மறந்து போ என் மனமே 7 6817 மறந்து போ என் மனமே அத்தியாயம் 7 இவன்தான் சார் இளமாறன் என்ற காவலர், அவர் வேலையைப் பார்க்க நகர்ந்து விட… “வர சொன்னீங்களா சார்.” என இளமாறன் கேட்க, அதற்குத் தலையைக் கூட அசைக்கவில்லை அந்த இன்ஸ்பெக்டர். “போய் அந்தப் பெஞ்ச்ல உட்காரு.” என்றார். இளமாறன் எதற்கு என்பது போலப் பார்க்க… “உன் போன்னைக் கொடு.” என அவனின் கைபேசியை வாங்கி, அதை அனைத்து தன்னிடமே வைத்துக் கொண்டு, “போய் உட்காருன்னு சொன்னேன்.” என அதிகாரமாகச் சொல்ல… இளமாறனும் சென்று அங்கிருந்த பெஞ்சில் உட்கார்ந்து கொண்டான். எதற்குத் தன்னை வர சொன்னார்கள்? என்ன காரணம் என்று தெரியாமலே மதியம் வரை உட்கார்ந்திருந்தான். அதற்கு மேல் பொறுமை இல்லாமல், “சார் எதுக்கு வர சொன்னீங்கன்னு சொன்னா நல்லா இருக்கும். கடையைப் போட்டுட்டு நான் எவ்வளவு நேரம் உட்கார்ந்திருக்கிறது?” எனக் கேட்டு விட…… அது இன்ஸ்பெக்டரின் ஈகோவை தூண்டி விட , “பெரிய கலக்டர் இவரு.” என இன்ஸ்பெக்டர் நக்கலாகக் கேட்க, “என்னை ஏன் வர சொன்னீங்க காரணத்தைச் சொல்லுங்க.” என்றான் இளமாறன் பொறுமை இழந்து. “ஏன் டா ஒரு பெண்ணைக் காதலிச்சு ஏமாத்திட்டு, பெரிய யோக்கியம் மாதிரி பேசுற.” என்றவர், காவலரிடம் அந்தப் பெண்ணுக்கு போன் போட்டு வர சொல்லுங்க.” என்றார். இது சுந்தரியின் வேலை என இளமாறனுக்குப் புரிந்து விட… “சார் நான் ஏமாத்த எல்லாம் இல்லை சார். எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆனது, ரெண்டு குழந்தைகள் இருக்கு எல்லாமே அந்தப் பெண்ணுக்கு தெரியும் சார். ப்ரண்டா தான் சார் பேசிட்டு இருந்தோம். மத்தபடி எதுவும் இல்லை சார்.” என்றான் இளமாறன். “அந்தப் பொண்ணு வரட்டும் உட்காரு.” என இன்ஸ்பெக்டர் சொல்ல… இளமாறன் வேறு வழியில்லாமல் உட்கார்ந்து இருந்தான். வெண்மதி ரவியை அழைத்துக் கேட்க, அவன் நேரிலேயே வந்துவிட்டான். “அண்ணி, அண்ணனை ஒரு போலீஸ்காரர் வந்து கூடிட்டுப் போனாராம். அப்புறம் ஒரு தகவலும் இல்லையாம். இப்பத்தான் அந்தக் கடை பையன்கிட்ட கேட்டுட்டு வரேன். இளமாறன் அண்ணன் ப்ரண்ட்ஸ் எல்லாம் போலீஸ் ஸ்டேஷன் போயிருக்காங்க.” எனச் சொல்ல… போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்றிருக்கிறார்கள் என்றதும் வெண்மதி மிகவும் பயந்து விட்டாள். ரவி சொன்னதை வசந்தா, மணிமேகலை இருவருமே கேட்டிருந்தனர். “நீ தான டி போலீஸ்ல புகார் கொடுப்பேன் சொன்ன.. ஒருவேளை உன் வேலையா இது?” என வசந்தா கேட்க, இல்லை என்ற வெண்மதிக்கும் ஒரே கலக்கம். போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு என்று அழைத்துச் சென்ற சிலருக்கு, என்ன நடந்தது என்பதை நாடே அறியும். “ஐயையோ… யாரு பார்த்த வேலைன்னு