Advertisement

மரகத மழையாய் நீ!..

25

அடுத்த இரண்டு வாரம், சென்றது. மதி பரபரப்பாகவே இருந்தார், இந்த நாட்களில்.. காரணம், தன் மகள் நீண்டநாள் சென்று பிறந்த வீடு வர போகிறாள் என்பதுதான் காரணம். அதனால் எதை வாங்குவது என யோசியாமல் எல்லாவற்றையும் வாங்கி குவித்தார், பேரன்களுக்காக. இரண்டு பேரன்களும் அவரை அப்படி, தூரத்திலிருந்தே  இயக்கத் தொடங்கினர். 

இரண்டு நாட்களுக்கு முன்னிலிருந்தே… பேரன்களுக்கு பிடித்த  விளையாட்டு சாமான்கள் முதற் கொண்டு, பிடித்த உணவு வகைகள்.. தேவையான சத்து மாவு.. பெண் ஊருக்கு எடுத்து செல்ல பொடி வகைகள்.. அங்கு கிடைக்காத அப்பளம்.. துணி.. என எல்லாவற்றையும் வாங்கி தனியே எடுத்து வைத்தார் அன்னை.

தாரா, குடும்ப சகிதமாக வந்து விட்டாள்.. சென்னைக்கு, நீண்ட வருடங்கள் சென்று தாரா பிறந்த வீடு வருகிறாள் சீராட. மதிக்கு அப்படி ஒரு சந்தோஷம்.. மாப்பிள்ளையை மாய்ந்து மாய்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்.

மஹா, ‘மாலையில் வந்து பார்க்கிறேன்’ என இப்போதான் போன் செய்தான். மதி திட்டிக் கொண்டே இருந்தார் ‘பாரேன் வந்துட்டு போனால் என்ன.. எப்போ பாரு வேலை வேலை..’ என புலம்பியபடியே உணவை எடுத்து வைத்தார்.

ப்ரித்வி, அதையெல்லாம் எதிர்பார்க்கவில்லை. தன் மைத்துனனின் வேலை.. அவனின் பதவி.. எல்லாம் புரிந்தவன். எனவே, தன் வேலையை பார்த்தார். அதான், உண்டு.. உறங்கினார். குழந்தைகளும் சமத்தாக வந்த இடம் புதிது என்பதால்.. மிரள மிரள எல்லாவற்றையும் பார்த்து விட்டு, உண்டு உறங்கி விட்டனர்.

ப்ரித்வி, தமிழ்நாடு வந்து, இதே போல்.. சாவகாசமாக இருந்து பல நாட்கள் ஆகிறதே அதனால், மைத்துனின் பெண் பார்த்து நிச்சய  வைபவம் முடித்து.. நேரே குலதெய்வம் கோவிலுக்கு செல்லுவது.. தன் அண்ணன் வீட்டிற்கு செல்லுவது.. என ஏதேதோ திட்டத்தோடு ஒரு வாரம் விடுப்பு எடுத்து வந்திருந்தார் குடும்பமாக.

அன்னையும் மகளும்தான் பேசி முடியவே இல்லை.. அதற்குள் மாலை வந்துவிட்டது. மதியின் பேரன்கள் எழுந்துக் கொள்ள… நேரம் மதி வசம் இல்லை. 

தாரா குடும்பத்தோடு சித்தப்பா வீட்டிற்கு செல்கிறாள்.. அவரின் பல வருட அழைப்பை ஏற்றும்.. நாளை மஹாவிற்கு பெண் கேட்க்க எல்லோரையும் அழைக்கும் விதமாகவும் செல்லுகிறாள். பெண்கள்தான் பிறந்த வீட்டின் இணைக்கும் பாலம் பல நேரங்களில். 

மதி எங்கேயும் செல்லவில்லை, எல்லோரையும் போனில் அழைத்துவிட்டார் இரண்டுநாள் முன்பே.. அதனால் இப்போது பெண்ணின் குடும்பத்தை மட்டும் அனுப்பி வைக்கிறார்.

தாரா, குடும்பமாக கிளம்பி சென்றாள். எல்லோரையும் முறையாக அழைத்து.. பேசி வீடு வந்தாள். மஹா, இரவுதான் வீடு வந்தான். இரண்டு மருமகன்களையும் நெருங்கவே அவனுக்கு நேரம் சென்றது.. குழந்தைகள் உண்டு உறங்கவும்தான் தன் மாமாவுடம் பேச அமர்ந்தான்..

