Advertisement

ஜனனி, வேலை முடித்து லஞ்ச் டைம்மில் சூரிக்கு அழைத்தாள். சூரி வேறு மருத்துவமனையில் இருந்தான்.  அவளின் அழைப்பை ஏற்று “சொல்லு ஜானு “ என்றான். 

ஜனனி “பார்க்கணும்… சூரி, எப்போ வர” என்றாள். அவளின் குரலில் ஏதும் மாற்றம் தெரியவில்லை.. நண்பனால் எதையும் உணர முடியவில்லை, உணர்ந்திருந்தால் அப்போதே வந்திருப்பான். எனவே சூரி “அவசரமா ஜானும்மா” என்றான்.

ஜனனி “இல்லைதான், ஆனால், அவசியம் பார்க்கணும்” என்றாள்.

சூரி “குழப்பவாதி டி நீ” என்றவன் நான்கு மணிக்கு வருவதாக சொன்னான்.

எப்போதடா மணி நான்கு ஆகும் என காத்திருந்தாள் ஜனனி.

சூரி, பத்து நிமிடம் தாமதமாக வந்தான், அண்ட் மருத்துவமனைக்கு. அவள் வாசலில் நின்றிருக்க.. காரில் ஏறி இருவரும் வெளியே சென்றனர். 

ஜனனி அமைதியாகவே வர.. சூரி சோழிங்கநல்லூரில் உள்ள இஸ்கான் கோவிலில் வண்டியை நிறுத்தி இருந்தான்.

இருவரும் இறங்கி நடந்தனர், அந்த பரந்தவெளியில்.. யாருமே கண்ணுக்கு தென்படவில்லை.. நல்ல காற்று மட்டுமே சத்தமிட்டுக் கொண்டிருந்தது, அங்கு. கோவில் ஐந்து மணிக்குதான் திறக்கப்படும் என எழுதி இருந்தனர். எனவே இவர்கள்.. வனமாக இருந்த பகுதியில் நடந்தனர்.

சூரி “என்ன, ஜானு.. படிச்சிட்டியா.. எப்போ எக்ஸாம்” என்றான்.

ஜனனி “ச்சு, அதெல்லாம் படிக்கிறேன்.. அத விடு. என்னை ஒருத்தன் ரொம்ப டார்ச்சர் பண்றான் சூரி.. நான் தெளிவாதான் இருக்கேன், ஆனாலும் குழப்பம் வருது.. அவனால். ச்சு, என்னென்னமோ சொல்றான்.. எ.. எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலை.. அண்ணாகிட்ட சொல்லிடவா” என்றாள் மெல்லியக் குரலில்.

சூரி, கவனமானக குரலில் “என்ன சொல்ற… யாரது… தெளிவா சொல்லு” என்றான்.

ஜனனி “நேத்து மஹா…” என தொடங்கி நடந்தது எல்லாம் சொன்னாள்.

சூரிக்கு, காயத்ரியை போலவே எண்ணம் ஓடிக் கொண்டிருந்து.. ‘இந்த மஹா ப்ரோ முன்னாடியே இதை சொல்லி இருக்க கூடாதா’ எனதான்.

ஜனனி “என்ன சூரி, அமைதியா இருக்க… ஏதாவது சொல்லேன் “ என்றாள்.

சூரி “எல்லோர் முன்னாடியும் சொன்னாரா…” என்றான் இப்போது.

ஜனனி முறைத்தாள்.

சூரி, அமைதியாகவே நடந்தான்.. இருபக்கமும் மரங்கள்.. நடுவில் நடைபாதை, ஆங்காங்கே அமர, சிமென்ட் பென்ஞ்ச் என ஒரு சிறு வனம் அது. இப்போது ஒரு பென்ஞ்ச்சில் அமர்ந்தான் சூரி.

ஜனனியும் அவனருகே அமர்ந்தாள்.

சூரி “உனக்கு பிடிச்சிருக்கா “ என்றான்.

ஜனனி வெடுக்கென நிமிர்ந்து “என்ன சூரி…” என்றாள்

சூரி “சரி, அப்போ இதுக்கு முன்னாடி உன்கிட்ட அவர் இத பத்தி பேசி இருக்காறா…  நீ என்ன சொன்ன… நீ என்னதான் நினைக்கிற” என என்னவெல்லாமோ கேள்வி கேட்டான், குடைந்து.. குடைந்து அவளை கேள்வி கேட்டு.. முழுதாக மஹா.. அவளிடம் அன்று பேசியது.. அதற்கு முன் செய்தி அனுப்பியது, இவள் பிளாக் செய்தது என எல்லாம் கேட்டு அறிந்துக் கொண்டான் நண்பன். 