தெரியலையே… என் பையனை போலீஸ் அடிச்சே கொன்னுடுவாங்களே…” என வசந்தா வேறு ஒப்பாரி வைக்க… வெண்மதி பயந்து போனாள். வெண்மதி தன்னை ஒட்டிக் கொண்டு நின்ற வரலக்ஷ்மியை மட்டும் தூக்கிக் கொண்டு, கஜாவை ஜோதி வீட்டில் இருக்கச் சொல்லிவிட்டு, உடனே போலீஸ் ஸ்டேஷன் கிளம்ப, “நீங்க எல்லாம் அங்க வர வேண்டாம் அண்ணி.” என்ற ரவியின் பேச்சை காதில் வாங்காது வெண்மதி நடந்து கொண்டே இருந்தாள். சுந்தரி உள்ளே வந்த போது இன்ஸ்பெக்டர் வேறு ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார். காவலர் அவளை ஓரமாக நிற்க சொல்ல… இளமாறனின் அருகே சென்றவள், “என்னை விட மாட்டேன்னு சொல்லு. நான் கொடுத்த கம்ப்ளைண்ட் வாபஸ் வாங்கிக்கிறேன்.” எனச் சுந்தரி அவனுக்கு மட்டும் கேட்கும்படி சொல்ல… “நீ நினைக்கிறது நடக்கவே நடக்காது. எனக்கு என்ன உன்னைப் பத்தி எதுவும் தெரியாதுன்னு நினைச்சியா? என் பணத்தை வாங்கிட்டு பேசாம போயிடனும்னு நினைச்சேன். ஆனா நீ இவ்வளவு தூரம் வந்த பிறகு உன்னைச் சும்மா விட மாட்டேன்.” என இளமாறன் சொல்ல… அவர்கள் இருவரும் பேசுவதைக் கவனித்த இன்ஸ்பெக்டர், என்ன என்று கேட்க, “சார் என்னை மிரட்டுறார் சார்.” என்றதும், காரணத்திற்காகக் காத்திருந்த இன்ஸ்பெக்டர் எழுந்து வந்து இளமாறனின் கன்னத்தில் அறைந்தார். “சார் என் மேல கை வைக்கிற வேலை வச்சுக்காதீங்க.” என இளமாறன் கோபப்பட, “நீ பொண்ணுங்களை ஏமாத்துவ, பார்த்திட்டு சும்மா இருக்கனுமா?” எனக் கேட்டு மேலும் இரண்டு அடிகள் விழுந்தது. அதில் இளமாறனின் உதடு கிழுந்து ரத்தம் வழிந்தது. “இந்தப் பொண்ணுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு சார்.” என்றான் உதட்டை துடைத்தபடி. அப்போது வெண்மதி உள்ளே வந்தவள் பார்த்து விட்டு அதிர்ந்து போனாள். “சார் அவரை அடிக்காதீங்க.” என “நீ ஏன் இங்க வந்த? நான் பார்த்துக்கிறேன். நீ போ.” என இளமாறன் சொல்ல… “நீ யாரு மா?” என இன்ஸ்பெக்டர் கேட்க, “அவர் என் புருஷன் சார்.” என்றால் வெண்மதி. “உன் புருஷன் பண்ண வேலை தெரியுமா?” எனக் கேட்டவர், “இந்தப் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி உன் புருஷன் ஏமாத்திட்டான்.” எனச் சொல்ல… “என்னது ஏமாத்தினாரா?” என அதிர்ந்த வெண்மதி, “சார், இந்தப் பொண்ணுக்கு இவருக்குக் கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தை இருக்கு எல்லாமே தெரியும் சார். போன வாரம் என் நாத்தனார் வீட்டு பால் காய்ச்ச கூட வந்திருந்தா…” என வெண்மதி சுந்தரியின் பக்கம் திருப்பி விட… “ஆமாம் சார்…” என்றான் இளமாறன். “என்ன மா நீ என்னவோ சொன்ன? இவங்க வேற சொல்றாங்க. உனக்கு இவனுக்குக் கல்யாணம் ஆனது தெரியாமையா பழகின.” எனக் கேட்க, “கல்யாணம் ஆகிடுச்சுன்னு