Advertisement

மறுநாள் காலை முரளிக்கும் விக்ரமிற்கும் உணவு பரிமாறிவிட்டு நிமிர்ந்தவள் கமலா வருவதையும் பார்த்துவிட்டு பொதுவாய் ஒரு பார்வையுடன்,

“மாமா… எனக்கு ஒரு விஷயம் தோணுது… எனக்கு ஆர்ட்,கிராஃப்ட்ஸ் டெக்கரேஷன்ஸ்க்கு இருக்கிற க்ளாஸ், கோர்ஸ் இதெல்லாம் படிக்கணும்னு தோணுது. இப்போ பார்க்கிற வேலை செட்டாகாத மாதிரி இருக்கு… நீங்க என்ன மாமா நினைக்கிறீங்க ?! நான் என்ன பண்ணட்டும்… சொல்லுங்க மாமா..” என்று அனுரதி கேட்க,

அவள் சொல்வதை அமைதியாய் கேட்டுக்கொண்டவர்,

“ நல்ல விஷயமா தான் படுது… வேலைக்கு போகணும்னு கட்டாயம் இல்லைதான்…நீ என்ன சொல்ற விக்ரம்…” என்றார் மகனிடம்,

அதுவரை அமைதியாக தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பதை போல உணவில் கவனமாய் இருந்தவன் நிமிர்ந்து,

“பிடிக்காத வேலையை மெனக்கெட்டு செய்யுறதுல எந்த பிரயோஜனமும் இல்லப்பா… பிடிச்சதையே படிக்கட்டும் நல்ல விஷயம் தான்…” என்றுவிட்டு சாப்பிடுவதை தொடர்ந்தான். அப்படியே அனைவரும் சம்மதிக்க,

“ அடுத்த வாரத்தில் இருந்து கோர்ஸ்க்கு ரெஜிஸ்ட்ரேஷன் ஆரம்பிக்குது, ஒருநாள் போய்  ரெஜிஸ்டர் பண்ணிட்டு வரலாம்..” என்று இம்முறை விக்ரமையே நேராய் பார்த்து அவள் கேட்க, அவனுக்கே ஆச்சர்யம்தான்! சரியென்பதாய் தலையாட்டினான்.

உண்டுமுடித்து அப்பாவிடம் போய் இந்த முடிவை சொல்லிவிட்டு வருகிறேன் எனவும் கமலா ஆச்சர்யமாய் பார்க்க,

“என்ன அத்தை, நம்ம வீட்டில முதலில் சொல்லிவிட்டு அப்பாகிட்ட சொல்லலாம்னு நினைச்சேன்…” என்றுவிட்டு சென்ற தன் மருமகளை பெருமையாய் பார்த்தார்.

பாதிவழி கடந்தபொழுது தன் அம்மாவிற்கு பிடிக்குமென எடுத்து வைத்த பொங்கல் ஞாபகம் வர , அச்சோ என திரும்பியவள் எதிரில் கிளம்பி வந்த விக்ரமாதித்தியனைப் பார்க்காமல் மோதிக் கொண்டாள்.

மோதிய வேகத்தில் அவனுக்கு கோவம் வரவே அவன் திட்ட  வாயெடுக்கும் முன் கோபமாய் முறைத்தவள் ‘ப்ச்’ என்று அலட்சியமாக சலித்தவாறே திரும்பி எதிர்வீட்டை நோக்கி விரைந்துவிட்டாள். கார் ஆக்சிலேட்டர் உருமும் சத்தம் தெருவை விட்டு மறைந்ததும் ஓடிவந்து எட்டிப் பார்த்தவள் நெஞ்சில் கைவைத்து அங்கேயே நின்றுவிட்டாள்.

“அம்மாடி…எப்படி கோபம் வருது…என்னைக்கு அடி வாங்க போறேன் தெரியலையே…ஆனாலும் நீ லூசுடி…” என்று வாய்விட்டே புலம்பியவள் சிறிது நேரம் தன்னை ஆசுவாசப்படுத்திவிட்டே வீட்டிற்குள் நுழைந்தாள்.

நாட்கள் யாருக்காகவும் காத்திராமல் அதன்போக்கில் கரைந்தோடின. விக்ரமும் அனுவும் இவ்வாழ்க்கைக்கு ஒருவாறாக பழகி விட்டிருந்தனர்!  முதல்நாள் மட்டும் அவளை விக்ரம் சென்று வகுப்பில் சேர்த்து விட மறுநாளில் இருந்து தன் ஸ்கூட்டியில் செல்ல ஆரம்பித்து விட்டாள். காலை பத்துமணிக்கு சென்றால் மூன்று மணிக்கு திரும்பிவிடுபவள் மீதிநேரத்தில் தான் கற்றுக் கொண்டு வந்திருந்ததை செய்து பார்த்து வீடு முழுவதும் அழகாய் அடுக்கினாள்.

