Advertisement

மரகத மழையாய் நீ!..

11

ராகவ் கார்த்திகேயன் ஜனனி மூவரும், காலையில் கால் டாக்ஸ்யில்தான் கோர்ட் வந்தனர். சூரியும் பார்கிங்க்கு பயந்து கார் எடுத்து வரவில்லை.. 

மஹாதான் அலுவலகத்திலிருந்து காரில் வந்திருந்தான். எனவே, அதை பார்க்கிங்கில் இருந்து எடுத்து வர சென்றான்.

அதற்குள் இங்கே.. வசந்த், சூரி ஜனனி நின்றிருந்த இடத்தின் அருகில் வந்திருந்தான். இருவரும் கவனிக்க வில்லை.. ஜனனி, சற்று மயக்கத்தில் இருப்பதால்.. அங்கிருந்த தூணி சாய்ந்து நின்றுக் கொண்டிருந்தாள். 

சூரி “ஜானு, காயத்ரி அண்ணி, இதுவரை இருபது தடவை கூப்பிட்டாங்க.. பேசு..“ என போனை எடுக்கவும் வசந்த் குரல் கேட்கவும் சரியாக இருந்தது.

வசந்த “என்ன.. மேடம், நீங்க நினைச்சது போல.. டிவோர்ஸ் கிடைச்சிடுச்சி, அப்புறம் என்ன.. அடுத்து கல்யாணம்தான். ஆனா.. என்னை, உன்னால என்னைக்கும் மறக்க முடியாதுல்ல.. ம்…” என சொல்லி கோணலாக சிரித்தான்.

இப்போது சூரி “டேய்…” என வசந்திடம் பாய்ந்தான். ஜனனி, தன் நண்பனின் கையை பிடித்து இழுத்துக் கொண்டே திரும்பி நடந்தாள்.

அவர்களை பின்தொடர்ந்த படியே வசந்த் “ம்.. இவன்தானா லக்கி பெல்லோ, இல்லையே, இவன் எப்போதும் உன்கூட இருக்கிறவனாச்சே.. இவன் எப்படி கட்டுவான்.. இவனுக்குதான் எ…எல்லாம் தெரியுமே… ம்…” என, இழுத்தபடியே நக்கலாக சொல்ல.. 

சூரி “டேய்.. போடா… உன்னை யாருன்னு, கோர்ட்டில் தோலுரிச்சாச்சு.. இனி, நீ பல்லு போன.. பா… ச்சி… ச்சி.. நாய்…” என்றான்.

வசந்த, கோவமாக.. கைகள் லேசாக உதறியது “டேய்… “ என சூரியின் சட்டையை பிடிக்க வந்தான்.

ஜனனி, சூரியை இழுத்துக் கொண்டே வெளியே செல்லும் பாதையை நோக்கி இவள் நடக்க.. சூரி அவனிடம் வாயாடியபடியே வர.. வசந்த் தொடர்ந்து வந்துக் கொண்டிருந்தான்.

சூரியின் போன் ஒலிக்க.. அதை எடுத்துக் கொண்டே.. வசந்தை பார்த்து “என்ன, அதுதானே நீ…” என அவனை சீண்டினான், அவனின் அமைதி பார்த்து.

சூரி, போனை ஜனனியிடம் கொடுத்தான்.

வசந்த், அங்கேயே நின்றான் கைகள் நடுங்க…

போனில் மஹாதேவ் என பெயர் தெரிய.. ஜனனி என்ன செய்வது என தெரியாமல் காதில் வைத்தாள். மஹா “சூரி, வாங்க ஃப்ரான்ட் கேட்டில் நிற்கிறேன்..” என்றான்.

ஜனனி “ம்..” என சொல்லி போனை வைத்தாள்.

ஜனனி “சூரி, ஏன் அவன் கூட.. ச்சு.. உன் ஸ்டேட்டஸ்க்கு.. இப்படி இறங்குவியா? அப்பாவை வர சொல்லு.. இந்தா.. கார் அங்க நிற்குதாம்… மஹா சொன்னான்” என்றாள் எரிச்சலாக.

