Advertisement

மஹா வீட்டற்கு வந்து விட்டாள். கதவை தட்ட.. மதியால் கதவை திறக்க முடியவில்லை. இரண்டு, மூன்று முறை போனில் அழைத்து.. அவரை எடுக்க செய்து, பேச வைத்து என ஜனனி, மெல்ல மெல்ல மதியை கதவை திறக்க வைத்தாள்.

மதி கதவை திறக்கும் போது கொஞ்சம் பரவாயில்லையாக இருந்தார்.. தலை சுற்றுகிறது என்றார்.. மற்றபடி நன்றாக பேசினார்.. ஜனனி பல்ஸ் பார்த்து செக் செய்து.. பார்த்து.. என எல்லாம் செக் செய்தாள். 

bp, சுகர் மாத்திரை  ஏதும் இல்லை, மஹாவும் ஊரில் இல்லாததால்.. ஏதும் எடுக்கவில்லை இரண்டு நாட்களாக, அத்தோடு எதோ நாத்தனார் வேறு, மஹாவின் எண்ணம் பற்றி தெரிந்து கேட்கவும்.. மனது கொஞ்சம் சங்கடப்பட்ட.. எல்லாம் சேர்ந்துக் கொண்டது மதிக்கு. அதனால் கொஞ்சம் படபடப்பாகி விட்டார் போல.

ஜனனி, தேவையான மருந்து செக்யூரிட்டியிடம் வாங்கி வர சொல்லி, அனுப்பி இருக்கிறாள். 

ஜனனி “என்ன காபி குடிச்சிங்களா..” என்றபடி தோசை மாவை பிரிட்ஜ்ஜிலிருந்து எடுத்து தோசை உற்றினாள்..

மதி “உனக்கு யார் சொன்னா ஜானும்மா” என்றார்.

ஜனனி “உங்க மகன்தான்.. அம்மா பேசவே இல்லை என கூப்பிட்டார்,” என்றவள் “என்னாச்சு அத்தை.. மஹா இல்லைன்னா, வீட்டுக்கு வரலாமில்ல.. ஏன் தனியா இருக்கீங்க” என்றாள்.

மதி “ஏன், நீ வரலாமில்ல.. இப்போவெல்லாம் நீ வரதேயில்லை” என்றார்.

ஜனனிக்கு என்ன சொல்லுவது என தெரியவில்லை.. “சாப்பிடுங்க” என சொல்லி மதியம் வைத்திருந்த சாம்பாரோடு தோசையை கொடுத்தாள்.

மதியும் ஒன்றும் சொல்லாமல் வாங்கி உண்டார். பேச்சு மகனை பற்றிதான் ஓடிக் கொண்டிருந்தது ஜனனியிடம். ‘எப்படி சரியா கூப்பிட்டான் பாரு மஹா.. அவன் கூப்பிடலைனா, நீ வந்திருப்பியா.. எனக்கு ஏதாவது ஒண்ணுன்னா, பாரு அவனுக்கு பதறுது’ என மகன் பெருமையை பேசி தீர்த்தார்.

ஜனனி உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள்.. ‘ப்பா பெருமை தாங்கல’ என. வெளியே நடுநடுவே ‘ஏன் மாத்திரை இல்லைன்னா சொல்ல வேண்டாமா.. ஏன் மஹா கிட்ட சொல்லல.. இல்ல, யார்கிட்டயாவது கேட்கனுமில்ல.. எப்போ டாக்டர் பார்க்க போகணும்..’ என விரட்டி விரட்டி கேள்வி கேட்டு பதிலையும் வாங்கிக் கொண்டாள் பெண்.

செக்யூரிட்டி மாத்திரை வாங்கி வரவும்.. அதனை அவருக்கு கொடுத்தாள். ஜனனி “இருங்க அத்த, மஹாகிட்ட பேசுங்க” என சொல்லி மஹாக்கு போன் செய்தாள்.

மஹா, போனை எடுத்தான் “என்ன ப்பா.. பயமில்லையே” என்றான் பதறியவனாக. 

ஜனனிக்கு, முதலில் திட்டத்தான் தோன்றியது ‘ஏன் மாத்திரை இருக்கான்னு கூட கேட்கமாட்டியா’ என்தான் தோன்றியது. ஆனால், அவனின் பதட்டமான குரல் அவளின் கோவத்தை கொஞ்சம் தள்ளி வைத்து போல. ஜனனி “ம்.. ஒண்ணுமில்ல மஹா, மாத்திரை தீர்ந்து போச்சாம் ரெண்டு நாளா போடலையாம்.. அதான் வேற ஒண்ணுமில்ல” என்றாள் தன்மையான குரலில்.

