Advertisement

அவசரமாக சட்டென.. கீழே வந்துவிட்டாள், பெண். ஹாலில் விளக்கு போடாமல் அமர்ந்துக் கொண்டாள்.. கண்ணில் நீர் வந்தது ‘ஏதோ சரியில்லை’ என உள்மனம் அடித்து சொன்னது. 

இன்னொரு மனம் ‘இப்போ யாரு டிரிங் பண்ணாம இருக்காங்க.. இப்போ அதெல்லாம் காமன். நீ எல்லாத்தையும் பயத்தோட பார்க்கிற’ என சொல்லியது இன்னொரு  மனம். ஒன்றும் புரியவில்லை அவளுக்கு.

வேலையாட்கள் இன்னமும் பேசும் சத்தம் கேட்டது.. அதில் தன் காதுளை வைத்தாள்.. ‘என்ன சத்தமே இல்ல’ என்றார் ஒருவர்.

மற்றொருவர் “வரும் வரும்.. நம்ம போலாம் ப்பா..” என்றார்.  

முதல் குரல் “இந்த பொண்ணு பாவம்..” என்றார். இரண்டாம் குரல் “என்ன பாவம். எல்லாம் காசு… இல்ல, அது டாக்டர்ராம்.. அதான், கட்டிக்கிட்டார்.. எதுவும் தெரியாமையா இருக்கும்..’ என்றனர், மாற்றி மாற்றி எதோ பேசினர், இரண்டு ஆண்குரல்களும்.

ஜனனிக்கு ஒன்றும் புரியவில்லை.. ஆனாலும், ‘எதுவுமில்லை’ என ஒதுக்க முடியவில்லை. அங்கேயே ஹாலில் சோபாவில் கால்களை குறுக்கி படுத்துக் கொண்டாள். மேலே கணவன் குடிக்கும் போது செல்வதற்கு பயமாக இருந்தது பெண்ணுக்கு.

வசந்த், கீழே வரவோ.. மனையாளை காணவில்லை எனவோ தேடவில்லை. இரவில் பெண் நீண்ட நேரம் விழித்திருந்தாள்.. புது பெண்ணின் கனவு என்னவாக இருக்குமோ.. அத்தனையும் அவளிடம் இருந்தது. ஜனனிக்கு ‘சென்னை, தன் வீடு எனபதால் தன்னை நெருங்க தயங்குகிறார்’ என நினைத்திருந்தாள். இந்த திருச்சியின் கணவனை மிகவும் தேடினாள் பெண். நீண்ட நேரம் காத்திருந்து.. தானாகவே உறங்கினாள் ஜனனி.

காலையில் இவள் எழுந்து மேலே சென்று, தன் உடைகள் எடுத்துக் கொண்டு, மற்றொரு அறையில் குளித்து.. வரும் வரையும் வசந்த் எழுந்துக் கொள்ளவில்லை. 

ஜனனிக்கு, இதை எப்படி எடுப்பது என தெரியவில்லை.. கேட்பாரே இல்லை.. இவர்களை. உணவு நேரத்திற்கு தயாரானது.. வேலைகள் இல்லை, கணவனும் பேசுவதில்லை.. எங்கும் செல்வதில்லை.. என்னமோ என யோசித்துக் கொண்டே கீழே வந்தாள்.

உணவு தயார் என வேலையாட்கள் அறிவித்தனர்.

ஜனனி அங்கு சென்றாள்.. தயங்காமல் அவர்களிடம் “அவருக்கு இன்னிக்கு, கீரை சூப்..“ என எதோ மெனு சொல்லினாள். பின் கணவனின் தினப்படி பழக்கங்களை கேட்டுக் கொண்டாள். நேற்றைய பேச்சுகள் உண்மையா, பொய்யா தெரியாது, அதை இப்படி வேலையாட்களிடம் கேட்பதும் முடியாது. ஆனாலும், கேட்க்காமல் இருக்கவும் முடியவில்லை. எனவே, தான் மருத்துவர் என்ற எண்ணத்தை அவர்களிடம் விதைத்து ஏதேதோ பேசினாள் ஜனனி.

அன்றையநாள் இப்படி யோசனையிலேயே சென்றது. வசந்த், கீழே வரவில்லை. காலை உணவு மேலே கொண்டு கொடுத்தனர் வேலையாட்கள்.

