Advertisement

அடிக்கடி சபதம் எடுத்துக் கொள்கிறான் தன்னுள் ‘தங்கை சிரிக்கிறாள், அப்படியே பழசை மறக்க வேண்டும்.. இந்த பேப்பர் மட்டும் வரட்டும்.. பிள்ளைக்கு நல்ல இடமாக பார்த்து, விசாரித்து.. இன்னொரு திருமணம் செய்து வைக்க வேண்டும்.. அவள் மனது புரிந்த ஒருவனை பார்க்க வேண்டும்’ என எண்ணிக் கொண்டிருந்தான், அதுவும் கொஞ்சம் ஆவேசமாக எண்ணிக் கொண்டிருக்கிறான். 

காரணம், அவர்களின் ஒன்றுவிட்ட அத்தையின் குடும்பம்.. இன்னும் இவளை பற்றி அவதூறு பரப்பிக் கொண்டிருக்கிறது. அதற்காகவே ‘என் தங்கையை நல்ல இடத்தில் வாழ வைப்பேன்’ என ஆவேசம் கொள்கிறான் ராகவ். ஆனால்,  இது எதோ கதையோ, காவியமோ அல்லவே.. சுற்றி சுற்றி எல்லாம் மனிதர்கள். அதுவும்.. ‘அப்படியா’ என கேட்டு.. பரிதாபம் கொண்டு, உள்ளே சிரிக்கும் குள்ளநரிகள்.. இல்லையெனில்.. சொந்தத்திலேயே ஒரு பெண்ணின் வாழ்வு குறித்து, இன்னமும்.. அலசி ஆராய்ந்து.. விமர்சனம் செய்யுமா.. இந்த சொந்தம்.

மகனை ஒற்றிய அதே யோசனைதான் கார்த்திகேயனுக்கும், ‘இன்னொரு திருமணம் செய்து வைக்க வேண்டும் பிள்ளைக்கு’ எனதான் யோசனை அவருக்கு. மேலும் ஒரு கோவம் ‘எப்படி ஏமாற்றி விட்டார்கள்.. உண்மையை சொல்லி இருந்தால் கூட ஏதேனும் மருத்துவம் பார்த்திருக்கலாம்.. இப்படி என் பெண்ணை அழ வைத்து.. அடித்து, உதைத்து.. கொடுமை படுத்தியா.. துரத்தி விட வேண்டும். என்ன என்ன பாடுபட்டாளோ என் குழந்தை.. அவளின் அம்மா இருந்திருந்தால் கூட சொல்லி அழுதிருப்பாள்.. அதுவும் இல்லை அவளுக்கு… ச்சு, தப்பு நான்தான் செய்தேன்.. தண்டைனையை என் குழந்தை அனுபவித்தது.. சொந்தம் உதவுகிறதே.. என நம்பி அவசரமாக பெண்ணை கொடுத்தேன்.. தேவைதான்.. எனக்கு தேவைதான்..

பெண்ணை பார்த்து பார்த்து வளர்த்தவளும்.. நோயின் தாக்கத்தை விட, பெண்ணை இந்த கோலத்தில் காண முடியாமல்.. போய்விட்டாள். எல்லாம் அவர்களை சும்மா விடாது..’ என ஆதங்கமாக மனதில் நினைத்தார் கார்த்திகேயன். ம்… இவர், இரவு உறங்கி பலநாட்கள் ஆகிறது. வீட்டில் இந்த நால்வரும் ‘எதுவும் இல்லை..’ என காட்டிக் கொண்டாலும்.. மனம் முழுவதும் ரணம்தான். அந்த ரணத்தை யாரிடம் சொல்லுவது.. என்னவென சொல்லுவது.. என தெரியாமல் அமைதியாக இருக்கின்றனர். 

அதனாலோ என்னமோ, ஜானு எப்போதும் தன் தந்தையையும், அண்ணனையும் சங்கடப்படுத்த நினைக்கமாட்டாள், வேலைக்கு செல்வாள்.. உணவு பரிமாறுவாள்.. அவ்வளவுதான், மற்றபடி தன் அறையை விட்டு வெளியே வரமாட்டாள். தேஜு இப்படி அழைத்து அடம் பிடிக்கும் போது ஒரு பத்து நிமிடம் தன்னறையில் வைத்து.. குழந்தையுடன் விளையாடுவாள், அவ்வளவுதான். மற்றபடி.. இயல்பாக இருப்பதாக, ஒரு ஒதுக்கமாக இருப்பாள் பெண்.. இப்படியே அவளின் நாட்கள் செல்கிறது.

இங்கு வந்து பதினைந்து நாட்கள் முடிந்திருந்தது.