அஹ.. இந்த நேரத்திற்காக இருவரும் காத்திருந்தனர் எனலாம். கண்டிப்பாக நேரம் கிடைக்கும் போது வீடியோ காலிலோ, நார்மல் அழைப்பிலோ அழைத்து பேசுவான் மஹா. ப்ரித்வியும் அழைத்து பேசுவார் மஹாவை.

இப்போது நேரில் பார்த்ததும்.. ஒரு குழி வந்தது மஹாவினுள். மஹா “மாம்ஸ்… என்ன மாம்ஸ்.. கண்டுக்கவே மாட்டேங்கிறீங்க” என்றபடி அவரின் தோளை பின்னிலிருந்து இழுத்து பிடித்து.. லேசாக அவரின் மேல் தொற்றி, உப்புமூட்டை போல தொற்றி.. ஏறி, இறங்கி.. பின் அவரை சோபாவில் அமர்ந்தினான். பின் , தானே பின் சென்று அவரின் தோள்களை இதமாக அழுத்த தொடங்கினான்.

ப்ரித்வி ஒருவழியாக சோபாவில் அமர்ந்தார்.. “என்ன டா, ஒருவழியா எல்லோரையும் சமாளிச்சிட்ட போல.. உங்க சித்தி இன்னமும் எதோ சொல்லிட்டு இருங்காங்க.. நாளைக்கு வந்ததும் கெளரவமே பார்க்காமல் காலில் விழுந்திடு.. எல்லாம் அடங்கிடும் டா.. பார்த்துக்க” என்றார் சிரித்தபடியே.

மஹா “ஏன் அக்கா சமாளிக்கலையா “ என்றான்.

மாமா “டேய்… ஏன் டா…” என்றார் புன்னகையான அதட்டலாக..

மஹா “அதான் உங்களை போக சொன்னேன்.. அப்புறம் என்னதான் பேசுனீங்க.. “ என்றான் சலிப்பாக.

ப்ரித்வி “டேய்.. அது ஒரு வருத்தம் இருக்கும் டா.. யார் பேசினாலும் தீராது போல.. ஏன் நீ சாரி கேட்கமாட்டியா.. உன் சித்திதானே.. விழேன் காலில்.. குறைஞ்சா போயிடுவ” என்றார் அதே மாறாத புன்னகை முகமாக.

மஹா “மாம்ஸ்.. நீ சொன்னா விழ வேண்டியதுதான்.. ஆனா, ஃபங்ஷனில் பார்த்துக்கோங்க.. உங்களை நம்பிதான் இருக்கேன்.. யாராவது ஏதாவது சொல்லிட போறாங்க.. மாம்ஸ் நீங்கதான் பொறுப்பு” என்றான்.

ப்ரித்வி “அப்படி எல்லாம் நடக்காது டா.. அங்க ஏதாவது பேசினால், உன்னை விட்டு கொடுப்பது போலன்னு எல்லோருக்கும் தெரியும், அதனால் உங்க சித்தி கூட சபையில் ஏதும் பேசமாட்டாங்க டா, பையன் நம்மை மதிக்காமல் போயிடுவானோன்னு பயம்.. வேற ஒண்ணுமில்ல, கொஞ்சம் வந்தவுடனே அவங்களை கவனி போதும்” என்றார்.

மஹா “மாம்ஸ்.. அத விடுங்க.. ஜனனிகிட்ட பேசினீங்களா.. பார்த்திங்களா” என்றான், காரியக்காரனாக. ப்ரித்வி இப்படிதான்.. மஹாவிற்கு நிறைய நுட்பமான இடங்களை கண்டு முன்னமே சொல்லி அவனை அலர்ட் செய்துவிடுவான்.   முன்பு, மாரல் சப்போர்ட் அத்தனை தந்தவன் இந்த அக்கா கணவன். மேலும் அவனின் தந்தை இறந்த போது ப்ரித்வியும் லீவ் எடுத்துக் கொண்டு.. வீட்டை விற்பதற்கு உதவி.. மதிக்கு பாஸ்போர்ட் எடுப்பது தொடங்கி.. அங்கே தன் நண்பன் மூலமாக மஹாவிற்கு வீடு பார்த்து.. என அத்தனை உதவியும் செய்து, இரண்டு மாதம் மாமியாரை பார்த்துக் கொண்டு.. பொறுப்பாக மாமியாருக்கு தைரியம் சொல்லி விமானம் ஏற்றி அனுப்பி வைத்தது வரை.. எல்லாம் ப்ரித்விதான். மஹாவிற்கு, நண்பனாக.. தந்தையாக.. குருவாக.. இருந்து  பார்த்து வழி நடந்ததி எல்லாம் செய்து கொடுத்தது. அதை கொண்டு மரியாதை கனிவு நட்பு.. அவரிடம் மட்டும் யோசனையோ.. அறிவுரையோ கேட்கும் பொறுமை எல்லாம் மஹாவிற்கு உண்டு.