மதியம் இறங்கி வந்தான் வசந்த். நன்றாக உடையணிந்து வந்தான்.. ‘சாப்பிட்டியா.. என்ன செய்கிற’ என எதுவும் கேட்கவில்லை ஜனனியிடம், ஏன் நிமிர்ந்து.. கூட பார்க்கவில்லை. அவளிற்கு வசந்த் குரலே கேட்கவில்லை. அமைதியாக உண்டான்.. பரிமாறினாள் ஜனனி. உண்டு வெளியே சென்றுவிட்டான் வசந்த். 

வேலையாட்கள் அவசரமாக வந்தனர் “டாக்டர்.. எதுக்கு வெளியே போறாங்க.. வேண்டாம் சொல்லுங்க. உங்களுக்கு தெரியாதா. பெரியவரை கூப்பிட்டு சொல்லுங்க..” என்றனர் பரபரப்பாக.

ஜனனிக்கு, இப்போது எதோ என தோன்ற “என்னாச்சு” என விசாரித்தாள் பொறுப்பாக.

வேலையாட்கள் ‘உங்களுக்கு தெரியாதா’ என கேட்டு உள்ளே சென்றுவிட்டனர்.

ஜனனி “இல்லை, தெரியாது, அவருக்கு எதோ மஞ்சள்காமாலை வந்தது பற்றிதான் தெரியும்“ என்றாள், பதட்டமாக.

ஜனனி “என்னான்னு சொல்லுங்க.. இல்லை, நான் வெளிய போய்டுவேன்..”   என சற்று மிரட்டினால்.

பின் வேலையாட்கள் நடந்ததை சொல்லினர் ‘வசந்திற்கு கல்லூரியில் ஒரு காதல். அந்த பெண்ணிற்கு இவனை பிடிக்கவில்லை. ஆனாலும், இவன் விடாமல் துரத்த.. கல்லூரி முழுவது இது பிரபலமாகியது. 

வசந்தை, அந்த பெண்ணிற்கு பிடிக்கவில்லை என பரவியது. அப்போதே அது வசந்துக்கு கடுப்பை கொடுத்து. இன்னும் சற்று நாளில் அந்த பெண், வேறு பையனை காதலிப்பதாக வேறு செய்திகள் வர.. வசந்த்தின் ஈகோ பலமாக அடிவாங்கியது.

தன் பணம்.. பலம்.. எல்லாம் அவனின் ரத்தத்தில் ஊறியதாகிற்றே.. ‘என்னை எப்படி பிடிக்காமல் போகும்’ என அந்த பெண்ணை தினமும் தொந்திரவு செய்ய தொடங்கினான். கல்லூரி முடித்து, அவள் கிளம்பும் போது அவளின் வீடு வரை காரில் சென்றான். காலையில் அவளின் பாதையை தொடர்ந்தான். அந்த பெண்.. அமைதியாக இவனை கடக்க நினைத்தாள்.

தொடர்ந்து வருகிறான் அவ்வளவுதான் என அந்த பெண் அமைதியாக, வீட்டில்.. நண்பர்களிடம்.. என யாரிடமும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள். இந்த பெண்பிள்ளையின் அமைதி, வசந்த்திற்கு சாதகமானது போல. 

ஒருநாள் அந்த பெண்ணை காணவில்லை. கல்லூரிக்கு வந்ததாக அவளின் பெற்றோர் சொல்ல, அவள் வரவில்லை என கல்லூரி பதிவேடு சொன்னது. இவர்கள் கதை தெரிந்ததால்.. வசந்தின் பேரில் சந்தேகம் சென்றது.

சந்தேகமே வேண்டாம், அவனையும் காணவில்லை.. எல்லா இடமும் தேடியது போலீஸ். இரண்டு நாட்கள் தொடர்ந்து தேடியதில் கரூர் அருகில் எதோ தோட்டத்து வீட்டில் இருவரையும் கண்டுக் கொண்டனர். அந்த பெண் குற்றுயிரும் குறையுயிருமாய் இருந்தாள். போலீசே கொஞ்சம் மிரண்டு போனது இவனின் இந்த கோரமுகத்தை பார்த்து.

சத்தமில்லாமல் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் போலீஸ். வசந்தின் வீட்டிற்கு சற்றும் குறையாத செல்வாக்கு கொண்டவர்கள் பெண் வீட்டார். அதனால், விஷயம் வெளியே தெரியாமல் பாதுகாக்கவே போலீஸ் முயன்றது.. செல்வாக்கு என்பதை விட ‘ஒரு பெண்’ என்ற எண்ணமே பிரதானம் அந்த காக்கி சட்டை மனிதர்களுக்கு.

