Advertisement

மரகத மழையாய் நீ!..

(நிறைவு பகுதி)

இன்று மஹா வாசலிலேயே பார்வையை வைத்துக் கொண்டே அமர்ந்திருந்தான். ஒருவாரம் சென்று இன்று ஜனனி, தன் வீடு வர போகிறாள். எனவே காத்துக் கொண்டிருக்கிறான். 

மஹா ஜனனியின் நிச்சயம் விரைவில் நடந்தது போல திருமணம் நடக்கவில்லை. இந்த கொரொனோ வந்து அவர்களின் திருமணத்தை தாமதப்படுத்திவிட்டது எனலாம். 

முதல் அலையில் அவர்களின் திருமண தேதி இருந்தது. எனவே, நிச்சயம் முடிந்து நாட்களை அழகாகத்தான் கடந்தனர் மணமக்கள். ஜனனி MD படிக்கவும் வகுப்புகள் தொடங்கி ஒரு மாதம் சென்றிருந்த நிலையில் கொரொனோ எனும் கொடுநோய் பரவியது.

அதனால்,  ஜனனிக்கு படிப்பு நின்றது, அவளின் மருத்துவ தேவை அவள் முன்பு வேலை செய்த இடத்தில் தேவைப்பட்டது. எனவே அவளுக்கு திருமணத்தை விட.. மருத்தவமனையில் தன் தேவை இருப்பதே பெரிதாக உணர்ந்தாள் ஜனனி. அதனால் இவர்களின் திருமணம் தள்ளி போனது.

முதல் அலையில் ஜனனி வீடு வரவே இல்லை எனலாம். அந்த நான்கு மாதமும் வேலை.. அடுத்து, தனிமைப்படுத்திக் கொண்டு, அடுத்த சுற்று வேலை, எனதான் சென்றது.. அவளின் நாட்கள்.

மதியும் காயத்ரியும் வேண்டாத தெய்வமில்லை எனலாம், குடும்பமே அப்படி ஒரு வேண்டுதல் அவளுக்காக.  ஜனனி, ஆரோக்யமாக இருக்க வேண்டும் என. வேண்டுவதை தவிர வேறு வழி இருக்கவில்லை குடும்பத்தார்க்கு..

மஹாவிற்கு, வீட்டிலிருந்துதான் வேலை.. அந்த நேரத்தில். ஆனாலும் அவளிடம் பேசவோ.. பார்க்கவோ முடியவில்லை. அவளிற்கு முழு வேலை அப்பொழுதெல்லாம்.

அவளின் வேலை நேரத்தில் பார்க்கவே முடியாது. அவள் அடுத்த பதினைந்து நாள் தனிமைப்படுத்திக் கொள்ளும் போதுதான் மஹாவினால், சிறிது நேரம் பார்க்கவே முடியும்.

ஆனால், அது கொடுமையானதாக இருந்தது அவனுக்கு, அவளை தூரமாக நின்று பார்க்கவே முடியவில்லை மஹாவினால். ஒரு பெரிய ஹோட்டலிலோ, அல்லது மண்டபத்திலோ இருப்பாள். அங்கே செல்லுவான் தன்னவளை பார்க்க.. அப்போதும் தூரமாக நின்றுதான் பார்க்க வேண்டும். பார்த்துவிட்டு.. உறைந்து போய் நிற்பான் காதலன். பேச்சே வராது.. அருகில் சென்று அவளின் விரல் தொட்டு.. ‘சரியாகிடும்.. கவனமா இரு.. ’ என ஆயிரம் பத்திரம் சொல்ல நினைக்கும் மனம். ஆனால், இருவருக்கும் இடையேயான தூரம்.. எதோ நிச்சையமில்லா தன்மையை சத்தமில்லாமல் சொல்லும் இருவருக்கும். 

அவளை தூரத்தில் இருத்தி பார்க்கும் போதெல்லாம்.. ‘சீக்கிரம் வந்திடு டா..’ என மனதுள் சொல்லிக் கொள்வான். எங்கே சத்தமாக சொன்னால்.. தன்னுடைய திடமில்லா மனநிலை.. குரல் வழியே அவளை பாதிக்குமோ என மனதுள் ஒரு சின்ன எண்ணம்.. எனவே சத்தமில்லாமல் பார்த்துவிட்டு.. அங்கேயே நின்று.. போனில் அவளோடு பேசி விட்டு வருவான்.

போனில், ஆயிரம் பத்திரம் சொல்லுவான்.. மஹாவின் முகமே சரியாக இருக்காது. தூராமாக நின்று அவளின் மெலிந்த உடலையும்.. ஒட்டிய கன்னம் எல்லாம் பார்க்க பார்க்க.. எதுவுமே சொல்லு முடியாது அவனால்.

