Advertisement

 மரகத மழையாய் நீ!..

அடுத்தடுத்த வருடங்களில்..

அம்மு மருத்துவம் படிப்பில் சேர்ந்தாள்.. சேலத்தில். எனவே விடுதி வாசம் அவள்.

மஹா, அடுத்த மூன்று வருடம் சென்று மீண்டும் இந்தியா வந்தான்.. தன் தந்தையின் இறப்பிற்கு.

அவர்களின் பழைய வீட்டை, விற்று நேர் செய்து.. தன் அன்னைக்கு, பாஸ்போர்ட் எடுத்து.. தன் அக்கா தாராவின் வீட்டில் விட்டு சென்றான். 

அடுத்த இரண்டு மாதத்தில் படிப்பு முடிந்தது மஹாவிற்கு.. வேலையில் அமர்ந்தான்.. அடுத்த இரண்டு மாதத்தில், தன் அன்னையை கூட்டிக் கொண்டான் மஹா. 

வான்மதிக்கு, கணவர் இறந்த துக்கத்தில், எல்லாம் வெறுத்து போக.. மகன் சொல்லுவதை செய்தார் அப்போது. வேலையை விட்டார்.. அவனுடன் US சென்றார். ஆனால், எல்லாம் தவறென.. அடுத்த ஒரு வருடம் சென்றுதான் உணர்ந்தார் அவர். ம். தனிமை படுத்தியது அவரை. எப்போதும் பரபரப்பாக இருந்தவர்.. ஓய்வாகவே இருந்தார்.. பலதையும் யோசித்தார்.. அடிக்கடி தலைவலி வந்தது.. என்னமோ சொல்ல முடியாத பயம் வந்தது.. தனியாக புலம்பத் தொடங்கினார்.. இப்படி சின்ன மனநோய் அவரை தாக்கியது.

மருத்துவரை பார்த்தனர்.. அவர்கள் எல்லாம் பார்த்து.. ‘நீங்கள் அவர்களுடன் நேரம் செலவிட வேண்டும்’ என்றனர் மகாதேவ்விடம். அது அவனால் முடியாமல் போகிற்று, வேலை வேலைதான் அவனுக்கு. சில நேரம் இரண்டு நாட்கள் கூட வீடு வராமல் வேலை பார்ப்பவன் அவன். எனவே நிறைய சண்டைகள் மகன் அன்னைக்குள். இரண்டு வருடங்கள் இப்படியே சென்றது. 

தாரா “அம்மாவை இங்க அனுப்பிடு, இல்லை, கல்யாணம் செய்துக்க” என்றாள் முடிவாக.

#$#$#$#$#$

சென்னையில்…

ஜனனி, மருத்துவம் மூன்றாம் வருட படிப்பின் போது, ராக்வின் திருமணம் நடந்தது. அவர்களின் தூரத்து அத்தை பெண் காயத்ரியை மணந்தான். தன்னுடன் பெங்களூர் அழைத்து சென்றான்.

ஜனனியின், இறுதி வருட படிப்பின் போது, தேஜு பிறந்தாள். வீடே சந்தோஷத்தில் மிதந்துக் கொண்டிருந்தது. 

அடுத்த சிலமாதத்தில், எதோ மயக்கம் என மருத்துவமனை சென்றார் சுகுமாரி.. தீராத ஒரு நோய் அவரை தாக்கி இருந்தது. கார்த்திகேயன் உடைந்து போனார்.

மகள் படிப்பு முடிந்து வீடு வந்தாள். தானே மருத்துவமனைக்கு அன்னையை கூட்டி சென்றாள்.. அறுவைசிகிச்சை வேண்டும் என அவளுக்கே தெரிந்தது. மருத்துவர்கள் அதையே பரிந்துரைத்தனர். பிழைக்க 50% வாய்ப்பிருப்பதாக.. சொல்லினர். 

