Advertisement

மரகத மழையாய் நீ!..

6

ஜனனி, வேலைக்கு சென்றாள், புதிதாக சேர்ந்த ஜும்பா வகுப்பிற்கும் சென்றாள். வேறு எந்த முன்னேற்றமும் இல்லாமல் நாட்கள் சென்றது.

அந்த ஞாயிறு, தாரா மறக்காமல் வீடியோ காலில் அழைத்தாள்.. ஜனனியை. ஆனால், ஜனனி ‘மருத்துவமனையில் இருக்கிறேன்’ என சொல்லி மெஸ்சேஜ் மட்டும் செய்து இருந்தாள்.

தாரா, ராகவ்விற்கு அழைத்து.. ப்ரித்வி, மதி என எல்லோரும் பேசினர், நீண்ட நாட்கள், சென்று.. இல்லை, வருடங்கள் சென்று.. முகம் பார்த்து வீடியோ காலில் பேசினர்.

மதி, அப்போது  மஹாவிற்கு பெண் பார்த்துக் கொண்டிருப்பதாக சொன்னார்.

ராகவ்விற்கு, இப்போதுதான் மஹாவிற்கு திருமணம் ஆகாததே நினைவு வந்தது. அத்தோடு, அவர்கள் இருவரும் ப்ஃபேஸ் புக் ப்ரெண்ட்ஸ்.. எனவே அதிகம் பேசிக் கொண்டதில். இப்போது இருவருமே, ஃபேஸ்புக்கில் அதிகம் வருவதில்லை.

மஹா, US சென்ற புதிதில்.. ராகவ்வுடன் பேசியதுதான். அடுத்து, ஜெயக்குமார் இறப்பின் போது ஒருநாள் ராகவ் வந்த போது பார்த்தது. மற்றபடி மூன்று வருடங்களுக்கு மேல் இருக்கும் ராகவ், மஹாவிடம் பேசி. எனவே கொஞ்சம் அவனை பற்றி விசாரித்துக் கொண்டான் மதியிடம்.

மதி, புலம்பியபடி ராகவ்விடம் சொன்னார் “இங்க சென்னை வந்துட்டான் ப்பா, மஹா. வீடு பார்த்துட்டு இருக்கோம். அங்க என்னால இவன வைச்சு சமாளிக்க முடியலை.. எப்போ வரான், எப்போ போறான் தெரியலை. கல்யாணம்ன்னு சொன்னா.. பேசவே மாட்டேங்கிறான்.. சரிதான் போ, சம்பளம் குறைஞ்சாலும் பரவாயில்லைன்னு சொல்லி, போராடி இங்கேயே கூட்டி வந்துட்டேன்.” என்றார் புலம்பலாக.

ராகவ் “என்ன ஆன்ட்டி இப்படி சொல்றீங்க.. அவனோட கனவு அங்க வேலை பார்க்கனும்ன்னு… எப்படி வந்தான்” என்றான் சிரித்துக் கொண்டே

மதி “ஏன் ராகவ், வயசு ஆகுது கணக்கில்லாமல்.. இன்னும் கல்யாணம்ன்னு சொன்னா பேச்சே வராது அவனுக்கு. இங்கேன்னா.. யாராவது நாலுபேர் பேசுவாங்க.. பிடிகொடுப்பான்னு இங்க வர வைச்சிட்டேன்..

இப்போ கூட மாட்ரிமோனில.. நாலு பெண்.. ஜாதகம் பொருத்தமா இருக்கு… அடுத்த வாரத்திற்குள், முடிவு சொல்லணும். இவன் இன்னமும் பதில் சொல்ல மாட்டேங்கிறான். அவங்க சித்தப்பா யார்கிட்டையாவதுதான் பேசணும் போலருக்கு.. உங்க அங்கிள் இருந்திருந்தால்.. எனக்கு இந்த கவலையில்லை.

