Advertisement

மரகத மழையாய் நீ!..

24

அந்த சாலை என்னமோ அவ்வளவு அழகா தெரிந்தது மஹாக்கு. தன் பேச்சை நிறுத்தவே இல்லை அவன்.. ‘அவள் எப்படி எல்லாம் தன்னை தொந்தரவு செய்தால்.. தன்னுள்ளே வந்தால்.. என மென்மையாக எடுத்துரைத்தான். ‘படிக்கும் போது பொத் பொத்துன்னு குதிப்பியே.. முதலில் கோவமாத்தான் வரும், போக போக.. காலேஜ் ப்பைனால் இயரில் எங்கடா.. டைம் ஆச்சு வாணரத்தை காணமேன்னு தோண வைச்சிட்ட. அதே போல நானும் ராகவ் அண்ணாவும் பேசும் போது.. அவரை ஏதாவது சொல்லி உள்ளே உன் கூட கூட்டி போறது.. அப்புறம் தாரா கல்யாணத்தில் அந்த லெஹங்கா… ப்பா, என்னோட us முழுக்க.. அதை பார்த்துதான் ஓட்டினேன்.. அப்படி ஒரு பேச்சு.. விளையாட்டு.. சிரிப்பு அந்த நேரத்தில்… நீயும் பக்கத்தில் இருக்கிறப் பிள்ளைகளும் சேர்ந்துக் கொண்டு.. நைட் டான்ஸ் வேற… நான் பார்த்தேன் எல்லாத்தையும்’ என சொல்ல சொல்ல..

ஜனனியின் முகம் சிவந்து போக, தன் கையால் தன் முகத்தை மூடிக் கொண்டாள்.

மஹா “எடு டி.. ஏழு வருஷம் கழிச்சி வெட்கமாம்..” என்றான் இப்போதும் கிண்டலாக.

அவனின் ஒவ்வொரு பேச்சிலும், அவளை இத்தனை ஆண்டுகளாக தனக்குள் வைத்து பாதுகாத்திருப்பது தெரிந்தது. இப்போதும் அவளை தன்னுடையவளாக எண்ணியே அதட்டினான். ஜனனி இந்த அதட்டலையும் ரசனையாக பார்த்திருந்தாள்.

ஆனாலும், அவன் பேச்சில் உற்சாகம் வர.. பழைய ஜனனியாக  “ச்சு.. எப்படி எல்லாம் என்னை பார்த்திருக்க நீ.. நீ ரொம்ப நல்லவன்னு நினைச்சேன்.. ஐயோ” என உடல் சிலிர்த்தாள்.

மஹா “ஹேய்.. நான் நல்லவன்தான்.. உன்னை மட்டும்தான் பார்த்தேன்..” என்றான் கண் சிமிட்டி.

ஜனனி “பக்கத்து வீட்டு பெண்ணையே இப்படி பார்த்திருக்கியே.. அப்போ usல, எப்படி எல்லாம் இருந்திருப்ப” என அக்மார்க் காதலியாக சட்டையை பிடிக்க.

மஹா “ஹேய்.. பக்கத்து வீட்டு பெண்ணை சைட் அடிக்கலைன்னா.. என்ன நான் டீன் ஏஜ் பையன். அதெல்லாம் அப்படிதான் சைட் அடிப்போம்.. நாங்க எல்லாம் பாதி மாமா பையன்… அத்த பையனுக்கு சமம்..” என தன் உதடு மடித்து சிரித்துக் கொண்டே புதிய தத்துவம் சொன்னான் படிப்பாளன்.

ஜனனிக்கு வெட்கம் பாதி, சிரிப்பு மீதி என கலந்த நிலையில் தலையில் அடித்துக் கொண்டு “ஐயோ சகிக்கல உங்க லாஜிக்” என்றாள்.

மஹா கொஞ்சம் ரவுடியாக மாறினான், தன் காலரை ஏற்றிவிட்டுக் கொண்டான் “என்ன சகிக்கல.. நாங்க எல்லாம் பார்க்கலன்னா.. நீங்க எல்லா பக்கத்து வீட்டில் இருந்தும் என்ன யூஸ். உனக்கு தெரியுமா.. உன்னை நாலு வீடு தள்ளி இருந்த என்னோட ஜூனியர் கூட ரூட் விட்டான்” என்றான் புருவம் உயர்த்தி ரகசியமாக.