கார்த்திகேயன்.. பணம் எல்லாம் ஏற்பாடும் செய்தார். ஆனால், சுகுமாரி, மகளின் திருமணம் முடியட்டும்.. என்றார். அவசர அவசரமாக சொந்தத்தில்.. காயத்ரியின் சித்தப்பா வகையில் ஒரு வரன் பார்த்து மணம் முடித்தனர் ஜனனிக்கு.. நல்ல வசதிதான், அவர்கள்.. ஜனனியை மேலே படிக்க வைக்கிறோம் என்றனர்.. சம்பந்தியின் மருத்துவ செலவு கூட பார்க்கிறோம் என்றனர். ஆக, நல்லவர்கள் என கார்த்திகேயன் நம்பி பெண்ணை கொடுத்தார்.. தன் கண்ணையே கொடுத்தார்.

எளிமையாக ஜனனி வசந்தபாலன் திருமணம் முடிந்தது. விமர்சையாக அவர்கள் ஊரில் வரவேற்பு நடந்தது. எல்லாவற்றிலும்.. சுகுமாரி ஆனந்தமாக கலந்துக் கொண்டார். பார்ப்பவர்களுக்கு அவர் இன்னும் நிறைய வருடங்கள் இருப்பார் என தோன்றியது.

எல்லாம் ஒரு மாதம்தான்.

ராகவ் சென்னைக்கு தன் வேலையை மாற்றிக் கொண்டு வந்தான்.

அடுத்த மாதம் அறுவை சிகிச்சை தேதி தந்தனர் மருத்துவர்கள்.. உடல்நிலையை தேற்ற.. ஒரு பதினைந்து நாட்கள், மருத்துவமனையில் சேர்ந்தார் சுகுமாரி. கார்த்திகேயன் மனையாளை கவனிக்க அங்கேயே தங்கிக் கொண்டார்.

சரியாக திருமணம் முடிந்து ஒருமாதம் சென்று.. ஜனனி, நடு இரவில்… திருச்சியிலிருந்து சென்னை வந்தாள் தனியாக. மூன்று நாட்கள் தன் அறையின் கதவை திறக்கவில்லை அவள். ராகவ், காயத்ரி பதறி.. அழுது.. அங்கேயே தவமிருந்து கதவை திறக்க வைத்தனர்.

கதவை திறந்தவள் முகம், கன்றிய காயங்களுடன்தான் இருந்தது. ராகவ், காயத்ரி இருவரும் மாற்றி மாற்றி கேள்விகளாக கேட்க.. மௌனம் மட்டுமே பதிலாக தந்தாள் ஜன்னி.

எதையும் கண்டுக் கொள்ளாமல் கிளம்பி மருத்துவமனை சென்றாள்.. அன்னையை பார்த்தாள். நிறைய காரணங்கள் சொல்லி பெற்றோரை சமாதானப்படுத்தினாள்.. ஆனால், அன்னைக்கு மனம் நெருட தொடங்கியது. சிகிச்சைக்காக வந்தவரின் மனம் முழுவதும் மகளே கவலையாக நிறைந்து நின்றாள்.

பொதுவான பெரியாவர்களை கொண்டு விசாரித்தனர் ஜனனியின் குடும்பம். வசந்த், வீட்டினர் ஏதேதோ குற்றம் சொல்லினர் ஜனனியை.. ‘படித்த திமிர்.. குடும்ப பெண்ணில்லை’ என ஏதேதோ குற்றம் சொல்லினர். ஆனால், ஜனனி ‘எனக்கு டிவோர்ஸ் மட்டும் போதும்..’ என்றாள். வேறு எதுவும் சொல்லவில்லை அவர்களை. காயத்ரி.. கெஞ்சி, கதறி மிரட்டி கேட்டும் கூட ஒன்றும் சொல்லவில்லை. 

இதெல்லாம் என்ன முயன்றும் சுகுமாரியின் காதில் விழுந்தேவிட்டது.

