Advertisement

ஆனால், மஹாவின் கண்களுக்கு, அவளை காணாமல் இருக்கும் சக்தி இல்லையே.. எனவே கண்டுக் கொண்டான் கடந்தவளை “ஹேய்.. ஜானு,” என சொல்லி அழைத்தான்.

ஜனனிக்கு உண்மையாகவே பிடித்திருந்தது இந்த நொடி.. ‘கூப்பிட்டான் பாரு..’ என ஒரு வெட்டி பெருமை வந்த ஒட்டிக் கொண்டது சட்டென. பிறந்தநாள் விழாவில் பார்த்தது முதல், அவன் குறித்து ஒரு பரவசம் வந்தது.. அவளுள். என்னதான் குழப்பம் இருந்தாலும்.. மெல்லிய பூவாசம் போல அவனின் வாசம் அவளிடம் இருந்துக் கொண்டே இருந்தது. இங்கே, அப்போதுதான் பார்ப்பது போல “ஹாய் மஹா” என்றாள் சிரித்த முகமாக ஜானு.

மஹா “என்ன, இங்க இப்போ..“ என்றான்.. அப்போதுதான் அவளின் உடையை கவனித்தான்.. ஒரு லெகின், லூஸ் டாப் அணிந்திருந்தாள், அதை பார்த்து அவனே “ஓ… ஜும்பாவா.. இப்போதான் முடிஞ்சதா” என்றான் இயல்பானக் குரலில்.

ஜனனியும், அவனின் அலைவரிசையை பற்றிக் கொண்டவளாக.. “இல்ல, கொஞ்சம் பேசிட்டு வந்தேன், அதான் லேட்.. நீங்க, எங்க இங்க” என்றாள் மலர்ந்த முகமாக..

அவனும் காரணம் சொன்னான்.. பின் மஹா “வா, ஏதாவது குடிக்கலாம்” என அந்த வளாகத்திலேயே இருந்த ஒரு பழமுதிர் நிலையம் அழைத்தான் மஹா. ஜனனிக்கு மறுக்க முடியவில்லை.. கூடவே சென்றாள்.

‘என்ன வேண்டும்’ என கேட்டு.. ஆர்டர் செய்தான். சர்க்கரையில்லா இரண்டு கேரட் சாறு வாங்கிக் கொண்டனர். அந்த பேப்பர் கப்போடு வெளியே வந்தனர்.. வண்டிகள் வருவதும் போவதுமாக அந்த வளாகம் பரபரப்பாக இருந்தது. சற்று தள்ளி இருந்த பார்க்கில், இரவு நேரம் வாக்கிங் என பெரியவர்களும், நடுவயது மனிதர்களும் நடந்துக் கொண்டிருந்தனர். அதை வேடிக்கை பார்த்தபடியே அந்த கடையின் பின் பக்கம் நின்றுக் கொண்டு அந்த கேரட் சாரை பருகிக் கொண்டிருந்தனர், இருவரும். ஜனனி மனதில் இப்போது எந்த குழப்பமும் இல்லை.. நிர்மலமாக இருந்தது. ஏனோ அவன் தொலைவில் இருக்கும் போது அல்லாடும் அவளின் மனது இப்போது, அவனருகில் நிற்கும் போது.. எந்த குழப்பமும் இல்லாமல் இருந்தது. எதையும் யோசிக்கவில்லை அவள்.. ‘அவனோடான நிமிடம் எப்படி இருக்கும்’ என தன்னுள்.. நிரப்பிக் கொண்டிருந்தாள்.

மஹா “ப்பா.. ஒரு பக்கத்து வீட்டு பெண்ணை தனியா மீட் பன்னனும்ன்ற கனவு.. எத்தனை வருஷம் கழிச்சி, நிஜமாகியிருக்கு..  ச்சீயர்ஸ்…” என்றான் தன் கோப்பையை அவள் கோப்பையுடன் தட்டி.

