Advertisement

மரகத மழையாய் நீ!..

2

ஜனனி, வாசலிலேயே அப்படியே அமர்ந்திருந்தாள்.. தாரா வரும் வரை. தாரா, மஹாவின் அக்கா.. திருமணம் நிச்சியம் ஆகி இருக்கிறது. இரண்டு மாதத்தில் திருமணம்.

தாரா, வரவும்.. ஜனனி எழுந்து சென்று கேட் திறந்தாள். தாரா, அவளை பார்த்து புன்னகைத்துக் கொண்டே, தன் ஸ்கூட்டியை உள் செலுத்தினாள். 

ஜனனி, பதிலுக்கு உம்மென இருந்தாள். 

இதை கவனித்தாள் தாரா, இறங்கி வந்து, “என்ன டா, ஏன் டல்லா இருக்க, பயந்துட்டியா… அதான் மஹாகிட்ட சொல்லி, இங்க கூட்டி வர சொன்னேன்… அம்மா வந்துடுவாங்க… ஜானு“ என்றாள், சமாதானம் செய்யும் குரலில். இந்த இரண்டு வீட்டுக்கும் ஜனனி, குட்டி பெண். அவள் எவ்வளவு பேசினாலும்.. அது அங்கே குழந்தையின் மொழிதான், அதற்கான பதிலும் இதமாகதான் எப்போதும் பேசுவார்கள்…  அப்படியே இப்போதும் இதமாக பேசினாள் தாரா.

ஜனனி ஏதும் பேசவில்லை.

மீண்டும் தாரா “வா.. பசிக்கிதா… பிராட் மசாலா இருக்கு சாப்பிடுறியா.. மஹாவை.. உன்கிட்ட சொல்ல சொன்னேனே, சொல்லலையா அவன்” என்றாள்.

தாரா, B.Se maths முடித்திருக்கிறாள், ஒரு வருடம் ஆகியிருந்தது. சரியாக நாலு பிள்ளைகளுக்கு டியூஷன் எடுக்கிறாள். நல்ல திருத்தமான முகவாகுடன் பளிச்சென இருப்பாள் எப்போதும்.

ஜனனி, தாராவின் கேள்விக்கு ஏதும் சொல்லாமல் உள்ளே வந்தாள். 

தாராவிற்கு, இவ்வளவு நேரம் ஜனனி பேசாமல் வருவதால் என்ன ஆச்சு என யோசித்து  மீண்டும் தானே “என்ன டா ஜானு, என்ன ஆச்சு” என்றாள்.

ஜனனி “அக்கா… உங்க தம்..பி..” என வெடிப்பதற்கு தொடங்க.

உள்ளிருந்து வெளியே வந்த மஹா “சரி க்கா, நீ வந்துட்டியா, நான் கிளம்பறேன்.. பை” என்றபடி, தன் பைக் சாவி எடுத்துக் கொண்டே வெளியே வந்தான்.

அவனுக்கு பயம் ஜனனி சொல்லி விடுவாள் என. கண்டிப்பாக இரவு, தன் தந்தை வந்ததும்.. ஒரு பாடு அட்வைஸ் இருக்கும் என புரிந்தது அவனுக்கு.  எனவே சத்தமில்லாமல் கிளம்ப நினைத்தான் மஹாதேவ்.

ஜனனி “அக்கா…” என்றாள் சத்தமாக.. மஹா வெளியே செல்ல செல்ல.. “உங்க தம்பி, கத்திய வைச்சு என்னை பயமுறுத்திட்டான்.. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்…” என்றாள் கொஞ்சம் கூடுதலாகவே அழுதுக் கொண்டே சொன்னாள் பெண்.

தாரா “என்ன மயக்கமா… டேய்” என்றாள் அதிர்ச்சியானக் குரலில்.

மகாதேவிற்கு, சற்று முன் இவள் மேல் இருந்த பரிதாபம் மறைந்து போய்ற்று, அவள் ஒருமையில் தன்னை பற்றி கூறியதும். எனவே “என்ன பெரிய கத்தி.. அது கேக் கட் பண்ற கத்தி.. சும்மா முன்னாடி இருந்துதேன்னு எடுத்தேன்.. சும்மா கையில் வைச்சிருந்தேன்.. அத பார்த்துட்டு.. அவளா பயந்தா அதுக்கு நான் என்ன பண்ண முடியும்..” என்றான் கிண்டல் குரலில், மீண்டும் முன்னேறி வெளியே வந்தான்..