தெரியும். ஆனா என்னோட பழகினது தப்பு தானே சார்.” எனச் சுந்தரி கேட்க, “அப்போ ஏற்கனவே கல்யாணம் ஆனவருன்னு தெரிஞ்சும், இவ பழகினது மட்டும் தப்பு இல்லையா சார். இவர் மட்டும் தப்பு செஞ்ச மாதிரி எதுக்குப் புகார் கொடுக்கணும்.” “சார் தப்பான பழக்கம் எல்லாம் எதுவும் இல்லை சார்.” என்றான் இளமாறனும். “ஆமாம் அப்போ எதுக்கு இந்தப் புகார்?” என இன்ஸ்பெக்டர் கேட்க, “இவ என் புருஷனுக்குப் பணம் கொடுக்கணும். அதைக் கொடுக்காம இருக்க இப்படிப் பண்றா….” என வெண்மதி சொல்லும் போதே, இளமாறனின் நண்பர்கள் மாணிக்கத்தை அழைத்து வந்திருந்தனர். அப்போது தகவல் தெரிந்து மணிமேகலையின் கணவனும் வந்துவிட்டான். மாணிக்கம் வந்து சுந்தரியை பற்றிச் சொன்னவர், மேல் அதிகாரியை தொடர்பு கொண்டும் பேச… “நீயே சரியில்லாம இருந்திட்டு, இங்க வந்து தைரியமா புகார் கொடுத்திருக்க.” எனச் சுந்தரியை பார்த்து சொன்ன இன்ஸ்பெக்டர், இளமாறனை இனி ஒழுங்காக இருக்க வேண்டும் என்று சொல்லி எச்சரித்து அனுப்பினர். சுந்தரியிடம் இன்ஸ்பெக்டர், “தேவை இல்லாம ஒரு புகாரை கொடுத்து எங்க எல்லார் நேரத்தையும் வீணாக்கி இருக்க… அவன்கிட்ட வாங்கின பணத்தை எப்ப கொடுப்ப?” எனக் கேட்க, “ஒரு மாசத்தில கொடுக்கிறேன் சார்.” எனச் சுந்தரி சொல்ல… அவளிடம் ஒரு தொகையை வாங்கிக்கொண்டே இன்ஸ்பெக்டர் அனுப்பினார். பொய்யாகப் புகார் கொடுக்க வந்து, இவள் தான் வீணாக அவமானப்பட்டு, நட்டப்பட்டுச் சென்றாள். இவர்கள் வீட்டுக்கு வந்த போது இருள் சூழ்ந்து விட்டது. மாணிக்கமும் இளமாறனின் நண்பர்களும் அங்கிருந்தே சென்றிருந்தனர். வீட்டிற்கு வந்ததும் இளமாறன் யாரிடமும் நின்று பேசாமல் மாடிக்கு சென்று விட… மணிமேகலையின் கணவன் நடந்ததைச் சொல்ல… “அவளா புகார் கொடுத்தா? நல்லா இருப்பாளா அவ.” என வசந்தா சுந்தரிக்குச் சாபம் விட… “நீங்க உங்க பையனை ஆரம்பத்திலேயே கண்டிச்சிருந்தா இதெல்லாம் நடந்திருக்குமா… நீங்களும் தானே அவளுக்கு ராஜ உபச்சாரம் செஞ்சீங்க. அதுதான் ரொம்ப நம்பிக்கையா இருந்திருப்பா…. இப்போ இவர் விலகினதும் அவளுக்குத் தாங்க முடியலை.” “நீங்களும் தான் காரணம். இப்போ மட்டும் நல்லவங்க மாதிரி பேசாதீங்க.” என வெண்மதி மாமியாரை நன்றாகக் கேட்டு விட்டே சென்றாள். இளமாறன் கட்டிலில் படுத்திருந்தான். முகம் இறுகிப் போய் இருந்தான். பாதி நாள் காரணம் தெரியாமலே போலீஸ் ஸ்டேஷனில் உட்கார்ந்திருந்தது. அதன் பிறகு நடந்தவை எல்லாம் மனதில் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தி இருக்க… அதோடு பெரிய அவமானமும் தானே… இதே சுந்தரி சரி இல்லாத பெண்ணாக இருந்ததால் இவனை விட்டனர். இல்லையென்றால் என்ன நடந்திருக்கும் என்பதை