சூரி “ஆமாம், அவனுக்கெல்லாம் பயப்படுவாங்களா… ராஸ்கல்.. ச்சு.. என்ன செய்ய, கோவம் போக மாட்டேங்கிது…” என சொல்லி, போனில் ராகவ்க்கு அழைத்துக் கொண்டே ஜன்னியோடு வெளியே சென்றான்.

வசந்த் இதையெல்லாம் வெறித்து பார்த்திருந்தான். அவனுக்கு இப்போது வெறி வந்தது.

ராகவ் போனில்.. “நான் மஹா கூட இருக்கேன்” என சொல்ல.. ஜனனி, சூரி இருவரும் வெளியே வந்தனர்.

கார்த்திகேயன் “ஏறு ம்மா.. முதலில் இங்கிருந்து போலாம்” என்றார்.. மாலை நேரம் ஆகிவிட்டிருந்தது, வசந்த் வேறு.. இப்போது அவரின்  கண்ணில் பட.. தந்தை அவசரப்படுத்தினார்.

ஜனனிக்கு, இப்போதும் மஹாவின் கார் என யோசனை.. காரின் கதவில் கை வைத்து ஒரு நொடி யோசித்து நின்றாள்.

அதற்குள், மஹா இதை பார்த்து ஓட்டுனர் இருக்கையிலிருந்து இறங்கினான்.. சூரியிடம் சாவி கொடுத்தான் “ப்ரோ நீங்க எடுங்க.. ஜானுவை ஃப்ரன்ட்ல உட்கார சொல்லுங்க..” என்றான் இறுக்கமானக் குரலில்.

ராகவ், இதை கவனித்து.. “ஜானு ஏறு” என சொல்லி.. வலது பக்கம் பின் இருக்கையில் ஏற சென்றான். 

கார்த்திகேயன் இடது பக்கம் ஏறினார்..

சூரி, சாவியை வாங்கிக் கொண்டு வலது பக்கம் செல்ல, ஜனனி, முன்புறம் இடது பக்கம் ஏற கதவில் கை வைத்துக் கொண்டு.. மஹாவை பார்த்தாள்.. ‘அவன் எங்கு அமர்வான்’ என.

சரியாக வசந்த் வந்தான் அவசரமாக.. ஜனனியின் பக்கம் திறந்திருந்த காரின் கதவை.. அவளின் கைகள் இருக்குமிடத்தில் பட்டென சாற்றினான்… இமைக்கும் முன் நடந்துவிட்டிருந்தது. 

சாற்றியவன் வேகமாக நடக்க.. மஹா, ஜனனியின் அலறலில் என்ன நடந்தது என தெரியாமல்.. வசந்த் அந்த பக்கம் செல்லுவதை பார்த்து.. அவன் சட்டையின் பின் பக்க காலரை பிடித்திருந்தான்.

மஹா “என்ன ஜானு.. என்ன ஜானு..” என்றான்.

பதிலே இல்லை அவளிடம்.. சூரி, இறங்கி இங்கு வர.. மற்ற இருவரும் இறங்கினர். ஜனனி தன் கையை பிடித்துக் கொண்டு வலி பொறுப்பதை பார்த்த மஹா, வசந்தை பார்க்க.. அவன் இப்போதும் போல வன்மமாக  பார்த்துக் கொண்டிருந்தான், ஜனனியையே.

மஹா, இப்போது அவனை கீழே தள்ளி உதைத்தான். கீழே இறங்கிய ராகவ்வும்.. தங்கையின் வலி கொண்ட முகம்.. பார்த்தவன், மஹாவோடு சேர்ந்துக் கொண்டு அவனை உதைக்க தொடங்கினான். 

