Advertisement

மரகத மழையாய் நீ!..

3

மஹாவிற்கு, படிப்பை தவிர மற்ற எல்லாம் இரண்டாம் பட்சம்தான். எனவே, இரவில் விழித்திருந்து படித்தான்.. அவள் வரும் நேரங்களில் தூங்க பழகினான். இல்லை வெளியில் சென்றான். அவன் கண்ணில் தென்பட்டாலும்.. எப்போதும் போல உள்ளே சென்றான். 

ஆனாலும் யோசனை ‘ஏன் என்னை ஈர்க்கிறாள்.. திடீரென’ என அவனுக்கே கொஞ்சம் அதிர்ச்சிதான். ஆனாலும்.. மனதில் ஓரத்தில்.. மாலை நேரம் வந்தால்.. ‘அவள் பள்ளி விட்டு வந்திருப்பாள்’ என நேரத்தை கணிக்கிறது அவனின் மனது. போராட்டம்தான் இப்படி அவனுள்.. ‘தன்னை.. பார்க்க அத்தனை பெண்கள் இருக்கையில், இவள் ஒரு ஆளா’ என மனதில் நினைத்து, அவளை ஒதுக்கி வைக்கவும் பழகிக் கொண்டிருக்கிறான்.

இப்படியாக தன்னை தானே தேற்றிக் கொண்டு.. எக்ஸாம் நல்ல படியாக முடித்தான். கல்லூரியில் இருந்த நாட்களில் தெரியாத தனிமை இப்போது தெரிந்தது. எப்போதும் வீட்டிலேயே இருந்தான். என்னதான் வெளிநாடு செல்வதற்கான வேலையில் இருந்தாலும்.. அக்காவின் திருமண வேலை.. லேப்டாப் எல்லாம் வீட்டில் இருக்க.. எதற்கு அலைச்சல் என பெற்றோர் திட்ட.. வீடுதான் அவனின் உலகமாகியது இந்த நாட்களில்.

அதிலும் மாலையில்.. அவள் பள்ளி வேன் விட்டு இறங்கும் முன் இவன் சென்று.. நிற்பான் அங்கிருக்கும் ஒரு கடையில். ஜனனி ரோட்டில் பேசியபடி அவனின் கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்திருந்து வீடு வருவான்.

மேலும், ஜனனி தன் வீட்டிற்கு வரும் நேரங்களுக்காக காத்திருந்தான்.  அவள் வெளியில் அமர்ந்து தன் தமக்கையிடம் பேசும் நிமிடங்களை தள்ளி இருந்து பார்த்தான். இருவரும் சென்று.. அவள் வீட்டில், பூ பறிக்கும் போது ஜனனி பேசும் பேச்சுகள் கண்டிப்பாக, இவனை சிரிக்க வைக்கும்.  வந்த கதை, போன கதை.. வகுப்பில் மொக்கை வாங்கிய கதை வரை சொல்லுவாள் ஜனனி. அதெல்லாம் தன் வீட்டின் மதில் ஓரத்தில் செடிகளை ரசித்தபடி கேட்டுக் கொண்டிருப்பான்.. மஹாதேவ். 

‘ஏன் இப்படி எல்லாம் புதிதாக அவளை கவனிக்கிறேன்’ என அவனுக்கே யோசனை. ஆனால், இதெல்லாம் பிடித்திருந்தது அவனிற்கு. என்னமோ சின்னதிலிருந்து, அவளின் ஆறு வயதிலிருந்து இருவரும் அருகருகே இருக்கிறார்கள். அப்போதெல்லாம் போட்டிக்கு நிற்பான். இப்போதும் போட்டி உண்டுதான் என்றாலும்.. எங்கோ அவளின் நடவடிக்கைகள்.. பிடிக்க தொடங்கியது அவனுக்கு.

