Advertisement

மரகத மழையாய் நீ!..

9

மஹாதேவ் கிளம்பும் வரை.. ஜனனி தன் அறையிலிருந்து வெளியே வரவில்லை. ராகவ்விடமும், கார்த்திகேயனிடமும்.. மதி கேட்டு கேட்டு சலித்துப் போனார்.

காயத்ரி “அவ அப்படிதாங்க ஆன்ட்டி.  வருவா.. நீங்க சாப்பிடுங்க” என்றாள்.

மதி “இல்ல, அவ வரட்டும் “ என அமர்ந்திருந்தார்.

மஹா, உண்டு தன் இருப்பிடத்திற்கு சென்றான். மதி ஆன்ட்டி மட்டும் இங்கேயே தங்கிக் கொண்டார். 

நேரம் சென்றுதான் வந்தாள் ஜனனி. தானே மதி அத்தையை நோக்கி “அத்த, சாப்பிட்டீங்களா” என்றாள்.

அவர் ஏதும் பேசவில்லை. காயத்ரிதான் “நீ வரட்டும்ன்னு வெயிட் பண்றாங்க ஆன்ட்டி.” என்றாள் கோவமாக.

ஜனனி “சாரி அத்த, கொஞ்சம் படிச்சிட்டு இருந்தேன் அதான் வரலை. வாங்க சாப்பிடலாம்” என்றாள் லேசாக சிரித்துக் கொண்டே.

மதிக்கு, சங்கடமாக போனது.. அவளின் ‘ஒன்றுமே இல்லையே’ என்ற பாவனையை பார்த்து. மீண்டும் ஏதேனும் கேட்டு, அவள் உள்ளேயே அடைந்துக் கொள்ள போகிறாள் என.. அமைதியாக அவளுடன் சென்றார்.

ஜனனி, தனக்கும் அவருக்கும் பரிமாறிக் கொண்டே “வா டி, அண்ணி சாப்பிடலாம், தனியா கூப்பிடனுமா” என்றாள், காயத்ரியை பார்த்து.

காயத்ரி, வருவதற்குள் “அத்தை.. ஏதும் தப்பா நினைக்காதீங்க. என்னோடதை பத்தி ஏதும் கேட்காதீங்க அத்த.. ப்ளீஸ், வீட்டில் எல்லோரும் அப்செட் ஆகிறோம். அதேயே பேசி பேசி.. ஒன்னும் ஆகபோறதில்லையே அத்தை, ப்ளீஸ்.” என்றாள் கொஞ்சாலாக பேசினாள்.

மதிக்கு, தானாக ஒரு பெருமூச்சு எழுந்தது ‘உண்மைதான்’ என. அந்த வளர்ந்த பெண்ணை பார்த்து ஆதூரமாக சிரித்தார். அவளின் அருகில் வந்து அவளின் தலை வருடினார்.. அமர்ந்திருந்த ஜனனியும் அவரின் இடையைக் கட்டிக் கொண்டாள் “சாரி அத்த, கஷ்ட்டபடுத்திட்டனா” என்றாள்.

மதியின் கண்களில் கண்ணீர் திரண்டு நின்றது.. ‘இல்லை’ என்பதாக அவரின் தலை தானாக அசைந்தது. 

ஓரிரு நிமிடம் கடந்தது.

காயத்ரி வந்தாள், இருவரின் நிலை பார்த்தாள், தனக்கும் பரிமாறிக் கொண்டாள்.. “விடு டி, அவங்க சாப்பிடட்டும். செய்யறதெல்லாம் செய்ய வேண்டியது.. அப்புறம் நேரம் கிடைக்கும் போது அழ வேண்டியது. சாப்பிடு” என்றாள் அதட்டலாக.

மதி “ஹம்.. அவ என்ன செய்வா.. பாவம். எல்லாம் பெரியவங்க தப்பு.” என்றார்.

ஜனனி “அத்த… ப்ளீஸ்” என்றாள்.

மதி “சரி சரி, சாப்பிடு” என்றார்.

மூவரும் ஒரு இலகுபாவத்திற்கு வந்தனர். தேஜு கதை பேசிக் கொண்டே உண்டனர். 

எல்லாம் முடித்து ஜனனி ”நீ போ, காய்.. நான் எல்லாம் எடுத்து வைச்சிக்கிறேன்.. நீ போ” என்றாள், நல்ல குரலில்.

