Advertisement

எவ்வித தங்கு தடையுமின்றி சொல்லப்போனால் ஒரு சராசரி திருமணத்தை விட சுமூகமாகவே நடந்து முடிந்தது விக்ரமாதித்தியன் அனுரதியின் திருமணம். உற்றார் உறவினரின் மனநிறைவோடு நடந்த திருமணம், சம்பந்தப்பட்ட இருவரைத் தவிர!

பால், பழ சடங்கெல்லாம் முடிந்ததும் பூரணி அனுவை விக்ரம் அறைக்கு அழைத்துச் சென்றாள். ஆண் அறை என்றில்லாமல் நேர்த்தியாய் ஒரு ஒழுங்கோடு இருந்த அறை பார்த்த உடனேயே மனதைக் கொள்ளையடித்தது. ஓய்வெடுக்க கூறிவிட்டு பூரணி வெளியே சென்றுவிட, கதவை வெறுமனே சாத்திவிட்டு சுவாதீனமாய் அறையை சுற்றி பார்வையை ஒட்டியவள் கண்களில் ட்ரெஸிங் டேபிளின் மேல் நிஜம்போல குட்டியாய் வீற்றிருந்த அழகுமயில் தென்பட அதைப்பார்த்த படியே அருகில் வந்தவள் நிஜமான தோகையை கொண்டே செய்யப்பட்டிருந்த தோகையை கண்டு வியந்தவாறே கைகளால் மெல்ல வருட, பட்டான மென்மை மேலும் மேலும் வருட தோன்றவே ஆசையாய் வருடியவளின் கை அதன் கொண்டையில் பட்டதும்,

சட்டென்று கண்களை சிமிட்டி ஒருபக்கமாய் கொண்டையை சிலுப்பியபடி தோகையை விரித்து அடங்கியது அவ்வழகு மயில்! இதை எதிர்பார்க்காமல் திகைத்து பின்வாங்கியவளின் புன்னகை பெரிதாய் விரிந்தது.

பின் லேசாய் அலுப்பு தெரிய நடந்து சென்று கட்டிலில் அமர்ந்தது தான் தெரியும், எப்படி என்றே தெரியாமல் அசந்து உறங்கிவிட்டாள். தூரமாய் யாரோ அழைப்பது போலிருந்தது உறக்கத்தை கலைக்க, திரும்பி படுத்தவளுக்கு அது பூரணியின் குரல் என்று உணர்ந்து கொள்ள சில கணங்கள் பிடித்தது.

சட்டென்று எழுந்து அமர்ந்தவளுக்கு அறையை மொத்தமாய் நிறைத்திருந்த இருட்டில் ஒன்றும் புரியவில்லை, இருந்தும் கதவு தட்டிய சத்தத்தில் உத்தேசமாய் அதை நோக்கி சென்று திறந்துவிட்டவளை புன்னகையுடன் எதிர்நோக்கிய பூரணி,

“ நல்லதூக்கமா… சரி சீக்கிரம் இரண்டு பேரும் கிளம்பிவாங்க, கோவிலுக்கு போகணும்…” என்றாள்.

தூக்க கலக்கத்தில் இருந்தவளுக்கு பூரணி சென்ற பின்னும் சரியாக எதுவும் புரியவில்லை. மாலைநேர இருட்டின் ஊடே மெல்லியதாய் கசிந்த வெளிச்சத்தில் உத்தேசமாய் மெல்ல அடியெடுத்து வைத்தபடியே கைகளால் துழாவி சுவற்றில் ஸ்விட்ச்சை கண்டுபிடித்து லைட்டை போட்டுவிட்டாள்.

ஜன்னலோரமாய் போடப்பட்டிருந்த ‘சோபா கம் பெட்’ டில் பட்டு வேஷ்டி,சட்டை சகிதமாய் கைகளை கட்டியபடி படுத்திருந்தான் விக்ரமாதித்தியன்.

லேசாய் திடுக்கிட்டவள் மறுகணமே இயல்புக்கு திரும்பி விட மேலோட்டமாக அவன்மீது ஆராய்ச்சி பார்வையை போட்டவளால், கொஞ்சம் கூட அசையாமல், பிறழாமல் தூங்கும்போது கூட என்ன அழுத்தம் என்று வியக்காமல் இருக்க முடியவில்லை. ஆனாலும் மேல் இரண்டு பட்டன் திறந்து லேசாக தளர்ந்திருந்த சட்டை, வழக்கம்போல் இறுகியில்லாமல் இயல்பாய் இருந்த இதழ்கள்! முன்நெற்றியில் விழுந்திருந்த முடிக்கற்றைகள்……. நங்கென்று ஓங்கி தன் தலையிலேயே போட்டுக்கொண்டாள்.

