Advertisement

மரகத மழையாய் நீ!..

13

சென்னை வந்த ஜனனி இரண்டு நாட்கள் வீட்டில் இருந்தாள். தேஜு அதற்கு முக்கிய காரணம். இந்த நாட்களில் குழந்தையை அவள் பெரிதாக கண்டுக் கொள்ளவில்லை. எனவே, அவளிற்காக தன் நேரத்தை ஒதுக்கினாள் ஜனனி. 

ஜனனி, ட்ரிப் சென்று வந்திருந்த போதே.. நிறைய டாய்ஸ் வாங்கி வந்திருந்தாள். இப்போதும் தேஜுவை கூட்டிக் கொண்டு வெளியே சென்று வந்தாள். அவளுடன் ஐஸ்கிரீம் உண்டாள்.. குழந்தைக்கு பிடித்த சாட்ஸ் நிறைய வாங்கிக் கொடுத்தாள். எப்போதும் ஜனனி, இப்படி சாட்ஸ் வாங்கி உண்ண, இளையவளை அனுமதிப்பதில்லை.. இப்படி என்றாவது ஒருநாள் என்பதால் இந்த சலுகை குழந்தைக்கு, கூடவே தனக்கும்தான்.

மேலும், தன்னையும் கொஞ்சம் கவனிக்க நேரம் எடுத்துக் கொண்டாள். அது அவளுக்கு பிடித்தமான ஒன்றும் கூட.. முன்பெல்லாம் எப்போதும் பளிச்சென இருப்பாள். இந்த, கொஞ்ச நாட்களாக தன்னை கவனிப்பதில் தவறி இருந்தாள். இப்போது, அதை நேர் செய்தாள்.. பார்லர் சென்று, ஹேர் கட்.. மெடிஃக்யூர் செய்துக் கொண்டாள்.. கொஞ்சம் நியூ லுக் கிடைத்தது. அழகு என்பது அவளை பொறுத்தவரை.. நம்பிக்கை தருவது.. நம்மை, நாம்தானே பார்க்க வேண்டும் என எண்ணுபவள் . சில சில கலவரங்கள்.. அவளின் நிலையில் பெரிய மாற்றத்தை தந்திருந்தது.. அதற்குள்ளேயே ஒடுங்காமல்.. தன்னை தேற்றிக் கொள்ள நினைத்தாள்.. அதனால், எல்லா கருமேகத்தை விலகி, பளீச் என்ற நிலவு முகம்.. வெளிவந்தது நம்பிக்கையை மின்ன செய்தது. 

ஜனனி, மறுநாளிலிருந்து மருத்துவமனை செல்ல தொடங்கினாள். முன்பை விட ஒரு மிளிரவு அவளிடம் வந்திருந்தது. இன்று தான் கீழே இரங்கும் போது.. மஹாவை பெரிதாக தேடவில்லை ஜனனி. ஆனால், மறாவது நாள்.. மஹா, தன்னுடன் லிப்ட்டில் வரவில்லை என்பதை குறித்துக் கொண்டது டாக்டரின் மனது. ‘என்னமோ தெரிந்தவன் வருவானே..’ என ஒரு எண்ணம் அவ்வளாவுதான் என தாக்கு தானே சொல்லிக் கொண்டாள்.

என்னமோ அடுத்தடுத்த நாட்களும் அவன் வரவில்லை. பெரிதாக இவள் வாடி நிற்கவில்லைதான். ஆனாலும், ‘ஏன் ஆளை காணோம்..’ என ஒரு எண்ணம் வந்தது. மதி அத்தையும் இந்த நாட்களில் தன் வீட்டிற்கு வரவில்லை.

இந்த வீக்கென்ட் நாளில்தான் ஜனனிக்கு, மீண்டும் மதி அத்தையின் நினைவு வந்தது. தன் அண்ணியிடம் கேட்டாள் “ஏன் காயா.. மதி அத்தையை காணோம்” என்றாள்.

