Advertisement

அவள் சொல்லிச் சென்றதை மீண்டும் ஒருமுறை மனதினில் ஓட்டிப் பார்த்தவனுக்கு அதுவரை இருந்த இறுக்கம் சற்று மட்டுப்பட்டது போலிருந்தது. அச்சமயம் போன் வந்து அந்நிலையை கலைக்க, எடுத்துபேசிவிட்டு நீண்ட மூச்சொன்றை வெளியேற்றியவன் கைக்குட்டையால் முகத்தை அழுந்த துடைத்து விட்டு ஒருகையால் தலைகோதியவாறே தன்தந்தை இருந்த அறைக்குச் சென்றான். அங்கே ஜெகன் டாக்டர் பார்த்துவிட்டு நர்ஸிடம் மருந்து கொடுக்க சொல்லி சென்றதையும் காலையில் கண் விழித்து விடுவார் என்று சொல்லி சென்றதையும் கூற தலையாட்டி மட்டும் கேட்டுக்கொண்டான், வேறெதுவும் பேச தோன்றவில்லை.

அவனின் நிலையை பார்த்தவர் அவனை அழைத்துக் கொண்டு அறைவெளியே வந்து அவன் தோல் தட்டி ஆறுதல் சொல்ல,

“இல்லை மாமா…வேலை நடுவில் நான்தான் அப்பாவை சரியாக கவனிக்காம விட்டுடேனோன்னு தோனுது” என்று முகம் கசங்க சொன்னவனை,

லேசாய் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டவர்,

“ அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை விக்ரம்… எல்லாத்தையும் ப்ராக்டிக்கலா யோசிக்கிற நீயே இப்படி நினைக்கலாமா…?! சொல்லப்போனால் அவனுடைய வேலையையும் சேர்த்துப் பார்த்து அவனுக்கு நீ உதவிதான் செய்ற, இது தான் நடக்கனும்னு இருந்தா அதை நம்ம மாற்ற முடியுமா விக்ரம்… உனக்கு சொல்லவேண்டியது இல்லை, இதுமாதிரி தேவையில்லாம நீயே உன்னை குழப்பிக்காத… இப்போ என்ன இனி அவன் அதிகமா வேலை பார்க்காம ரெஸ்ட் எடுக்க விட்டுடலாம்..” என நீளமாக பேசி அவனை ஒருவாறாக தேற்றி அவன் முகம் சிறிது தெளிவடைந்ததும் சாப்பிட அனுப்பியவரால்,

“ அப்பா… விக்ரம் அவர்தான் இதுக்கு காரணம்ன்ற மாதிரி நினைச்சிட்டு இருக்கார் போல ப்பா… அவர்கிட்ட பேசுங்க…” என்று சொல்லி சென்ற தன் மகளை நினைத்து ஆச்சரியப் படாமல் இருக்கமுடியவில்லை!

இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்து விட்டு திரும்பிய முரளியை எந்தவேலையும் செய்யவேண்டாம் நான் சொல்லும்வரை வீட்டிலேயே ஓய்வெடுங்கள் முக்கியமான விஷயமென்றால் இங்கிருந்தே பாருங்கள் என்று விட்டு முழுப்பொறுப்பையும் விக்ரம் எடுத்துக்கொண்டான்.

கமலாவின் கவனிப்பு, பூரணியின் வார இறுதி வாசம் கூடவே ஜெகன் குடும்பத்தினரின் நேர செலவழிப்பும் சேர்ந்துகொள்ள முரளியின் உடம்பு நன்றாகவே தேறியது.

அனுவிற்கு சிறுவயதில் இருந்து உற்சாகமாய் கலகலவென இருக்கும் முரளி இப்படி சோர்ந்து போய் சிரிப்பதும், சிரித்தமுகமாய் தன்னை அழைக்கும் கமாலாம்மா எதையோ தொலைத்தது போல சுற்றுவதையும் பார்க்க பிடிக்கவேயில்லை. எனவே வேலைவிட்டு வந்தபின் முடிந்தநேரம் முரளிவீட்டில் கழிக்க ஆரம்பித்தாள். கூடவே முகிலனையும் கூட்டிச் சென்று விடுவாள்.

அன்று காலையிலிருந்து அலுவலகத்தில் நடந்ததை சுவைப்படக் கூறுவது முகிலனை வம்பிழுப்பது என அவர்களை சிரிக்க வைப்பதோடு நிறுத்தாமல் கமலாவோடு சேர்ந்து சமையலுக்கு உதவிவிட்டே தன்வீட்டுக்கு திரும்புவாள். அவளின் முயற்சி புரிந்ததால் யாரும் அவளை ஏதும் சொல்வதில்லை. விக்ரம் கூட அவளை தான் கண்டுகொள்ள மாட்டானே ஒழிய முகிலனோடு உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பான்.