காயத்ரி “நான் காய் சொல்லாத சொல்லிருக்கேன்..” என்றாள் ஜனனியை முறைத்துக் கொண்டே.

ஜனனி “அப்புறம் எப்படி சொல்ல… நீ, எங்க வீட்டு கோமாதா தானே.. அதான்.” என்றாள் கிண்டலாக.

காயத்ரி “எரும… எரும.. சாமி பேரு.. கொல்லாத” என்றாள்.

ஜனனி “நான் எங்க கொன்னேன்.. சொல்ல போனா.. உன்னை நல்லவன்னு சொல்லி இருக்கேன்.. காய்’ன்னா, பசுன்னு தானே அர்த்தம். நீ எங்க வீட்டு கோ’ மாதா.. அப்படி சொன்னேன்.. என்னை நீ பாராட்டனும்.. க்கும்…” என்றாள்.

காயத்ரி “இன்னிக்கு நீ எனக்கு ஹெல்ப் பண்றதால.. உன்னை விடுறேன்… தேங்க்ஸ் டி… தேங்க்ஸ்” என்றவள் கை கழுவிக் கொண்டு எழுந்து சென்றுவிட்டாள். தோசை இன்று இரவு உணவு.. எனவே, இரண்டு கல் வைத்து.. நின்றுக் கொண்டே ஊற்றியது காலெல்லாம் வலி காயத்ரிக்கு, எனவே சென்றுவிட்டாள் உடனே.

ஜனனி காயத்ரி இருவரும் இப்படிதான்.. கண்டுக் கொள்ள மாட்டார்கள், சரியாக பேசமாட்டார்கள்.. கொஞ்சம் கொஞ்சம் இருவரும் அடுத்தவரை நேரம் கிடைக்கும் போது வாரிவிடுவர். இவளை, அவள் எதிர்பர்க்கமாட்டாள், அவளும் இவளை எதிர்பார்க்கமாட்டாள்.. ஆனால், இப்படிதான் ஒருமாதிரி பொருந்தி போய்விடுவர். 

ஆனால், காயத்ரியிடம் இந்த அதட்டல் இல்லையென்றால் ஜனனி இன்னும் தனக்குள் ஒடுங்கி போயிருப்பாள். எல்லாம் நன்மைக்கே.

மதி அத்தை, ஜனனியுடன் தங்கிக் கொண்டார். அதிகாலையிலேயே எழுந்து குளித்து.. தன் வீட்டிற்கு சென்றார். 

மஹாவும், தன் அத்தை சித்தி என நான்கு உறவுகளை அழைத்துக் கொண்டு.. புது வீடு வந்தான்.

ஐந்தரைக்குள் பால்காய்ச்சி இருந்தனர், மதி வீட்டில். காயத்ரி.. கார்த்திகேயன் என இருவர் மட்டும் ஆறு மணிக்கே சென்றுவிட்டனர். சிறிது நேரம் இருந்துவிட்டு வந்துவிட்டனர்.

அந்தநாள் வழக்கமாக தொடங்கியது ஜனனிக்கு. அவளுக்கு மதி அத்தை வீட்டிற்கு இப்போது செல்லும் எண்ணமில்லை போல.. பொறுமையாக கிளம்பி வெளியே வந்தாள்.

காயத்ரி, அதை பார்த்து “ஜானு, ஒரெட்டு போயிட்டு வந்திடு ஜானு, ஆன்ட்டி உன்னை அப்போவே கேட்டாங்க.. ஏதாவது பீல் பண்ண போறாங்க..” என்றாள். 

ஜன்னி “ச்சு… இப்போ எல்லோரும் இருப்பாங்க.. நாளைக்கு போய்க்கிறேன்..” என்றாள்.

காயத்ரி அமைதியாகிவிட்டாள்.

கார்த்திகேயன், தன் அறையிலிருந்து கிளம்பி  வெளியே வந்தார், அவரும் அதையே கேட்டார் பெண்ணிடம் ‘நீ போகலையா டா’ என .

ஜனனி, அதே பதிலை திரும்ப சொன்னாள்.

கார்த்திகேயன் தலையசைத்து கேட்டுக் கொண்டார்.. “சரி டா..” என்றார் பெண்ணிடம். பின், தன் மருமகளிடம் சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டார் அலுவலகத்திற்கு.

