Advertisement

வாழ்க்கை விசித்திரமானது தான்! வருடக்கணக்காக முடிவெடுத்து நிதானமாக எழுப்பிவற்றைக் கூட நொடியில் தடம்மாற வைத்துவிடும் அளவிற்கு விசித்திரமானது! நதிநீர் ஓட்டம்போல் வாழ்க்கை அதன் போக்கில் மனிதர்களை இழுத்துக்கொண்டு சென்றுகொண்டே தான் இருக்கிறது. யாருக்காகவும் நிறுத்துவதும் இல்லை, தடம்மாறுவதும் இல்லை! இப்படி தன் எண்ணம்போன போக்கை தடுக்காமல் ஆழ்ந்திருந்தவள் திடீரென நடப்பிற்கு வந்தாள்.

கையிலிட்ட மருதாணி முக்கால்வாசி காய்ந்திருந்தது. மொட்டை மாடி பனிக்காற்று உடம்பை துளைக்க ஆரம்பித்திருந்தது புரிந்தாலும் எழுந்து செல்ல தோன்றவில்லை. அவள் என்ன மனநிலையில் இருக்கிறாள் என்று அவளுக்கே புரியவில்லை. விடிந்தால் அவளுக்கும் விக்ரமாதித்தியனுக்கும் திருமணம்! கடந்த ஒருமாதத்தில் என்னவெல்லாம் நடந்துவிட்டது! ஒருநாள் மாலை வீட்டில் உள்ள அனைவர் முன்னும் தன்னை அழைத்து அருகில் அமரவைத்த ஜெகன், முரளியோடு சேர்ந்து தான் விக்ரமிற்கும் அவளுக்கும் திருமணம் செய்ய முடிவு எடுத்திருப்பதாய் கூறினார். இருவீட்டில் உள்ள அனைவருக்கும் இதில் மிக்க மகிழ்ச்சி என்றார். அவள் விஷயத்தை உள்வாங்க முயற்சி செய்து கொண்டு இருக்கும் பொழுதே, அவளைவிட முரளிக்குடும்பத்திற்கு ஏற்ற மருமகள் கிடைக்காது என்றார். அவளுக்கும் இதைவிட சிறந்த புகுந்த வீடு கிடைக்காது என்றார்.

அவ்வீட்டை நினைக்கையில் மனதிற்குள் ஒரு இதம் பரவியது என்னவோ உண்மைதான். ஆனால் அதற்குமேல் மற்றதை பற்றி யோசிக்க வழியில்லாமல் அவள் தந்தை அவர்ப்பாட்டுக்கு பேசிக்கொண்டே போனார். நண்பனுக்கு முடியாமல் போனதில் மனதளவில் மறுகி போனவர், திரும்பி வந்தும் முரளி உற்சாகமில்லாமல் இருப்பதைப் பார்த்து சரிசெய்ய முயற்சித்திருப்பார் போலும். விக்ரமின் கல்யாணம், மருமகளாக அனுரதி! நல்ல முயற்சி தான். கூடவே இத்தனை மகிழ்ச்சியிலும் தன்னிடம் இப்பொழுது திருமணத்தில் விருப்பமா, யாரையாவது விரும்புகிறாயா… எனக் கனிவாய் கேட்டு உறுதி செய்து கொண்டுதான் இந்த பேச்சையே எடுத்தார். எனவே அவரைக் குறை கூற வழியே இல்லை.ஏன் அவளுக்குமே முக்கியப் புள்ளியை தவிர்த்து விட்டு மற்றதையெல்லாம் பார்த்தால் மறுக்க காரணமே இல்லைதான். ஆனால்!

சிந்தனைகளூடே ஒருவாறாக அவர் சொன்னதையெல்லாம் கேட்டு வெறுமனே தலையை மட்டும் ஆட்டிவிட்டு அறைக்கு வந்தவளை கைப்பேசி அழைக்க, எடுத்தாள். குரலில் உற்சாகம் பொங்க அழைத்தாள் பூரணி,

“ சொல்லுங்க அக்கா…” என்று அனு சொல்ல,

“ அக்காவா… ! அக்காவெல்லாம் இல்லை…இனி அண்ணி அனு” என பூரணி சிரிப்பதைக் கேட்டு மெலிதாய் சிரித்தவள் மேலும் அவள் பேசியதற்கெல்லாம் ஒருவாறாக பதில்சொல்லி செல்லை அணைத்துவிட்டு குழம்பிய முகத்துடன் பால்கனிக்கு வந்து அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்தாள்.