எனவே இப்போது தன்னவள் பற்றி அவரின் எண்ணம் அறிய எண்ணினான் மஹா.

ப்ரித்வி “இன்னும் இல்ல டா, நாளைக்குதான் போகணும்.. ரொம்ப வருஷம் ஆச்சு.. ம், பேசிட்டு வந்து சொல்றேன்.. நீ சொல்லு..” என்றார்.

மஹா “ரொம்ப பயந்துட்டா மாமா.. ஆனா, இயல்பான அவளின் தைரியம் அவளை பாதுகாத்து வைச்சிருந்திருக்கு.. இன்னமும் பயம்.. பல நேரம்  என் முகத்தை பார்த்துதான் எல்லாம் செய்யறா..” என்றான் கீழே அமர்ந்து இருக்கையில் தலையை மட்டும் சாய்த்துக் கொண்டு.. ஓய்ந்த குரலில் சொன்னான்.

ப்ரித்வி “டேய்… எல்லாம் சரியாகிடும் டா…“ என அதட்டினார்.

மஹா ஏதும் சொல்லாமல் அமர்ந்திருந்தான்.

ப்ரித்வி “டேய் மாப்பிள்ள… விடு, நல்லா பார்த்துக்க இனி.” என்றார்.

மஹா விருட்டென எழுந்தவன் “ம் கண்டிப்பா  மாம்ஸ்.” என்றவன்  “பிரிட்ஜ்ல பீயர் இருக்கு.. என் ரூமுக்கு வாங்க.. “ என எழுந்துக் கொண்டான். 

ப்ரித்வி “டேய்… தாரா எங்க டா, தூங்கிட்டாளா பாரு” என்றார் அக்மார்க் கணவனாக.

மஹா “ஹா.. எல்லாம் பொண்டாட்டிக்கு பயந்த பசங்க…” என கவுண்டமணியின்  கவுண்டரை சொல்ல..

அவனின் மாமா “ம்.. ம்… பார்ப்போம் பார்ப்போம்.. நாங்களும் எங்க போயிட போறோம்..” என்றார் நக்கல் குரலில்.

மஹா “மெதுவா மாமா.. தாரா முழிச்சிக்க போறா” என்றான் கிண்டலாக.

ப்ரித்வி “பார்க்கத்தானே போறேன்..” என்றார் ரகசிய குரலில்.

மஹா “அப்படி, மெதுவா.. மெதுவா.. பேசுங்க” என்றான் பாவனையாக. 

ப்ரித்வி “ டேய்..” என்றார்.. அவனின் கிண்டல் புரிந்து. மஹா, அவரை பின்னாலிருந்து தள்ளிக் கொண்டே தன் அறைக்கு வந்தான். இரவு வெகு நேரம் பேச்சு நீண்டது இருவர்க்குள்ளும். 

மறுநாள், ஜனனி காலையிலேயே வந்தாள் தாராவை பார்க்க. நேற்றே தெரியும் தாரா வந்தது, தானே வந்து பார்க்கணும் எனதான் வந்தாள் பெண். குழந்தைகள் இருவரும் எழுந்துக் கொண்டனர்.. மதி அவர்களுக்கு பூஸ்ட் கலந்துக் கொண்டிருக்க.. ஜனனி கதவை திறந்துக் கொண்டு வந்தாள். 

மதி “வா ஜானும்மா” என்றார் வாஞ்சையாய்.

தலையசைத்து உள்ளே வந்தாள் பெண். குழந்தைகள் இருவரையும் பார்த்து “ஹாய்” என்றாள்.