ஜனனிக்கும், அந்த நாட்கள்.. மருத்துவராக திடமாக இருந்தாலும்.. ஒரு மனுஷியாக மருத்துவமனையில் அந்த நோயாளிகள் படும் அவஸ்த்தையையும்.. பரபரப்பை.. இத்தனை வருடங்களில் பார்த்திராத போது,  ஒரு பயம்.. ஒரு நம்பிக்கையின்மை வந்துவிடுகிறது,  எவ்வளவு திடமான மனிதர்களாக இருந்தாலும்.

மருத்துவர்களாக, அவர்களுக்கு அவர்களே திடப்படுத்திக் கொண்டு.. அடுத்த நோயாளிகளை பார்க்க செல்ல வேண்டும். ஆக இந்த கொரொனோ நோய் எல்லோரையும் நிறைய பயம் கொள்ள வைத்தது. கூடவே மனிதம் உணரவும் வைத்து. ஒருவரின் வலியை கேட்க்கும் போதே அடுத்தவரின் கண்ணில் கண்ணீர் வரவும் வைத்து. இந்த உலகம் சார்புடையது என உணர வைத்து. மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், துப்புரவாளர்கள் என எல்லோரின் சேவையும் எவ்வளவு பெரியது என உணரவும் வைத்தது.

ஆக, அடுத்த நான்கு மாதம் சென்றுதான் வீடு வந்தாள் ஜனனி. அந்த வளாகத்தில் எல்லா மருத்துவர்களுக்கும் கொடுத்த வரவேற்பு போல அவளுக்கும் வரவேற்பு கொடுக்கப்பட்டது. 

அடுத்த பத்துநாள் அவள் தனிமையில்தான் இருந்தாள். அதன்பின்தான் வீட்டு மனிதர்களிடம் அமர்ந்து பேச தொடங்கினாள். அந்த நிலையில் திருமண பேச்சை எடுக்க வீட்டாருக்கு தோன்றவில்லை. எனவே அமைதியாக நகர்ந்தது நாட்கள். மஹா வீட்டிலிருந்து வேலையை பார்க்க.. ஜனனி, எப்போதும் போல மருத்துவமனை சென்றாள்.

இயல்பான நாட்கள் வர தொடங்கியது. மஹா, ஜனனியின் வருகைக்காக காத்திருக்க தொடங்கினான் மாலையில். அதுதான் இப்போது நடந்துக் கொண்டிருந்தது.

ஜனனி, இப்போது நார்மல் வார்டில்தான் பணி புரிகிறாள். அதனால் எப்போதும் போல குளித்து தன்னவனைப் பார்க்க வந்தாள், தன் அத்தை வீட்டிற்கு.

மஹா ஒரு நல்ல செய்தியோடு காத்திருந்தான்.. ம், கல்யாண நாள் குறித்துக் கொண்டு வந்திருந்தார் மதி. அதனால், அது குறித்து பேசத்தான் இந்த எதிர்பார்ப்பு மஹாவிடம்.

மதி, கோவிலுக்கு சென்றிருந்தார். இந்த தேதி நல்லபடியாக அமைய வேண்டும் என வேண்டிக் கொள்ள சென்றார். நாட்கள் அதிகம் இல்லை, அடுத்த பத்துநாளில் முகூர்த்தத்தேதி இருந்தது. இப்போதுதான் கூட்டம் வேண்டாம் என அரசு சொல்கிறதே, அதனால் மிகவும் எளிமையாக நடத்த முடிவு செய்திருந்தனர்.

மதி, நாள் குறித்துக் கொண்டு வந்ததும், நேரே கார்த்திகேயனிடம் சொல்லிவிட்டார். ஆக, இரு குடும்பமும் தங்களுக்குள் பேசி முடித்து விட்டது காலையில். தாரா மட்டுமே வெளியிலிருந்து வர இருப்பதால், அவளிடமும் சொல்லிவிட்டார், மதி.

எனவே எல்லாம் முடிவான நிலை, தேதி குறித்த இரண்டுமணி நேரத்தில். கடைசியாகத்தான் ஜனனியிடம் மஹா சொல்ல இருக்கிறான். அப்படி ஆவலாகக் காத்திருக்கிறது.. இவர்களின் திருமணத்திற்காக, இந்த இரு வீடும்.

ஜனனி “மஹா” என அழைத்துக் கொண்டே உள்ளே வந்தாள். ஜனனி இப்பது கொஞ்சம் பார்க்க நன்றாக இருந்தாள். இந்த ஒருமாதமாக வீட்டில் இருப்பதாலும்.. மனம் சற்று சமன்பட்டிருப்பதாலும்.. முகமும் உடலும் தேறி இருந்தது எனலாம்.

