மறந்து போ என் மனமே 5 6847 அத்தியாயம் 5 வசந்தாவும் பயந்து போய்த் தன் மகள்களுக்கு அழைத்துச் சொல்ல.. ரஞ்சிதாவின் குடும்பம் இன்னும் மணிமேகலையின் வீட்டில் தான் இருந்தது. அதனால் அக்காவும் தங்கையும் கிளம்ப…. அவர்கள் அவசரமாகக் கிளம்புவதைப் பார்த்த அவர்கள் கணவர்மார்கள் சந்தேகப்பட்டுக் கேட்க, “வெண்மதியை காலையில இருந்து காணோமாம்.” என்றவுடன், “அடிப்பாவீங்களா… நேத்து நீங்க எல்லாம் சேர்ந்து செஞ்ச வேலைதான். அந்தப் பொண்ணு எங்கையோ போயோடுச்சு.” என்றவர்கள், அவர்களும் உடன் வந்தனர். வசந்தா மகள்களைப் பார்த்ததும் குமுறினார். “நேத்தே சொன்னா… லெட்டர் எழுதி வச்சிட்டு, உங்க எல்லோரையும் போலீஸ்ல மாட்டி விட்டுட்டுதான் சாவேன்னு… அதே போலச் செஞ்சிட்டாளோ….” “அம்மா, உன் வாயை வச்சிட்டு சும்மா இருக்க மாட்டியா? உன்னை யாரு அண்ணனை இன்னொரு கல்யாணம் பண்ணு… பையனை பெத்துக்கொடுன்னு எல்லாம் சொல்லச் சொன்னது. இப்ப பாரு எங்க வந்து நிருக்குது.” என ரஞ்சிதா கத்த…. “ஓ இது வேற நடந்துச்சா…” என்ற ரஞ்சிதாவின் கணவன், “நாம தான் சகலை விவரம் போதாம இருந்திருக்கோம்… இனி நாமும் எவளையாவது வச்சுக்கலாம்.” என்று சொல்ல… “ஆமாம் அதுதான் பண்ணனும்.” என்றான் மணிமேகலையின் கணவனும் மாமியாரை பார்த்துக் கொண்டே. அதைக் கேட்டு வசந்தாவின் முகம் கருத்துப் போனது. இளமாறன் வீட்டிற்கு வந்தவன், தங்கைகளைப் பார்த்து, “உங்களால என்ன செய்ய முடியுமோ செஞ்சிட்டீங்க. இப்போ சந்தோஷமா.” என்றான் ஆத்திரமாக. “எங்களை ஏன் சொல்ற? எல்லாம் உன்னால…” என மணிமேகலை அவன் பக்கமே திருப்ப… “நான் என் பொண்டாட்டிகிட்ட விவரமா சொல்லி சமாதானம் செஞ்சு வச்சிருந்தேன். அதுக்குள்ள அம்மா வந்து அப்படிப் பேச…. அவ அப்பவே ஒருமாதிரி இருந்தா… நான்தான் அலட்சியமா இருந்திட்டேன்.” “இப்ப என் பிள்ளைங்க வந்து கேட்டா என்ன செய்வேன்?” என அவன் புலம்ப… “மாப்பிள்ளை போலீஸ்ல சொல்வோமா…” என மணிமேகலையின் கணவன் கேட்க, “வீட்ல நடந்தது எல்லாம் சொல்லணும். நம்மைதான் சந்தேகப்படுவாங்க.” என்றவன், “நானும் ஜெயில்லல போய் உட்கார்ந்திட்டா…. என் பிள்ளைங்க வந்து அப்பா அம்மா ரெண்டு பேரும் இல்லமா அழுவாங்களே…” என்றவன், “இனிமே நீங்க யாராவது என் வீட்டு விஷயத்துல தலையிட்டீங்க கொன்னுடுவேன் சொல்லிட்டேன்.” என அம்மா மற்றும் தங்கைகளை பார்த்து கத்திவிட்டுச் சென்றான். நண்பர்களை அழைத்து அவர்களுக்குத் தகவல் சொல்லி அவர்களையும் தேட சொன்னவன், தானும் மனைவியைத் தேடி சென்றான். மாலை வரை