தாரா “நில்லு டா” என்றாள்.

மஹா “ஆமாம், இந்த பிடில்… சாரி, பக்கவாத்தியம் பேச்சுக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது.. பை.. எனக்கு ப்ரண்டௌட் எடுக்கணும்.. கடைய மூடிடுவான்..” என்றவன் தன் வண்டி எடுக்க கிளம்பினான்.

ஜனனிக்கு, பூக்கள் என்றாள் அலர்ஜி. அது என்னமோ.. சின்னதிலிருந்து பூக்கள் அவள் உடம்பில் பட்டால்.. சிறிய சிறிய தடிப்புகள் போல் வந்துவிடும். இது, அவளின் சிறுவயதில் இருந்தே இருக்கிறது. பூ வைத்துக் கொண்டாள் கூட.. இரண்டு கில்லுதான், அதன்பின் கொஞ்சம் தாராளமாக வைத்தாலும்.. தோளில் உரசினால்.. உடனே.. தடிப்புகள் வந்துவிடும். அதுவும் அவள் பெரியபெண் ஆனதும் ஆசைக்காக ஒரு பத்து நிமிடம் ரோஜா மாலை போட்டுக் கொண்டாள்.. அவ்வளவுதான்.. உடனே தடிப்புகள் வந்து அவஸ்த்தைபட்டாள். அதனால், மஹாதேவ்.. அவளை எப்போதும் இப்படிதான் ‘பிடில்.. அறினி.. சொரிணி..’ என அழைப்பான். பெரியவர்கள் அப்போதே மிரட்டி இருந்தனர், ஆனாலும் அவளை வெறுப்பேற்ற.. யாரும் இல்லாத போது இப்படி அழைத்து, அவளை கொஞ்சம் வெறுப்பேற்றி விடுவான்.

இப்போதுதான் மருந்துகள் உண்டு கொஞ்சம் பரவாயில்லை எனலாம் அவளிற்கு.

எனவே இப்போது கோவம் வந்தது, ஜனனி “நான் பிடில் இல்லை.. சும்மா சும்மா அதையே சொல்லாதீங்க.. நீதான் லூ.. லூசு….. இப்போவெல்லாம் எனக்கு இன்பெக்ஷன் ஆகறதில்லை” என்றாள் சற்று கோவமானக் குரலில்.

மஹா “ம்.. நீதான் சொல்லணும்.. இப்பவும் பாரு.. கையில் சொரிணி.. ஜனனி” என்றான் சின்ன குரலில் நக்கலாக.

ஜனனி, முறைத்தாள் அவனை.

தாரா “சரி, சரி.. அவன்தான் உன்னை வெறுப்பேத்த சொல்றான் நீ ஏன் ரியாக்ட் பண்ற..” என்றாள்.

ஜனனி “ச்சு.. கத்தி கையில் வச்சிருந்தாங்க, அத கேளுங்க க்கா” என்றாள் விடாமல்.

மஹா “ச்சு.. பொம்ம கத்திய பார்த்து கத்துறா.. பயந்தாங்குளி” என்றவன்.. வெளியே சென்றுவிட்டான்.

ஜனனி “நான் அத்தை கிட்ட சொல்றேன்.. கண்டிப்பா சொல்லுவேன்..” என்றாள், செல்லும் அவனை பார்த்து.

மஹா, அதையெல்லாம் பெரிதாக எடுக்காமல் தன் வண்டி எடுத்து வெளியே சென்றான்.

தாராவிடம், ஜனனி புலம்பி தள்ளிவிட்டாள் ‘ம்.. எவ்வளோ பெரிய கத்தி தெரியுமா… நான் பயந்துட்டேன் க்கா… ஏன் க்கா, உங்க வீட்டில் இவன் இல்ல, இவங்க… மட்டும் இப்படி இருக்கார்.. என் அண்ணன்கிட்ட சொல்றேன்’ என பெரியதாக ஒரு புகார் புத்தகமே வாசித்தாள் ஜனனி.

தாரா, எல்லாவற்றுக்கும் பதில் சொல்லி அவளுக்கு உண்பதற்கு கொடுத்து.. “ஏதாவது கொஞ்சம் படி ஜானு, அப்புறம் ஆன்ட்டி கிட்ட நான் கம்ப்ளைன்ட் பண்ண வேண்டி இருக்கும்..” என சற்று மிரட்டவும்தான் புக் எடுத்துக் கொண்டு அமர்ந்தாள் படிக்க.

