Advertisement

மரகத மழையாய் நீ!..

12

ஜனனி, மஹா அனுப்பிய செய்தியை பார்த்தாள்.  தலையில் கை வைத்துக் கொண்டாள்.. ‘என்னை நிம்மதியாகவே விடமாட்டார்களா’ எனதான் தோன்றியது அவளிற்கு. தான் வாங்கிய விடுதலையை அனுபவிக்கவே முடியவில்லை அவளால். ‘ஒருவன் தொலைந்தான் என நினைத்தால், அடுத்து இவன்..’ என மனதில் எண்ணம் அலை அலையாக எழுந்தது, அமர்ந்துக் கொண்டாள் பெண். 

மேலும் ‘இவன் இப்படி பேசுவது அத்தைக்கு தெரிந்தால் என்னை, என்ன நினைப்பார்… ச்சு, இவன் விளையாடுறானா.. உண்மைய சொல்றானா’ என குழப்பம் வந்தது, ஜனனிக்கு. ஒரு ஆசையோ.. ஏன், ஒரு நல்ல எண்ணம்.. கூட  வரவில்லை. ஏனோ இன்னமும் மஹாவை, அவளால் நல்லவனாக ஏற்க முடியவில்லை.

ஜனனியின், திருமணத்திற்கு முன் மஹா, அவளை நெருங்கி இருந்தால்.. ஒருவேளை.. ஜனனியின் எண்ணம் மாறி இருக்குமோ என்னமோ.. சரி, தெரிந்தவர்கள்.. அம்மா சொல்கிறார்.. என அவனை, பெண்  மனது ஏற்றிருக்குமோ என்னவோ. இப்போது, அவன் முதல் முறை தன்னிடம் நடந்துக் கொண்டது தொடங்கி.. அவளிடம், அவனின் எந்த செய்கைக்கும், நற்சான்றிதழ் இல்லை.

மேலும், அவளிடம் இருப்பது சூடு பட்ட, காயம் பட்ட.. ஆறாத வடு கொண்ட மனம். அதற்கு, லேசான ஆறுதல் என்றால்.. இப்போது சற்று நேரத்திற்கு முன் கிடைத்த.. விடுதலைதான். ஆனால் அதையும் இவன் சுக்கு சுக்காக உடைப்பதாக தோன்றியது.. இந்த மெசேஜ் பார்த்து, ஜனனிக்கு.

ஜனனி, மஹாவிடம் சொல்லியபடியே, அவனின் எண்ணை பிளாக் செய்தாள். கொஞ்சம் மனது திருப்தி அடைந்தது. ‘போதும்.. இந்த கல்யாணம்.. காதல்.. ஆசை.. என்ற பொய் மொழிகள் எல்லாம்.. போதும். இனி நான்.. எனக்கான ஆசை.. என் வேலை.. இது போதும் எனக்கு. இனி எந்த உறவையும் ஏற்க கூடாது..’ என ஒரு வைராக்கியம் எழுந்தது அவளுள்.. சின்ன புன்னகை முகத்தில் தானாக வந்தது.. ‘ஏன் கமிட் ஆகணும், ஏன்  ஏமாறனும்.. இனி நான் சந்தோஷமாதானே இருக்க போறேன்..’ என்ற புதிய பாதையும் அவளுள் பதிய, அடுத்த விடுதலையும் கையில் வந்ததாக தோன்றியது பெண்ணிற்கு.

சற்று நேரத்தில்.. ஜனனியின் தோழி சஹானா அழைத்தாள். இவர்கள், கல்லூரி தோழிகள். அவசர அவசரமாக ஜனனிக்கு திருமணம் நடக்கும் போது.. தோழியாக இவள் வந்திருந்தாள் திருமணத்திற்கு. அதன்பின் நடந்தவற்றை கேட்டு, வருத்தம் கொண்டு.. ஜன்னனியோடு  அடிக்கடி பேசுபவள்.

இன்று, ஜனனிக்கு டிவோர்ஸ் நாள் என தெரிந்து அழைத்தாள்.. இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அவள் அரசு மருத்துவமனையில் ஒரு வருடம் செர்விசில் இருக்கிறாள். எனவே அவள் இப்போது “வா, ஜானு.. வந்து, கொஞ்ச நாள் இங்க இருந்திட்டு போ..” என்றாள்.

ஜனனிக்கும், இப்போது அப்படி ஒரு எண்ணம் வந்தது.. இங்கிருந்து எங்கேனும் சென்று வரலாமா என தோன்றியது.

