“உங்க அம்மா அவங்களுக்கும் மேல இன்னைக்கு அவளுக்கு என்ன உபச்சாரம் செய்தாங்க தெரியுமா? நான் அவங்களுக்கு என்ன குறை வச்சேன்? வேலைக்கு வக்கனையா தான வடிச்சு கொட்டினேன்.”

“என் வாழ்க்கையைப் பறிச்சு இன்னொருத்திக்கு கொடுப்பாங்களா?”

“நான் அவங்களைக் கண்டிச்சு வைக்கிறேன். சத்தியமா எனக்குச் சுந்தரி அங்க வருவான்னு தெரியாது. இனிமே அவளுக்கும் எனக்கும் ஒன்னும் இல்லைன்னு சொல்லிட்டேன். என்னை நம்பு இனி அவ பக்கம்கூடத் திரும்ப மாட்டேன்.”

“ம்ம்… உங்களை நம்பி நான் நிறைய ஏமாந்திட்டேன். இன்னும் நம்பச் சொல்றீங்களா?” என்றாள்.

இளமாறன் செய்தது ஒன்றும் சாதாரணத் தவறு இல்லை. உடனே மறந்து வெண்மதி அவனை ஏற்றுக்கொள்ள… அதை இளமாறனும் உணர்ந்தானோ என்னவோ, அவன் மேலும் வாக்குவாதம் செய்யவில்லை.

“சரி நீயா என்னை எப்போ நம்புறியோ நம்பு.” என்றவன், “இப்ப சாப்பிடலாம் பசிக்குது.” என அவனே சென்று இரண்டு தட்டுகளில் உணவை கொண்டு வர… வெண்மதிக்கும் பசி காதை அடைக்க… அதை வாங்கி உண்டாள்.

உண்டதும் பிள்ளைகளுக்கு இருப்பக்கமும் படுத்து இருவரும் அப்படியே உறங்கி விட… மாலை வீட்டின் அழைப்பு மணி சத்தத்தில் தான் இருவரும் எழுந்தனர்.

இளமாறன் சென்று கதவை திறந்து விட்டான். அவன் அம்மாவும் அப்பாவும் தான் வந்திருந்தனர். வசந்தா மருமகள் விட்டு விட்டு வந்திருந்த கைப்பையை எடுத்து வந்திருந்தார். அவர்கள்தான் வந்திருக்கிறார்கள் என வெண்மதிக்குத் தெரிந்தாலும், அவள் எழுந்து வரவில்லை.

இளமாறன் அவர்களிடம் எதுவும் பேசவில்லை. அவனே சென்று டீ வைக்க…. சமையல் அறை வந்த வசந்தா, “ஏன் அந்த மகாராணிக்கு டீ கூட வைக்க முடியாதா? இன்னைக்கு மணிமேகலை வீட்ல என்ன பேச்சுப் பேசினா தெரியுமா?”

“இது அவ வீட்டு விசேஷம். அவ யாரை வேணாலும் கூப்பிடுவா? இவளுக்கு என்ன வந்தது?”

“ஒரு பையனை பெத்து தர வக்கில்லை பேச வந்திட்டா….”

“ரெண்டு பொண்டாட்டி இருக்கிறவன் எல்லாம் நாட்டில இல்லையா…. நீ பேசாம சுந்தரியை கட்டிக்கோ… வீட்டுக்கு ஒரு வாரிசாவது வரட்டும்.” என வசந்தா அவர் பாட்டுக்குப் பேசிக்கொண்டே செல்ல….

“வாயை மூடுங்க மா…. உங்க வேலையைப் பாருங்க. தேவையில்லாதது ஏன் பேசுறீங்க?” என இளமாறன் குரலை உயர்த்த…. வசந்தா மேலும் எதோ சொல்ல வர…. அப்போது பத்திரகாளி போல வெண்மதி சமையல் அறைக்கு வந்தவள்,

“ரொம்ப நல்லா இருக்கு. ஏற்கனவே உங்க பையனுக்கு எதுவும் தெரியாது…. இதுல நீங்க வேற சொல்லிக் கொடுங்க.”

“என்னைப் பார்த்தா எப்படி இருக்கு? நான் அப்படியே விட்டுடுவேன்னு நினைச்சீங்களா…”

“என்னோட சாவுக்கு நீங்க, உங்க பையன், பொண்ணுங்கதான் காரணம்னு லெட்டர் எழுதி, எங்க அனுப்பனுமோ அங்க அனுப்பிட்டு நான் செத்து போனேன்னு வைங்க. ஜென்மத்துக்கும் ஜெயில்ல கலிதான் திங்கணும்.” என வெண்மதி சமையல் அறையில் நின்று ஆத்திரமாகக் கத்த…. அதன் பிறகே வசந்தா அடங்கினார்.

