Advertisement

சூரி வந்தான்.. மஹாக்கு, சந்தோஷம். ஜானுதான் வரவில்லை, தன்னை நட்பு வட்டத்தில் சேர்த்துக் கொள்ளவில்லை. இவன் வந்தது கொஞ்சம் சந்தோஷம். பேசிக் கொண்டிருந்தான் மஹா. தன் அன்னைக்கு அறிமுகப்படுத்தினான். மதி, அடுத்தமுறை ‘பொண்டாட்டியோடுதான் வரணும்’ என்றார்.

சூரி ‘கண்டிப்பா ஆன்ட்டி.. இப்போ டைம் இல்ல, நான் கிளம்பறேன்’ என்றவன், விடைபெற்று கிளம்பினான். 

மஹா, கிளம்பும் முன் தன் அன்னையிடம் வந்தான் “அம்மா, அந்த பைனாப்பிள் கேசரியை ஏதாவது பாக்ஸ்சில் போட்டுக் கொடேன்.. நான், ராகவ் அண்ணா வீட்டில் பார்த்துட்டு போறேன்” என்றான்.

மதி “ஆமாம் டா, ஜானுக்கு பைனாப்பிள் ப்ளேவர் ரொம்ப பிடிக்கும் காயத்ரியை வர சொல்லாம்ன்னு நினைச்சேன். ம்… எவ்வளவு தூரம் கூப்பிட்டேன் ஜானுவ, வரலை அவ. ராகவ் மதியம் வரேன்னு சொன்னான். இதை நீயே அவகிட்ட கொடுத்திடு. மதியம் ராகவ் காயத்ரி தேஜுவ இங்க சாப்பிட வர சொன்னேன் சொல்லு” என்றார் கோர்வையாக.

மஹா, அமைதியாக ஜானுவை மனதில் அசைப்போட்டுக் கொண்டே கேசரியுடன் வெளியே வந்தான்.

மேலே ஜனனியின் வீட்டிற்கு சென்றான்.

கார்த்திகேயன் கிளம்பியிருந்ததால், வீடு திறந்து இருந்தது. இவன் பெல் அடித்து உள்ளே சென்றான். தேஜு.. எதோ வரைந்துக் கொண்டிருந்தாள்.

ஜனனி, டைனிங் டேபிளில் அமர்ந்து உண்டுக் கொண்டிருந்தாள். உள்ளே, பெல் ஒலிக்கவும் எழுந்தவள், உள்ளே வரும் மஹாவை பார்த்தாள் “வாங்க” என்றாள்.

ஜனனி “காயத்ரி…” என்றாள், உண்டு முடித்து எழுந்துக் கொண்டே..

மஹா, அதை பார்த்து “ஜானு, இந்தா.. பைன்னாப்பிள் கேசரி, உனக்கு, உங்க அத்தை கொடுத்தாங்க..” என்றான்.

ஜனனி “ம்.. தேங்க்ஸ் வைச்சிடுங்க.. சாப்பிட்டுக்கிறேன்” என்றாள் கைகழுவிக் கொண்டே.

மஹாவிற்கு, என்னமோ போல் ஆனது.

காயத்ரி, கவனித்துக் கொண்டே இருந்தவள்.. “டீ போடவா மஹா” என்றாள் அவனின் கவனத்தைத் திருப்பும் விதமாக.

மஹா, இன்னும் அந்த கேள்வியை கவனிக்காமல் ஜனனியிடம்  “ஒரு ஸ்பூன் சாப்பிடு ஜானு” என்றான் கொஞ்சம் சத்தமாக.

காயத்ரி, அடுப்பில் பால் வைத்துவிட்டு, திரும்பி மஹாவை பார்த்தாள். எல்லோரும் இவ்வளவு உரிமையாக பழகுவதால்.. ஜானுவின் மீது கொண்ட அக்கறையில் அவன் பேசுகிறான் என எண்ணிக் கொண்டாள் காயத்ரி.

