மறந்து போ என் மனமே 6 1 6554 அத்தியாயம் 6 மறுநாள் விடிந்ததில் இருந்தே போராட்டம் தான். மகள்கள் இருவரும் முன்தினம் போல அம்மா எங்கேயும் சொல்லாமல் சென்று விடுவாளோ என்ற அச்சத்தில், பள்ளிக்கு செல்ல மாட்டோம் எனப் பிடிவாதம் பிடித்தனர். அது கூடப் பரவாயில்லை… இருவரும் ஒரே அழுகை. வெண்மதியை ஓய்வறைக்குச் செல்ல கூட அவர்கள் விடவில்லை. அவள் பாத்ரூம் சென்றாலும், வாசலிலேயே காவல் இருக்க… அதிலும் வரலக்ஷ்மி, வெண்மதி அப்படி இப்படி நகர்ந்தாலே… கத்தி கத்தி அழுதாள். அவர்கள் எந்த அளவுக்குப் பயந்து போயிருந்தால்… இந்த அளவுக்கு நடந்துகொள்வார்கள் எனக் கணவன் மனைவி இருவருக்குமே புரிந்தது. வெண்மதி எதாவது தவறான முடிவு எடுத்திருந்தால்… தன் பிள்ளைகள் இப்படித்தானே கதறி துடித்திருப்பார்கள். அவர்களைத் தான் எப்படிச் சமாளித்திருப்போம் என்பதை நினைக்கும் போதே இளமாறனுக்கு நடுக்கமாக இருந்தது. எதோ ஒரு கோபத்தில் அப்படிச் செய்துவிட்டு, இப்போது வெண்மதியுமே மகள்கள் படும் பாட்டில் மனம் சங்கடம் கொண்டாள். வீட்டில் சில நாட்களாக நடந்த சண்டை, அம்மா கோபித்துக் கொண்டு வீட்டை விட்டுச் சென்றது, அதெல்லாம் அவர்களை மனதளவில் மிகவும் பாதித்திருந்தது. இளமாறன் அழைத்தாலும் அவனிடம் செல்ல மறுத்தனர். அவர்களுக்கு என்ன சண்டை என்றெல்லாம் புரியவில்லை. இருந்தாலும், அம்மாவின் கண்ணீருக்கு அப்பாவும் இந்த வீட்டில் இருப்பவர்களும்தான் காரணம் என்பது வரை புரிய…. அதனால் அம்மாவை தவிர வேறு யாரிடமும் செல்ல மறுத்தனர். “இவங்களை வச்சிட்டு எப்படிச் சமைப்ப? நான் வெளிய வாங்கி வரவா…” என இளமாறன் கேட்க, “வேண்டாம் தினமும் வெளிய சாப்பிட்டா உடம்பு என்னத்துக்கு ஆகும். அதோட பணமும் எவ்வளவு செலவு பண்ணுவீங்க. நானே சமைக்கிறேன். ஆனா…” என்று அவள் இழுக்க… என்ன என்பது போல இளமாறன் பார்த்தான். “நான் உங்க அம்மாவுக்கு எல்லாம் சேர்த்து சமைக்க மாட்டேன்.” என்றாள். “ஒரே வீட்ல இருந்திட்டு எப்படிச் சேர்ந்து சமைக்க மாட்டேன்னு சொல்லுவ? இருக்கிறவரை சமையல் மட்டும் பண்ணிக் கொடு.” “எனக்குத் தெரியும், நீங்க நேத்து எல்லாத்துக்கும் மண்டையை மண்டையை ஆட்டின அப்பவே… இப்படியே வீடு பார்க்க நாளை கடத்தி, என்னை இங்கேயே இருக்க வச்சிடுவீங்கன்னு.” என வெண்மதி குரலை உயர்த்த… பிள்ளைகள் இருவரும் அச்சத்தோடு பார்க்க… அதைக் கவனித்த இளமாறன், “இப்ப என்ன பண்ணாலாம் நீயே சொல்லு. உடனே வீடு மாத்திட்டுப் போகப் பணம் ஏற்பாடு செய்யணும். வீடு முதல்ல கிடைக்கணும்.” என்றதும், “நீங்க வீடு