Advertisement

மரகத மழையாய் நீ!..

7

எல்லா இடத்திலும் மனம் நிறைந்த புன்னகையை சிந்ததான் ஆசை..  ஆனால், முடிவதில்லை.. வருத்தத்தில் ஒரு புன்னகை.. குழப்பத்தில் ஒரு புன்னகை.. கோவத்தில் ஒரு புன்னகை, நமக்கு அவமானம் நேரும் போது.. பொது இடத்தில் வரும் ஒரு அவஸ்த்தையான புன்னகை.. சில நேரங்களில் வாழ்க்கை நம்மை பாரபட்சமே இல்லாமல் படுத்தும் போது வரும் விரக்தி புன்னகை.. எல்லாம் கலந்த ஒரு புன்னகையோடு இந்த நாளை கடந்துக் கொண்டிருக்கிறான்.. மஹா.

என்ன கேட்பது, யாரை கேட்பது.. எனதான் மனம் முழுவதும் எண்ணம், அவனுக்கு.

எதோ அவளை பற்றி நெருடிய நொடி முதல்.. அவன் மனம் அமைதியடைய மறுக்கிறது. அவள், கார் பஞ்சாயத்தை முடித்து மேலே வந்தது முதல்.. அமைதியாக எதோ வேலை செய்கிறாள்.. அவள்தான் உணவு பரிமாறினாள் எல்லோருக்கும். ‘இப்படி பொறுமையாக வேலை செய்வாளா’ என பார்த்திருந்தான் மஹா.

ம், இங்கே வரும் போது.. ஒரு ஆர்வம்.. ஒரு ஆசை.. ஒரு குறுகுறுப்பு.. ‘எப்படி இருப்பாள் இந்த வருடங்களில்..’ என ஒரு அசட்டு அவா. முதலில் பார்த்ததும் கூட பெரிதாக அவனுக்கு உறுத்தவில்லை. ஆனால், அருகில் பத்து நிமிடம் அவளை பார்த்ததும்.. தான் கேட்ட கேள்விக்கு யாரும் பதில் சொல்லாததும்.. கொஞ்சம் உறுத்த தொடங்கியது. எனவே, அவனையறியாமல்.. அவன் கண்கள் அவளை ஆராய்கிறது.

உண்டு முடித்து, சற்று நேரம் உறங்கி எழுந்து.. சூரி, ராகவ், இவன் என  ஆண்கள் ஹாலில் உள்ள பால்கனியில் அமர்ந்து கார்ட்ஸ் விளையாடும் போதும்.. ஜனனி, தேஜுவுடன் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். இவனுக்கு மனமெல்லாம் அவளிடம்தான்.

‘இப்படியெல்லாம் அவள் அமர மாட்டாள்..’ என உள்ளே ஓடிக் கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் மொட்டை மாடியில் நால்வரும் காட்ஸ் விளையாடும் போது.. அவள்தான் சிறியவள்.. என விட்டுகொடுக்க நினைப்பர், ஆனால், மூன்றாம் சுற்றிலேயே ரம்மி ஜெயித்து விடுவாள் ராட்சஸி. ஆஸ், ராஜாராணி.. என எது விளையாண்டாலும் அவள் பக்கம்தான் அதிஷ்ட்டம் எப்போதும். 

ஆனால், இவன் குதிப்பான்.. தன் அக்காவிடமும், ராகவ் அண்ணாவிடமும் “என்ன, அண்ணா.. எல்லோரும் அவளுக்கு எடுத்து எடுத்து கொடுக்கிறீங்க” என சண்டைக்கு நிற்பான். இப்போது எடுக்கவும் கொடுக்கவும் அவன் ஆசைப்பட.. அவளின் வாடிய முகம் ‘என்னதான் நடக்குது இங்க’ என்ற குழப்பத்தைத்தான் தந்தது அவனுக்கு.

இரவு ராகவ், மஹாவை இங்கேயே தங்கி செல்ளுமாறு எவ்வளவோ சொல்லியும்.. மனதில்லாமல் கிளம்பிவிட்டான் மஹா. 

இரவு உணவாக நாலு இட்லியை பார்சல் செய்து தந்தாள் காயத்ரி. சூரியிடம், நன்றாக பேசி பழகி அவனின் எண் வாங்கிக் கொண்டான். கிளம்பும் போதும் ஜனனியின் முகம் பார்த்தான்.. அவள் தேஜுதான் வாழ்க்கை என அமர்ந்துக் கொண்டாள். கார்த்திகேயன் ‘அடிக்கடி வா ப்பா’ என்றார் தன்மையாக.