காயத்ரி “ப்பா.. ஒருவழியா அக்கம் பக்கத்தில் இருக்கிறவங்க ஞாபகம் வந்ததே.. மஹா, பத்து நாளா ஊரில் இல்லை, அத்தோட அந்த அத்தை.. அவங்க சொந்தத்தில், யாருக்கோ வளைகாப்புன்னு ஊருக்கு போயிட்டாங்க.. நேற்று நைட் தான் இங்க வந்தாங்க.

இன்னிக்கு காலையில்தான் நம்ம வீட்டுக்கு வந்தாங்க… மஹா, சண்டே.. நாளைக்குதான் வருவானாம். அதனால, ஒரு ஆளுக்கு நீங்க ஏன் சமைக்கிறீங்க இங்க வாங்க சாப்பிடன்னு கூப்பிட்டேன், மதியம் வந்தாங்க… சாயங்காலம்தான் விளக்கேத்தி வைச்சிட்டு வரேன்னு.. போனாங்க.” என்றாள் ஏற்ற இறக்கமானக் குரலில்.

ஜனனி “சரி.. சரி.. வீட்டில் இருந்திருந்தால்.. இங்கே வந்திருப்பாங்களே.. காணோமேன்னு கேட்டேன்” என்றாள், தன் கணிப்பு சரியாகத்தான் இருக்கிறது என்ற எண்ணத்தில்.

காயத்ரி “போடி, அவங்க வந்து எவ்வளோ நாளாச்சி.. நீ இன்னும் போய் அவங்க வீட்டை பார்க்கவேயில்லை. அடிக்கடி சொல்லுவாங்க உன்னை. அவ, இப்படி பூ கட்டுவா… ஓயாம பேசுவா.. அங்கிருக்கும் போது.. அவ கொலுசு சத்தம் எங்க வீட்டில்தான் அதிகம் கேட்டுக்கிட்டே இருக்கும்ன்னு.. எப்படி சொல்லுவாங்க தெரியுமா.. நீ, அவங்களை மதிக்கவே இல்லை போல.. வர வர யாரையும் கண்டுக்கறதில்ல நீ” என்றாள் தன் நீண்ட நாள் குறையை.. இப்படி சொன்னாள் காயத்ரி.

ஜனனி உணமைதானே என்ற யோசனையில் அமர்ந்திருந்தாள்.

அந்த அமைதியை புரிந்த காயத்ரி “போ ஜானு.. அவங்க தானியா இருக்காங்க.. போயிட்டு.. சாப்பிட கூட்டி வா.. போ, தேஜு, அத்த கூட போடா” என்றாள்.

தேஜு “நோ.. ம்மா, எனக்கு ட்ரா பண்ணனும்.. அவளையே.. சாரி அத்த மட்டும் போகட்டும்..” என்றாள் மழலையாக.. பெண்கள் இருவருக்கும் சிரிப்பு வந்தது.. எப்படி பெரியமனுசியாக பேசுகிறாள் என சிரிப்புதான் வந்தது.

ஜனனி “போடி, நான் போறேன்.. அங்க போய்.. எங்க அத்த, பிரிஜ்ட்ஜில் சாக்கி வைச்சிருப்பாங்க, நான் மட்டும் சாப்பிடுவேன்” என்றாள் குழந்தைக்கு ஆசை காட்டி.

குழந்தை “சாக்கி சாப்பிட்ட.. எங்க அத்தை பல்லை தட்டி கையில் கொடுத்திடுவா… பாட் கேர்ள்..” என்றாள் தலை நிமிராமல். மீண்டும் பெண்களுக்கு சிரிப்பு வந்தது.

ஜனனி, குழந்தைக்கு மூட் இல்லை என எண்ணி, தான் மட்டும் மதி அத்தை வீட்டிற்கு கிளம்பினாள்.

மதி, அத்தையின் வீட்டின் அழைப்பு மணியை அழுத்தி காத்திருந்தாள். மதி அத்தை போன் பேசியபடியே வந்து திறந்தார். தாராதான் போனில் இருந்தாள். வீடியோ கால். எனவே மதி அத்தை “இங்க பாரேன் தரு.. யார் வந்திருக்கான்னு..” என்றார் ஆச்சர்யமாய்.