பார்க்கிற வரை. மாடியில நாம இருந்துக்கலாம். நான் அங்கேயே நமக்குத் தனியா சமைக்கிறேன்.” என்றாள். சரி உன் இஷ்டம் எனச் சொல்லிவிட்டு இளமாறன் கடைக்குச் சென்றுவிட்டான். மாடியில் ஏறியதும் சின்ன ஹாலும், அடுத்து பெரிய அறையும், அதை ஒட்டி வெளியே வராண்டாவில் குளியலறை இருக்கும். வெண்மதி மாமியாரின் பொருட்கள் எதையும் எடுக்கவில்லை. ஜோதி வந்து உதவ… வெண்மதி அவள் வீட்டில் இருந்து கொண்டு வந்த சீர் வரிசை பாத்திரங்களை வைத்து மாடியில் சின்னச் சமையல் அறை தயார் செய்தவள், இண்டக்ஷன் ஸ்டவ் வைத்து மதிய சமையலும் முடித்து விட்டாள். மகள்கள் இருவரும் அம்மா செல்லும் இடமெல்லாம் சென்று கொண்டிருந்தனர். இளமாறன் கடையில் இருக்கும் நேரம் பார்த்து சுந்தரி அழைத்தாள். “என்ன நேத்து உங்க பொண்டாட்டியை காணோமாம். அவ சும்மா நடிக்கிறா நம்பாதீங்க. உங்களை மிரட்ட அப்படிச் செய்திருக்கா…” என அவள் பேசிக்கொண்டே செல்ல… “அதை நான் பார்த்துக்கிறேன். என் பணம் எங்க? அதை முதல்ல கொடு.” என்றான். “வீட்டுக்கு வாங்க தரேன்.” “இந்தக் கதையே வேண்டாம். கடையில கொண்டு வந்து நீயே கொடுத்திட்டு போ.” என்றதும், ரெண்டு நாள்ல கொடுக்கிறேன் எனச் சொல்லி போன்னை வைத்தாள். வெண்மதி காணாமல் போனது இவளுக்கு எப்படித் தெரியும், இதுவும் மணிமேகலையின் வேலையாகத்தான் இருக்கும் என நினைத்துக் கொண்டான். வசந்தா கடும் கோபத்தில் இருந்தார். சும்மா சொல்கிறார்கள் தனிக்குடித்தனம் எல்லாம் போக மாட்டார்கள் என அலட்சியமாக இருந்தார். ஆனால் தனக்கு ஒரு வேளை உணவு கூட மருமகள் செய்ய முடியாது எனத் தனியாகச் சமைத்ததும், அப்படி ஒரு ஆத்திரம் அவருக்கு. இரவு வீட்டிற்கு வந்த மகனிடம், “உங்களுக்கு மட்டும் சமைக்க எதுக்கு நீங்க எங்க வீடல் இருக்கணும்? இது என் புருஷன் கட்டின வீடு, இதுல உன் பொண்டாட்டி இருக்கக் கூடாது.” என்றார் எடுத்தெறிந்து. “வீடு பார்த்திட்டு தான் மா இருக்கேன். ஒரு ஒருவாரம் டைம் கொடு.” என்றான் இளமாறன். “நீ போகாத டா… இவளுக்கு வேற வேலை இல்லை.” என்றார் இளமாறனின் தந்தை. அவரை வசந்தா பேசவே விடமாட்டார். அதனால் அவரும் எதிலும் தலையிட மாட்டார். வெண்மதி தான் சமைப்பது. ஆனால் அவள் மாமனாருக்கு அவள் பரிமாறக் கூடாது. அவள் மாமியார் தான் பரிமாறுவார். காபி டீ கூட வெண்மதி போட்டு எடுத்து சென்று வசந்தாவிடம் தான் கொடுப்பாள். அவர் தான் கணவருக்குக் கொடுப்பார். வெண்மதியும் அதனால் மாமனாரிடம் எந்தப் பேச்சு வார்த்தையும் வைத்துக்கொள்ள மாட்டாள். “என்னை என்னப்பா பண்ண