பெரியவன் லேசாக சிரித்தபடி “ஹாய் அக்கா” என்றான்.

மதி அப்போதே “அக்கா இல்ல தைவிக், அத்தை.. சொல்லு” என திருத்தினார்.

சிறியவன் தன் பாட்டியிடம் பதுங்கிக் கொண்டான்.

ஜனனி, பெரியவனிடம் பேச தொடங்கினார் “ஹாய் டா.. என்ன படிக்கிறீங்க..” என தொடங்கி பேச தொடங்கினாள்.

சற்று நேரத்தில் சிறியவன் ஷேக்ஹன்ட்ஸ் கொடுக்கும் அளவுக்கு வந்திருந்தான்.. இரண்டு வயது ஆகிறது அவனுக்கு. ஜனனியிடம் கை கொடுத்துவிட்டு தன் அன்னை உறங்கும் அறைக்கு குடுகுடுவென ஓடியே சென்றது.. அழுகவில்லை.

தாராவும் ப்ரித்வியும் சற்று நேரத்தில் வெளியே வந்தனர். ஜனனி “அக்கா..” என்றாள்.

தாராவும் ஆசையாக வந்து கட்டிக் கொண்டாள். இருவரும் சற்று நேரம் சுற்றுபுறம் மறந்து ‘எப்படி இருக்க.. இளைச்சிட்ட.. சமத்த ஆகிட்ட.. நீங்க குண்டா ஆகிட்டீங்க..’ என நிறைய ஏதேதோ பேசினர்.

ப்ரித்வி “இன்னும் முடியலையா” என கேட்க்கவும்தான்.. 

ஜனனி “மாமா… எப்படி இருக்கீங்க” என்றாள், அவரின் அருகில் வந்து அமர்ந்துக் கொண்டு.

மதி, சரியாக அந்த நேரம் காபியோடு வந்தவர் “’அண்ணா’ கூப்பிடு ஜானு.. அண்ணா அண்ணிதான் இனி சொல்லணும்” என்றார்.

ஜனனி “ம்.. அத்தை.. எப்படி இருக்கீங்க அண்ணா” என்றாள்.

ப்ரித்வி காபியை பருகிக் கொண்டே “ம்.. நல்லா இருக்கேன் டா, நீ குடிக்கலை, தாரா.. ஜானுக்கு என்ன வேணும் பாரு..” என்றார் அத்தனை கவனமாக.

மதி “இருங்க.. மாப்பிள்ளை, அவ கிரீன் டீ தான் குடிப்பா, அவனும் எழுந்து வரட்டும் இரண்டு பேருக்கும் சேர்த்து தரேன்.. நீங்க குடிங்க” என்றார்.

ஜனனி “இல்ல அத்தை.. இப்போ எதுவும் வேண்டாம்.. நீங்க சொல்லுங்க மாமா” என்றாள் அத்தைக்கு பதில் ப்ரித்வியிடம் கவனம் வைத்தாள் பெண்.

ப்ரித்வி “நீங்கதான் சொல்லணும் புது பொண்ணு.. காலையில் நாங்கதான் உன்னை  வந்து பார்க்கனும்ன்னு சொல்லிட்டு இருந்தேன் மாப்பிள்ளை கிட்ட.. நீயே வந்துட்ட.. எப்படி எக்ஸாம் எழுதின.. என்ன படிக்க போற..” என ஆரம்பித்து பேசிக் கொண்டிருந்தனர். ப்ரித்வி நிறைய மஹாவை போட்டுக் கொடுத்து.. அவன் எப்படி எல்லாம் அவளுடைய போட்டோவை தங்களிடமிருந்து வாங்கினான் என்பது எல்லாம் சொல்லி, அவளை இன்னும் மஹாவின் மேல்.. பித்துக் கொள்ள வைத்துக் கொண்டிருந்தார்.

மஹா, எழுந்து வந்தான். இப்போது ஜனனியின் கண்ணில் அன்றுபோல, இன்றும் காதல் வழிந்தது. காதலர்கள் இருவரும் கண்களால் பேசிக் கொண்டனர்.

ஜனனி கிளம்பும் போது.. மஹா கூடவே வந்து “என்ன எல்லாம் ரெடியா.. ஏதாவது வேணுமா” என விசாரித்து அனுப்பி வைத்தான். ஜனனி உள்ளுக்குள் ‘பொறுப்புதான் மஹா’ என சத்தமில்லாமல் மெச்சிக் கொண்டாள். 