விடைபெற்று காரெடுத்து வந்தான் மஹா.

தான் தங்கி இருக்கும் விடுதியின் அறைக்கு வந்தான் மஹா. பாரம் ஏறிக் கொண்டே இருக்கிறதே தவிர இறங்கவில்லை. ‘யாரிடம் கேட்பது.. ஏன்? என் வீட்டில் யாரும் சொல்லவில்லை.. அப்படினா, கல்யாணம் ஆகியிருக்கு. இல்லை, கல்யாணம் ஆச்சுன்னு பொய் சொன்னாங்களா.. என்கிட்ட எதுக்கு பொய் சொல்லணும். கல்யாணம் ஆச்சுன்னா, ஏன் அவங்க ஹப்பி பத்தி யாரும் பேசலை.. ஹய்யோ…’ என தாறுமாறாக சென்றது அவனின் சிந்தனை. விடியல்தான் வந்தததே தவிர.. விடை தெரியவில்லை அவனுக்கு. 

அவஸ்த்தையாக கழித்தான் அந்த இரவை. எதோ இரண்டுமணி நேரம் உறங்கி எழுந்து அலுவலகம் சென்றான் மஹா. 

அந்த வாரம்.. முழுவதும் மஹா யோசனையில் இருந்தான்.. ஆனால், யாரிடமும் கேட்க மனது வரவில்லை. தாரா, தம்பியை அழைத்துக் கொண்டே இருந்தாள்.. மஹாக்கு எல்லாவற்றையும் விட, ஜானுவின் முக்கியமாகி போனாள். வீட்டிலிருந்து அழைக்கும் போனையும் எடுக்கவில்லை மஹா.

மேலும், என்னமோ அவர்கள் மேல் கோவம் வந்தது ‘எதையோ மறைக்கிறார்கள்’ என கோவம் வந்தது. ஆனால், இவனிடம் ஏன் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை. 

இரண்டு மூன்று நாட்கள் செல்ல.. மஹாக்கு, ஏன் தாலி இல்லை.. ஏன் அமைதியா இருக்க.. அப்போ எதோ பிரச்சனை, யாரை கேட்பது.. ‘ என இதுதான் மண்டையில் ஓடுகிறதே தவிர, வேலை செய்ய முடியவில்லை அவனால்.

அவளிடமே நேரே கேட்டு விடுவது என முடிவு செய்துக் கொண்டான்.

ஆனால், எப்படி பார்ப்பது என தெரியவில்லை. அவள் வேலை செய்யும் மருத்துவமனையின் பெயர் தெரியாது.. அவளின் போன் நம்பர் தெரியாது.. என சிந்தனை வந்தது. ‘ஊப்… காற்று போன பலூனாக அமர்ந்தான் மீண்டும்.

‘மனம் என்ன மாயாவியா’ எல்லா கேள்விக்கும் விடை சொல்ல.. சூரிக்கு அழைத்து  கேட்கலாமா? என எண்ணம். ஆனாலும், ஒரு தயக்கம், என்னவென கேட்பது.. எது கேட்டாலும்.. அவளின் உண்மையான நண்பன் போல.. அவன் ‘நீ எதற்கு கேட்கிறாய்’ என கேட்டே விடும் நண்பன் போல… அந்த கார் சண்டையில் பார்த்தானே.. ‘ஜானு நீ மேலே.. போ.. நீ இரு நாங்க பேசறோம்’ என அவனின் அக்கறையை. எனவே திணறி நின்றான் மஹா.

அந்த வீக்கெண்டில்தான் தன் தமக்கையின் அழைப்பை ஏற்றான். அவன் எடுத்ததும் தாரா ஹிப்பிச்சில் அலறினாள் ”டேய்.. எரும, தண்டம்… என் டா இப்படி படுத்தற..” என்றாள்.

பதிலே பேசவில்லை அவன்..

தாரா, கத்தினாள் “ஏன் டா, ராகவ் அண்ணா, வீட்டுக்கு போயிட்டு வந்தியே.. ஏதாவது சொன்னியா. போன் செய்தாலும் எடுக்கறதில்லை.. என்னதான் நினைச்சிருக்க..” என்றாள்.