இருந்தும் வீட்டின் நிலை என்னவென தெரியாதே, அதை எண்ணி ஒரு பெருமூச்சு வந்தது அவளுள்.. ஜனனி “தெரியலையே விடுவாங்களான்னு, அண்ணனை கேட்கிறேன்.. எனக்கும் ஒருவாரம் எங்கையாவது போனால்.. போதும்ன்னு இருக்கு ப்பா..” என்றாள், அனிச்சையாய்  மஹா நினைவில். பின் பொதுவான நிகழ்வுகள்.. அடுத்தடுத்த தோழிகளின் திருமணம், வேலை என பேசிக் கொண்டிருந்து விட்டு போனை வைத்தனர் இருவரும்.

ஜனனிக்கு மனது சற்று அமைதியாக இருந்தது. தன் போனை சார்ஜ் போட்டு, வெளியே வந்தாள்.. தன் அண்ணி அழைத்தும்.

இரவு உணவாக அர்ச்சனா தானே இட்லி செய்து எடுத்து வந்திருந்தாள். இங்கே மதி ஆன்ட்டி, சட்னி மட்டும் அரைத்தார். நேரம் செல்ல.. எல்லோரும் உண்பதற்கு அமர்ந்தனர். உணவு பரிமாறிக் கொண்டிருந்தனர் பெண்கள். யாருக்கும் உணவு இறங்கும் போல் இல்லை.. பேச்சு ஏதும் அங்கு இல்லை, அமைதியாக உண்டார் எல்லோரும்.

வெளியே வந்த ஜனனி, மதியை அமர வைத்து, தான் பரிமாறினாள். மெதுவாக தானே பேச்சை ஆரம்பித்தால் “ஏன், அர்சு… ஹோல்செல்லர்  பார்த்துட்டியா.. அந்த வாட்ச் மேன் அண்ணா, கடை ப்ரீயா இருக்குன்னு சொன்னாரே” என்றாள் அர்ச்சனாவை பார்த்து. 

அர்ச்சனாவும் பதில் சொன்னாள், அதை தொடர்ந்து சூரி பேசினான்.. இப்படியே, பேச்சு.. அர்ச்சனாவின் பௌஃட்டிக்  ஆரம்பிக்க உள்ள கடை பற்றி சென்றது. எனவே ஜனனி, அமைதியாக தன் வேலையை செய்தாள்.

இப்போது மஹா வந்தான். எல்லோரும் அவனை வரவேற்று பேச தொடங்கினார். ஜனனி மீண்டும் தனக்குள் ஒடுங்கினாள். தன் அறைக்கு செல்லவே மனம் விழைந்தது. ஆனாலும், இப்போதுதான் வெளியே வந்தாள்.. எப்படி செல்லுவாள் எனவே அங்கேயே நின்றாள்.

மஹா, பொறுப்பாக “ஜானு, கை எப்படி இருக்கு..” என்றான், நேரடியாக.

ஜனனி, லேசாக தடுமாறியபடியே.. காதில் வாங்காதது போல, தன் வேலையில் கவனமாக இருந்தாள்.

சூரி, பதில் சொன்னான் “ஐஸ் ஃக்யூப்  வைச்சியிருக்கா, மெடிசின்.. ம், ஜெல் போட்டிருக்கா.. அது ஒண்ணுமில்ல சரியா போயிடும்.” என்றான்.

மஹா.. பரிமாறிக் கொண்டிருந்த அவள் விரல்களையே சில நொடிகள் பார்த்தான், அப்பட்டமாய் எல்லோர் எதிரிலும்.. தூரமாக நின்று ஆராய்ச்சியாக பார்த்தான். முன்பிருந்த சிவப்பு நிறமும், வீக்கமும் இப்போது இல்லை, அதை மனதில் கொண்டான்.

ராகவ் “சரி வா, சாப்பிடு மஹா..” என்றான்.

மஹா, தானே ப்ளேட் எடுத்து.. பரிமாறிக் கொண்டான். அமர்ந்து உண்டான்.

ஜனனிக்கு, அவனின் இந்த பார்வை.. பிடிக்கவில்லை. ஆனால், அவனை என்னமோ அவளால் தவிர்க்க முடியவில்லை. ‘வர மாட்டேன்னு போனான்.. இதோ, இப்போது சத்தமில்லாமல் வந்து நிற்கிறானே.. மாலையில் என்னால் முடியாததை செய்தானே, அந்த வசந்தை அப்படி அடிதானே.. ஏன்?’ என நினைவு வந்தது பெண்ணுக்கு. 

