Advertisement

மரகத மழையாய் நீ!..

18

ஜனனி, இதமான மனநிலையில் வீடு வந்தாள். ராகவும் காயத்ரியும், மதி வீட்டிற்கு சென்றிருந்தனர் தேஜு பிறந்தநாள் விழாவிற்கு அழைக்க.

காயத்ரி, எப்போதும் போல பேசினாள் ‘ஏன் ஆன்ட்டி வரலை.. அங்க.. தேஜு உங்களை கேட்டுட்டே இருந்தா.. நான் இரண்டுநாள் அம்மா வீட்டுக்கு போயிட்டு வந்தேன்..’ என ஏதேதோ பேசி, மதியை சகஜமாக்கினாள் காயத்ரி.

காயத்ரிக்கு, மதியின் நிலை என்னவென புரியவில்லை. ஆனாலும், கணவன் நினைப்பது போல.. ‘இந்த மஹா, மாப்பிள்ளையாகிறானோ இல்லையோ.. இத்தனை வருட நட்பில் விரிசல் வர கூடாது என்பது மட்டும் தெரிந்தது காயத்ரிக்கு. அதனால் கொஞ்சம் இலகுவாக பேசினாள் மதி அத்தையிடம்.

மதிக்கு, காயத்ரியின் இயல்பான பேச்சில்.. இந்த அழைப்பில் ‘ஒன்றும் ஜனனி சொல்லவில்லை போல’ என்ற எண்ணம் எழுந்தது. எனவே அதை மனதில் கொண்டு.. இயல்பாக இருவரிடமும் பேசினார்.. தான் மாலையில் வருவதாகவும்  சொன்னார்.

ராகவ் காயத்ரி இருவருக்கும் அதன்பின்தான் கொஞ்சம் நிம்மதி. இருவரும் சிரித்த முகமாக வீடு வந்தனர்.

இங்கே, காயத்ரியின் பிறந்த வீடு வந்திருந்தனர், காயத்ரியின் பெற்றோர், தம்பி மனைவி குழந்தை என நால்வர் வந்திருந்தனர். ஜனனி வரவேற்று உபசரித்துக் கொண்டிருந்தாள்.

நீண்ட நாட்கள் ஆகிற்று இப்படி சொந்தம் வர.. பேச்சும் சிரிப்புமாக வீடு இருந்தே வெகுகாலம் ஆன, உணர்வு எல்லோருக்கும். எனவே தேஜுவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்தனர். இப்போதுதான் கொஞ்சம் கலகலப்பாக இருந்தது வீடு.

காயத்ரியின் தம்பி வேலையிருப்பதால், மாலையில் வருவதாக சொல்லி இருந்தான் ராகவிடம். எனவே வீட்டு மனிதர்கள் மட்டும் இப்போது வந்தனர்.

காயத்ரியின் அம்மா, சமையற்கூடம் சென்றார் புடவையை இழுத்து சொருகிக் கொண்டு.. காயத்ரி அவரோடு பேசியபடியே.. சமையலுக்கு உதவினாள்.

ஜனனி, காயத்ரியின் தம்பி மனைவியோடு.. பேச தொடங்கினாள் கூடவே  தேஜு, இப்போது புதிதாக வந்த குட்டி பையன் என நேரம் சென்றது.

மாலை நான்கு மணிக்கு ஜனனி, கேக் வாங்கிவர என வண்டி சாவியை தேடினாள். குழந்தைகள் இருவரும் உறங்கிக் கொண்டிருந்தது. எனவே வீடு அமைதியாக இருந்தது. காயத்ரியும் ராகவ்வும் வீட்டை அலங்கரித்துக் கொண்டிருந்தனர். காயத்ரியின் அம்மா, எதோ கிட்செனின் செய்துக் கொண்டிருந்தார். காயத்ரியின் தந்தை உறங்கிக் கொண்டிருந்தார். எல்லோரும் சத்தமில்லாமல் ஒவ்வொரு வேலையாக செய்தனர்.

ஜனனி, வண்டி சாவியை தேடி ஓய்ந்து யோசிக்கும் போதுதான், அது   மஹாவிடம் இருப்பது தெரிந்தது. கூடவே பெட்ரோல் வேறு இல்லையே என எண்ணிக் கொண்டே தன் அண்ணனிடம் சென்றாள்.. ஜனனி “அண்ணா, நீ போய் கேக் வாங்கிட்டு வந்திடு” என்றாள், அண்ணனிடம்.

ராகவ் “ஏன், கேக் என் பொறுப்புன்னு சொன்ன” என கேட்டபடியே.. happy birthday தோரணத்தை.. நடு ஹாலில் இடம் தேடி, கட்டிக் கொண்டிருந்தான்.

