Advertisement

மரகத மழையாய் நீ!..

19

 

சூரி வந்தான் இப்போதுதான்.

மஹா, வாசலிலேயே மெய்மறந்து நின்றிருந்தான். சூரி பின்னிலிருந்து “பே..” என கத்தியபடியே அவனை நெருங்க.. லேசாக தூக்கி வாரி போட திரும்பினான் மஹா.

சூரி “ப்ரோ, என்ன கனவா” என்றான்.

மஹா, பதில் சொல்லாமல் சிரித்தான். பின் ”என்ன பாஸ் லேட்.. வாங்க” என சொல்லி இருவரும் உள்ளே சென்றனர்.

சூரி, அர்ச்சனாவோடு சேர்ந்து குழந்தைக்கு வாழ்த்து சொன்னான்.. ராகவ் “ஏன் சூரி, இவ்வளோ லேட்” என கேட்க.

சூரி “கொஞ்சம் ட்ராபிக், வீட்டுக்கு வந்து குளிச்சி வர லேட் அண்ணா..” என்றான். அத்தோடு “ண்ணா, இன்னிக்கு கண்டிப்பா பார்ட்டி வேணும்.. ரொம்ப நாள் ஆச்சு..” என்றான் சத்தமில்லா குரலில்.

ராகவ், தேஜுவை கண் காட்டி “டேய்… பாப்பாவ  வைச்சிகிட்டு..” என கடிந்தான்.

அர்ச்சனா, பெரிய டெட்டி பொம்மை வாங்கி இருந்தாள். அதை அப்போதே கொடுத்துவிட்டாள் குழந்தையிடம். இப்போது கணவன் மனைவி இருவரும் குழந்தையோடு செல்பி எடுத்துக் கொண்டனர்.

ஜனனி, அவன் கையில் கேக் கொண்டு வந்து கொடுத்தாள் “வா சூரி” என்றபடி.

சூரி, அதை வாங்கியபடியே அவளோடு நடந்துக் கொண்டே கிட்சென் சென்றான்.. சூரி “என்ன, மஹா ப்ரோ வந்திருக்கார்… “ என்றான்.

ஜனனி “ம்… அதுகென்ன” என்றாள்.

அதற்குள் காயத்ரி வந்தாள் “சூரி, இந்தா ஜூஸ்.. இன்னிக்கு புல்லா உன் ப்ரெண்ட் செம மூட்டில் இருந்தாள். எல்லாருகிட்டயும் பேசினா.. சிரிச்சா.. எப்போதும் உள்ள போய் உட்காருவா, இன்னிக்கு சகஜமா இருந்தா.. அதனால, எதோ வேலை செய்யுது.. ம், ம்.. அது என்னான்னு உனக்கு தெரியுமா” என்றாள் கிண்டலா குரலில்.

ஜனனி “காய்… இப்போ என்ன, ரூமுக்கு போய்டவா” என்றாள் கிண்டலாக.

காயத்ரி “ம்.. போய்தான் பாரேன், அப்புறம் நானும்.. போறேன்” என்றாள், செல்ல கோவமாக. பின் “எதோ சந்தோஷம், ரொம்பநாள் கழிச்சி உன்னை இப்படி பார்க்கவும், அதான் ஆசையா சொல்லிட்டு இருந்தேன்.. சூரிகிட்ட. பிடிக்கலைன்னா, விடு” என்றாள் கோவமாக.

ஜனனி, பதறியவளாக  “ச்சு, அண்ணி, அப்படி இல்லை அண்ணி… நான் எதோ நீங்க புதுசா சொல்லாவும் சொன்னேன். விடுங்க.. நீங்க சந்தோஷப்படுங்க.. எனக்கு ஒன்னும் பிரச்சனையில்லை.. தனியா கூட போய் சிரிச்சிட்டு வாங்க.. நான் லூசுன்னு யாரும் சொல்லாம பார்த்துக்கிறேன்” என்றாள் முடிக்கும் போது கிண்டலாக.

காயத்ரி “அஹ.. ஹா… அப்படி வா வழிக்கு, நான் லூசு.. என் நாத்தனாரும் லூசு.. சூப்பர் சூப்பர்” என்றாள் கிண்டாலாக.

ஜனனி “ஓகே ஒகே.. நீங்க லூசுன்னு சொன்னா, நானும் ஒகேதான்” என்றாள் விட்டுக் கொடுத்து.

சூரிக்கு இந்த பேச்சு பிடித்திருந்தது.. சூரி “ஆமாம், இப்போ.. என்னையும் லூசுன்னு தானே சொல்லுவாங்க” என்றான். மூவரும் சிரித்தனர்.