அறுவைசிகிச்சையின் போது மகளிடம் ‘தான், திரும்பி வந்த பின்.. என்ன ஆச்சுன்னு சொல்லணும்’ என சத்தியம் வாங்கி உள்ளே சென்றார் சுகுமாரி.. அறுவைசிகிச்சை முடிந்து கண் திறக்காமல் உயிர் துறந்தார் அன்னை.

அடுத்து என்ன என யோசிக்கவே ஜனனியின் குடும்பத்தார்க்கு ஒரு வருடம் ஆகியது. ஆனால், எந்த நாட்காட்டியும் இதுவரை.. அவர்களுக்கு நல்ல செய்தி சொல்லவில்லை.

ஆக மொத்தம் ஏழு வருடங்களுக்கு பிறகு…

மகாதேவ்.. இந்தியா வந்து ஒருவாரம் ஆகிறது. சென்னையில்தான் இனி அவனின் வேலை. உலகளாவிய ஒரு பெரிய பையிங் செல்லிங் நிறுவனத்தின் நெட் வொர்க் அனலைசேர், இந்தியாவின், சவுத் ஜோன் முழுவதற்கும். படிப்பு முடித்தும்.. வேலையில் சேர்ந்துவிட்டான், எனவே, அவனின் திறன் பார்த்து இந்த பதவி, அவனுக்கு. 

மேலும், தமிழ்நாடு செல்ல வேண்டும் என அவனின் அன்னை வான்மதி.. அடம்பிடித்தார். உண்ணாவிரதம் வரை சென்றது அவரின் பிடிவாதம். மகனாக பயம் பற்றியது மஹாவிற்கு. இல்லையேல்.. அவன் தமிழ்நாடு வரும் எண்ணமே இல்லை. ம்.. நல்ல வேலை.. இன்னும் USல் இருக்க இருக்க.. சம்பளம் கூடும்.. பதவி வரும்.. எனவே இங்கே வர அவனிற்கு விருப்பமில்லை. எல்லாவற்றையும் விட திருமணம் என்ற ஒன்றை அவனுக்கு பிடித்தம் இல்லை.. எனவே, சென்னையின் மேல் பெரிதாக நாட்டம் வரவில்லை. ஆனாலும் அன்னையாக வான்மதியின் துயரம்.. டார்ச்சர்.. இரண்டும் தாங்க முடியாமல் வந்து நிற்கிறான் இங்கு.

வான்மதி இப்போது புனேவில் இருக்கிறார்.. அவர் வந்து ஒருமாதம் ஆகிறது. 

@%@%@%@%@%

இரவு மணி 11. தங்களுடைய வீட்டின் பொருட்களை எல்லாம் ஆட்கள், வண்டியில் ஏற்றிக் கொண்டிருக்க.. தன்னுடைய புத்தகங்கள் நிறைந்த ஒரு பாக்ஸ்சினுள் மீண்டும்.. சில புத்தகங்களை வைத்து நிரப்பினாள் ஜனனி. 

எதோ உணர்வே இல்லாத… இயந்திரமாக இங்கும் அங்கும் நடந்துக் கொண்டே தன் வீட்டில்.. இல்லை, இப்போது ‘இது எங்கள் வீடு இல்லை’ என மனதில் ஆயிரமாவது முறையாக நிரப்பிக் கொண்டு.. விட்டு போன பொருட்களை எடுத்துக் கொண்டே.. மீண்டும் மீண்டும் வீட்டை சுற்றினாள் ஜனனி.

அடுத்த அரைமணி நேரத்தில் வீடு சுத்தமாகியது. அவர்களின் பொருட்கள் ஏதும் இல்லை அந்த வீட்டில்.. வாசலில் வண்டியை அனுப்பி விட்டு நின்றிருந்த ராகவ், அவனின் மனைவி காயத்ரி இருவரும்.. உள்ளே வர, அங்கே ஜனனி.. தன் அன்னையின் போட்டோவை கையில் வைத்துக் கொண்டு.. வருடிக் கொண்டிருந்தாள்.