தேடிக்கொண்டே இருந்தான். “டேய் எங்க இருக்க வீட்டுக்கு வா… இங்க உன் பொண்ணுங்க வந்து ஒரே ரகளை…” என வசந்தா சொல்ல, பிள்ளைகள் பள்ளியில் இருந்து வந்திருப்பார்கள். அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் வீட்டிற்குச் சென்றான். ஜோதி வந்து அவர்களைச் சமாதானம் செய்து, “அம்மா உங்களுக்குதான் டிரஸ் எடுக்கப் போயிருக்காங்க. கொஞ்ச நேரத்துல வந்திடுவாங்க.” என எதையோ சொல்லி சமாளித்தவள், அவள் வீட்டில் இருந்து எடுத்து வந்து இருவரையும் உண்ணவும் வைத்தாள். இளமாறனும் அதற்குள் வந்துவிட்டான். சிறிது நேரம் அமைதியாக இருந்தவர்கள், பிறகு மீண்டும் அம்மாவை கேட்டு அழத் துவங்கினர். மனைவியைப் போய்த் தேடுவதா… இல்லை பிள்ளைகளைப் பார்ப்பதா எனத் தெரியவில்லை. இவன் அப்படி இப்படி நகர்ந்தால் கூட ஒரே அழுகை. வேறு வழியில்லாமல் மகள்களையும் அழைத்துக் கொண்டு மனைவியைத் தேடி சென்றான். இளையவளை முன்புறமும், பெரியவளை பின்புறமும் வைத்துக் கொண்டு…. வண்டியில் இங்கும் அங்கும் தேடி அலைந்தான். அப்போது ஜெயாவிடம் இருந்து அவனுக்கு அழைப்பு, ஒருவேளை மனைவி அங்கு எதுவம் சென்றிருப்பாளோ என நினைத்தவன், அவரின் அழைப்பை ஏற்க…. “நானும் நேத்துல இருந்து வெண்மதி நம்பருக்கு போடுறேன். ஸ்விட்ச் ஆப்ன்னே வருது. அவளைக் கொஞ்சம் பேச சொல்லுங்க.” என ஜெயா சொன்னதும், இருந்த கொஞ்ச நம்பிக்கையும் தகர்ந்து விட… இளமாறன் என்ன சொல்வது எனத் தெரியாமல் திகைக்க… “எங்க வெண்மதி? அவ நல்லாதானே இருக்கா?” என ஜெயா படபடக்க… “அண்ணி, அவ வீட்ல இருக்கா… நான் வெளியில இருக்கேன். நேத்து என் தங்கச்சி வீட்டுக்கு போனா… அங்கயே செல்லை விட்டுட்டா…. அதுதான் ஆப் ஆகி இருக்கும்.” என இளமாறன் சமாளிக்க… “அவ நல்லாதானே இருக்கா… நீங்க பொய் சொல்லலையே… மதுரைக்கு வந்த போது, எனக்கு வீடு பார்த்துக் கொடு, இங்கேயே இருக்கேன்னு சொன்னா… நான்தான் எங்க அப்பாவை காரணம் காட்டி அனுப்பி வச்சேன். ஆனால் இப்ப ஏன் அனுப்பினேன்னு இருக்கு.” “எதுவும் பண்ணிக்க மாட்டேன்னு சத்தியம் பண்ண சொன்னேன். என் பொண்ணுங்களைச் சாப்பாட்டுக்கு யார்கிட்டயும் நிக்க விட மாட்டேன்னு சொன்னா….