Advertisement

மரகத மழையாய் நீ..

22

அங்கே, மதி.. காயத்ரியிடம்  அன்று, மஹா ஜன்னனியோடுடான தன் காதலை சொன்னதையும், அதன்பின் நடந்தவைகளையும்  சொல்லிக் கொண்டிருந்தார். கார்த்திகேயன் வந்தார் அப்போது. எப்போதும் போல.. மதியை “வாம்மா” என வரவேற்று.. தன்னறைக்கு சென்றுவிட்டார்.

காயத்ரி, காபி எடுத்து வந்து நின்றாள்.. இன்னும் மாமனாரை வெளியே காணவில்லை. தானே மாமனாரின் அறைக்கு சென்று பார்த்தாள்.. கார்த்திகேயன் அப்படியே சேரில் அமர்ந்திருந்தார்.. மனைவியின் போட்டோவை பார்த்தபடி.

காயத்ரி “என்ன மாமா, மதி ஆன்ட்டி அங்க இருக்காங்க நீங்க இங்க உட்கார்ந்திருக்கீங்க.. வெளிய வாங்கா மாமா” என்றாள்.

கார்த்திகேயன் “இல்ல ம்மா, அவன்.. ராகவ் வரட்டும்.. எ.. எனக்கு என்ன பேசறதுன்னு தெரியலை, அவன் எங்க இருக்கான்னு கேளு” என்றார் பதட்டமாக.

காயத்ரி, வெளியே சென்றுவிட்டாள்.. போன் எடுத்து, பேசுவதற்கு.

கார்த்திகேயனுக்கு, ஒரு பெண்ணின் தகப்பனாக எப்படி மதியை எதிர்கொள்வது.. என சங்கடம். என்னமோ ஒரு தயக்கம்..  ஏனென்றே தெரியாமல் தயங்கினார் மனிதர். தன் மனைவியின் நினைவு வந்தது போல.. அமைதியாக அமர்ந்திருந்தார் மகன் வரவை எதிர்பார்த்து.

ராகவ், வந்துவிட்டான் தந்தையின் சங்கடம் அறிந்தோ என்னமோ சீக்கிரமாக வந்தவன் “வாங்க மதி ஆன்ட்டி, காயூ எல்லாம் சொன்னாள்… இதோ வரேன் இருங்க ஆன்ட்டி” என சொல்லி தன்னறைக்கு சென்று ரெப்ரெஷ்ஷாகி வந்தான்.

ராகவ் வந்தான், ஹாலில் அமர்ந்து பேச தொடங்கினான்.. “எ.. எங்களுக்கு என்ன சொல்றது.. எப்படி இதை கொண்டறதுன்னு தெரியலை அத்தை.. அப்படி ஒரு சந்தோஷம். ஆனா, மனசுல இன்னமும் முன்னாடியே இது நடந்திருக்க கூடாதான்னு ஒரு எண்ணம் இருக்கு.. என்ன செய்ய, எங்களை, எங்க கண்ணே ஏமாத்திடுச்சு.. யாரும் எதிர்பார்க்காமா.. ஊகிக்க முடியாமா என்னென்னமோ நடந்திடுச்சு. இப்போ இருக்கிற நிதானம் அப்போ இல்லை.. என்னால் உணர முடியுது.. அம்மா ஆசைப்பட்டாங்கன்னு தேடினோம்.. உடனே அமைந்தது.. சொந்தம் என பெருசா ஏதும் விசாரிக்கலை.. எல்லாம்.. நல்லா இருக்கும்ன்னு நம்பினேன்.. அண்ணனா நான் அங்கே ஏமாந்திட்டேன், என் தங்கை பட்ட அவஸ்த்தைக்கு எல்லாம் நானும் ஒரு காரணம் ஆகிட்டேன்..” என சொல்லி மௌனமாக அமர்ந்திருந்தான் சற்று நேரம்.

மதிக்கு என்ன சொல்லுவது என தெரியவில்லை.