ஜனனி, அகத்திலிருந்து புன்னகைத்தாள்.. ‘அப்படியா காத்திருந்தான்’ என்ற கேள்வி எழுந்தது, அதுவும் இதமாக இருந்தது.. அவனிடம் என்ன பதில் சொல்லுவது என தெரியாமல் நின்றாள்.. மீண்டும் மஹா “ம்.. படிப்பு எப்படி போகுது” என்றான்.

ஜனனி “ம்.. ம்…” என்றாள். லேசாக ஒரு சிப் ஜூஸ் பருகினாள்.  மனமும் கண்ணும் அவனை மெல்ல ஆராய்ந்தது.. நெடு நெடு உயரம் என இல்லை.. ஆனால், அவன் முகத்தை பார்க்க இவள் சற்று நிமிர வேண்டும்.. நல்ல திடகாத்ரமான உடல்வாகு.. ஜிம்க்கு போவானோ.. என அவளுள் ஓடியது.. இப்போது லேசான அவனின் இரண்டு வார தாடியும் மீசையும்.. ஒழுங்கில்லாமல் அவளை கொஞ்சம் ஈர்த்தது.. ஒரு கையில் ஜூஸ்சும்.. ஒரு கையை தன்னுடைய இடுப்பிலும் வைத்துக் கொண்டு, அவளின் கண் பார்த்து பேசிக் கொண்டிருந்தான்.

“உன்போன்ற இளைஞசனை

மனம் ஏற்காமல் மறுப்பதே பிழை..

கண்டேன் உன் அலாதி தூய்மையை..

கண் பார்த்து பேசும் பேராண்மையை” என ஷாஷா திருபதி அவளுள்ளே  பாடிக் கொண்டிருந்தாள்.

அவனின் பெர்ப்ஃயூம் வாசம், அவனுக்கும் தனக்குமான தூரத்தை, சொல்லிக் கொண்டே இருந்தது அவளுள். அவளோடு நெருக்கமாக நின்றான்.. அவளும் அதனை எண்ணிக் கொண்டுதான் இருக்கிறாள்.. ‘இவ்வளவு நெருக்கத்தில் மஹாவா.. அவனை நான் இதுவரை அனுமதிக்கிறேனா.. நான் முழு சுயனலமானவள் தானா’ என எதோ நெருட.. சரியாக மஹா பேசினான்.

மஹா, அமைதியானக் குரலில் “இன்னிக்குதான் சித்தப்பா வீட்டில் பேசிட்டு வந்தோம்” என்றான்.

ஜனனி “எ.. என்ன பேசினீங்க” என்றாள்.

மஹா “நம்ம விஷயம்தான்.” என்றான் அவளை நேர் பார்வையாக பார்த்துக் கொண்டு.

ஜனனி லேசாக தலையை தாழ்த்திக் கொண்டாள். மஹா அதை பார்த்துக் கொண்டே கொஞ்சம் பெருமிதமாக “மத்த பெண்ணெல்லாம் வேண்டாம், ஜனனி.. ஜனனின்னு.. ஒருத்தியை எனக்கு பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டு வந்தேன்” என்றான்.

ஜனனி சற்று அமைதியாகவே நின்றாள்.. இப்போது மீண்டும் அவளின் குழப்பமெல்லாம் மனக்கண்ணில் வந்தது.

மஹா தொடர்ந்தான் “சித்திக்குதான் கோவம்.. சித்தப்பா ஒகே சொல்லிட்டார்” என்றான் கொஞ்சம் சந்தோஷமாக.

ஜனனிக்கு அவனின் இந்த வார்த்தை.. அவளுள் இருந்த குற்றயுணர்ச்சியை விசிறிவிட்டது போல  “இ.. இது தேவையா மஹா, எதுக்கு இத்தனை கஷ்ட்டப்படுறீங்க.. அப்படி என்ன ஸ்பெஷல் நான்.. சொல்ல போனால்.. நா.. உங்களுக்கு கொஞ்சம் கூட மேட்ச் இல்லை, நான் ஒரு.. எப்படி சொல்றது..” என தடுமாறி கேட்க..

மஹா “ம்.. டிவோசி அவ்வளவுதானே.” என்றான்.