தாரா, சற்று நேரம் போன் பேசத் தொடங்கினாள்.. தன் வருங்கால கணவருடன்.

ஜெயகுமார் வான்மதி தம்பதியின் மூத்த பெண்  தாரா. அடுத்து மஹாதேவ். ஜெயகுமார் மத்திய வங்கி அதிகாரி, எப்படியும் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மாற்றல் வந்தே தீரும்.. இப்போது சென்னையில் இருக்கிறார். பெண்ணுக்கு வரன் பார்ப்பதால் இந்த இடம் கேட்டு வாங்கிகிக் கொண்டார். வான்மதி துணை தலைமை ஆசிரியர். இன்னும் இரண்டு வருடங்களில் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றிடுவார். மஹாதேவ், பத்து நாளில் இஞ்சினியரிங் படிப்பின், இறுதி வருட பரிட்சை எழுதுகிறான். அத்தோடு மேற்படிப்பிற்காக U.S செல்வதற்காக தயாராகிக் கொண்டிருக்கிறான்.

எனவே, எப்போதும் கல்லூரியில்தான் நிற்பான். இவனுக்கு எல்லா பேராசிரியர்களும் உதவுவர். அவர்களின் வழிகாட்டுதல் படி இப்போது எதோ எக்ஸாம் எழுதிக் கொண்டிருக்கிறான். எனவே, இன்னும் இரண்டு மாதத்தில், அக்காவின் திருமணம் முடிந்து US சென்றிடுவான் மஹாதேவ். ஆக, நல்ல ஒழுக்கமான, திட்டமிட்டு செயல்படும் ஒரு அப்பர் மிடில் கிளாஸ் பாமிலி. 

வான்மதியும், சுகுமாரியும் சேர்ந்து இந்த இடத்தை வாங்கி, ஒன்றாக வீடு கட்டி, ஒரே நேரத்தில் குடிவந்த குடும்பத்தினர். 

வான்மதியின் கணவர்,  ஜெயகுமார் திருமணம் ஆனதிலிருந்து கர்நாடகா.. இல்லை, தெலுங்கு தேசம்.. இதில்தான் வேலை. பேங்க் என்பதால்.. எப்போதும் இடம்மாறி கொண்டே இருந்தார். முதலில் வான்மதிக்கு, மாமியார் உடன் இருப்பார்.. எனவே தன் வேலைக்கு செல்லுவது, வருவது தாராவை பார்ப்பது என இருப்பதால் ஏதும் தெரியாது. 

பின், மஹாதேவ் வர, மாமியார் இல்லாமல் போக.. குடும்பம் பெரிதாக பெரிதாக.. கணவர் அருகில் இல்லாத நிலையில் கொஞ்சம் கஷ்ட்ட்பட்டார் சமாளிக்க. 

அப்போதெல்லாம் சுகுமாரி.. உதவுவார், பள்ளியில். தாராவை தன்னுடன் வீடு அழைத்து வருவார்.. தன் கணவர் மூலம், பிள்ளைகளை பள்ளிக்கு விட செய்வார். அந்த நட்பு.. இப்படி  அருகருகே.. வீடு கட்டிக் கொள்ளும் அளவிற்கு வந்தது. 

சொந்தம் எல்லாம் தேவைக்கு வந்து செல்ல.. எப்போதும் அருகில் இருப்பவர்கள்தான் அவசரத்திற்கு வருவார்கள் என்பது இவர்களுக்கு சரியாக பொருந்தியது.. அழகாக ஒருவரை ஒருவர் தாங்கி நிற்கும் ஒரு பாந்தமான குடும்ப நட்பு இவர்களிடம் வளர தொடங்கியது. அது அப்படியே வளர்ந்துக் கொண்டே இருக்கிறது.

இப்போது, வான்மதியும் சுகுமாரியும் பள்ளியின் சக ஆசிரியர் வீட்டில், ஒரு துக்கம். அங்கே சென்றிருக்கின்றனர். அதனால், ஜனனியை பார்த்துக் கொள்ள, தாராவிடம் சொல்ல.. தாரா வெளியில் இருந்ததால்.. தன் தம்பியிடம் சொன்னாள், அழைத்து வர சொல்லி. அது இப்படி வந்து முடிந்தது.

