சரிபடுத்திக் கொள்ளவும் இருவருமே முயலவில்லை. ஞாயிறு மதியம் வெண்மதி பிள்ளைகளுக்கு மதிய உணவை ஊட்டிக் கொண்டு இருந்த போது இளமாறன் வீட்டுக்கு வந்தவன், மனைவி மகள்களுக்கு உணவை கொடுத்துவிட்டு வரட்டும் எனக் கட்டிலில் படுத்துக் கொண்டான். மகள்கள் இருவரும் பேசியபடி உண்டனர். “ரெண்டு பேரும் நல்லா படிச்சு வெளிநாட்டுக்கு வேலைக்குப் போகணும்.” என வெண்மதி சொல்ல… “ம்ம்… நான் லண்டன் போவேன்.” எனக் கஜலக்ஷ்மியும், “நானும் லண்டன் தான் போவேன்.” என வரலக்ஷ்மியும் சொல்ல… “ரெண்டு பேரும் ஒரே இடத்துக்கு வேண்டாம். வேற வேற நாட்டுக்கு போங்க. அப்பத்தான் நான் உங்க ரெண்டு பேர் கூடவும் வந்து மாத்தி மாத்தி இருப்பேன். உங்களைச் சாக்கு வச்சுதான் நான் வெளிநாடு எல்லாம் போக முடியும்.” என வெண்மதி சொல்ல… “அப்போ அப்பா…” என வரலக்ஷ்மி கேட்க, “ம்ம்… உங்க அப்பாவுக்கு எல்லாம் நான் தேவைப்பட மாட்டேன். அவர் என்னை அனுப்பிட்டு நல்லதா போச்சுன்னு இருப்பார்.” என வெண்மதி யோசிக்காமல் பேசி விட… இளமாறன் முகம் மாறிவிட்டது. “ஆமாம் அப்பா வேண்டாம். அங்கே போய் நாம மட்டும் ஜாலியா இருக்கலாம்.” எனக் கஜலக்ஷ்மியும் சொல்ல.. வரலக்ஷ்மியும் அதை ஆமோதித்தாள். என்ன டா இது வம்பு என நினைத்த வெண்மதி, அப்படியெல்லாம் பேசக் கூடாது என மகள்களுக்குச் சொல்ல… “நீ தான டி ஆரம்பிச்ச….. இன்னும் நல்லா அவங்க மனசுல அப்பா பொல்லாதவன்னு நல்லா பதிய வை.” “நீங்க எல்லாம் ஒன்னு சேர்ந்துட்டீங்க. நான் வேண்டாம் உங்களுக்கு.” “ஐயையோ… அப்படியெல்லாம் இல்லைங்க. நான் சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன்.” “வெளிநாடெல்லாம் போய்ச் சந்தோஷமா இருந்தா சரிதான். இப்ப எனக்குச் சோத்தை போடுறியா இல்லையா… எனக்கு நிறைய வேலை இருக்கு.” என இளமாறன் எழுந்து உட்கார… வெண்மதி அவனுக்கு உணவு பரிமாறினாள். உண்டுவிட்டு அவன் கடைக்குச் சென்றுவிட்டான். அவன் சென்று விட்டான். வெண்மதி தான் அதையே நினைத்துக் கொண்டிருந்தாள். உண்மையில் இளமாறன் அப்படித்தான் இருந்தான். நீ இருக்கியா இரு… போறியா போ என்பது போல ஒட்டாமல் தான் அவளுடன் முன்பு இருந்தான். அவளிடம் மனம் விட்டுப் பேசினால் தானே அவளுக்கு அவன் என்ன நினைக்கிறான் என்று தெரியும். இப்போது என்னவோ இவள்தான் விலகி நிற்பது போலப் பேசிவிட்டுச் செல்கிறான் எனக் கடுப்பாக இருந்தது. முதலில் ஆரம்பித்தது அவன் தானே… சுந்தரியுடன் இவனை யார் பழகச் சொன்னது. அவன் எதோ செய்ய… பதிலுக்கு இவள் அதிரடியாக நடந்துகொள்ள… பிள்ளைகள் தான் அதிகம் பாதிக்கப்பட்டனர். பிள்ளைகள் மனதில் தந்தையைப் பற்றித் தவறாக எதுவும் பதியாமல் பார்த்துகொள்ள வேண்டும் என நினைத்தாள். பெண் பிள்ளைகளுக்கு எப்படித் தாயின் அன்பும் அரவணைப்பும் முக்கியமோ… அதைப் போல் தந்தையின் கவனிப்பும், கண்டிப்பும் மிக முக்கியம். தந்தை மீது நல்ல எண்ணம் இல்லையென்றால் அவன் சொல்வதை எப்படிக் கேட்பார்கள். இனி மகள்களுக்கு முன்பு கணவனிடம் எந்தச் சண்டை சச்சரவும் வேண்டாம். அவர்கள் தங்களைக் கவனிக்கிறார்கள், அவர்களை நல்ல மனநிலையில் வளர்க்க வேண்டும் என முடிவெடுத்துக் கொண்டாள். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் எட்டு மணிக்கெல்லாம் கடையை அடைத்து விட்டு இளமாறன் வீட்டுக்கு வந்துவிட்டான். அவன் கை கால் முகம் கழுவிக்கொண்டு வர…. “கஜா உங்க அப்பாவுக்குத் துண்டை எடுத்துக் கொடு.” என்றவள், மகள்களைக் கணவனின் அருகே உட்கார வைத்து உணவு பரிமாறினாள். “அம்மா நீங்க ஊட்டி விடுங்க.” என வரலக்ஷ்மி சொல்ல… “எப்பவும் நானே தான் பண்ணனுமா… உங்க அப்பாவை ஊட்டி விடச் சொல்லு.” என்றவள், எழுந்து சென்று கட்டிலில் படுத்துக் கொண்டாள். இளமாறன் மனைவியை ஒருமாதிரி பார்த்தாலும் ஒன்றும் சொல்லாமல் இளைய மகளுக்கு ஊட்டி விட… வரலக்ஷ்மியும் உண்டாள். அவர்கள் மூவரும் உண்டதும், வெண்மதி தானும் உண்டாள். அவள் பாத்திரங்களைக் கழுவி வைக்க… அவளிடம் வந்த வரலக்ஷ்மி உறக்கம் வருகிறது எனச் சொல்ல… “உங்க அப்பாவோட தான தூங்கிட்டு இருந்த… இப்ப என்ன எல்லாத்துக்கும் என்னை உயரை எடுக்கிற?” போய் உங்க அப்பாகிட்ட படு போ…” என்றால் சற்று கடுமையாகவே… அதைக் கேட்டு வரலக்ஷ்மியின் முகம் அழுகைக்கு மாற…. இளமாறன் மகளைச் சமாதானம் செய்து, அவளுடன் கட்டிலில் படுத்து கதை பேச… கேட்டபடி மகள்கள் இருவரும் உறங்கி போயினர். இளமாறன் தரையில் பாய் விரித்துப் படுக்கத் தயாரானவன், “நம்ம கடை மாடியில இருக்க வீடு காலியாகுது. அந்த வீட்டையே மாணிக்கம் அண்ணன் லீசுக்கு எடுத்துக்கச் சொன்னார். வாடகை கொடுக்கிறதை விட லீசுக்கு இருக்கிறது பரவாயில்லை.” “எவ்வளவு கொடுக்கணும்?” என வெண்மதி கேட்க… “மூன்னு லட்சம்.” “அவ்வளவா? நாம வேணா இன்னும் கொஞ்ச நாள் இங்கயே இருக்கலாமே…” “வேண்டாம், தனியா இருக்கிறதுன்னு முடிவாகிடுச்சு… வேற வீட்டுக்கே போகலாம். இங்க அம்மா வாய் சும்மா இருக்காது. அவங்க எதாவது பேசுவாங்க, பதிலுக்கு நீ எதாவது பேசுவ… உங்க ரெண்டு பேர் கூட என்னால பஞ்சாயத்து கூட்ட முடியாது.” என்ற கணவனை வெண்மதி முறைக்க… “இப்ப எதுக்கு முறைக்கிற? நான் சொன்னது உண்மைதானே.” என்றான். “நான் இதுக்கு முன்னாடி உங்க அம்மாவை எதிர்த்து பேசி இருக்கேனா…. அவங்க அப்படி நடந்துகிட்டாங்க. அதுதான் பேசினேன்.” என்றாள். “நீ நேரடியா பேச மாட்ட… ஆனா நான் வீட்டுக்கு வந்தா… என்கிட்டே நை நைன்னு அவங்களைப் பத்தி குறை சொல்லிட்டே இருப்ப. அதே போலத்தான் அவங்களும், உன்னைப் பத்தி குறை சொல்லிட்டே இருப்பாங்க. இந்த அக்கப்போருக்கு தான் நான் வீட்ல இருக்கிறதையே குறைச்சேன்.” என்றான். “நீங்க இப்படி நினைப்பீங்கன்னு எனக்கு