Advertisement

இங்கே ஹாலில்,

ராகவ், எழுந்து வந்தான். ஹாலில் அமர்ந்திருந்த மஹாவை பார்த்து “ஹேய்.. வா.. வா.. மஹா, அடையாளமே தெரியலை டா.. சூப்பரா இருக்க..“ என கூறி அமர்ந்தான்.

மஹா “அஹ.. உங்களை விடவா, அண்ணா.. நீங்க இன்னும் ஹண்ட்சமா இருக்கீங்க.. எப்படி இருக்கீங்க. “ என்றான் ஒருநிமிடம் இடைவெளி பின் தானே “சாரி எல்லாம் அம்மா சொன்னாங்க.. அங்கிள் எங்க” என்றான் கோர்வையாக.

மஹாக்கு, எல்லாம் தெரியும் என்றாலும், போனில் கூட ராகவ்விடம் பேசவில்லை. முதல் முறை.. நான்கு வருடங்கள் சென்று இப்போதுதான் பார்க்கிறான். எனவே சுகுமாரி இறப்பு குறித்து விசாரித்தான் முதலில்.

காயத்ரி, வந்தாள்.. ஒரு ட்ரை’யில் பழரசம் ஒரு கோப்பை, தண்ணீர் ஒரு கோப்பை என எடுத்து வந்தாள்.. தண்ணீர் எடுத்துக் கொண்டான் மஹா, பின் நேரம் பேச்சில் சென்றது.

கொஞ்சம் இயல்பாகினர் இருவரும்.. பேச்சில் நேரம் சென்றது, கார்த்திகேயன் வந்தார். இன்னும் பேச்சு நீண்டது. 

காயத்ரி, உண்பதற்கு அழைத்தாள்.

ராகவ் “இரு சூரி வரேன்னு சொன்னால்ல.. ம்மா, அர்ச்சனா சூரி எங்க இருக்கான்னு கேளு” என்றான்.

சூரி, அருகில் இருப்பதாக சொல்ல.. காத்திருந்தனர்.

ஜனனி, அவசரமாக கிளம்பி வெளியே வந்தாள்.. அழகான காட்டன் சல்வார் அணிந்து வந்தாள். தன் அண்ணனை பார்த்து “எ.. எனக்கு, ஹாஸ்ப்பிட்டலில் இருந்து போ.. போன் வந்தது, எதோ வர சொன்னாங்க, நா.. நான் வரேன் ண்ணா..” என்றாள் தடுமாற்றமாக. பொய் சொல்ல தெரியாமல் தடுமாறினாள்.

ராகவ் “ஹேய்.. இப்போவா.. இந்த நேரத்திலா.. லஞ்ச் டைம்மில் என்ன வேலை.” என்றான்.

ஜனனி “என்ன அண்ணா” என்றாள் சலிப்பாக எதையோ ஷெல்பில் தேடிக் கொண்டே பேசினாள்.

ராகவ் “மஹாவ பார்த்தியா.. இங்க சென்னைக்கே வந்துட்டானாம்…” என சொல்ல.

மஹாக்கு, இத்தனை நேரம் அவளை காணாதது என்னவோ போல இருந்தது, இந்த விசிட்டே சொல்ல போனால்.. அவளை பார்க்கலாம்.. என்னதான் அவள் இன்னொருவரின் மனைவி என்றாலும், ஒரு அவா… அவளை பார்க்க வேண்டும்.. எப்படி இருக்கிறாள் என அறிய அவனுள் ஒரு அவா.. அதனாலோ என்னமோ, ராகவ் அழைத்தும் வந்தான்.

எனவே ஜனனியை பேச வைக்க மஹா பேசினான் “அஹன் ஜனனி… இங்கதான் கொஞ்ச நாள். நீ எப்படி இருக்க, உன் ஹப்பி எப்படி இருக்கார்.. இங்கதான் வேலை பார்க்கிறியா” என்றான் அவளிடம் பேச வேண்டும் என எண்ணி.

அவளின் கனவு படி, அவள் இப்போது மருத்துவர் என தன் அம்மா சொல்லி கேட்டுவிட்டான். அதுவும் சென்னையில்தான் வேலை எனவும் காதில் விழுந்தது. எனவே ஒரு ஆர்வம் அவளிடம் பேச.. அதனால், தானே பேசினான்.  

ஜனனிக்கு, தேடியது கிடைக்கவில்லை போல, கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு.. அவசரமாக யாரிடமும் ஒன்றும் சொல்லாமல் வெளியே வந்துவிட்டாள்.

மஹாவின், பேச்சுக்கு பின் யாரும் எதுவும் பேசவில்லை, அங்கே அமைதி.

மஹா, திணறி போனான் அந்த அமைதியில். “சாரி.. ஏதாவது தப்பா சொல்லிட்டேனா” என்றான்.

கார்த்திகேயன் “இல்ல ப்பா, அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல.. அவ அப்படிதான். வா, என் மருமக.. காயத்ரி அப்படியே உங்க ஆன்ட்டி மாதிரியே சமைப்பா.. வா சாப்பிடலாம்” என்றார்.