காயத்ரி “ஜானு.. போலாமா?” என்றாள்.

ஜானு தலையசைத்தாள்.. ஆனால், எழுந்துக் கொள்ளவில்லை.. ராகவ் வீட்டை ஒரு சுற்று சுற்றி வர.. காயத்ரி பாட்டிலில் இருந்த தண்ணீர் எடுத்து ஜனனிக்கு கொடுத்துக் கொண்டிருந்தாள்.

அதை வாங்காமல்.. மெல்லியக் குரலில் “ம்மா.. இன்னும் நீ என் கூடவே இருக்கியாம்மா.. பாரேன்.. எல்லாம் எடுத்தாச்சு.. நீ பாரான், உன் ரூமில் எல்லாம் சுத்தமா இருக்கு.. இல்ல, உன் ரூம் இல்ல..” என எதோ சொல்லி புலம்பிக் கொண்டே இருந்தாள்.

காயத்ரிக்கு பொறுமை பரந்துக் கொண்டிருந்தது. 

ராகவ் வந்தான், தன் மனைவியின் முகம் பார்த்து “ஜானு ம்மா, போலாம், டைம் ஆச்சு, அங்க அப்பா, தேஜு மட்டும் தனியா இருப்பாரங்க.. வண்டி போயிடும்.. வா வா…” என்றான் அதட்டலாக.

இதற்கும் மேல் அண்ணன் பொறுக்கமாட்டான் என உணர்ந்த ஜனனி.. கண்ணை துடைத்துக் கொண்டு எழுந்தாள்.. மீண்டும் ஒரு முறை வீட்டை சுற்றினாள்.. கிட்சேன், ஹால், வராண்டா.. தன் வீட்டு மதில், அங்கே பக்கத்து வீட்டை எட்டி பார்த்தாள்.. இப்போது அங்கு யாருமில்லை.. தன் கேட் அருகில் வந்தாள்.. மீண்டும் திரும்பி நின்று ஒரு முறை வீட்டை மேலிருந்து கீழ் பார்த்தாள்.. பின், ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டு.. நிற்காமல் சென்று காரில் அமர்ந்துக் கொண்டாள்.

ஜனனியின் மனதில் ஏதேதோ நினைவுகள்.. நல்லது கெட்டது, இன்பம் துன்பம்.. என எல்லாம் கலந்த நினைவுகள்.

ராகவ், எல்லாம் பூட்டிக் கொண்டு வந்தான் மனையாளோடு. இருவரும் முன் பக்கம் அமர்ந்தனர். வண்டி நகர்ந்தது. கார் தங்களின் புது அப்பார்ட்மென்ட் நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. 

ராகவ்வின் அலுவலகம், ஜனனியின் ஹாஸ்பிட்டல் இரண்டும் அங்கிருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரம்தான். எனவே, அங்கே வீடு பார்த்துக் கொண்டனர்.

ஜனனிக்கு எல்லாம் புரிந்தாலும் அவளால் அந்த வீட்டை ஏற்க முடியவில்லை. என்னமோ குறை.. இல்லை, எல்லாம் குறையாக தெரிந்தது அவளுக்கு. இருந்தும், அமைதியாக இருக்கிறாள் இப்போதெல்லாம்.

அந்த அப்பார்ட்மென்ட் வந்துவிட்டது. காரை பார்க் செய்து ராகவ் வரும் வரை, காயத்ரியும் ஜனனியும் அங்கிருந்த எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தனர். ஏதும் பேசிக் கொள்ளவில்லை.

