Advertisement

பனியும் குளிரும் கலந்த விடிகாலை காற்று திரைச்சீலைகளை தாலாட்டியபடி பாதி திறந்திருந்த கண்ணாடி ஜன்னல் வழியாக உள்வந்து அவ்வறையை நிறைக்க, இதமான குளிருக்கு வாகாய் இன்னும் அதிகமாக போர்வைக்குள் முடங்கிய அனுரதியின் சொகுசான தூக்கத்தில் பொறாமை கொண்டு ஐந்துமணி அலாரம் கூச்சலிட,

கண்ணைத் திறவாமலேயே அதை தலையில் தட்டி அடக்கியவள். திரும்பி படுத்து துயிலைத் தொடர, சிலபல நிமிடங்கள் காற்றில் கரைந்து போயிருந்தது.
சரேலென்று எழுந்து அமர்ந்தவள் வருடத்தின் முந்நூற்று அறுபத்தி ஐந்து நாளும் எழுந்ததும் செய்யும் முதல் வேலையை அன்றும் செய்தாள்.


கண்ணைத் தேய்த்தவாறே ஜன்னல் வழியே எதிர்வீட்டு பால்கனியையும், ஜன்னலையும் கூர்ந்து பார்த்தவள் இன்னும் இருட்டாக இருப்பது தெரிய வேகமாக மணியைப் பார்த்தாள். ஐந்தேகாலுக்கு பிறகு சிலநொடிகள் கடந்திருக்க தலையில் லேசாக அடித்தவாறே பல்துலக்கி, முகம் கழுவி வந்து சிறிய பொட்டை நெற்றியில் ஒட்டி தலையை ஒதுக்கியவள், மின்னலென கீழே இறங்கி வாசற்பக்கம் சென்று கோலம் போடும் வழிமுறைகளை எதிர்வீட்டில் ஒரு கண்ணோடு செய்துகொண்டு இருந்தாள்.

புள்ளி வைக்க அமர்ந்த நொடி எதிர்வீட்டு உள்கதவு திறக்கும் சத்தம் கேட்க, புள்ளி தள்ளி விழுந்தது.
எதிர்புறம் நங்கென்று வண்டியை உதைப்பதும் வெளிக்கேட்டை நச்சென்று மூடுவதும் கேட்கவே செய்ய நறநறவென பற்களை கடித்தாள்.


“ அறிவுகெட்ட தனமா தூக்கம் முக்கியம்னு தூங்குனியே!? காலையிலேயே இது உனக்கு தேவையா? அறிவே சுத்தமா இல்லை உனக்கு … “ என்று தனக்குள் தன்னையே மட்டமாக திட்டிய படி கோலம் போடுவதில் கர்மசிரத்தையாக இருந்தாளே தவிர மறந்தும் நிமிரவில்லை.


புல்லட் சத்தம் தெருவை விட்டு மறையும் வரை பொறுமையோடு கோலத்தை முடித்தவள். எதிர்வீட்டு எதிரியின் தலை மறைந்ததும் வேகமாய் எழுந்தவள்.


“ இவன் முகத்தில் முழிச்சா பசிக்கு பழையசோறு கூட கிடைக்காது, இந்த லட்சணத்தில் துரைக்கு நம்மள பார்த்ததில் கடுப்பு, பெருச்சாளிக்கு புல்லட் கேக்குது, ம்க்கும்” என்று தலையை சிலுப்பியவாறே வாய் திறந்து பேசினாள் அவன் சென்று விட்ட தைரியத்தில்!


கோபமாய் நின்றிருந்தவளை அவள் அன்னை அகல்யாவின் காபிமணம் உள்ளிழுக்க முகத்தை இயல்பாக்கி உள்சென்றாள். ஹாலில் ஜெகன் காப்பியோடு இருப்பதைப் பார்த்தவள்,


“குட்மார்னிங் பா” என்க,


“குட்மார்னிங் அனு” என்று மலர்ந்த முகத்துடன் மகளை பார்த்து விட்டு, அகல்யா என குரல் கொடுத்தார்.


கணவனின் அழைப்பு எதற்கு என அறிந்த மனைவியாய் தன் மகளுக்கான காபிதம்ளருடன் வெளியே வந்தார் அவ்வீட்டரசி.