ராகவ்வும் உடனே சுதாரித்து “ம் வா… மஹா வா, சூரி வந்ததிடுவான்..” என சொல்லி அழைத்தான்.

மஹா “இல்ல, அப்படி வேண்டாம் உங்க பிரெண்ட் வரட்டுமே.. எனக்கு பசியில்லை.. அவர் வரட்டும்” என்றான் தன்மையாக.

ராகவ், அதன்பின் இயல்பாக பேசினான்.. மஹாவிற்கும் தன்னுடைய புதிய ஷார்ட்ஸ் எடுத்து கொடுத்தான். ஓரிரு நிமிடம் தயங்கினான் மஹா.. பின் வாங்கி, தன் உடையை மாற்றிக் கொண்டான்.

தேஜு இதையெல்லாம் பார்த்து.. கொஞ்சம் மஹாவிடம் பேச தொடங்கினாள். மஹா, இலகுவாகினான்.. முன்போல அந்த வீட்டில் ஒருவனாக்கி பேசிக் கொண்டிருந்தான் ராகவ்விடம். நேரம் சென்றதே அன்றி, சூரியை காணோம்.

காரணம்…

ஜனனி, தன் வண்டி சாவியை தேடினாள். அது கிடைப்பதற்குள்.. மஹா எதோ கேட்க.. கையில் கிடைத்த தன் அண்ணனின் கார் சாவியை எடுத்துக் கொண்டு வந்தாள் வெளியே. 

வேகமாக லிப்டில் கீழே இறங்கினாள்.

‘தப்பி வந்தால் போதும்’ என ஜனனியின் எண்ணம். அவனை நேரே பார்த்து.. பேசும் தைரியம் எல்லாம் இல்லை இப்போது. யாரையுமே பார்த்து பேசி.. என்னுடைய தவறு இல்லை.. என சொல்லும் தைரியம் எல்லாம் போய் வெகுகாலம் ஆகிவிட்டது, அவளுக்கு. அதிலும் மஹா எனும் போது என்னமோ.. இன்னும் ஓடினாள்.

கீழ் வந்துதான் பார்த்தாள்.. தான், எடுத்து வந்தது, அண்ணின் கார் சாவி.

பரவாயில்லை, மேலே சென்று மீண்டும் அவனை பார்க்க முடியாது என எண்ணி, பரபரப்பாக தங்களின் பார்க்கிங் பார்த்து, காரை எடுக்க சென்றாள். 

டென்ஷன்தான் அவளுக்கு. என்னமோ இங்கிருந்து போக வேண்டும் என எண்ணம்.. எனவே, ‘தனக்கு அரைகுறையாகதான் கார் ஓட்ட வரும் என்பதை மறந்து..’ காரை எடுத்தாள்.

அதிகம் கூட இல்லை, பார்க்கிங்கில் இவர்களின் இடத்திலிருந்து சற்று ரிவர்ஸ் எடுத்து முன் வந்தால் பாதை வந்துவிடும். எனவே ரிவர்ஸ் எடுத்தாள்.. அவ்வளவுதான் தெரியும்.. “டங்…” என்ற சத்தம் அதி பயங்கரமாக கேட்டது.

ஜனனி, பயந்து வேகமாக வண்டியின் பிரேக் அழுத்தினாள் வண்டி நின்றது, நல்லவேளை. இறங்கி பின்னாடிப் பார்க்க.. தலையில் கை வைத்துக் கொண்டாள்.

ம்.. பின்னாடி நின்றிருந்தது ஆடி கார். அதன் முகப்பு விளக்கு காலி… அம்மணியின் இடியில். இவள் தலையில் கை வைத்து நிற்க.. வந்துவிட்டார்கள் இரண்டு செக்யூரிட்டியும்.

அந்த செக்கியூரிட்டியும் ஒன்றும் கேட்க முடியவில்லை. ஜனனியே தலையில் கை வைத்து நின்றாள். அவளே “யாருதுன்னு பாருங்க..” என்றாள்.

ஜனனி, அங்கேயே நின்றாள், அந்த செக்யூரிட்டி வரும் வரை. மருத்துவமனையில் வேலை இருந்தால் தானே, செல்வாள்.. வீட்டிலிருந்து வெளியே செல்ல ஒரு காரணம் சொன்னாள். இப்போது காத்திருந்தாள்.

பத்து நிமிடம் சென்று.. ஒரு செக்யூரிட்டியும் ஒரு வயதான நபரும் வந்தனர். அந்த புதிதான நபர்தான் காரின் ஓனர் போல, பார்த்தவுடன் தெரிந்தது.  டிப்டாப்பாக இருந்தார். டென்ஷனாக வந்து தன் வண்டியை தடவி தடவி பார்த்தார். 

அதற்குள் அந்த காரின் டிரைவர் வந்தார். 

முதலாளி கூட அமைதியாக இருந்தார். டிரைவர் “என்ன ம்மா.. இப்படி உடைச்சி வைச்சிருக்க… இந்த செட்டையே மாத்தனும் போல..” என மொத்தமாக ஐந்து சைபர்.. அதன் முன்பக்கம் ஒன்று  என போட்டு, அந்த தொகையை கேட்டார்.

