Advertisement

பூரணியின் திருமணம் நெருங்கி கொண்டிருந்ததால் அநேக நேரத்தை கல்யாண வேலையே விழுங்கி கொண்டது. பெங்களூரில் இருந்து விடுப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் அசோக் வர முகூர்த்த புடவை,நகை போன்றவற்றை வாங்கினார்கள். மற்ற நேரங்களை சீர்,சாமான் மற்ற பொருட்கள் வாங்கவென ஒதுக்கினர்.

இந்நிலையில் வேலைக்கான அழைப்பு வந்துவிட ஏதாவது முக்கியமான பொருள் வாங்க அல்லது யாராவது வற்புறுத்தி அழைத்தால் மட்டுமே உடன் சென்றுவிட்டு மற்ற நேரங்களில் தன் வேலையில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தாள் அனுரதி. அதற்கு காரணமும் இல்லாமலில்லை! நகைக்கடையில் ஒருநாள் மரகத கற்கள் இலைகளாய் பதித்து நடுவில் பவளத்தில் பதித்திருந்த ரோஜா மோதிரத்தால் கவரபட்டு அதை பூரணிக்குக் காட்ட அவளும் அதன் அழகில் ஈர்க்கப்பட்டு அதை வாங்கி கைகளில் போட்டு பார்த்தவள், இவர்களின் சம்பாஷணையை கேட்டபடி கைபேசியைப் பார்த்து கொண்டிருந்த விக்ரமை அழைத்து எப்படி இருக்கிறதென கேட்க, சிரிப்புடன் வாங்கி கொள்ள சொல்லியபொழுது அவன் ஒரு ஒப்புக்காக கூட அந்த மோதிரத்தை பார்க்கவில்லை என்பதை பூரணி கவனிக்க தவறினாலும் அனு நன்றாகவே கவனித்து உணர்ந்திருந்தாள்.

எனவே கரும்பு மெஷினில் நாமாக சென்று ஏன் தலையை கொடுக்க வேண்டும் என்று முடிந்தமட்டும் மற்றவர் கவனத்தை கவராமல் ஒதுங்கிவிட்டாள். இப்படியாக நாட்கள் உருண்டோட அன்று அலுவலகத்தில் இருந்து அரைநேர விடுப்புடன் வந்தவளை முகிலன் மட்டுமே எதிர்கொண்டான். அவனும் அவளை பூரணியின் பெண் அழைப்பிற்கு சீக்கிரமாக அம்மா வரச்சொன்னார் என்றுவிட்டு மண்டபத்திற்கு கிளம்பிவிட்டான்.

வேலையின் அழுத்தமோ இல்லை இத்தனை வருடமாய் ஒன்றாய் சுற்றிய பூரணி பெங்களூர் செல்லப்போகிறாள் என்ற நினைப்போ என்னவென்று தெரியாத வெறுமை மனதை சூழ்ந்திருக்க, மணியைப் பார்த்தவள் இந்நேரம் எழுந்திருப்பான் என எண்ணியபடியே வெற்றிக்கு அழைத்தாள்.
தங்கையின் எண்ணைப் பார்த்ததும் முறுவலுடன் எடுத்தவன்,
“ அனும்மா… குட்மார்னிங் டா…” என்றான் குரலில் சந்தோசத்தை தேக்கி,
“ இங்கே மதியம் மூன்று மணி அண்ணா” என்று சிரித்தவள் கூடவே எழுப்பிவிட்டுட்டேனா என்றாள்.

“இல்லடா… இன்னைக்கு முக்கியமான கான்பரன்ஸ் இருக்கு நான் எழுந்திட்டேன்” என்றவன்,

“சரி என்னடா விஷயம்… காலையிலேயே கூப்பிட்டு இருக்க…” எனக் கேட்க,
சுற்றி வளைக்காமல், “ இல்லனா… கொஞ்சம் வேலை டென்ஷன், நாளைக்கு பூரணி அக்காவுக்கு வேற கல்யாணம், வீட்டில் எல்லாரும் பிசி, அதான் உன்கிட்ட பேசனும் போல இருந்துச்சு…” என்றவளின் மனநிலையை அறிந்தவன். மிதமாக ஆறுதல் கூறி மேலும் சிலபல நிமிடங்கள் கதையளந்து விட்டு இறுதியாக இன்னும் ஓரிரு மாதத்திற்கு பிறகு தனக்கு விடுமுறை எனவும் கூறி அவளை மகிழ்ச்சி படுத்திவிட்டே இணைப்பை துண்டிக்க, முன்னிருந்த மனநிலை மாறி இதமாகவே உணர்ந்தவள் சிறிது நேரம் உறங்கிய பின்னரே மாலை விழாவிற்கு கிளம்பினாள்.

இரத்தசிவப்பு அனார்கலியில் அங்கங்கே வெள்ளை முத்துக்கள் வீற்றிருக்க, ப்ரெஞ்சில் ஆரம்பித்து பிஷ் பின்னலில் முடித்து அன்னை எடுத்து வைத்திருந்த மெல்லிய வைரத்தோடு , செயின், கைவளையம் என செட்டாக அணிந்தவள் , மெல்லியதாக மஸ்கராவிலும் சிவப்பு பொட்டிலும் அலங்காரத்தை முடித்து ரோஜா வண்ண இதழுக்கு ‘லிப் பாம்’ மோடு நிறுத்தி கொண்டாள்.

நிம்மதியான மதியத்தூக்கத்தில் முகம் பொலிவுற திருப்தியாய் தன்னை ஒருமுறை கண்ணாடியில் பார்த்துக்கொண்டாள். மணி ஏழைத் தாண்டியிருக்க பலமுறை அனைவரிடமிருந்தும் அழைப்பு வந்திருந்தது ஒருமுறை பூரணி கூட அழைத்திருந்தாள். தன் ஸ்கூட்டியில் சென்றால் தலையும் கலையும் நேரமும் விரயமென உணர்ந்தவள் ‘கேப்’ புக் செய்து மண்டபத்தை அடையும்பொழுது ஓரளவுக்கு மிதமான கூட்டமே இருந்தது.

சாலையிருந்து மண்டப வாயில் வரை பொன்னிற விளக்கு சரங்கள் ஆர்ச் போல மேலே தொடர்ந்து வழியை ஒளியால் நிறைத்திருக்க,

வாயிலில் சந்தன நிற சட்டை, வேஷ்டி சகிதமாய் எப்பொழுதும் இல்லாத இன்முகத்துடன் நின்றிருந்த விக்ரமை பார்த்தவாறே மெதுவாய் நடந்து வந்தவள், இப்பொழுது தன்னை பார்த்தால் என்ன செய்வான் , எப்படி முகத்தை மாற்றுவான் என்ற யோசனையுடனே விழி அகற்றாமல் அவனையே பார்த்தவண்ணம் நடந்து வருகையில் ,

அருகே வந்தவளை நேராய் பார்த்து லேசாய் இதழ் விரிய,

“வா…அனு…” என்று முதன்முதலாய் அவள் பெயரையும் அவளையும் இயல்பாய் அழைத்தவனை விழியகல பார்த்து நின்றாள் அனுரதி.

Advertisement