மஹா, என்னமோ கால்களை அழுத்தமாக ஊன்றி நின்றிருந்தான்.. அந்த டைன்னிங் ஹாலின் வாசலில், ‘எப்படி என்னை தாண்டி போகிறாய்’ என்ற தோரணையில். ஜனனி, அவனின் வார்த்தையையோ.. அவன் நிற்பதையோ கண்டுக் கொள்ளாமல்.. கைகழுவி எழுந்து வெளியே செல்ல போனாள்.

நடுவில் இவன் நிற்கவும், மஹாவை இப்போதுதான் நிமிர்ந்து பார்த்தாள் ஜனனி. 

மஹா அழுத்தமாக “உங்க அத்தை கொடுத்திருக்காங்க.. ஒரு ஸ்பூன் சாப்பிடு.. ப்ளீஸ்” என்றான்.

ஜனனி, அவனை முறைத்தாள். அவளின் நீலவண்ண சங்குமலர் கண்கள் லேசாக மேலெழுந்து வர.. எந்த ஒப்பணையும் இல்லை அங்கு.. ம்.. ஒப்பனைக்காக கூட எந்த இணக்கமும் இல்லை, அந்த கண்களில்.. அப்படி முறைத்தாள் அவனை.

காயத்ரி, ‘என்ன நடக்குது..’ என பார்த்திருந்தாள்.

ஜனனிக்கு ‘இதென்ன.. இவன் இப்படி’ என தோன்ற.. அவனின் தோளில் இடிக்காமல் லேசாக தன் உடலை குறுக்கிக் கொண்டு.. ஹாலுக்கு சென்றாள்.

மஹாவை, இப்போதும் சீண்டியது அவளின் செய்கை.. ‘தரதரவென அவள் கைபிடித்து, அவளை இழுத்து வந்து, ஒரு ஸ்பூன் கேசரியை ஊட்டி விடும்’ எண்ணம் பரபரத்தது அவனுள்.

என்ன செய்ய முடியும்.. நீண்ட பெருமூச்சு ஒன்றை எடுத்துக் கொண்டான் தனக்காக. பின் மஹா “காயத்ரிக்கா, வரேன் டைம் ஆச்சு” என்றவன் கிளம்பிவிட்டான்.

காயத்ரி “டீ, மஹா..” என்றாள். அவன் வாசல் வந்துவிட்டான் அதற்குள்.

ஜனனிக்கு முகம் முழுவதும் ரௌத்ரத்தை காட்டியது. அவளுக்கு, ‘யாரிவன், எனக்கு சொல்ல.. நீ சொன்னா உடனே சாப்பிடனுமா, எப்போதும் மிரட்டிகிட்டே இருக்க வேண்டியது.. டார்ச்சர் டா சாமி.. என் அண்ணனே என்னை மிரட்டினது கிடையாது.. இவன் யாரு’ என மனதில் ஓடிக் கொண்டிருக்க.. கைகள் தன்போல ஹன்ட்பாக்.. போன் எடுத்துக் கொண்டு.. சூரிக்கு மிஸ்டு கால் விட்டு.. ‘தான் கீழே வந்திடுவேன்’ என குறிப்பு கொடுத்து.. காயத்ரியிடம் தலையசைத்து.. விடைபெற்று.. என எல்லாம் செய்து லிப்ட் வந்தாள் பெண்.

அங்கு நின்றிருந்தான் மஹா.

கோவமாக வந்தது ஜனனிக்கு.. அத்தோடு சலிப்பாகி போனது ‘என்னதான் இவன் பிரச்சனை’ என. முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு.. லிப்ட் ஏறினாள். கூடவே இவனும் சென்றான்.

மஹாக்கு, என்னமோ அவளை நெருங்கும் வழியே தெரியவில்லை.. தன்னை முழுதாக தொலைக்கும் நொடிக்காக இவன் தவமிருக்க.. தவத்தை கண்டுக் கொள்ளாத கடவுளாக தெரிந்தால் அவள்.