“ஏய் அவங்கதான் லூசு மாதிரி பேசினா…நீயும் இப்படிப் பேசுவியா. நான்தான் உன்கிட்ட எல்லாம் விளக்கமா சொல்லிட்டேன் இல்ல…. அவங்க பேசுறது எல்லாம் காதில வாங்காத.” என்றான் இளமாறன்.

“உங்களை நான் எப்படி நம்புறது? நாளைக்கு அம்மாவும் மகனும் சேர்ந்து என்னைக் கொலைக் கூடப் பண்ணுவீங்க. ஐயோ கடவுளே எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது?” வெண்மதி கத்துவதைப் பார்த்த பிள்ளைகள் பயப்பட…. “மதி…. அப்படியெல்லாம் எதுவும் நடக்காது. பாரு பசங்க பயப்படுறாங்க. நீ ரூமுக்கு போ….” என இளமாறன் மனைவி பிள்ளைகளை அறைக்குள் அனுப்பி வைத்தான்.

“இனி ஒரு வார்த்தை பேசுனீங்க அவ்வளவுதான்.” என வசந்தாவைப் பார்த்து கத்தியவன், அவனுக்கும் மனைவிக்கும் டீ எடுத்துக் கொண்டு அறைக்குள் சென்றான்.

வெண்மதி அவன் கொண்டு வந்த டீயை குடிக்கவில்லை. முதலில் அவனையே அவள் பார்க்கவில்லை. கண் மூடி படுத்துக் கொண்டாள். இரவுக்கும் அவள் எதுவும் சமைக்கவில்லை.

வசந்தா மருமகள் வந்து சமைக்கிறாளா எனப் பார்க்க… அவள் வருவதாக இல்லை. அவர்கள் அறையை எட்டிப் பார்த்தவர், ராத்திரிக்கு என்ன டா எனக் கேட்க,

“ஏன் ஒருநாள் நீங்க சமையல் பண்ணா என்ன? நீங்களே பண்ணுங்க.” என்றான்.

“எனக்கு எல்லாம் வேலைப் பண்ண முடியாது.” என வசந்தா சொல்ல…

“அப்போ உங்க வீட்டுகாரரை எதாவது வாங்கி வந்து தர சொல்லி சாப்பிடுங்க.” என்றான் இளமாறன்.

“நீங்க எல்லாம் என்ன சாப்பிடுவீங்க?” என வசந்தா கேட்க,

“அதை நாங்க பார்த்துக்கிறோம் உங்களுக்கு வேண்டியது வாங்கிச் சாப்பிடுங்க.” என இளமாறன் சொல்ல… வசந்தா அவர் கணவரை ஹோட்டலில் வாங்கி வர சொன்னார்.

“நான் போய் வெளியில சாப்பாடு வாங்கிட்டு வரட்டா….” இளமாறன் வெண்மதியிடம் கேட்க, பதில் சொல்லாமல் சமையல் அறை சென்றாள்.

வசந்தா உணவு மேஜையில் உட்கார்ந்து வாங்கி வந்த இட்லியை உண்ண…. சமையல் அறையில் தாளிக்கும் வாசனை வர… நேரத்துக்கு எந்திரிச்சு பண்ணியிருந்தா வெளியில வாங்கியிருக்கவே வேண்டாம் என முனங்கினார்.

இரு தட்டுகளில் அரிசி பருப்புச் சாதம் போட்டு, அதில் நெய் விட்டு, தொட்டுக்கொள்ள முட்டை ஆம்லெட் வைத்து எடுத்து சென்றவள், ஒன்றை கணவனிடம் கொடுத்து விட்டு இன்னொரு தட்டில் இருந்ததை இரு மகள்களுக்கும் வயிறு நிறைய ஊட்டி விட்டாள். பிறகு அவளும் அதே தட்டில் தனக்கு எடுத்து வந்து உண்டாள்.

செய்ய வேண்டிய வேலைகளைச் செய்தாலும், அவள் கண்கள் கலங்கியபடி தான் இருந்தது. அவள் மகள்களுடன் கட்டிலில் படுத்துக்கொள்ள… இளமாறன் தரையில் பாய்விரித்துப் படுத்துக் கொண்டான்.

