தான் கணவனைச் சரியாகக் கவனிக்காமல் விட்டுவிட்டோமோ என்ற எண்ணம் அவளுக்கே இருந்தது. குழந்தை பிறந்து விட்டால் பெண்கள் தங்களைப் பற்றியே யோசிக்க மாட்டார்கள். அவளும் அப்படித்தான், குழந்தைகள் மாமனார் மாமியாரை கவனிப்பது என்றே இருந்துவிட்டாள். 


எல்லாம் சரியாகிவிட்டது கணவன் தன் அன்பிற்குக் கட்டுபட்டுவிட்டான் என்ற மனக்கோட்டையில் இருந்தவளுக்கு, மீண்டும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. 

அன்று வெண்மதிவின் தோழி ரேவதி கைபேசியில் அழைக்க… “நலம் விசாரித்த வெண்மதி, என்ன திடிர்னு என்னோட நியாபகம்?” எனக் கேட்க, 

“ஞாயிற்றுக்கிழமை நாங்க மகாபலிபுரம் போயிட்டு ஹோட்டல்ல சாப்பிட்டு இருந்தோம். அங்க இளமாறனைப் பார்த்தேன்.” என்றதும், 


“பிரண்ட்ஸ் கூட வந்திருப்பார்.” என வெண்மதி சாதாரணமாகச் சொல்ல… 


“இல்லை டி கூட ஒரு பொண்ணு இருந்தா… பார்க்க வேற நல்லா இருக்கா பார்த்து இருந்துக்கோ. அதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன்.” என்றவள் வைத்துவிட…. வெண்மதிக்கு மனம் விட்டுப் போனது. 


கணவனைப் பிடித்து வைக்க என்னென்ன செய்தாள். இதற்கு மேலும் இவன் கூட இருக்க வேண்டுமா என்ற எண்ணத்தில், பிள்ளைகள் பள்ளியில் இருந்து வந்ததும், மதுரையில் இருந்த அவள் அக்கா வீட்டிற்குக் கிளம்பி சென்றுவிட்டாள். 


பையை எடுத்துக் கொண்டு கிளம்பும் சமயம் தான் மாமியாரிடம் தன் அக்கா வீட்டிற்குச் செல்கிறேன் என்றாள். 


என்ன திடிர்னு என அவர் கேட்க, “உங்க பையன் வருவார் அவர்கிட்டயே கேளுங்க.” எனச் சொல்லிவிட்டு பிள்ளைகளை அழைத்துக் கொண்டு நிற்காமல் சென்றுவிட்டாள். வீட்டு செலவுக்குக் கொடுத்த பணத்தில் சேமித்ததை எடுத்துக் கொண்டு வந்துவிட்டாள். 

வசந்தா இளமாறனுக்குத் தகவல் கொடுத்தார். கோயம்பேடு தான் சென்றிருப்பாள் என நினைத்து, அவன் அங்குச் செல்ல… ஆனால் அவன் வருவதற்குள் கிளம்பிக் கொண்டிருந்த மதுரை பஸ்ஸில் ஏறி சென்றிருந்தாள். 


பேருந்து நிலையத்தில் வந்து தேடியவன் மனைவியை அழைக்க, முதலில் எடுக்காமல் இருந்தவள், பிறகு எடுத்து, “என்ன?” எனக் கேட்க, 


“எதுக்கு இப்போ மதுரைக்குப் போற? என்கிட்டே சொல்ல கூட இல்லை.” என்றவனிடம், 


“நீங்க மகாபலிபுரம் போனீங்க இல்ல… என்கிட்டே சொல்லிட்டா போனீங்க? இனி நீங்க நினைச்ச இடத்துக்குப் போகலாம். அதுக்குதான் போறேன்.” எனக் கோபத்தில் வெண்மதி வெடிக்க… 


“நீ வீட்டுக்கு வா நாம பேசலாம்.” என்றான். 

“தேவையில்லை….. இன்னும் நான் ஏமாறத் தயாரா இல்லை.” என்றவள், போன்னை வைத்து விட… என்ன செய்வது எனத் தெரியாமல் இளமாறன் கடைக்குச் சென்றுவிட… அவன் அம்மா அழைத்துக் கேட்க, அவள் போய் விட்டாள் என்றான். 

“அவ வீட்ல சொல்லி பஞ்சாயத்துக்கு ஆள் கூட்டிட்டு வந்தா என்ன டா பண்றது? நீ ஏன் டா இப்படிப் பண்ண?” என்றார் மகனிடம் முதல்முறையாக. 

“நீங்க உங்க வேலையைப் பாருங்க.” என்றவன் வைத்துவிட்டான். 

பேருந்தில் இருந்து அவளது அக்காவிற்கு அழைத்துத் தான் வருவதாக வெண்மதி சொல்லி இருந்தாள். ஆனால் காரணம் எதுவும் சொல்லவில்லை. அதிகாலை மதுரையில் இறங்கியவள், ஆட்டோ பிடித்து அக்கா வீட்டிற்குச் சென்றாள். 

