Advertisement

மரகத மழையாய் நீ!..

8

அடுத்த அடுத்த நாட்களில் அவளின் எண்ணிற்கு காலையில் மஹா, தான்  ஜிம் செல்லும் போது ஒரு மெசேஜ் அனுப்பி விடுவான்.  அதை ஆசையாக செய்ய தொடங்கினான். என்னமோ, அவள் இன்னும் தனக்குத்தான் என.. அவளை பார்த்து.. வந்த நேரம் முதல் உள்மனம் சொல்லிக் கொண்டே இருக்கிறது, அவனிடம். எனவே, அவனுள், ஆதிகாலம் தொட்டே வரும் கர்வம் வந்து அமர்ந்துக் கொள்கிறது. ‘எப்படியும் என்னிடம் பேசுவாள்..’ என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை அது தர தொடங்கியது, அவனுள்.

மெசேஜ் பார்ப்பாள், அவள் பதில் அனுப்புவாள் என எதிர்பார்க்கவில்லை, அவன். 

‘தொடர்ந்து, தன் மெசேஜ் பார்த்து… கோவப்படுவாள், திட்ட தோன்றும்.. இப்படி எதோ ஒரு கெமிக்கல் நடக்கும்.. அப்போது அவள், சண்டையிடுவாள்.. மிரட்டுவாள், அப்படி அவள் தன்னிடம் பேசுவாள்’ என எண்ணிக் கொண்டான். ம், அப்படியாவது தன்னிடம் அவளை பேச வைத்து விடுவேன் என தனக்குள் சூளுரைத்துக் கொண்டான், மஹாதேவ்.

அதனால் விடாமல் அவளுக்கு மெசேஜ் செய்துக் கொண்டிருக்கிறான்.

ஜனனியின், கவனம் முழுவதும்.. கோர்ட் என்ற நிகழ்வை சுற்றியே இருந்தது. எனவே மஹாவின் செய்திகள் அவளை பெரிதாக பாதிக்கவில்லை. அவனின் செய்திகளை சிலநாட்கள் படிக்க கூடமாட்டாள் பெண்.

அவளின் சிந்தனை முழுவதும் ‘எப்படி இருந்தாலும் இந்த முறை சென்று வந்ததும் கண்டிப்பாக டிவோர்ஸ் கிடைத்துவிடும்..’ என்றார் அவளின் வக்கீல். அதிலேயே இருந்தது.

இந்த வழக்கை பொறுத்தவரை.. எல்லாம் ஜனனிக்கு சாதகமாக இருக்கிறது. இதற்கு வழக்கே தேவையில்லை.. சொல்ல போனால் இது திருமணமே இல்லை.. எனதான் ஜனனி வழக்கறிஞ்சரின் எண்ணம். எனவே எப்படி இருந்தாலும் பொதுவான நடைமுறைக்காகதான் ஜனனியை ஆஜராக சொல்லுவது. எனவே பயம் தேவையில்லை என்றார் அப்போதே. 

மேலும், அவர்கள் செய்வதற்கு இருக்கும் ஒரே வழி, ஜனனியை கோர்ட்டில் ஆஜராக விடாமல் செய்வதுதான் அவர்களின் ஆக சிறந்த ஏற்பாடாக இருக்கும்.. மற்றபடி, அவர்கள் பக்கம் எந்த நியாயமும் இல்லை.  அதனால், ஜனனி கவனமாக இருக்க வேண்டும் என  வக்கீல் சொல்லி இருந்தார். எனவே அதை சுற்றியே இருந்தது அவளின் நினைவுகள்.

அவ்வபோது திருச்சி நினைவுகள் வந்து அவளை பாடாய்படுத்தும். இருந்தும், இப்போதெல்லாம் அதை ஒதுக்கவே தேஜு வந்து அவளின் நேரத்தை எடுத்துக் கொள்கிறாள்.. எனவே, ஜனனி எப்போதும் போல இருந்தாள்.

என்ன, வெளியில் செல்லும் போது மட்டும் கவனம் கொண்டனர் வீட்டினர். அதனால், கால்டாக்ஸி.. இல்லை, சூரியோடுதான் மருத்துவமனை செல்லுவது இந்த நாட்களில். அப்படிதான் இன்றும், சூரியோடு செல்லும் போது.. அவனின் போன் ஒலித்து. 