ம், இன்னும் வீடு கிடைக்கலைன்னு சொல்றான்.. இவன் ஆபிஸ்.. கிண்டியில் அங்கேயே வீடு வேணும்னா முடியுமா.. என்னமோ பிடிவாதம் பண்றான். ஒன்னும் சொல்ல முடியலை.” என்றார், தன் தோழியிடம் புலம்புவது போல.. பெரிதாக புலம்பி தள்ளிவிட்டார் அன்னை மதி.

ராகவ் “என்ன ஆன்ட்டி விடுங்க, மஹா என்னதான் சொல்றான்னு பார்த்திறலாம். நீங்க கவலை படாதீங்க..” என சொல்லி தன் மனைவி, மகள் இருவரையும் அறிமுகப்படுத்தி.. மஹாவின் எண் வாங்கிக் கொண்டு போனை வைத்தான் ராகவ்.

பழைய நினைவுகள் வர.. லேசாக முகம் மலர்ந்தது ராகவ்விற்கு.

அடுத்த மாதத்தில்.. கோர்ட்டில், ஜனனியை ஆஜராக சொல்லி வக்கீல் சொல்லி இருக்க, ராகவ்.. கார்த்திகேயன் இருவரும் அதை பற்றி எப்படி ஜனனியிடம் பேசுவது என எண்ணி, நாள் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அன்று, ராகவ்வின் போன் விடாமல் வைப்ரேட் ஆகிக் கொண்டிருந்தது.  ராகவ், தேஜுவோடு காலையிலேயே அங்கிருந்த பார்க்கிற்கு சென்றிருந்தான். ஞாயிறு என்பதால்.. மகளுடன் நேரம் எடுத்துக் கொண்டான் ராகவ். எனவே போனை சைலென்ட்டில் வைத்து சென்றிருந்தான் போல.

காயத்ரி, வேலையில் இருக்க.. அவளின் கவனத்திற்கு இது வரவில்லை. ஜனனி, எதோ கைவேலையாக ஹாலிலேயே இருக்க, ஜனனியின் கவனத்தை இழுத்தது அந்த வைப்ரேட்டட் போன்.

ஜனனி, யாரென பார்க்க “மஹாதேவ்” என கோடி ப்ரகாசமாக ஒளிர்ந்தது அவனின் பெயர். பார்த்தவளுக்கும் அத்தனை கோடி அதிர்ச்சிதான், அப்படியே நின்றாள். சட்டென என்னமோ தாக்கியது அவளை. சத்தமில்லாமல் சென்றுவிட்டாள் தன்னறைக்கு. 

ஒருமணி நேரம் சென்று, ராகவ் வந்து பார்த்தான். அப்போதுதான் மஹாவின் அழைப்பு தெரிந்தது. மஹாவை இன்று மதிய உணவுக்கு வர சொல்லி இருந்தான்.. எனவே அழைத்திருக்கிறான் என எண்ணிக் கொண்டான்.

மஹாவை, அழைத்து பேசி.. அட்ரஸ் சொல்லி, லொக்கேஷன் ஷேர் செய்து போனை கீழே வைத்தான், ராகவ்.

நேரே கிட்சென் வந்தான் ராகவ், மனையாளிடம் “மஹா, மதி ஆன்ட்டி பையனை இன்னிக்கு லஞ்ச்க்கு கூப்பிட்டிருக்கோம்.. ஞாபகம் இருக்கா காயு. ஏதாவது ஒரு ஸ்வீட் பண்ணிடு.. அவனுக்கு ஸ்வீட் பிடிக்கும்..” என்றான், அவளுக்கு உதவியாக வெங்காயத்தின் தோலுரித்துக் கொண்டு.