ஜெயா தங்கையை வரவேற்று நன்றாகவே கவனித்தாள். அவர்களுக்கு அம்மா இல்லை. அவர்கள் அக்கா தங்கை தானே ஒருவருக்கு ஒருவர் ஆறுதல். சின்ன மகளைப் பார்த்ததும், அவளது தந்தைக்கு மிகுந்த மகிழ்ச்சி. பேத்திகள் இருவரையும் கொஞ்சி மகிழ்ந்தார். 

வெண்மதிவுக்கு அவள் அப்பாவை பார்க்க வருத்தமாக இருந்தது. மிகவும் தளர்ந்து போய் இருந்தார். மனைவியின் இழப்பு அவரைப் பெரிதும் பாதித்து இருந்தது. 

தங்கையைப் படுத்து ஓய்வெடு எனச் சொல்லிவிட்டு ஜெயா சமையல் அறைக்குச் செல்ல… வெண்மதிவும் அவள் பின்னே சென்றவள், அக்காவுக்குச் சமையலில் உதவினாள். 

“கொஞ்ச நேரம் தூங்கலாம் இல்ல….” என்றதற்கு, “எனக்கு இனி எப்பவும் தூக்கம் வாராதுக்கா.” என்றாள். தங்கையைப் பார்த்த ஜெயா கணவனோடு எதாவது சண்டையாக இருக்கும் என நினைத்து பிறகு கேட்போம் என இருந்தாள். 

ஜெயாவின் கணவன் அலுவலகம் செல்லும் சமயம் வந்து, வெண்மதியை நலம் விசாரித்து விட்டுச் சென்றான். ரொம்பவும் யாரோடும் பேச மாட்டான். அவன் பெற்றோர் அவர்கள் கிராமத்தில் இருந்து விவசாயம் பார்கிறார்கள். அதனால்தான் ஜெயாவால் அவள் தந்தையை வைத்துகொள்ள முடிந்தது. 


ஜெயாவின் பிள்ளைகள் பெரிய வகுப்பில் இருப்பதால் பள்ளிக்கு சென்றுவிட்டனர். கஜலக்ஷ்மியும் வரலக்ஷ்மியும் தங்கள் தாத்தாவின் அறையில் விளையாடிக் கொண்டிருந்தனர். 


காலை உணவு முடிந்து தங்கையை ஜெயா அவள் அறைக்கு அழைத்துச் சென்றவள், கட்டிலில் உட்கார்ந்து கொண்டு, “உன் வீட்டுக்காரரோட எதாவது சண்டையா?” எனக் கேட்க, 


“அக்கா, உன் வீட்டு பக்கத்தில நான் வீடு பார்த்திட்டு வந்திடுவா? எனக்கு அத்தான்கிட்ட சொல்லி ஒரு வேலை வாங்கிக் கொடுக்கிறியா?” என்றாள் வெண்மதி. 


“வீட்டை விட்டு வரும் அளவுக்கு என்ன நடந்தது?” எனப் பதறிப்போன ஜெயா, என்னவென்று விசாரிக்க…. வெண்மதி நடந்ததைச் சொன்னாள். 


“வெண்மதி நான் சொல்றதை பொறுமையா கேட்கிறியா… அம்மா இருந்திருந்தாலும் இதைத்தான் சொல்லி இருப்பாங்க. உன் வீடு அது. நீ முறையாதான் கல்யாணம் செஞ்சு போன. நீ எதுக்கு டி வீட்டை விட்டு வரணும்?” 


“ஒண்ட வந்த பிசாசு உன்னை விரட்டுமா. நீ வீட்டை விட்டு வந்தா… அது இன்னும் அவங்களுக்கு வசதியா போயிடும்.” என ஜெயா சொல்ல… 


“அப்போ எனக்குத் துரோகம் செஞ்ச மனுஷனோட என்னைச் சேர்ந்து வாழ சொல்றியா? என்னால எப்படிக் கா முடியும்.” என வெண்மதி கண்ணீர் வடிக்க… 


“அப்பா இன்னும் அதிகபட்சம் போனா ரெண்டு வருஷம் இருப்பார். உன்னைப் பத்தி தெரிஞ்சதுன்னு வச்சுக்கோ…. அவருக்கு என்ன வேணா நடக்கலாம். அவரால இதெல்லாம் தாங்க முடியாது வெண்மதி.” 


“நீ வெறும் பன்னெண்டாவது தான் படிச்சிருக்க. என்ன சம்பளம் கிடைக்கும்? வீட்டுக்கு வாடகை, அட்வைஸ், பிள்ளைங்க படிப்புக்கு, சாப்பாட்டுக்கு எல்லாத்துக்கும் என்ன பண்ணுவ?” 