காயத்ரி மாமனாரை அழைக்க சென்றவளுக்கு, இங்கே பேசியது தெரியவில்லை. இப்போது கார்த்திகேயனும், காயத்ரியும் வந்தனர். காயத்ரி “எ… என்னங்க” என்றாள் சந்தேகமாக, உள்ளே அவளுக்கு ஆனந்தம் இருந்தாலும் சிறு பேச்சின் பிழையும் மதி ஆன்ட்டி மனதில், ஜனனியை பற்றி ஏதேனும் தவறான எண்ணத்தை கொடுத்திடுமோ என எண்ணம், காயத்ரிக்கு. எனவே தயங்கியபடியே, கணவனை அழைத்தாள் அவள்.

மதி “ஒண்ணுமில்ல காயத்ரி, அவன் மனசில் வருத்தம் இன்னும் ஆறல, அதான்.. பழசை அவனால் மறக்க முடியலை..” என்றார்.

காயத்ரி “ஹய்யோ, என்னங்க இது, ஆன்ட்டி நல்ல செய்தி சொல்றாங்க, அதை பேசுங்க.. அத விட்டுட்டு, முடிஞ்சு போனத பத்தி இனி பேச கூடாது.” என்றாள் கொஞ்சம் மெதுவானக் குரலில், தன் கணவனிடம். 

பின் காயத்ரி, மதியிடம் “அத்தை அவர், ஸ்வீட் வாங்கிட்டு வந்தார் இருங்க எடுத்து வரேன்” என்றபடி உள்ளே சென்றாள்.

மதி, கார்த்திகேயனிடம் “அண்ணா.. நீங்க எதுவும் சொல்லலையே” என்றார்.

கார்த்திகேயன் “எப்படி சொல்றதுன்னு தெரியலை ம்மா, என்ன பேசறதுன்னு தெரியலை ம்மா.. சுகுமாரி இல்லையே உன்னை கொண்டாடன்னு தோணுது. ஒரு குடும்பத்தில் பெண்ணின் வாழ்க்கை சிறப்பா இருந்தால்தான்.. அந்த குடும்பம் தலைநிமிர்ந்து நிற்கும். அந்த வகையில் என் குடும்பத்தை தலை நிமிர வைச்சிட்ட மா, நீயு.. உன் மனசு ரொம்ப பெருசு மா.. “ என சொல்ல சொல்ல..

மதி “அண்ணா, இப்படி பெரிய வார்த்தையெல்லாம் வேண்டாம் அண்ணா, இனி ஜானு என் பொறுப்பு, இனி நீங்க நிம்மதியா இருங்க.. “ என்றார்.

காயத்ரி “மாமா, சந்தோஷமா இருங்க.. இனி அவளுக்கு நல்லது மட்டும்தான் நடக்கும்” என்றாள் சத்தமாக. பெரியவர்கள் இருவரும்  கொஞ்சம் ஸ்வீட் எடுத்துக் கொண்டனர்.

பின் மதி “நீங்க கொஞ்சம் சுதாரிக்கட்டும்ன்னுதான் முதலிலேயே நான் சொன்னேன். முறையா, தாரா அவளோட வீட்டுகாறார், மஹா சித்தப்பா சித்தி, என் நாத்தனார் எல்லோரும் ஒரு நல்ல நாள் பார்த்து வருவோம்.. “ என எல்லாம் பேசிக் கொண்டிருந்தார்.

காயத்ரிதான் நடுவில் மதியோடு ஒத்து பேசி, பேச்சை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றாள். கூடவே கணவனை ஆங்காங்கே பேச்சில் இழுத்துக் கொண்டாள். ஆனால், மாமனாரை என்ன முயன்றும் அவளால் பேச வைக்க முடியவில்லை. அவர் இன்னும் பழைய தவறை மறக்க முடியாமல் தவித்தார் எனலாம், எல்லோரின் பேச்சையும் கேட்டுக் கொண்டிருந்தாரே தவிர ஏதும் பேசவேயில்லை.

நேரம் சென்றது. யாரும் கிட்சென் செல்லவில்லை, உணவை ராகவ் ஆர்டர் செய்கிறேன் என்றான்.

ஜனனிக்கு, அழைத்து வீட்டிற்கு வர சொன்னாள் காயத்ரி.