அடுத்த நொடி, ‘அதுக்குத்தான் தேங்க்ஸ் சொல்லியாச்சே…’ என மனம் எடுத்து கொடுக்க.. ‘அதானே.. விடு, ஏதாவது பேசினா.. இன்னும் ஏதாவது எந்த நம்பரிலிருந்தாவது மெசேஜ் அனுப்புவான்.. இவன் டைம் கிடைக்கும்ன்னு வெயிட் பண்றானா.. இல்லை, உண்மையா என் மேல இருக்கிற அக்கறையில் வசந்தை அடித்தானா?, அப்படி எல்லாம் அக்கறை வருமா இந்த படிப்பானுக்கு.. ம், வராதே… என்னமோ பொன்னும் பார்க்கிறாங்க.. இவன் எப்போதும் போல.. நம்மை சீண்டுறான். ஐயா.. ராசா, என்னை விட்டுட்டு டா…’ என அவன் தன் விரல் மீது செலுத்திய பார்வையில் பெண்ணின் மனம் கொஞ்சம் சலனப்பட்டு.. சஞ்ஜலப்பட்டது.

அதை தொடர விரும்பாமல், அவனை நினைக்க விரும்பாமல் கிட்சென் சென்று நின்றுக் கொண்டாள் ஜனனி.

மஹா, உண்டு முடித்து.. தன் அன்னையோடு, எல்லோரிடமும் விடை பெற்று தன் வீடு சென்றான். 

ஜனனி, பெரிதாக ஒரு ஆசுவாச மூச்சு விட்டாள். 

இன்றையநாள்.. இப்படி யாராலும் மறக்க முடியாத ஒரு நன்மையை செய்து சென்றிருந்தது.

மஹா, நேற்று வீடு வந்து, போனில் தன்னை தொலைத்தான். நீண்ட நேரம் எடுத்தது அவனின் மீட்டிங் முடியவதற்கு. அதிகாலையில்தான் உறங்கினான்.

எனவே, இன்று கொஞ்சம் லேட்டாக போகலாம் அலுவலகம். பொறுமையாக எழுந்து கிளம்பினான். நேரமும் பொறுமையாக சென்றது.

ஜனனியை, பார்த்தது முதல்.. மஹா கொஞ்சம் இளகி இருக்கிறான். அதிலும் நேற்றிலிருந்து.. சீண்டி, தட்டியேனும்.. எப்படியேனும் அவளை தனக்குள் பதியம் போட்டுக் கொள்ள முடிவெடுத்துக் கொண்டான். 

அவளை பார்த்தது முதலே, அவளிடம் நெருங்கும் வழிதான் தெரியவில்லையே தவிர.. வாய் ஓயாமல் இப்படி பாடும் வழி தெரிந்துக் கொண்டான். 

காலையில் எழுந்ததும்.. சுப்ரபாத்மாக இந்த பாடல் வீடு முழுவதும் ஒலிக்கும் “ஜனனி.. ஜனனி.. 

ஜகம் நீ அகம் நீ… 

ஜெகத் காரணி நீ.. 

பரிபூராணி நீ…” என்ற பாடல்தான் முதலில் கேட்பது. அவன் எழுந்துவிட்டான் என அவனின் அன்னை மால்ட் எடுத்துக் கொண்டு வருவார்.

இந்த பாட்டு மட்டுமல்ல, அவளின் போட்டோ எல்லாம் அவனின் போனில் இருக்கிறது. என்னமோ உற்று உற்று பார்த்துக் கொள்கிறான். ஆனால், போட்டோவில் கூட அவளிடம் சரியாக பேச வரவில்லை அவனிற்கு.

மஹா, இன்று, ஜிம் செல்லவில்லை. எனவே, ஹாலில் இருந்த பால்கனியில்.. ட்ரைசைக்கிளிங் செய்துக் கொண்டிருந்தான். 

மதி “ஏன் டா இவ்வளோ லேட்” என்ற கேள்வியோடு அவனின் நாளை ஆரம்பித்து வைத்தார்.