எல்லாம் சொன்னாள் ஜனனி, ஆனாலும் மனது அவன் பக்கம் மொத்தமாக  சாய மறுக்கிறது அவளுக்கு. அத்தோடு இந்த கல்யாணம் என்பது எங்கோ ஒரு இடத்தில் அவளுக்கு பயத்தை கொடுக்கிறது, என்னதான் படித்த பெண்.. உலகம் ஒரே மாதிரி எப்போதும் இருக்காது என தெரிந்தாலும்.. ‘தனக்கு’ என வரும் போது ஒரு பயம் வந்துவிடுகிறதே.. அப்படிதான் ஜனனிக்கு இந்த திருமணம் என்பது பயம் தந்தது.

அதனால் ஜனனி “அவன் உளறான்… எ.. எனக்கு இதெல்லாம் கேட்கவே பயமா இருக்கு, இன்னொரு தடவ இதையெல்லாம் என்னால், ஃப்பேஸ் பண்ண முடியாது.. மனசில் தெம்பில்லை சூரி. மெதுவா அவன்கிட்ட சொல்லிடு.. அதுக்குதான் உன்னை வர சொன்னேன்.” என்றாள் கொஞ்சம் திணறியபடியே சொன்னாள். 

சூரி “சரி, நீ என்ன பண்ண போற” என்றான்.

ஜனனி “என்ன புதுசா கேட்க்கிற” என்றாள்.

சூரி “சொல்லு” என்றான்.

ஜனனி “படிக்க போறேன்.. “ என தன் படிப்பு பற்றி விவரித்தாள்.

சூரி “சரிதான்.. படிப்பு வேலை எல்லோருக்கும் இருக்கும். உனக்குன்னு யார் இருப்பா..” என்றான்.

ஜனனி “இதென்ன சினிமா மாதிரி.. நானும் மனுஷிதான் எல்லாரையும் போல்தான் இருப்பேன்.. படிக்க போறேன், வேலை,  பின்ன அப்படியே ஓடிடும் லைப்.. ஆனா, பிக்கல் புடுங்கல் இருக்காது.. நான் உண்டு என் வேலை உண்டு.. யாருக்காகவும் நான் எதையும் செய்ய வேண்டாமே” என்றாள் திட்டமிட்டு.

சூரி, ஏதும் பேசாமல் இரண்டு நிமிடம் அமைதியானான். பின் “ஓகே.. ஒன்னு சொல்றேன்.. மஹா, அவரா உன்னை தேடி வரார்.. உன்னுடைய எல்லாம் தெரிந்து வரார். அத்தோட, உன்னை இத்தனைநாள் மனசில் நினைச்சிகிட்டு இருந்திருக்கார்.. நீ அவரை திரும்பியும் பார்க்காத போது கூட.. இது.. இத எப்படி உன்னால் வேண்டான்னு சொல்ல முடியுது. எவ்வளோ பெரிய குட் சோல் அவர்… உனக்கு புரியுதா.. எப்படி, இப்படி கண்மூடி தன்மான அன்பை இழக்க மனசு வருது உனக்கு.. ஒரு கண்ணில்லாதவ கூட இப்படி அவரை வேண்டாம்ன்னு சொல்லமாட்டா… அப்படி என்ன ஈகோ உனக்கு” என்றான் நண்பன். ஆரம்பத்தில் அமைதியாக ஆரம்பித்த குரல் இப்போது அழுத்தத்தில் முடிந்தது.

ஜனனி, அதிரிந்து பார்த்து “என்ன ஈகோவா” என்றாள்.

சூரி “இல்லையா பின்ன… அதெப்படி உனக்கு, அன்பு புரியாம போகும்.. அவர்தான் உன்னை வைச்சிகிட்டே எல்லோர்கிட்டயும் சொல்லி இருக்கார்.. யார் செய்வா இந்த மாதிரி.. ம்.. புரியலையா ஜானு உனக்கு. அன்பு ஜானு.. அன்பு மட்டும்தான் ஜானு. எப்படியும் நீ ஒரு கல்யாணம் செய்துக்கணும் ஜானு. முன்னாடி கூட சரி அவ, படிப்பு.. வேலைன்னு, நல்லா இருக்கட்டும்ன்னு கார்த்தி டாட் விட்டு இருப்பார். ஆனா, மஹா உன் மேல உயிரா இருக்கான்னு தெரிஞ்சிது… யாருக்குதான் தன் பெண் தனியா நிற்பது இனிக்கும். அதைவிட யாரோ செய்த பாவத்திற்கு நீ ஏன் தனிமையை அனுபவிக்கனும்.. ஜானு, அத யோசிக்க மறந்துட்டியா” என்றான் கொஞ்சம் இறங்கியக் குரலில் நண்பன்.

எல்லாம் எல்லாம் உண்மை. ஜனனி அப்படியே அமர்ந்திருந்தாள் ஏதும் பேச முடியவில்லை.. அவன் பக்கமிருந்து யோசிக்கும் போது எல்லாம் அவனுக்கு சரியாகவும், அவள் பக்கமிருந்து யோசிக்கும் போது எல்லாம் அவளுக்கு சரியாகவும் தோன்றியது. ஆக, அவளுக்கு அன்பு காதல் என்ற உணர்வு வரவில்லை.. சரி தவறு என்ற பயம்தான் உள்ளே ஓடிக் கொண்டிருந்தது.