ஜனனிக்கு, போன் ஒலித்த பின்தான் நினைவே வந்தது. அப்போதுதான் மஹாவிடமிருந்து தன் கையை பிடிங்கிக் கொண்டாள் பெண். அதுவரை, அவன் வசமே அவள். அன்பு எல்லோருக்கும் பிடிக்கும், எல்லோரையும் ஈர்க்கும்.. உண்மையோ பொய்யோ அன்பு நேசம் என்ற வார்த்தைகளுக்கே தனி ஈர்ப்பு உண்டு. அதுவும் மஹாவினுடைய நேசம்.. வருடங்கள் கடந்தும், வண்ணங்களும் வாசமும் மாறாமல் அப்படியே இருக்கவும், ஜனனியை இழுத்துப் பிடித்து வைத்துக் கொண்டது போல தன்னுள்.

மெதுவாக போனின் ஒலியில் தன்னை மீட்டுக் கொண்டு, பேசி வைத்தாள்.

மஹா, மிட்டாய் பிடுங்கிய குழந்தையின் பார்வையோடு “என்ன “ என்றான் எரிச்சலாக.

ஜனனி “அண்ணி வர சொன்னாங்க” என்றாள்.

மஹா “ம்… அப்புறம் எப்போ அடுத்த விசிட்.. “ என்றான்.

ஜனனி “எனக்கு படிக்கணும் நா.. நான் வர முடியாது, பார்க்கலாம்” என்றவள் விட்டால் போதுமென கிளம்பினாள். அவளும் அவள் வசம் இல்லையே, அதனால், எங்கே அவன் பேச்சை கேட்டு.. ‘இப்போ பார்க்கலாம்.. அப்போ பார்க்கலாம்.. என சொல்லி விடுவோமோ’ என பயம், அதனால், மஹாவிடமிருந்து தன்னை மீட்டுக்கு கொண்டு வந்து சேர்ந்தாள் வீட்டிற்கு.

ராகவ், தங்கையை பார்த்து வரவேற்று சிரித்தான்.. வேறு ஏதும் பேசவில்லை. மதிதான் ‘இப்போது ஏதும் சொல்ல வேண்டாம், நான் அவளை வீட்டில் பார்த்து ‘என் பையனை திருமணம் செய்ய சம்மாதமா’ என கேட்டுக் கொள்கிறேன் என்றுவிட்டார். அதனால், யாரும் ஜனனியிடம் ஏதும் பேசவில்லை.

ஜனனியும் ஒன்றும் கேட்க்காமல் உள்ளே செல்ல போனாள்.. ஆனால், தந்தை, அண்ணன், அண்ணி, அத்தை.. முகம்மெல்லாம் மலர்ந்து இருந்ததை பார்த்ததும்.. அவர்கள் எல்லோரும் எதோ பரிசு வாங்கி வந்த குழந்தையை பெருமையாக பார்ப்பது போல, விடாமல் தன்னை பார்வையால் பின் தொடர்வதை பார்த்ததும்.. அவளுக்கும் முகம் மலர்ந்தது. இது நேரம்வரை மஹா காட்டிய, நேசத்தால் நெய்த உலகம் இப்போதுதான்.. குடும்பத்தாரின் மலர்ந்த பார்வையில்தான் முழுமை கொண்டது, ஜனனியின் பார்வையில்.

ராகவ் “ஜானு நைட் சாப்பிட உனக்கு என்ன சொல்ல” என்றான்.

ஜனனி, தேவையானதை சொன்னாள்.. கூடவே, மஹா அங்கிருப்பதும் நினைவு வந்தது ஜனனிக்கு. மதி அத்தை ஏதும் சொல்லாமல் இங்கேயே உண்ணும் எண்ணத்தில் இருகிறார் என ஊகிக்க முடிந்தது அவளால்.. மேலும், மஹா வந்தது இவளை தவிர யாருக்கும் தெரியாதே.. மஹாவை விட்டு விட்டு எப்படி உண்பது என தோன்றியது, ஆனால், எப்படி மஹா அங்கே இருக்கிறான் என சொல்லுவது என தெரியவில்லை. அதனால் தன்னறைக்கு செல்ல இருந்தவள் அண்ணனின் பேச்சை தொடர்ந்து அண்ணன் எதிரில் வந்து நின்றாள்.

ராகவ் போன் செய்ய எடுத்தான்.

ஜனனி தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மெல்லியக் குரலில் “அண்ணா, மஹா அ.. அங்க அவங்க வீட்டுக்கு வந்துட்டான், அவனுக்கும் சாப்பிட எ.. என்ன வேணும் கேட்டுக்கிறியா அண்ணா” என்றாள் சத்தமில்லாமல் மென்மையாக, அண்ணனை பார்க்கக் முடியாமல் தடுமாறி கேட்டாள் பெண். .