உடற்பயிற்சி முடிந்து.. உண்டு அலுவலகம் கிளம்பினான் மஹா. வேலை அவனை இழுத்துக் கொண்டு சென்றது. நேற்றைய ரிபோர்ட் எல்லாம் அனுப்பிவிட்டு, தனக்கான நேரம் எடுக்கவே, நேரம் இல்லை அவனுக்கு. மதிய உணவுக்கு கூட செல்லவில்லை.. நேரம் தீர்ந்ததே தவிர வேலை தீரவில்லை.

மாலையில்தான் கொஞ்சம் ப்ரீ ஆகினான். இப்போதுதான் ஜனனிக்கு அழைத்து பார்த்தான். நேற்று அவள் தன் மெசேஜ் பார்த்துவிட்டாள் என தெரிந்தாலும்.. அவளிடமிருந்து எந்த பிரதிபலிப்பும் வரவில்லையே.. எனவே, இப்போது அவளின் எண்ணிற்கு அழைத்தான். ஒரு மனம் முழுவதும் ‘உனக்கே தெரியும், அவள் உன்னை பிளாக் செய்திருப்பாள்’ எனதான் சொன்னது. ஆனால், இப்போதுதான் உறுதியாகிய காதல் மனது ‘இல்ல, போனா போகட்டும்ன்னு.. விட்டிருப்பா’ என ஆசை காட்டியது.. 

நிறைய ஆசையோடு காத்திருந்தான், பாவம்.. இவனின் அழைப்பு, அவளின் போனை எட்டவில்லை.. எனவே, ‘பிளாக் பண்ணிட்டா’ என சிரித்துக் கொண்டான் மஹாதேவ்.. மேலும் ‘ஏன் காதலுக்கு ஃப்பார்ம்லாஸ் எல்லாம் சரியா வரமாட்டேங்கிது.. இல்லை, நான் தப்பா யூஸ் பண்றேனா’ என சீரியஸ்ஸாக யோசித்தான்.

மஹாவின் மனமும் ‘அவளை கொஞ்ச நாள் ப்ரீயா விடனும்’ என  நினைக்கிறது. ஆனால், தன் அம்மாவின் பெண் பார்க்கும் படலம்.. அவனை துரத்துகிறது. ‘எப்படியாவது இந்த அம்மாவ.. கொஞ்சம் நிறுத்த வைக்கணும்’ என எண்ணிக் கொண்டான். ஆனாலும், தான் இந்தியா வரும் போது கொடுத்த வாக்கு.. வேறு அவனுக்கு நினைவுக்கு வருகிறது, அவனுக்கு. எனவே மஹா, ஹைடன் அண்ட் சீக் விளையாடினான் தன் அம்மாவிடம், அடுத்த வாரம் முழுவதும்.

ம்… தன் அம்மாவின் கண்ணில் படவேயில்லை. அதிகாலையில் விழிப்பது, ஜிம் செல்லுவது.. வந்ததும், பத்து நிமிடத்தில் அலுவலகம் செல்லுவது என தன்னை எப்போதும் பிசியாக இருப்பதாக காட்டிக் கொண்டான். 

அம்மாவிடம் எப்படி இருந்தாலும்.. ஜனனியிடம் தன் முகத்தை தினமும் காட்டினான். எப்போதும் போல.. அவளுடன் லிப்ட்டில் செல்லும் நேரத்தை தவறவிடாமல்.. சென்றான். ஏதும் பேசவில்லை, அவளை தொந்திரவு செய்யவில்லை ஆனாலும் தான் இருப்பதை உணர்த்தினான்.

மதி, தாராவிடம் புலம்பத் தொடங்கினார். தாராவும் எப்போதும் போல தம்பியை அழைத்து பேசினாள்.. எப்போதும் போல, தன் அக்காவை சமாளித்தான் மஹா.

ஜனனிக்கு, அவனின் அமைதியான போக்கு.. ‘அப்பாடா’ என்றானது. எல்லாம் மீண்டும் இயல்பானது.

ஜனனி, இந்த நாட்களில் தன் அண்ணனிடம் சஹானா வீட்டிற்கு செல்வதற்கு அனுமதி வாங்கி இருந்தாள். ஒருமாதம் ஆகியிருந்து அதற்கே. 