இப்போது பத்து நிமிடம் சென்று ஜனனி மீண்டும் வந்து, தாராவிடம் “என்ன க்கா, பண்றீங்க” என்றாள்.

தாரா வாயில் மேல் விரல் வைத்து.. பேசிக் கொண்டிருப்பதாக சொல்ல.. ஜனனி ஒன்றும் செய்ய முடியாமல்.. மீண்டும் படிக்க சென்றாள்.

பெண்கள் வருவதற்கு மணி ஒன்பது ஆகும் என்பதால், கார்த்திகேயன், தான் உணவு வாங்கி வருவதாக தாராவிடம் அழைத்து சொல்லி இருந்தார். 

எனவே, ஜனனி அந்த சந்தோஷத்தில் எல்லாவற்றையும் மறந்து.. மீண்டும் இயல்பாக பேசத் தொடங்கினாள். 

கார்த்திகேயன், வர, பிள்ளைகள் மூவரும் தாரா வீட்டிலேயே உண்டனர்.. மஹா, அவளை திரும்பிக் கூட பார்க்கவில்லை. ஜனனியும் எப்போதும் போல.. ‘அக்கா.. பன்னீர் க்ரேவி சூப்பர் க்கா.. எனக்கு கொஞ்சம் ஃப்ரைட் ரைஸ்.. ’ என பேசிக் கொண்டே உண்டாள். 

அந்த வீகென்ட் ஜனனிக்கு, ஹோட்டல் உணவு எல்லாவற்றையும் மறக்க வைத்திருந்தது. நிம்மதியாக உறங்கினாள்.

அடுத்த வாரத்தில் ராகவ், பெங்களூருவிலிருந்து திரும்பி வந்தான். வேலை கிடைத்துவிட்டது ஒரு மென்பொருள் நிறுவனத்தில். நல்ல சம்பளம்.. ஒருமாதம் ட்ரைனிங்.. என ஆஃப்ர் லெட்டர் உடன் வந்தான் சென்னை.

கார்த்திகேயனுக்கும் சுகுமாரிக்கும் சந்தோஷம். வீடு கொண்டாட்டத்திற்கு மாறியது. ஜனனி “அண்ணா, ட்ரீட்.. ட்ரீட்.. எப்போ வெளிய போறோம்.. இந்த அன்னுவல் லீவ்வில் கூட  எங்கயும் போகலை.. ப்ளீஸ் அண்ணா, எங்கையாவது போலாம் அண்ணா” என்றாள்.

உண்மைதான் இவள் மட்டுமே இன்னும் பள்ளி செல்லும் பிள்ளை, மற்ற மூவரும் வாழ்வின் அடுத்த நிலைக்குச் சென்றுவிட்டனர். எனவே இந்த லீவ் அவளிற்கு ரொம்ப போர் ஆகிவிட்டது. எனவே கேட்டுவிட்டாள் எங்கேனும் போகலாம் என.

ஆனால், ராகவ், கொஞ்சம் கறாராக “இல்ல ஜானு, பஸ்ட் மன்த் சாலரி வாங்கிட்டு வந்துதான் எல்லாம். இப்போது எனக்கு நிறைய பர்சேஸ் பண்ணனும்.. ப்ளீஸ் டா.. அங்க ரூம் பார்க்கணும்” என வேலைகளாக அடுக்க.. ஜனனியின் முகம் வாடி போனது.

அதை பார்த்ததும் அண்ணன் “சரி எங்கையாவது போலாம் டா.. ஆனா, ஒரு ஈவ்னிங் மட்டும். நீ ட்டுவெல்த் முடி.. பக்காவா போலாம் ஒரு டூர்.. “ என ஏதேதோ சொல்லி.. அவளை சமாளித்தான்.

அதேபோல.. அண்ணனும் தங்கையும் வார நாளில் மால் சென்று.. விளையாடிவிட்டு, அவளை ஹோட்டலில் உண்ண வைத்து வீடு கூட்டி வந்தான் ராகவ். 

நிரம்ப பொறுப்பானவன் ராகவ். அதை நிருபிப்பது போல, தானே நல்ல வேலை தேடிக் கொண்டான். தங்கைக்கு சேர்க்க வேண்டும் என எண்ணிக் கொண்டான். இந்த வாரத்தின் ஞாயிறு அவன் பெங்களூர் செல்ல வேண்டும்.