எப்படித் தெரியும். நான் நேரடியா அவன்கிட்ட பேசினா சண்டை வரும். நீங்க பேசினா பார்த்து பேசுவீங்கன்னு தான் உங்ககிட்ட சொன்னேன்.” என்றால் வெண்மதி உள்ளே சென்ற குரலில். இளமாறனும் அப்போதுதான் அப்படி ஒரு கோணம் இருக்கிறது என யோசித்துப் பார்த்தான். இவர்கள் மாமியார் மருமகள் நச்சரிப்பு தாங்காமல் தான், வீட்டில் இருப்பதை குறைத்துக் கொண்டிருந்தான். அதன் பொருட்டே நண்பர்களுடன் அதிகம் இருப்பதும். “சரி அதை விடு. மணிமேகலை வேற இங்க வந்து போய் இருப்பா… அவளும் சும்மா இருக்க மாட்டா…நாம தனியா போயிடுறதே நல்லது.” என்றான். மாணிக்கம் பணம் மெதுவாகத் தர சொல்லி இருக்க… அந்த வார வெள்ளிக்கிழமையே நாள் நன்றாக இருக்கிறது என அன்றைக்கே பால் காய்ச்சி விட்டு, அன்றே வீட்டையும் மாற்றினர். வெண்மதி அவள் வீட்டில் அவளுக்குக் கொடுத்த பாத்திர பண்டங்கள், கட்டில் பீரோ என அதை மட்டும்தான் எடுத்துக் கொண்டாள். இவர்கள் தனிக்குடித்தனம் செல்ல மாட்டார்கள் என நினைத்ததற்கு மாறாக, அவர்கள் கிளம்பவும், வசந்தா வெண்மதியை அவ்வளவு பேச்சு பேசினார். ஆனால் தனிக்குத்தனம் செல்வதில் இருந்து வெண்மதி பின்வாங்கவில்லை. பின்னே இவருக்கு ஆண் வாரிசு வேண்டும் என மகனை இன்னொரு திருமணம் முடிக்கச் சொன்னால்… மருமகள் பொறுத்து போவாளா என்ன…. வெண்மதி எதையும் கண்டுகொள்ளாமல், சாமான்களை மூட்டை கட்டும் வேலையைப் பார்த்தாள். “டேய், இப்படிப் பொண்டாட்டிக்காக வீட்டை விட்டுப் போறியே…நல்லா இருப்பியா நீ…” என வசந்தா மகனையும் பேசினார். “பக்கத்தில தான் இருக்கேன். அடிக்கடி வந்து பார்க்கிறேன்.” “செலவுக்குப் பணம்.” என வசந்தா இழுக்க… “சொந்த வீடு இருக்கு… உங்க ரெண்டு பேர் செலவுக்கு அப்பா பென்ஷன் பணம் போதும்.” என்றவன், “நாளைக்கு உங்களுக்கு முடியலைனா… நான்தான் ஹாஸ்பிடலுக்குச் செலவு செய்யணும். இப்போ இருக்கிறதை வச்சுச் செலவு பண்ணுங்க.” என்றான். இவர்கள் தனியாகச் செல்வது தெரிந்து மணிமேகலை வந்துவிட்டாள். ரஞ்சிதா இருப்பது தொலைவில், அதனால் எப்போதுமே அடிக்கடி வரமாட்டாள். அதுவும் இந்தப் பிரச்சனை வந்ததில் இருந்து அவள் கணவன் இங்கே அவளை அனுப்புவதும் இல்லை. மணிமேகலையின் கணவனும் சொல்லித்தான் வைத்திருந்தான். ஆனால் அவள் யாருக்கும் அடங்கும் ரகம் இல்லை. அவள் வந்து நின்ற தோரணையே, சண்டைக்குத் தான் வந்திருக்கிறாள் என்று நன்றாகத் தெரிந்தது. “அம்மா தனிக்குடித்தனம் போகச் சாக்கு வேண்டாமா…. எப்போன்னு உன் மருமக காத்திட்டு இருந்தா…. நீ கோபத்துல பேசினதும் அதையே பிடிச்சிகிட்டா… இவங்க நாடகம் எல்லாம் நமக்குத் தெரியாதா என்ன?” “அவ்வளவு ரோஷம் இருந்தா… தப்பு செஞ்ச புருஷனை இல்லை விட்டு போயிருக்கணும்.” என மணிமேகலை பேசிக்கொண்டே செல்ல… “இப்போ நீ என்ன சொல்ல வர…. நான் உங்க அண்ணனோட சேர்ந்து இருக்கக் கூடாதுன்னு