Advertisement

மயிலிறகு பெட்டகம் 2

கையில் கொண்டு வந்த பாத்திரத்தை அன்னையிடம் கொடுத்து விட்டு, தன் தந்தை, தம்பி உணவுண்ண அமர்ந்திருந்ததைப் பார்த்தவள் தானும் வந்தமர,

மூவருக்கும் இட்லி,சட்னி,சாம்பார், பூரி,மசாலையும் பரிமாறிவிட்டு தானும் உணவருந்த அமர்ந்த அகல்யா, பேச்சுகளிடையே மாலை கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்பதை அனுவிற்கு ஞாபகப் படுத்த,

“போச்சுடா… இன்னைக்கு வெள்ளிக்கிழமை வேறயா…! காலையிலிருந்து நான் செஞ்சதுக்கெல்லாம் அந்த காண்டாமிருகம் என்னைய நெற்றிகண்ணால பொசுக்கிற மாதிரி பார்க்குமே..! என மானசீகமாக முனகினாலும் “ம்க்கும் அப்படியே பார்த்துட்டு தான் மறுவேலை பார்ப்பான் போய் வேலையை பாரு” என்று மனசாட்சி அவளை கடுப்புடன் விரட்ட அந்த மூஞ்சி என்னைய பார்த்தா என்ன பார்க்கலனா என்ன என்று பதிலுக்கு சிலிர்த்தவள் பின் அதைவிடுத்து தன் வேலைகளில் ஐக்கியமாகிவிட்டாள்.

அங்கே எதிர்வீட்டில் நுழைந்தவன் முகத்தில் எதையும் காட்டாமல் தன்னறைக்கு செல்ல எத்தனிக்கையில் சாப்பிட வரும்படி கமலா அழைக்க,

“குளிச்சிட்டு வந்திடுறேன் மா…” என்றவாறே அறைக்குள் சென்றவனின் வாய் தானாகவே ‘பிசாசு’ என முணுமுணுத்தது!

“ நான் பார்க்காம வந்தேனா… நான் மோதினேனா… முன்னாடி யார் வர்றா, என்னன்னு கூட பார்க்காம வந்து மோதிட்டு என்ன பேச்சு பேசிட்டு போறா..! பிசாசு…” என வாய்விட்டே பொரிந்து தள்ளினான் விக்ரமாதித்யன். அதற்குமேல் அதை நினைத்து நேரத்தை கடத்த அவனுக்கு நேரமும்மில்லை, அவள் அவ்வளவு முக்கியமுமில்லை!

மாலை மைஊதாவில் மெல்லிசான தங்க கரையிட்ட பாவாடை தாவணியில் முடியை நடுகிளிப் மட்டும் மாட்டி விரித்து விட்டு மல்லிச்சரம் வைத்து கண்களில் மையும் சின்னஞ்சிறு ஒப்பனையுமாய் கோவிலுக்கு சென்றவள்,

வழக்கம்போல் பிள்ளையாரை தரிசிக்கும் முன் பக்கவாட்டில் இருந்த ஆஞ்சநேயரை நோக்கி சென்று ஓரிரு நிமிடங்கள் கண்மூடி இன்னதென்று பிரதிபலிக்கா உணர்ச்சிகளற்ற நிர்மலமான முகத்துடன் நின்றவள், கண்திறக்கும் நொடி வரவிருந்த ஒற்றை துளிநீரை சுண்டிவிட்டு விட்டு புன்னகையுடன் வந்து அர்ச்சனை செய்ய நின்ற அன்னையோடு சேர்ந்துக் கொண்டாள்.

அர்ச்சனை முடிந்து பிரகாரம் சுற்றி வரும்போது தான் கமலா பூரணி, விக்ரமோடு உள்நுழைந்தார். கமலாவும் அகல்யாவும் பூரணியையும் சேர்த்துக் கொண்டு பேச்சில் மூழ்கிவிட, தன் எதிரி அருகிலிருக்கும் பொழுது அடக்கியே வாசிக்கும் பாலிசியைக் கடைபிடிக்கும் அனுரதியோ கமலாம்மாவிடம் சிறு புன்னகையுடன் நிறுத்தியவள், வருவோர் போவோரை நோட்டமிடுவதை சேர்த்து ஆறடி உயரத்தில் அழுத்தமாய் அழகாய் வேறு இருந்து தொலைத்துக் கொண்டு நின்றிருந்தவனின் நடவடிக்கையை தான் கவனித்துக் கொண்டிருந்தாள். அவன் அகல்யாவிடம் மரியாதையாய் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு அவளின்புறம் கூட திரும்பாமல் நின்றிருந்தானே ஒழிய மூஞ்சியில் இருந்த கடுகடுப்பு காலையில் தான் செய்த புண்ணியமே எனத் தெரிந்ததால் அனுவிற்கு அங்கே நிற்க லேசாக படப்படப்பாய் இருந்தது.