ராகவ், காய்ந்தான் “சாவியை எங்க வைச்ச.. டெய்லி போற.. வர.. அதெப்படி சாவி மறக்கும்.. இங்கேயே ஆர்டர் செய்துக்கலாம்ன்னு சொன்னேன்.. இங்க நல்லா இல்லை, இந்த ப்ளேவர் டேஸ்ட் நல்லா இல்லை.. அது இதுன்னு சொல்லிட்டு இப்படி தூரமா போய் ஆர்டர் கொடுத்திருக்க. இருக்கிறத வாங்கிக்கலாம்ள்ள.. இப்போ யார் அவ்வளவு தூரம் போறது.. இத யார் டெக்ரெட் பன்றது.. சாவி எங்க வைச்ச…” என சத்தம் போட்டான். ராகவ்க்கு, இப்போது வெளியே செல்வதில் நாட்டம் இல்லை, அதனால் இந்த சத்தம்.

ஜனனி, காலையில் நடந்ததை சொன்னாள். மஹா வந்தது, தான் அவனுடன் சென்றது.. அதனால் சாவி அவனிடம் இருப்பது என எல்லாம் சொல்லிவிட்டு “அதனால்தானே போக சொல்றேன்.. நான் மறந்துட்டேன்.. சாவியை வாங்க” என்றாள் தயங்கிய குரலில்.

ராகவ், தங்கை எல்லாம் சொல்லி முடித்ததும்.. காயத்ரியை பார்த்தான். அவனின் மனையாளும் அப்படியேதான் பார்த்தாள். காயத்ரிக்கு ‘இது எப்போதிலிருந்து’ என ஆச்சரியமாக இருந்தது. அத்தோடு கொஞ்சம் சந்தோஷமும் கூட. 

ஆனால் அண்ணனுக்கு ‘முன்பு நடந்தது எதையும் சொல்லாதது.. இப்போது தங்கை அவனுடம் வெளியில் சென்று வந்தது எல்லாம் ஒரு பயத்தை கொடுத்திருந்தது. இது சரியாக வருமா என்ற எண்ணத்தை கொடுத்தது. அப்படி இல்லாத பட்சத்தில்.. தங்கையின் மனம் வருந்துமோ’ என பல யோசனை அண்ணனுக்கு. அதனால் கொஞ்சம் டென்ஷன் வந்தது  ராகவ்க்கு. 

இருவரும் பேசாதது கண்டு ஜனனி “சரி நானே ஆட்டோல போய்க்கிறேன்..” என்றாள்.

அதில் கலைந்த ராகவ், ஒன்றும் சொல்லாமல் பலூன் ஊதிக் கொண்டிருந்தான்.. தங்கையை முறைத்தபடி.

ஜனனி, அண்ணனை இன்னும் முறைத்தபடி உள்ளே சென்றாள்.

இங்கே காயத்ரி கணவனை விரட்டிக் கொண்டிருந்தாள் “நீங்க போங்க, அவளும் நானும் இங்க பார்த்துக்கிறோம்” என்றாள்.

ராகவ் “ச்சு.. இப்போ என்னால் வெளிய போக முடியாது… அவ போயிட்டு வரட்டும் ஆட்டோலதானே போறா” என்றபடி எதையோ யோசித்துக் கொண்டிருந்தான்.

ஜனனி, கிளம்பி வெளியே வந்தாள், ஒலோ ஆட்டோ புக் செய்துக் கொண்டிருந்தாள். அப்போது மஹாவிடமிருந்து அழைப்பு வந்தது ஜனனிக்கு.

ஜனனி, அழைப்பை ஏற்றாள். மெல்லியக் குரலில் “ஹலோ” என்றாள். இது நேரம் வரை இருந்த.. ஒரு வேகம் இப்போது இல்லை, என்னமோ ஒரு மென்மை வந்துவிட்டது அவளிடம்.

மஹாவும் பெரிதாக ஏதும் கேட்காமல் “அந்த கேக் புக் செய்த ஸ்லிப் இருந்தா கொஞ்சம் அனுப்பேன், அந்த கடையில்தான் நிற்கிறேன். அவன் அதை கேட்கிறான்.. வாட்ஸ்சப்பில் அனுப்பு ஜானு.” என்றான்.

ஜனனி “இல்ல, மஹா.. நான் கிளம்பிட்டேன். நீ.. நீங்க எங்க இருக்கீங்க.. நான் போய்கிறேன்” என்றாள் எல்லா கேள்வியையும் தானே கேட்டு, பதிலையும் தானே சொல்லி தொடர்ந்து பேசினாள் பெண்.