யோசிக்கவே அச்சமாக இருந்தது. கணவனைப் பார்த்த வெண்மதி, தனது முந்தானையை நனைத்துக் கொண்டு வந்தவள், இளமாறனின் இதழ் ஓரத்தில் உறைந்திருந்த ரத்தத்தைத் துடைத்து எடுக்க… இளமாறன் கண் திறந்தான். “எதோ நாம படனும்னு இருக்கு. அதையே நினைச்சிட்டு இருக்காதீங்க. போய்க் குளிச்சிட்டு வாங்க சாப்பிடலாம். மதியமும் சாப்பிடலை.” என்றதும், எதுவும் பேசாமல் எழுந்து குளிக்கச் சென்றான். அவன் குளித்துவிட்டு வருவதற்குள், மதிய உணவை சூடு செய்து மகள்கள் இருவருக்கும் கொடுத்து முடித்திருந்தாள். இளமாறன் உண்ண உட்கார்ந்ததும், அவனுக்கு ஒரு தட்டில் பரிமாறி விட்டு வெண்மதியும் உண்டாள். இளமாறன் எதோ சிந்தனையிலேயே இருந்தான். தட்டில் என்ன இருக்கிறது என்றாவது அவனுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. இன்று நடந்ததைப் பற்றி அவனால் தன்னிடம் எதுவும் வெளிப்படையாகப் பேச முடியாது என வெண்மதிக்கு தெரியும். அதனால் அவளும் அமைதியாக உண்டாள். உண்டு முடித்ததும் கட்டிலில் இருந்த மகள்களைப் பார்த்துத் தன்னிடம் வர சொல்லி அவன் கை நீட்ட… இருவருமே தயங்கினர். “அப்பா கூப்பிடுறார் இல்ல வாங்க.” என வெண்மதி சொல்ல… வெகு நேரம் தயகத்திற்குப் பிறகே கஜலக்ஷ்மி எழுந்து தந்தையிடம் வர… வரலக்ஷ்மி அப்போதும் வரவில்லை. வந்த மகளைத் தோளோடு அணைத்தவன், “நாளையில இருந்து ஸ்கூல் போகணும். சரியா…” என்றதும், கஜலக்ஷ்மி சரியெனத் தலையாட்ட… அவனே எழுந்து இளைய மகளிடம் சென்றான். அவளை அவன் வம்படியாகத் தூக்க… வரலக்ஷ்மி ஒரே அழுகை. எப்போதும் அவன் நெஞ்சில் தான் இளையது தூங்கும், இப்போது அவனிடம் வருவது கூட இல்லை. முத்தமிட்டு மகளைக் கட்டிலில் விட்டவன், வெளி மெத்தில் சென்று நின்று கொண்டான். மறுநாள் கஜலக்ஷ்மி பள்ளிக்கு செல்ல எல்லாம் எடுத்து வைத்து விட்டு, வெண்மதி மகள்களை உறங்க வைக்க… அதன் பிறகும் இளமாறன் உள்ளே வரவில்லை. “வாங்க வந்து படுங்க.” என வெண்மதி அழைத்த பிறகே உள்ளே வந்தான். வந்தவன் தரையில் இருந்த பாயில் படுத்துக் கண் மூடிக் கொண்டான். திருமணத்திற்கு முன்பு இளமாறன் தான் அதிகம் பேசுவான். திருமணதிற்குப் பிறகு வெண்மதி தான் பேசுவாள். அதை அவன் காது கொடுத்து கேட்பானா இல்லையா என்று கூடத் தெரியாது. இருவருக்குமான பேச்சு வார்த்தை குறைவு தான். இப்போதும் வெளிப்படையாகப் பேச முடியவில்லை. இளமாறனை இப்படிப் பார்க்கவே வெண்மதிக்குக் கஷ்ட்டமாக இருந்தது. சரியோ தவறோ இளமாறன் கெத்தாகத்தான் இருப்பான். பெரிய பணக்காரன் இல்லையென்றாலும், எனக்கு ராஜாவா நான் வாழுறேன் என்பது போலத்தான் இருப்பான். தேவையில்லாமல் மனதை அலைபாய விட்டது பெரிய சறுக்கலில் கொண்டு போய்விட்டது. அவன் அழுத்தமாக இருப்பது