ஜனனி “ஐயோ ஐயோ என்ன இது இப்படி எல்லாம் பேசறீங்க” என கன்னத்தில் கை வைத்துக் கொண்டாள் அதிர்ச்சியாக.

மஹா கண்ணடித்து “இன்னும் கேளு” என நிறைய அப்போதிய தெரு பிள்ளைகள்.. பற்றி பக்கம் பக்கமாக சொன்னான்.. தன்னை சைட் அடித்த பெண்கள்.. இவன் பார்த்த பிள்ளைகள்.. என எல்லாம் சொன்னான் ஜாலியாக.. பின் “ஆனா,  நீ மட்டும்தான் என்னை மதிக்காம சுத்தினவ.. இப்போ பார்த்தியா” என திமிராக சொல்லி.. தன் கை ஸ்லீவ்வை மேலேற்றிக் கொண்டான்.. அவ்வபோது அவளை பார்த்து.

ஜனனி “அப்போ இதெல்லாம் பழி வாங்கத்தானா” என்றாள் சிரிக்காமல்.

மஹா “ஹா… ஹா…. அதேதான்.. உன்னை கல்யாணம் செய்து.. கதற கதற… உன்னை “ என சொல்லி நிறுத்தி ஜனனியை பார்த்தான் புன்னகை முகமாக.. 

அவளிடம் எந்த அதிர்ச்சியும் இல்லை. இவனின் காதலான வார்த்தையை எதிர்பார்த்து காத்திருந்தவள் போலதான் பார்வை.. அதை பார்த்த மஹா “கொஞ்சமாவது டென்ஷனா இறேன் டி” என்றான்.

ஜனனி சிரித்தாள்.

மஹா “பாரேன்.. என்னையேவே பார்க்க வைக்கிறேன், சுத்த வைக்கிறேன்.. இனி ப்ரிஸ்க்கிர்ப்ஷனில் கூட மஹா பேர்தான் எழுதுவ, பாரேன்.. அப்படி லவ் பண்ணுவ என்னை.. பாரேன்.. சுத்தவிடுறன் என்னையே. பழி வாங்க போறேன்” என்றான், காதலாக சாபதமெடுத்து.

ஜனனி “ம்.. ம்… பார்ப்போம்.. யாரு சுத்தறான்னு, யாரு பழி தீர்த்துக்கிறான்னு” என்றாள் அவளும் காதல் சபதத்தை ஏற்று..

மஹா “ஹய்யோ.. இது சூப்பர். “ என்றான் மையலாக அவளை பார்த்துக் கொண்டே. இப்போது அவளின் கையை பிடித்துக் கொண்டே கார் ஓட்டினான். 

ஜனனி “சாகசம் எல்லாம் வேண்டாம் மஹா, கையை விட்டுட்டு கார் ஓட்டுங்க…” என்றாள்.

மஹா “என்ன அப்போ… நான் எப்படி பழி வாங்கறது..” என்றான் சிரித்துக் கொண்டே..

ஜனனி ஒன்றும் சொல்லவில்லை.. அவனிடமிருந்து கைகளையும் எடுத்துக் கொள்ளவில்லை.. அவனின் வார்த்தையில் வந்த வெட்கத்தை மறைக்க.. ஜன்னல் வழியே வேடிக்கை பார்ப்பது போல திரும்பிக் கொண்டாள்.

“பவிழ மழையே.. நீ பெய்யுமோ…

இங்கிவளே.. நீ மூடுமோ..

வெண்பனி மதி.. இவளிலே…

மலரொளி அழகிலே.. நாளங்களில்..” (மலையாளம்)

நடுவில் உணவிற்கு நிறுனத்தினான்.. மஹா. பாவம் அந்த உணவு காய்ந்துதான் போனது. மஹாவிற்கு அவளை பற்றி நிறைய தெரிந்துக் கொள்ள வேண்டி இருந்தது.. என்னதான் மற்றவர் வாய்மொழியாக எங்கே படித்தால்.. எந்த கல்லூரி என தெரிந்தாலும். அவளின் பார்வையில் இந்த ஏழு வருடம் எப்படி சென்றது என தெரிய வேண்டுமே. எனவே, மஹா “நான் என்னோட அப்பா டெத்துக்கு வந்த போது உன்னை பார்க்கனும்ன்னு நினைச்சேன்… நீ ஏன் வரலை” என்றான்.