நேத்துல இருந்து என்னோட பேசவே இல்லை. எனக்கு மனசே சரியில்லை.” என ஜெயா கலங்க, “நான் வீட்டுக்கு போயிட்டு பேச சொல்றேன்.” என்றவன், அழைப்பை வைத்து விட்டாலும், வெண்மதி கிடைக்கவில்லை என்றால் தான் இவருக்கு என்ன பதில் சொல்வது எனத் தவித்துப் போனான். மதுரையில் இருந்து தன் மனைவி தன்னுடன் வாழ வேண்டும் என்றெல்லாம் திரும்ப வரவில்லை. அவள் அப்பாவுக்காக அவரின் நிம்மதிக்காக வந்திருக்கிறாள். அப்படி வந்தவள் நேற்று நடந்ததை எப்படிப் பொறுத்துத் தன்னோடு வாழ்வாள்? உண்மையிலேயே தவறான முடிவு எடுத்திருந்தால்…. என நினைக்கும் போதே நடுக்கமாக இருந்தது. நன்றாக இருட்டி விட… பிள்ளைகளை வைத்துக் கொண்டு வீதி வீதியாகச் சுற்றிக் கொண்டு இருந்தான். மனைவி நல்லபடியாகக் கிடைப்பாள் என்ற நம்பிக்கையே போய்விட்டிருந்தது. அப்போது கைப்பேசியில் அழைப்பு வர…. வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு யாரென்று பார்க்க, வெண்மதியின் எண் திரையில் மின்ன… நம்ப முடியாமல் அழைப்பை ஏற்றவன், அவள் குரல் கேட்பதற்குள் தவித்துப் போனான். வெண்மதிக்கு எதுவும் ஆகி இருக்குமோ… அதைச் சொல்லத்தான் யாரும் அழைக்கிறார்களோ என்றெல்லாம் நினைத்து அந்தச் சில நொடிகளுக்குள் செத்துப் பிழைத்தான். “ஹலோ…” என்றவனின் குரல் அவனுக்கே கேட்டதா தெரியவில்லை. “நான்தான் பேசுறேன்.” என்ற வெண்மதியின் குரல் அவன் உயிர் வரை தீண்டியது. “எங்க இருக்க வெண்மதி? உன்னை எவ்வளவு நேரமா தேடுறேன் தெரியுமா? உன்னைக் பார்க்காம…. பிள்ளைங்க ரெண்டும் ஒரே அழுகை.” என இளமாறன் நிறுத்தாமல் பேச… அவர்கள் ஊரை விட்டு சற்று தள்ளி இருந்த பிரசித்துப் பெற்ற அம்மன் கோவிலின் பெயரை சொன்னவள், “நான் அங்கதான் இருக்கேன்.” என, “நீ அங்கயே இரு நான் வரேன்.” என்றவன், உடனே நினைவு வந்து, “உங்க அக்கா போன் பண்ணாங்க. நான் எதுவும் சொல்லலை. இருந்தாலும் நீ போன் பண்ணி பேசிடு.” என, வெண்பா போன்னை வைத்தாள். “அம்மா கோவில்ல தான் இருக்கா… நாம போய்க் கூடிட்டு வந்திடலாம்.” என மகள்களிடம் சொல்ல… கேட்ட அவர்கள் இருவருக்கும் மகிழ்ச்சி. வண்டியின் வேகத்தை அதிகரித்து அடுத்த அரை மணி நேரத்தில் அங்கே கோவிலின் முன்பு இருந்தான். இவன் சென்ற போது வெண்மதி கோவில் வெளிப் பிரகாரத்தில் தான் நின்றிருந்தாள். அவளைப் பார்த்ததும் பிள்ளைகள் இருவரும் அவளிடம் ஓடி வர…. அவளும் அழுதபடி அவர்களை அனைத்துக் கொண்டாள். அப்போது அங்கே வந்த கோவில் குருக்கள், “காலையில இருந்து இந்தப் பொண்ணு இங்கதான் இருந்தது. கோவில் சாத்துற டைம் ஆச்சே… இன்னும் போகாம இருக்கே.. என்ன மனக்கஷ்டமோன்னு நினைச்சிட்டு இருந்தேன். நல்லவேளை நீங்க வந்துட்டீங்க.” “எந்தப் பிரச்சனைனாலும் பேசி சரி பண்ணிக்கோங்க.” என்றவர், உள்ளே செல்ல, “வாங்க நாமும் போய்ச் சாமி கும்பிட்டு வருவோம்.” என இளமாறன் சொல்ல… நால்வரும் சென்று