சொல்றியா?” என வெண்மதி கேட்க, “அவ எதுவும் சொல்லிட்டு போறா… நீ உன் வேலையைப் பாரு.” என இளமாறன் சொல்ல… “என்னைப் பேச விடுங்க.” என்றவள், “உங்க அண்ணனுக்கும் எனக்கும் ஆயிரம் இருக்கும். என் புருஷன் அவரு… என் பிள்ளைகளுக்கு அப்பா…. நான் ஏன் அவரை விட்டு தரணும்?” “உங்க அண்ணன் பண்ணது எனக்குத்தான் பாதிப்பு. உங்களுக்கு எல்லாம் ஒன்னும் இல்லை.” “எங்க பிரச்சனையை நாங்க பார்த்துக்கிறோம். ஆனா உங்க அம்மா பேசுறது, நீ பேசுறது எல்லாம் நான் ஏன் பொறுத்துக்கணும்? எனக்கு எந்தத் தேவையும் இல்லை. நீங்க எல்லாம் யாரு எனக்கு. யாரும் இல்லை புரிஞ்சுதா….” என வெண்மதி பேசப் பேச… மணிமேகலையின் முகம் கருத்து சிறுத்துப் போனது. “இன்னொரு முறை நீ என் புருஷனைப் பத்தியோ இல்லை என்னைப் பத்தியோ பேசின… நான் உன் மாமானார் மாமியார்கிட்ட வந்து தான் பேசுவேன்.” என வெண்மதி எச்சரித்தாள். இந்த மணிமேகலை எல்லாம் தானாகத் திருந்தும் ஆள் இல்லை. “புருஷன் மட்டும் வேணும், மாமியார் நாத்தனார் எல்லாம் வேண்டாம்.” என வசந்த இப்போது இடக்காக சொல்லி காட்ட… “நீங்க எல்லாம் இருந்தும் எனக்கு என்ன பண்ணீங்க? அதை முதல்ல சொல்லுங்க. உங்க பொண்ணுக்கு இதே நடந்திருந்தா அப்பவும் இப்படியே தான், அவளுக்கு விருந்து வச்சிட்டு இருந்திருபீங்களா?” வெண்மதி நறுக்கென்று கேட்க… வசந்தா பதில் சொல்ல முடியாமல் நிற்க…. “உங்களோட இருந்து நான் பட்டது எல்லாம் போதும்.” என்றால் வெண்மதி. வெண்மதியிடம் ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை என்றதும், “நீ என்ன உன் பொண்டாட்டியை பேச விட்டு பார்த்திட்டு இருக்கியா? ஒன்னும் கேட்க மாட்டியா?” என மணிமேகலை அண்ணனைக் கேட்க… “இனிமே ஒரே வீட்ல இருந்தாலும் சண்டை தான் வந்திட்டே இருக்கும். அதுக்கு எட்ட இருந்தாலும், நான் அம்மா அப்பாவை பார்த்துப்பேன்.” “நீ என்னவோ உன் மாமனார் மாமியாரை வச்சு பார்க்கிற மாதிரி இங்க வந்து பேசுற…. நீ உன் வேலையை மட்டும் பாரு.” என்ற இளமாறன். “நீ இங்க நின்னு சண்டை தான் போட்டுட்டு இருக்க போறியா… கிளம்புற வழியைப் பாரு.” என மனைவியிடமும் சத்தம் போட்டான். சாமான்கள் ஏற்றி செல்ல இளமாறன் அவன் நண்பனின் வண்டியையே சொல்லி இருக்க… கடைப் பையன்கள் வந்து ஆளுக்கொன்றாக வண்டியில் ஏற்றி… அதே போலப் புது வீட்டில் அந்தந்த இடத்தில் சாமான்களை இறக்கியும் வைத்துவிட்டு சென்றனர். அதனால் வெண்பாவுக்கு வீட்டை ஒழுங்குபடுத்த நேரம் எடுக்கவில்லை. மகள்கள் மாலையில் பள்ளியில் இருந்து வருவதற்குள் வெண்மதி வீட்டை அடுக்கி முடித்திருந்தாள். வாடகை வீடாக இருந்தாலும், தன் வீடு என்ற எண்ணம் மகிழ்ச்சியைத் தந்தது. இனி சுதந்திரமாக இருக்கலாம் என வெண்மதி நினைத்துக் கொண்டாள். வசந்தா போல மாமியார்கள் இருந்தால் மருமகள்கள் அப்படித்தானே நினைப்பார்கள்.