ஜனனி “இல்ல, நான் அங்கிள் டெத் அப்போ, அங்கதான் இருந்தேன்.. நீங்க ஒருநாள் கழிச்சிதானே வந்தீங்க.. எங்க அப்பாவும், ப்ரித்வி மாமாவும்தான் ஹாஸ்ப்பிட்டலில் இருந்தாங்க… நானும் அப்பாவோட அவரை பார்த்துட்டு வந்தேன்.. எனக்கு முக்கியமான கிளாஸ் இருந்தது, அதான் அன்னிக்கே கிளம்பிட்டேன்.. நீங்க.. உங்களை நினைக்கலை.. சாரி” என்றாள்.

மஹா “ஹேய், சாரி எல்லாம் வேண்டாம். நான் அப்பாவை பார்க்க வந்த போது.. ஒரு மாசம் கிட்ட இருந்தேன்.. அப்போவெல்லாம் நீ வருவேன்னு எதிர்பார்த்துட்டு இருந்தேன்.. அதான்” என்றான்.

ஜனனிக்கு என்ன சொல்லுவது என தெரியவில்லை அமைதியாக இருந்தாள்.

மஹா “அப்புறம் காலேஜ் டேஸ் எப்படி… “ என்றான்.

ஜனனி இப்போது கண்கள் மலர இனிமையாக பேசினாள்.. அத்தனை நட்புகளின் பெயரையும் சொன்னாள்.. எதோ சிறுபிள்ளையாக தெரிந்தால் இப்போது.. படிப்பு, ஹாஸ்ட்டல், எக்ஸாம், அரட்டை.. அவர்களின் திருமணம்.. என எல்லாம் பேசினாள்.. எப்படி சூரி நண்பனான்.. என்பது அப்போதுதான் சொன்னாள் உண்டு முடிக்கும் வரை.. பேச்சு இதை பற்றிதான் சென்றது.

மஹாக்கு, அவளை பேச வைத்த இந்த நட்பை ரொம்ப பிடித்தது.. மஹா “நம்ம, கல்யாணத்துக்கு உன்னோட எல்லா ப்ரெண்ட்ஸ்சையும் கூப்பிடுறோம்…” என்றான்.

ஜனனிக்கு ‘கல்யாணம்’ என்ற வார்த்தை மீண்டும் ஒரு ஒதுக்கத்தை தந்தது. ‘இன்னொரு தரம் கல்யாணமா’ என நிமிர்ந்து சங்கோஜமாக பார்த்தாள்.

மஹா “ம்.. நம்ம கல்யாணத்துக்குத்தான்…” என்றான்.

ஜனனி “இன்னொருதரமா.. ப்ளீஸ் மஹா சிம்பிள்லா வைச்சிக்கலாமே… “ என சொல்லி நிறுத்திக் கொண்டாள் பெண்.

மஹா, இனிப்பை அவள்புறம் நகர்த்தினான் “ம்.. ஏன் சிம்பிள்லா, தப்பு செய்தவங்களே திமிரா நடமாடும் போது, உனக்கு என்ன ஜானு.. எதுக்கு பயம்.. தயக்கம் எல்லாம். இது மஹாதேவ் ஜனனி கல்யாணம்.. கொஞ்சம் ஆடம்பரமாதான் நடக்கும்.” என்றான் முகமெல்லாம் மாறி போய்.. கொஞ்சம் கோவமாக சொன்னான்.

ஜனனி “என்ன இப்படி.. இவ்வளோ கோவம்.. “ என்றாள்.

மஹா “ச்சு, சும்மா நீ எல்லாத்துக்கு தயங்கினா எப்படி, அதெல்லாம் முடிஞ்சி போச்சு.. இது எனக்காக… மஹாவையும் கொஞ்சம் யோசியேன்..” என்றான் தாழ்ந்த குரலில்.

ஜனனிக்கும் அவன் கேட்பது சரியென புரிகிறது, அவளின் தலை தன்போல மேலும் கீழும் அசைந்து அதனை ஏற்கிறாள்.. ஆனால், அமைதியாகவும் இருக்கிறாள்.