மறுநாள்,

காலையிலேயே மஹாவின் வீடு விழா கோலம் கொண்டது. மஹாவின் சித்தப்பா, அத்தை குடும்பங்கள் வந்துவிட்டது. மஹாவும் நேரமாக கிளம்பிவிட்டான்.. தன் மாமா சொன்னது போல, சித்தியிடம் கொஞ்சம் பேசி.. அவரை கொண்டாடி சாமாதானம் செய்துக் கொண்டிருந்தான். 

சித்தப்பாவின் பெண் “ம்… அண்ணா, பத்தல பத்தல.. இன்னும் ஐஸ் வை.. தயங்காத.. தாங்குவாங்க..” என்றாள் அண்ணனிடம்.  அன்னையை பார்த்து “அந்த காஞ்சிபுரம் பட்டு, கன்போர்ம் பண்ணிக்க ம்மா” என்றாள் அண்ணணையும் அன்னையும் சரி சமமாக பாவித்து.

மஹா, இங்கே பேசிக் கொண்டிருக்க.. பெண்கள் சீர் தட்டு எடுத்து வைப்பதில் கவனமாக இருந்தனர். நிச்சயம் முடித்து அங்கேயே காலை உணவு உண்டு வருவதாக ஏற்பாடு. அப்பார்மென்ட் வளாகத்தில் உள்ள ஒரு சின்ன ஹாலில்தான் விழா ஏற்பாடு. 

அங்கே ஜனனி வீட்டில்… காயத்ரியும்  ராகவ்வும் கீழே விழா நடக்கவிருக்கும் ஹாலுக்கு சென்றுவிட்டனர். ஜனனியை, காயத்ரியின் தம்பி பெண்டாட்டியும்.. ஜனனியின் அத்தை பெண்ணும், அவளை அலங்கரித்து தயார் செய்துக் கொண்டிருந்தனர்.

காயத்ரி “ஜானு மேக்கப்க்கு.. சொல்லிக்கலாம்” என்றாள்.

ஜனனி “வேண்டாம் அண்ணி.. ப்ளீஸ்..” என்றுவிட்டாள். இந்த விஷயத்தை பற்றி யாரும் அதன்பின் பேசவில்லை அவளிடம்.

கார்த்திகேயன்னும் கீழேதான் இருந்தார். சுகுமாரியின் தங்கை.. மற்றும் கார்த்திகேயனின் ஒன்றுவிட்ட அண்ணன், தங்கைமுறை  உறவுகளைத்தான் அழைத்திருந்தார். மற்றபடி, மருமகள் வீட்டின் சொந்தம்..  சூரி குடும்பம் என அவ்வளவுதான்.. மற்ற எல்லோரையும் திருமணத்திற்கு அழைப்பதாக ஏற்பாடு. 

எல்லோரும் ஜனனியோடு கீழே வந்தனர்.

மஹாவின் சொந்தமும் மாப்பிள்ளையோடு வந்து சேர்ந்தனர்.

முறையாக பெண் வீட்டார் வரவேற்றனர். காயத்ரி எப்போதும் போல.. எங்கேனும் தவறு வந்துவிட கூடாது என எண்ணுபவள், எனவே, மஹாவின் சித்தியை கொஞ்சம் கூடுதலாகவே கவனித்து பேசிக் கொண்டிருந்தாள்.

ஜனனியை ஏற்கனவே, மஹாவின் சொந்தத்திற்கு தெரியும் என்றாலும்.. இப்போது மஹாவோடு ஜனனியை பார்க்கும் போது இருந்த குற்றம் குறைகள் எல்லாம் கொஞ்சம் தள்ளி நின்றது எனலாம். ஜனனியின் தோற்றமும்.. நிமிர்வும்.. அவளை பாவப்பட்ட ஜீவனாகவோ, ஏதேதோ கொடுமைகள் நடந்த பெண்ணாகவோ.. திருமணம் நடந்தது.. என சொல்லும் படியோ எந்த ஜாடையும் தேடினாலும் கிடைக்கவில்லை அவள் முகத்தில். அந்த வகையில் மஹா ஜெயித்துவிட்டான்.