இப்போது, வகையாக வசந்த் சிக்கிக் கொண்டான். எழுந்து கொள்ள முயற்சிக்க முயற்சிக்க.. கொடூரமாக இருவரும் மாறி மாறி மிதித்தனர் அவனை.

சூரி, ஜனனியை காரில் ஏற்றி அமர்த்தினான். கார்த்திகேயனையும் இறங்க விடவில்லை.. “இருங்கப்பா.. நாலு அடி.. வைப்போம்.. நம்ம கோவம் கொஞ்சம் தீரும்.. இருங்க.. இருங்க..” என அவரையும் இறங்க விடவில்லை.

ஜனனிக்கு, இரண்டு விரலின் நுனியும் நன்றாக சிவந்து இருந்தது.. இருந்தும், அந்த விரல்களை பிடித்துக் கொண்டு.. வசந்த் அடி வாங்குவதை வெறித்து  பார்த்தாள்.. என்னமோ பெண் மனதில் ஒரு ஆசுவாசம், சாந்தம்.. ஒரு அமைதி.. சின்ன ஆனந்தம்.. என கூட சொல்லலாம்.. இயல்பாக பெண்ணிற்கு தோன்றும் இரக்கம் வரவில்லை ‘என் இயலாமையை பயன்படுத்தி.. என் சூழ்நிலையை சாதகமாக்கிக் கொண்டு.. காரியம் சாதித்துக் கொண்டவன்..‘ என மனதில் ஓட.. இமைக்க மறந்து பார்த்திருந்தாள். வசந்த்தில் அலறல் சத்தம் “டேய்.. யூ…. டேய்…. “ என இயலாமையால் வந்தது.. ‘அன்றும் இப்படிதானே நான் அலறினேன்..’ என பெண் மனம் எண்ணிக் கொண்டது.. மஹாவின் ஷூவின் தடம் அவனின் முகத்தில்.. மாறி மாறி பதிய.. எங்கேயோ பட்ட காயத்தின் வடுக்கள் எல்லாம் மறையத் தொடங்கியது.. ஜனனிக்கு. வசந்த் முனகத் தொடங்கினான்.. என்னமோ பெண் மனதிற்கு அது “ஓம் சாந்தி..” ஒலியாக கேட்டது போல.. ஆழ்ந்து அந்த சத்தத்தை உள்வாங்கினாள் ஜனனி. 

மஹா, இப்போது அந்த வசந்த் கையின்.. மணிக்கட்டை மிதித்தான்.. நன்றாக தரையில் அழுத்தி அழுத்தி மிதித்தான் தன் ஷூ காலால்… வசந்த் நடுங்கிய உடலோடு அலறினான்.

கூட்டம் கூட தொடங்கியது..

சூரி “ப்ரோ, வாங்க வாங்க.. “ என நாலுமுறை அழைத்து, காரிலிருந்து இறங்கி வந்து.. மஹாவை கூட்டி சென்றான் காரிற்கு.

நன்றாக கூட்டம் வரும்முன் எல்லோரும் கிளம்பிவிட்டனர்.

நடு ரோட்டில் அனாதையாக கிடந்தான் அந்த சைகோ. எங்கோ எப்படியோ பெண்ணிற்கு எதிராக நடந்துக் கொள்ளும் ஒவ்வொருவரும், எப்போதேனும்.. இப்படி ஒரு நிமிடத்தை அனுபவிப்பர். இந்த பிரபஞ்சம்.. எண்ண அலைகளால் ஆனது. அந்த எண்ணம் ஏழை, பெண், ஆண், பணம் என வேறுபாடு காட்டாது.. நல்லதுக்கு நல்ல பலனும், இப்படி அற்பத்திற்கு, அபத்தமான பலனும் கிடைத்தே தீரும் போல.

காரில் யாரும் பேசவில்லை.. மஹா பின்பக்கம் ஏறிக் கொண்டான்.. தன் புல் ஹன்ட் ஷர்ட்டின் மேல் பட்டன் கழற்றிக் கொண்டு, கையின் பட்டன் கழற்றிக் கொண்டே.. சாய்ந்து அமர்ந்தான்.