சூரி, அவளை கூட்டிக் கொண்டு கோவிலுக்கு சென்றான். பொறுமையாக கண் மூடி நின்றாள் ராதாகிஷ்ணன் முன்.. விடையும் இல்லை, கேள்வியும் இல்லை, வேண்டுதல்களும் இல்லை.. அவளுக்கு. எண்ணம் எல்லாம் அந்த கிர்ஷ்ணரிடமே நிலைத்தது. 

இருவரும் வெளி வந்தனர்.

சூரி “வீட்டுக்கு போகலாமா.. வண்டி காலையில் எடுத்துக்கலாம்” என்றபடி வீடு நோக்கி சென்றனர்.

ஜனனி அமைதியாகவே வந்தாள்..

மஹாவிற்கு திக்கும் புரியவில்லை.. திசையும் தெரியவில்லை.. காலையில் எழுந்தவுடன் எப்போதும் போல “ஜனனி ஜனனி நீ.. ஜகம் நீ அகம் நீ” எனதான் பாடியது அவன் மனமும் அங்கிருந்த ஸ்பீக்கரும்.

மதி, எப்போதும் காபியோடு வருபவர் இன்று வரவில்லை. மஹா வெளியே வந்தான். கிட்சென் அனாதையாக இருந்தது. மஹாக்கு லேசாக பயம் வந்தது.. தன் அன்னையின் அறைக்கு சென்றான்.

மதி பால்கனியில் பூ பறித்துக் கொண்டிருந்தார், இவன் கவனிக்கவில்லை. அன்னையின் அறையில் பாத்ரூம் வரை தேடிவிட்டு வெளியே வந்தவன் மனம், அதிர தொடங்கியது. 

பால்கனியில் அன்னையை பார்க்கவும்தான் ஆசுவாசம் ஆனது.

மஹா “ம்மா… எங்க ம்மா, போன” என்றான்.

மதி “ஏன் டா…” என்றார்.

மஹா “பயந்துட்டேன்… வா, காபி கொடு” என்றான்.

மதி கிட்சென் சென்றார், முகத்தை உற்று உற்று பார்த்தான் மகன். ஆனால், ஏதும் கண்டுபிடிக்க முடியவில்லை. வாய்விட்டே கேட்டான் மகன் “என்ன ம்மா, நினைக்கிற” என்றான்.

மதி காபியை கையில் கொடுத்தவர் “தெரியலையே டா… சரியா வருமா இதெல்லாம்.. உங்க சித்தி சித்தப்பா… உன் அத்தை எல்லோரும் என்ன சொல்லுவங்களோ.. தெரியலையே..” என்றார் நீண்ட விளக்கமாக.

மஹா “ம்மா, நான்தானே கல்யாணம் செய்துக்க போறேன்.. அவங்க ஏன் நினைக்கணும்” என்றான்.

மதி முறைத்தார்..

மஹா அமைதியாக தலைகோதி கொண்டு “சரி ம்மா, நீ சமாளிப்ப எனக்கு தெரியும்.. லவ் யூ ம்மா” என்றான்.

மதி இதற்கும் முறைத்தார்.

மஹா “ம்மா.. மலை போல நம்பறேன்” என்றான்.

மதி “என்னை நம்பாதே.. முன்னாடியே சொல்லி இருந்தா எல்லாம் சரியா இருந்திருக்கும், நானும் சுகுமாரியும் எப்போதும் நினைக்கிற விஷயம்.. நம்ம பசங்க எவ்வளவு பொறுப்புன்னுதான். ஆனா, இப்படி ஆகும்ன்னு நினைக்கலையே.. அதனால என்னை நம்பாதே.. எல்லாத்துக்கும் ரெடியா  இரு” என்றார் கட்டன் ரைட்டாக.

மஹா “ம்மா..” என்றான்.

மதி “காலையில் வேலையை பாரு.. கிளம்பு” என்றார் கறாராக.

மஹா, தன்னறைக்கு சென்றான்.. தன்போல் குளித்து கிளம்பினான். எல்லோருக்கும் குழப்பமே மிஞ்சியது. மஹாக்கு, தன் அம்மா இதை நல்ல முறையில் எடுப்பார் என்றிருந்த நம்பிக்கை தொலைந்துக் கொண்டிருந்தது. எனவே அமைதியாக வேலையை பார்க்க தொடங்கினான்.

“இன்பம் பாதி துன்பமும் பாதி..

இதுதான் வாழ்வின் அங்கம்…

நெருப்பினில் வெந்து நீரினில் 

குளித்தால் நகையாய் மாறும் தங்கம்..

தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி..

வெற்றிக்கு அதுதான் ஏணியடி..”

Advertisement