மஹா “என்ன சொல்லணும்..” என்றான் கொஞ்சம் கோவமாக. ‘அங்கே செல்லும் முன் அவர்களை பற்றி சொல்ல வேண்டாமா? நான் வேறு அங்கு சென்று.. அவளின் புருஷன் பத்தி கேட்டு.. எனக்குதான் கொஞ்சம். சங்கடமாக போகிற்று’ என உள்ளுக்குள் திட்டிக் கொண்டான்.

ஆனால், தாராவிற்கு அதெல்லாம் புரியவில்லை தாரா “ஏன் டா, வீடு பார்த்திட்டியா, பொண்ணு வீட்டிலிருந்து பேசறாங்க.. உன் போட்டோ பார்த்து பிடிச்சி போயிடுச்சாம்.. அம்மா ஜாதகம் எடுத்து வைச்சிருக்காங்க.. அதுக்கு பதில் சொல்லு..

அம்மா, சித்தப்பாகிட்ட பேசி இருக்காங்க.. அங்க வீட்டு பக்கத்தில் இரண்டு தெரு தள்ளி வீடு இருக்காம்.. உன்னை வந்து பார்க்க சொல்றார். ஈவ்னிங் கொஞ்சம் போய் பார்த்துட்டு வாயேன்.. மஹா. 

அம்மா புலம்பறாங்க.. சீக்கிரம் அந்த போட்டோ பார்த்துட்டு ஏதாவது சொல்லு டா..” என்றாள் இரவு நேரங்களில் எப்போதும் பேசுவது போல, மூச்சுவிடமால் பேசினாள். இவனுக்கோ மனதில் ஜானுவே ஓடிக் கொண்டிருந்தாள். 

அதனால், எதற்கும் இவன் அசையவில்லை, பதில் சொல்லவில்லை இப்போதுவரை. சென்னை வந்தது முதல்.. இதோ அதோ என ஒருமாதம் ஓட்டிவிட்டான், வீடு பார்க்கிறேன்.. என சொல்லி. 

இன்றும், தாராவின் பேச்சை எரிச்சலாகத்தான் கேட்டான். அவனுக்கு வீட்டிலிருந்து யார் அழைத்தாலும்.. ‘கல்யாணம்.. பெண்.. ஜாதகம்’ என பேசுவதால்.. ஒரு எரிச்சல். எனவே அதே மனநிலையில்தான் கேட்டுக் கொண்டிருந்தான். ஆனால், எதோ யோசனை வர.. தன் அக்காவின் போனை அவசரமாக கட் செய்துவிட்டு, சூரிக்கு அழைத்தான், மஹா. 

தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேச தொடங்கினான் “அந்த அப்பார்ட்மெண்டில் வீடு ஏதாவது இருக்கா பாஸ்..” என்றான்.

சூரி “அதெல்லாம் இருக்கு ப்ரோ.. நான் விசாரித்து சொல்றேன்” என்றான்.

மஹாக்கு, எதோ அவளை நெருங்கி இருக்கலாம் என எண்ணம் வந்தது. வீடு கிடைக்க வேண்டும் என வேண்டிக் கொண்டான் கடவுளிடம். கடவுளை அவன் கடந்த நான்கு வருடமாக தொந்திரவு செய்வதில்லை. இப்போது மீண்டும் ஜனனிக்காக அவரை தேடினான்.

ஜனனியிடம், கோர்ட்டில் இவளை வர சொல்லி இருப்பது பற்றி சொல்லினான் ராகவ். ஜனனி பெரிதாக ஏதும் பேசவில்லை.. ‘தெரியும்’ என்பதாக அமர்ந்திருந்தாள். வக்கீல் அலுவலகம் சென்று அவரை பார்த்து வந்தனர் அண்ணனும், தங்கையும். 

இப்படி ஒரு வழக்கு போடும் எண்ணமே முதலில் இல்லை கார்த்திகேயனுக்கு. வசந்தன் வீட்டில் முறையாக பேசி, பிரித்து விட்டுவிடலாம் என எண்ணம்தான். 

ஆனால், அவர்களின் பேச்சை தகப்பனான கார்த்திகேயனுக்கே காது கொடுத்து கேட்க முடியவில்லை. சொல்ல போனால்.. சில வார்த்தைகளுக்கு அர்த்தங்களே புரியவில்லை. என்னென்னமோ பேசியது அந்த குடும்பம்.. கார்த்திகேயன்.. உண்மையாகவே இது என் சொந்தமா என யோசித்தார்.