காரின் ஏசி முழு வீச்சில் இருந்தும்.. அவனை குளிர்விக்கவில்லை அது. 

கார்த்திகேயன் “ஏன் டா, இப்படி பண்றீங்க.. அவன் வேற புதுசா ஏதாவது இழுத்துவிட போறான்.. என் பொண்ணு நிம்மதியா இருந்தா போதும் டா…” என்றார், ஆயாசமானக் குரலில்.

சூரி “அப்பா, விடுங்க அதெல்லாம் ஒன்னும் பண்ண முடியாது அவனால.. சும்மா எத்தனைநாள் பயப்படறது.” என கார்த்திகேயனிடம் சொன்னவன், மஹாவை பார்த்து “ப்ரோ, அதென்ன, அந்த மிதி மிதிக்கிறீங்க… ப்பா.. கண்டிப்பா.. ப்ராக்சர் ஆகியிருக்கும் அவனுக்கு” என்றான் சிரித்துக் கொண்டே.

மஹா, இன்னமும் வசந்திலிருந்து வெளிவராமல்.. தன் தலையை கோதிக் கொண்டான்.. லேசாக நிமிர்ந்து அமர்ந்தான்.

வீடு வந்தனர்.

எல்லோரும் நேரே ஜனனி வீட்டிற்கு சென்றனர்.

மதியும் காயத்ரியும்.. ஹாலில் இருந்தனர்.

மதி “போ ஜானு போய்.. தலைக்கு குளி.. இன்னியோட எல்லா சனியும் தொலையட்டும்” என்றார்.

ஜனனி அமைதியாக சென்றாள்.

காயத்ரி “இரு ஜானு காபி குடிச்சிட்டு போ” என்றாள்.

ஜனனி “பத்து நிமிஷம் வந்திடரேன் அண்ணி” என்றாள், அமைதியானக் குரலில்.

எல்லோரும் அமர்ந்து, பேசிக் கொண்டிருந்தனர். காயத்ரி, காபி எடுத்து வந்தாள். சூரி, ராகவ் இருவரும் கதையாக அங்கு நடந்ததை சொல்லிக் கொண்டிருந்தனர்.

மஹா, வசந்த்தை  அடித்தது பற்றியும் சொல்ல.. மஹா அமைதியாக அமர்ந்திருந்தான். 

சரியாக ஜானு வெளியே வந்தாள். டைனிங் சேரில் அமர்ந்தாள்.

மதி, எழுந்து சென்று.. அவள் அமர்ந்திருந்த இடத்திற்கு சென்று.. அவளின் தலைமுடியை துவட்டிக் கொண்டே.. “அப்படிதான் அப்போவே படுக்க வைச்சிருக்கனும் இவன்களை எல்லாம்..  என்னமோ போனதெல்லாம் போகட்டும்.. இனி ஜானுக்கு ஒன்னுக்கு இரண்டு அண்ணன்கள்.. இனி நல்லபடியா விசாரிச்சு.. ஒரு வாழ்க்கைய அமைச்சி தந்திடுவாங்க…” என்றார் தன் மகனின் செயல் கேட்டு பெருமிதமாக.

மஹா, எழுந்துக் கொண்டான் சிரித்துக் கொண்டே.. “சரி ம்மா, நான் போறேன்.. நீ எப்போ வர” என்றான். அவனிற்கு இதற்கு மேல் இங்கிருந்தால்.. அவளின் குழந்தைக்கு என் மடியிலேயே அமர்த்தி காது குத்தி விடுவர் என தோன்றியது. எனவே எழுந்துக் கொண்டான்.

காயத்ரி “இரு மஹா.. சாப்பிட்டு போலாம்.. அர்ச்சனாவும் வருவா.. சூரி இங்கதான் இருப்பான்.. இரேன்” என்றாள்.