ஜனனிக்கு அவரின் ஆச்சர்யம் பார்த்து முகம் தானாக மலர்ந்தது.

மதி “எவ்வளோ நாளாட்சி இந்த புள்ள.. நம்ம வீட்டுக்கு வர… இப்போவெல்லாம் மேடம் பிஸி. பார்க்கவே முடியலை” என தன் மகளிடம் புகார் வாசித்தார் ஆற்றாமையாய்.

மலர்ந்த முகத்தோடு ஜனனி “சாரி அத்த..” என்றாள்.

இப்போது தாரா போன் வழியே “எப்படி டா, இருக்க” என்றாள், ஆசையாக.

ஜனனி போனை வாங்கி பேச தொடங்கினாள் “நல்லா இருக்கேன் க்கா..” என தொடங்கி எல்லோரையும் கேட்டு பேசினாள். குழந்தைகளை பார்த்தாள் போனின் வழியே.. ப்ரித்வி, அப்போதுதான் அலுவலகத்திலிருந்து வந்தார் போல.. தாரா, தன் கணவனிடம் ஜானு பேசுவதாக சொல்ல.. அவரும், போனை வாங்கி.. “எப்படி டா இருக்க.. மாமாவ ஞாபகம் இருக்கா” என்றார்.

ஜனனிக்கு அந்த வார்த்தையில் கண் கலங்கியது.. “அப்படி எல்லாம் இல்ல, மாமா.” என்றாள் அமைதியானக் குரலில், சட்டென, அவளின் முகம் வாடி நிறம்மாறி போகிற்று. ஏனோ, பெண்ணும், தன்னை எப்படி எல்லாமோ தேற்றிக் கொண்டாலும்.. யாரேனும் அக்கறையாக இப்படி பேசினால்.. கொஞ்சம் உடைகிறது மனது. அதிலும் சின்னதிலிருந்து பார்த்த ப்ரித்வீ மாமா இப்படி கேட்கவும்.. இயல்பாக தான் தோற்ற நிலை.. கண்முன் வந்துவிட்டது அவளுக்கு. முயன்று தன்னை சமாளித்துக் கொண்டாள்.   

ப்ரித்வியும், அவளின் வாடிய முகத்தை பார்த்து “சரி விடு, எப்படி போகுது வேலை.. எத்தனை பேருக்கு.. மருந்தை மாற்றிக் கொடுத்த..” என்றார், கிண்டலாக.

ஜனனி, எல்லாம் தள்ளி வைத்து சிரித்தாள் “உங்களுக்குத்தான் அப்படி கொடுக்கணும்ன்னு, வெயிட் பண்றேன்.. வாங்க… ” என்றாள் விளையாட்டாய்.

தாரா “ஹா.. ஹா.. அப்படி சொல்லு.. ஒரு இரண்டு நாள் எங்களை மட்டும் ஞாபகம் இருக்கிறா மாதிரி ஏதாவது மருந்து கொடு ஜானு.. வேலை வேலைன்னு எங்களை மறந்திடுறார்..” என்றாள்.

ஜனனி “அக்கா, நான் டாக்டர். மந்திரவாதி ஆக்கிடுவ போல..” என்றாள் கலகலவென சிரித்துக் கொண்டே.

மதி, எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டே வேலை செய்துக் கொண்டிருந்தார் கிட்செனில்.

இன்னும் சற்று நேரம் பேசி முடித்து வைத்தனர் மூவரும்.

ஜனனி இப்போதுதான் “அத்தை, என்ன பண்றீங்க” என கிட்சென் உள்ளே வந்தாள்.

மதி “உனக்கு அடை ஊற்றுறேன் டா.. மாவு அரைச்சேன் காலையில். ரொம்ப வருஷம் கழிச்சி அத்தை வீட்டுக்கு வந்திருக்க.. சாப்பிடலைன்னா எப்படி. இரு, சட்னி அரைக்கிறேன்.. வெண்ணை, வெள்ளம் எல்லாம் இருக்கு டா… இரண்டு நிமிஷம் இரு..” என்றார்.