ப்பா, டிவோர்ஸ் பேப்பர் கையில் வந்துவிட்டது. அதுவே ஜனனிக்கு சிறகுகளை தந்திருந்தது. நீண்ட நாட்கள் சென்று.. எல்லா வடிவேல் காமெடிக்கும் சிரிப்பு வந்தது. வாட்ஸ்சப்பில் வந்த எல்லா மீமீஸ்சும், அவளுக்கு ஒரு வாடாத புன்னகையை தந்திருந்தது. மனம் எதையும் யோசிக்காமல் இருந்தது, ‘இது போதும்.. இப்படியே கடத்திட வேண்டும் நாட்களை.. எந்த கமிட்மெண்ட்ஸ்சையும் எடுக்க கூடாது’ என தனக்குள் சொல்லிக் கொண்டு தன் தோழியின் வீட்டிற்கு கிளம்பினாள்.

கார்த்திகேயனுக்கு பயம் இன்னும் தீரவில்லைதான். ஆனாலும், சஹானா, அவரை  அழைத்து பேசி.. ‘தான் பார்த்துக் கொள்வதாக’ சொல்லி அவளை தன் வீட்டிற்கு அழைத்து வந்தாள்.

ஒரு வாரம்  நாட்கள் சஹானா வீட்டில் இருந்தாள், ஜனனி. தோழிகள் இருவரும் கதை கதையாக பேசினர். என்னமோ தீரவேயில்லை, கல்லூரி நாட்களின் நினைவுகள். அடுத்து அடுத்து தோழிகளின் எண்களை வாங்கிக் கொண்டாள் ஜனனி. இந்த வருடங்களில்.. தன் நடப்பை விட்டு, விளகியிருந்தாளே.. எனவே, நட்பை புதுப்பித்துக் கொண்டாள்.

சஹானா, வீட்டில் எல்லோரும் அன்பாக பார்த்துக் கொண்டார். எல்லோரும் அவளின் கடந்தகால வாழ்க்கை பற்றி தெரியாதது போலேவே காட்டிக் கொண்டனர். அதனால், ஜனனி கொஞ்சம் தன் கூட்டிலிருந்து வெளிவர தொடங்கினாள். படபடவென மாடி படி இறங்கினாள். தன் கேர்லி ஹேரை.. அயன் செய்துக் கொண்டாள். இப்படி தோழிகள் இருவரும் நான்கு நாட்களை கடத்தினர்.

சஹானா, வீட்டிலிருந்து ஏற்காடு பக்கம்.. தோழிகள் இருவரும் சஹானாவின் அம்மாவை துணைக்கு அழைத்துக் கொண்டு.. ஏற்காடு பயணமாகினர்.

சஹானாவின் மாமா காபி எஸ்டேட் பார்ட்னர். எனவே, அதை சுற்றி பார்க்க ஏற்பாடு செய்து தந்திருந்தார். கிளம்பினர் மூவரும். 

சிறு பெண்ணாக, ஜீன் ஷர்ட் பிட் ஷர்ட் அணிந்துக் கொண்டாள் ஜனனி. ஜனனிக்கு அந்த இடம்.. நிறைய மாறுதலை தந்தது. ஏற்காட்டின் சாலையில் பாதி தூரம் சென்றதும் பிரியும் கிளை சாலையில் வண்டி நகர்ந்தது.

பெரிய கேட் கொண்டு.. அடைத்திருந்தனர் அந்த காபி தோட்டத்தை.. யார் என்ன என விசாரித்து.. இவர்களுக்கான பாதையை காட்டினர். காய்ந்து உதிர்ந்த சரகுகளால்.. நிறைந்திருந்தது அந்த சாலை. காலை பத்து மணி என்பதே அந்த இடத்தில் தெரியவில்லை.. ஓங்கி வளர்ந்த ஒக் மரங்களும்.. தைல மரங்களும் முழுமையாக ஆக்கிரமித்திருந்தது, அந்த இடத்தை.

சற்று தூரம் மேலே ஏறி.. ஒரு சமமான இடத்தில் அளவான ஒரு வீடு. இரண்டு அடுக்குளை கொண்டிருந்தது. மேலே இவர்களுக்கான தங்குமிடம் என பணியாளர்கள் அறிவித்தனர். மேலே சென்று.. சற்று நேரம் ரெஸ்ட் எடுத்துக் கொண்டு, கீழே வந்தனர்.

ஒரு பணியாளர் துணை வர.. மூவரும் அந்த காபி தோட்டத்தின் உள்ளே சென்றனர்.. ப்பா… இயற்கையின் வாசம்.. மழை.. மரம்.. காபி செடி.. மிளகு கொடி.. உலர் சருகுகள்.. என எல்லாம் கலந்த ஒரு சுத்தமான வாசம்.. அந்த ஈர காற்றில்.