மஹா “ஸ்வீட் சாப்பிடு.. கிளம்பலாம்” என்றான் கொஞ்சம் அதட்டலாக.

ஜனனி ஏதும் சொல்லவில்லை.  அமைதியாக இரண்டுவாய் உண்டாள். மஹா “எனக்கு..” என்றான் லேசாக சிரித்தபடி.

ஜனனி அவன் புறம் அந்த கிண்ணத்தை நகர்த்தினாள்.. மஹா “என்ன ஒகே வா… நீ ஜம்முன்னு மஹா பக்கத்தில் உட்கார்ந்து… மஹாவோட காதலை பெருமைப்படுத்தற…” என்றான் மென்மையாக.. ஜனனி அமைதியாக பின்னால் சாய்ந்துக் கொண்டு அவனை பார்த்தாள்.. நிதானமாக. பார்வையை அவள் மாற்றவேயில்லை.

மஹா தடுமாறினான் முதல்முறை.. “எ..ன்ன என்ன இப்படி பார்க்கிற.. வா போலாம்” என்றான் சின்ன குரலில் பதறினான்.. என்னமோ செய்தது அவளின் பார்வை அவனை.

ஜனனி அதே பார்வையோடு எழுந்துக் கொண்டாள்.. மஹா தடுமாறினான்.. டிப்ஸ் வைப்பதற்கு வாலெட் எடுக்க.. கொஞ்சம் தடுமாறியது விரல்கள்.. ஜனனி அதையும் அப்படியே பார்த்திருந்தாள்.. மஹா வேகமாக பணத்தை எடுத்து வைத்து விட்டு வாயால் ‘உப்ஸ்‘ என மூச்சை இழுத்து விட்டபடி தன்னவளை பார்க்க. 

அவள் இன்னமும் பார்வையை மாற்றாமல் அவன் பின்னால் நின்றிருந்தாள்.. மஹா அவசரமாக கார் நோக்கி நடந்தான். 

“நான் மாட்டிக் கொண்டே..

உனில் மாட்டிக் கொண்டேன்..

உடலுக்குள் உயிரை போலே 

உனில் மாட்டிக் கொண்டேன்…

நானே மாட்டிக் கொண்டேன்..”

ஜனனி அமைதியாகவே வந்தாள்.. மஹாவும் அப்படியே. பேசி தீர்த்தபின் காதலர்களுக்கிடையே வரும் மௌனம்.. கொஞ்சம் அபாயமானது.. மஹா அமைதியாக அவள் முன் தன் கையை நீட்ட.. ஜனனியும் தன் கையை அவனுடன் சேர்த்துக் கொண்டாள்.. மஹா அதை இருக்கமாக பற்றிக் கொண்டபடி சென்னை வந்து சேர்ந்தான்.

ஜனனிக்கு, அடுத்தடுத்த நாட்கள் இனிமையாக சென்றது.. மஹா அடுத்த இரண்டு நாட்கள் சென்று வெளியூர் சென்றுவிட்டான். அதெல்லாம்  அவர்கள் கண்டுக் கொண்டதில்லை.. அவனின் வேலை அப்படிதான் ஊரிலேயே இருந்தாலும் பெரிதாக பார்த்துக் கொள்வதில்லை,  போனில்தான் பேச்சு.. இருவரின் நேரமும் ஒத்துவருவதில்லை. அதனால் போன் மட்டும்தான் அவர்களை இணைக்கும் வஸ்த்து. 

  

காயத்ரியும் அர்ச்சனாவும் ஆரம்பிக்கும் பௌட்டிக்கின் திறப்பு விழா நாளை.. இருவரும் சேர்ந்து ஒன்றாக நடத்துவதாக முடிவெடுத்திருந்தனர். அதன்படி வேலைகள் முடிந்து.. கடைசி கட்ட வேலையாக.. எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர்.

ஜனனியும் மாலையிலிருந்து இங்குதான் இருக்கிறாள்.. கார்த்திகேயன் விடுப்பு எடுத்துக் கொண்டு மருமகளுக்கு உதவியாக, வந்த பார்சல்களை எல்லாம் எடுத்து, பிரித்து.. என உதவிக் கொண்டிருகிறார். அர்ச்சனாவின் தந்தையும் தாயும் வந்து இருந்தனர் நேற்று.. அவர்களும் இரவு உணவுக்கு ஏற்பாடு செய்துக் கொண்டிருந்தனர்.