ஒருவர் நிற்கதியில் நிற்கும் போது.. பின்னாலிருந்து முதுகில் குத்துவது கோழைத்தனம். ம்.. அதைவிட.. அப்படி செய்வது பேசு பொருளே இல்லை எனலாம். சுகுமாரியின் ஆசைக்காக எதோ செய்ய போய்.. இப்போது பெண்ணின் வாழ்வும் போகிற்று, சுகுமாரியும் இல்லை என வருந்துகிறார் மனிதர். 

சொந்தம் என விரும்பி பெண்ணை கொடுத்தார், கார்த்திகேயன். நன்றாகத்தான் இருந்தான் அந்த வசந்த், பார்ப்பதற்கு, நன்றாக இருந்தான்.. என்ன யாருடனும் பேசவில்லை. ஒரு டிகிரி முடித்திருந்தான், அவர்களுக்கு சொந்தமாக கரும்பு ஆலை இருந்தது,  அதை நிர்வகிப்பதாக சொல்லினர். 

பொதுவில், சொந்தத்தின் ஒரு திருமணத்தில்.. பெண் மாப்பிள்ளை இருவரும் பார்த்துக் கொண்டனர். சுகுமாரிக்கு, அவர்களின் குடும்பம் அன்பாக பேசவும் பிடித்துவிட்டது. 

ஜனனிக்கு, பெரிதாக எந்த அபிப்பிராயமும் இல்லை.. அம்மாவுக்கு பிடித்திருந்தால் எனக்கு சம்மதம் என்றால் பெண். ஏனோ, ‘கணவன் என்ற உறவை.. பெற்றோர்தான் ஏற்படுத்தி தரவேண்டும்.. அதன்பின் அதை நான் விரும்புகிறேன்’ என்ற கொள்கை அவளிடம் முன்பிருந்தே இருந்தது. 

அதனால்.. பெரிதாக எந்த ஆசையும் இல்லை அவளுக்கு. பார்த்ததும் பிடிக்கும் அழகில் இருந்தான் வசந்த், அவர்களின் குடும்பமும் நன்றாக பேசியது இவளிடம், என்ன வசந்த்தான் பேசவில்லை. ஆனாலும் அவள் அதை பெரிதாக எடுக்கவில்லை. அதற்கும் அவனின் அம்மா ‘அவன் கொஞ்சம் ரெசர்வ் டைப்.. நீதான் பார்த்து அவனை புரிஞ்சிக்கணும்’ என்றார் சிரித்துக் கொண்டே. ஆக ஜனனிக்கு எதுவும் தெரியவில்லை.. எல்லாம் அம்மா அப்பா பொறுப்பு என இருந்துக் கொண்டாள். 

மேலும் அவர்கள் பெண்ணை படிக்க வைக்கிறோம்.. தனியாக கிளினிக் வைத்து தருவோம் எங்கள் மருமகளுக்கு என அப்போதே உரிமை கொண்டாட எல்லாம் கடவுள் சித்தமாக சுகுமாரிக்கு பதிந்து போனது மனதில். எனவே எல்லாம் நல்ல நேரமாக மனதில் பதிந்தது.

ஜனனி, தனக்கு பிடித்த நிறத்தில் புடவை, நகை என எல்லாம்  ஆசையாக வாங்கிக் கொண்டாள், சுகுமாரி பெண்ணின் சந்தோஷ முகத்திலேயே, தன் நோய் குணமாவதாக உணர்த்தார்.

கிடைத்த நேரம் குறைவு என்பதாலும், சொந்தம் என்பதாலும்.. பெரிதாக தவறாக ஏதும் கருத்தில் பதியவில்லை.. எனவே, காலம் கைகூடியது திருமணத்தில். அதுவரை எல்லாம் சரியாக நடந்தது போல.. இல்லை, எல்லாம் ப்ரமை போல.

@#@#@#@#@#@#@#

இப்போது மஹாக்கு பொறுமையே இல்லாமல் போனது. அவளின் டுயூட்டி பார்க்கும் மருத்துவமனை எதுவென்பது தெரியவில்லை. எதோ, அவர்களின் அப்பார்மென்ட் அருகில் உள்ள.. பெரிய மருத்துவமனை என மட்டும் தெரியும்.. அதை கொண்டு, அந்த ஏரியாவில் பெரிய மருத்துவமனை எதுவென கூகுள் பாப்பாவிடம் கேட்டான்.. அதுவும் ஒரு நாலு மருத்துவமனையை சொல்லியது.