ராகவ் வர.. மேலே சென்றனர்.. பதினெட்டாவது மாடியில் பெரிய வீடு.. மூன்று பால்கனி.. அங்கிருந்து பார்த்தால், கடல் தெரியுமாம், வீடு பார்க்க வரும் போது, ஜனனியின் நண்பன் சூரியநாராயணன் சொன்னது. ம்.. அவனும், இங்கேதான் வேறு பிளாக்கில் இருக்கிறான்.

ராகவ், வந்தான் பெண்கள் இருவரையும் பார்த்து “நீங்க போங்க.. நான் திங்க்ஸ் எடுக்கிறவங்ககிட்ட பேசி, சொல்லிட்டு வரேன்” என்றான்.

இருவரும் ஏதும் பேசாமல், லிப்டில் மேலே சென்றனர்.

இரண்டு வீடுகள் மட்டும்தான் அந்த தளத்தில். 

ஜனனியின் தந்தை வராண்டாவில் ஒரு சேரில் அமர்ந்திருந்தார், கீழே பேத்தி தேஜாஸ்ரீ விளையாடிக் கொண்டிருந்தாள்.. க்ரேயான் வைத்து எதோ கிறுக்கிக் கொண்டிருந்தாள்.

இவர்கள் வரவும் தேஜு “வா.. வா ம்மா, ஏன் லேட்.. தூக்கம் தூக்கமா வது ம்ம்மா ” என்றாள் மழலையில்.. 

காயத்ரி “தூங்கலாமே.. வாங்க வாங்க” என்றாள் கைநீட்டி பிள்ளையை அழைத்தபடி. அதுவும் அன்னையை சென்று அணைத்துக் கொண்டது.

ஜனனி, ஓய்ந்து போய் அமர்ந்தாள், தன் தந்தையின் காலின் அருகில். சுவரில் சாய்த்தபடி அன்னையின் படத்தை வைத்தாள்.

பார்த்துக் கொண்டே இருந்த தேஜு.. தன் அன்னையிடமிருந்து இறங்கி, தன் தாத்தாவிடம் போய் அமர்ந்துக் கொண்டது. தேஜு, தாத்தாவின் பெட், தாத்தா இருந்தால், அவளிற்கு உணவு நீர் வேண்டாம், அப்படி ஒரு பிடித்தம் தாத்தாவிடம் தேஜுவிற்கு.

திங்க்ஸ் எடுக்கும் லிப்ட் வழியாக சாமான்கள் வந்தது இப்போது. இப்போது இவர்கள் எழுந்தால் தான், பொருட்கள் உள்ளே வைக்க முடியும் எனவே எல்லோரும் எழுந்துக் கொண்டனர்.

கார்த்திகேயன் பேத்தியை தோளில் தாங்கிக் கொண்டே, நடந்தார் அந்த வராண்டாவில், அவளை தூங்க வைப்பதற்காக.

பத்து நிமிடத்தில் அவள் உறங்கிவிட்டாள். ஜனனி, குழந்தையை வாங்கிக் கொண்டு அமர்ந்தாள் ஒரு ஓரமாக.

மற்ற எல்லோரும் அடுத்த ஒருமணி நேரத்தில் எல்லா பொருட்களையும் உள்ளே வைத்திருந்தனர். காயத்ரி, சில பொருட்களை மட்டும் பாக்கிங் பிரித்து எடுத்தாள், உறங்குவதற்காக. எல்லோரும் உறங்கினர்.

காலையில் நேரமே எழுந்துக் கொண்டு பால் காய்ச்சினர் பெண்கள் இருவரும். 

ராகவ் நல்ல உறக்கத்தில் இருந்தான். அவனுக்கு மதியம் தான் ஆபீஸ். ஜனனி கிளம்பினாள் மருத்துவமனைக்கு.. தேஜு, தாத்தாவோடு, கீழே சென்றிருக்கிறாள் பராக்பார்க்க.