அம்மனை வேண்டினர். எதோ பெரிய துன்பத்தில் இருந்து விடுபட்ட உணர்வு இளமாறனுக்கு. அந்த அளவு வெண்மதி அவனுக்குப் பயம் காட்டி இருந்தாள். தான் இல்லையென்றால் எப்படி இருக்கும் என அவள் அவனுக்குக் காட்டிவிட்டாள். அவள் இல்லையென்றால் தன்னால் ஒருநாள் கூடச் சமாளிக்க முடியாது என்பதை இளமாறன் உணர்ந்து கொண்டான். அம்மனிடம் மனதார வேண்டிக்கொண்டு நான்கு பேரும் வெளியே வந்தனர். பிள்ளைகளைத் தள்ளி விளையாட சொல்லிவிட்டு, கணவனும் மனைவியும் அங்கேயே பிரகாரத்தில் உட்கார்ந்தனர். “ஏன் வெண்மதி இப்படிப் பண்ண? நான்தான் இனிமே ஒழுங்கா இருக்கேன்னு சொன்னேன் இல்ல….” என்றதற்கு “எனக்கு என்ன பண்றதுன்னு தெரியாமத்தான் இந்தக் கோவில்ல வந்து உட்கார்ந்திருந்தேன். வாழ்க்கை எனக்கு இப்படியே தான் தொடரப் போகுதுன்னா சொல்லிடுங்க, நான் இப்படியே என் பொண்ணுங்களைக் கூட்டிட்டு எங்காவது போயிடுறேன்.” என வெண்மதி சொல்ல… “ஒருநாள் நீ இல்லைனா என்ன ஆகும்ன்னு நான் தெரிஞ்சிகிட்டேன் வெண்மதி. இனி நான் எந்தத் தப்பும் செய்ய மாட்டேன். நீ என்னை நம்பி வரலாம்.” என்றான். “என் பொண்ணுங்களுக்காக நான் உங்களைக் கூட மன்னிக்கத் தயாரா இருக்கேன். ஆனா என் வாழ்க்கையைப் பறிக்க நினைச்ச உங்க அம்மாவோட இனி நான் எப்பவும் ஒரே வீட்ல இருக்க மாட்டேன். அதே போல உங்க தங்கச்சிங்க நான் இருக்க வீட்டுக்கும் இனி வரக் கூடாது. அப்படியிருந்தா தான் நான் இப்ப உங்க கூட வருவேன். இல்லைனா என்னை மதுரைக்குப் பஸ் எத்திவிடுங்க.” என வெண்மதி அவன் மறுக்க இடமே கொடுக்காமல் தன் மனதிலிருப்பதை எல்லாம் சொல்லிவிட்டாள். எதோ தன்னுடனாவது இருக்கிறேன் எனச் சொல்கிறாளே… என்ற எண்ணத்தில் அவள் சொன்னதுக்கெல்லாம் இளமாறன் சரி சரியென்றான். அவனுக்கு வேறு வழியும் இல்லை. கோவிலில் இருந்து நான்கு பேரும் பைக்கில் கிளம்பினர். வழியில் ஒரு சைவ உணவகத்தில் நிறுத்தியவன், “கோவில் போயிட்டு வந்திருக்கோம். அதனால சைவமே சாப்பிடுவோம்.” என உள்ளே அழைத்துச் சென்று எல்லோருக்கும் மசாலா தோசையும், ஐஸ்க்ரீமும் வாங்கிக் கொடுத்தான். “இனி வீட்டுக்கு வாடகை கொடுக்கணுமே செலவு ஆகுமேன்னு யோசிக்காதீங்க. நான் எவ்வளவு சிக்கனமா குடும்பம் நடத்த முடியுமோ நடத்துறேன்.” என வெண்மதி சொன்னதற்கு, பணத்தைப் பற்றி ஒன்றுமில்லை என்றுவிட்டான். தனிக்குடித்தனம் போவது தெரிந்தால் அவன் அம்மாதான் ஒரு ஆட்டம் ஆடுவார். அவரே இழுத்துக் கொண்டதுதான் தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என