அவளின் விரல் நீட்டி பேசும் அழகு.. அவன் இருந்தால், தன் கொலுசு சத்தம் ஒலிக்காமல் நடந்து, அவனை கடந்து செல்லும் அழகு.. விடுமுறை நாளில்.. என் அக்காவிடம் பேச மதில் ஏறி அமர்ந்துக் கொள்வாள்.. மேலே அவன் அறையை பார்த்துக் கொண்டே, தாராவிடம் ‘எங்க உங்க தம்பி… வீட்டில் இருக்காரா..’ என்பாள் ரகசியக் குரலில். அப்போது அவளின் முக பாவனையை பார்ப்பவனுக்கு கோவம் வந்தாலும்.. சிரித்து விடுவான்.. ஏனென்றால்.. இப்போதெல்லாம் அவனுக்கு அவளை பிடிக்கிறதே.

முன்னெல்லாம் இப்படி அவள் சுவர் ஏறி குதிப்பது பிடிக்காது அவனிற்கு.. படிக்கும் போது இவள், திடுமென குதிப்பாள்.. எதோ விழும் சத்தம் போல கேட்கும்.. எட்டி பார்த்தால்.. இவள். கோவமாக கத்துவான் “அறிவே இல்லை, இரு அத்தை கிட்ட சொல்றேன்..” என்பான். சில சமயம் சொல்லியும் விடுவான். ஆனால், அவன் அப்படி சொன்னாலும் கேட்காமல்,  வேண்டுமென்றே.. இன்னும் நாலுதரம் அவள் சுவர் ஏறி குதிப்பாள்.

ஆனால், இந்த நாட்களில் சிரிப்பு வருகிறது அவனுக்கு. நல்ல மாற்றமாக அவனுக்கே புரிந்தாலும்.. நெருங்கி பேசி, பழக.. அவனுக்கு உடன்பாடில்லை. என்னமோ அவளை முழுதாக மனதிற்குள்  அனுமதிக்க அவன் தயங்குகிறான். ‘அவள் தன்னை மதிக்கவில்லை’ என்ற நினைப்போ, இல்லை, ‘தன் படிப்பின் மேல் உள்ள கவனமா..’ எதோ ஒன்று அவனை ரசிக்க வைக்கிறதே தவிர நெருங்க வைக்கவில்லை அவளிடம். அதனால், ரசிப்பதுடன் நிறுத்திக் கொள்வோம் என முடிவெடுத்திருக்கிறான்.. இந்த இரண்டு மாதத்தில்.

ஆகிற்று தாராவின் திருமண நாளும் வந்தது. தாராவின் கணவர் பிருத்விராஜ், புனேவில் ஒரு ஆயில் நிறுவனத்தில் வேலை. நல்ல நிறமாக, சாதுவான தோற்றத்தில் இருந்தார். தாராவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். எல்லா உறவுகளும் சற்று கிண்டல் செய்தது அவரை. ஆனாலும் அசராமல் தாராவையேதான் மணமேடையில் பார்த்திருந்தார். 

சென்னையில், நல்ல வசதியான மண்டபம்.. காலையில் திருமணம், மாலையில் வரவேற்பு என சிறப்பாக நடந்தது விழா. 

சுகுமாரியின் குடும்பம் எப்போதும் போல அவர்களுக்கு துணை நின்றது. ராகவ் வந்திருந்தான் இருநாட்கள் விடுமுறையில், திருமணத்திற்கு. 

ஜனனி, அழகாக மாந்துளிர் நிற லெஹங்காவில் இருந்தாள். முதல் முதலாக அந்த உடையை ஆசைப்பட்டு வாங்கினாள்.. ஜனனி. வான்மதி, தாராவின் திருமணத்திற்கு என ராகவ்விற்கும் ஜனனிக்கும் ட்ரெஸ் எடுத்திருந்தார், தங்கள் பிள்ளைகளாக கருதி. சுகுமாரியும், தாராவிற்கு தங்க நகை பரிசளித்தார்.