வெண்மதிக்குக் கலக்கத்தைத் தந்தது. காவல் நிலையம் சென்று அடி வாங்கி வந்ததை அவமானமாகக் கருதி தவறான முடிவுக்கு எதுவும் சென்று விடுவானோ என அது வேறு அச்சமாக இருந்தது. தவறு செய்தவன் அவன், நன்றாக வாங்கட்டும் என்று அவளால் நினைக்க முடியவில்லை. விளக்கணைத்த பிறகும் அவள் உட்கார்ந்தே இருக்க… “படு வெண்மதி. நான் எதுவும் பண்ணிக்க மாட்டேன்.” என்றான் இளமாறன். தான் எதை நினைத்துப் பயப்படுகிறோம் என அவனுக்குத் தெரிந்து தான் இருக்கிறது என்று நினைத்தவள், “பணம் போனா போகட்டும். இனிமே அந்தப் பெண்ணோட எந்தப் பிரச்சனையும் வேண்டாம்.” என வெண்மதி சொல்ல.. இளமாறன் பதில் எதுவும் சொல்லவில்லை. வெண்மதி அவன் அருகிலேயே சற்று இடம் விட்டு படுத்துக் கொண்டாள். இத்தனை நாட்கள் மகள்களோடு படுத்தவள், இன்று கணவனைத் தனியாக விடு கூடாது என்ற எண்ணத்தில் அவனுடன் இருந்தாள். நம்மை எவ்வளவு துன்பப் படுத்தினான், பதிலுக்கு அவனும் நன்றாக அனுபவிக்கட்டும் என்று அவளால் விட முடியவில்லை. தனக்குத் துரோகம் இழைத்த கணவன் என்றாலும், அவன் துன்பப்படுவதைப் பார்க்க முடியவில்லை. இளமாறனை போகட்டும் என இப்படியே விட்டு விடுவதா… அவனை நிம்மதியாக இருக்க விடக் கூடாது. அவன் கொடுத்த பணத்தையும் திரும்பக் கொடுக்கக் கூடாது என்ற எண்ணத்தில் தான் சுந்தரி போலீசில் புகார் கொடுக்கும் அளவுக்குச் சென்றது. ஆனால் அங்கே அவளைப் பற்றியும் தெரிந்தவர்கள் இருப்பார்கள், குற்றம் சுமத்திய தன் பக்கமே குற்றம் திரும்பும் என அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. அவசரத்தில் முடிவெடுத்து அவளே சிக்கலில் மாட்டிக் கொண்டாள். காவல் நிலையம் வரை சென்ற பிறகு, இனிமேல் இளமாறன் அவளிடம் திரும்ப வருவான் என்ற நம்பிக்கை சுத்தமாக இல்லை. அவள் வீட்டு ஓனரிடம், தான் அவசரமாக வீட்டை காலி செய்ய இருப்பதால்… அட்வான்ஸ் பணம் உடனே வேண்டும் எனக் கேட்க, அவரும் இவள் நடத்தை சரி இல்லாததால் உடனே கொடுப்பதாகச் சொல்ல… மறுநாள் நள்ளிரவில் வீட்டை காலி செய்து கொண்டு இளமாறனின் பணத்தைக் கொடுக்காமலே ஓடிவிட்டாள். ஒரு லட்சம் என்பது சாதாரணத் தொகையும் அல்ல…. அவனும் இப்போதுதான் முன்னேறிக் கொண்டிருக்கிறான். கஜலக்ஷ்மி மட்டும் பள்ளிக்கு சென்று வந்தாள். கணவனின் முகம் எப்போதுமே வாட்டத்தைக் காட்ட…ரவியை அழைத்து வெண்மதி விசாரிக்க… “அந்தப் பொம்பளை சொல்லாம கொல்லாம ஓடிடுச்சு கா… அண்ணனுக்கு வேற பணம் தரனும் போல….” என அவன் சொல்ல… “நிறையப் பணம் போயிடுச்சா?” “ஒரு லட்சம் வாங்கினதா பேச்சு…. வட்டிக்கு தான் கேட்டு வாங்கி இருக்கும் போல…” என்றான். பணம் போனாலும் பரவாயில்லை… போய்த் தொலைந்தாளே அதே போதும் என்றிருந்தது வெண்மதிக்கு.