மஹாதேவ், ஏதும் பேசவில்லை.. பேச தோன்றவில்லை.. அவளை பின்னிலிருந்து பார்த்துக் கொண்டே இருந்தான். ‘நான் எங்கே தவறுகிறேன்..’ என மனதில் யோசனை ஓடியது.

இருவரும் கீழ் இறங்கி, தங்கள் பாதையில் சென்றனர், அவன் திரும்பி பார்க்கவோ.. பேசவோ.. இல்லை சென்றுவிட்டான். ஜனனி, அவன் பேசுவான்.. ஏன் மெசேஜ் பண்ணலை என கேட்பான்.. காபி என வந்து நிற்பான்.. எனதான் எதிர்பார்த்தாள். ஆனால், ஏதும் அப்படி நடக்கவில்லை.. அமைதியாக செல்பவனை பார்க்க.. ஜனனிக்கு, கொஞ்சம்  மிக கொஞ்சமாக வலித்தது. ‘ஏன் நின்றான்.. ஏன் கூடவே வந்தான்’ என மீண்டும் உள்ளே ஓடிக் கொண்டிருந்தது.

இப்படியே தினமும் அவள் கிளம்பும் நேரம் சரியாக தன் இருப்பிடத்தில் அவளோடு லிப்ட்டில் ஏறிக் கொள்வான் மஹா.. ஏதும் பேசமாட்டான். அமைதியாக அவளை ஒருசில நொடிகள் கலவரப்படுத்திக் கொண்டிருக்கிறான்.

அடுத்த வாரத்தில் ஒரு நாள் ராகவ் ஜனனி கார்த்திகேயன் மூவரும் கோர்ட் வந்தனர். 

ஜனனிக்கு மனதில் அத்தனை ஆனந்தம்.. ஆனாலும் ஏதும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தாள்.

வசந்த் மற்றும் அவனின் பெற்றோர் வந்திருந்தனர். இவர்களின் முறை வரும் முன்.. ஒருபாடு ஜாடையாக முனுமுனுக்க தொடங்கிவிட்டார் வசந்தின் அன்னை “புருஷன் கூட வாழ..” என தொடங்கி ஏதேதோ பேசினார்.

வசந்த், தன் வக்கீளோடு நின்று அவளையே குரூரமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

என்னமோ நேரம் நீண்டுக் கொண்டே சென்றது.. இன்னும் இவர்கள் முறை வரவில்லை. சற்று நேரத்தில் என்னவென விசாரிக்க.. எதோ கைகளப்பு.. எனவே இவர்களின் நேரம் சற்று ஒத்தி வைத்திருந்தனர்.

ராகவ், டென்ஷன் ஆனான். அவர்கள் ஒருபுறம் முறைத்துக் கொண்டே நிற்க.. ஜனனி இந்தபக்கம் அந்தபக்கம் திரும்ப கூட முடியவில்லை. தங்கையின் நிலை பார்த்து.. இவனுக்கு, அவர்கள் மேல் எரிச்சலாக இருந்தது. நேரம் கடப்பேனா என்றானது ஜனனிக்கும் ராகவ்விற்கும்.

சூரி, சரியாக ஜனனிக்கு அழைத்தான்.. ‘என்னாச்சு’ என கேட்டு. ஜனனி பேசிக் கொண்டிருந்தாள்.. நடப்பவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தாள். அவனும் எனக்கு ஒன்றும் வேலையில்லை.. தான் வருவதாக சொல்லி போனை வைத்தான் சூரி.  

சூரி வந்தான் அரைமணி நேரத்தில்.

எதோ உண்பதற்கு வாங்கி வந்தான். பேசிக் கொண்டே அமர்ந்திருந்தான். ஜனனியை சற்று தூரமாக கூட்டி சென்றான்.

சற்று நேரத்தில் ராகவ்விற்கு அழைத்தான் மஹா ‘அண்ணா, எங்க இருக்கீங்க’ என கேட்டு. மஹாவிற்கு இன்று ஜனனி கோர்ட் செல்கிறாள் என தெரியும்.