மஹா, ஹாலில்தான் அமர்ந்திருந்தான். தன்னவளை பார்த்தும் “வா ஜானு” என்றான் சிரித்த முகமாக.

ஜனனி “என்ன என்ன முகமே மின்னுது” என்றாள்.

மஹா, எழுந்து கிட்சென் சென்றான்.. தன் அம்மா செய்து வைத்து விட்டு சென்ற.. ஸ்வீட் எடுத்து வந்தான்.

ஜனனி “என்ன இது” என்றபடி ஆசையாக வாங்கிக் கொண்டாள்.

மஹா, அவள் எதிர்பாராமல்.. அவளை பின்னிலிருந்து கட்டிக் கொண்டான்.. தன் கைகளில் அத்தனை அழுத்தம் கொடுத்து.. அவளின் இடையை அழுத்தமாக பிடித்துக் கொண்டான் காத்திருந்த காதலன்..

ஜனனி திரும்ப முயன்றாள்.. ஜனனிக்கு இன்ப அதிர்ச்சிதான்.. அவனின் அணைப்பில் பெண்ணவளுக்கு தேகம் சிலிர்த்தது. தன் கையிலிருந்த இனிப்பை விட, மஹாவின் அழுத்தமான அணைப்பு அவளுக்கு அவ்வளவு பிடித்து.. மாதகணக்காக பெண்ணவள் மஹாவை தூரத்திலிருந்து பார்த்து.. அவளை, இம்சித்து இருந்தான். இப்போது இந்த அணைப்பு அவளுள்.. ஒரு திடமான மனநிலையை தந்தது. அவளை திரும்பவே விடாமல் அழுத்தமாகப் பிடித்துக் கொண்டான்.. பெண்ணவளின் சிலிர்த்த தேகம் இப்போது அவனின் கையில் துவளத் தொடங்க.. ஜனனியின் குரலும் குழைய “என்ன ம..ஹா…” என்றாள்.

மஹா அவளின் கழுத்து வளைவில் தன் உதடுகள் உரச “நமக்கு அடுத்த வாரம் கல்யாணம்.. இனி, நோ.. ஐசூலேட்.. நோ.. தள்ளி போ… நோ.. கிட்ட வராத… என இந்த பேச்செல்லாம் இல்லை.. இனி, எப்போதும் என் பக்கத்தில், என் வீட்டில்.. என் பெட்டில்..” என்றான் ரசனையாக.

ஜனனி “ச்சீ…” என்றாள் அவனின் கடைசி வார்த்தையை கேட்டு.

மஹா  “என்ன கல்யாணம் உனக்கு ச்சீயா” என்றான்.

ஜனனி, இப்போது திரும்பி அவன் முகம் பார்த்தாள்.. நீண்டநாள் சென்று அவனின் அருகாமை.. இதமான வாசனை திரவியத்தோடு அவனின் வாசம்.. கண்ணில் முழுவதும் காதலான பார்வையாக.. தன்னை பார்த்துக் கொண்டே இருப்பவனை, தன் மெல்லிய விரலால் கன்னம் தீண்டினாள்.. பெண். மஹா அதில் உருகினான்.. மெல்ல கண் மூடிக் கொண்டான்.. தென்றலாக தீண்டியது அவளின் விரல்கள்.. கன்னம்.. நெற்றி.. புருவம்.. என நீண்டு தலைக் கோதிய விரல்கள்.. அவனின் நெற்றி முடிகளை ஒதுக்கிக் கொண்டிருக்க.. அவளின் பாதம் கீழே தரையில் அழுத்தி, அந்த உந்துதலில் அவளின்  பொன்மேனி மேலெழும்ப.. பெண்ணவளின் ரோஜா இதழ்கள் அவனின் நெற்றியில் காதலாய் ஒற்றி எடுத்தது, முத்தமெனும் காதல் பரிசை. 

இத்தனை நாள் காத்திருப்பிற்கான பரிசாக தந்தாள் பெண்.. காதலான முத்தத்திற்கு… எந்த விளக்கமும் தேவையில்லையே.. அது எப்போதும்.. எந்த சூழ்நிலையிலும்.. காதல் பரிசு, காதலான பரிசுதானே.