காயத்ரி “மாமாகிட்ட சொல்லிடுங்க.. எங்கையோ வெளிய போறேன்னு சொல்லிட்டு இருந்தார்.. அப்படியே ஐஸ்கிரீம்.. குலோப்ஜாமூனும் வாங்கிட்டு வர சொல்லிடுங்க.. எனக்கு வேலை இருக்கு, இப்போ ஸ்வீட் பண்ண முடியாது ப்ளீஸ்…” என்றாள் வேலையில் கவனமாக.

ராகவ் “ம்… சரி. எங்க ஜானு, இன்னும் வெளிய வரலையா” என்றான்.

காயத்ரி “வந்தாளே.. இங்கதான் இருப்பா.. வர சொல்லுங்க.. டேபிளில் எல்லாம் எடுத்து வைக்கட்டும்.. தேஜுக்கு ஊட்டனும்..” என்றாள் வரிசையாக குடும்பஸ்த்ரி.

ராகவ், ஜானுவிற்கு குரல் கொடுத்தான். கூடவே தேஜுவை குளிக்க வைக்க சென்றான்.

காயத்ரியும், தேஜுவும்.. மாறி மாறி அவளை வேலை வாங்கி பேச வைத்தனர். தேஜு “அத்த, இட்லி.. வேண்டாம் “ என்றாள்.

ஜனனி “இட்லி சாப்பிட்டா.. இந்த சீக்ஸ் அப்படியே பொப்ன்னு இருக்கும்..  பார்க்கவே கியூட்டா இருக்கும்..”

தேஜு வாய் திறந்து “ம்.. இப்பியா” என்றாள், தன் கன்னத்தில் காற்றை நிரப்பிக் கொண்டு..

ஜனனி “ம்… இப்படிதான் ஆ’காட்டு” என சொல்லி பாதி இட்லியை, காரமில்லா சட்னியோடு குழந்தையின் வாயில் கிட்ட தட்ட திணித்தால்.. கூடவே “ஆப்ட்டர்நூன் உன் சீக்ஸ் தொட்டு பாரேன்.. இப்படியே இருக்கும்.. அழகா” என கதை சொல்லி மூன்று இட்லியை ஊட்டி விட்டாள் ஜனனி.

கண்ணை விரித்துக் கொண்டு.. கதை கேட்டபடியே உண்டால் குழந்தை.

சூரி, மருத்துவமனை சென்றுவிட்டான், மதியம் வருவதாக சொல்லி. அர்ச்சனா தனியே இருப்பதால், ஜனனி வீடு வந்தாள் பதினோரு மணிக்கு. 

இங்கே ராகவ் வீடு மதிய உணவுக்கு தயாராகியது. ஜனனி, அர்ச்சனா இருவரும் காயத்ரிக்கு உதவ.. பேச்சு தன்போல் சினிமா, அரசியல் என சென்றது. குறிப்பாக.. குடும்பம், சமையலை தவிர்த்தனர் எல்லோரும்.

ராகவ் எப்போதடா தூங்கலாம் என எண்ணி, கால்ஸ் என சொல்லி அறையில் சென்று உறங்க தொடங்கினான். 

கார்த்திகேயன்.. அந்த வளாகத்தில் உள்ள ஒரு க்ளப்பில் நண்பர்களை தேடி பழக சென்றார். தேஜு.. லிட்டில் சிங்கம் பார்த்து அமர்ந்திருந்தாள்.

மணி ஒன்று இருக்கும்.. எல்லா வேலைகளும் முடிந்து.. பாத்திரம் விளக்கி, டேபிளை நிரப்பிக் கொண்டிருந்தனர். சரியாக காலிங் பெல் அடிக்கவும், காயத்ரி “ஜானு, பாரேன்” என்றாள்.

