Advertisement

ராகவ், ஹாலை சுற்றி ஒரு பார்வை பார்த்துவிட்டு, தங்களின் அறைக்கு செல்ல, அங்கு குழந்தைகள் இருவரும், காயத்ரியின் தம்பி மனைவியும் உறங்கிக் கொண்டிருந்தனர். 

காயத்ரி, கபோர்ட் திறந்து எதோ குடைந்துக் கொண்டிருந்தாள்.  பார்த்த ராகவ், சத்தமில்லாமல் வந்து, விட்ட வேலையை தொடர்ந்தான்.

அரைமணி நேரத்திற்கு மேலாகியும் வெளியே வரவில்லை காயத்ரி.

ராகவ்க்கு, அவனின் மாமியார் வந்து காபி கொடுத்தார். அந்த நேரம்தான் மஹா வந்தான்.

ராகவ் “வா மஹா” என வரவேற்று “ஜானு சொன்னா.. நான்தான் போகலாம்ன்னு இருந்தேன், நீயே போறேன்னு சொல்லிட்டா.. ஜானு. இரு காபி குடிக்கலாம்” என சொல்லி “காயத்ரி” என அழைத்தான் சத்தமாக.

இவன் சத்தம் கேட்டு குழந்தைகள் எழும் என எண்ணி வெளியே வந்தாள் அவனின் மனையாள். பார்த்தால், மஹா வந்திருந்தான். கணவனை ஒரு பார்வை நக்கலாக பார்த்துவிட்டு “வாங்க மஹா” என்றாள்.

ராகவ் “காபி கொடு, காயத்ரி” என்றான்.

மனையாள் திரும்பி ஒரு முறை முறைத்தாள். கணவன், திரும்பி மஹாவிடம் பேச தொடங்கினான் “தேங்க்ஸ் மஹா, அம்மாகிட்ட சொல்லிட்டேன், நீயும்  வந்திடு… மஹா” என்றான்.

மஹா “காலையிலேயே ஜானு சொல்லிட்டா.. அண்ணா, எங்க அவ” என்றான்.

காயத்ரி காபி எடுத்து வந்தாள். 

ராகவ் “அவ, இப்போதான் ரூமுக்கு போனா..” என்றான் பொதுவாக. என்ன சொல்லுவது என தெரியவில்லை, கூப்பிடுவதா, வேண்டாமா என ஒரே யோசனை. மனையாள் வேறு, இப்போது முறைத்தாள். அது எதற்கு என புரியவில்லை அவனிற்கு. பாவமாக தன் மனையாளை பார்த்தான்.

மஹா, காயத்ரி தந்த காபியை வாங்கிக் கொண்டான்.. “ஜானுகிட்ட வண்டி சாவி கொடுக்கணும், பெட்ரோல் வாங்கி இப்போதான் போட்டு வந்தேன்.. வண்டி ஸ்டார்ட் ஆகும்..” என்றவன் “அவ… அவங்ககிட்ட சாவியை கொடுக்கணும்.. அதான், கூப்பிடுங்க அண்ணா” என்றான் இரண்டாவது முறையாக.

ராகவ், இப்போது அனிச்சையாய் மனையாளை பார்த்தான். முன்பு எப்படியோ, மஹா-ஜானு இருவரும் சிறுவயது முதலே பேசி பழகியவர்கள். இப்போது, இப்போதுதான்.. இந்த  ஒரு மாதத்திற்கு பின்  எல்லாம் மாறிய பிறகு, இப்போது எப்படி தன் தங்கையை இவன் எதிரில் கூப்பிடுவது, அதுவும், எதுவும் தெரியாமல்.. என மனைவியை பார்த்தான், தயக்கமாக. 

காயத்ரி, மஹாவின் பேச்சை கேட்டு, ‘இப்போ என்ன பண்றீங்க பார்க்கிறேன்’ என நக்கலாக கணவனை பார்க்க…  மஹா பதில் வராததால் இருவரையும் பார்த்தான்.