ராகவ்க்கு அவளின் மெல்லிய சத்தத்தில் என்ன சொல்லுகிறாள் என முதலில் அவ்வளவாக கவனம் கொள்ளவில்லை.. மஹா என்ற பெயர் அடிபடவும் கவனமாக கேட்டவனுக்கு, மஹா, வீட்டிற்கு வந்துவிட்டது தெரிந்தது.. அத்தோடு அவனிடமும் உணவு ஆர்டர் எடுக்க சொல்லுகிறாள் என புரிய.. அண்ணன்.. தங்கையிடம்  சிரித்துக் கொண்டே “சரி டா ம்மா .. கேட்டுக்கிறேன்” என்றான்.

ஜனனிக்கு, அண்ணின் சிரிப்பு பார்த்து, லேசாக கன்னம் சிவந்தது. நேசம்..  வெட்கத்தை தந்தது அவளுக்கு.. கன்னம் சிவந்து மனம் சத்தமாக அடித்துக் கொள்ள தன்னறைக்கு சென்றாள், ஜனனி.

ராகவ், பொறுப்பாக நேரே மதியும் காயத்ரியும் இருக்குமிடம் சென்றான்.. அங்கே சென்று ரகசியமாக “அத்த, உங்களுக்கு தெரியுமா.. உங்க பையன் வீட்டுக்கு வந்துட்டானாம்..” என்றான் வினையமான குரலில்.

மதி “அப்படியா சொல்லவேயில்லை அவன். பெங்களூர்லிருந்து மதியம்தான் வந்தான். நேரே ஆபீஸ் போறேன்னு சொன்னான்.. வீட்டுக்கு எப்போ வந்தான், சரி.. வீட்டுக்கு கிளம்பறேன் நான் .. கூப்பிடவே இல்ல பாரேன்..” என்றார் புலம்பலாக.

ராகவ் “அத்த, இருங்க மிச்சத்தை கேளுங்க.. மஹாக்கு புட் ஆர்டர் செய்யறதாம்.. உங்க ஜானுதான் இப்ப சொல்லிட்டு போறா… நீங்க இங்கேயே இருங்க.. மஹாவை இங்க வர சொல்லாம்.. சாப்பிட்டு போலாம்” என்றான்.

மதி “ம்.. மஹா வந்தாச்சா.. ஜானு சொன்னாளா.. ஓ… சரி ப்பா.. சரி, அவனை வர சொல்லு.. சேர்ந்து சாப்பிடலாம்” என எதோ புரிந்தவர் போல அமர்ந்தார்.

காயத்ரி “ஓ… மஹா வந்தாச்சா.. ம்.. ம்…” என்றாள் ராகவனை பார்த்து ராகமாக.

ராகவ் லேசாக சிரித்துக் கொண்டே போபோனெடுத்துக் கொண்டு நகர்ந்தான் அந்தபக்கம்.

அன்றைய இரவு மஹா வந்தான் ஜனனி வீட்டிற்கு. கார்த்திகேயன் இயல்பாகப் பேசினார். ஏதும் யாரும் இளையவர்களிடம் காட்டிக் கொள்ளவில்லை. மதி, கார்த்திகேயன் இருவரும் பழைய கதை பேசிக் கொண்டே உண்டனர்.

காயத்ரிதான் அடிகடி தன் கணவனிடம் ஜாடை பேசிக் கொண்டே ஜனனியை வறுத்தெடுத்தாள். ஜனனியும், அண்ணியின் வாய்க்கு பயந்து மஹாவை பார்க்க கூடாது என எவ்வளவோ முயன்றாலும்..  காயத்ரி ஏதேனும் பேசி, மஹாவை.. திரும்பி பார்க்க செய்திடுவாள் ஜனனியை. இப்படியே நேரம் சென்றது. மஹா ஜானு இருவருக்கும் முதல் முறை ஜாடை பேச்சும், ரகசிய சிரிப்புமாக.. ஒரு குறுகுறு மனதோடு நேசம் கண்வழியே நுழைந்து மூளை.. ரத்தம்.. நரம்பு.. என நிறைந்து.. சிறப்பித்து சொல்ல முடியாத சுவாசமாக உள்ளே கலந்தது, இருவருக்கும்.