ராகவ், ஜனனியை அந்த வளாகத்தில் உள்ள ஒரு ஜிம்மில் சேரும்படி சொல்லிக் கொண்டிருகிறான், வந்த நாள் முதல். ஜானுவும்  ‘ம்.. ம்..’ என்கிறாளே தவிர எதுவும் அவளுக்கு பிடித்தம் வரவில்லை. அவளை அப்படியே விடவும் வீட்டாருக்கு மனதில்லை. எனவே காயத்ரி கிளம்பினாள் இன்று.

காயத்ரி, ஜானு வந்ததும் “சீக்கிரம் வா, ஜானு.. ஜும்பா கிளாஸ் கேட்டு வைச்சிருக்கேன்.. ஈவ்னிங் 7-8 டைமிங். வா, ரெஜிஸ்ட்டர் பண்ணிக்கலாம்.. வா, உங்க அண்ணா சொல்லிட்டே இருக்கார்ல.. வா டா” என்றாள் கொஞ்சம் அதட்டலாக, கெஞ்சலாக எல்லாம் கலந்த குரலில் சொன்னாள்.

ஜனனிக்கு கோவம் வந்தது “என்ன, நான் பிட் இல்லையா.. குண்டா இருக்கேனா.. யார் சொன்னா” என்றாள் திரும்பாமல்.. எதோ போலானக் குரலில் கேட்டாள்.

காயத்ரி ஆவேசமாக “வாய மூடுடி… என்ன பேசற, யாரும் எதுவும் சொல்ல.. நீ பிட்தான். சரியான டையட்ல இருக்க.. நல்லா ஹெல்தியாதான் இருக்க, புரியுதா. 

இது மனசுக்கு, வெளிய போய்.. உன் வயசு பொண்ணுங்க, நாலு பேரை பாரு.. பழகு.. அதுக்குதான் இது. எப்போதும் வேலை வீடுன்னு இருக்க.. கொஞ்சம் வெளிய போயேன்…

ஏன் எல்லோரையும் அவொய்ட் பண்ற, முன்ன மாதிரி நீ, எங்க கூடவும் அதிகம்  பேசறதே இல்லை. 

அந்த தாரா அக்கா உன் அண்ணனுக்கு கூப்பிட்டு கேட்க்கிறாங்க.. ஜானு பேசறதே இல்லைன்னு. உனக்காகத்தானே இங்க வந்திருக்கோம்.. நீ கொஞ்சம் வெளிய வரணும் ஜானு” என்றாள் முடிக்கும் போது மென்மையாக. 

ஜனனி, அமர்ந்து கொண்டாள் சோபாவில், அமைதியாக “இப்போ என்ன பண்ணனும்” என்றாள் ஓய்ந்து போய்.

இவள் மருத்துவர் என இந்த முகபாவணையை பார்த்தால் யாரும் நம்ப மாட்டார்கள். இது தோற்பின் வலி.. அதைவிட, அவபெயரின் வலி.. அப்படியே சட்டென தேங்கி விட்டது, அந்த வலி அவளிடம்.

தொண்டையில் எதோ திரண்டு நிற்கிறது.. விழுங்கிக் கொள்கிறாள் ஜானு.

காயத்ரி அருகில் வந்து, ஜானுவின் தலை கோதி, தன் வயிற்றோடு சாய்த்துக் கொண்டாள், ஜானுவும் பட்டும் படாமல் அவளின் வயிற்றில் சாய்ந்துக் கொண்டாள்.

“மாற்றம் இல்லாமல்..

வாழ்க்கை இல்லை…

மழை மட்டும் தராது வானவில்லை…

ஏனோ! என் நெஞ்சம் கேட்கவில்லை..”

காயத்ரி விடாமல் “வா, போயிட்டு வரலாம்..” என்றாள்.

ஜனனி, ஒருவழியாக கிளம்பினாள். இருவரும் சென்று ஜும்பா வகுப்பு குறித்து விசாரித்து வந்தனர்.

ஜனனி, தன்னறையில் சென்று புகுந்துக் கொண்டாள். காயத்ரி சத்தமாக “தாரா அக்காகிட்ட பேசுவியாம்..” என்றாள்.

ஜனனி ஒன்றும் சொல்லாமல் உள்ளே சென்றுவிட்டாள்.

இரவு உணவு முடித்து… கார்த்திகேயன் தன் பெண்ணிடம் “தாரா அக்கா கூப்பிடுவா.. பேசு டா, உங்க மதி ஆன்ட்டி usலிருந்து வந்துட்டாங்களாம்.. அவங்க ஆசை படுறாங்க.. உன் கூட பேச.. இரண்டு வார்த்தை பேசேன்…” என்றார்.

பத்து மணிக்கு ஜனனியின் போன் ஒலித்து.. ‘தாரா அக்கா’ என ஒளிர்ந்தது.

மெதுவாக ஏற்று காதில் வைத்தாள்.

தாரா “ஜானு.. ஜானு “ என்றாள் இருமுறை.

