Advertisement

மறந்து போ என் மனமே 



அத்தியாயம் 1

வெண்மதிக்கு அதிகாலை ஐந்து மணிக்கே விழுப்பு வர…. முதலில் உணர்ந்தது, நேற்று இருந்த தலைவலி இப்போது இல்லை என்பதைத்தான். அது பெரிய ஆறுதலைக் கொடுக்க… இப்போதாவது வேலையைப் பார்ப்போம் என அப்போதே எழுந்து கொண்டாள். 


ஓய்வறைக்குச் சென்று விட்டு நீர் வடியும் முகத்தோடு வெளியே வந்தவள், முகத்தைத் துடைத்துக் கொண்டு சமையல் அறைக்குச் சென்றாள். முன்தினம் தலை வலியால் எந்த வேலையும் பார்க்கவில்லை. சமையல் மட்டும் செய்திருந்தாள். சமையல் மேடையில் ஒரு பக்கம் கழுவ வேண்டிய பாத்திரங்கள் மலை போலக் குவிந்திருக்க… வீடும் போட்டது போட்டபடி கிடந்தது. அதைப் பார்க்கவே தலை சுற்றியது. 


முன்தினம் மிச்சமிருந்த பாலை சுட வைத்து காபி போட்டுக் குடித்தவள், பின் மளமளவென்று வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தாள். கழுவ வேண்டிய பத்திரங்களைக் கழுவி, ஸ்டவ் மற்றும் சமையல் மேடையைத் துடைத்து, அந்த அறையை மட்டும் அல்லாது, வீட்டையும் பெருக்கி துடைத்த பிறகுதான். வீடு வீடாகத் தெரிந்தது. 


நேற்று இருந்த தலைவலியை விட. வீடு இப்படி இருக்கிறதே என அதுதான் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. வீடு சுத்தமாக இல்லையென்றால்… பெண்களால் உடம்பு முடியவில்லை என்றாலும் நிம்மதியாகப் படுத்திருக்க கூட முடியாது போல என நினைத்துக் கொண்டாள். 


வெளியே வாசலையும் பெருக்கி கோலமிட்டு வந்தவள், நேராகக் குளிக்கச் சென்றாள். 


அவள் குளித்து முடித்து வந்த போதுதான், அவளுது மாமியார் அறையில் இருந்து வெளியே வந்தார். பால் கூடக் காய்ச்சாமல் இருப்பதைப் பார்த்தவர், “இன்னும் பால் கூடக் காய்ச்சலையா?” எனக் கேட்க, 


பால் இருந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்துவிட்டுப் பதில் சொல்லாமல் வெளியே சென்றுவிட்டாள். 


ரொம்பத் திமிர்தான் என நினைத்தவர், பால் பொங்கியதும், தனக்கும் கணவருக்கும் காபி கலந்து எடுத்து சென்றார். அன்று ஞாயிறுக் கிழமை என்பதால் பிள்ளைகளுக்குப் பள்ளி இல்லை. அதனால் அவர்கள் இன்னும் உறங்க, சலவை இயந்திரத்தில் துவைக்க வேண்டிய துணிகளைத் துவைக்கப் போட்டவள், நேற்று மடிக்காமல் இருந்த துணிகளை மடித்து வைத்தாள். 


காலை வேளைக்கு டிபன் செய்ய வேண்டும். அதற்கு இன்னும் நேரம் இருக்க…மகள்களின் அருகே கட்டிலில் சாய்ந்து கொண்டாள். 


“வா இளா… காபி குடிக்கிறியா?” என மாமியாரின் குரல் காதில் விழ, அதைத் தொடர்ந்து, 

“வெளியவே ஆச்சு மா…” என்ற கணவனின் குரலும் கேட்க, வெண்மதி எழுந்து கொள்ளாமல் அப்படியே படுத்திருந்தாள். அவள் குளித்துக் கொண்டிருக்கும் போது அவன் எழுந்து வெளியே சென்றிருக்க வேண்டும். 