ராகவ், இரவு வரும் போது பூஜை பொருட்கள் எல்லாம் வாங்கி வருவதாக ஏற்பாடு.. மதி, இரவு உணவுக்கு இட்லி செய்து தருவதாக செல்லி இருந்தார். மூன்று குடும்பமும் ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசையாக இணையத் தொடங்கி இருந்தது.. மீண்டும். ஆக, காலம் நேரம் எல்லாம் மாற்றத்திற்கு உற்பட்டவையே.

மறுநாள் காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் சின்ன ஹோமம் நடந்தது.. மூன்று குடும்பத்தார் மட்டும் கலந்துக் கொண்டனர். அதன்பின் காலையில்  திறப்பு விழா..  என சின்னதான விழா, இனிமையாகத் தொடங்கியது.

ஜனனி சூரியின் நட்பு வட்டம்.. அந்த வளாகத்தில் தெரிந்தவர்கள்.. ராகவ்வின் ஆபீஸ் வட்டம் என எல்லோரையும் அழைத்திருந்தனர். அதற்கு தக்க.. ஆபர்ஸ் எனவும் நோட்டீஸ் கொடுத்திருக்க.. மெல்ல மெல்ல நேரம் சென்றது. வீட்டு மனிதர்கள் சூரி உற்பட எல்லோரும் அங்குதான் இருந்தனர். 

காலையில் மணி எட்டு… இன்னமும் மஹா கடை பக்கம் எட்டியும் பார்க்கவில்லை. ஜனனிக்கு கோவம் கோவம் மட்டுமே. நேற்று படித்து படித்து சொல்லி இருந்தாள் காலை பூஜைக்கே வர வேண்டும் என. இவன் எப்போதும் போல நேற்று இரவு மணி இரண்டுக்குதான் உறங்க சென்றான்.. மதியும் விழாவிற்கு வந்துவிட்டதால் எழுப்புவதற்கு ஆளில்லை.. எட்டு மணிக்குதான் விழிப்பு வந்தது, அதுவும் தன்னவளின் போன் அழைப்பில்தான்.

சிரித்துக் கொண்டே போனை எடுத்தான்.. மஹா “ஹலோ ஜானி, ஜானும்மா… ஜாமுன்… ஜனனிநீ..” என பலவாறாக கதறிக் கொண்டிருதான் மஹா.

ஜனனி எதற்கும் பேசாமல் அப்படியே நின்றாள். மீண்டும் மஹாவே “சாரி, தூங்கிட்டேன். சாரி” என்றான்.

ஜனனி “எவ்வளோ நேரம்.. கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா” என்றாள்.

மஹா “அதுவும் தூங்கிடுச்சி.. என்ன செய்ய “ என்றான் சிரியாமல்.

ஜனனி பக்கென சிரித்துவிட்டாள்.

மஹாக்கு கொஞ்சம் திடம் வர, மஹா “ஜானு.. மேல வாயேன்.. உனக்கு ஒரு கிப்ட் வைச்சிருக்கேன்..” என்றான்.

ஜனனி “பாரேன்.. முடியாது… நீங்க வராம நான் வர மாட்டேன்” என்றவள் போனை வைத்துவிட்டாள்.

அதன் பின் ஞானம் வரபெற்ற நம் கதையின் நாயகன்.. அரக்க பறக்க கிளம்பி கீழே வந்தான். சிம்பிளா.. ஒரு எல்லோ டீ ஷர்ட்.. ஜீன் என போர்மல் அல்லாமல் வந்திருந்தான். கார்த்திகேயன் வரவேற்றார், ராகவ் தோளில் தட்டி.. ‘ம்.. வாங்க வாங்க’ என மரியாதையாக அழைத்தான்.

மஹா “அண்ணா… எப்போதும் போல மஹான்னு கூப்பிடுங்க” என்றான்.

ராகவ் “ம்கூம், இனி மரியாதை கொடுக்கனுமில்ல.. இல்லைன்னா.. அங்க பாரு, தூரமா நின்னு பார்த்துகிட்டே இருக்கா பாரு.. அவ என்னை பிழிஞ்சி எடுத்திடுவா… வா வா” என சொல்லி உள்ளே அழைத்து சென்றான்.