ஜனனி, தன் கையிலிருந்த பேப்பர் கப்பையே பார்த்தாள். ‘அதுதானே உண்மை.. எது எப்படி இருந்தாலும்.. அந்த வார்த்தைதானே உண்மை’ என தோன்றியது.

மஹா ஜூஸ் பருகி முடித்து.. “அவ்வளவுதான் ஜானு” என்றான்.

ஜனனி “மஹா, அவ்வளோ ஈசி இல்ல மஹா, நீ ரொம்ப கஷ்ட்டபடுவ.. எனக்கு பயமா இருக்கு.. உன்னை சரியா என்னால் புரிஞ்சிக்க  முடியுமான்னு தெரியலை.. அதை யோசிக்க யோசிக்க.. எ.. எனக்கு உன்மேல… எந்த பீலிங்கும் வரமாட்டேங்குது.. என்னை இப்படியே விட்டுட்டேன் மஹா..” என்றாள், பொய்யும் மெய்யும் கலந்த சொல்லி.

மஹா, முகம் சற்று காட்டம் கொண்டது.. அந்த பேப்பர் கப்பை தூக்கி குப்பை தொட்டியில் போட்டு விட்டு அவளின் அருகில் நெருங்கி நின்றான்.. ஜனனி, அதை உணர்ந்து பின் நகர.. அவளின் கை பிடித்துக் கொண்டான்.. “உனக்கு நடந்த கல்யாணம் இருக்குல்ல கல்யாணம், அதுக்கு முன்னாடியே உன்னை நேசித்தவன்  நான். புரியுதா.. ஏன்! உனக்கு தெரியாது.. நான் us போகும் போது உன்கிட்ட பேசனும்ன்னு நினைச்சது உனக்கு தெரியாது” என்றான் கடும் கோவமாக பற்களுக்கு இடையே வார்த்தையை கடித்துதான் துப்பினான் எனலாம்.

ஜனனி அப்படியே பார்த்திருந்தாள், அவளின் கைகள் அவனின் வார்த்தையில் ‘இந்த கல்யாணத்திற்கு முன்னேயே’ என்ற வார்த்தையில் நடுங்கியது.. அதில் அவளின் கையை விட்டவன், விளக்கம் சொல்லும் வகையில் “அதைவிடு.. முதல் தடவ உனக்கு ஒரு மெசேஜ் அனுப்பினேன்னில்ல.. அப்படிதான் இருந்தேன்.. உனக்கு கல்யாணம் அகிடுச்சின்னு தெரிஞ்ச்சதும்.. உன்னை மாதிரி பொண்ணு வேனும்ன்னுதான் இருந்தேன்…” என்றான் தன் தலையை கோதிக் கொண்டே.

ஜனனி “போதும் மஹா, எனக்கு அதுதான் பயமா இருக்கு. நான் அவ்வளவு ஸ்பெஷல் இல்லையே… நா… நான் என்னை பத்தி சொல்றேன்.. நீ கரெக்ட் தான். ஆனா, எனக்குதான் சங்கடம்ன்னு சொல்றேன்..” என்றாள் அவளும் கோவமாக நடந்துக் கொண்டே.

மஹா, பின்னாடியே சென்றான் அப்போது அவனின் போன் ஒலித்தது.. “ஜானு நில்லு” என்றான், அவளும் நின்றாள். மஹா “இரு.. லாப்டாப் வாங்கிட்டு வரேன்” என்றான்.

மஹா, அந்த வளாகத்தின் ஆரம்பம் வரை சென்று.. தன் சக ஊழியரிடம் தன்னுடைய மடிகணினியை வாங்கிக் கொண்டு வந்தான். ஜனனி அதுவரை நடை பயின்றுக் கொண்டிருந்தாள்.

மஹா “போலாம் வா..” என்றான்.

இருவரும் லிப்ட் நோக்கி நடந்தனர். லிப்டில் ஆட்கள் இருந்ததால்.. ஏதும் பேசவில்லை இருவரும். மஹா தன் ப்லோரில் இறங்கும் போது “பத்து நிமிஷத்தில் கால் பண்றேன்” என்றவன், விடைபெற்று சென்றான்.