அதை எடுத்து பேசினான்.. சூரி. ஜனனியின் முகம் கலவரமானது.. காரணம் அழைத்தவன் மஹா. 

மஹா “என்ன ஜி.. எப்படி இருக்கீங்க.. நான் மஹா பேசறேன்” என்றான்.

சூரி “ப்ரோ… நல்லா இருக்கேன். சாரி ப்ரோ, மறந்துட்டேன் வீடு இருக்கு.. மொத்தம் மூணு வீடு.. D பிளாக்கில், அதான் நம்ம ஜானு இருக்கிற பிளாக்கில், டென்த் ப்ளோர். அடுத்து.. A1னில், ஒன்னு இருக்கு… அது ட்வென்டியத்து ப்ளோர்” என முழு விவரமும் சொன்னான். 

மஹா “எது பெஸ்டுன்னு சொல்லுங்க.. எப்போ பேசலாம், எனக்கு ஓகே.. எப்போ அட்வான்ஸ் கொடுக்கனும்.. என்ன ப்ரோசிஜர், சொல்லுங்க செய்துக்கலாம்.. ஜி.” என்றான் ஒரே மூச்சில். வீட்டை பார்க்க கூட அவன் யோசிக்கவில்லை, அங்கே சென்றுவிட்டால் போது என்ற நிலையிலிருந்தான் மஹா. அவனிற்கு ஜனனியின் அருகில் இருக்க வேண்டும் என தோன்ற தொடங்கியிருக்கிறதே.

சூரி “உங்க அம்மா, பார்க்க வேண்டாமா.. முதலில் வீட்டை பாருங்க, பேசிக்கலாம்” என்றான் பொறுமையாக.

மஹா “ஓகே.. ஈவ்னிங் வரேன் ஜி..” என்றவன் மீண்டும் இரண்டொரு வார்த்தை பேசி வைத்தான்.

ஜனனிக்கு, ‘எதுக்கு இவன் இங்கே வருகிறான்’ என்றிருந்தாலும்.. ஏதும் கேட்க முடியவில்லை. அமைதியாக அமர்ந்திருந்தாள்.

மஹா, மாலையில் வந்தான் வீடு பார்க்க, சூரி இல்லை. செக்யூரிட்டி மூலம் சாவி வாங்கிக் கொண்டு வீட்டை பார்த்தான். குறிப்பாக ஜனனி இருந்த பிளாக் வீட்டைதான் நன்றாக பார்த்தான்.. அது பிடித்திருப்பதாக சூரியிடம் பேசி.. மேற்கொண்டு பேச சொல்லினான்.

வீடு பார்த்து ராகவ் வீட்டிற்கு வந்தான்.

ராகவ், அலுவலகம் சென்றிருந்தான். காயத்ரிதான் வரவேற்றாள் மஹாவை. மஹா “அண்ணா, சொன்னாரா அக்கா, இங்கதான் வீடு பார்த்திருக்கேன்” என்றான்.

காயத்ரி “ம்.. சொன்னாங்க தம்பி, மாமா கூட ரொம்ப சந்தோஷப் பட்டார்.. வாங்க வாங்க, அம்மா எப்போ வராங்க” என அடுத்தடுத்து கேள்வியாக கேட்க தொடங்கினாள்.

மஹா, காபி குடித்து.. எதோ கொறித்து முடித்தும், ஜனனியை காணவில்லை, தேஜு பாப்பாவும் அங்கும் இல்லை. 

மஹா “எங்க அக்கா, பாப்பா” என்றான்.

காயத்ரி “அவளும், அவ அத்தையும் ஜும்பா கிளாஸ் போயிருக்காங்க.. இன்னும் ட்வென்டி மினிட்ஸ் ஆகும் வர..” என நேர கணக்கு சொன்னாள்.

மஹா, லேசாக சிரித்துக் கொண்டே “பாப்பாவுமா” என்றான்.

காயத்ரி “அங்கே சும்மா, இவ ஒரு ஓரமா விளையாடிட்டு இருப்பா.. அதான் எப்போவாது இப்படி ஜானு கூட்டி போவா” என்றாள்.

கார்த்திகேயன், வந்தார். அவர், மஹாவிடம் பேச தொடங்கினார். மஹா எப்படியாவது ஜானுவை பார்த்து செல்லாம் என நேரம் கடத்திக் கொண்டிருந்தான்.