மஹாவின் கடினமான காத்திருப்பிற்கு, இந்த பரிசு.. அத்தனை இதமாக இருந்தது. தானும் அப்படியே அவளுக்கு முத்தமிட்டான். நீண்ட நேரம் பேச்சே இல்லை இருவருக்குள்ளும்.. அத்தனை வலி.. தனிமை.. ஒரு பதட்டம்.. இத்தனை நாட்களாக இருவருக்கும். அதை சொல்லில் விளக்கி, பேசி.. என்பது காதலில் தேவையே இல்லையே. இதமான அணைப்பையும், காதலான முத்தத்திலும் சொல்லில் அடங்கா ஏக்கங்கள் தீருமே. அதனாலோ என்னோ.. அவளை கட்டிக் கொண்டே நின்றான் மஹா. முதலில் ஜனனி தயங்கினாலும்.. அவனின் அணைப்பில் கிறங்கியே நின்றாள் பெண்.

“இரண்டும் கைகோர்த்து.. 

சேர்ந்தது..

இடையில் பொய் பூட்டு.. 

போனது..

வாசல் தள்ளாடுதே…

திண்டாடுதே…

கொண்டாடுதே…”

ஜனனிதான் முதலில் சுதாரித்தாள்  “ம்.. எங்க அத்தை” என்றாள். அப்போதுதான் மஹா தன் பிடியை தளர்த்தி அவளை விடுவித்தான்.

மஹா “அம்மா, கோவிலுக்கு போயிருக்காங்க..” என்றான்.

ஜனனி “என்ன தேதி… எங்க மேரேஜ்…” என கேட்டாள்.

மஹா ஒவ்வொன்றாக சொன்னான்.. அவளின் விரல்களை விடாமல்.

மதி, வந்தார். அப்போதும் அப்படியேதான் அமர்ந்திருந்தான் மஹா. ஜனனி எழுந்துக் கொண்டாள் மாமியாரின் வரவை உணர்ந்து..

மதி, ஜனனிக்கும் மஹாக்கும் திருநீறு வைத்து விட்டார்.. பின் “என்ன  டா.. ம்மா, மஹா சொன்னானா… உனக்கு ஒகே தானே.. அடுத்த என்ன என்ன நடக்குமோ, அதுக்குள்ள நம்ம வீட்டுக்கு வந்திடுடா தங்கம்..” என்றார் அன்பாக.

ஜனனி “கண்டிப்பா அத்தை…” என்றாள் சந்தோஷமாக. அதன்பின் பேச்சும் திட்டமிடலுமாக நேரம் சென்றது. ஜனனி இங்கே உண்டு தன் வீடு சென்றாள்.

ராகவ், இப்போது அவளிடம் திருமண செய்தியை சொன்னான்.. காயத்ரியும் வேலை எல்லாம் முடித்து வந்து அமர்ந்தாள்.. சற்று நேரத்தில் தந்தையும்  வந்து அமர்ந்தார். எல்லோரும் எங்கே நகை புடவை எல்லாம் எடுப்பது யாரை அழைப்பது.. எங்கே திருமணம் என எல்லாம் பேசினர். ஜனனிக்கு முன்போல.. எந்த ஒதுக்கமும் பயமும் இல்லை.. இயல்பாக எல்லாம் ஏற்றாள்.

திருமண நாளும் இனிதாக வந்தது.

கோவிலில் திருமணம். 

பெரிதான கோவில் ப்ராகராம்.. ஈரமான கருங்கல் பாதை.. மருதாணி வைத்த, மலர் பாதங்கள்.. தன்னவனை நோக்கி..  பொறுமையாக.. நிதானமாக.. வெட்கத்துடன்.. மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து.. நடந்து கொண்டிருந்தது. உடன் வந்த மற்ற பெண்களின் மெல்லிய கொலுசு ஒலிகள் நாதஸ்வரமாக  ஒலிக்க.. பெண்களின் சிரிபோசை மேளமென கேட்க.. ஜனனி, மரகத பச்சைநிற காஞ்சி பட்டு கட்டி.. கோவில் செம்பொன் சிலையென வந்து நின்றாள் தன்னவனின் அருகில்.

மஹாதேவ் ஆசைப்பட்டபடி, எல்லா சடங்குகளும் முறையாக நடந்தது.. அவனருகில்.. அவனை பெருமைப்படுத்திய படி ஜனனி நின்றாளா!.. இல்லை, அவளின் அருமையையும் பெருமையையும் உணர்ந்து மஹா நின்றானா!.. என தெரியவில்லை. ஆனால், அன்பும், நேசமும் இருவர் கண்ணிலும் நிறைந்து சிறு சிறு மரகத துளிகளாக… கண்ணீர் துளிகளாக.. மின்னிக் கொண்டிருக்கிறது.

சுற்றமும் நட்பும் மலர்தூவ.. இனிமையாக நடந்தது மஹாதேவ் ஜனனி திருமணம். இனி என்ன, காதல் அவர்களின் வாழ்நாள் துணையாக வரும்தானே!.

$&$&$&$

 

Advertisement