சொந்தம், சுபமான நேரத்தில்.. பெண் மாப்பிள்ளை இருவரையும் அமர்த்தி முறையாக லக்னஓலை வாசித்து..  கல்யாண தேதியும் வசித்து.. பெரியோர்களின் ஆசியை பெறத் தொடங்கி இருந்தனர்.

மாப்பிள்ளை பெண் இருவரையும் மோதிரம் மாறிக்கொள்ள சொல்லினர் சொந்தங்கள். அதை தொடர்ந்து மணமக்களுக்கு நலங்கு வைக்கத் தொடங்கினர்  சொந்தங்கள். மணமக்கள் இருவரும் மிகவும் கண்ணியமாக அங்கே நின்றனர். பெரியவர்களை மதித்து.. அவர்களை வணங்கி.. திருநீறு.. சந்தனம் குங்குமம் என வாங்கிக் கொண்டு, வாழ்த்துக்களையும் தலை வணங்கி பெற்றனர். 

பெரியவர்களின் ஆசீர்வாதம் முடிந்து.. காயத்ரியின் முறை வரவும்.. ஜனனி காயத்ரி இருவருக்கும் துடைக்க துடைக்க கண்ணீர் வற்றாமல் வந்துக் கொண்டே இருந்தது. அண்ணியாக காயத்ரி சந்தணம் வைக்க.. குங்குமம் வைக்க.. ஜனனி எழுந்து கட்டிக் கொண்டாள், தன் அண்ணியை. யாரும் தடுக்கவில்லை.. சற்று அவர்களே ஆசுவாசம் ஆகட்டும் என எல்லோரும் பார்த்திருந்தனர். எல்லாம் நெருங்கிய உறவுகளே.. அதனால், எல்லோருக்கும் எல்லாம் புரியுமே அமைதியாக நின்றனர். 

பின் காயத்ரியே சுதாரித்து “பாரு, மஹா, என்னை திட்ட போறார்.. உட்கார்..” என சொல்லி அட்சதை இட்டு அவளை ஆசீர்வாதம் செய்து கீழே இறங்கினாள் அண்ணி.

விழா இனிதாக நிறைவடைந்தது.

பெரியவர்களை உண்பதற்காக அழைத்து சென்றனர். சின்ன ஹால் அதனால் குறிப்பிட்ட அளவு நபர்களுக்குதான் இடம். 

மஹா, ஜனனியை தன் சொந்தங்களிடம் கூட்டி வந்தான்.. பெரியவர்கள் பொதுவாக இரண்டொரு வார்த்தை பேசி உண்பதற்கு சென்றனர்.

இப்போது மஹாவும் ஜனனியும் தனியே அமர்ந்திருந்தனர். மஹா தன்னவளின் கையை விடாமல் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான். முகத்தில் வாடாத புன்னகை.. அத்தோடு ஒரு ஆசுவாசம்… நிறைய காதல்.. தனியே தத்தளித்த இடத்தில் ஒரு தேவனின் கைபிடித்து அமர்ந்திக்கும் நிலை.. எல்லாமும் கைவரபெற்ற நிலை.. வேறேதும் தேவையில்லா நொடிகள்..  என இருவரும் விளங்க முடியா நினைவில்.. சுகமாக ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தனர்.

ஜனனி “மஹா.. எப்படி பீல் பண்ற” என்றாள்.

மஹா, ஏதுமே சொல்லாமல் தன்னவளுக்கு.. தான் சற்று முன் அணிவித்த மோதிர விரலில் முத்தமிட்டான். ஜனனி, முகம் விகாசிக்க.. கண்கள் லேசாக கலங்க.. மஹாவையே பார்க்க.. மீண்டும் இன்னொரு முத்தம் தந்தான்.. ஜனனி ஏதும் சொல்லாமல் கலங்கிய கண்களோடு இமைக்காமல் தன்னவனையே பார்த்திருந்தாள். இப்போது எதையும் கண்டுக் கொள்ளாமல்.. அவளின் கண்களில் அழுத்தி இரண்டு முத்தம் வைத்தான். ஜனனி, அழுகையை நிறுத்திவிட்டு.. வெட்க சிரிப்போடு.. “ம..ஹா..” என்றாள் காதலாக.

“இதே அழுத்தம் அழுத்தம்..

இதே அணைப்பு அணைப்பு..

வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டும்…

வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டுமே..”

$#சுபம்#$

Advertisement