தந்தையின் வேலைகளும் தன்னை விழுங்கிவிட விக்ரமின் வெள்ளிக்கிழமை கோவில் வருகை நின்றிருந்தது. அதற்கு பதிலாக கமலாவோடு முரளி வருவார். அப்படியொரு வெள்ளிக்கிழமை ஜெகனும் வரவே இருதம்பதியினர் கூட அனு,முகிலன் என நிறைவாக கோவில் சென்று திரும்பிக் கொண்டிருக்கையில்,

“ அக்கா… இந்த கடையில் நாண்,ரொமாலி ரொட்டி செம சாப்ட் தெரியுமா..! அதுக்கு காம்பினேஷன் பட்டர் பனீர் க்ரேவி ஒன்னு இங்க செய்வாங்க அடிச்சிக்கவே முடியாது தெரியுமா அவ்ளோ டேஸ்ட்… “ என்று முகிலன் பேசிக்கொண்டே சப்புகொட்ட,

“ ஒரு கடையையும் விடரதில்லை.. இந்த கடைக்கு எப்போ போன..” என்றாள் அனு,

“ என் ப்ரெண்ட் பர்த்டே ட்ரீட் க்கா…அக்கா இப்போ போலாமா…” என்று ஆசையாய் கேட்ட தம்பிக்கு பதில் சொல்லும்முன் பெரியவர்களிடம் திரும்பியவள், எல்லாரையும் பார்த்து அவர்களையும் கூப்பிட,

“ நீங்க சாப்பிட்டுட்டு வாங்க அனுமா… இவருக்கு வெளி சாப்பாடு கொடுக்க வேணாம்னு பார்க்கிறேன்” என்றார் கமலா,

அவரின் கூற்று உண்மையே ஆனாலும் அவர்களை விட்டுவிட்டு சாப்பிடுவது நன்றாயிராது , தனியாய் வந்தால் அது ஒருமாதிரி , ஆனால் இப்பொழுது அவர்களை அனுப்பிவிட்டு நாம் மட்டும்..அதற்காக தம்பியின் ஆசையையும் மறுக்க மனம் வரவில்லை. கணநேரத்தில் யோசித்தவள்,

“ அதுவும் சரிதான் கமலாம்மா… ஆனால் அதற்காக நீங்க நாண்,பனீர் க்ரேவி சாப்பிட முடியலையேனு கவலை படவேணாம் மாமா…அவங்க எல்லாரும் கடைக்கு போகட்டும், வாங்க நம்ம வீட்டுக்கு போலாம், நான் சமைக்கிறேன் வீட்டிலேயே அதைவிட சூப்பரா பனீர் க்ரேவி…” என்றவள் அவர்களை அனுப்பிவிட்டு கமலாவோடு சேர்ந்து தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு இருவரையும் கூட்டி கொண்டு வீட்டிற்கு வந்தாள்.

வந்தவள் கமலாவை அமரவைத்து விட்டு ‘நாண்’ செய்து சப்பாத்தியிட்டு, பனீர் க்ரேவி, தயிர் பச்சடி வைத்து உணவு மேஜையில் நிரப்பினாள்.

இருவரையும் சாப்பிட அழைத்துவிட்டு தண்ணி எடுக்க சென்றாள். விக்ரமாதித்தியன் வந்ததும் கமலா அவனை சாப்பிட அழைத்ததும் காதில் விழ, கவனித்தவாறே நீரை குடுவையில் நிரப்பிவிட்டு மூடியை மாட்டியபடி திரும்பியவள், அதே வேகத்தில் எதிரில் வந்தவன் மேல் சட்டென மோதிக்கொள்ள,

பதட்டத்துடன் தண்ணீர் ஜக்கை இறுக்கி பிடித்தாள். இம்முறை திட்டிவிட்டு ஓடமுடியாது. மெல்ல நிமிர்ந்தவளை நகரும் உத்தேசம் சிறிதும் இல்லாமல் முறைத்துக்கொண்டு நின்றான் அவன்.

அவன் பார்த்த பார்வையிலேயே உள்ளங்கை வியர்க்க ஆரம்பித்தது. என்ன செய்வதென்று விழித்தவளை நல்லவேளையாக கமலா அழைக்க ஒருநொடியும் தாமதிக்காமல் ஓடிவிட்டாள்.

இருவருக்கும் பரிமாறிவிட்டு அவளும் அமர, அவளருகே இருந்த நாற்காலியில் வந்தமர்ந்தவனை பார்த்ததும் சற்றுமுன் சமன்பட்டிருந்த இதயம் மீண்டும் தாறுமாறாய் துடிக்க ஆரம்பித்தது!