ஜனனி “ம்.. சொல்லுங்க க்கா, எப்படி இருக்கீங்க” என்றாள் அமைதியானக் குரலில்.

தாரா “நல்லா இருக்கேன் டா.. நீ எப்படி இருக்க..” என்றாள், வாஞ்சாய் வந்தது குரல்.

ஜனனி “ம்..” என்றாள் சின்னக் குரலில். அடுத்து என்ன பேசுவது என தெரியவில்லை. குழந்தைகளின் பெயர் நினைவு வரவில்லை அவளுக்கு, அது தோன்றவும் இல்லை.. ஆனாலும் “பசங்க நல்லா இருக்காங்களா அக்கா.. மாமா எப்படி இருக்காங்க” என்றாள்.

தாரா “உனக்கு எங்களை மறந்து போச்சோ நினைச்சேன்.. எனக்கு ரெண்டு பையன்.. முதல் பையன் உனக்கு தெரியும்.. தைவிக். ரெண்டாவது பையன்  எட்டு மாசம் ஆகுது பிறந்து.. பேரு சாந்தனு. மாமா உன்கிட்ட பேசணும் சொல்லிட்டே இருக்காங்க டா…” என்றாள்.

ஜனனிக்கு என்ன பதில் சொல்லுவது என தெரியவில்லை.. தாராவின் எண், வாட்சப் எல்லாம் அவளிடம் உண்டு. தாரா.. கார்த்திகேயனிடம், ராகவ்விடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறாள். வான்மதியும் கார்த்திகேயனுடம் தொடர்பில் இருக்கிறார்கள்தான். ஆனால், ஜனனி யாரிடமும் பேசுவதில்லை. தாரா.. தன் இரண்டாவது மகன் பிறந்த போது போட்டோ அனுப்பினாள்.. அதற்கே ஒரு ஸ்மைலி ஒன்றை அனுப்பிவிட்டு அமைதியாக இருந்துக் கொண்டாள் அவர்களின் ஜானு.

இப்போதும் அமைதியாக இருந்தால் ஜனனி.

தாராவிற்கு, ஜனனியிடம் எப்படி கேட்பது எதை கேட்பது என தெரியவில்லை.. பாவம் சிறுபெண்.. அவளிடம் மீண்டும் காயத்தை கேட்க வேண்டுமா’ என எண்ணம். எனவே பொதுவாக எங்க வேலை செய்கிறாள்.. சேர்ந்து எத்தனை நாள் ஆகிறது.. என கேட்டுக் கொண்டு.. “சண்டே பேசறேன் டா.. போனை எடு, மாமா பேசணும் சொன்னாங்க, மதி அத்தை உன்கிட்ட பேசணும் சொன்னாங்க டா..” என சொல்லி போனை வைத்தாள் தாரா.

தாராவிற்கு, மனம் கனத்துதான் போனது. தன் அன்னையின் மூலம்.. தெரிந்துக் கொண்டாள் ‘எதோ தப்பாக பேசி ஜானுவை படுத்திவிட்டனர், கல்யாணம் ஆகி இருபதுநாளில் தானே வீடு வந்துட்டாளாம் குட்டி..‘ என தெரிந்தது. அதெல்லாம் நினைவு வர.. அந்த பெண்ணை நினைத்து வருத்தம் வந்தது தாராவிற்கு.

ப்ரித்வி, சுகுமாரி இறந்த பின் ஒரு வாரத்தில் வந்து துக்கம் விசாரித்து சென்றான்தான், தாரா மாசமாக இருந்ததால் வரமுடியவில்லை.. ஆனால், ப்ரித்வியை பார்க்கவும், ஜனனி தன் அறையிலிருந்து வெளியே வந்து அவரை பார்த்துவிட்டு.. உள்ளே சென்றுவிட்டாள் பேசவில்லை.

எல்லோருக்கும் துக்கம்தான் பெரிதாக இருந்தது. எனவே எதுவும் கேட்க முடியவில்லை. ஜனனி, அங்கே நன்றாக வாழ்கிறாள் என புரிந்துக் கொண்டனர் மதி வீட்டில்.

ஆக எல்லோருக்கும் அவளின் திருமணம் தெரியும், மகாதேவ்விற்கும் தெரியும். 

மதி, இந்தியா வரும் விஷயத்தை கார்த்திகேயனிடம் சொல்லி, “அண்ணா.. ஜானுகுட்டி ஏதேனும் விசேஷமா..” என கேட்க்கவும்தான் கார்த்திகேயன் உடைந்து.. தன் பெண் பற்றி சொன்னார், அதுவும் முழுதாக சொல்லவில்லை ‘வந்துட்டா ம்மா, எங்களை ஏமாற்றி விட்டனர்’ என சொன்னார் அவ்வளவுதான்.

ஆக, இப்போதுதான் தாரா வீட்டில் எல்லாம் தெரியும். 

Advertisement