அலுவலக வேலைக்கு ‘பாக் பைன்’ என விடுப்பு சொல்லிவிட்டு… காரெடுத்துக் கொண்டு, தானே அந்த நான்கு மருத்துவமனைகளுக்கும் செல்லுவது என முடிவெடுத்து,  சென்றான்.

முதல் இரண்டு மருத்துவமனைகளும் இல்லை என சொல்ல.. மூன்றாவது மருத்துவமனையில் ‘ம்.. டாக்டர். ஜனனி.. op டாக்டர் சர், இங்க இருக்காங்க’ என்ற தேன் செய்தி வந்து பாய்ந்தது அவன் காதுகளில்.

மஹா கொஞ்சமாக தனக்குள் நிம்மதியடைந்தான். என்னமோ அவளே கிடைத்தது போல ஒரு நிம்மதி அவனிடத்தில். காலையிலிருந்து ஒரு குறுகுறுப்பு ‘இது சரிதானா.. நான் அவளை தேடுவது தவறாகி விடாதே..’ என யோசனைதான். ஆனாலும் அவனின் ஆழ்மனம் எதையோ அவனுக்கு சாதகமாக சொல்லிக் கொண்டே இருக்கிறது மூன்று வாரங்களாக. அதனால் வந்துவிட்டான் இங்கே.

ஒரு டோக்கன் போட்டு அமர்ந்திருந்தான் அந்த பெரிய அறையில். 

இவனின் முறை வந்தது.. இவன் நேரமோ என்னமோ.. சீனியர் இல்லை, டாக்டர் ஜனனி மட்டும் இருந்தாள்.

கதவை திறந்து உள்ளே வந்தான் பிரகாசமாக அன்று போல. ஜனனிக்கு அதிர்ச்சி.. ஆனால், என்னமோ.. பேரதிர்ச்சியாக இல்லை. மனதில் ஒரு இனுக்கு.. இவனை எதிர்பார்த்திருந்தாள் போல.. கொஞ்சம் நிமிர்ந்து அமர்ந்துக் கொண்டாள்.

பெண்மனம், அன்று அவன் US செல்லும் போது நடந்ததை, அவன், சண்டே, வந்து சென்ற போது நினைத்துக் கொண்டது. கண்டிப்பாக என்னை தேடிவந்து பேசுவான் வேண்டுமென்றே என்னை சீண்டுவான் என எண்ணி இருந்தாள். அது இப்போது நடக்கவும்.. முகம் கொஞ்சம் இறுகியது. நிமிர்ந்து அமர்ந்தாள்.. ‘இனி நீ எவ்வளவு சீண்டினாலும், நான் பார்க்கிறேன்’ என அமர்ந்தாள்.

மஹா, எதிரே அமர்ந்தான்.. இவளை இந்த வெள்ளை உடையில் பார்க்கவும் கொஞ்சம் வழிய தொடங்கிய மனதை அடக்கிக் கொண்டு.. “ஹாய் ஜானு” என்றான். அன்றைக்கே, ஒரு முடிவுக்கு வநதிருந்தான், அவள் ஜானுதான் என.

ஜனனி “சாரி, நான் மிஸ்செஸ் ஜனனி, ஓகே.. சொல்லுங்க.. என்ன பண்ணுது” என்றாள். இதை சொல்ல அவளுக்கு பிடிக்கவில்லைதான். ஆனால், வேறு வழி இருக்கவில்லையே.. அவனின் நோக்கம் தன்னை ஆராய்வது எனும் போது, இப்படிதானே பேச வேண்டும் என எண்ணிக் கொண்டாள்.

மஹா சிம்பிளாக “பாக் பைன்..” என்றான். உன்னைத்தான் பார்க்க வந்தேன் என்ற பார்வை பார்த்து.

அவள் மேற்கொண்டு ஏதும் கேட்க்காமல்,  ப்ரிஸ்க்ரிப்ஷ்ன்னில்.. எதோ மாத்திரை எழுதி.. பிஸியோ டாக்டர் பெயரையும் எழுதி அவனிடம் நீட்டினாள்.