அவளுக்கு எப்பொழுதும் அழுத்தமாய் இல்லாமல் சின்னக்குழந்தை போல் குதுகலமாய் இருக்க வேண்டும், அதற்காக தேவைப்பட்ட நேரத்தில் பொறுப்பாய், நிமிர்வாய் இருக்கவும் தவறுவதில்லை. மற்றபடி இந்த அல்லிராணி சிலுப்பல், ஓயாது விக்ரமிற்கு வசைப்பாட்டு படிப்பது எல்லாம் அவளுக்குள் தான் என்றாலும் இப்படி பயந்து இன்னதென புரியா உணர்வுடன் இருப்பதெல்லாம் அவளால் முடியாது.

எனவே கோவிலை விட்டு வந்தும் எரிச்சலாகவே இருக்க சீக்கிரமே இரவு உணவை முடித்துக் கொண்டு அறைக்கு வந்தவள் உடைமாற்றி விளக்கணைத்து படுக்கையில் சரிந்தாள்.

மூடிய இமைகளுக்குள்ளும் எதிர்வீட்டு பால்கனி வழியே அறைவிளக்கு எரிந்ததை உணர்ந்தவளுக்கு இன்று நடந்தவையே படமாய் விரிந்தது! கூடவே ஆரம்பம் முதலான அவர்களது பிணைப்பும்! பாசமாய் அல்ல எள்ளும் கொள்ளுமாய்!

முரளி, கமலா தம்பதியினர் பூரணியோடு காஞ்சிபுரத்தில் வசித்து வர, புதிதாய் மணமாகி ஜெகனும் அகல்யாவும் எதிர்வீட்டை வாங்கி குடிவரவே, தொடக்கத்தில் சிறிதாக குடும்பத்தலைவர்களிடம் முளைவிட்ட நட்பு பின்பு மனைவிமார்களையும் தொற்றிக்கொண்டது. அடுத்து வெற்றிமாறன் பிறக்க, அதற்கடுத்த ஒருவருடத்தில் விக்ரம் பிறக்கவே அச்சமயத்தில் பூரணியையும், வெற்றியையும் சேர்த்து அகல்யா பார்த்து கொள்ளும் அளவிற்கு வளர்ந்தது அவர்கள் நட்பு. இப்படியே இருகுடும்பமும் உறவாகிப் போக இந்நிலையில் முரளி வேலைப்பார்த்த கம்பனியில் அவருக்கு பெங்களூரில் வேலைமாற்றல் கிடைக்கவே குடும்பமாய் அங்கே பெயர்வது என முடிவாயிற்று. ஆயினும் முரளி ஒரு தொகையை சேர்த்தபின் வேலையை விட்டுவிட்டு சொந்தஊரிலேயே தொழில் ஆரம்பிக்கும் எண்ணத்தில் உறுதியுடன் தான் கிளம்பிச் சென்றார்.

முரளியும் ஜெகனும் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் பேசிக்கொள்வார்கள், கமலாவும், அகல்யாவும் அப்படியே! மேலும் எல்லா வருடமும் பொங்கல் விடுமுறைக்கு காஞ்சிக்கு வந்து தங்கி ஜெகன் குடும்பதோடு கொண்டாடுவதை வழக்கமாய் கொண்டிருந்தனர் முரளியின் குடும்பத்தினர்.
இவ்வாறாக இருகுடும்பமும் உறவாகியது இருவரைத் தவிர!

விக்ரமிற்கும் அனுவிற்கும் முதலில் இருந்தே ஆகவில்லை. வருடம் ஒருமுறை வந்தபோதும் கூட இருவருக்கும் முகம் பார்த்து சிரிக்கத் தோன்றவில்லை. இயல்பிலேயே அழுத்தமான விக்ரமாதித்யனும், தன்னை யார் அலட்சியப்பார்வை பார்த்தாலும் பிடிக்காத அனுரதியும் எதிரெதிர் துருவங்களாயினர்.