ஜனனியின் போன் ஒலித்தது, எடுத்தாள் பெண். அவளின் நண்பன் சூரிதான் ‘வீட்டுக்கு வரலாமா’ என கேட்டு அழைத்தான். ஜனனி “ச்சி வா..” என அன்பாக பேசி போனை வைத்தாள். அவனும் மருத்துவன்.. சர்ஜன். இருந்தும் இவளிடம் மரியாதை என்பதை எதிர்பார்க்க முடியவில்லை.

சூரி, தன் மனைவியோடு வந்தான். ஜனனி “வா, அர்ச்சு” என கூறி அவளையும் அழைத்துக் கொண்டு  கிட்சேன் சென்றாள். மூன்று பெண்களும் பேசிக் கொண்டே வேலையை பார்த்தனர், காலை உணவு தயாராகியது.

தேஜு வந்தாள் “ஹாய் சூரி, எப்பி இர்க்கீங்க..” என்றாள் குழந்தை.

சூரி “ஹாய் பேபி, நல்லா இருக்கேன் டா..” என பேசியபடி தூக்கிக் கொண்டான். இரண்டொரு வார்த்தை, ஜனனியின் தந்தையிடம் பேசினான்.

ஜனனி “தேஜு.. போங்க, ஹன்ட் வாஷ் பண்ணுங்க.. ம், ம்…” என்றாள்.

தேஜு “உங்க ப்ரெண்ட் அங்கிள்தான், நான் குட்” என்றபடி.. சூரியிடமிருந்து இறங்கி, அவனை முறைத்துக் கொண்டு, லேசாக, தன் அத்தையையும் முறைத்துக் கொண்டே தங்களின் அறைக்குச் சென்றாள் குட்டி பெண்.

சூரி சிரித்தான் “ஸ்மார்ட் டா..” என்றபடி தன் தோழியை நோக்கி “உன்னை மாதிரிதான் இருக்கா… “ என்றான் சிரித்துக் கொண்டே.

ஜனனிக்கு, இந்த வார்த்தை சட்டென அவளை நிலையிழக்க செய்தது போல, ஜனனி “ச்சு, அப்படி எல்லாம் வேண்டாம்.. அவள், அவள மாதிரியே இருக்கட்டும்.. என்ன மாதிரி யாரும் இருக்க வேண்டாம்” என்றவள்.. படபடவென தன்னறைக்குச் சென்றாள்.

மனசை சலவை செய்ய..

ஒரு கண்ணீர் நதிதான் உண்டு..

உன் உயிரை சலவை செய்ய..

ஒரு காதல் நதி உண்டு…

உன் சுவாச பையை மாற்று..

அதில் சுத்த காற்றை ஏற்று…

நீ இன்னொரு உயிரில்..

இன்னொரு பெயரில் வாழ்ந்துவிடு..”

காயத்ரி “விடுங்க சூரி, இதெல்லாம் உங்களுக்கு தெரியாததா.. வாங்க, அவ டிரஸ் சேன்ஜ் செய்து வாருவா, வாங்க.. சாப்பிடுங்க. அர்ச்சனா, நீ எதுவும் நினைக்காத, அவ சிலசமயம் இப்படிதான், உனக்கு தெரியாதா.. தேஜுக்கு கொஞ்சம் ஊட்டி விடுறியா” என எல்லோரையும் கொஞ்சம் சமாதானம் செய்தாள் காயத்ரி.

கார்த்திகேயன் ஏதும் பேசாமல் பூஜை அறையை எடுத்து வைக்கத் தொடங்கினார்.

தேஜு வந்தாள் ஹன்ட் வாஷ் செய்துக் கொண்டு.

காயத்ரி “அம்மு, அர்ச்சு அத்தைகிட்ட சாப்பிடு” என்றாள். கூடவே கார்த்திகேயனிடம் “மாமா, சூரி கூட சாப்பிடலாம் வாங்க… அவ வந்திடுவா.. ஒழுங்காவே சாப்பிடமாட்டார் சூரி.. வாங்க” என்றாள் சற்று கொஞ்சலாக.