மஹாதான், மீண்டும் தடுமாறினான் அன்று. பார்த்து பார்த்து அலங்கரித்துக் கொண்டு வந்தாள் ஜனனி. காலையில் கூட பாவாடை தாவணியில் இருந்தாள்.. அது அந்த உடை மஹாவை அவ்வளவாக ஈர்க்கவில்லை எனலாம். ஆனால், மாலையில் அந்த லெஹங்கா.. என்னமோ புதிதாக இருந்தது.. ஈர்த்து.. அவனை. அதை அவள் அழகாக, நளினமாக உடுத்திக் கொண்ட விதம் எதோ தேவதையாகவே உணர்ந்தான் அவளை.

பாவம்.. ‘கண்ட்ரோல் கண்ட்ரோல்.. டா.. மஹா’ என தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொண்டான் பாவம். 

தாராவின் டியூஷன் பிள்ளைகள், அக்கம் பக்கம் இருக்கும் வீடுகளின் பிள்ளைகள் என எல்லோரும் சேர்ந்து ஒரு குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர் தாரா பிரித்வீ தம்பதியுடன். தாரா, இவனையும் அழைத்தாள்.. “வா டா, பிள்ளைகள் கூட நில்லு” என்றாள்.. ம்கூம்.. செல்ல மறுத்து, அப்படியே ஜனனியைப் பார்த்துக் கொண்டே நின்றிருந்தான். 

அந்த ஷணம்தான்.. ஜனனி, மஹாவை கண்டுக் கொண்ட தருணம். இதுநாள் வரை தெரியாத அவனின் சிரித்த முகமும், தன்னையே எதோ போல பார்க்கும் பார்வையும் இன்று.. இந்த ஷணம் தெரிந்தது பெண்ணிற்கு, ‘எதோ சரியில்லை’ எனவும் உணர செய்தது.

அந்த போட்டோ எடுக்கும் நேரம் வரையும் அதன்பின்னும், மஹாவின் கண்கள் தன்னையே துளைப்பதை உணர்ந்தாள் ஜனனி. 

‘எப்போதும்  அவன் அமைதிதான்’ என்றாலும்.. தன்னை எப்போதும் திட்டிக் கொண்டும், குறை சொல்லிக் கொண்டும் இருப்பவன்.. இப்போதல்லாம் அமைதியாக இருப்பதும்.. எதோ சிரித்த முகமாக தன்னை பார்ப்பதும்.. இயல்பாக பெண்மனதில் எச்சரிக்கை மணியை அடிக்க வைத்தது. 

ஆனால், அது இன்னும் வசதியாக போனது மஹாவிற்கு. அவளும் அடிக்கடி பார்க்க.. என்னமோ அவனையறியாமல்.. அவளை பார்த்து லேசாக சிரிக்க தொடங்கினான். ஆனால் அருகில் நெருங்கவில்லை. இப்படி எங்கும் எதிலும் அவளை உறுத்தாமல் நின்றுக் கொண்டான் மஹா.

திருமணத்தை ஒட்டிய நிகழ்வுகள் தொடங்கியது.. நாட்கள் தன்போல நகர்ந்தது. தாரா, ஒருமாதம் சென்னையிலும் அவளின் மாமியார் வீடு வேலூர். எனவே அங்கும்.. சென்னையிலும் மாற்றி மாற்றி இருந்தார்கள்  தம்பதி. 

மஹாதேவ், ஸ்காலர்ஷிப், கோர்ஸ் செலக்ஷன்… ஆன்லைன் எக்ஸாம் என பிஸி. 

ஜனனி, ஒரு பெண்ணாக கவனமாக இருந்தாள். காதல் என்பது பிடிக்கும் என்றாலும்.. இந்த வயதில் காதல் என்பது கூடாது என தெளிவாக இருந்தாள், அதுவும்.. ‘இவன் மேல் காதல் வரவே கூடாது’ என தனக்கு தானே சொல்லிக் கொண்டாள். அப்படிதான் இருந்தாள்.. என்னமோ அவன் மனதில் பதியவில்லை அவளுக்கு. அவனால், அவள் பாதிக்கவே இல்லை.