பின், காயத்ரியும் சூரியும் சத்தமில்லாமல் ஹாலுக்கு வந்தனர். விழா இன்பமாக நடந்தது. சின்ன பிள்ளைகளோடு, தேஜுவை புகைப்படம் எடுத்தனர். காயத்ரி அவர்களோடு பேசவே நேரம் சரியாக இருந்தது.

ஜனனி, மதியின் அருகே வந்து நின்றாள்.. மதியும் எதோ கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்.. ‘எப்போ எக்ஸாம்’ என்றார்.

ஜனனி பதில் சொன்னாள். மதி ‘கவனமா படி.. எதற்காகவும் படிப்பை விட்டுடாதே’ என்றார். ஜனனி தலையசைத்தாள். இன்னும் எதோ பொதுவாகவே மதி பேசினார். அதை கொண்டு மதியின் மனதை படிக்க முடியவில்லை ஜனனியால். ஏற்கனவே குழப்பத்தில் இருந்தவள் இன்னும் குழம்பினாள் மதியின் பேச்சால்.

எது எப்படியோ, மஹா ஒவ்வொரு முறை போன் பேசி வீட்டுக்குள் வரும் போதும், கண்கள் அனிச்சையாய் ஜனனியை தேடியது. அதை ஜனனியும் கண்டுக் கொண்டாள்.. அதில் அவளுக்கும் ஒரு பிடித்தம் வந்தது.

நேரம் சென்றது.

குழந்தைகள் பெற்றொரு எல்லோரும் கிளம்ப வீடு தன் மனிதர்களோடு நின்றது. மதியும், எல்லோரிடமும் விடைபெற்று கார்த்திகேயனிடம் வந்தார் “தம்பி.. வரேங்க” என்றார் என்றும் இல்லாமல் இன்று உறவு சொல்லி அழைத்து விடைபெற்றார். கார்த்திகேயனும் அதிர்ந்து பார்த்தார் பின் விடை கொடுத்தார். கிளம்பிவிட்டார் மதி.

சூரி, மஹாவை பிடித்து வைத்திருந்தான். “இருங்க, இன்னிக்கு ராகவ் அண்ணாவோட ட்ரீட்.. நீங்களும் வரீங்க… இன்னிக்குதான் நம்ம கேர்ள்ஸ் கேள்வியே கேட்கமாட்டாங்க.. மிஸ் பண்ண கூடாது.. இருங்க” என பிடித்து வைத்திருந்தான் சூரி. அதனால் சூரியும் மஹாவும் அங்கேயே இருந்தனர்.

ராகவ், மச்சான் இல்லாமல் எப்படி பார்ட்டி வைப்பான் அதனால், காயத்ரி தம்பி இங்கே இருந்துக் கொண்டார். ம்.. காயத்ரி, தன் தம்பியின் குடும்பத்தை ‘இங்கே ஒருநாள் தங்கிட்டு  போடா’ என சொன்னதால்.. அவர்கள் இங்கே தங்கினர். காயத்ரியின் பெற்றோர் மட்டும் கிளம்பினர்.

மணி ஒன்பது.. வீடு, இவர்களின் பிடியில் வந்துவிட்டது. மஹா, காயத்ரி,  தம்பி பெண்டாட்டி இருவரும் பிள்ளைகளுக்கு உணவு கொடுத்து உறங்க வைக்க சென்றனர்.

ஜனனி ஆண்களை உண்ண அழைக்க, ராகவ் “ஜானு, நீங்க சாப்பிட்டு படுங்க.. நாங்க அப்புறம் சாப்பிட்டுக்கிறோம், அண்ணிகிட்ட சொல்லிடு” என சொல்லி எதோ பெரிய அட்டை பெட்டியோடு அவன் சென்றான். சூரி, எதோ ஸ்னாக்ஸ் வகைகள் எடுத்துக் கொண்டிருந்தான். மஹாவும், காயத்ரியின் தம்பியும் சத்தமில்லாமல் சென்றனர்.

ஜனனி, தலையில் அடித்துக் கொண்டாள்.. எல்லாவற்றையும் பற்றி புரிந்ததால், ஒன்றும் சொல்லாமல், தன் தந்தையின் அறைக்கு சென்றாள்.. அவரை உண்பதற்கு அழைக்க. தந்தை மகள் இருவரும் உண்டு உறங்க சென்றனர்.

ஜனனிக்கு, மஹாவே நிறைந்து இருந்தான்.. படிக்க தோன்றவில்லை, நேற்று எதோ குறிப்பு எடுத்து வைத்திருந்தாள்.. அதை இன்று பார்க்க வேண்டும் என எண்ணி இருந்தாள், ஆனால், இன்று எதுவும் தோன்றவில்லை. அப்படியே ஒரு மயக்கம்.. ஆனாலும் மனதின் ஓரத்தில் ஒரு குழப்பம்.. ‘என்ன இருந்தாலும் நான் செகண்ட்தானே.. அவனுக்கு, நான் வேண்டாமே’ என ஒரு குழப்பம் ஓடிக் கொண்டே இருக்கிறது அவளுள். அது அவளை உருத்தத் தொடங்கியது ‘சுயநலமாவா இருக்கிறேன் நான்’ என எண்ணம் எழுந்தது. என்னமோ ஜனனி, தெளிந்து குழம்பி.. தெளிந்து குழம்பி.. என தனக்கு தானே உழன்றுக் கொண்டிருந்தாள்.