சட்டென அனிச்சையாய் ஜனனியை பார்த்தான் மஹா.. ஏனென்றே அவனிற்கே தெரியவில்லை. ஹாலையே பார்த்துக் கொண்டிருந்த ஜனனி, சட்டென திரும்பி.. காபி கோப்பையை பார்த்தாள்.. அவனின் பார்வையை உணர்ந்து.

மஹா “இல்ல க்கா, நான் முடிஞ்சா வரேன்… இல்ல, அம்மாகிட்ட கொடுத்து விடுங்க” என்றவன் நிற்காமல் ராகவ்விடமும், காரித்திகேயனிடமும் விடைபெற்று சென்றுவிட்டான்.

அர்ச்சனா வந்தாள்.. ஜானுவும் அர்ச்சனாவும் அறைக்குள் சென்றுவிட்டனர்.

நேரம் சென்றது.

மஹா, குளித்து வந்திருந்தான்.. அவனை அடுத்து யோசிக்க விடாமல், அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்து கொண்டே இருந்தது. ஒவ்வொன்றாக பேசிக் கொண்டிருந்தான். ஒரு மணி நேரத்திற்கு மேல் சென்றது. 

இப்போதுதான் சற்று போனின் சத்தம் ஓய்ந்தது.

ஒரு ஷாட்ஸ்.. டீ ஷர்ட் அணிந்து ஹாலில் அமர்ந்திருந்தவன்.. ஒரு ஆசுவாச மூச்சு விட்டு எழுந்தான். போனை சார்ஜரில் போட்டு, ஹாலில் உள்ள பால்கனியில் வந்து நின்றான்.

அவனிற்கு இது பிடித்தமான இடம்.. தன் சித்தப்பா வீட்டிலிருந்து நீல நிற சங்கு பூ செடியை நான்கு தொட்டிகளில் வைத்து.. அதற்கு கம்பி கட்டி படர விட்டிருந்தான் அந்த இடம் முழுவதும்.. என்னமோ, அந்த பூக்களை பார்க்கும் போதெல்லாம், அவள் கண்கள் நினைவு வருகிறது இப்போதெல்லாம் இவனுக்கு. 

கொடியாக இப்போதுதான் படர்ந்துக் கொண்டிருக்கிறது. ஆங்காங்கே நாலு பூக்களும் பூக்க தொடங்கி இருந்தது.. இந்த இரவு தொடங்கும் நேரத்தில் எல்லாம் வாடி போகிற்று. 

இருந்தும்.. அந்த இடம் அமைதியை தந்தது அவனுக்கு.. சிலு சிலுவென காற்று.. அவனை தொட, அதை காதலியாக எண்ணிக் கொண்டான் போல.. அவனின் சிகை கலைத்து விளையாடியதும்.. அமைதியாக கைகட்டி நின்றுக் கொண்டான், அதனிடம் தன்னை கொடுத்து.

மனதில், ஜானுவின் சிவந்து ரத்தம்கட்டிய விரல்கள் கண்முன் வந்தது.. வசந்தின் கோர முகம், சூரி மூலம் மஹா அறிந்திருந்தான். இப்போது அவளின் சிவந்த விரல்களை பார்த்ததும்.. ஒரு நடுக்கம் அவனுள்.. சூரி சொன்னது நினைவில் வந்தது.. ‘நினைவில்லாமல் வந்தாளாமே சென்னைக்கு..’ என அன்றைய நிலையை எண்ணி.. பரிதவித்துக் கொண்டிருந்தான், மஹா.

அவளிடம் தன்னுடைய இடம் எதுவென அவனிற்கு புரிகிறது. அவளோ எந்த நிலையிலும் தன்னை நிமிர்ந்து பார்க்க கூடாது என இருக்கிறாள் என உணர்கிறான், அவளின் செய்கையில். ஆனாலும் என்னுடைய அக்கறை அவளை பாதிக்காமலா போகும் என தாடையை தடவிக் கொண்டான்.. தன்னுடைய கர்வம் மேலோங்க..