சில நிமிடங்கள் இடைவெளியில் கணவன் மேலே சென்றிருப்பான் என யூகித்து, எழுந்து வெளியே சென்றவள், உணவு மேஜையில் அவன் வாங்கி வந்து வைத்திருந்த ஆட்டுக் கறியை பையோடு எடுத்துக் கொண்டு சமையல் அறை சென்றாள். 


கறியை சுத்தம் செய்து மஞ்சள் தூள் உப்பு போட்டு வேக வைத்தவள், பாதியை மட்டும் குழம்பு செய்துவிட்டு, பூரிக்கும் மாவு பிசைந்து வைத்துவிட்டு, மகள்களைத் தேடி சென்றாள். 


இவள் எழுப்ப அவர்கள் எழுந்துகொள்ளாமல் உறக்கத்தைத் தொடர…. “உங்க அப்பா கறி வாங்கிட்டு வந்திருக்கார். எழுந்து குளிச்சாதான் பூரி சுட்டுக் கொடுப்பேன். இல்லைனா இன்னைக்கும் இட்லிதான்.” என்றதும், இருவரும் “பூரி தான் வேணும்.” என, அப்போ எழுந்து குளிங்க என்றாள். 


இருவரும் உடனே எழுந்துகொள்ள… அவர்கள் தலையில் எண்ணெய் வைத்து விட்டவள், அவர்கள் பல் துலக்கி வரவும் பாலை எடுத்து வந்து கொடுத்தாள். அவர்கள் குடித்ததும், பிறகு இவளே இருவருக்கும் தலைக்கு ஊற்றிவிட்டாள். 


இருவரின் தலையிலும் ஈரம் போகத் துடைத்துக் கொண்டிருக்க, “கஜா, உங்க அப்பா சாப்பிட வந்துட்டான்.” எனக் குரல் வர…. “நான் போய்ப் பூரி சுடுறேன். நீங்க டிரஸ் போட்டுட்டு வாங்க.” என வெளியே சென்றவள், ஹாலில் இருந்த கணவனை நிமிர்ந்தே பார்க்காமல் சமையல் அறைக்குச் சென்றாள். 


எண்ணையைக் காய வைத்து விட்டு, பூரிக்கு மாவை தேய்த்து ஒரு தட்டில் வட்டமாக அடுக்கிக் கொண்டே வந்தவள், எண்ணெய் காய்ந்ததும், ஒவ்வொன்றாகப் போட்டு எடுத்தாள். 


முதலில் கொஞ்சம் பூரிகளைச் சுட்டு எடுத்தவள், அதை எடுத்துக் கொண்டு பரிமாறச் சென்றாள். கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் தட்டில் பூரியை வைத்துக் கறிக்குழம்பு ஊற்றிவிட்டு வந்தாள். 


இளமாறன் இளைய மகளின் தட்டில் இருந்த கறியை அவள் உண்ணும் வகையில் எலும்பில் இருந்து பிரித்துக் கொடுக்க…. கஜலக்ஷ்மியும் வரலக்ஷ்மியும் அவர்களுக்குப் பிடித்த காலை உணவை ஒரு பிடி பிடித்தனர். 


இவர்கள் உண்ணும் போது, இளாவின் அம்மாவும் அப்பாவும் உண்ண அமர…. வெண்மதி வந்து பூரிகளை எல்லோருக்கும் பொதுவாகப் பாத்திரத்தில் வைத்துவிட்டு செல்ல…. வசந்தா தனக்கும் தன் கணவருக்கும் அவரே பரிமாறிக் கொண்டார். 


வெண்மதி குழம்பை மொத்தமாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வந்து வைத்திருந்தாள். வசந்தா அவருக்கும் அவர் கணவருக்கும் கறியை அள்ளி வைத்து நிறையக் குழம்பை ஊற்றிக் கொண்டு உண்டவர், அடுத்த முறையும் நிறையக் குழம்பை எடுக்க…. 