அடுத்தடுத்த நாட்கள் சென்றது..

ஜனனிக்கு என்ட்ரன்ஸ் எக்ஸாம் இன்று. பரபரப்பாக கிளம்பிக் கொண்டிருந்தாள். மஹா, நேற்று இரவு அழைத்து பேசியிருந்தான், ஊரிலில்லை அவன். ஜனனி ‘எப்போ வரிங்க.. எப்போ வரிங்க..’ என பலவாறாக கேட்டிருந்தாள். 

அவனுக்கோ உறுதியாக எதையும் சொல்ல முடியாத நிலை, வேலை இன்று முடியும் என உறுதியாக சொல்ல முடியாத சூழ்நிலை. அதனால் ‘பார்க்கலாம்’ என மட்டும் சொல்லி இருந்தான்.. நேற்று இரவு அவள் அழைக்கும் போது.

ஜனனி, பாண்டிசேரியில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனையில்தான் எக்ஸாம் எழுதுகிறாள், அதனால் பாண்டி செல்ல வேண்டும். ராகவ் அலுவலகத்தில் வேலை இருப்பதால் காரெடுத்து, அவளோடு போக முடியவில்லை. ஜனனி பஸ்சில் செல்கிறேன் என்றாள்.

மஹா, டாக்ஸி புக் செய்தான், இப்போதுதான் அவளுக்கு மெசேஜ் வந்தது. ராகவ் வந்தான் இப்போது ஜனனி அறைக்கு “ஜானு, மஹா டாக்ஸி புக் செய்யறேன்னு சொன்னான்.. இந்தா..” என சொல்லி தன் கார்டை கொடுத்தான் அண்ணன். 

ஜனனி “ன்னா, என்கிட்டே இருக்கு” என்றாள்.

ராகவ் “தெரியும் டா.. வைச்சிக்கோ.. இருக்கட்டுமே..” என்றான்.

பின் “பார்த்து டா, பதட்டப்படாமல் எழுது, கண்டிப்பா வின் பண்ணலாம்… பை..” என்றவன் தன்னறைக்கு சென்றுவிட்டான்.

மதி வந்தார், அந்த வளாகத்தில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு.. “ஜானு” என்றார்.

ஜானு வர.. அவளின்  நெற்றியில் திருநீறு வைத்தவர்.. “கிளம்பிட்டியா ம்மா.. ஆல் தி பெஸ்ட்.. அவன் வந்திடுவான் கூட்டிட்டு வரன்னு நினைக்கிறேன்.. ஏதாவது சொன்னானா” என்றார்.

ஜனனிக்கு லேசாக முகம் மலர்ந்ததுதான், ஆனாலும் எதையும் காட்டிக் கொள்ளாமல் “தேங்க்ஸ் அத்தை. இல்ல அத்தை, எதுவும் சொல்லலை… டாக்ஸி புக் செய்திருக்கார்.. வேற எதுவும் சொல்ல..” என்றாள்.

காயத்ரி “சாப்பிட வா ஜானு” என்றாள்.

ஜனனி “அண்ணி, ப்ளீஸ் காரில் சாப்பிட்டுக்கிறேன்.. பாக் செய்துடுங்க, மணி ஏழு கூட ஆகலை.. ப்ளீஸ்” என்றாள்.

காயத்ரிக்கு அதுவும் சரியென பட.. உள்ளே சென்றாள்.

கார்த்திகேயன் “ஜானு, இந்தா டா” என சொல்லி தன் பங்குக்கு கொஞ்சம் பணம் தந்தார்.. ஜானு அவரை நமஸ்கரிக்க “ஆல் தி பெஸ்ட் டா.. அம்மா கூடவே இருப்பா, நல்லா எழுது.. சீட் கிடைச்சிடும்” என்றார்.

தேஜு, தாத்தாவின் தோளில் அமர்ந்துக் கொண்டு அவளை முத்தமிட்டது. ஒருவழியாக தேர்வெழுத கிளம்பினாள் ஜனனி.

