Advertisement

மரகத மழையாய் நீ!..

15

மஹா, சற்று நேரம் அமர்ந்திருந்தான் சோபாவில். அவளோ அவனை பார்ப்பதாக இல்லை. படித்துக் கொண்டே இருந்தாள்.. மஹாவிற்கு ‘இப்படி ஒருவன் விடாமல் பார்க்கிறேன், எப்படி இப்படி படிக்கிறா’ என முணுமுணுத்துக் கொண்டான்.

தன்னறையில் சென்று உடைமாற்றி வந்தான், உணவு உண்ண. அப்போதும் அவள் படித்துக் கொண்டிருக்க மஹா, தன் அன்னையிடம் “என்ன அவ இங்கதான் சாப்பிட்றாளா.. கூப்பிடுறியா” என்றான்.

அன்னை “கூப்பிடு டா” என்றார்.

மஹா “ஜானு சாப்பிடலாம் வா” என்றான் இயல்பாக.

மதியும் “வா டா ஜானு” என்றார்.

ஜானு எழுந்து வந்தாள், மூவரும் அமர்ந்து உண்டனர்.. பேச்சு டிவி, வாக்கிங் என சென்றது. உண்டு முடித்து.. ஜானுவும், மதிக்கு உதவினாள். சற்று நேரம் சென்று கிளம்பினாள். 

கிளம்பும் போது மஹாவிடம் “சொன்னதெல்லாம் மனசில் வைச்சிக்கோங்க.. சீக்கிரம் ஒரு முடிவெடுங்க” என்றாள்.

மஹாக்கு இவள் எதை சொல்லுகிறாள் என தெரியுமே ‘என் விஷயம் எனக்கு பார்க்க தெரியும்.. நீதான் வேண்டாம்ன்னு சொல்றீல்ல’ என சுள்ளென  கோவம் வந்தது “என்ன முடிவெடுக்கணும்” என கேட்டபடியே தன் வீட்டிலிருந்து வெளியே வந்தான், அவளுடன் பேசிக் கொண்டே.

ஜனனி, ஒன்றும் சொல்லாமல் வெளியே வந்தவள் லிப்ட் நோக்கி நடந்தாள்.. மஹா, அந்த நீண்ட வராண்டாவில் செல்லும் அவளையே பார்த்திருந்தான், கொஞ்ச தூரம் அவள் சென்றதும் அவளை  சத்தமாக “ஜானு” என சொல்லி அழைத்தான்.

ஜனனி, நின்று திரும்பி பார்த்தாள்.

மஹா, அங்கேயே நின்றுக் கொண்டு.. சாந்தமாக அவளை பார்த்து.. “என்னதான் பிரச்சனை என்கிட்டே உனக்கு..” என்றான்.

ஜனனி “என்ன என்ன பிரச்சனை.. அதெல்லாம் எதுவும் இல்லை..” என்றாள், அவனின் தோரனையை பார்த்து லேசாக பதட்டம் வந்தது பெண்ணுக்கு.

மஹா “அப்புறம் ஏன் ஓடற..” என்றான் அவளின் பரபரப்பை பார்த்து.

ஜனனி தன்னுடைய புக் இரண்டை தன் நெஞ்சோடு கட்டிக் கொண்டு “என்ன “ என்றாள், சமாத்னமானக் குரலில்.

மஹா, அங்கிருந்த திட்டு சுவரின் மேல் சாய்ந்து நின்றான்.. ‘இங்கே வா’ என கையசைத்து அழைத்தான்.. அவளை.

அவள் அப்படியே நிற்கவும் 

மஹா “எவ்வளோ தூரம்.. கத்த முடியலை..” என்றான் பொறுப்பாக.

ஜனனி அருகில் வந்தாள்.