சற்று நேரத்தில் மஹா வந்தான் அங்கு. ராகவ்வோடு அமர்ந்துக் கொண்டான். ஜனனியை கண்ணால் தேடினான், அவளை காணவில்லை.. ராகவ்விடம் கேட்டுத் தெரிந்துக் கொண்டான் ‘அவள் எங்கு இருக்கிறாள்’ என.

ராகவ்விடம், அந்த வசந்த் யாரென கேட்டு, பார்த்துக் கொண்டான். என்னமோ அவனின் குரூரமான பார்வை மஹாவை எரிச்சல்படுத்தியது.

இந்த நாட்களில் கொஞ்சம் கொஞ்சம் மஹாவிற்கு.. ஜனனியை பற்றி தெரிந்திருந்தது. அதனால், வசந்த் மேல் கோவம் என இல்லை.. எரிச்சல்.. ‘இப்படி ஒரு ஆண்மகனா’ என ஒருபார்வை பார்த்திருந்தான். ஆனால், அந்த வசந்த் தான்.. முழு ஆண்மகனல்லவே.. அதனால், பெரிதாக அவனை ஏதும் பாதிக்கவில்லை.

அந்த வசந்தை பாதித்தது எல்லாம் ‘என்னை ஊரறிய சைக்கோ’ என்றுவிட்டாள் என்ற வன்மம்தான் பாதித்து. 

சற்று நேரத்தில் இவர்களின் முறை வந்தது.

ஜனனிக்கு, எல்லாம் சாதகமாக இருந்தது. ‘இனி சட்டரீதியாக உங்கள் கணவன் மனைவி என்ற உறவு இன்று முதல் இல்லை.. என்பதை கோர்ட் உறுதி செய்கிறது’ என்ற எழுத்துகளை தாங்கிய காகிதத்தில் அந்த சட்ட பிரதிநிதி கையொப்பமிட்டார்.

வசந்த்தையும் அவர்கள் குடும்பத்தையும் அந்த கோர்ட் சற்று எச்சரித்தது.

ஜனனிக்கு கண்களில் நீர் திரண்டு.. இதழ்களில் புன்னகை உறைய.. பதுமையாக உறைந்து நின்றாள். ஜனனியையே பார்த்துக் கொண்டிருந்த.. மஹாவிற்கு இன்னும் அழுத்தமாக காலூன்றி நிற்க தோன்றியது. அவளை ஓய்ந்த புன்னகையுடனும்.. ஆனந்த கண்ணீருடனும்..  மீண்டும் அவளை தனக்குள், இன்னும் இன்னும் உள்வாங்கிக் கொண்டான் காதலனாக, மஹாதேவ். 

அதே காதலோடும்.. பழைய கர்வத்தோடும்.. அவளை தனக்குள் மீண்டும் வாங்கிக் கொண்டான். அவளின் தைரியத்தை மெச்சிக் கொள்ள தோன்றியது. என்னமோ அவள் தனக்கே சொந்தமானவள் என அசரீரி அவனுக்கு மட்டும் கேட்டது போல.. அவளையே பார்த்திருந்தான், மஹாதேவ்.

அவள் எந்த நிலையிலிருந்து தன்னை தேற்றிக் கொண்டிருக்கிறாள் என அறிந்ததிலிருந்து.. அவள் மேல் இன்னும் இன்னும் பிடித்தம் வருகிறதே தவிர.. தள்ளி வைக்க தோன்றவில்லை. அவளை ‘எனக்கானவள்’ என கொண்டாட மட்டுமே தெரிகிறது அவனுக்கு. இப்போதும் அப்படி கொண்டாடத்தான் தோன்றியது.. ‘எப்படி..’ என தன் கற்பனையை நீண்ட நாட்கள் சென்று தூசி தட்டிக் கொண்டிருந்தான் மஹா.. அந்த இடத்திலேயே.

“இன்று நேற்று நாளை..

என்றும் நீ என் தேவதை…

காதல் செய்யும் மாயை..

என் வானமெங்கும் பூ மழை..”

 

Advertisement