நினைத்தான். உண்மையில் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பி விட்டு கடைக்குச் செல்லலாம் எனக் கிளம்பியவள், ஜோதியின் வீட்டுக்கு சென்றாள். அங்கே தோழியிடம் சொல்லி அவள் ஒரு மூச்சு அழுக… ஜோதியின் கணவனும் அப்போது அங்கே இருந்தவர் கேட்டிருந்தார். அவர் வெண்மதியை தங்கை போலத் தான் நினைத்து பழகுவார். “இவங்களுக்கு எல்லாம் சொன்னா புத்தி வராது. பட்டா தான் வரும். நீ இல்லைனா என்ன ஆகும்னு காட்டு. ஒருநாள் உன்னைக் காணாம தேடி அலையட்டும். அப்பத்தான் உன் அருமை தெரியும். நிஜமாவே உன் புருஷனுக்கு நீ வேணுமா வேண்டாம்ன்னு தெரிஞ்சிக்கலாம்.” “அப்படி வேண்டாதவனோட மல்லு கட்டணும்னு அவசியமும் இல்லை. எந்த வேலை செஞ்சாலும் பொழச்சுக்கலாம்.” எனக் கதிரேசன் எடுத்துச் சொன்னதும், வெண்மதிக்கும் அதுதான் சரியென்று தோன்றியது. அதனால் கோவிலுக்குக் கிளம்பி சென்று விட்டாள். ஜோதிக்கு அவள் இருக்கும் இடம் தெரியும். இருந்தாலும் இளமாறன் வந்து கேட்ட போது சொல்லவில்லை. வெண்மதிக்காகத்தான் அவளாகவே மாலை பிள்ளைகள் பள்ளியில் இருந்து வரும் நேரம், வெண்மதி வந்துவிட்டாளா என கேட்க வந்தது போல வந்து பிள்ளைகளை பார்த்தும் கொண்டாள். “முக்கியமா எதாவது சொல்லனும்னா உடனே உன் அண்ணன் வருவார். நான் பசங்களைப் பார்த்துக்கிறேன். நீ ஒருநாள் பல்லைக் கடிச்சிட்டு இருந்திடு. உனக்கு ஒரு நல்ல விடிவு வரும்.” எனச் சொல்லிதான் ஜோதி வெண்மதியை அனுப்பி வைத்தாள். செல்வதற்கு முன் காலை உணவை உண்ண வைத்தும் அனுப்பினாள். இவர்கள் குடும்பமாகப் பைக்கில் வந்து வீட்டின் முன் இறங்க.. அதுவரை என்னவாகுமோ எனப் பயத்தில் இருந்த வசந்தா, “நல்லாதானே வந்து நிற்கிறா… இதுக்கு எதுக்குக் காலையில இருந்து எல்லோரையும் அல்லையைக் கூட்டினா….” என நினைத்தவர், எதோ சொல்ல வர… “நீ பிள்ளைங்களை அழைச்சிட்டு உள்ளே போ…” என்ற இளமாறன், அவள் கோவிலில் இருந்ததைச் சொன்னவன், “அம்மா, நாங்க தனிக்குடித்தனம் போறோம். வீடு கிடைச்சதும் உடனே மாறிடுவேன்.” என்றதும், “ஒ.. இதுக்குதான் இவ இந்த நாடகம் போட்டாளா…” என்றவர், “நீயும் இவ பேச்சை கேட்டுட்டு ஆடப்போறியா?” என்றதும், இளமாறன் பதில் சொல்லாமல் இருக்க… “அண்ணா, நீ பண்றது நியாமே இல்லை.” என மணிமேகலை சொல்ல… “நீங்க பண்ணது மட்டும் நியாயமா?” என வந்த வெளியே வந்த வெண்மதி, “அவர் தப்பு செஞ்சாலும் நீங்க எல்லாம் என்ன சொல்லணும்? அவருக்குப் புத்தி சொல்றதை விட்டுட்டு, அந்தப் பொம்பளையை வீட்ல கொண்டு வந்து வைக்கத்தானே