தந்தை ‘வருகிறேன்.. எப்படி இருக்கும் தங்குமிடம் எல்லாம் பார்த்து வருகிறேன்’ என்றார். 

ராகவ் “அப்பா, பருங்க.. நான் செட்டில் ஆகிட்டு கூப்பிடுறேன், நீங்க வாங்க.. முதல் ஒருவாரம்.. ஒரு ப்ரெண்ட் ரூமைதான்  ஷேர் பண்றேன். அப்புறம் வரலாம் ப்பா” என்றான் திடமாக.

இதோ கிளம்பிவிட்டான், தன்  தங்கைக்கு, ஆயிரம் முறை.. ‘கொஞ்சமா பேசுடா, நல்லா படி.. நான் வரேன். உனக்கு தான் ஃபஸ்ட் ட்ரீட்..’ என சொல்லி கிளம்பினான். 

ஜனனி லேசாக கலங்கினாள். இருந்தும் பெரிதாக ஏதும் தெரியவில்லை அவளுக்கு.

மஹா, தங்களின் காரில் அவனை சென்ட்ரல் ஸ்டேஷன் ட்ரோப் செய்தான்.

நாட்கள் வேகமாக சென்றது.

ஜனனிக்குதான், வீடு எப்போதும் அமைதியானதாக மாறியது. எப்போதும் அண்ணனுக்கும் அவளுக்கும் சண்டை வரும்.. அவன் நிறைய விட்டுக் கொடுப்பான். சிலசயம் சத்தம் போடுவான். 

இப்போது அதெல்லாம் இல்லை. டிவி ரிமொர்ட்.. ஷோபாவின் கார்னர் சீட்.. விண்டோ அருகில் உள்ள.. ஒரு சின்ன திட்டில் அமர்ந்து பாட்டு கேட்பது, எனக்குதான்  முதலில்.. என தோசை சாப்பிடுவது.. இப்படி  எல்லாம் அவள் உரிமையாகியது. யாரும் பங்கு கேட்டு சண்டை போட வரவில்லை. அதெல்லாம் ஒருமாதிரி ப்போராக இருந்தது பெண்ணுக்கு.

அதனாலோ என்னமோ படிப்பை அதிகம் நாடினாள்.. சிறு வயதிலிருந்தே.. மருத்துவம் மருத்துவம் என பெற்றோர் சொல்லிக் கொண்டே இருப்பர். அதனாலோ என்னமோ ஃபஸ்ட் குரூப் எடுத்திருந்தாள். முட்டி மோதித்தான் படிப்பாள். எப்படியும் நல்ல பெர்சென்ஸ்டேஜ் இருக்கும். இப்போது இன்னும் படித்தாள் எனலாம்.

ஜெயகுமார் வான்மதி தம்பதிகள், பத்திரிகை வைக்க, மண்டபம் பார்க்க என பிஸியாக இருக்க.. தாரா எப்போதும் வீட்டில் இருப்பாள். டியூஷன் இப்போது எடுப்பதில்லை. எனவே தனியாக இருப்பாள் என ஜனனி வருவாள் அவளுக்கு துணையாக. 

ஜனனி, பள்ளி விட்டு வந்து குளித்து, அங்கே வந்தாள்.. இரவுதான் வருவாள் வீட்டிற்கு. அதனால் முன்பை விட இப்போது மஹாவின் கண்ணில் அதிகமாக படுகிறாள். 

மேலும், தாரா ஏதாவது மேட்சிங் வளையல், தோடு.. என எது வாங்கினாலும்.. இவளுக்கும் ஏதாவது ஒன்று இருக்கும். அதை ஜானு பள்ளி விட்டு வந்தவுடன் காட்டுவாள்.. கொடுப்பாள்.. ஜானு “ஐயோ, சூப்பர் க்கா” என்பாள்.

தாரா, தினமும் சமையல் கற்கிறேன் என ஜானுவிற்கு ஏதேதோ செய்து கொடுப்பாள்.. அங்கேதான் மஹா இருப்பான் அவனுக்கு முதலில் வராது. ஜானு டேஸ்ட் செய்த பிறகுதான் இவனுக்கு வரும்.