அப்படியே இரண்டு நாட்கள் சென்றது.

மஹா, ஜனனிக்கு எந்த அழைப்பும் விடுக்கவில்லை. அவனுக்கு, தன் சித்தப்பாவிடம் பேச வேண்டி இருந்தது.. எனவே அதில் கவனம் வைத்தான். தேஜு பிறந்தநாள் விழாவை கொண்டு.. அன்று செல்லவில்லை. மறுநாள், மஹாக்கு  வேலை, அதனால் இன்றுதான் தன் அன்னையோடு சித்தப்பா வீடு வந்தான்.

மதி, தயங்கியது போல, அவனின் சித்திக்கு நிறைய கோவம்.. அவனின் சித்தி ‘முன்னாடியே சொல்லி இருக்கலாமில்ல, என் தம்பி வீட்டில், உன்னை வரனா சொல்லி இருக்கவே மாட்டேனே.. அவங்க மனசில் எதிர்பார்ப்பை கொண்டு வந்து.. ச்சு…’ என எழுந்து சென்றுவிட்டார்.

மதிக்கு, முதலில் கொஞ்சம் வருத்தம்.. ஆனால், எழுந்து சென்றதும்.. கோவம் வந்தது.. ‘என்ன இப்போ, ஜாதகம்தானே பார்த்திருக்கு.. இன்னும் பேச்சு வார்த்தை கூட ஆரம்பிக்கலை.. அதுக்குள்ள.. என்ன ஆகிபோச்சுன்னு, இப்படி போறா’ என தோன்ற.. தன் கொழுந்தனாரிடம் மதி லேசாக வருத்தப்பட்டார்.

பாவம் மஹாவின் சித்தப்பாதான், சமாளித்து, தன் அண்ணி மதியை ஆசுவாசப்படுத்தினார். மஹா ‘என்ன சித்தப்பா, சித்திகிட்ட சொல்லுங்க.. இன்னும்  யோசிக்க சொல்லுங்க.. நீங்கதான் எனக்கு எல்லாம் செய்யணும்..’ என்றான் அவரை விட்டுக் கொடுக்காமல்.

சித்தப்பா ‘வருவா டா, இரண்டுநாள் போகட்டும்.. நீ வந்து இன்னொருதரம் பேசு, சரியாகிடுவா..’ என யோசனை சொல்லி அனுப்பி வைத்தார்.

கிளம்பும் நேரத்திற்கு, வெளியே வந்தார் மஹாவின் சித்தி “சாப்பிட்டு போங்க” என்றார். மதிக்கு இன்னும் கோவம் தீரவில்லை “இல்ல, இரண்டு நாள் கழிச்சி வரேன்” என சொல்லி வெளியே வந்துவிட்டார்.

மஹாதான் ஒரு சாரி கேட்டு.. விடைபெற்று வந்து காரெடுத்தான்.

மஹா, தன் அன்னையை சமாதானப்படுத்தினான் “ஏன் ம்மா, டென்ஷன் ஆகுற.. விடு, நான் சமாளிக்கிறேன்.. நீ அமைதியா இரு.. பேசிக்கலாம்..” என பேசிக் கொண்டே இருந்தான் வரும் வழி நெடுகிலும்.

வீடு வரவும்.. அன்னையை  வீட்டிற்கு அனுப்பிவிட்டு, இவன் கீழேயே காத்திருந்தான், தன் லேப்டாப் வாங்குவதற்காக. இன்று அலுவலகத்திலிருந்து நேரே சித்தப்பா வீட்டிற்கு சென்றவன் சீக்கிரம் அலுவலகம் வந்துவிடுவோம் என எண்ணி லேப்டாப் எடுக்கவில்லை. லேட் ஆகிவிட்டது. எனவே அலுவலக ஊழியர் பக்கத்தில் இருப்பவர் எடுத்து வருவதால்.. அதை வாங்க காத்திருந்தான்.

ஜனனி, அப்போதுதான் ஜும்பா முடித்துவிட்டு, வந்துக் கொண்டிருந்தாள். லிப்ட் போகும் வழியில் இவனை பார்த்துவிட்டு, அழைப்பதா.. வேண்டாமா என எண்ணம். அருகில் செல்ல, இயல்பாக எதோ ஒன்று அவளை தடுத்து.. லேசாக தயங்கியபடியே அவனை கடந்தாள்.

Advertisement