மஹா, கொஞ்சம் சுதாரித்தான் இந்த நொடியில். இது எதோ கல்லூரி பருவமல்லவே.. தட்டுதடுமாறி.. தயங்கி.. மயங்கி கிறங்கி, தன்னவள் என ஒரு பெண்ணை நினைத்து உருகி.. வேலையேதும் இல்லாமல் அவளை துரத்தி.. அவளை வழி மறித்து.. காதல் மொழி சொல்ல.. அந்த இடத்தில் இருவரும் இல்லையே. அத்தோடு, அந்த நேரத்தில் கூட பொறுப்பாக இருந்துக் கொண்டானே படிப்பாளான். இப்போது சொல்ல வேண்டும், அவளை, என்னை தவிர யாராலும் நேசித்துவிட முடியாது.. அவளை, என்னால் விடமுடியாது என தெளிந்த பின்.. அவள் தனக்கு வேண்டும் என்று எண்ணுகையில்.. ஏதும் சொல்ல முடியவில்லை அவனால், அவளின் நிலை தடுத்து. ம், அவளின்  நிலைதான் தடுத்து.  அன்றே அவன் உளறியதுதான் இப்போது இவளின் ஒதுக்கத்திற்கு காரணம் என புரிந்துக் கொண்டான் மஹா. அதனால் கொஞ்சம் சுதாரித்தான் மஹா, அவன் “ஒரே குழப்பமா இருக்கு.. எனக்கு, இப்போதான் இந்தியா வந்திருக்கேன்.. இன்னும் ஸ்டடி ஆகலை.. நிறைய வேலை இருக்கு. இப்போ போய் கல்யாணம் அது இதுன்னு.. கொஞ்சநாள் அம்மாவை சமாளிக்க ஏ.. ஏதாவது ஐடியா சொல்லேன்.. “ என தன் தலைகோதி கீழே குனிந்துக் கொண்டே, முதல் முறையாக தன்னிலையிலிருந்து இறங்கி வந்து, அவளிடம் கேட்டான் மஹா.

மஹா, பொதுவாகவே, முன்பே, பெண்களிடம் கண்ணியமானவன். ஆனால், இந்த பக்கத்து வீட்டு.. ஜானுவிடம் மட்டும் நேரம் கிடைக்கும் போதெல்லாம்.. அவளை பயமுறுத்தி, திட்டி, பெற்றோரிடம் மாட்டி வைத்து, அவளை டாமினேட் செய்து.. அவளுடன் போட்டிக்கு நின்று என இப்படிதான் பழக்கம் அவனுக்கு. அதனால், அவளிடம் இயல்பாகவே அவனுக்கு நட்பாக பேசவோ பழகவோ ஒரு தயக்கம். அத்தோடு அவளின் கடந்த காலம் எல்லாம் சேர.. மஹா, திணறுகிறான் இப்போது.

இப்போது, தன் நிலையை எண்ணி லேசாக சிரித்துக் கொண்டான் ‘பேசாம.. அப்போவே நீ நல்லா பழகியிருந்திருக்கலாம் மஹா’ என தனக்கு தானே எண்ணி சிரித்தான். ‘ச்சு, அதான் நமக்கு வரலையே டா’ என அதே மனம் முணுமுணுத்து.

ஜனனி அவனின் நினைவை களைத்தாள் “என்ன சொல்றீங்க.. இதெல்லாம் அத்தைகிட்ட சொன்னா கேட்க போறாங்க.. அத்தை  எவ்வளோ கவலை படறாங்க தெரியுமா” என்றாள் ஒருமாதிரி குரலில் ஆராய்ச்சியாக சொன்னாள். ‘ஏன்.. இவன் அமைதியா பேசுறான்.. இவன் சொல்றது உண்மைதானா’ என யோசனைதான் அவளுள். ஆனாலும் தெரிந்தவன் நம்மை மதித்து பேசும் போது, வரும் ஒரு நட்பில் ஜனனி அவனிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

மஹா, லேசாக அவளின் பதிலை எண்ணி சிரித்துக் கொண்டே நின்றிருந்தான், என்ன பேசுவது என தெரியாமல். மேலும் இப்படி சம்பந்தமே இல்லாமல், அவளுடன் பேசுவது அவனுக்கு  பிடித்திருந்தது. மஹா “சொல்லு.. இப்போ கல்யாணம் வேண்டாம்.. அதை மட்டும் உங்க அத்தைகிட்ட சொல்லேன் ப்ளீஸ்..” என்றான்.

ஜன்னி “நா.. நான் எப்படி சொல்றது.. அது சரியில்லை.. நீ..ங்கதான் பேசணும்.” என்றாள் தடுமாரியக் குரலில்.