உல்லன் பந்து கோர்த்த திரைக்கற்றைகளை விக்ரமிற்கும் அவளுக்குமான அறையின் கதவில் மாட்டிக்கொண்டு இருந்தவளுக்கு முன்னொருநாள் இதை முன்நிறுத்தி நடந்த சம்பாஷணைகள் நினைவில் தோன்ற இப்பொழுது ஏனோ கோபம் வரவில்லை. இதழ்களில் கீற்றாய் புன்னகை கூட!

கடைசிமுடிச்சை போட்டு கதவின்மேல் நிலையின் மூலையில் மாட்டுவதற்கு எம்பினால் உயரம் போதவில்லை. ஒன்றிரண்டு முறை எம்பி பார்த்து விட்டு முக்காலி எடுத்து வரலாம் என்று நினைத்த நொடி அவள் பின்னே நின்று அவள் கைகளில் இருந்ததை வாங்கி மாட்டிவிட்டு அறைக்குள் நுழைந்தான் விக்ரமாதித்தியன். அவன் முகத்திலும் இளக்கம்! அவளைப் போலவே நினைத்திருப்பானோ! ஆச்சர்யமாய் இருந்தது அனுரதிக்கு.

மதுரையை தாண்டி ஒரு ஊரில் இருந்தது முரளியின் பூர்வீக கோவில். அடிக்கடி செல்வதில்லை தான் ஆனாலும் உடல்நிலைக் குறைவிற்குப் பிறகு செல்லவேண்டும் என்று ஒரிருமுறை நினைத்திருக்கிறார். இப்பொழுது தன் மகனின் திருமணமும் நடந்து முடிந்து விடவே இந்த வருட திருவிழாவிற்கு மருமகள் கையால் பொங்கலிட்டு படையல் வைத்துவிடவேண்டும் என்று முடிவெடுத்து விட்டார். அதற்குப்பின் தடையேது! இருகுடும்பமும் திருவிழாவிற்கு முன்னரே சென்று தங்கி சிறப்பித்து விட்டு வருவது என முடிவாயிற்று, பூரணி, அசோக் உட்பட.

பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கவென ஒருநாள் முழுக்க சுற்றினார்கள் ஆனால் எதிலும் அனுவும் விக்ரமும் கலந்து கொள்ளவில்லை. வேலையிருப்பதாய் நழுவி விட அவர்களுக்கு ஆடை வாங்கும் பொழுதாவது அருகில் இருக்கவேண்டும் என்று கமலா அனுவிற்கு அழைக்க அவள் அப்பொழுது தான் வகுப்பு முடிந்து வீட்டிற்கு வந்தேன் எனவும் அவளிடம் சுருக்கமாக விஷயத்தை சொல்லி வைத்து விட்டு மகனுக்கு அழைத்து வீட்டிற்குப் போய் அனுவைக் கூட்டிக்கொண்டு வருமாறு கடைபெயரைக் கூறிவிட்டு போனை அணைத்தார். சிலகணங்கள் சிந்தித்தவன் அனுவை அழைத்தான்.

“ அம்மா கால் பண்ணினாங்களா…” என்றான் நேரடியாய்,

‘ம்’ மட்டும் கொட்டினாள் அவள்,

“ நீ டாக்சி புக் பண்ணி வந்திடு, நான் கடைக்கிட்ட வெயிட் பண்றேன்…” என்றவன் அவள் பதிலுக்காக காத்திருப்பது புரிய, அதே ‘ம்’ மை மீண்டும் கொட்டி போனை வைத்தாள் அனு.

விக்ரமிற்கு அவளை கூட்டி வருவதில் எல்லாம் ஒன்றுமில்லை. அப்படி பொறுப்புகளை வேண்டுமென்று அலட்சியப்படுத்தும் இயல்பு அவனுக்கு இல்லை. அனுரதி தேவைப்படும் நேரத்தில் கேப் புக் செய்து செல்லவேண்டிய இடங்களுக்கு போய்வருவதை பார்த்திருக்கிறான். இப்பொழுதும் அப்படியே வந்துவிடலாம் எனும்போது உத்தம கணவன்  மனைவி போல அக்கறையாய் அவன் சென்று அழைத்து வரவேண்டும் என்பது மாதிரி தேவையில்லாத அலட்டல் எதற்கு என்றே நினைத்தான் அவன். இதற்கு அவளும் இதை எதிர்பார்க்க மாட்டாள் என்ற நினைப்பும் காரணம்.

டாக்சியில் இருந்து வெளிவந்து அனு கடையை நோக்கி காலெடுத்து வைக்கும் பொழுது தான் அவனைப் பார்த்தாள். அப்பொழுது தான் வந்திருப்பான் போல! ஏன் இங்கே நிற்கிறான் என்ற கேள்வியுடன் அவனைப் பார்க்க, அவள் நினைப்பது புரிந்தது போல,

“அது…அம்மா கூட்டிட்டு தானே வரசொன்னாங்க அதான்… “ என்றான் குரலில் சிறு தயக்கத்தோடு,

அச்சிறு தயக்கமும் அவளுக்கு பிடிக்கவில்லை என்ன இது தப்பு செய்தது போல என நினைத்தவள் மென்முறுவலோடு,

“போகலாம் …” என்றபடி அவனுடன் சேர்ந்து நடந்தாள். இருவரும் அறைக்குள் அந்நியர்களாயினும் வெளியில் இயல்பாய் நடப்பதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல! எனினும் இப்பொழுது விஷயம் வேறு ஆயிற்றே! மூத்த தலைமுறையினர் முன் பெரிதாக மெனக்கெடத் தேவையில்லை ஆனால் அசோக், பூரணி கண்களுக்கு முன்?! அதுவும் அவர்கள் புதிதாய் திருமணம் பார்த்தவுடன் தெரிந்து போகுமே!