சென்னையில், தாரா, திருமணம் முடித்து தம்பதியாக வந்து சிலநாட்கள் தங்கினர். அப்போதெல்லாம் தாராவுடன் பேசினாள், பிர்த்வியை, மாமா  என அழைக்க சொல்லி இருந்தாள் தாரா. எனவே அப்படியே அழைத்து பேசினாள் அவரிடம். 

பத்து நாட்கள் இங்கே தங்கினர் புதுமண மக்கள்.. அப்போது எல்லாம் ஜனனியின் குழந்தைத்தனமான பேச்சு.. பிரித்விக்கும் பிடித்து போனது. அவரும் அந்த சிறு பெண்ணிடம் அன்பாக இருந்தார். அப்படியாக பள்ளி முடித்து  மாலை நேரம், ஜனனி வந்தபின் கலகலப்பாக மாறும் தாராவின் வீடு. 

ஜனனி, பேசும் போதெல்லாம் மஹா வருவான்.. போவான்.. அவளின் பேச்சை, லாப்டாப் பார்த்துக் கொண்டே ஹாலின் ஒரு ஓரம் அமர்ந்து கேட்பான்.. சத்தமில்லாமல். அவள், அவனை ஈர்த்தாள். ஆனால், மஹாவால், ஜனனியின் கவனம் சிதறவே இல்லை. அவனிடம் கவனமாக இருக்கணும் என எண்ணிக் கொண்டாளே தவிர.. பிடித்தம், ஈர்ப்பு என எந்த பாதிப்பும் அவளுக்கு இல்லை.

நல்ல நாள் பார்த்து, தாராவை புனேவில் தனிக்குடித்தம் வைத்தனர் இருவீட்டாரும். ஜெயகுமார் மதி தம்பதி, அங்கே ஒருவாரம் தங்கினர்.

இந்த ஒருவாரம் மஹாதேவ் தனியேதான் இருந்தான், தன் வீட்டில். உணவு சுகுமாரி கொடுத்தார். சுகுமாரி, காலையிலேயே உணவு தாயாரித்து இரண்டு டப்பாவில் போட்டு.. ஜனனியிடம் கொடுத்து.. அவனின் வீட்டு வாசலில் வைத்து விடுவார். 

மஹாதேவ், இந்த நாட்களில் அவள் கண்ணில், தான் படாமல் இருந்துக் கொண்டான். தன்னை தானே முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தான் மஹா. 

பயம்தான் எங்கே யாருமில்லா நேரத்தில் அவளிடம் உளறி தன்னைக் காட்டிக் கொண்டு விடுவோமோ என பயம். இப்படியாக மஹா புல் சேஃப்.   

ஜனனிக்கு, தாரா இல்லாமல் நாட்கள் மௌனமாக சென்றது. பள்ளியிருந்து வருவாள், படிப்பாள்.. டிவி பார்ப்பாள்.. உண்பாள் உறங்குவாள். இப்படியாக அவளின் நாட்கள் சுருங்கி போனது. 

மதி, ஜெயகுமார் சென்னை வந்தனர். இயல்பாக நாட்கள் சென்றது. ராகவ் நடுவில் வந்து சென்றான் சென்னைக்கு.

அடுத்த மாதத்தில் மகாதேவ்வின் US பயணம் உறுதியானது. மாணவர் விசா எளிதில் கிடைத்து. அதை தொடர்ந்து.. அதற்கான வேலைகளை உற்சாகமாக பார்க்க தொடங்கினான் மஹாதேவ். 

மஹா, மிகவும் சந்தோஷமாக இருந்தான்.. அவனுக்கு சிறு வயதிலிருந்தே வெளிநாடு சென்று படிக்க வேண்டும் என்பது கனவு.. அது நடக்க போகிறது என்கையில் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தான் எனலாம்.