“ஆட்டுக்கறி பசங்களுக்குச் சத்துன்னு வாங்கி இருக்கேன். நீங்க அப்பா எல்லாம் உங்க வயசுக்குக் கொஞ்சமா தான் சாப்பிடணும்.” என்றதும், வசந்தா முகம் மாறினாலும், குழம்பை கொஞ்சமாக ஊற்றிக் கொண்டார். 


இளா இப்படிச் சொன்னதால் தான் வெண்மதிக்கு எதோ கொஞ்சமாவது குழம்பு மீந்தது. இல்லையென்றால் அதுவும் இருக்காது. வசந்தா யாருக்கு இருக்கிறது இல்லை என்றெல்லாம் பார்க்க மாட்டார். அவருக்கும் அவர் கணவருக்கும் வயிறு நிறைந்தால் போதும். 


வெண்மதிக்கும் கணவன் பேசியது கேட்டே இருந்தது. ஆமாம் ரொம்பதான் அக்கறை என அதுவும் எரிச்சலாகத்தான் இருந்தது. கசாப்புக் கடைக்காரன் ஆட்டிற்குப் பரிதாபம் பார்ப்பது போல…. என்ன ஒரு அக்கறை. 


எல்லோரும் உண்டதும் வெண்மதி மீதம் இருந்ததைச் சமையல் அறைக்கு எடுத்து வந்தவள், ஒரு தட்டில் நான்கு பூரிகளை வைத்துக் குழம்பை ஊற்றி அவளது அறைக்கு எடுத்து சென்று உண்டாள். 


மகள்கள் இருவரும் உள்ளே வர… “வீட்டுப்பாடம் இருந்தா எடுத்து பண்ணுங்க. இந்த வாரம் என்ன நடத்தினாங்க எல்லாம் படிச்சாச்சா? நான் சாப்பிட்டு வந்து கேட்பேன்.” என்றதும், இருவரும் தங்கள் புத்தகப் பையோடு படிக்க அமர… அப்போது உள்ளே வந்த இளமாறன், “மதியத்துக்கு எதுவும் வாங்கனுமா?” எனக் கேட்க, தட்டிலேயே பார்வையைப் பதித்து, வேண்டாம் என்றாள். 

“கொஞ்சம் சிக்கென் வாங்கித் தரேன். பிள்ளைகளுக்கு வறுத்துக் கொடு.” என்றதும், “எனக்குப் பிரியாணி வேணும்.” எனக் கஜலக்ஷ்மி கேட்க, 

“அடுத்த வாரம் செஞ்சுத் தரேன்.” என வெண்மதி சொல்ல…. வேறு எதுவும் சொல்கிறாளா என்பது போல நின்று மனைவியைப் பார்த்தவன், அவ்வளவுதான் என்பது போல அவள் உண்ணுவதைத் தொடர… ஒரு பெரு மூச்சுடன் அறையில் இருந்து வெளியே சென்றான். 


ஞாயிற்றுக்கிழமைகளில் காலை உணவு முடித்து வீட்டில் இருந்து கிளம்பினால்… மதியம் வரை கடையில் இருந்துவிட்டு மதியத்திற்கு மேல் பாருக்கு சென்று விடுவான். மாலை வரை அங்கேயே குடித்துக் கும்மாளமிட்டு தான் வருவான். 


ஏன் இப்படி எனக் கேட்டால்… நான் நன்றாகச் சம்பாதிக்கிறேன, என் காசுல தான் குடிக்கிறேன், உனக்கு என்ன என்பான்? அவனை யாரும் கேள்வியெல்லாம் கேட்க முடியாது. 


பன்னிரண்டு மணி வரை மகள்களோடு உட்கார்ந்து வெண்மதி அவர்களைப் படிக்க வைத்தாள். அவள் எழுந்தால்… இவர்களும் எழுந்து விடுவார்கள். மகள்களின் படிப்பு விஷயத்தில் வெண்மதி மிகவும் கண்டிப்பு காட்டுவாள். 