மருத்துவமனை வாசத்திற்கு பிறகு முரளி ஆளே மாறிவிட்டார் தான். எப்பொழுதும் எதாவது சிந்தனை, முகத்தில் கவலையின் ரேகை , தன் மகனுக்கு சீக்கிரம் நல்வாழ்வு அமைக்க நினைத்தார் போல! அதுவே தான் தன் தந்தை இந்த முடிவிற்கு வந்ததற்கும் காரணமாக இருக்கும். ஆனாலும்! எல்லாரும் முடிவே பண்ணிவிட்ட மாதிரி பேசுகிறார்களே! மாதிரி என்ன பண்ணிவிட்டார்கள் தான் என நினைத்தவளுக்கு ஒன்றுமட்டும் புரியவில்லை, அவன் எப்படி இதற்கு ஒத்துக் கொண்டான்! முரளி அவனிடம் கூறும்பொழுது என்ன பதில் கூறியிருப்பான் என்ற சிந்தனையிலேயே மண்டையை உடைத்துக் கொண்டிருந்தவளை சிறிதும் ஏமாற்றாமல் ஒருநாள் வெள்ளிக்கிழமை கோவில் சென்று திரும்பும் வழியில் அனைவரும் முன்னே நடக்க மெதுவாய் யோசித்தபடி நடந்தவளோடு இணைந்து நடந்தவன்.

தெளிவாய் நேரடியாய் விஷயத்திற்கு வந்தான்,  

“ உனக்கு எப்படியோ அப்படிதான் எனக்கும் முடிவு பண்ணிட்டு தான் சொன்னாங்க…, அப்பா முகத்தில் அப்போ பார்த்த சந்தோசத்தில் அவங்க சொன்னதை எனக்கு மறுக்க தோணல, அதோட எனக்கும் கல்யாணத்துல பெரிய ஈர்ப்போ இந்தமாதிரி பொண்ணுதான் வரணும்னு எதிர்பார்ப்போ எதுவும் கிடையாது. அதையும் தாண்டி இப்போ எனக்கு தொழில் தான் முக்கியம். அப்பா நல்லாயிருந்தா நான் அவர்கிட்டேயே இதையெல்லாம் சொல்லியிருப்பேன், இப்போ அப்படி பட்டுன்னு சொல்லமுடியாது, அதோடு எப்படியும் ஒருநாள் கல்யாணம் பண்ணிதானே ஆகணும், அதிலயும் நீ னா அப்பாக்கு ரொம்ப பிரியம் இதெல்லாம் யோசிச்சி தான் நான் சரினு சொன்னேன். ஆனால் நீ இது எதுக்காகவும் யோசிக்க வேண்டாம், உனக்கு பிடிக்கலைனா இப்பவே சொல்லிடு மற்றதை நான் பார்த்துகிறேன்” என்று அவன் நிறுத்த, 

தன் பதிலை எதிர்பார்க்கிறான் என்பது புரிய,

“ எனக்கும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை… “ என்றவளின் குரலில் இருந்த உறுதியில் என்ன நினைத்தானோ, ஓரிரு நொடிகளுக்குப் பிறகு,

“ தேங்க்ஸ்… இது உன் முடிவுனாலும் இதில் அப்பாவிற்கான அக்கறையும் இருக்குனு தெரியும், மற்றபடி கல்யாணத்திற்குப் பின்னும் நீ உன் விருப்பப்படியே இருக்கலாம் நான் உன்னை எந்த விதத்திலும் தொந்தரவு செய்ய மாட்டேன்…” என்று பேசிக்கொண்டே சென்றவன் சட்டென நிறுத்திவிட்டு, 

“ எனிவே தேங்க்ஸ்…” என்றுரைத்து சென்றுவிட்டான். 