அடுத்த வாரம் கிளம்ப வேண்டும் என்கையில்.. ஜனனி, மஹாவின் வீடு வந்தாள். தாரா சென்ற பிறகு அவ்வளவாக வருவதில்லை. இப்போது தன் அன்னை ‘மஹாக்கு, பூசணி அல்வா பிடிக்கும்.. போ, இது கொண்டு கொடுத்துட்டு வா’ என்றார்.

இன்று ஞாயிறு விடுமுறை தினம்.. எனவே நான்கு மணிக்கு ஒரு சிறிய ஏர் கண்டைனர் டப்பாவின் பூசணிக்காய் அல்வா எடுத்து வந்தாள் ஜனனி. மஹாவின் பெற்றோர் வீட்டில் இல்லை. 

ஜனனி “அத்த.. அத்த..” என அழைத்த படியே.. கதவை திறக்க முயற்சித்துக் கொண்டே இருந்தாள்.

மஹா வந்து கதவை திறந்தான்.. அமைதியாக மீண்டும் தன் லேப்டாப் நோக்கி சென்று அமர்ந்துக் கொண்டான். இவள், உள்ளே சென்று “அத்த, அத்த..” என்றாள். பத்து தரம் அழைத்திருப்பாள்.. பதிலே சொல்லவில்லை ‘அந்த ராக்.. இல்லை கிராக்..’ அப்படிதான் மனதில் திட்டினாள் மஹாவை.. 

ஜனனி கொண்டு வந்த டப்பாவை, டைன்னிங் டேபிள் மேலே வைத்துவிட்டு.. செல்ல எத்தனிக்க..

மஹா “அம்மாவும் அப்பாவும் வெளியே போயிருக்காங்க..” என்றான் ஒரே வார்த்தையில்.

ஜனனி ‘திமிரு.. சாருக்கு..’ என மனதில் திட்டிக் கொண்டே “அப்போவே சொல்லி இருக்கலாமே.. சரி, இந்தா.. உனக்கு.. உங்களுக்கு பிடிக்கும்ன்னு எங்க அம்மா எதோ ஸ்வீட் கொடுத்திருக்காங்க..” என்றாள் எதோ போலானக் குரலில்..

மஹா, முகம் கொஞ்சம் புன்னகையை தாங்கிக் கொண்டே.. “ம்.. எங்க.. ஹல்வா வா” என்றான்.

ஜனனி “ம்.. தெரியலை..” என்றபடி டைன்னிங் ஹாலில் இருந்து, ஹால் வந்தாள். இவள் அந்த பாக்ஸ் எடுத்து வருவாள் என பார்க்க அதை காணோம்.

மஹா அதனை எடுக்க எழுந்தான்.

ஜனனி கிளம்பினாள்..

மஹா.. அந்த டப்பாவை எடுத்துக் கொண்டே.. “நில்லு ஜானு” என்றான் இலகுவான பாவனையில், கரகர குரலில் பகர்ந்தான்.

ஜனனிக்கு மணியடித்து மனதில், இருந்தும், நின்றாள் பெண், அவனை திரும்பி பார்த்தவாறே.

மஹா, மீண்டும் உள்ளே சென்று, ஒரு ஸ்பூன் எடுத்து வந்தான்.. அவளை பார்த்து.. “நான் US போறேன் தெரியுமா” என்றான், அவளை பார்த்துக் கொண்டு..

ஜனனி “ம்.. அதுகென்ன..” என்றாள் மிக சாதரண பாவனையில்.

‘இதை எதிர்பார்த்திருக்க வேண்டுமோ நான்..’ என எண்ணாமல் இருக்க முடியவில்லை அவனால், ‘இவள் இப்படிதான் பேசுவாள்.. என்னிடம்’  என புரிகிறது அவனுக்கு. ஆனாலும் என்னமோ அவளிடம் சொல்ல வேண்டும் போல இருந்தது.. சொன்னான். இப்போது இப்படி கேட்கவும், அவனுக்கு உள்ளே இருந்த எல்லாம் தரைமட்டம் ஆனது. ஏற்கனவே, தள்ளி நிற்பவன்.. விலகி நிற்க முடிவெடுத்துக் கொண்டான் இந்த நொடியில்..