சொல்றீங்க? தனிக்குடித்தனம் போற வரை சமைச்சு கொடுன்னு சொன்னா, அவ கேட்க மாட்டேங்கிறா…. அம்மா உடனே போன்னு நிற்கிறாங்க. நான் யாருக்கு பார்க்கிறது.” “அம்மா, இப்ப தான அவ பார்க்கலை… இதுக்கு முன்னாடி பார்க்கத்தானே செஞ்சா… உன் அவசரத்துக்கு எல்லாம் போக முடியாது. வீடு கிடைக்கட்டும் போறேன்.” “அதோடு ஒன்னு நினைவு வச்சுக்கோ… உனக்கு நாளைக்கு முடியலைனாலும், நான்தான் பார்க்கணும். உன் பொண்ணுங்க பார்க்க மாட்டாளுங்க. அதனால சும்மா ஆடாத சரியா…” என்றவன் மாடிக்கு சென்று விட்டான். வெண்மதிக்கு எல்லாம் காதில் விழவே செய்தது. தப்பு செய்த இவர்களே திமிராக இருக்கும்போது, தனக்கு என்ன என அவளும் விறைப்பாகவே இருந்தாள். மறுநாளும் பிள்ளைகள் பள்ளிக்கு செல்லவில்லை. வெண்மதி குளித்து விட்டு வரலாம் எனக் குளியல் அறைக்குச் சென்றிருக்க… அதற்குள் வரலக்ஷ்மி அழுது அழுது தேம்பவே ஆரம்பித்திருந்தாள். கஜலக்ஷ்மியும் அவள் அருகில் உட்கார்ந்திருந்தாள். இளமாறன் மகள்கள் எப்படி இருக்கிறார்கள் எனப் பார்க்க வீட்டுக்கு வந்தவன், கண்ட காட்சி இதுதான். மகளுக்கு எதாவது ஆகிவிடப்போகிறது என்ற அச்சத்தில், வெண்மதி உடலை துவட்டாமல்…. ஈர உடலில் அப்படியே நைட்டி அணிந்து வந்திருந்தாள். மகள் அப்படி அழுததும் அவளுக்கும் வருத்தமாக இருக்க, “எனக்கு இனி எப்போதும் நிம்மதியே இல்லை போல…. ஒன்னு மாத்தி ஒன்னு எதாவது வந்திட்டே இருக்கு.” என அவள் வேறு அழுதாள். “ரெண்டு நாள்ல சரியாகிடும் அழாதே.” என இளமாறன் சமாதானம் செய்தான். அந்த ஏரியாவின் முக்கியப் புள்ளியின் கடையில் தான் இளமாறன் வாடகைக்கு இருக்கிறான். அவர் அவனைப் பார்க்க வேண்டும் என அழைத்திருந்தார். அதனால் மறுநாள் அதிகாலையே இளமாறன் அவர் வீட்டிற்குச் சென்றிருந்தான். அவன் வந்தது தெரிந்ததும் வீட்டிற்கு வெளியே இருந்த தோட்டத்தில் வந்து உட்கார்ந்த மாணிக்கம், அவனையும் உட்கார சொல்லி எதிர் இருக்கையைக் காட்ட… இளமாறன் உட்கார்ந்து கொண்டான். இருவருக்கும் காபி வந்தது. குடித்து முடிக்கும் வரை மாணிக்கம் எதுவும் பேசவில்லை. “நல்லா வளர்ந்திட்டு இருந்த இளமாறன். ஒரு கடை ரெண்டு கடை ஆச்சு… பணம் வட்டிக்கு கொடுத்து சரியா வசூல் பண்ணிட்டு இருந்த. இப்ப என்ன ஆச்சு?” உன்னைப் பத்தி கேள்விப்படுறது நல்லதா இல்லையே…” மாணிக்கம் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் இளமாறன் மௌனம் காக்க…. “பெண்ணாசையில் எங்காவது போய்ச் சிக்கிக்காத…. உன் குடும்பம் சிதைஞ்சு போயிடும். அப்புறம் வருத்தப்பட்டு எந்தப் பயனும் இல்லை.”