மஹா, அதை வாங்கி மடித்துக் கொண்டே அமர்ந்திருந்தான்.. எழுந்துக் கொள்ளவில்லை.

ஜனனி “தேங்க்யூ சர்,” என அவனுக்கு விடை கொடுக்கும் விதமாக பேசினாலும்.. அவன் எழுந்துக் கொள்ளவில்லை.

ஜனனி, நர்சை அழைக்கும் பெல் அடிக்க கை வைக்க.. மஹா “ஜானு.. இங்க வந்ததே.. உன்னை பார்க்கத்தான்” என்றான் அவளை இமைக்காமல் பார்த்துக் கொண்டே.

ஜனனிக்கு பேச்சே வரவில்லை அவனின் பார்வையில். இருந்தும் ஒரு அழுத்து, அந்த பெல்லை அழுத்த.. இவன் அவரசமாக அவளின் கையை பற்றினான்.

ஜனனி விதிவிதிர்த்து போனாள்.. அனிச்சையாய் “ஏய்..” என கையை ஓங்கிவிட்டாள் பெண்.

மஹா கொஞ்சம் அதிர்ந்தாலும்.. “ஜானு, நான் மஹா.. ஏன் இப்படி நடந்துக்கிற” என்க… கை தானாக தாழ்ந்தது.

நர்ஸ் உள்ளே வந்தார்.

மஹா “ஒரு டூ மினிட்ஸ்ங்க..” என்றான் நர்ஸை பார்த்து.

ஜனனி “ம்..” என தலையசைத்தாள், ‘இவன் எதுக்குதான் வந்தான்’ என சலிப்பாக வந்தது.

வெளியே சென்றார் நர்ஸ்.

ஜனனி “என்ன மஹா சர். என்ன வேண்டும் உங்களுக்கு..” என்றாள் அதே சலிப்பானக் குரலில்.

மஹா “உன்னோட ஒரு பத்து நிமிஷம்.. வேணும்.. காபியோட.. உன்கூட பேசணும், உன் ஆன்ட்டி பையன், நம்பி வரலாம். ப்ளீஸ். அப்புறம் அந்த சர் வேண்டாம்..” என்றான் எழுந்து நின்றுக் கொண்டு, அவளின் பதிலுக்காக பார்த்திருந்தான்.

ஜனனி “நான் ஆன்ட்டிகிட்ட கூட பேசறதில்ல.. அப்புறம் என்ன பையன் கிட்ட பேசறது. இந்த காபி, சட்.. இதெல்லாம் எனக்கு எப்போதும் பழக்கமில்ல.. எனக்கு, உங்ககிட்ட பேச ஏதுமில்ல.. ப்ளீஸ்.. சர்..” என்றாள்.

மஹாக்கு முழு அதிருப்தி. இரண்டு நொடி அமைதி.. என்ன செய்வது என தெரியவில்லை. தன் கண்ணோரோரம் இடது கை விரல்களால் தேய்த்துக் கொண்டே டேபிளை பார்த்தான்.. அடுத்து என்ன பேசுவது என்பதாக.

அவளின் போன்.. அந்த டபேளில்.. இருந்தது. சட்டென கைநீட்டி எடுத்தான், அதை.

ஜனனி, அவன் கையிலிருந்து அதை பிடுங்க நினைத்து… போனை பிடிக்க நினைக்க.. இப்போது அவளின் கை, அவனின் கைகளில். 

அனிச்சையாய் இருவரும்.. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். சின்னதாக தன் கையை இழுத்தாள் பெண்.. அவனும் விட்டுவிட்டான்.   நெஞ்சின் மறுத்து போன பாகம் இப்போதுதான் துடிப்பது போல.. ஒரு படபடப்பு.. அவனுள். அவளின் சில்லிட்ட கை.. அவனை சுட்டது.

“மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே…

ஓ.. நெஞ்சே நெஞ்சே…

நெஞ்சில் இன்னும் நீயடி…”

ஒரு நொடிதான் எல்லாம், பின் நேராகிக் கொண்டான்.

அவளின் போனில் எமர்ஜென்சி டயலில் தன் நம்பரை அழுத்தி.. தனக்கு ஒரு ரிங் விட்டு, கட் செய்து.. போனை இருந்த இடத்தில் வைத்துவிட்டு, கிளம்பிவிட்டான்.

Advertisement