“ வெட்கம் கெட்ட மனது…” என்று கடிந்தவள், தற்பொழுது மலையாக தெரிந்த விஷயத்தில் கவனத்தை செலுத்தலானாள். அவனை எப்படி எழுப்புவது…?! இந்த ஜென்மத்தில் அவளறிந்த வரை அவனை பெயர் சொல்லி அழைத்ததில்லை. ஓ பெயர் சொல்லாமல் மட்டும் அவனை கூப்பிட்டு இருக்கியா என்ன… என்று உடனே கேள்வி கேட்ட மனசாட்சியை சட்டையே செய்யாமல் யோசித்தாள்.

 கமலாம்மா மாமாவ கூப்பிடுற மாதிரி “ என்னங்கனு…கூப்பிடலாமா… இவனையா… ம்க்கும் …” என தனக்குள்ளே பட்டிமன்றம் நடத்தியபடி தலையை சிலுப்பி நிமிர்ந்தாள்.

முன்னிருந்த நிலையிலேயே கண்களை மட்டும் திறந்து எந்த சலனமும் இல்லாமல் தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவனை பார்த்ததும் அனுரதியின் இதயம் ஒருமுறை நின்று துடித்தது.அவன் முன்னால் இப்படி வந்து நிற்பதற்க்கு தான் ஏனென்று பார்க்கிறான் என்று புரிய,

“ கமலாம்மா சீக்கிரம் கிளம்பி வர சொன்னாங்க…கோவிலுக்கு போகணுமாம்” என்று ஒரேமூச்சில் கூறிவிட்டு குளியலறைக்குள் புகுந்து விட்டாள்.

அறைவெளியே சென்றதும் மற்றதெல்லாம் மறந்துவிட்டது. இரவு சடங்குக்கென அவளை சுற்றிநின்று அலங்கரிக்கும் பொழுதும் அவனைப்பற்றி தெரியுமென்பதால் அவள் மனம் சலனமற்று அமைதியாகவே இருந்தது. அவள் நினைத்தது போலவே அறைக்குள் பால்சொம்போடு நுழைந்தபொழுது மெத்தையில் அமர்ந்தபடி மடிக்கணினியில் வேலைபார்த்துக் கொண்டிருந்தவனைப் பார்த்தவளுக்கு சிரிப்பு தான் வந்தது.

அவனருகில் வந்தவள் தம்ளரில் பாலை ஊற்றி அவனிடம் நீட்ட, எந்த அலட்டலுமில்லாமல் வாங்கி குடித்து விட்டு மீண்டும் வேலையில் ஆழ்ந்தான். டிரெஸிங் டேபிளுக்கு சென்று பெரிய நகைகள், வளையல்களை கழட்டி வைத்தவள் கை தானாக அருகிலிருந்த மயில்பொம்மையை நோக்கி செல்ல, தான் மட்டும் அறையில் இல்லை என்பதை உணர்ந்து கையை பின்னிழுத்துக் கொண்டு பால்கனிக்குச் சென்றாள். கண்ணெதிரே தன்னறை இருளில் மூழ்கியிருந்தது. காற்றில் ஊஞ்சல் அழகாய் ஆடுவதைப் பார்த்து தன்னையுமறியாமல் ஒரு ஏக்கம் மேலிட,சட்டென்று அறைக்குள் திரும்பி நடந்தாள்.

ஏதோ நினைத்தவனாக நிமிர்ந்து அவளைப் பார்த்தவன்,

“ லைட் எரிஞ்சா தொந்தரவா இருக்குமா…? தூக்கம் வராதா…? “ என்றான்.

“ அப்படியெல்லாம் இல்லை,அதெல்லாம் வரும்..” என்றவளுக்கு மாலை தான் மெத்தையில் படுத்திருந்ததால் சோபாவில்அவன் படுத்தது நினைவு வர , நடந்து சென்று சோபாவில் படுத்தவள் தலை முதல் கால் வரை போர்வையை போர்த்திக்கொண்டு உறங்கிவிட்டாள். ஒருகணம் நிமிர்ந்து பார்த்தானே தவிர அவன் வேறேதும் செய்யவில்லை. அன்றிலிருந்து அவளது உறைவிடம் அந்த சோபாவாயிற்று. வெளியே தேவைக்கென ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசினாலும் அறையின் உள்ளே இருவரும் அந்நியர்களே!

விக்ரமாதித்தியனைப் பொறுத்தவரை அவன் தந்தையின் சந்தோசத்திற்காக அவரின் உடல்நிலை கருதி ஒத்துக்கொண்ட முடிவு இது. அதற்குமேல் திருமணத்தின் மீதே நாட்டமில்லாத அவனுக்கு அனுரதியைப் பற்றி யோசிக்க தேவையிருக்கவில்லை. ஆனாலும் அதற்காக அவன் அதை அப்படியே விட்டுவிடவில்லை , திருமணத்திற்கு முன்பே அனுவிடம் அவளது விருப்பதைக் கேட்டான் தான். அவளும் அவனை மாதிரியே தானே பதிலளித்தாள். மேலும் ஆரம்பத்தில் இருந்தே தன்னிடம் மோதலும் வம்புமாய் இருந்தவளிடமிருந்து வேறெந்த பதிலையும் அவன் எதிர்பார்க்கவில்லை என்பதே உண்மை. இவ்வாறாக கடமை முடிந்ததென அவனிருக்க, அனுரதி என்ன நினைக்கிறாள் என்பது அவளுக்கு மட்டுமே வெளிச்சம். முன்பைவிட உரிமையுடன் அக்கறையாய் முரளியை கவனித்துக் கொண்டாள். கமலாவை தானிருக்கும் நேரம் சமையலறைக்குள் நுழையவே விடுவதில்லை. முரளியின் நிலைகருதி அவரை அலையவிடாமல் அமர்த்திவிட்டு நேரம்காலம் பார்க்காமல் உழைக்கும் விக்ரமிற்காக கூட தன் கோட்ப்பாடுகளை சிறிது தளர்த்தியிருந்தாள்.