பன்னிரண்டு மணிக்கு சமையல் அறைக்குச் சென்றவள், உலை வைக்க அரிசியை எடுக்க… ஹாலில் அவளது இளைய நாத்தனாரின் குரல் கேட்டது. 


“இவங்க வேற வந்துட்டாங்களா? சொல்லிட்டும் வர மாட்டாங்க.” எனச் சலிப்பாக நினைத்தவள், மாமியாருக்கு அவர்கள் வருவது தெரிந்துதான் இருக்கும். ஆனாலும் இவளிடம் சொல்லவில்லை. வெண்மதி என்றால் அவ்வளவு அலட்சியம். 

அவர்களை வரவேற்று நலம் விசாரித்தவள், அவள் அறைக்குச் சென்று கைப்பேசியை எடுத்தபடி மூத்த மகளை அழைத்தாள். 


“என்ன மா?” என்று வந்து நின்றவளிடம், “உங்க அப்பாகிட்ட சின்ன அத்தை வந்திருக்காங்க சொல்லு.” எனக் கணவனுக்குப் போன் செய்து கொடுக்க… அம்மா சொன்னதை அப்படியே மகள் தந்தையிடம் தெரிவிக்க… முன்னமே சொல்லிட்டு வர மாட்டாங்க என அவனுக்கும் எரிச்சல்தான். 


“அம்மாவை இருக்கிறதை வைக்கச் சொல்லு… பிரியாணி வாங்கிக் கொடுத்து விடுறேன்.” என அவன் சொன்னதை அப்படியே வெண்மதியிடம் சொல்லிவிட்டு கஜா வெளியே ஓடிவிட்டாள். 


இளைய நாத்தனார் மணிமேகலைக்கு இரண்டு மகன்கள். இருவரும் பதின் வயதில் இருப்பதால் நன்றாக உண்ணுவார்கள்… வீட்டில் இருப்பது எல்லோருக்கும் காணாது. அதுதான் கணவனை அழைத்துத் தகவல் சொன்னாள். 


சாதம் வைத்து அதோடு காலையில் எடுத்து வைத்திருந்த கறியை சுக்காவாகச் செய்தவள், ரசம், மோர் என எல்லாம் தயார் செய்து வைக்க, இளமாறன் பிரியாணியும், சிக்கென் வறுவலும் வாங்கிக் கடை ஆளிடம் கொடுத்து அனுப்பி இருந்தான். 


வீட்டில் சமைத்தது வெளியே வாங்கியது என எல்லாம் கலந்து பரிமாறியவள், அவர்கள் உண்டதும் கடமை முடிந்தது என அறைக்குள் சென்று புகுந்து கொண்டாள். 

வந்ததில் இருந்து வசந்தாவும், மணிமேகலையும் இவளைப் பற்றித்தான் குசுகுசுவென்று பேசிக் கொண்டிருந்தார்கள். என்னவோ பேசுங்க என்பது போல…. வெண்மதி உண்டுவிட்டு படுத்து உறங்கிவிட்டாள். 


நல்லவேளை மாலை இவள் எழுந்து வந்தபோது நாத்தனார் குடும்பம் கிளம்பியிருந்தது. இரவுக்கு இருப்பதை வைத்துச் சமாளிக்கலாம் என நினைத்தவள், மகள்களோடு டிவி பார்க்க அமர்ந்தாள். 


மறுநாள் பள்ளிக்கு செல்ல வேண்டும் எனப் பிள்ளைகளை நேரத்திற்கே வெண்மதி படுக்க வைத்திருந்தாள். பிள்ளைகள் கட்டிலில் படுத்திருக்க… இவள் கீழே பாய் விரித்துப் படுத்திருந்தாள். 