“ பெரிய தேங்க்ஸ், மூஞ்சியை பாரு… தனக்குத்தான் பெரிய மனசு அப்பாக்காக தியாகம் செய்யப்போறோம்னு நினைப்பு, நான் கூடத்தான் உன்னையே கல்யாணம் பண்ணிக்க போறேன்! அப்போ என்னைய என்ன சொல்லுறது…உன்னை தொந்தரவு செய்யமாட்டேன்னு சொல்லும்போதே நீயும் என்னைய தொந்தரவு செய்யக்கூடாதுன்னு உள்ளர்த்தம் இருக்கிறது கூடவா எனக்குப் புரியாது. என்னவோ நான் இவன் தோளை பிடிச்சு தொங்கப்போற மாதிரி, இவன்தான் இனி காலத்துக்கும் புருஷன்னு என் தோள்ல தொங்கி என்னைய படுத்தப் போறான்! இவனுக்கு யாரு விக்ரமாதித்தியன்னு பேரு வச்சா! வேதாளம் …ம்க்கும்..” என்று வழக்கம்போல அவனை வாரி இறைத்தவள் அவனை திருமணம் செய்ய மனதளவில் தயாராகியும் விட்டாள்.

கண்மூடி திறப்பதற்குள் நாட்கள் பறந்து விட்டன! இதுதான் இனி என புரிந்துகொண்ட அனுரதியும் சந்தோசமாகவே தன்னை சுற்றி நடப்பவற்றில் கலந்து கொள்ள ஆரம்பித்தாள். மேலும் சுற்றி இருந்தவர்களின் மகிழ்ச்சி அவளை வேறெதுவும் நினைக்கவே விடவில்லை. விக்ரமும் அதையே நினைத்திருப்பவனை போலவே நடந்து கொண்டான். ஆனால் இருவருக்கும் இடையே இருந்த இரும்புத்திரை மட்டும் இறுகிக்கொண்டே போனது.

நெடுமூச்சொன்றை வெளியிட்டவள் குளிர்காற்று தாங்காமல் துப்பட்டாவை போர்வையாய் போர்த்திக்கொண்டு கீழே வந்தாள். தன்னறைக்கு வந்து சுற்றி ஒரு பார்வை பார்த்தவள் மெல்ல நடந்து பால்கனிக்கு சென்று ஊஞ்சலில் அமர்ந்தாள். சோகமுமில்லாமல் மகிழ்ச்சியுமில்லாமல் மனது நிர்மலமாய் இருந்தது.

தனக்குப் பிடிக்குமென்று ஆசையாய் தந்தை வாங்கி மாட்டிய ஊஞ்சல். இருக்கையின் இருபக்க முடிவில் உருண்டையாய் நீளமாய் அழகு தலையணைகள். ஒருபக்கமாய்  தொட்டியில் வைத்திருந்த முல்லை படர்ந்து பால்கனி பிடிகம்பிகளை நிறைந்திருந்தது. நாளையும் இவை அனைத்தையும் பார்க்கத் தான் போகிறாள். எதிர்வீட்டிலிருந்து! ஆனால் இவைக்கும் தனக்கும் இன்றிருக்கும் உறவு நாளை வேறாகி போயிருக்குமே ! வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நட்டாலும் துளிர்த்து , வேரூன்றி பரந்து அந்த இடத்தையே நிறைத்து விடும் ஒவ்வொரு பெண்ணும் வாழ்வில் எதிர்கொள்ளும் நிமிஷங்கள்! தன்னுள் ஓடிய அனைத்து எண்ணங்களையும் அப்படியே கண்மூடி உள்வாங்கியவள், காலையில் சீக்கிரம் எழவேண்டும் என்பது ஞாபகம் வர உள்சென்று படுக்கையில் விழுந்தாள். 

பனிமகள் விரித்துச்சென்ற கம்பளத்தை கொஞ்சமாய் தலைகாட்டிய சூரியன் தன் பொன்னிற கதிர்களால் அலங்கரித்திருக்க, வாடைக்காற்று செடிக்கொடிகளுடன் உறவாடி அவ்விடத்தை குளுமையால் நனைந்திருந்தது. இளங்காலை பொழுதின் அமைதியில் ரம்மியமாய் லயித்திருந்த கோவிலில் இருக்குடும்பத்தின் அளவில்லா மகிழ்ச்சியின் ஊடே எவ்வித எதிர்ப்பும், எதிர்பார்ப்பும் இன்றி அனுரதியின் கழுத்தில் தாலிகட்டி தன் மனைவியாக்கி கொண்டான் விக்ரமாதித்தியன்!

Advertisement