பூரணியின் படிப்பு முடிந்து விக்ரம் முதல்வருடம் கல்லூரியில் சேர்ந்திருந்த சமயம் முரளி மொத்தமாக காஞ்சிக்கே வந்துவிட,பெரியவர்களின் உறவு மேலும் பிணைந்ததோடு மட்டுமல்லாமல் கொஞ்சம்கூட பந்தா இல்லாமல் பழைய மாதிரியே பழகும் பூரணியையும் துருத்துருவென அழகாகவும் அறிவாகவும் இருந்த அனுவையும் ஒருத்தருக்கொருத்தர் மிகவும் பிடித்துப் போனது. வெற்றிப் படிப்பை முடித்ததும் மேற்படிப்பை முடித்து விட்டு அங்கேயே சிலகாலம் வேலைப் பார்க்கிறேன் என கனடா சென்று விட, பள்ளிமுடிந்தபின்பும் விடுமுறை நாட்களிலும் பூரணி, அனு,முகிலனுக்கு இன்பமாய் ஊர்சுற்றுவதே வேலையானது. அதிலும் அனு முரளி, கமலாவிற்கு செல்லப்பிள்ளையாகி போனாள். பாதிநேரம் இங்கும் பாதிநேரம் அங்கும் என பொழுது போவதே தெரியாது. இதில் அனுவிற்கு உறுத்தும் ஒரே விஷயம் மாதத்திற்கு ஒருமுறை தலைகாட்டும் விக்ரமாதித்யன் தான்!

அவன் அனைவரிடமும் சிரித்து உறவாடும் ரகமல்ல அதேநேரம் அளவாய் மரியாதையாய் பண்போடு பேசுவான். ஏதாவது முக்கியமான விஷயமெனில் தவிர முரளி வீட்டுக்கு வரும் பழக்கமில்லை. வழக்கமாக பூரணியோடு அதிகநேரம் செலவழிக்கும் அனுவிற்கு அவன் வரும் நாட்களில் பூரணியைப் பார்ப்பதே அரிதாகி விடும், தவறி எதற்காகவேனும் சென்றாலும் அவன் பார்வையில் ஒரு அலட்சியம் இருப்பதைப் போலவே தோன்றும் அனுவிற்கு. ஒரு வார்த்தை என்ன வீட்டிற்கு வந்தவளை பார்த்தும் பாராமல் போய் விடுவான்.அதனால் அவன் வரும் நேரமெல்லாம் அவள் அவ்வீட்டிற்கு செல்வதையே தவிர்த்து விடுவாள்.

அதனாலேயே அவன் பட்டப்படிப்பு,மேற்படிப்பு இரண்டையும் பெங்களூரிலேயே முடித்து விட்டு வந்து இங்கு தன் தந்தையின் தொழிலை தானும் சேர்ந்து பார்க்க ஆரம்பித்து வருடங்கள் கடந்தபின்னும் இதுவரை ஒருதடவைக் கூட இருவரும் நேராய்ப் பேசி கொண்டதில்லை.

அனுவைப் பொறுத்தவரை அந்த திமிர்ப்பிடித்தவனின் செய்கையை பொறுத்துப்போவது அவளுக்கு தேவையில்லாதது! துஷ்டரைக் கண்டால் தூரவிலக வேண்டும் என்ற பழமொழியை அவள் பரவாயில்லை என அவனை சகித்து சிறுவயதில் அவனும் வருகிறான் என்பதை பொருட்படுத்தாமல் எல்லோருடனும் சேர்ந்து விளையாடிய பொழுதே அவனது அலட்சியப் பார்வையாலும், கோபமுறைப்புகளாலும் அவளுக்கு பாடமாகவே கற்றுக்கொடுத்திருக்கிறான்.

தன்மானத்தை தாக்கும் அவனது அருகாமையிலோ அவனது கண்பார்வையிலோ இன்றுவரை அவள் முடிந்தமட்டும் ஒதுங்கியே இருந்தாள். இந்தப் பூரிகிழங்கு மட்டும் இன்று சதி செய்யாமல் இருந்திருக்கலாம் என நினைத்தவாறே உறங்கியும் போனவள், நேற்றுப்பட்ட சூட்டின் காரணமாக மறுநாள் அலாரம் எழுப்பும் முன்னே எழுந்து கோலவேலையை முடித்து விட்டு வந்துவிடவும் தவறவில்லை!

Advertisement