‘அவள் பார்க்கிறாளோ இல்லையோ.. என்னால், அவளை தாண்ட முடியாது..’ என மனம் சொல்ல, தன் அம்மாவின் பேச்சு வேறு.. கிண்டலாக நினைவு வர.. முகம் ஒரு புன்னகையை எடுத்துக் கொண்டது.. ‘அஹ… இன்னும் இவங்களை வேறு பார்க்கனுமா’ எனதான் அந்த  புன்னகை. 

ஜனனியை பார்க்கும் ஆவல் வந்தது அவனுள்.. தன் அம்மா அங்கிருப்பது நினைவு வரவும் ‘ஏதேனும் மீண்டும் சொல்லி விடுவார்கள்’ என எண்ணி.. போனெடுத்து அவளுக்கு மெசேஜ் அனுப்பினான்.. “கை எப்படி இருக்கு.. மருந்து இருக்கா” என அனுப்பினான்.

ஜனனி முதல்முறை அவனிற்கு ஒரு மெசேஜ் செய்தாள் பெண்.. “எல்லாத்துக்கும் ரொம்ப நன்றி. ப்ளீஸ் இனி எனக்கு மெசேஜ் பண்ணாத.. நான் உன்னை பிளாக் பண்றேன்.. ப்ளீஸ் என்னை தனியே விடு.. குட் பை..” என ஒரு மெசேஜ் வந்தது.

சட்டென அவள் பதில் அனுப்புவாள் என எதிர்பார்க்கவில்லை அவன் எனவே, அதை ஆவலாக எடுத்து படித்தவனுக்கு பெரிய ஏமாற்றமே.. மனம் அதிர்ந்தது.. ஆனாலும், உதடுகள் அதிராத புன்னகையை கொண்டிருந்தது.

போனோடு, நேரே ஜனனியின் வீட்டிற்கு சென்றான்.

போக போக எதோ போனில் டைப் செய்துக் கொண்டே சென்றான்.. இவன் அங்கே செல்லும் முன் ஜனனிக்கு ஒரு செய்தி அனுப்பி இருந்தான்.. “ஹா.. ஹா… சிலது ஏன் நடக்குதுன்னே தெரியாது. நானும் யோசிச்சிருக்கேன்.. ஏன் உன்னை இப்படி நினைக்கிறேன்னு. உன்னை பார்க்கும் வரைக்கும் கூட, நீ கைவிட்டு போயிட்டன்னு தான் நினைச்சேன்.. அப்போ கூட, ச்சு, சொல்லவே கேவலமா இருக்கு, சொல்றேன்.. அம்மா, காட்டின எல்லா பொண்ணு போட்டோவிலும், உன்னை மாதிரி கேர்லி ஹேர்.. பொன்மஞ்சள் நிறம்.. துரு துரு கண்.. இப்படிதான் தேடினேன்.. சொல்லவே எனக்கு கேவலமா இருக்கு, என்ன செய்ய.. எப்படியோ உள்ளே வந்திட்ட.. இப்போ, இப்படி.. உன்னை பார்த்ததும்.. இன்னும் என்னால் விடமுடியலை.. போடி.. போ.. பிளாக் பண்றாளாம்.. பண்ணு.. எத்தனை நம்பர பண்ணுவ… போ, போய் ரெஸ்ட் எடு.. என்னையும் குழப்பி, உன்னையும் குழப்பிக்காத.. குட் நைட்.. ” என்றான், அதிரடியாய் ஒரு செய்தியை அவளிற்கு அனுப்பி.

“மரங்கள் சாய்ந்து கூடு வீழ்ந்தும்..

குயில்கள் ராகம் பாடுமே..

இரவு தீர்ந்து ஓய்ந்த போதும்..

நிலவு பொறுமை காக்குமே..”

Advertisement