முதலில் ஜானுக்குதான் கொடுப்பாள் தாரா. மஹா ஏதாவது கேட்டால் ‘இரு டா, அவதான் சரியா சொல்லுவா.. உப்பு சரியா இருக்கான்னு’ என அவளுக்குத்தான் முதல்படி.

ஜானுவும்.. தாரா எது கொடுத்தாலும் “சூப்பர்..க்கா, செம.. கொஞ்சம் காரம் கம்மி” என பாராட்டி, சப்பு கொட்டி உண்பாள். ஆக கல்யாண வீடு இவர்களால் நிறைந்து இருந்தது.

இதெல்லாம் பார்க்க, எக்ஸாம்க்கு படித்துக் கொண்டிருக்கும் மஹாவிற்கு, எரிச்சலாக வந்தது. முன்பும் இப்படிதான் இவர்கள். ஆனால், அப்போதெல்லாம் இவன் வீட்டில் இப்படி இருந்ததில்லை.. கல்லூரிதான் கதியென இருப்பான், பாய்ஸ் ஹோஸ்டலில் இருப்பான், இரவுதான் வீடு வருவான். வீட்டில் இருந்தால் தன்னறையில்தான் இருப்பான் அமைதியாக.

ஒருநாள் பொறுக்க முடியாமல் மஹா “தாரா.. எனக்கு படிக்கணும்.. இப்படி இரண்டு பேரும் கத்தினா, நான் எப்பிடி படிக்கிறது..” என்றான்.

தாரா “உன் ரூம் மேலதானே .. நீ அங்க போ..” என்றாள் அலட்டாமல்.

அது ஏனோ மஹாவிற்கு கோவத்தை கொடுக்க “எல்லாம் இவளாலதான்” என்றபடி, அவளை முடிந்த மட்டும் முறைத்துக் கொண்டே, தன்னறைக்கு மேலே சென்றான்.

ஜனனி, அமைதியாக படிக்க தொடங்கினாள்.

அந்த நாட்களுக்கு பின், ஜனனி, வருவாள்.. ஒருமணி இருந்துவிட்டு.. தன் வீட்டுக்கு சென்றுவிடுவாள். அவளின் அன்னை கூட கேட்டதற்கு ‘இல்லை, நிறைய படிக்கணும்.. அதான்’ என்றுவிட்டாள்.

மஹா இப்போதுதான் கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தான். அவளின் சிரிப்பு, பேசும் சத்தம்.. இதெல்லாம் அவனை கொஞ்சம் சலனப்படுத்தி இருந்தது. கவனம் சிதறாமல் அமர்ந்த இடத்திலேயே ஒரு நான்கு மணி நேரம் படிப்பான். இந்த பத்து நாளாக.. சட் சட்டென கவனம் சிதறவும் கொஞ்சம் எரிச்சலாக உணர்ந்தான். அதற்கு அவளின் இருப்புதான் காரணம் என சரியாக உணர்ந்து.. கொஞ்சம் அவளை தள்ளி வைத்தான்.. உணமையாகவே புத்திசாலிதான்.

இப்போது நிம்மதியாக படித்தான் எனலாம்.

நாட்கள் ஆக ஆக, ஜனனி அதிகம் வரவில்லை. வருவாள்.. ‘தாரா க்கா..’ என அழைத்து பத்து நிமிடம் பேசி செல்லுவாள்.

ஆனாலும் மஹாக்கு, அவளின் அழைப்பு எப்படியும் கேட்டுவிடும்.. கண்டிப்பாக கீழே இருங்கி வருவான்.. இல்லை, அமைதியாக அமர்ந்திருப்பான். என்னவென தெரியாது.. அவனால், அங்கே அமர முடியாது, புக்கில் கண் பதியாது.. அதைவிட மனம்.. அவளின் நடமாட்டத்தை.. இங்கிருந்தே கணிக்கும். ‘வேண்டாம்.. போ..’ என தனக்கு தானே சொல்லிக் கொள்வான். அந்த நேரத்தில் கொஞ்சம் கொஞ்சம் தடுமாறி விடுவான்.

அவள் சத்தம் இல்லாத பிறகுதான் மனம் சமன்படும்.. மீண்டும் பாடம் புத்தியில் ஏறும்.

“வேண்டாம் வேண்டாம் என்று 

விலகி நின்றால்…

வேண்டும் வேண்டும் 

என்று  துள்ளும்..”

Advertisement