முகத்தில் எதையும் காட்டாமல் இருக்க முயன்று கொண்டிருந்தவளுக்கு அவனுக்கு பரிமாற வேண்டுமா?! என்று அடுத்த குழப்பம்.

நல்லநேரமாக அவளை மேலும் சோதிக்காமல் அவனே எடுத்துப்போட்டு உண்ண ஆரம்பிக்க, நிம்மதியுற்றவளாய் உண்ண ஆரம்பித்தாள். பொதுவிஷயங்களில் ஆரம்பித்து பேச்சு அப்படியே பயணிக்கும்பொழுது அனு தன்வீட்டில் உல்லன் நூட்களை பந்துகளாக்கி அவற்றை கோர்த்து ஒவ்வொரு கதவுகளிலும் திரைசீலைகளின் நிறத்திற்கேற்ப ஊடே தொங்கவிட்டிருந்தாள். அவற்றை பற்றி கமலா பேச முரளியும் சந்தோசமாய் பாராட்டியபொழுது , இங்கே இருக்கும் ஐந்து அறைக்கதவிற்கும் அதுபோல செய்து மாட்டவா என அனுக் கேட்க, தாராளமாய் என்றவர்களை பார்த்து புன்னகை சிந்தியவாறு உணவை நோக்கி குனிந்த நொடி, அவள் பக்கம் இருக்கும் பனீர் க்ரேவியை எடுப்பதற்காக அவளருகே வந்து கைநீட்டி எடுத்தவன்,

“ என் அறைக்கென்று யாரும் மெனக்கெட வேண்டாம் “ என்றான் அடிக்குரலில்,

அவன் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறான் என்று புரியவே அவளுக்கு ஓரிரு நொடிகள் பிடித்தது. மொத்தமாய் சொன்ன ஐந்து அறையில் அவனதும் ஒன்று என்பது புரிய கோபமாக நிமிர்ந்தவளால் முடியவில்லை! வெகுஅருகில் இன்னும் ஒவ்வொரு கரண்டியாக க்ரேவியை எடுத்துக்கொண்டு இருப்பவனை எப்படி நிமிர்ந்து பார்ப்பது! போதாக்குறைக்கு பழக்கமற்ற அவனது யூடிகொலன் வேறு இம்சையாய் இருக்க, தட்டை பார்த்தவாறே,

“யாரும் யாருக்காகவும் மெனக்கெடவில்லை… மொத்தமா சொல்லும்போது பழக்கதோஷத்தில் வந்துடுச்சு…” என்று அவனைப்போலவே அடிக்குரலில் உரைத்தவள் அதற்குமேல் தாமதிக்காமல் தட்டில் இருப்பதை முடித்து அங்கிருந்து கிளம்பி தன்னறைக்கு வரும்வரை யாரையும் கண்டுகொள்ளவில்லை.

வந்து ட்ரெஸிங் டேபிளின் முன் அமர்ந்தவள் எதிரே தான் செய்து வைத்திருந்த ஜோடி தலையாட்டி பொம்மையில் ஆண்பொம்மையின் தலையில் நச்சென்று தட்டிவிட்டு,

“என்னைய பார்த்தா அவனுக்கு எப்படி பைத்தியம் மாதிரி தெரியுதா…” என்று உஷ்ணமாய் கேட்க,

காலநிலை தெரியாமல் அப்பொம்மையும் தலையை ஆட்ட அதை முறைத்து பார்த்துவிட்டு நங்கென்று பிடித்து ஆடும் தலையை நிறுத்தினாள்.

“ அவனை சொல்லி தப்பில்லை…அவன் வருவான்னு தெரிஞ்சும் அங்கே இருந்தியே உன்னைத்தான் எதாவது பண்ணனும், எத்தனை தடவை பட்டாலும் புத்தியே வரல…” என்று சற்று வேகமாகவே பேசியவள் இம்முறை கோபத்தில் இரண்டு பொம்மைகளின் தலையையுமே தட்டிவிட்டு விட்டு அவனை கருவியவாறே எழுந்து சென்றாள்.

அங்கே அறைக்கு வந்து கண்ணாடியைப் பார்த்தவாறே சட்டையைக் கழட்டினான் விக்கிரமாதித்யன். வெள்ளை சட்டையில் நெஞ்சருகே குங்குமம்!

“இடிமாடு… எப்போ பார்த்தாலும் இதையே வேலையா வச்சிட்டு சுத்துது, ஆனா அது இடிக்கிறத கூட மன்னிச்சிரலாம்…ஆனா அதுக்கப்புறம் ஏதோ நான் தான் இடிச்சமாதிரி லுக் விடுவாளே… அப்பா…” என முணுமுணுத்தவனுக்கு அவனையும் அறியாமல் முகம் முழுக்க புன்னகை! 

Advertisement