“முதல்ல நீ ஏன் கஷ்டப்படனும் சொல்லு.”

“அவர் காசுல என்னைச் சாப்பிட சொல்றியா?” 


“நீ சும்மா உட்கார்ந்து சாப்பிடுறியா? காலையில இருந்து நைட் படுக்குற வரை எவ்வளவு வேலைப் பார்க்கிற. சும்மா ஒன்னும் உட்கார்ந்து சாப்பிடலை. அவரை அங்க இருந்தே திருத்த பாரு. உன் உரிமையை விட்டுக் கொடுக்காத.” 


“அக்கா நான் முயற்சி பண்ணலைன்னு நினைக்கிறியா?” 

“இன்னும் பண்ணு வெண்மதி… ரெண்டு சின்னப் பிள்ளைங்களோட தனியா வந்து எப்படி இருப்ப? என்ன வேணா பேசலாம் ஆனா யதார்த்தம்னு ஒன்னு இருக்கு.” 


“கணவனோட சேர்ந்து இருக்கிற பொண்ணுங்களையே எவ கிடைப்பான்னு திரியுறானுங்க, இதுல புருஷன் இல்லாம தனியா இருக்கிறது உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பே இல்லை. அதுவும் ரெண்டும் பொம்பளை பிள்ளைகள் வச்சிருக்க.” 


“உன் கணவன் உனக்குச் செஞ்ச துரோகத்துக்கு அவரைப் பின்னாடி தண்டிக்கலாம். முதல்ல உன் உரிமையை… உன் இடத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்காத.” 


“நீ ஏன் டி எவளுக்காகவோ உன் வாழ்க்கையை விட்டுக் கொடுக்கிற?” என ஜெயா சொல்லும் போதுதான், தனியாக வாழ்வதில் இவ்வளவு சிக்கல் இருக்கிறது என வெண்மதிவுக்குப் புரிந்தது. ஏற்கனவே அப்பாவை வைத்து அக்காதான் பார்க்கிறாள், தானும் அவளுக்குச் சுமையாகி விடக்கூடாது என்ற எண்ணமும் தோன்றியது. 


“சரிக்கா… அப்ப நான் இன்னைக்கே கிளம்பவா?” எனக் கேட்ட தங்கையிடம், 


“வந்தது வந்துட்ட… ரெண்டு நாள் இருந்திட்டு போ.” என்றாள் ஜெயா. 


“என்ன மா திடிர்னு ஸ்கூல் நாள்ல வந்திருக்க… பிரச்சனை ஒன்னும் இல்லையே…” என அவள் தந்தை இரண்டு மூன்று முறை வெண்மதியிடம் கேட்டுவிட்டார். 


“உங்களைப் பார்க்கணும் போல இருந்துச்சு. அதனால வந்தேன்.” என வெண்மதி தன் தந்தையின் நலனுக்காகப் பொய் சொன்னாள். 


அவள் இருந்த இரண்டு நாட்களும் தங்கை மற்றும் அவளின் பிள்ளைகளை ஜெயா நன்றாகக் கவனித்தாள். வெளியே சினிமாவுக்கு, ஹோட்டலுக்கு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு என அழைத்துச் சென்றாள். 


தாயார் மீனாட்சி அம்மன் சந்நிதியில் நிற்கும் போது, வெண்மதி தைரியத்தை வேண்டி நின்றாள். அவளுக்கு இப்போது அதுதான் தேவை. 


தங்கையிடம் அப்படிச் சொல்லிவிட்டாலும், ஜெயாவுக்கு மனது அடித்துக் கொண்டது. வெண்மதி கிளம்பும் சமயம், “எந்தத் தவறான முடிவுக்கும் மட்டும் போக மாட்டேன்னு சத்தியம் பண்ணு.” எனக் கேட்க, 


“என் பிள்ளைங்களை இன்னொருத்தர் கிட்ட சாப்பாடுக்கு கையேந்த வைக்க மாட்டேன் கா… அதுக்காகவாவது இருப்பேன்.” என வெண்மதி கண்ணீருடன் விடைபெற…. ஜெயாவும் கண்ணீருடன் அனுப்பி வைத்தாள். 


வெண்மதி போன்ற பெண்களைப் பார்த்து நாம் எளிதாகக் கேட்டுவிடுவோம், எப்படித்தான் இதெல்லாம் பொறுத்திட்டு நீ இருக்கியோ…. அப்படி  புருஷன் கூட இருக்கணுமா என்ன? என்று, அவர்கள் அவர்களுக்காகப் பொறுத்து போகவில்லை. தங்கள் பெற்றோருக்காகவோ அல்லது தாங்கள் பெற்ற பிள்ளைகளுக்காகவோ தான், தனக்கு இழைக்கப்பட்ட அநிதியையும் பொறுத்துக் கொண்டு, இப்படிப்பட்ட கணவனுடனும் வாழ்கிறார்கள்.