மனம் மூளை எல்லாம் அந்த நொடியில், அவளின் ஒன்றுமில்லா பாவனையில், தன்னையே நொந்துக் கொண்டு.. அவளின் அருகில் வந்தான். ஸ்பூன் கொண்டு, அந்த ஹல்வாவை எடுத்து.. அவளிடம் நீட்டினான்.. எடுத்துக்கோ என்ற பாவனையில்..

ஜனனி “நான்.. எனக்கு வீட்டில் இருக்கு, இது உங்களுக்கு..” என்றாள், சாதரணமாக.

மஹா, மேலும் தன்னை நொந்துக் கொண்டான், அவளின் முன் இன்னும் இறங்கி விடாமல் இருக்க முயன்றான். முன்போல இளகிய குரலில் இல்லாமல், திடமாக.. “சும்மா ஒரு ஸ்பூன் எடுத்துக்கோ.. இனி என்.. நான் இல்லாமல் நீ ஜாலியா இருக்கலாம்.. சுவர் ஏறி குதிக்கலாம்.  நானும் நிம்மதியா படிக்கலாம்..” என்றான்.

ஜனனி, ஒன்றும் சொல்லாமல் “ம்.. கரெக்ட்.. ஆனா, நான் எப்போ உங்க படிப்பை டிஸ்டர்ப் பண்ணினேன்.. எப்படி இப்படி பொய் பொய்யா சொல்றீங்க.. ” என்றாள்.

அவன் லேசாக உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான். தானும் ஹல்வா எடுத்து உண்டான்.. “சூப்பர்.. அத்தை கிட்ட சொல்லிடு.. தேங்க்ஸ்..” என்றான்.

ஜனனி “ம்.. பைய்” என்றாள்.

அவன் ‘போடி போ.. நான் பேச வருவதையே கேட்க மாட்டில்ல, என்னை பத்தி ஒருநாள் புரியும் உனக்கு..’ என எண்ணிக் கொண்டான், கவர்மாக. என்னமோ ஒரு கோவம்.. நிரம்ப அழுத்தம் வந்து அமர்ந்துக் கொண்டது அவனிடத்தில். அவள் தன் பேச்சை கேட்கவில்லை என வன்மம் எழுந்தது அவனுள்.

ஜனனிக்கு, அந்த அளவிற்கு அவனை கூர்ந்து கவனிக்கவோ.. அவனை நினைக்கவோ இல்லை. ம்.. பக்கத்து வீட்டு பையன்.. இயல்பாக அவனிடம் ஒரு நட்பு, பாசம் உண்டு. ஆனாலும், அவனுக்கு அவன் படிப்பின் மீது இருக்கும் கர்வம் தெரியும். எனவே, கொஞ்சம் ஒதுங்கியே இருப்பாள்.. அவன் வம்பு செய்தால்.. பதிலும் கொடுப்பாள். மற்றபடி, அவன் ஒரு வயது பையன், என்னை ஈர்க்க.. முயல்கிறான்.. என்பது கடந்த மாதங்களில்தான் தெரியும். எனவே, இயல்பாக இன்னும் ஒதுங்கினாள். அது அவளுக்கு கடினமானதாக இல்லை. இப்போதும் ‘பைய் ‘ என முடித்துக் கொண்டாள்.

“அழகாலே.. தூண்டில் வைத்தாய்..

ஓ… பெண்ணே பெண்ணே… 

அகப்பட்டேன்..

தேம்ப வைத்தாய்…”

அதன்பின் இருவரும் அழகாக நகர்ந்து சென்றனர்.

மஹாதேவ் US சென்றுவிட்டான்.

ஒருமாதம் சென்று தாரா வந்தாள் சென்னை.. மாசமாக இருப்பதால் ஓய்வெடுக்க வந்தாள். மீண்டும் ஜனனியின் பொழுது இனிமையாக சென்றது.

Advertisement