மஹா “சரி நான் இப்போவே ஆர்டர் பண்றேன்” என்றான்.

ஜனனி “இல்ல, இப்போதிக்கு, நான் வாங்கி கொடுத்திட்டேன். நாளைக்கு நான் ஹாஸ்ப்பிட்டல் கூட்டி போறேன்.. நான் செக் பண்ணிட்டு சொல்றேன்” என்றாள்.

மஹா “ஏன் ஜானு.. ஏதாவது ப்ரோப்ளமா..” என்றான்.

ஜனனி “ஒண்ணுமில்ல மஹா, அவங்க இப்போதிக்கு டாக்டரை பார்க்கவேயில்லை, ஒருதரம் செக் பண்ணிடலாம்..பயமெல்லாம் இல்லை, ஜஸ்ட் செக்கப்..” என்றவள் பேசிவிட்டு “இருங்க அத்தைகிட்ட தரேன்” என சொல்லி மதியிடம் போனை கொடுத்தாள்.

இருவரும் மஹாவிடம் பேசி முடித்து அமர்ந்தனர்.

மதி, கொஞ்சம் தயங்கியவராக “நீ.. நீ வீட்டுக்கு போ ஜானு, நான் தூங்கிடுவேன்.. காயத்ரிகிட்ட சொல்லு, நாளைக்கு வரேன்னு..” என்றார்.

ஜனனி அவரின் தயக்கத்தை பார்த்து “இல்ல, அத்த ஒருநாள் நான் இங்க தங்கிக்கவா.. உங்களுக்கு ஒன்னும் பிரச்சனையில்லையே” என்றாள் கிண்டலாக.

மதி, ஜனனியை நிமிர்ந்து பார்த்தார்.. முகத்தில் கிண்டலான பாவனையை பார்த்து “என்ன ஜானு பாப்பு, கிண்டல் பண்றியா, எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, நீ கிளம்பறதா.. இருந்தா, கிளம்பு” என்றார்.

ஜனனி “ம்.. ஏன் சொல்லமாட்டீங்க.. கூப்பிடாமேயே வந்து வைத்தியம் பார்த்தேனில்ல… இப்படிதான் விரட்டுவீங்க” என்றாள்.

மதி “ஐயோ ஜானும்மாவ நான் விரட்டறேன்னா… நீதான் இப்போவெல்லாம்.. “ என்றவர் என்ன யோசித்தாரோ “சரி நானே கேட்கிறேன்.. இங்க இரேன் இன்னிக்கு..” என்றார் பெரியவராக விட்டுக் கொடுத்து இறங்கி வந்தார்.

ஜனனி “ம்.. அப்படி வாங்க வழிக்கு..” என்றவள் “அண்ணிகிட்ட சொல்லிட்டு, புக்ஸ் எடுத்துட்டு வரேன்” என சொல்லி வீட்டிற்கு சென்றாள்.

கார்த்திகேயன், அமர்ந்திருந்தார். ஜனனி எல்லாம் சொல்லினாள் அவரிடம்.. தந்தையாக ஜனனியை போக வேண்டாம் என சொல்ல முடியவில்லை.. நியாயமான காரணம்  அதனால் “சரி ம்மா.. ஜாக்கிரதை…” என்றார்.

பத்து நிமிடத்தில் வீட்டில் சொல்லிவிட்டு தேவையான திங்க்ஸ் எடுத்து வந்தாள் ஜனனி.

ஜனனி, மதி அத்தையோடு பேசிக் கொண்டே, தோசை உற்றிக் கொண்டு.. உண்டாள். பின் “அத்தை கண்டிப்பா டென் ஹெர்ஸ் தூங்கனும் நீங்க, நான் படிக்கணும்.. நீங்க போய் நிம்மதியா தூங்குங்க” என்றாள். அப்படியே செய்தார் மதி.

ஜனனி படிக்க அமர்ந்தாள். ஜனனிக்கு, என்னமோ அந்த பால்கனியில் அமர்ந்ததும்.. கன்னாபின்னா எண்ணமெல்லாம் வராமல்.. கவனமாக படிக்க தோன்றியது. படிக்க படிக்க அவளுக்கு நீண்டுக் கொண்டே இருந்தது.. நேரம் போனதே தெரியவில்லை.. போல. 