படிப்பு என்பது தவம் போல.. ஒன்று யாரையும் கண்டுக்கொள்ளாமல் ‘எனக்கென்ன’ என (சதா போல)படிக்க வேண்டும். இல்லை, மொத்த வீடே சேர்ந்து ‘நீ படிக்கிற.. போ படி, தட்டை வைச்சிடு நான் எடுத்துக்கிறேன்’ என தாங்க வேண்டும் அப்போதுதான் அந்த தவம்.. வரத்தை தரும், ஜனனிக்கு அப்படிதான் வீடே தாங்குகிறதே, கண்டிப்பாக வரம் கிடைக்கும்.

மஹா, ஒரு மெசேஜ் மட்டும் ‘ஆல் தி பெஸ்ட்’ என அனுப்பிவிட்டு, ஏர்போர்ட்டில் அமர்ந்து தவித்துக் கொண்டிருந்தான். எங்கே தான் பேசினால் ‘அவள் எப்போ வரீங்கன்னு கேட்பா.. இப்போ வரேன்னு சொன்னா… உடனே மனது என்னை எதிர்பார்க்கும், கான்ஸட்ரேஷன் போகிவிடும்’ என ஏதும் அழைக்கவில்லை அவன்.

மஹா, நேற்று காலையிலேயே அவன் வருவதாக இருந்தது. அவன்தான் வந்து அவளை பாண்டி அழைத்து செல்வதாக ஏற்பாடு. ஆனால், வேலை முடியாததால்.. நேற்று, அங்கேயே தங்கி எல்லாம் முடித்து வர வேண்டிய நிலை. எதிலும் எப்போதும் போல.. அவசரம் காட்டாமல் முடித்து வந்தான் மஹாதேவ். ஆனால், எப்போதும் போல, தனியே தவிப்பான் எதையும் சொல்லாமல். இந்த நேரத்திலும் அப்படியே, அவளின் அருகில் இருக்க வேண்டும் என அவன் நினைத்திருந்தான்.. அது முடியாமல் போக கொஞ்சம் தவித்து போய்விட்டான். ‘கிளம்பி இருப்பா.. அப்போவே, எக்ஸாம்ன்னா சாப்பாடு இறங்காது அவளுக்கு, இப்போ என்ன செய்யறாளோ..’ என தனக்குள் எண்ணிக் கொண்டே அமர்ந்திருந்தான். 

காலையில் மஹாவை இப்போதெல்லாம் அவனின் ஜகமே, போனில் அழைத்து எழுப்புகிறது. சில நேரம் அகால நேரத்தில்.. தான் படிப்பு முடித்து விட்டு கூட.. மஹாக்கு அழைப்பாள் ஜனனி. அவனும் சலிக்காமல், அப்போதுதான்.. அரைமணி நேரம் முன்தான் உறங்கியிருப்பான், ஆனாலும் அவள் அழைக்கிறாள் எனும் போது “என்ன ப்பா… முடிச்சிட்டியா” என்பான், குரலில் கூட தூக்கக் கலக்கம் இல்லாமல்.

ஜனனி “ம்.. இப்போதான். சும்மாதான்.. குரல் கேட்டனும் போல இருந்தது..” என்பாள், அலட்டாமல்.. அதிராமல். இப்படியாகத்தான் இவர்களின் நேரம் கடந்துக் கொண்டிருக்கிறது.

மஹா அவளிற்காக பார்க்க.. ம், அதிகம் பேசாமல், பார்த்து.. பார்த்து பட்டுப்படாமல் அவளோடு பேசி பழகினான். அவளும், அவனின் மனமறிந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் தயங்காமல் அழைத்து பேசுவாள். அதுவும் காலையில் அவனை எழுப்பியபின்தான் காபி அவளுக்கு.

“என் மேஜை மீது பூங்கொத்தை 

வைத்தது நீதானே..

நான் வானம் பார்க்க 

வழி செய்த சாதகன் நீதானே..

என் இதயம் மெல்ல சிதையில் தள்ள..

நீதான் நிலாவை காட்டி தேற்றினாய்..”

இப்போதும் மஹா போன் செய்ய மாட்டான் என உணர்ந்து படித்துக் கொண்டே சென்றாள் காரில், ஜனனி. நேரத்திற்கு கல்லூரி சென்றுவிட்டாள். அங்கே சென்று, உண்டு.. எல்லாம் பார்த்து.. அமர்ந்தாள், மனம் தெளிவாக இருந்தது. பரிட்சையும் நல்லபடியாக முடிந்தது.

 

 

 

Advertisement