சூரி “பாஸ்.. வாங்க வாங்க எனக்கு துணைக்கு ஆள் கிடைச்சிடுச்சி.. பாருங்களேன்.. அப்படியே பத்து பொருத்தமும் பொருந்தி போச்சு.. என்ன திட்டு பலமோ.. அப்படியே புன்னகையாவே இருக்கீங்க” என்றான்.

மஹா சற்று நேரம் எடுத்துதான்.. சூரி, என்ன சொல்லுகிறான் என புரிய “ப்ரோ.. ஏன் இப்படி, அப்படி எல்லாம் இல்லை..” என்றபடி தன்னவளை கண்களால் தேட.. அவனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் ஜனனி.

அழகான மெரூன் வண்ண சில்க் காட்டன்.. புடவையில் கொஞ்சம் கோவமாகவே நின்றிருந்தாள். பார்க்கவே அழகாவும் காரமாகவும் இருந்தாள் மஹாவின் கண்களுக்கு. ‘ஹாய்’ என யாருக்கும் தெரியாமல் கை அசைத்தான்.. ஜானு கண்டுக்கொள்ளாமல் நின்றிருந்தாள்.

அதற்குள் அர்ச்சனா, காயத்ரி இருவரும் வர.. அவர்கள் “வாங்க மஹா சர், என்ன வாங்க போறீங்க.. அம்மாக்கா.. இல்லை..” என அர்ச்சனா கிண்டல் செய்ய தொடங்க.

மதி “நான் ஒரு புடவை எடுத்துட்டேன் ப்பா.. என் பங்குக்கு… அப்புறம் இன்னும் என்ன  வாங்க போறான்” என்றார் லேசாக முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு.

காயத்ரி அர்ச்சனா இருவரும் குறுகுறுவென சிரித்த முகமாக மஹாவை ‘என்ன சொல்லுவான்’ என ஆவலாக பார்க்க மஹா திணறிக் கொண்டிருந்தான்.

ஜனனியும் சுவாரசியமாக, தன் முகவாயில் கை வைத்துக் கொண்டு ‘என்ன செய்வாய்’ என அவனையே பார்த்தாள். இப்போது சுவாரசியமாக ஆண்கள் எல்லோரும் கூட அவனை பார்த்தனர்.

மஹாக்கு தயக்கம் வெட்கம் என சிரித்துக் கொண்டே தலை கோதி நின்றிருந்தான் ‘என்ன செய்வது, எடுப்பதா வேண்டாமா.. இல்லை, எல்லோரும் என்னை கிண்டல் செய்கிறார்கள்.. கெத்தாக இருந்துக் கொண்டு விடலாமா..’ என உள்ளே ஓட, அப்படியே நின்றிருந்தான்.

ராகவ் அவனின் நிலை உணர்ந்து “ஹேய்.. என்ன மா.. சின்ன பையனை கிண்டல் பண்றீங்க.. நீ வா மஹா, இந்த பிள்ளைகளுக்கு வேலையே இல்லை” என சொல்லி தோளில் கைபோட்டு அழைக்க..

இப்போது கொஞ்சம் மஹாக்கு திடம் வர, மஹா “இருங்க அண்ணா.. கேர்ள்ஸ் பார்க்கும் போது எப்படி கெத்த விடறது.. ஜானு வா.. இங்க வா, எனக்கு இந்த புடவை எல்லாம் எடுக்க தெரியாது.. அம்மாக்கு சித்திக்கு அக்காக்கு உனக்கு என ஒரு ஆறு புடவை எடுத்திடு.. அப்புறம் நீ கொஞ்சம் க்ராண்டா எடுத்துக்க..” என தாடையை நீவிய படியே சொன்னவன் நிமிர்ந்து எல்லோரையும் பார்த்து “என்ன அக்காஸ்… நீங்க இததானே எதிர்பார்த்தீங்க.. வா, ஜானு வா” என மிடுக்காக சொல்லி, எல்லோரையும் ஆப் செய்தான் படிப்பாளன்.

“உன்னுள்ளே செல்ல செல்ல..

இன்னும் உன்னை பிடிக்கையிலே..

இவ்வாறே நான் வாழ்ந்தால் போதாதா”

ஜனனி அவன் அழைத்தும் வந்து நின்றுவிட்டாள் அவனை பார்த்துக் கொண்டே.

Advertisement