ஜனனி என்ன செய்வது என தெரியாமல்.. அண்ணைனை எப்படி அழைப்பது என எண்ணி நின்றிருந்தாள்.

செக்யூரிட்டி, ஜனனியிடம் “கூப்பிடும்மா, உங்க அண்ணனா, அப்பாவா யாரையாவது கூப்பிடு ம்மா” என்றார்.

கூடவே அந்த டிரைவர் இடம் “இரு ப்பா, அவங்க அப்பா, வருவார்” என சொல்லிக் கொண்டிருந்தார்.

அந்த நேரம் சரியாக  சூரி, கார் நிறுத்தி நடந்து வந்துக் கொண்டிருந்தான். முதலில் எதோ என கடக்க நினைக்க.. ஜனனி நிற்பது தெரிந்து வந்தான் அங்கு.

ஜனனிக்கு, சூரியை கண்டதும் நிம்மதி. ‘ஹப்பாடா’ என மூச்சு விட்டாள்.

டிரைவர் “நீங்க யாரு..” என கேட்டு, சூரியிடம் தன் பஞ்சாயத்தை வைத்தான்.

சூரி “அதெல்லாம் முடியாது வேணும்ன்னு செய்யலை, இன்சுரன்ஸ் இருக்குமே.. இல்லை, பில் கொடுங்க..” என எதோ வாக்குவாதம் செய்துக் கொண்டிருந்தான்.

ஜனனி, பொருக்க முடியாமல் தன் கார்ட் எடுத்து கொடுத்தாள் நண்பனிடம் “சண்டை வேண்டாம் சூரி. பே பண்ணிடு” என்றாள்.

சூரி “அளவில்ல, கேட்க்கிறதுக்கு… இரு” என்றவன் ராகவ்விற்கு அழைத்தான். இங்கே நடந்ததை சொல்லி, வருமாறு அழைத்தான்.

ராகவ், கார்த்திகேயன்.. கிளம்ப, மஹாவும் கிளம்பினான். ஆக எல்லோரும் கிளம்பி பார்க்கிங்க வந்தனர்.

பசி நேரத்தில் நல்ல கோவத்தில் இருந்தான் ராகவ். ஜனனியை பார்த்ததும் அந்த கோவம் எல்லாம் போயிற்று. பாவமாக நின்றிருந்தாள்.

ராகவ் “மேல போ..” என்றான்.

டிரைவர் “யார் நீங்க… இடிச்சது அவங்க, அவங்களையா போக சொல்றீங்க” என்றான் எகிறிக் கொண்டு.

ராகவ், தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான் ஓனரிடம். ஜனனி, என்ன செய்வது என நின்றாள்.

ராகவ் அந்த டிப்டாப் மனிதரிடம் பேசினான். ‘இன்சூரன்ஸ் க்ளைம் பண்ணுங்க.. பேளன்ஸ் என்ன உண்டோ, நாங்க செய்து தரோம்.. பில் கொடுத்திடுங்க..” என கூறி மன்னிப்பு வேண்டினான்.

சூரி, அந்த டிரைவரை.. முறைத்து முறைத்தே அந்தபக்கம் நகர்த்தினான்.

மஹா, பஞ்சாயத்தை பார்ப்பதை விட, வசதியாக ஜனனியை.. இப்போத்தான் பார்த்தான். எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருந்தாள். 

ம்… அதான், திருமணமான பெண்ணின் கழுத்தில், காலில் இருக்க வேண்டிய எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தாள் பெண். இது அவனின் கண்ணில் மட்டும் பட்டதா.. இல்லை, யாரும் அதை இத்தனைநாள் பொருட்படுத்தவில்லையா தெரியவில்லை. சின்ன லக்ஷ்மி டாலர் போட்ட கழுத்தை ஒட்டிய மெல்லிய செயின் மட்டுமே அவளிடம் சொந்தம் கொண்டாடிக் கொண்டிருந்தது.

மஹாக்கு, சற்று முன் நடந்த அமைதி.. இப்போது ஜனனியின் தோற்றம்..  எல்லாம் என்னமோ செய்தது.. ‘என்ன டா நடக்குது இங்க’ என்தான் யோசனை. லேசாக மனதில் சிறகு முளைக்கிறது.. 

ஆனாலும் அவன் அன்று காதில் கேட்ட அம்மாவின் வார்த்தை பொய்யில்லையே ‘நம்ம ஜானுக்கு கல்யாணமாம் டா..’ என்பது இன்னும் காதில் விழுந்தது. இப்போது சிறு பிள்ளை ஜானுவை கண் முன் பார்க்கிறேனே.. எது நிஜம்.. எது நிழல்.. புரியவில்லை அவனுக்கு.

“இமையே… இமையே..

விலகும் இமையே..

விழியே.. விழியே..

பிரியும் விழியே..

எது நீ.. எது நான்..

இதயம் அதிலே…

புரியும் நொடியில்…

பிரியும் கனமே…”

 

Advertisement