இயல்பாகவே அழுத்தமாய் இருக்கும் விக்ரமாதித்தியனைப் பற்றிக்கூட பெரிதாய் கவலைப்பட ஒன்றும் இல்லை. ஆனால் தான் தான் பலரது கவனத்தை கவரக்கூடும் என்று அனுரதிக்கு நிச்சயமாய் தோன்றியது. எனவே தன்னால் முடிந்தவரையில் உரிமையாய் இயல்பான மனைவியாக தன்னை இருத்திக் கொண்டாள். துணிக்கடையில் நெருங்கி நின்றதில் ஆரம்பித்து இருவருக்கும் ஒரே நிறத்தில் ஆடை எடுத்ததில் இருந்து திருவிழாவில் பொங்கல் வைத்து படையல் முடியும்வரை அப்படியே!

எங்கும் அவனோடு நெருங்கியே நின்றாள். அவன் முகம் பார்த்து சிரித்தாள். உரிமையோடு பேசினாள், சுற்றங்களின் கேலி கிண்டல்களை கூட முகம் சிவந்து ஏற்று சிரித்தபடியே நகர்ந்தாள்.

இதில் என்ன நடக்கிறதென்று ஓரளவு புரிந்தும் புரியாமலும் குழம்பி இருந்தது விக்ரமாதித்தியன் தான்! அக்குழப்பத்தின் ஊடே மாடியில் தன் பால்ய நண்பன் ஆனந்த்தோடு நின்று பேசிக் கொண்டிருக்கையில்,

திடீரென ஆனந்த் “ டேய் மச்சான்… யாருடா அந்த ப்ளூ சாரி, செம அழகா…! பூரணி அக்காக்கூட… சிரிச்சி பேசிட்டு வர்றாங்களே…! தெரிஞ்சவங்களாடா…” என்று ஆர்வமாய் அடுக்கிக்கொண்டே போக,

அசுவராசியமாய் நண்பனின் பேச்சில் கவனம் வைத்திருந்தவன் ‘பூரணி அக்காவோடு’ என்றதிலேயே நிமிர்ந்து விட்டான்.

முதல்முறையாக அவன் கண்களுக்கு புதிதாக தெரிந்தாள் அனுரதி!  அடர்ஊதா பட்டுப்புடவை அவள் நிறத்திற்கு கச்சிதமாய் பொருந்தியது. முகம் கழுவியிருப்பாள் போல, வகிட்டில் இருந்த குங்குமம் தடம் தெரியவில்லை. தழைய கட்டியிருந்த புடவை மெட்டியையும் மறைத்திருந்தது. மேலும் அனுவை இந்த அறிவுகெட்டவன் பார்த்திருக்கவில்லை தான், அதற்காக!…

எங்கிருந்து தான் அவ்வளவு கோபம் வந்ததோ!

“டேய் அறிவுகெட்டவனே..! என்னடா பேசற… கீழே போடா சும்மா கடுப்பேத்தாம…” என்றவனை பார்த்து ஆனந்த் விழிக்க,

கண்களை ஒருமுறை மெல்லமாய் மூடித் திறந்தவன்,

“ஷி ஸ் அனு, மை ஓய்ப்! காலையிலே அப்பா சொன்னார்ல… இவதான்… என்றவனின் குரல் இன்னும் இயல்பாகி விடவில்லை.

நண்பனின் பேச்சில் மொத்தமாய் பதறிப் போனவன்,

“மச்சான் சாரிடா… அவங்கதான் அனுன்னு தெரியல.. அதான் மச்சான் சாரிடா…டேய் நீங்க  ரெண்டு பேரும் சேம் கலர் ட்ரெஸ்.. நீங்களும் செம மேட்ச்… சூப்பர் டா…” என்று வேகமாக பேசி முடித்தவன் அவன் பதிலுக்கு காத்திராமல் தப்பித்தோம் என கீழே ஓடிவிட்டான்.

விக்ரமிற்கே ஆச்சர்யமே! சட்டென்று ஏன் இவ்வளவு கோபம் என்று குழம்பித்தான் போனான்!

குழம்பியிருந்தவன் அத்தோடு விடாமல் விடையை தேடிக் கண்டுபிடித்திருக்கலாம். ஆனால் வல்லவனே ஆனாலும் விதி வலியது ஆயிற்றே! பட்டுத்தான் ஆகவேண்டும் போல…!

Advertisement