அரைமணி நேரம் சென்று ஆடி அசைந்து ஜானுவும் தேஜுவும் வந்தனர். தேஜு சலசலவென எதோ பேசியபடியே அந்த வராண்டாவில் வர.. அப்போதே மஹா ரெடியாகிக் கொண்டான் ஜானுவை பார்க்க.. நிமிர்ந்து அமர்ந்து தயாராக இருந்தான்.

நீண்ட நாட்கள் ஆகிற்றே அவளை பார்த்து.. ‘மெசேஜ்’ என்ற ஆயுதம் இன்னும் அவனுக்கு வேலை செய்யவில்லையே, பதிலே தராமல் கல்லுமாதிரி இருப்பவளை சீண்ட தோன்றியது அவனுக்கு ‘பாரு.. உன் வீட்டுகிட்டையே வர போறேன், திருப்பியும் பழையபடி என் கண்ணில் நீ பட போகிறாய்’ என தம்பட்டம் அடிக்க தோன்றியது அவனுக்கு. எனவே தயாராகினான் மஹா. ஆபீஸ் உடையில் கொஞ்சம் தோரணையாக நிமிர்ந்து அமர்ந்துக் கொண்டான்.

ஜானு உள்ளே வந்தாள். ஹாலில் இவன். ஏதுமே பாவனையே இல்லாமல் இவனை அப்படியே கடக்க நினைத்தாள் பெண். முகத்தில் எந்த மாற்றமும் இல்லை, ‘ஏன் வந்தாய்’ என கூட இவனை நிமிர்ந்து பார்க்கவில்லை ஜனனி.

மஹாவின், கர்வம் இப்போதும்.. இத்தனை வருடங்கள் சென்றும்.. பலமாக அடிவாங்கியது, அவளிடத்தில்.

இப்போது, கார்த்திகேயன் “ஜானும்மா, மஹா தம்பி வந்திருக்கு.. வாங்க கேளு” என்றார்.

ஜனனி, இன்ஸ்டன்ட் புன்னகையுடன்  “ஹாய்… “ என்றாள்.

மஹாக்கு, கோவமும் சலிப்பும் கலந்து வந்தது. ஆனாலும் அவளிடம் மட்டும் எத்தனை முறை தன் மூக்குடைந்தாலும்.. தேடி எடுத்து.. ஓட்ட வைத்துக் கொண்டு.. மீண்டும் அவளை பார்க்க தோன்றியது போல அவனுக்கு. மஹா  “ஹாய்.. உங்களுக்கு டியூட்டி அதுக்குள்ள முடிஞ்சிடுச்சா” என்றான், அவளிடம் பேச வேண்டும் என, எதோ உளறினான்.

மஹா “ம்.. நா… நான் டயர்டா இருக்கேன்.. பை” என்றவள் உள்ளே சென்றாள்.. பின்னாடியே வால்பிடித்துக் கொண்டு தேஜு சென்றாள்.

மஹா, செல்லும் அவளையே பார்த்திருந்தான்.

இப்போது தேஜு கண்ணில் பட்டாள். மஹா, ‘அய்யோ குழந்தையை மறந்தேனே’ என எண்ணி “தேஜு பாப்பா…” என்றான். பாவம் ஏதும் வாங்கி வரவில்லை, குழந்தையை எப்படி அழைப்பது என எண்ணி அழைத்தான்.

தேஜு, நின்றாள் “ஹாய் அங்கிள்“ என்றாள் குழந்தை.

மஹா, அந்த ‘அங்கிள்’ என்ற வார்த்தையில் பயந்து.. விழித்தான். சுதாரிக்க முடியாமல் விழித்தான். குழந்தையிடம், ‘நான் அங்கிள் இல்லை, அண்ணா’ என சொல்ல ஆசை. ஆனால், எப்படி சொல்லுவது என  தெரியவில்லை. 

ஆனாலும், அவன் மனசாட்சி ‘டேய்.. உண்மைய சொல்லு, நீ என்ன காலேஜ்ஜா படிக்கிற. அந்த குழந்தைக்கு, நீ அங்கிள் தான்டா..’ என இடித்து கூற.. அமைதியாக குழந்தையிடம் பேசினான்.

மஹா “வாங்களேன் டாடா போலாம்.. உங்களுக்கு சாக்லெட் வாங்கி வரலாமா.. ” என்றான், ஆசையாக.