அவள் மருமகளாய் வருமுன் மகனுக்காக கமலா பார்த்துப் பார்த்து செய்தார் தான், ஆனால் இப்பொழுது தான் ஒதுங்கியிருந்தால் தங்கள் உறவின் மேல் சந்தேகம் வருவது ஒருவிஷயம் என்றாலும் வயதானவரை அவன் வரும் நேரம் வரை காத்திருந்து அவனுக்கு பரிமாறவிட்டு விட்டோ ,அவனுக்காக வேலைகள் செய்யவிட்டு விட்டோ தனக்கென்ன என்று இருப்பதற்கு அவள் மனசாட்சி இடம் கொடுக்காது.

எனவே தான் அவள் முதலில் அவனுக்கு பரிமாறும் வேலையை எடுத்துக்கொண்டது, பிறகு மேலும் சிறுசிறு வேலைகளும் சேர்ந்து கொண்டன. வீட்டில் உள்ளவர்களை கருதியோ என்னவோ அவன் எதையும் மறுக்கவுமில்லை அதற்காக பெரிதாய் அலட்டிக் கொள்ளவுமில்லை, இயல்பாய் ஏற்றுக்கொண்டான். அவள் வேலையாய் இருக்கும்போது அவளைத் தேடாமல் அவனே எடுத்துப்போட்டு சாப்பிடும் அளவிற்கு இயல்பாக! அதனால் நீ இருப்பதும் இல்லாததும் எனக்கு ஒன்றுதான் என்றமாதிரி!

நினைவுகளை அசைபோட்டவாறு உணவுமேஜையில் அமர்ந்தபடியே லேசாய் உறங்கிவிட்டிருந்தவளை பதினொரு மணியை அறிவித்த சுவர்கடிகாரம் எழுப்பிவிட கண்களை தேய்த்தவாறு நிமிர்ந்து அமர்ந்தாள். வெளியே கேட் திறக்கும் சத்தம் கேட்க எழுந்தவள் அவன் வந்து அழைப்புமணியை அடிக்கும் முன்பு கதவை திறந்துவைத்து விட்டு குருமாவை சூடு படுத்தி, சப்பாத்தியை எடுத்து வந்து மேஜையில் வைக்கவும் அவன் குளித்து வரவும் சரியாய் இருந்தது.

அவள் பரிமாறிவிட்டு அமர , உண்டவன்,

“ காலையிலேயே வர லேட் ஆகும் சொன்னேனே…” என்றான். காலையில் பொதுவாய் உணவு உண்ணும்போது சொன்னான் தான்.

“நான் உட்காரலனா அத்தை முழிச்சு இருந்திருப்பாங்க…” என்றவள் அந்தபேச்சு முடிந்தது என்பது போல் காலியான அவன் தட்டில் இரண்டு சப்பாத்தியை வைத்து குருமாவை ஊற்றிவிட்டு சமயலறைக்குள் சென்றுவிட்டாள். பாத்திரங்களை ஒதுக்கிவிட்டு அவள் அறைக்குள் நுழையும் பொழுது, அவன் மடிக்கணினியைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

“என்ன இது…? வந்ததே லேட், மணி பன்னிரெண்டு ஆகபோகுது, இப்பவும்….ப்ச்…” என்று தனக்குள்ளேயே சலித்தவள், யோசித்தவாறே கையிலிருந்த பாலை அவனருகில் வைத்துவிட்டு ஏசியை குறைத்துவிட்டு படுத்தாள். ஒருநிலையில் இல்லாமல் திரும்பித் திரும்பி படுத்தாள். கையை கொண்டு கண்ணை மறைக்கும்படி நெற்றியில் வைத்து படுத்தவள் ‘ ப்ச்’ என்று மீண்டும் புரண்டு படுத்தாள். சிலநிமிடங்களில் விளக்கு அணைக்கப்பட்டு அவன் மெத்தையில் படுத்து போர்வை சரசரக்கும் அரவம் கேட்டது. கண்களை திறவாமலேயே அவனுக்கு முதுகுகாட்டி குளிருக்கு வாகாய் சோபாவில் முடங்கியவளின் இதழ்கள் தானாய் விரிந்தன!

Advertisement