ஒருமணி இருக்கும் மஹா அழைத்தான் போனில் அவளை. ஒரு ரிங்கில் தன் அழைப்பை கட் செய்துவிட்டான். ‘தூங்கி இருந்தால்.. தொல்லை செய்ய வேண்டாம்’ என.

ஜனனி, அந்த அழைப்பில் கலைந்தாள். தானே அழைத்தாள் மஹாவிற்கு. மஹா எடுத்தான் “தூங்கிட்டியா” என்றான்.

ஜனனி “இல்ல..” என்றாள்.

மஹாக்கு, சட்டென என்ன பேசுவது என தெரியவில்லை.. ஒரு ப்லொவ்வில் அழைத்துவிட்டான்.. சட்டென வார்த்தைகள் அர்த்த ராத்தரியில் வரவில்லை தடுமாறினான்.

மஹா “ம்… இல்ல, சும்மாதான், அம்மாக்கு ஓ..ஒண்ணுமில்லையே” என்றான்.

ஜனனி “இல்ல, நல்லா இருக்காங்க, நான் உங்க வீட்டில்தான் இருக்கேன்.. நீங்க நிம்மதியா தூங்குங்க” என்றாள்.

மஹாக்கு இதை கேட்டதும் கொஞ்சம் நிம்மதியானது.. பரவசமும் ஆனது. இயல்பாக பேச்சும் வந்தது “ம்.. என்ன டா, அத்தை மேல திடீர் பாசம்” என்றான்.

ஜனனி “ம்.. ஏன் சொல்லமாட்டீங்க.. அப்படியே போயிருக்கனும்” என்றாள் முறுக்கிக் கொண்டு.

மஹா “என்ன பண்ற.. ஏன் தூங்கல.. “ என்றான்.

ஜனனி “படிச்சிட்டு இருக்கேன்.. இங்க ஒரு அழகான இடம் இருக்கு, அங்க உட்கார்ந்து படிக்கிறேன்.. சிலுசிலுன்னு காத்து.. சும்மா சூப்பரா மண்டையில் ஏறுது” என்றாள்.

மஹா “ம்.. தினமும் கூட வரலாம்.. “ என்றான்.

ஜனனிக்கு வாயடைத்து போனது, பதில் சொல்ல முடியவில்லை.. ஒரு வெட்கம் வந்துவிட்டது. பேச்சை மாற்ற எண்ணி “எங்க போயிட்டீங்க.. சொல்லாமல்” என்றாள். என்ன முயன்றும், அவளின் கேள்வியில் அவள் வெளிவந்துவிட்டாள்.

மஹா “தேடியிருக்க… உன் மெசேஜ் பார்த்தேன், சாரி கொஞ்சம் அவசரம் அதான் பேச முடியலை.. நாளைக்கு வந்திடுவேன்.. வந்து நேரில் பேசிக்கலாம்ன்னு விட்டுட்டேன்” என்றான்.

ஜனனிக்கு சுள்ளென கோவம் வந்தது “சரி வைக்கிறேன், நேரில் பேசிக்கலாம்” என்றவள் கட் செய்துவிட்டாள். கொஞ்சம் பெண்மனம் தடுமாறியது.. அவனின் ‘தேடியிருக்க’ என்ற வார்த்தையில்.. ‘எப்படி அப்படி சொன்னேன்’ என தனக்கு தானே வெட்கப்பட்டு போனை கட் செய்துவிட்டாள் ஜனனி.

மஹாக்கு, கிடைத்த நேரத்தை இழக்க மனதில்லை, அதுவும் அவள் பட்டென வைத்ததும்  வாடி போனான். வீடியோ காலில் அழைத்தான் விடாமல்.

ஜனனி தட்டு தடுமாறி எப்போதும் போல இரண்டாம் அழைப்பில்தான் எடுத்தாள்.

மஹா டேபிளில் அமர்ந்திருந்தான், லேப்டாப்பை அப்போதுதான் மூடி வைத்தான்.. மஹா “என்ன ஆச்சு.. ஏன் கட் பண்ணிட்ட” என்றான்.

ஜனனி, ஏதும் பேசவில்லை.. போனை புக் மீது முட்டு கொடுத்து நிறுத்தி வைத்துவிட்டு.. பென்சிலால் எதையோ தேடும் பாவனையில் இருந்தாள்.

மஹா பேசினான், தான் வந்த காரணம் சொன்னான்..” ரொம்ப அவசரம் அதான்.. சாரி” என்றான்.