அப்போது இரவு பத்து மணி…. இன்னும் கணவன் வீடு திரும்பியிருக்கவில்லை. ஒருவேளை அங்கே சென்றிருப்பானோ என நினைக்கும் போதே நெஞ்சில் எறிந்த தீ, அவள் உடலெல்லாம் பற்றிக்கொண்டது போல எரிந்தது. அவள் நெஞ்சில் எரியும் தீ என்றுதான் அணையுமோ… இல்லை அவளையே அழிக்குமோ…. 


வீடு திரும்பிய கணவனுக்கு மாமியார் கதவு திறந்து விடுவது கேட்டது. இளமாறன் மாடியில் இருக்கும் அறைக்குச் சென்று தான் படுப்பான். 


வெண்மதி தான் தள்ளியிருந்ததோடு அவனையும் தள்ளி வைத்திருந்தாள். 


அதன் பிறகு எங்கே உறங்குவது. மனம் நடந்து முடிந்தவையை அசைப்போட்டது. இத்தனைக்கும் இளமாறன் வெண்மதி இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள். ஒரு திருமணத்தில் பார்த்து வெண்மதியை பிடித்துவிட…. அன்றில் இருந்து அவள் செல்லும் இடம் எல்லாம் சென்று அவளையும் காதல் சொல்ல வைத்திருந்தான். 


அவர்கள் ஆட்கள் தான். அப்போது ஒரு கடைதான் வைத்திருந்தான். வெண்மதி வீட்டிலும் இவர்கள் எதிர்ப்பார்த்த நகை, பணம் செய்வதாகச் சொல்ல… திருமணம் எந்தத் தடங்களும் இல்லாமல் நடந்தேறியது. இரண்டு குழந்தைகள் பிறக்கும் வரை எந்தப் பிரச்சனையும் இல்லை. 


இளமாறன் காதலிக்கும் போது இருந்ததற்கும், திருமணம் முடிந்த பிறகு இருந்ததற்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தது. காதலிக்கும் போது அத்தனை முறை கைப்பேசியில் அழைத்துப் பேசியவன், திருமணதிற்குப் பிறகு இவள் அழைத்தால் கூட… என்ன ஏதென்று இரண்டு வார்த்தைகளில் பேசி வைத்து விடுவான். 


இவள் அம்மா வீட்டிற்குச் சென்றாலும் உடன் செல்ல மாட்டான். கணவனிடம் பேசலாம் என அங்கிருந்து அவள் அழைத்தால்… “நல்லா இருக்கியா… சாப்பிட்டியா?” என இருவார்த்தையில் முடித்துக் கொள்வான். இவள் மேலே பேச முயன்றாலும், “இரு வேலையா இருக்கேன், அஞ்சு நிமிஷத்துல கூப்பிடுறேன்.” என்பான். ஆனால் திரும்ப அழைக்கவே மாட்டான். 


திருமணதிற்கு முன்பு இருவரும் பைக்கில் நிறைய இடம் சுற்றி இருக்கிறார்கள். திருமணதிற்குப் பிறகு சில நாட்களில் வெண்மதி குழந்தையும் உண்டாகி விட… எப்போதோ ஒருமுறை தான் வெளியே செல்வது. 

முதல் குழந்தை பிறந்த பிறகு இளமாறன் முழுக்க நண்பர்களுடன் தான் நேரம் செலவழிப்பான். எதாவது விசேஷம் கல்யாணம் என்றாலும், அவன் அப்பா அம்மாவோடு வெண்மதியை அனுப்பிவிட்டு அவன் செல்ல மாட்டான். 


வெண்மதிக்கு கணவனோடு சேர்ந்து செல்ல வேண்டும் என ஆசையாக இருக்கும். அவள் அதைச் சொல்லிக் காட்டினால்… “என்ன உன்னோட பொழுதுக்கும் உட்கார்ந்து கொஞ்சிட்டு இருக்கணுமா? எனக்கு வேலை வெட்டி இல்லையா? உன்னை நல்லாதானே வச்சிருக்கேன்.” என்பான். 