ஜனனி வீடு வந்தாள். கார்த்திகேயன் “ஏன்ம்மா, இவ்வளோ லேட்“ என்றார்.

ஜனனிக்கு, என்ன சொல்லுவது ‘மஹாவை பற்றி இன்னும் வீட்டில் தெரியாது’ என எண்ணி.. “இல்ல ப்பா, ப்ரெண்ட்ஸ் கூட பேசிட்டு இருந்தேன்” என்றாள்.

தந்தை “என்ன ம்மா, எக்ஸாம் எழுதுவியா.. படிக்கிறியா” என்றார்.

ஜனனி “ம், இன்னும் ஒரு மாசத்துக்கு மேல இருக்கு ப்பா, படிச்சிட்டு இருக்கேன்.. எழுதிடுவேன்” என்றாள்.

கார்த்திகேயன் ஹாலில் அமர்ந்து நியூஸ் பார்க்க தொடங்கினார். தேஜு வந்து அமர்ந்துக் கொண்டாள், தாத்தாவின் அருகில்.

ஜனனி தன் அறைக்கு சென்றாள். குளித்து முடித்து.. காயத்ரி அழைக்க உணவு உண்டு வந்தாள். அதற்குள் மஹா நான்கு முறை அழைத்துவிட்டான்.

தன் அறையில் வந்து பார்த்தவளுக்கு, மஹாவின் அழைப்பு தெரிய, திரும்ப அழைக்க மனம் முரண்டியது. தந்தை வேறு ‘படிக்கிறியா..’ என கேட்டது குற்றயுணர்ச்சியை தூண்ட.. அமைதியாக போனை சைலெண்டில் போட்டு அமர்ந்துக் கொண்டாள், புத்தகம் எடுத்து.

என்னதான் மஹாவின் மீதானக் காதல் காலம்போன கடைசியில் வந்தாலும்.. அவளை படிக்க விடாமல் படுத்தி எடுத்து.. அந்த ஒருமணி நேரத்தில், ஏதேதோ யோசனை.. அவளுக்கு. கொஞ்சம் படிப்பும்.. கொஞ்சம் மஹாவுமாக நேரம் சென்றது.

மஹாக்கு, ‘இதென்ன புது குழப்பம்’ எனதான் எண்ணம். மேலும் ‘என்னை கண்டு என்ன பயம்’ எனவும் எண்ணம். அவள் வாய்திறந்து பேசவும்தான் மஹாவிற்கான கேள்விகள் தொடங்கியது. ‘

மஹாக்கு, அவள் பேசியது.. என்னமோ குழப்பத்தை கொடுத்திருந்தது.. ‘முடிஞ்சி போன விஷயத்திலிருந்து வெளியே வரவே மாட்டாளா’ என எண்ணிக் கொண்டே, இத்தனை நேரம் அவள் எடுக்காததும், அவளின் முந்தைய பேச்சுகளும்.. மனதில் ஓட அவளுக்கு மெசேஜ் செய்தான் “என்ன பயம் என் மேல்.. ஏதாவது முழுசா சொல்லு, இல்லை, என்னை சொல்ல விடு” என அனுப்பினான்.

ஜனனியின் போன் இப்போது மெசேஜ் வந்த ஒலி எழுப்பியது. ஜனனி படிப்பில் கவனமாக இருந்தாள்.. மேலும், மஹா செய்தி அனுப்புவான் என அவளுக்கு தோன்றவில்லை. எனவே கவனிக்காமல் படித்துக் கொண்டிருந்தாள்.

மஹா, காத்திருந்து ‘தூங்கிட்டா.. போல’ என எண்ணிக் கொண்டே படுத்தான்.. அவளின் குழப்பமான முகம்தான் நினைவு வந்தது.. முயன்று, சற்று நேரத்திற்கு முன் அவள் தன்னை ஆராய்ந்த அந்த ஓர பார்வையை.. மனதில் கொண்டு வந்தான் ‘எதோ தயக்கம்.. பேசிக்கலாம்’ என தனக்குள் சொல்லிக் கொண்டே உறங்கினான் மஹா.

Advertisement