பார்த்தீங்க. உங்களுக்குப் பச்சைத் தண்ணிக் கொடுக்கக் கூட எனக்கு மனசு வாராது.” “இப்பவும் நான் போயிடுறேன். ஆனா உங்களைச் சும்மா விடுவேன்னு மட்டும் நினைக்காதீங்க.” “உங்க அண்ணன் பண்ணது, அதுக்கு உங்க அம்மா பேசினது, நீங்க அவளை உங்க வீட்டுக்கே அழைச்சு விருந்து வச்சது. இப்படி எல்லாத்தையும் எழுதி கையெழுத்துப் போட்டு எனக்குத் தெரிஞ்சவங்ககிட்ட கொடுத்து தான் வச்சிருக்கேன்.” “நீங்க எல்லாம் கொலை கூடச் செய்யத் தயங்க மாட்டீங்க. அதுதான் எனக்கு எதாவது நடந்தா, போலீஸ்ல கொடுக்கச் சொல்லி கொடுத்துதான் வச்சிருக்கேன்.” “அதை நானே எடுத்திட்டுப் போய்ப் போலீஸ் ஸ்டேஷன்ல கொடுக்க எவ்வளவு நேரம் ஆகும்.” என்றதும், அவள் பேச வேண்டும் எனப் பேசவில்லை. சொன்னதைச் செய்வாள் என்றே தோன்றியது. மனைவி என்ன செய்தாலும் தன்னை விட்டு போக மாட்டாள் என்ற தைரியத்தில் தான் இளமாறன் தவறு செய்யத் துணிந்தது. அதே எண்ணம் தான் வசந்தாவுக்கும், அவள் மகள்களுக்கும். போறதுக்கு இடம் இல்லாதவ… நம்மை விட்டா யாரு இருக்கா என்ற எண்ணத்தில் தான் அவளை அலட்சியமாக நடத்தியதும். நான் ஒன்னும் நீங்க செய்யுறதை எல்லாம் பொறுத்திட்டே இருக்க மாட்டேன் என வெண்மதி தான் புரிய வைத்திருந்தாளே. அதனால் வாயை மூடிக் கொண்டனர். அவங்க குடும்ப விஷயத்துல இனி நீங்க தலையிட்டா பாருங்க என மணிமேகலையின் கணவனும், ரஞ்சிதாவின் கணவனும் தங்கள் மனைவிமாரை திட்டி வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். “அம்மா, நாங்க வெளியவே சாப்பிட்டோம்.” என்றவன், “நீங்களும் சாப்பிட்டு படுங்க.” என இளமாறன் உள்ளே சென்றுவிட்டான். கடை அடைத்துக் கடைப் பையன்கள் வந்து வீட்டில் சாவியைக் கொடுத்திருந்தனர். வசந்தா எங்கே சமைத்தார். மதியமும் வெளியே வாங்கி உண்டிருந்தார். அதைதான் இப்போதும் உண்ண வேண்டும் என முனங்கிக் கொண்டே சென்றார். இப்போதும் வெண்மதியைத் தான் குற்றம் சொல்லிக் கொண்டிருந்தார். அவள் எதனால் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டாள் என நினைத்து பார்க்கவும் இல்லை. சரியான சுயநலம் பிடித்தவர். வெண்மதி பிள்ளைகளுடன் கட்டிலில் படுத்துக்கொள்ள… இளமாறன் தரையில் பாய் விரித்துப் படுத்துக் கொண்டான். உண்மையில் வெண்மதியை திரும்பப் பார்ப்போமா என ஒரு கட்டத்தில் நினைத்துப் பயந்திருந்தான். இப்போது அவள் தங்களுடன் இருக்கிறாள் என்பதை நம்பவே முடியவில்லை. இதோடு போனதே… இனி எதையும் நாமே இழுத்து வைத்துகொள்ளக் கூடாது என்பதில் திண்ணமாக இருந்தான்.