“குட்மார்னிங் மா, நீங்க குடிச்சாச்சா?” என்று பொறுப்பான மகளாய் கேட்க,


“ஆச்சு அனு” என்றவாறே சோபாவில் அவளருகே அமர்ந்தவர் மகளின் கையில் ஒட்டியிருந்த கோலமாவை பார்த்துவிட்டு,


“வீட்டிலிருக்கும் பொழுது கொஞ்சம் மெதுவா எழுந்தா என்ன அனு, இந்த கோலம் போடுறதுக்காக அஞ்சு மணிக்கே எழனுமா?!

நாளையிலிருந்து நான் வேணா போடுறேன் நீ கொஞ்சம் தூங்குமா…” என அன்னையாய் பேசவும்,
“இல்லம்மா, காலேஜ் போறதுல இருந்தே இத்தனை மணிக்கு எழுந்து பழகிடுச்சு, உங்களுக்குத் தான் தெரியுமே! எனக்கு கோலம் போடுற வேலை பிடிச்சிருக்குமா…, நானே செய்கிறேன்” என்ற அனுரதி மேலாண்மையில் முதுகலைப்படிப்பை சென்ற மாதம் முடித்துவிட்டு, காம்பஸ் தேர்வில் ஒரு பன்னாட்டு கம்பனியில் தேர்வாகி அதனழைப்பிற்காக காத்திருப்பவள்.
ஜெகன், அகல்யாவின் ஒரே மகள், மூத்தவன் வெற்றிமாறனுக்கும், கடைக்குட்டி முகிலனுக்கும் ஒரே சகோதரி!


ஜெகன் மின்சாரத்துறையில் வேலை பார்க்கும் அதிகாரி. வேலைக்கு கிளம்ப அவரும், சமயலறைக்கு அகல்யாவும் சென்றுவிட, காபியை முடித்தவள் மணியைப் பார்த்து விட்டு,
“அம்மா , கமலாம்மாவை பார்த்துட்டு வரேன்” என்றவாறே வீட்டிற்க்கு வெளியே வந்து எதிர்வீட்டை அடைந்தாள்.


ஹாலில் யாரும் இல்லாததால் மாடியில் உள்ள பூரணியின் அறைக்குச் செல்ல படிகளை நோக்கி நடந்தவளை, உருளைக்கிழங்கு வாசனை தாக்க, அப்படியே யூ- டர்ன் போட்டு சமயலறைக்குச் சென்றாள்.

அங்கே ஈரத்தலையில் துண்டுடன் மங்களகரமாய் சமைத்துக்கொண்டிருந்த கமலாவைக் கண்டவள்,
“ கமலாம்மா” என புன்னகையுடன் அழைக்க,
கனிவான புன்னகையுடன் திரும்பியவர், “ வாடா காபி குடி” என்றார்.
“ குடிச்சிட்டு தான் வந்தேன் மா, பூரணி அக்கா எழுந்துட்டாங்களா மா…? “ என்று வினவ,


“காலையிலேயே மாப்பிளைக்கிட்ட, போன் பேசிட்டு இருந்தா…, போய் பாருடா, எனவும் சரியென நகர்ந்தவளை நிறுத்தியவர்,
“உனக்கு பிடிச்ச பூரியும், மசாலும் செய்றேன் அனு, இதோ பூரி சுடப்போறேன் சாப்பிட்டு போ…” என்றார்.


குண்டுகுண்டு பூரியும், மசாலும் நாக்கில் மெலிதாய் எச்சில் ஊற வைத்தாலும் சாப்பிட இருந்தால் சிலபல தீய சக்திகள் திரும்பி வரும் மணியாகி விடும் அதை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அபாயமணி ஒருபக்கம் அடிக்க,

“ இல்லை கமலாம்மா, அம்மா

சமைக்க அரம்பிச்சிட்டாங்க…” என வாய்க்கு வந்ததை உளற, சரி அப்போ போகும்போது சொல்லாமல் போகாதே எனவும்,


சரியென பூரணியின் அறைக்கதவை தட்டிவிட்டு உள்சென்றாள்,
அப்பொழுது தான் குளித்து விட்டு தலை துவட்டிக் கொண்டிருந்த பூரணி இவளை வரவேற்க,