தேஜு, யாரையும் பார்க்கவில்லை தானே “நோ.. நோ  அங்கிள், அப்புறமா போலாம்” என்றாள் மழலையாக.

கார்த்திகேயன், தன் பேத்தியை அழைத்தார், அருகில் வந்து அமர்ந்துக் கொண்டாள் தேஜு. கார்த்திகேயன் “அவ கொஞ்சம் பழகணும் மஹா, அவளுக்கு சாக்லெட் இன்னும் பழகலை.. பிஸ்கெட் எல்லாம் அவ்வளவா கொடுக்கிறதில்லை. நீ அடுத்த தரம் வரும் போது வாங்கிக் கொடு பரவாயில்லை..” என்றார் பாந்தமாக.

மஹா, சிரித்துக் கொண்டே எழுந்தான் “குட் ஹப்பிட் அங்கிள்.. “ என்றவன் பேசி, விடைபெற்று கிளம்பினான், ஒரு பெருமூச்சோடு.

மஹாவிற்கு, எப்படி அவளை நெருங்குவது என தெரியவில்லை. ‘நேரில் பார்த்தாள் எரிச்சலாவது ஆகுவாள்’ என பார்த்தால், அதுவும் இல்லை ‘அப்படியே கூலா கண்டுக்காம போறா’ என தோன்றியது அவனுக்கு. அது என்னமோ, இன்னும் இன்னும் அவளை நெருங்க நினைக்கிறதே தவிர, அவளை விட்டுவிட அவன் மனம் நினைக்கவில்லை. ‘என்ன கான்பிகிரெஷன் நான்..’ என சிரித்துக் கொண்டே சிந்திக்க தொடங்கினான் மஹா.

தன் கல்லூரியின் நினைவு வந்தது.. நன்றாக படிக்கும் மாணவன், கூடவே கொஞ்சம் அழகன் வேறு. எனவே, வகுப்பு முடித்து.. நேரே வீடு வந்துவிடுவான். கல்லூரியில் இங்கு, அங்கு என நின்று பேசவே மாட்டான். அவனை பெரிய கூட்டமே எப்போதும் தேடும், அதிலும் பெண்கள் அவனை எங்கு பார்த்தாலும் “ஹாய் தேவ்.. “ என பேசாமல் கடக்கமாட்டார்கள். பெண்கள் நிறையப்பேர் அவனின் கண்ணில் படவே இவன் வகுப்பறையை வலம் வருவர். 

அதெல்லாம் இப்போது கண்முன் வலம் வந்தது.. அந்த நினைவில் அவனின் இறுக்கம் தளர்ந்தது.. ‘எத்தனை பெண்கள் என்னை பார்த்து பேச நினைத்திருப்பார். என் பெயர் அந்த மேடையில் ஒலிக்கும் போதே எத்தனை சத்தம் கேட்டும் அந்த இடம்… யுனிவர்சிட்டி டாப்பர் டி நான்.. என்னை! என்னை.. இப்படி கண்டுக்காமல் போகிற ஒருத்தி.. அவளை துரத்தி நான்..’ என கவிதையாக நினைத்துக் கொண்டே தன் முகத்தை, கண்ணாடியில் பார்த்துக் கொண்டே காரோட்டினான் மஹா.

“காதல் கவிதைகள் வரையும்…

காதல் கலங்கும்…

காதல் குழம்பும்…

காதல் ஓரளவுக்கு புரியும்..

காதல் விலகும்…

காதல் பிரியும்..”

மஹா, வீட்டின் புகைப்படம், வீடியோ என எல்லாம் எடுத்து தன் அக்காவிற்கு அனுப்பினான். அம்மாவிடம் நல்ல இடம் என புகழ்ந்தான்.

மதி “ஏன் டா, இவ்வளவு நாளா.. ஆபீஸ் பக்கத்தில் வேண்டும்ன்னு கேட்டுட்டு, சித்தப்பா சொன்ன இடத்தையெல்லாம் விட்டுட்ட.. இப்போ வந்து ecrல் வீடு பார்த்திருக்க… ஒன்னும் புரியலை டா…” என்றார் கேள்வியாக.

மஹாவிற்கு கொஞ்சம் நெருடல்தான் எனவே “என்ன இப்போ, உங்களுக்கு எல்லாம் உள்ளேயே கிடைக்கும்.. புல் சேஃப்.. அமைதியா இருக்கு இடம்.. பக்கத்தில் பீச், கோவில் எல்லாம் இருக்கு.. உங்க வசதியை பார்த்தேன்.. “ என வெடுவெடுத்தான் மகன்.