ஜனனி “அத்த, அங்க அண்ணி உங்களை சாப்பிட கூட்டி வர சொன்னாள்.. ஏதாவது செய்திட போறா..” என்றாள்.

மதி “நீ போன் பண்ணி சொல்லிடு.. நானும் நீயும் இங்கேயே சாப்பிடுறோம்ன்னு.. போனே பண்ணு” என்றார்.

ஜனனி அப்படி செய்தாள்.

ஜனனி, மெல்ல மெல்ல பேச தொடங்கினாள் “என்ன அத்த பொழுது போகுதா…” என்றாள்.

மதி “அதுக்கென்ன நல்லா தான் போகுது. இவனுக்கு பொண்ணு பார்த்துட்டே இருக்கோம்.. ஒன்னும் இன்னும் அமையலை.. முதலில் ஒரு நாலு வரன் சரியா வந்தது. ஹம்… இவன் பிடிகொடுக்கவே இல்லை, தட்டி போச்சு.. அடுத்த ரவுண்டு பார்க்க ஆரம்பிச்சிருக்கேன்.. என்ன பண்ணுவானோ தெரியலை. இவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைச்சிட்டா என் கடமை முடிஞ்சிடும்.” என்றார், திருமண வயதில் மகனை வைத்திருக்கும் எல்லா அம்மாக்களின் புலம்பலாக.

ஜனனிக்கு, தலை சுற்றியது இந்த பேச்சில். ஒன்றும் சொல்லாமல் தலையசைத்தாள்.

மதி “போ டிவி போட்டுக்கோ.. சாப்பிடு, வரேன்” என்றார்.

ஜனனி, கிட்சென் திட்டில் அமர்ந்து உண்ணத் தொடங்கினாள். பழைய கதைகள் பேசினர் இருவரும்.. மதி “பக்கத்து வீட்டு, பூமா எப்படி இருக்கான்னு தெரியலை உடம்பு சரியில்லைன்னு கேள்வி பட்டேன்.. போய் பார்க்கணும்” என ஏதேதோ பேச்சுகள் சென்றது இருவரிடமும்.

மதியும் அவளோடு உண்டார். பின்னர், கிட்செனில் நின்று மதி பாத்திரம் தேய்க்க.. ஜனனி பேசிக் கொண்டிருந்தாள். இருவரின் பேச்சிலும்.. சுகுமாரி வந்தார். சில அக்கம் பக்கத்து வீட்டார் வந்து சென்றனர். நேரம் கடந்ததே தெரியவில்லை இருவருக்கும்.

கார்த்திகேயன் பத்து மணிக்கு பெண்ணின் போனுக்கு அழைத்தார். அப்போதுதான் நேரம் பார்த்தனர் இருவரும். ஜனனி “சாரி ப்பா.. வரேன்” என்றாள்.

தன் மதி அத்தையை விட்டு செல்லவே மனதில்லைதான் ஜனனிக்கு, ஜனனி “அத்த, நீங்க எப்படி தனியா இருப்பீங்க.. அன்று மாதிரி என் கூட படுத்துக்கோங்க.. வாங்க” என வருந்தி வருந்தி அழைத்தாள்.

மதி “இல்ல டா, எனக்கு என்ன பயம்.. அதெல்லாம் நான் us லயே தனியா இருந்தவ.. நீ போ, நாளைக்கு உனக்கு டியூட்டி இருக்கா” என்றார்.

ஜனனி “இல்ல அத்த… சண்டே நல்லா தூங்கனும் அதான் என்னோட பெரிய பிளேன்” என்றாள்.

மதி, அவளின் தலை கோதி “நல்லா, நிம்மதியா தூங்கு.. குட் நைட்” என கூறி அவளை வழியனுப்பி வைத்தார்.

ஜனனி,  வீடு வந்தாள். இப்போதெல்லாம் எதையும் யோசிப்பதில்லை. உறங்கினாள்.

.

.

 

Advertisement