ஜனனி,  தன் காதுகளை மஃப்லரில் நுழைத்துக் கொண்டாள்.. “ம்ஹீரீம்… ம்ஹீரீம்..” என பூச்சிகளின் சத்தம்.. விண்ணையும் தட்டும் போல.. உள்ளே செல்ல செல்ல.. லேசாக இருட்ட தொடங்கியது.. மேகங்கள் கீழே இறங்கும் என கேட்டதுண்டு.. அவள் அதை பார்த்தாள்.. இப்போது. நீண்டு வளர்ந்திருந்த மரங்களுக்கு நடுவில்.. மேகங்கள் தங்கி சென்றது.

சுற்றி.. சுற்றி.. இயற்கையின் புதையல், என்ன என்னமோ செடிகள்.. வண்ண வண்ணமாய் காட்டு பூக்கள்.. எப்போதாவது அசையும் தைல மரங்களிலிருந்து வரும் யூக்கலிப்ட்டஸ் வாசனை.. கூடவே சில அணிகளின் சத்தம்.. புதிதான பறவைகள் ஒலி என அந்த இடம் அவ்வளவு அழகாகவும் உணர்வு பூர்வமாகவும் இருந்தது..

ஜனனி, ஓங்கி வளர்ந்து நின்ற ஓக் மரங்களையே பார்த்திருந்தாள்.. துணைக்கு வந்த இரண்டு பணியாளர்களும், அந்த மரத்தின் ஆயுள் குறித்து விவரித்தனர்.. ‘இது வெள்ளைக்காரன் வைத்தது.. நூற்றண்டை தொட போகிறது..’ என சொல்லி முடித்தனர்.. ஜனனி அந்த மரத்தை தன் விரல்களால் வருட.. அவளின் மேனி சிலிர்த்தது.. அவ்வளவு பெரிய அகலமான மரம் அது.

ஜனனி “வா…சஹா, இதை கட்டி பிடி..” என்றாள். ம்கூம்… இருவர் சேர்ந்து பிடித்தும்.. அதனை அணைக்க முடியவில்லை.. அந்த பணியாளர் ஒருவரும் வந்து நிற்கவும்.. இன்னும் இடம் இருந்தது.. அந்த மரத்தை சுற்றி அணைப்பதற்கு.. சஹானாவின் அன்னை, இதை போனில் புகைப்படம் எடுத்தார்.

அடுத்து, காபி செடியின் வகைகள்.. அதன் நிறம்.. பெருமை எல்லாம் சொல்லினர். பார்க்கவே கருப்பும் சிவப்புமாக காய்கள் விட்டு அந்த பச்சை நிற காபி செடி.. அவர்களை மிகவும் ஈர்த்தது. கூடவே ஊடு பயிராக மிளகு கொடி ஆங்காங்கே மரங்களில் பின்னி பிணைந்து நின்றது. மேடும் பள்ளம் எல்லா இடத்திலும் காபி செடிகள் இருக்க… அங்கே சிறிய ஓடையாக நீர் ஓட.. எல்லோரும் அமர்ந்தனர், ஈர நிலத்தில். 

பணியாளர் ஒருவர்.. பாலில்லா காபியும்.. கோகோ  பிஸ்கெட்டும் கொண்டு வந்து பரிமாறினார். ப்பா.. ஒரு புதிய அனுபவம் ஜனனிக்கு.. கண்கொட்டாமல் வளர்ந்து நின்ற மரங்களையே அதிகமாக பார்த்தாள். விதவிதமான போட்டோக்கள் எடுத்துக் கொண்டனர்.. 

“குழந்தை என மீண்டும் மாறும் ஆசை..

எல்லோருக்கும் இருக்கிறதே…

சிறந்த சில நொடிகள் வாழ்ந்துவிட்டேன்..

என் உள்ளம் சொல்கிறதே…”

இந்த இயற்க்கை எப்போதும் போல.. இவர்களையும் பிரமிப்பில் ஆழ்த்தியது.

மாலையில் கீழே இறங்கினர் மூவரும்.

மறுநாள் ஜனனி சென்னை வந்தாள். என்னமோ இன்று தன் வீடே கொஞ்சம் வண்ணமயமாக தெரிந்தது. ஜனனி “தேஜு..” என சத்தமாக அழைத்தாள்.. ஆவலுடன் அமர்ந்து கண்மணி ரயிம்ஸ் பார்த்தாள்.

Advertisement