மதிக்கும் தாராவிற்கும் ஒன்றும் புரியவில்லை. ஆனால், இவன் சொல்லுவது போல வீடு இடம் எல்லாம் நன்றாக இருந்தது. எனவே, தாரா “அம்மா, அவன் US மாதிரி தேடுவான் போல.. எதோ ஒன்னு, வீடு பிரச்சனை ஓய்ந்தது. விடுங்க, எல்லாம் நல்லாத்தான் இருக்கு.. அவனுக்கு, கல்யாணம் பண்ற வழிய பாருங்க” என்றாள், அவளும்.

இனி மதி என்ன சொல்ல முடியும். ‘எப்படியோ எல்லாம் நடந்தால் சரி’ என சென்னை வந்தார் அடுத்த வாரத்தில். 

மதி, தன் நாத்தனார் வீட்டில் இரண்டுநாள், கொழுந்தனார் வீட்டில் இரண்டு நாள்.. என தங்கி உறவை வளர்த்தார். மதி, வந்த அன்றே கார்த்திகேயனிடம் பேசி இருந்தார். மேலும் வீட்டுக்கு தேவையானவை எல்லாம் வாங்க வேண்டி இருந்தது. அந்த பர்சேஸ் சிலது முடித்துக் கொண்டார்.

நாளை தங்களின் புது வீட்டிற்கு பால்காய்ச்சுவதாக ஏற்பாடு. எனவே, மஹாவும் மதியும் முதல்நாள் மாலையே ராகவ் வீட்டிற்கு வந்தனர்.

மதி, மாலையில் ஒரு ஐந்து மணிக்கு வந்தார். ராகவ் இதற்காகவே பர்மிஷன் எடுத்துக் கொண்டு அமர்ந்திருந்தான். கார்த்திகேயன் வேலைக்கு சென்றிருந்தார். அவர், ஒரு வருடமாக ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்கிறார். எனவே, ‘அவர் வந்ததும் செல்லாம்.. அதுவரை  இருக்கலாம்’ என எண்ணி ராகவ் விடுப்பு எடுத்திருந்தான்.

மதி, உள்ளே வந்தார். முறையான உபசரிப்புகள் நடந்தது. பின் தானே சுகுமாரி பற்றி பேசினார், ஒரே அழுகை. ராகவ்விடம் ஒரே புலம்பல் “அவ எனக்கு எல்லாம் இருந்து செய்தா.. நான்தான் அவள் இறந்ததுக்கு கூட வரலை..” என கண்களை துடைத்துக் கொண்டார்.

ராகவ் “எல்லாம் நேரம் அத்த.. விடுங்க” என சமாதானப்படுத்தினான்.

ஆனால், மதியால் அதன்பின் பேச முடியவில்லை. அந்த வீட்டின் ஒவ்வொரு பொருளும் சுகுமாரியை நினைவுப்படுத்தியது மதிக்கு. மதி, என்னதான் வேலைக்கு சென்றாலும் கொஞ்சம் மனிதர்களை சார்ந்து வாழ்ந்த பெண்மணி.

முதலில் மாமியார், அடுத்து சுகுமாரிதான் அத்தனை வருடங்கள்.. மதிக்கு கைகொடுத்தது. மதியின் கணவர் பெரும்பாலும் வெளியூர் என்பதால் எல்லாம் சுகுமாரிதான், மதிக்கு. தன் கணவரின் கடைசி நேரங்களில் மருத்துவமனை.. இறப்பு.. என எல்லாவற்றுக்கும் அருகில் இருந்து பார்த்தது சுகுமாரியும் கார்த்திகேயனும்தான். சொந்தமும் வந்தது என்றாலும் இது நட்பாக செய்தது. அதனாலோ.. என்னமோ.. தான் ஏதும் பார்க்கவில்லை, அவர்களை என எப்போதும் வரும் எண்ணம் இன்றும் வந்தது. எனவே அழுகை நிற்கவில்லை மதிக்கு.

மஹா, அடிக்கடி “ம்மா.. அம்மா” என அழைத்து அவரை சமாதானப்படுத்தினான்.

தேஜு, தூங்கி எழுந்து வந்தாள்.. இப்போது வீடு சற்று கலகலப்பாகியது.