அங்கே, காலையிலிருந்து இந்த அழுத்தம் கொண்ட ஜீவனை எதிர்பார்த்து.. மஹா காத்துக் கொண்டிருகிறான், இது தெரியாமல். மனதில் ‘அவள் வரமாட்டாள்’ என தோன்றினாலும்.. ஒருவாய்ப்பாக தன் அத்தைக்காக வந்துவிட்டால்’ என்றும் தோன்ற, கொஞ்சம் எதிர்பார்த்தான் அவளை.

வீட்டில் அவர்களின் சொந்தமாக பத்து நபர்கள் வந்திருந்தனர். எனவே பேசிக் கொண்டே அமர்ந்திருந்தான். எல்லோரும் அவனின் திருமணம் பற்றியே பேசினர். கேட்டு கேட்டு சிரித்து வைத்து சலித்து போனான்.

தாரா, வீடியோ காலில் அழைத்தாள். சட்டென அவளால் வரமுடியவில்லை. பெரியவன் பள்ளி செல்கிறான்.. எனவே விடுமுறை எடுக்க முடியவில்லை.. இந்த அரையாண்டு விடுமுறையில், வந்து சேர்ந்தார் போல.. பத்துநாள் இருக்கிறேன் என சொல்லி இருக்கிறாள் தாரா.. 

எனவே, தம்பிக்கு வீடியோ காலில் அழைத்தாள் தாரா. ஆனந்தமாக எல்லோரும் பேசினர் அவளிடம். மஹா அவள் பேசி வைக்கும் போது “தரு, உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்..” என்றான் நீ… நீண்ட நாட்கள் கழித்து. தாராக்கு கண்ணில் நீர் வழிந்துக் கொண்டே இருந்தது.. “நானும் தான்டா..” என்றாள். இன்னும் எதோ பேசினர் இருவரும்.

ஒருவழியாக போனை வைத்தனர் இருவரும்.

மஹா, எப்போதடா மணி எட்டு ஆகும் என காத்திருந்தான். மணி அதை காட்ட “ம்மா, நான் கிளம்பனும்..” என்றான்.

மதி “ஏன்டா, எல்லாம் இருக்காங்க.. நீ எங்கடா போற” என்றார்.

மஹா “ம்மா, எனக்கு வேலை இருக்கு.. ஈவ்னிங் சீக்கிரம் வரேன்” என்றான்.

மதி முகத்தை தூக்கினார். அவனின் சித்தியும் “ஏன் டா, லீவ் போட்டிருக்கலாமில்ல.. ஒருநாள் லீவ் கிடைக்காதா” என்றார்.

மஹா, தன் அம்மாவின் அருகில் வந்தான் “ம்மா… இது அநியாயம். நீ கேட்டேன்னு எல்லாம் செய்துட்டேன். உன்னை இவங்க கூட சேர்த்துட்டேன்.. அப்படியும் என் வேலையில் டிஸ்ட்ரப் பண்ணலாமா.. நீயே சொல்லு. உனக்காகத்தானே வந்தேன் இங்க. இப்போ முகத்தை இப்படி வைச்சா எப்படி மாம்…” என்றான் டென்ஷனாக.. என்னமோ அவன் ரெஸ்ட்லெஸ்சாக இருந்தான்.

மதி “சரி டா.. சரி, சாப்பிடு வா…” என்றார்.

ஒன்றும் சாமான்கள் இன்னும் வாங்கவில்லை.. நான்கு நாற்காலிகள் மட்டும் ராகவ் வீட்டிலிருந்து எடுத்து போட்டிருந்தான். வேறு எல்லாம் மாலையில்தான் வாங்க வேண்டும். எனவே, தன் அன்னை கொடுத்த தட்டை வாங்கிக் கொண்டு கீழே அமர போனான். அவனின் சித்தப்பா “டேய்.. வா, வந்து இங்க உட்கார்” என தான் அமர்ந்த இடத்தை காட்டி நின்றுக் கொண்டார்.

மஹா, அங்கே சென்று அமர்ந்தான். தன் சித்தப்பாவுடன் ‘எங்கு பொருட்கள் வாங்கலாம்’ என பேசிக் கொண்டே.. உண்டான், மஹா. 

Advertisement