மறுநாள் காலை பிள்ளைகளைப் பள்ளிக்கு தயார் செய்ய… நேற்று வீட்டில் நடந்த கலவரத்தில் இருவரும் பயந்து போயிருந்தனர். அதனால் அம்மாவை விட்டு செல்ல மனமில்லாமல் பள்ளி செல்ல வில்லையென்றனர்.

மூத்தவள் இரண்டாம் வகுப்பிலும், இளையவள் யூ கே ஜியிலும் இருக்கிறார்கள். சின்னப் பிள்ளைகள் தான். அவர்களைச் சமாதானம் செய்து பள்ளிக்கு கிளப்பினாள். இருவருக்கும் சாப்பாடு கட்டி பள்ளிக்கு வழக்கமாகச் செல்லும் ஆட்டோவில் அவர்களை அனுப்பி வைத்தாள்.

கடைக்குக் கிளம்பிய கணவனிடம். “நீங்க காலையில வெளியில சாப்பிட்டுக்கோங்க.” என, மனைவி இந்த அளவுக்கு இருப்பதே பெரிது என நினைத்தான் போல… சரியென்று கடைக்குச் சென்றுவிட்டான்.

கணவன் கிளம்பியதும், கையில் கூடையுடன் வெண்மதியும் வெளியே சென்றுவிட…. வசந்தா சமையல் அறை சென்று பார்த்தவர், அங்கே எந்த உணவும் இல்லாமல் இருக்க… கொழுப்பா இவளுக்கு, நேத்து நைட்டும் சமைக்கலை…… இன்னைக்கும் சமைக்கலை… என்ன நினைச்சிட்டு இருக்கா மனசுல? அவ வரட்டும் எனக் கோபமாக உட்கார்ந்திருந்தார்.

இளமாறன் கடைக்கு அருகில் இருந்த உணவகத்தில் காலை உணவை உண்டுவிட்டு அவனது மெக்கானிக் ஷாப் சென்றுவிட்டான். பத்து மணிப்போல மகனுக்கு அழைத்தவர், “உன் பொண்டாட்டி இப்பவும் சமைக்கலை…” என ஆரம்பிக்க..

“வை மா உனக்கு வேற வேலையே இல்லை. நீயே செஞ்சு சாப்பிடு.” என வைத்துவிட்டான்.

வசந்தா அவர் கணவரை வாங்கி வர சொல்லி உண்டார். இளமாறன் மனைவி எப்படி இருக்கிறாள் எனப் பார்ப்பதற்காக நன்பகலில் வீட்டுக்கு வர…. அவள் வீட்டில் இல்லை.

“எங்க மா அவ?” என அவன் தன் அம்மாவிடம் கேட்க,

“காலையில பசங்க ஸ்கூலுக்குப் போனதும் வெளியப் போனவ… இன்னும் வரலை.” என வசந்தா சொல்ல…

“என்கிட்டே சொல்ல மாட்டியா?” என இளமாறன் கத்த…

“நான் அதுக்குதான் போன் பண்ணேன். நீ எங்க சொல்லவிட்ட.” என்றார்.
இளமாறனுக்கு எதோ சரியாகப் படவில்லை. “நான் போனதும் நீ அவகிட்ட சண்டை பிடிச்சியா?” என்றான்.

“நான் எதுவும் பேசலை…” என அவர் சொல்ல…

“நேத்து நான் இருக்கும் போதே அப்படிப் பேசின… இன்னைக்கு மட்டும் பேசாமலா இருந்திருப்ப….” என்றவன், முதலில் மனைவியின் கைபேசிக்கு அழைக்க அது அனைத்து வைக்கப் பட்டிருக்க, அவனுக்கு பதட்டமாகி விட்டது. அவளைத் தேடி அவள் செல்லும் இடங்களுக்குச் சென்றான்.

அவள் தோழி ஜோதியின் வீடு, அவள் எப்போதும் செல்லும் கோவில், மார்க்கெட், பிள்ளைகளின் பள்ளி என எல்லாம் சுத்தி அலைந்து பார்த்துவிட்டான். அவள் எங்கேயும் இல்லை. அவள் அம்மாவுக்கு அழைத்து வந்துவிட்டாளா எனக் கேட்க, அவர் இல்லையென்றார்.

நெஞ்சுக் கூடு காலியானது போல இளமாறன் தவித்துப் போனான். ஆண் என்ற திமிரில் இவன் மனைவிக்குச் செய்த துரோகத்திற்கு இப்போது நடுத் தெருவில் மனைவியைக் காணாது கலங்கி நின்றான்.