ஜனனி, கதவை திறக்க.. பிரகாசமாய் நின்றிருந்தான் மஹாதேவ். இவளுக்கு கண்களை தாக்கவில்லை.. மாறாக, மனதை தாக்கியது.. அவன் பிரகாசம். அந்த ஒலி முகம் எதையும் யோசிக்கவிடவில்லை, ஆனால் தாக்கியது. தான் தோற்றுவிட்டதாக உணர்ந்தவளது தாக்கமா.. இல்லை, எப்போதும் அவனிடம் தோன்றும் அலட்சியத்தால் வந்த தாக்கமா.. என தெரியவில்லை அவளிற்கு. அப்படியே ஸ்தம்பித்து நின்றாள். மனதில் ‘ஏன், இங்கு, இவன், இப்போது’ எனதான் பார்த்தாள்.

மஹா, ‘இவள் என்னை எதிர்பார்க்கவில்லை..’ என அவளின் விரிந்த விழி பார்த்து படித்துக் கொண்டான். குழந்தை முகம் இல்லை.. முகத்தில் களையும் இல்லை, அதிர்ச்சி தெரிந்தது.. இயல்பான சந்தோஷம் இல்லை.. ‘ஏன் டல்லா இருக்கா.. ’ என அவன் மனதில் எதோ ஓடுகிறது. அதை முயன்று தடுக்கிறான் அந்த ஷனத்தில்.

இயல்பாக காட்டிக் கொண்ட மஹா தானே அவளிடம் பேசுகிறான் “ஹாய்… ஜானு” என்றவன், என்ன நினைத்தானோ.. “சாரி, ஹாய் ஜ..னனி..” என்றான் தடுமாறியக் குரலை மறைத்துக் கொண்டு, திடமாக சொன்னான்.

ஜனனி கதவை விரியத் திறந்து தள்ளி நின்றாள். 

உள்ளே வந்தான் மஹா.

மற்ற பெண்கள் இருவரும் உள்ளே இருந்தனர். ஹாலில் தேஜு.. மட்டுமே. அதென்ன பழைய வீடா.. முற்றம் தாழ்வாரம் என இருக்க.. கதவை திறந்தால் ஹால் சோபா.. எனவே தேஜு “ம்மா… அத்த” என்றாள் மஹாவை பார்த்து, கொஞ்சம் பயந்து.

ஜனனி அதில் களைந்து “வாங்க…” என்றாள்.

மஹா, அவள் சிரிக்கிராளா.. எப்போதும் போல அலட்சியப்படுத்துகிறாளா.. முறைகிறாளா.. என யோசனையோடே.. அவளை ஒரு பார்வை பார்த்து உள்ளே வந்தான்.

தன் பெண்ணின்  அழைப்பில் வெளியே வந்தாள் காயத்ரி. மஹாவை பார்த்ததில்லையே, ஆனாலும், இன்று வருவது இவராகத்தான் இருக்கும் என எண்ணி.. “வாங்க..” என வரவேற்றாள். 

காயத்ரி, ஜானுவை பார்த்து  “ஜானு, அண்ணாவ எழுப்பு.. தூங்கி இருப்பார்.. இருங்க” என கடைசி வார்த்தையை மஹாவை பார்த்து சொல்லி.. தண்ணீர் எடுக்க உள்ளே சென்றாள்.  

ஜானு, உள்ளே சென்று அண்ணனை எழுப்பிவிட்டு, தன்னறைக்கு சென்றுவிட்டாள். அவ்வளவுதான் அதன்பின் வெளியே வரவில்லை.

உள்ளே எதோ ஓடிக் கொண்டிருந்தது “A hundred ‘no’s’ are less painful than one insincere ‘Yes’.”  அம்மாவிற்காக சொன்ன ஆம் என்பதன் பலன்.. எல்லோரிடமிருந்தும் தன்னை தள்ளி நிறுத்தி இருக்கிறது என எண்ணிக் கொண்டிருந்தாள் வருத்தமாக. ‘எனக்கு அந்த வாழ்வு சரியாக அமைந்திருக்க கூடாதா’ என கேட்க்காத கடவுளிடம் இப்போதும் கேட்டாள் பெண்.

Advertisement