மஹா பொறுமையாக “இல்ல ஜானு, நான் மறந்து உன் டூவீலர் சாவியை எடுத்து வந்துட்டேன். நான் இப்போ கடையில்தான் நிற்கிறேன். நீ அனுப்பு போதும், நான் வாங்கிட்டு வரேன்” என்றான்.

ஜனனி “ம்.. சரி” என சொல்லி போனை வைத்தாள்.

ஜனனி அவன் கேட்ட ரெசெப்ட் அனுப்பி வைத்தாள். அமைதியாக அமர்ந்துக் கொண்டாள்.

காயத்ரி “நீ இரு, ஜானு.. இவர் போவார்” என்றாள்.

ஜனனி, எதோ தயக்கமும் மென்மையும் கலந்த குரலில் “இல்ல அண்ணி, மஹாதான் கூப்பிட்டா..ர் அவ..ரே கேக் வாங்கிகிட்டு வரேன்னு சொல்லிட்டாங்க…” என்றாள்.

காயத்ரி “ம் ஹூம்..” என்றாள் ஆனந்தமாக.

ராகவ் இதை கவனித்தாலும், ஏதும் கேட்காதது போல வேலையை செய்துக் கொண்டிருந்தான்.

ஜனனி, தன் அண்ணியின் பார்வையை உணர்ந்து.. லேசாக நெளிந்தாள். சட்டென எழுந்து தன் அறைக்கு சென்றுவிட்டாள்.

காயத்ரி “நீங்க போக வேண்டாமாம்.. மஹா, அவரே வாங்கிட்டு வராராம்” என்றாள் தன் கணவனிடம் கிண்டலான குரலில்.

ராகவ் “ஏன் டி நீ வேற.. அவன் சின்னதிலிருந்து…” என்றான்.

காயத்ரி “போதும்.. உங்க எக்ஸ்ப்லைன், அதெல்லாம் அப்போவே முடிஞ்சி போச்சு, இன்னிக்கு மதி ஆன்ட்டி கிட்ட லேசாக கேளுங்க” என்றாள்.

ராகவ் “மெதுவா பேசு சத்தம் போடாத  அவ காதில் விழபோது..” என்றான்.

காயத்ரி, ஜனனி அறையை பார்த்துக் கொண்டே “கேட்கட்டுமே, அது ஒரு லூசு… எதையோ நினைச்சி, எல்லாத்தையும் வேண்டாம்ன்னு சொல்லுவா, அதனால் கேட்கட்டும்” என்றாள் எல்லா பொருள்படவும்.

ராகவ் “என்ன சொல்ற” என்றான்.

காயத்ரி கணவன் அருகில் வந்தாள் “ம்.. உங்க தங்கச்சி, அப்படி ஒரு நல்லவ, நாம என்ன நினைப்போம், மதி அத்தை என்ன நினைப்பாங்கன்னுதான் யோசிக்கும். தன்னை யோசிக்காது” என்றாள் சின்ன குரலில்.

ராகவ் “பின்ன, அவன் பேசின உடனே.. எப்போடான்னு… சொல்றியா” என்றான் கோவமாக.

காயத்ரி முறைத்தாள்.

ராகவ் “என்ன” என்றான்.

காயத்ரி “ப்பா, அண்ணும் தங்கையும் அப்படியே அறுபது எழுபதுல பிறந்திருப்பீங்க போல.. ஒண்ணுமே இல்லாத விஷயத்தை இப்படி யோசிக்கிறீங்க. என்னமோ மஹா பேசி உடனே பேசிட்டாளா இவ.. மஹா, வீட்டில் சொல்லி.. எப்போ ஒருமாசம் இருக்காது. இப்போ, இன்னிக்குதானே போன் வருது… அந்த பையனும் பாவமில்ல.. ஏதாவது சொன்னாதானே, அடுத்து என்னான்னு யோசிப்பான்” என்றாள் முறைத்த பார்வையும், கடுகடுத்த குரலுமாக.

ராகவ்க்கு இப்போதுதான் அது உரைத்தாலும், தன் தங்கையை இவள் எப்படி எடுக்கிறாள் என ஒரு பார்வை பார்த்தான், மனையாளை.

அவ்வளவுதான், காயத்ரி “அப்படி கோணலா பார்க்காதீங்க… எப்படி நான் அவளுக்கு தப்பா சொல்லுவேனா” என்றவள், தன் கையில் இருந்தவற்றை கீழே வைத்துவிட்டு, தங்களின் அறைக்கு சென்றுவிட்டாள். சின்ன ஊடல் தொடங்கியது.

Advertisement