மஹாக்கு, ‘என்ன டா இது’ என தோன்ற.. ‘ஜானுவை கண்ணில் காட்டமாட்டாங்க போல..’ என எண்ணி காபியை குடித்து முடித்தான். அதுவரையும் பதில் வரவில்லை. காயத்ரி உள்ளே சென்றுவிட்டாள்.

மஹா, சாவியை எடுத்து டீபாய் மேல் வைத்தான் “வரேன் அண்ணா, ஜானுகிட்ட சாவி கொடுத்திடுங்க” என சொல்லி எழுந்துக் கொண்டான்.

ராகவ் ‘சரி’ என்பதாக தலையசைத்தான்.

மஹாக்கு, என்னமோ முகம் கொஞ்சம் வாடியது.. மஹா சத்தமாக காயத்ரியை நோக்கி “பை க்கா… வரேன் அண்ணா” என சொல்லி கிளம்பினான்.

காயத்ரி வெளியே வந்தாள். ராகவ் சங்கடமாக நின்றிருந்தான். காயத்ரி “இப்போ பர்த்டே பங்க்ஷனுக்கு வருவான்.. என்ன பண்ண போறீங்க உங்க தங்கச்சிய, ஒழிச்சு வைப்பீங்களா” என்றாள் படுநக்கலான குரலில்..

ராகவ் தெளிவாக “ஏன் காயத்ரி. எனக்கு என்ன நடக்குதுன்னே புரியலை.. மஹா, இன்னிக்குதான் வீட்டுக்கு வரான்.. எனக்கு மட்டும் எல்லாம் சரியா நடக்கணும்ன்னு எண்ணம் இல்லையா என்ன.. ஆனா, தப்பாகிடுச்சின்னா… அதுக்கு அப்புறம் ஜானு தாங்குவாளா.. ச்சு, புரியலை, வரட்டும், பெரியவங்க என்ன சொல்றாங்க பார்க்கலாம்” என்றான் ஓய்ந்த குரலில்.

காயத்ரி என்ன விளையாடினாலும், கணவனின் இந்த பயம் புரியவும் “எல்லாம் சரியாதான் நடக்குது. சும்மா எல்லாத்துக்கும் பயந்து, நடுங்கினா எப்படி.. சரியாகிடும்.. இன்னிக்கு ஏதாவது ஒரு பதில் தெரியும்.. பயப்படதீங்க” என்றாள் ஆறுதலாக.

ராகவ் “ம்…” என்றான்.

இப்போது மகளின் குரல் கேட்டது அறையின் உள்ளிருந்து. காயத்ரி “போங்க, அவளை தூக்கிட்டு வந்து இந்த பலூன் எல்லாம் காட்டுங்க” என்றாள்.

அதன்படியே கணவன் மகளை அள்ளி வர சென்றான். 

முதலில் எல்லாம் தவறாகியதால், ராகவ்க்கு பயம் அதிகமாகியது, அதை தவறென சொல்ல முடியாது. மீண்டும் ஒரு ஏமாற்றத்தை தாங்க, அங்கு யாருக்கும் சக்தி இல்லையே. அதனால் அமைதி காக்கிறான் அண்ணன்.

அர்ச்சனா வந்தாள்.. பட்டர் குக்கீஸ் செய்து எடுத்துக் கொண்டு வந்தாள். 

நேரம் பறந்தது.

தேஜு, அழகான பெர்புள் நிற ப்ராக் அணிந்துக் கொண்டு அந்த பெரிய கேக் முன் நின்றிருந்தாள். அழகான குட்டி குட்டி பிள்ளைகள் தேவதைகளாக சூழ்ந்து நிற்க.. அன்னையின் கை பிடித்து.. கேக் கட் செய்தாள் தேஜு.

விழா தொடங்கியது.

தேஜுவின் தாய்மாமா தங்க மோதிரம் போட்டான். எல்லோரும் பரிசு பொருட்களை கொடுத்துக் கொண்டிருந்தனர்.