தேஜு “ம்… எங்க அத்த… காணோம், அத்த, ஹனி வேணும்..” என்றாள் சத்தமாக, ஜனனியை தேடியபடியே.

இங்கே தேஜுவின் அட்டகாசம் தொடங்கியது.  தன் அத்தையை தேடி, அவளின் ரூம் கதவை.. தட்டி.. ஜனனியிடம் இரண்டு திட்டுக்களை வாங்கிக் கொண்டு, தேஜுவும் “கதவை திற டி… எதுமா..” என தானும் இரண்டு திட்டு திட்டி, கதவை திறக்க வைத்தாள் குழந்தை. 

லேசாக  சிவந்த கண்கள்தான் மற்றபடி, நிமிர்வாகவே கதவை திறந்தாள்.. ஜனனி “என்ன டி, ரவுடி, ரொம்ப பேசற… பிச்சிடுவேன் ஜாக்கிரத..” என குழந்தையை கையில் அள்ளிக் கொண்டு.. நேரே.. பாக்கிங் பாக்ஸ் இருக்குமிடம் சென்றாள்.. தேன் எடுத்து குழந்தையின் உள்ளங்கையில் ஒரு ஸ்பூன் கொடுத்தாள்.

சூரி, கார்த்திகேயனுடன் உண்டுக் கொண்டிருந்தான் இதையெல்லாம் பார்த்துக் கொண்டே.

சூரி, ஒரு வருடம் சீனியர். ராகவ்வின் நண்பனின் தம்பி. ஜனனி படித்த கல்லூரியில் ராகவிற்கு தெரிந்த நபர் சூரி. எனவே, ஜனனி கல்லூரியில் சேர்ந்த புதிதில் ராகவ்தான் இன்ட்ரோ கொடுத்தான் தங்கைக்கு. இப்போது ஜனனியின் ஆருயிர் நண்பன் சூரி. அவளின் எல்லா ரகசியமும் இவனிடம் மட்டுமே புதைந்து இருக்கிறது.. ஆழமான நட்பு இவர்களுக்குள்… இப்போதுதான் சூரிக்கு திருமணம் முடிந்து ஆறுமாதம் ஆகிறது.  

ஜனனி இப்போது வந்து, தன் நண்பன் மனைவியிடம் “சாரி பாஸ்…” என்றாள், அமைதியானக் குரலில்.

அர்ச்சனா “ஹேய், எதுக்கு இது, உங்க பாண்டிங்க்கு நான் ஏதும் சொல்ல மாட்டேன். நான் எப்போதும் நடுவில் வர மாட்டேன்.. நீங்களே மண்டையை உடைச்சிக்கோங்க பா.. முடிஞ்சா.. சீக்கிரம் வர சொல்லி.. என் சார்பா, ரெண்டு அடி போடு ஜானு” என்றாள் சிரித்துக் கொண்டே. அர்ச்சனா..MBA முடித்திருக்கிறாள்.. வேலைக்கு செல்ல பிடிக்காமல், புதிதாக பௌட்டிக் வைக்கும் எண்ணத்தில் தன் அப்பார்ட்மென்ட் வளாகத்திலேயே இடம் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

சூரி, “ஜானு சாப்பிடு கிளம்பலாம்” என்றான். சூரி ஜெனரல் சர்ஜென். இப்போதுதான் படிப்பு முடித்திருக்கிறான்.. தான் வேலை செய்யும் ஒரு தனியார் மருத்துவமனையில் ஜனனிக்கும் வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறான்.  எட்டு மாதம் டுயூட்டி ஷிபிட் பார்த்தாள்.. இப்போது, OP பார்க்கும் ஒரு ஜூனியர், ஜனனி.

“எப்போதுமே இன்பமென்றால்..

முன்னேற்றமே ஏது…

எப்போதும் பகலாய் போனால்…

வெப்பம் தாங்காது…”

Advertisement