அவனைப் பொறுத்தவரை காதலித்ததற்குத் திருமணம் செய்து கொண்டேன்…. இதற்கு மேல் என்ன வேண்டும். என் விஷயத்தில் நீ தலையிடாதே என்பது போலத்தான் நடந்து கொண்டான். 


எவ்வளவு நாள்தான் கணவன் அழைத்துச் செல்லவில்லை என வெளியில் செல்லாமல் இருப்பது. பிள்ளைகள் படத்திற்கு அல்லது வெளியில் செல்ல வேண்டுமென்றால்…. அவர்கள் வீட்டின் அருகே இருக்கும் ஜோதியுடன் வெளியே சென்று வந்தாள். ஜோதிக்கு இரண்டுமே மகன்கள். அவளும் இவளும் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வெளியே சென்று வருவார்கள். 


பிள்ளைகள் வெளியே செல்ல வேண்டும் என்று கேட்டால்… மறுக்காமல் அம்மாவோட போயிட்டு வாங்க எனப் பணத்தை எடுத்து ஆளுக்கு முன்பாக இளமாறன் நீட்டி விடுவான். 


என்னை மட்டும் அழைக்காதே என்பது போலத்தான் இருப்பான். இருவருமே பெண்ணாகப் பிறந்தது வசந்தாவுக்கு மிகுந்த வருத்தம். ஆண் வாரிசு இல்லை என்று புலம்புவார். ஆனால் இளமாறன் அப்படி ஒருநாளும் பேசியது இல்லை. மனைவிக்கு நல்ல கணவனாக இல்லையென்றாலும், பிள்ளைகளுக்கு நல்ல அப்பா தான். மகள்களின் மனம் நோக விடமாட்டான். ஆனால் அதே மனைவி மனம் நொந்தாலும், வெந்தாலும் அவனுக்கு அக்கறை இல்லை. 


உனக்கு எல்லாம் நான் இவ்வளவு பார்த்தா போதும் டி என்பது போலத்தான் திமிராக இருப்பான். 


இவருதான் நம்மோட இருக்க மாட்டேங்கிறார். நாம மேல படிச்சு வேலைக்காவது போகலாம் என நினைத்துக் கேட்டாலும், “நீ வேலைக்குப் போயிட்டா பிள்ளைங்களை யாரு பார்ப்பா? அதெல்லாம் தேவையில்லை.” என்பான். 


வீட்டில் மாமனார் மாமியார் இருக்கிறார்கள் அவர்கள் இல்லையென்றால் பரவாயில்லை. சரி தையலாவது கற்றுக்கொள்வோம் எனத் தையல் வகுப்புக்கு சென்று வந்தாள்…. ஆனால் இதுவரை தையல் இயந்திரம் வாங்கியே கொடுக்கவில்லை. இப்போது அப்போது என்பான் ஆனால் இதுவரை வாங்கிக் கொடுக்கவில்லை. 


அவள் வேலைக்குப் போய்ச் சம்பாதித்தால் தன்னை மதிக்க மாட்டாள் என நினைத்தனா… அல்லது மனைவி தன்னையே சார்ந்து இருக்க வேண்டும் என நினைத்தானோ… எதோ ஒன்றை நினைத்துக் கொண்டு, அவளை வேறு வேலை எதுவும் பார்த்து சம்பாதிக்க அவன் அனுமதிக்கவில்லை. 


வெண்மதியின் அக்கா ஜெயாவும், “அவர்தான் நல்லா சம்பாத்திக்கிறார் இல்லை… நீ வேற எதுக்கு அலைஞ்சிட்டு. பிள்ளைகளை நல்லா வளர்த்திட்டு நிம்மதியா இருக்காம.” எனச் சொல்ல… வெண்மதியும் கணவன் தனக்காகத்தான் பார்க்கிறான் போல என நினைத்து மகிழ்ந்து போனாள். 

Advertisement