“காலையிலேயே மாமா போன் பண்ணாங்க போல…” என சிரிப்புடன் கேட்டுக்கொண்டே அமர,
அழகாய் சிரித்தவள், அசோக் அடுத்தவாரம் ஊருக்கு வருவதைப் பற்றி சொல்ல,


“ அப்போ கமலாம்மா சொல்லிட்டு இருந்தாங்கலே கா, மாப்பிள்ளை வரப்போ முகூர்த்த புடவை மட்டும் எடுத்திரலாம்னு,” என்க,
“ ஆமா அனு, இதுக்கு பிறகு கல்யாணத்துக்கு தான் லீவ் கிடைக்கும் போல சொன்னார்” என்று விட்டு சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்க,


அனுரதிக்கு ஆர்ட் பேப்பர், களிமண், டெரகோட்டா போன்றவைகளை வைத்து கலைப்பொருட்கள் செய்வதில் விருப்பம் அதிகம், இப்பொழுது வீட்டில் இருப்பதால் அதுவே பொழுதுபோக்காக, இன்று அதற்காக சில சாமான் வாங்க போகலாம் என்று பூரணியை தயாராக சொல்லிவிட்டு கீழே வந்தவள்,


முரளியை கண்டதும் மாமா என அழைக்க,
“ வா அனுமா, சாப்பிடலாம்” என்று முரளி புன்னகைத்தார்.
இல்லை என கனிவாய் மறுத்தவளின் குரல் கேட்டு,
“ இரு அனு, ஒரு இரண்டு நிமிஷம்…” என்று சமையலறையில் இருந்து கமலா குரல் கொடுக்க,


மணியாகிவிட்ட பதட்டத்தில் வாசலை அடிக்கடி பார்த்தவாறே நின்றிருந்தவளை ஐந்து நிமிடத்திற்கு மேல் சோதித்தப் பிறகே வெளிவந்த கமலா பூரி பாத்திரத்தைக் கொடுக்க, அவரிடம் சொல்லி விட்டு வேகமாய் வாசலில் இறங்கி ஓடிவந்தவள், வண்டி நிறுத்திய சத்தத்தையோ, வெளிகதவை திறந்து வந்தவனையோ கவனிக்காமல் வந்தவேகத்தில் மொத்தமாய் மோதி, அதே வேகத்தில் ஓரடிபின் வந்து நின்றவள், ஒருநொடி கையில் இருந்த பாத்திரம் பத்திரமாய் இருக்கிறதா என்று பார்த்து ஆசுவாசப்படுத்தி விட்டு, அதை இறுக்கி பிடித்தபடி நிமிர்ந்து எதிரிலிருந்தவன் பேச வாயெடுப்பதை பார்த்து,


“முன்னாடி பார்த்து வரத்தெரியாதா?!… “ என்று பல்லைகடித்தபடி வார்த்தைகளை துப்பியவாறே அவனை எரித்து விடுவதைப்போல் பார்த்து விட்டு வேகமாக வெளிகதவை திறந்து அக்குட்டி ரோட்டைக் கடந்து தன் வீட்டின் வெளிகதவை திறந்து நுழைந்தவள், மெதுவாக திரும்பி பார்த்தாள். அவன் வீட்டிற்குள் சென்றிருந்தான்!


‘ஊப்…’ என்று பெருமூச்சை வெளியேற்றியபடி வெளியில் கிடந்த கூடை நாற்காலியில் அமர்ந்தாள்.
நல்லவேளை அவன் திட்ட வாயெடுக்கும் முன் வந்தாயிற்று என ஆசுவாசப்படுத்தி கொண்டாள்.
பின்னே இடித்தது மட்டும் இல்லாமல் ஏதோ அவன் வந்து மோதியது போல் பேசிவிட்டு… ம்ஹிம் திட்டிவிட்டு வந்திருக்கிறோமே..! என யோசித்தவள்,


மறுகணமே பின்னே அந்த மூஞ்சியை கொஞ்சுவங்களோ, செஞ்சவரை சரிதான் என சிலுப்பியவாறே வீட்டிற்க்குள் நுழைந்தாள்.

Advertisement