மஹா, இன்று இனிப்பு.. பழம்.. என வாங்கி வந்திருந்தான். இப்போதுதான் எடுத்து தேஜு கையில் கொடுத்தான். தேஜு “ஹைய், ஆராஞ்.. எனக்கு ரொம்ப் பிடிக்கும்” என வாங்கிக் கொண்டாள்.

மஹாக்கு, இப்போதுதான் கொஞ்சம் சிரிப்பு வந்தது முகத்தில்.

ஜனனி வந்தாள்.

மதி, அத்தையை பார்த்தும் பெரிதாக எந்த தாக்கமும் இல்லை. அமைதியானக் குரலில் “வாங்க அத்த” என்றாள்.

மதிக்கு, ஜனனியை பார்த்ததும் அதிர்ச்சி. ‘என்ன இருபத்து ஐந்து வயது பெண்ணா இது..’ எனதான் அதிர்ச்சி.

அவளின் உடை, முகம், சிகை அலங்காரம்.. எல்லாம் எதோ இரண்டு குழந்தைகளின் தாயாக காட்டியது அவளை. மதி “ஜானு குட்டி என்ன டா இப்படி இருக்க” என்றார்.

மஹா, மெதுவான குரலில் “ம்மா, அழாத.. அமைதியா பேசு” என்றான்.

மதி “என்ன டா அழாம பேச.. எப்படி இருந்த பிள்ளை தெரியுமா.. வாய் ஓயாது டா… வந்த நேரத்துக்கு.. ஏழு வருஷ கதையை இந்நேரம் சொல்லி இருப்பா டா… எப்படி டா அமைதியா இருக்கா…” என ஜானுவை கட்டிக் கொண்டார்.

ஜனனி, அவரை அணைத்து சமாதானப்படுத்தினாள். இயல்பாக “எப்படி இருக்கீங்க அத்த, அக்கா மாமா குட்டீஸ் எல்லோரும் எப்படி இருக்காங்க” என்றாள் மென்மையான குரலில்.

மதி “வளர்ந்துட்டியா ஜானு.. தாரா சொன்னா… ஜானு ரொம்ப மாறிட்டா அமைதியா இருக்கா.. கேட்ட கேள்விக்கு மட்டும்தான் பதில் சொல்றா.. பேசமாட்டேன்கிறா ம்மா..ன்னு சொன்னா.. 

ஆனா, இப்படி இருப்பேன்னு நினைக்கல டா. நீ தைரியமா இருடா.. அவன் ஒரு சைகோ.. அவன் போனா போறான்… நான் இருக்கேன், நல்ல இடமா பார்த்து.. உனக்கு ஏத்தவனா பார்த்து, நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன். உன் கெட்ட காலம் எல்லாம் முடிஞ்சிடுச்சி.. இனி எல்லாம் நல்லதா நடக்கும்.. நீ எப்போதும் போல சந்தோஷமா சலசலன்னு பேசிட்டே இருடா… இருப்பியா… இந்த அத்தைக்காக… டா..” என்றார் வாஞ்சையாக.

ஜனனி “அத்த, நல்லாதான் இருக்கேன்.. இருங்க குளிச்சிட்டு வரேன். நீங்க பேசிட்டு இருங்க வரேன்” என்றவள் உள்ளே எழுந்து சென்றாள்.

எல்லோருக்கும் முகம் விழுந்துவிட்டது.

மஹா தன் கைகளை இறுக்கிக் கொண்டு அமர்ந்திருந்தான். ‘அவன் சைகோ..வா..’ என கோவம் வந்தது, ஒன்றும் செய்ய முடியாத கோவம் வந்தது. கூடவே செல்லும் அவளின் அமைதியை பார்க்க முடியவில்லை அவனால் ‘இவ தேவதை டா… பட்டாம்பூச்சு.. வானவில்.. கண்சிமிட்டும் விண்மீன்.. ஆழ்கடல் சுழல்.. ‘ என மனது அடித்துக் கொண்டது இவனிற்கு.

“திகம்பரி…

வலம்புரி…

சுயம்பு நீ…

நீ…

பிரகாரம் நீ…

பிரவாகம் நீ…

பிரபாவம் நீ…

நீ…

சிருங்காரம் நீ…

ஆங்காரம் நீ…

ஓங்காரம் நீ…

நீ…”

Advertisement