அந்த பெண்ணின் உறவுகள் நண்பர்கள்.. எல்லாம் மருத்துவமனை வர.. அப்போது வசந்த்திற்கும் சிகிச்சை நடந்துக் கொண்டிருந்தது. போலீஸ் ஆட்களை வெளியே அனுப்பிவிட்டு.. வெளுத்துவிட்டனர்.. வசந்தை, பெண்ணின் உறவுகளும் நட்புகளும். அதில் பட கூடாத இடத்தில் அடி விழ.. வசந்த் உயிர் பிழைத்தது அதிஷ்ட்டமே.. (அவனின் தவறுக்காக கடவுள் அவனின் ஆண்மையை எடுத்துவிட்டார். இதை வேலையாட்கள் சொல்லவில்லை) இப்போதும் கொஞ்சம் அவன் டென்ஷன் ஆனாலும், அவன், அவன் வசம் இருக்கமாட்டான்.

வசந்த் சார்பாக பாதுகாப்புக்கு ஆட்கள் இருந்தனர்தான், ஆனாலும், சிலதை தடுக்க முடியவில்லை.. வசந்தின் தந்தையால்.

எதோ மாஸ் படத்தில் வரும் கதை போல.. நிற்காமல் சொல்லி முடித்தனர் வேலையாட்கள். கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு அடிவயிற்றில் காந்தியது.. ‘ஒரு பெண்ணை கடத்திக் கொண்டு போய்.. வீரம் காட்டியவனா’ என. அமைதியாக அமர்ந்திருந்தாள் ஜனனி.

வேலையாட்கள் வசந்தின் தந்தைக்கு அழைத்து பேசி இருந்தனர். அவர் ‘வருகிறேன்..’ என்றார்.

சற்று நேரத்தில் வசந்தின் அன்னை வந்தார். ஒரு ஆண் நர்ஸ் வந்தார். ஒருமணி நேரம் சென்று, வசந்த் வந்தான். கொஞ்சம் தள்ளாடிக் கொண்டே வந்தான் அவ்வளவுதான். அந்த நர்ஸ் பரிசோதித்துவிட்டு.. ‘ஒன்றுமில்லை’ என்றவர், கிளம்பினார்.

வசந்தை, கவனமாக வேலையாட்கள் இருவர் மேலே சென்று படுக்க வைத்தனர்.

ஜனனி, திகிலோடு எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தாள். யாரிடம் பேசுவது என தெரியவில்லை. மாமனார் மாமியார் இருவரும் ஒன்றும் சொல்லாமல், அவள் அங்கேதான் இருக்கிறாள் என கண்டுக் கொள்ளவில்லை. 

மாமனார், வேலையாட்களிடம்.. ‘அவனை பார்க்கத்தானே நீங்க…’ என எதோ சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். மாமியார் உண்டு உள்ளே சென்றுவிட்டார். மாமனார் “காலையில் பேசலாம் ம்மா, அவனை டிஸ்ட்ரப் பண்ணாத” என இப்போதுதான் ஜனனி இருப்பதாக பாவித்து, பேசி, உள்ளே சென்றுவிட்டார்.

ஜனனிக்கு ‘என்ன நடந்தது இங்கே’ எனதான் கேட்க தோன்றியது. ஒன்றும் புரியாமல் அமர்ந்திருந்தாள்.. ‘அப்பாவிடம் சொல்ல வேண்டும்’ என தோன்றவில்லை. சொல்லி இருந்தால் அப்போதே ஏதேனும் வழி பிறந்திருக்கும்.

ஹாலிலேயே உறங்கினாள்.

மறுநாள், நேற்று போலவே குளித்து வந்தாள். மாமியார் மாமனார் இயல்பாக பேசினர் “வீட்டுக்கு பேசினியா ம்மா” என்றார் மாமியார்.

ஜனனி “இல்ல அத்த,” என்றாள்.

மாமனார் “ஒன்னுமில்ல ம்மா, இதெல்லாம் பெருசு பண்ணாத.. உனக்கு ப்ரெக்ட்டீஸ் பண்ண ஹாஸ்பிட்டல் ஏற்பாடு செய்துட்டேன் ம்மா.. என் ப்ரெண்ட் ஹாஸ்ப்பிட்டல்தான், ஒருவாரம் அவன் வந்திடுவான்.. அப்புறம் போகலாம். என் பேர் சொன்னால் போதும்” என்றார் சிரித்துக் கொண்டே.

ஜனனி, கொஞ்சமாக சிரித்த்தாள் “அவருக்கு என்னாச்சு மாமா” என்றாள், கார்த்திகேயன் வெளியுலகம் தெரியாமல் வளர்த்த குழந்தை. 

Advertisement