மஹா இப்போது தன் சிரிப்பை விட்டு, எப்போதும் போலானக் குரலில்  “ப்ளீஸ் ஜானு, நீ சொன்னா அம்மா.. கேட்பாங்க. கொஞ்சம் எனக்காக சொல்லேன்.. பாவமா தெரியலை என்னை பார்த்தா.. எப்படி ஓடிட்டே இருக்கேன்.. இப்போ போய் கல்யாணம் செய்துக்க.. காது குத்திக்கன்னா.. கோவமா வருது. உனக்கு இ.. இது புரியுமில்ல.. ப்ளீஸ், எனக்காக சொல்ல மாட்டியா எங்க அம்மாகிட்ட” என்றான் உண்மையானக் குரலில்.

ஜனனி, விழித்தாள் என்ன செய்வது என தெரியாமல்.. ஏனோ இப்போது மஹாவின், முகத்தை பார்க்க பாவமாக இருந்தது.. ‘உண்மையாவே இவனுக்கு வேலை போல..’ என எண்ணம் வந்தது. ‘அப்போ அன்னிக்கு, என்னமோ மேசேஜ் அனிப்பினான்..’ என அதுவும் தோன்றியது. ஜனனிக்கு, இருவேறு விடையோடு.. மஹா கேள்வியாய் பாவமாக நின்றிருந்தான் அவளெதிரில்.

ஜனனி ”தெரியலை… என்னை கம்பெல் பண்ணாதீங்க.. பை” என்றவள்.. லிப்ட் நோக்கி நடந்தாள்.

மஹாக்கு அவளின் குழப்பம் பார்த்து ஒரே குதுகலம்.. எப்படியோ அவளிடம் பேசிவிட்டேன் என ஒரு சந்தோஷம்.. இனி அவளின் அலைவரிசையில் இணைய வேண்டும் என திட்டம் எல்லாம் ஒருங்கே அவனுள் எழுந்தது.. கொஞ்சமாக கால்கள் மிதக்க.. தன்னறைக்கு சென்றான்.

“மழை வர போகுதே..

துளிகளும் தூறுதே..

நனையாமல் எங்கே போவேன்..”

அன்றைய இரவு மஹாக்கு ஒரு வழி கிடைத்த நிம்மதியிலும், ஜனனிக்கு ‘அவன் என்ன சொல்றான்’ என்ற குழப்பத்திலும் கடந்தது.

ஜனனியை, காலையில் லிப்டில் பிடித்தான் ஒரு புன்னகையோடு.. அவளும் சிடுசிடுக்காமல் பதில் வாழ்த்து சொல்ல.. மஹா, தனக்குள் ‘தேறிட்ட டா’ என சொல்லிக் கொண்டு அவளிடம் பேசினான் “யோசிச்சிட்டியா ஜானு” என்றான் மெல்லியக் குரலில்.

ஜனனி “எ.. என்ன யோசிக்கணும்” என்றாள்.

மஹா “இல்ல.. எங்க அம்மாகிட்ட என்னை பத்தி பேச” என்றான்.

ஜனனி “இப்போ எனக்கு வேலை இருக்கு.. இப்போ அதெல்லாம் பேச முடியாது” என்றாள்.

மஹா “சரி, அப்ட்டர்நூன் பார்க்கலாம்” என்றவன் தன் போனை கையிலெடுத்து நின்றுக் கொண்டான்.

ஜனனி, என்ன சொல்லுவது என தெரியாமல் நின்றாள். இருவரும் வெளியேறி, அலுவலகம் சென்றனர்.

ஜனனிக்கு, எதோ புது காய்ச்சல் போல.. மதியம் தொடங்கியது ஒருவித அவஸ்த்தை.. ‘அய்யோ.. கூப்பிடுவானே.. என்ன சொல்றது.. உன் விஷயம் நீயே பார்த்துக்கோ சொல்லலாமா, இல்ல, நீ பேசு.. நான் ஹெல்ப் பண்றேன்னு சொல்லாமா.. பாவமா இருக்கு, அவனை பார்த்தா..’ என ஓடிக் கொண்டே இருந்தது.

ஜனனி, எல்லோருடனும்  மதிய உணவு முடித்து வந்தாள். ‘இப்போ கூப்பிடுவான்.. இதோ.. இப்போ ரிங் வரும்’ என போனையே பார்த்துக் கொண்டிருந்தாள் மங்கை. நேரம் சென்றது, டீ டைம் வந்தது.. அப்போதும் அவன் அழைக்கவில்லை. ஆனாலும் உள்ளே, அவன் நினைவு நீங்கவில்லை.

Advertisement