வீட்டின் மொத்த நபர்களும் எதிர்பார்த்த மதி அத்தை வந்தார். ராகவ் காயத்ரி முதலில் வரவேற்றனர்.. சற்று நேரம் ராகவ் பேசிக் கொண்டிருந்தான். கார்த்திகேயன் எப்போதும் போல வாங்க என கேட்டு எல்லோருடனும் பேச தொடங்கினார்.

மதி, குழந்தைக்கு முத்தம் வைத்து ஆசீர்வாதம் செய்தார். ஜனனியை நீண்டநாள் சென்று பார்ப்பதாலோ, இல்லை, தன் வீட்டிற்கு வர போகிறவள் என தோன்றியதாலோ என்னமோ.. மதி “ஜானு, எங்க உன்னை அங்க காணோம்” என அழைத்து தன்னுடன் நிறுத்தியவர்.. இரண்டு வார்த்தைகள் எதோ கேட்டுக் கொண்டிருந்தார்.

அவளும் அமைதியாக பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். பின் மதி  அமைதியான குரலில் “ரொம்ப படிச்சியா.. கண்ணெல்லாம் சிவந்திருக்கு.. கையில் காதில் ஏதாவது தெரியறா மாதிரி போட்டுக்கோ…” என்றார்.

ஜனனி “அத்தை..” என்றாள்.

மதிக்கு, இந்த அழைப்பு.. என்னமோ செய்ய, என்ன சொல்லுவது என தெரியாமல் அந்த கூட்டத்தில் ஏதும் காட்டிக் கொள்ளாமல் இருக்க, முயன்று, தன்னை கட்டுப்படுத்திக் கொண்டார் “ம், ம்… போ.. கையில் வளையல் போடு..” என சொல்லி அனுப்பினார் அவளை.

இதை ஆங்காங்கே அமர்ந்து.. தந்தை, அண்ணன், அண்ணி என எல்லோரும் கவனித்துக் கொண்டிருந்தாலும், அமைதியாக இருந்தனர். எல்லோருக்கும் எதோ நம்பிக்கை ‘அப்பாடா’ என்ற பெருமூச்சு எல்லாம் எழுந்தது தன்போல.

மஹா வந்தான். தானே வந்து எப்போதும் போல எல்லோருடனும் பேசினான்.. எந்த ஒதுக்கமும் இல்லை, ஆனால், இப்போது கண்கள் ஜானுவை தேடுவது எல்லோருக்கும் அப்பட்டமாக தெரிந்தது. எனவே காயத்ரி, அடிக்கடி தன் கணவனை பார்த்து சிரித்து வைத்தாள்.

ஜனனிக்கு, எந்த பதட்டமும் இல்லை, அவள் தன் போல.. கேக் கட் செய்து எல்லோருக்கும் பங்கு வைக்கும் வேலையில் பிசியாக இருந்தாள். மஹா வந்ததை கவனிக்கவில்லை.

மஹா “தேஜு.. “ என அழைத்து குழந்தையை தூக்கிக் கொண்டு ஒரு ப்ளே செட் பரிசளித்தான். கிப்ட்பாக் எல்லாம் செய்யவில்லை.. பார்த்ததும் அது கிட்சென் செட் என தெரிய.. தேஜு “ஹேய்… சூப்பர் அங்கிள்.. தேங்க்ஸ்” என சொன்னாள்.

மஹா “பிடிச்சிருக்கா..” என கேட்டு நிம்மதியானான்.

அருகில் கேக் கட் செய்துக் கொண்டிருந்த ஜனனி இப்போது பார்த்தாள் மஹாவை. அவனும் அதை எதிர்பார்த்தவன் போல “ஹாய்” என்றான்.

ஜனனி லேசாக இமைத்து “வாங்க” என்றாள் பாவனையாக.

மஹா, அதில் தவித்து போனான்.. ஆலிவ்நிற லாங் டாப்… அவளின் நிறத்திற்கு பொருந்தி இருக்க.. லேசாக மை எழுதிய கண்கள்.. அவனை இம்சித்தது. தொண்டைவரை வந்துவிட்டது வார்த்தைகள்.. இருக்கும் இடம் உணர்ந்து அமைதியானான்.