ஜனனிக்கு உண்மை தெரியவும், மென்மையாக சங்கடமாக  “சாரி எல்லாம் வேண்டாமே.. சும்மா கேட்டேன்.. வேற ஒண்ணுமில்ல” என்றாள்.

மஹா “இல்ல, இப்படி பதில் சொல்ல பிடிச்சிருக்கு. நீ இப்படி முகத்ஹ்டை தூக்கி வைச்சிகிட்டு கேட்பேன்னு எதிர்பார்க்கல.. மனசுல ஆயிரம் டென்ஷன் இருந்தாலும், உன்கிட்ட சொல்லாம வந்துட்டேன்னு ஓடிகிட்ட இருந்தது.. ச்சு, உன் மெசேஜ் பார்த்ததும் ஒஹ் காட்.. அப்படி ஒரு சந்தோஷம். ச்சு அதைவிட ஏன், இவளை முன்னாடிய பிடிச்சிக்காம போனேன்னு… அஹ… போ… பாதி லைஃப் தொலைஞ்சி போச்சு… தொலைச்சிட்டேன்னு.. அஹ… சாரி ஜானு.. லேட்..” என்றான்.

ஜனனிக்கு, திக்குமுக்காடி போனது. எதிர்பாராத மழை.. அதுவும் வறண்டு காய்ந்த நிலத்தில் அடைமழையாய் கொட்டியது அவனின் இந்த வார்த்தைகள். கண்ணெல்லாம் கலங்கி நீர் வழிந்தது.. அவளுக்கு.

மஹா பார்த்துக் கொண்டே இருந்தான் பேசவில்லை.

ஜனனி “ப்ளீஸ் மஹா…” என்றாள்.

மஹா “ம்.. எல்லாம் என்னாலதானே.. நீ இப்படி எல்லாம் கஷ்ட்டபட்டிருக்க வேண்டாம். நானும் ஒரு காரணமோன்னு தோணும்.. இல்லைன்னு சொல்லிப்பேன், ஆனா.. நான் லேட்… சாரி ஜானு சாரி” என்றான்.

ஜனனி  “மஹா..ஹா… அப்படி எல்லாம் இல்ல, ப்ளீஸ்…” என்றாள்.

மஹா, அமைதியாக இருந்தான்.

ஜனனி “நீ.. நீங்கதான் சொன்னீங்களே.. கல்யாணத்துக்கு முன்னாடியே லவ்ன்னு, நான்தான் புரிஞ்சிக்காம.. ச்சு.. என்னமோ” என்றாள்.

மஹா அமைதியாகவே இருந்தான்.

ஜனனி, சில நொடிகள் சென்று நிமிர்ந்து பார்த்தாள் அவனை.

மஹா, தன் கைகளை போனின் முன் கோர்த்துக் கொண்டு அவளையே பார்த்திருந்தான்.

ஜனனி “எ.. என்ன” என்றாள்.

மஹா “ஒண்ணுமில்ல..” என்றான்.

ஜனனிக்கு அந்த பார்வை வெட்கம் வர செய்தது.. “பை.. குட் நைட்.. தூங்குங்க” என்றாள்.

மஹா “நான் தூங்கறேன்.. போனை கட் பண்ணாத” என்றவன் லைட் ஆப் செய்து படுத்துக் கொண்டான்.

ஜனனி “ஹேய்.. என்ன பண்ற.. எனக்கு எதுவுமே தெரியலை” என்றாள்.

மஹா மென்மையாக “உனக்கு எப்போ தெரிஞ்ச்சது.. அமைதியா படி, நீ தூங்க  போகும் போது கட் பண்ணிக்க.. ரைட்” என்றான்.

ஜனனி மொத்தமாக இந்த வார்த்தையில் ப்ளாங்.. ‘என்ன பண்றான் இவன்..’ எனதான் தோன்றியது.

ஜனனி “மஹா நான் கட் பண்ணிடுவேன்..” என்றாள்.

மஹா “சும்மா இரேன் டி.. எத்தனை வருஷ கனவு.. இப்போதான் போனில் நடக்குது.. கொஞ்ச நேரம் என் கூட இரேன்.. கட் பண்ண… அவ்வளோதான்..” என மிரட்டிக் கொண்டே கண்மூடிக் கொண்டான்.

ஜனனி லேசாக சிரித்துக் கொண்டே, தன புக்கை பார்த்தாள்.

“என்ன நான் கேட்பேன் தெரியாதா..

இன்னமும் என் மனம் தெரியாதா…

அட ராமா இவன் பாடு 

இந்த  பெண்மை அறியாதா…”

 

Advertisement