சின்ன விழா, தேஜுவின்  வயது ஒத்த பிள்ளைகள் அவர்களின் பெற்றோர் நால்வர்.. என இருபது நபர்கள் கொண்ட சின்ன விழா. பிள்ளைகளுக்கு தின்பண்டங்கள் கொடுத்து, பெரியவர்கள் அமர்ந்து உண்டுக் கொண்டிருந்தனர். ஜனனி ஜூஸ் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

மஹா, போன் பேசிக் கொண்டிருந்ததால் வெளியே நின்றிருந்தான். ஜனனி அங்கே சென்றாள்.. மஹா, ஜனனியை பார்த்ததும்.. போனை கட் செய்துவிட்டு நின்றான்.

ஜனனி அருகே வந்து ஜூஸ் ட்ரையை அவனின் முன் நீட்ட.. மஹா அதை எடுக்காமல் “வண்டிக்கு பெட்ரோல் போட்டுட்டேன்.. சாவி ராகவ் அண்ணாகிட்ட கொடுத்துட்டேன் வாங்கிட்டியா” என்றான்.

ஜனனி “தேங்க்ஸ், அண்ணா சொன்னாங்க” என்றாள். கூடவே “ஜூஸ்” என்றாள்.

மஹா, அதை எடுக்கவேயில்லை.. “ம்கூம் அது வேண்டாம்.. என் கூட காபி” என்றான் கொஞ்சம் திடமாக அவளை பார்த்து.

ஜனனி ஒரு கிளாஸ் ஜூஸ் எடுத்து “அதெல்லாம் பார்க்கலாம்.. இப்போ, ஜூஸ் மட்டும்தான்.” என்றவள் அவன் கைபிடித்து அந்த க்ளஸ்சை அவன் கையில் கொடுத்து விட்டு நகர எத்தனித்தாள். 

மஹா, அவளின் விரல்களையும் சேர்த்து பிடித்துக் கொண்டு “எப்போ” என்றான்.

ஜனனி, அலட்டாமல் அமைதியாக “நான் ப்ரிண்ட்ஸ் கூட மட்டும்தான் வெளியில் போவேன்..” என்றாள், அவனின் விரல்களை பார்த்துக் கொண்டு.

மஹா, இப்போது அவளின் விரல்களை விட்டுவிட்டு, பழசாறு குவளையை இடக்கைக்கு மாற்றிக் கொண்டு, அவளின்முன் தன் வலது கையை நீட்டினான்.. “ப்ரிண்ட்ஸ்…” என சொல்லி, மலர்ந்த முகமாக.

ஜனனிக்கு, உதடு பிரிக்காமல் இருக்க முடியவில்லை.. லேசாக சிரித்தாள்.. அவளின் கண்கள்.. அவனை பார்க்க.. இயல்பாக அவனிடம் தன் கை சேர்த்து “ப்ரிண்ட்ஸ்..” என்றாள் மென்மையாக.

மஹா, இத்தனை நாட்கள் இது தெரியாம போச்சே.. என ஏக்கமாக “ம்… சூப்பர். இது தெரியாமல், நான் ரொம்ப சுத்திட்டேன்” என்றான்.

ஜனனி சிரித்தாள் தனக்குள் “உ…உள்ள போறேன், ஜூஸ் கொடுக்கணும்” என்றவள் உள்ளே சென்றாள்.  

மஹா, கரைந்துக் கொண்டிருந்தான்.. அவள் சிடுசிடுக்காமல் பேசியதில், தன்னுடம் நட்பு பாராட்டியதில்.

“தொடு வானம் சிவந்து போகும்…

தொலைதூரம் குறைந்து போகும்…

கரைகின்ற நொடிகளில்..

நான் நெருங்கி வந்தேனே…

இனி உன்னை பிரியமாட்டேன்…

தொலைதூரம் நகரமாட்டேன்…

முகம் பார்க்க தவிக்கிறேன்.. 

என் இனிய பூங்காற்றே..”

 

Advertisement