Advertisement

மயிலிறகு பெட்டகம் 19

வந்தவன் அவளருகே ஊஞ்சலில் அமர்ந்து அவளையே பார்ப்பது புரிந்தும் அவளால் கண்களை திறக்க முடியவில்லை. அழுகை வரும் போல் இருந்தது. வேகமான மூச்சிழுத்து கண்ணீரையும் உள்ளே இழுத்தவள் கண்ணை திறவாமலேயே, “எப்படித் தெரியும்….” என்றாள் கரகரத்த குரலில்,

ஓரிரு மணித்துளிகள் கரைந்த பின்னும் பதில் வராததால் கேள்வியுடன் மெல்ல விழி மலர்த்தியவளை கரையுடைத்த காதலுடன் பார்த்துக் கொண்டிருந்தான் அவளது ‘ஆதி’யானவன்!

அவனது பார்வை வீச்சை தாங்காமல் விழி தாழ்த்தியவள்,

“ஆதி…..” என்றாள் வெளி வராத குரலில், சட்டென்று அவள் கையை தன்கையோடு இறுக்கியவன்,

“இதை கூப்பிட உனக்கு பதிமூணு வருஷம் ஆச்சுல்ல….” என்றான் கரகரத்த குரலில்!

அவனும் உணர்ச்சிகளின் வசத்தில் இருந்தான், அவளுக்கோ சுத்தமாய் பேச்சே வரவில்லை! யாருக்கும் தெரியாமல் பொக்கிஷமாக பாதுகாத்த ரகசியம்! கனவிலும் கைகூடுமா என முன்நாட்களில் அவளை ஏங்க வைத்த விஷயம் எல்லாம் ஒட்டுமொத்தமாய் உடைந்து இப்படி தன்முன் உருவெடுத்து அமர்ந்திருக்கிறது என்பதை கிரகித்து கொள்ளவே அவளுக்கு சற்று அவகாசம் தேவைப்பட்டது.

அதற்குமேல் அவளை காத்திருக்க வைக்காமல் அவன் இருகைகளையும் விரிக்க,

விழிகளில் தழும்பிய நீருடன் அவனைப் பார்த்து இதழ் விரிய புன்னகைத்தவள் உரிமையாய் அவன் நெஞ்சில் தலை சாய்த்து கொண்டாள். தன்னிடத்திற்கு வந்துவிட்ட உணர்வுடன் அவள் உலகத்தையே மறந்து கண்மூடியிருக்க,

அவள் காதருகே குனிந்தவன்,

“ ரதி” என்றான் கிசுகிசுப்பாய், அவ்வளவு தான் சட்டென்று கண்விழித்தவளுக்கு அதுவரை மறந்திருந்த முக்கியமான விஷயங்கள் ஞாபகத்திற்கு வர அதுவரையிருந்த வெட்கமெல்லாம் குறைந்து அவனிடமிருந்து நிமிர்ந்து அமர்ந்தவள்,

“சொல்லுங்க… எப்படி தெரியும்..” என்றாள் காதலும் ஆவலுமாய்,

அவளது முகத்தை ஆசையாய் பார்த்துவிட்டு,

“ம்…சொல்றேன், ஆனா அதுக்கு முன்னாடி ஒரு விஷயம் சொல்லனும்…” என்றான் தயக்கத்துடன்,

என்னவென்று அவன் முகத்தை பார்த்தாள் அனுரதி. அவள் முகம் பார்க்காமல் ஊஞ்சலில் இருந்து எழுந்தவன், பால்கனி கைப்பிடியில் கைகளை பதித்தபடி ஓரிரு நொடிகள் அலைப்புறுதலுடன் எதற்காகவோ தடுமாறி நின்றான். பின் நீண்ட மூச்சை இழுத்து விட்டுக்கொண்டு முடிவெடுத்தவனாய் நிமிர்ந்தவன், முல்லை பந்தலருகே இருந்த குட்டி மல்லிச்செடியில் இருந்த குண்டுமல்லியை பறித்துக்கொண்டு அனுவின் முன் நின்றான்.

சட்டென்று ஒரு முட்டிக்காலை தரையில் மடக்கியவன், பூவை அவள் முன் நீட்டியவாறே,

“ஐ லவ் யூ ரதி…” என்றான் சிரிப்புடன்!

ஊஞ்சலிலிருந்து சட்டென்று இறங்கி விட்டவளுக்கு அதற்குமேல் என்ன செய்வது, எப்படி செயல்படுவது என எதுவும் புரியவில்லை.

இந்நேரத்தில் கண்ணீரை விடக்கூடாது என பிடிவாதமாய் மூச்சை உள்ளிழுத்து விழிநீரையும் கட்டுப்படுத்தியவள்,

அவன் கையை இறுக்கி பிடித்து கொண்டு அவனை மாதிரியே கீழேயே கால் மடக்கி அமர்ந்து கொண்டாள்.

“நானும்….நானும் உங்களை லவ் பண்றேன்…ரொம்ப…..இவ்வளவு வருஷமா…..” என இருகைகளையும் அகலமாய் விரித்து சத்தமாய் சொன்னவளின் கண்களில் இருந்து கட்டுப்படுத்த இயலாமல் ஒரு துளி நீர் விழுக அதை துடைக்க கூட தோன்றாமல் அவன் கையை பிடித்து கொண்டாள். அவளை வேகமாய் அருகில் இழுத்து அணைத்தவன் அவள் கண்ணீரை துடைத்துவிட்டு அந்த ஒத்தை மல்லிப்பூவை அவள் தலையில் சொருகினான் சிரிப்புடன்,

அடுத்த நொடி சட்டென்று எழுந்தவன் அவளையும் அப்படியே தூக்கி ஊஞ்சலில் அமரவைத்து விட்டு அருகில் அமர்ந்துகொண்டான்.

“ம்…சொல்லு, எப்படி …எப்போ…” என அவன் கதைகேட்க ஆர்வமாக,

“நான் சொல்றேன்… அதுக்கு முன்னாடி நீங்க சொல்லுங்க, நீங்க தான் ஒரே ஷாக்கா கொடுத்துட்டு இருக்கீங்க… இதற்குமேல் என்னால முடியாது…” என அவள் சிரிப்புடன் கேட்க,

மனைவியின் ஆசைமுகத்தைப் பார்த்ததும் மனம் மாற

“சரி ஓகே..கேளு, உனக்கு என்ன தெரியனும்…” என்றபடியே அவள் பக்கமாய் திரும்பி அமர்ந்தான். அவளும் கேட்டாள்… எப்படி தெரியுமென்ற அதே கேள்வியை,

“ உன் அலமாரியில்…நான் சின்ன வயசுல ஆசையா சேர்த்து வைச்சிருந்த மயிலிறகுகள் அப்புறம் அது கூட இருந்த டைரி….”என்றபடி அவன் புன்னகைக்க,

“நான் நினைச்சது சரிதான், காலையிலேயே ரொம்ப யோசிச்சேன், என்னை தவிர வேற யாருக்கும் தெரியாது அப்புறம் எப்படி தெரிஞ்சுதுனு! அப்புறம் தான் தோனிச்சு , என் அலமாரிய வெற்றி திறந்தது, அப்படி தான் தெரிஞ்சு இருக்குமோனு சந்தேகம். அப்போ வெற்றிக்கும் தெரியுமா” என்று மூச்சுவிடாமல் பேச,

அவள் பேசியதை ரசித்து சிரித்தவன், “ ம்ஹிம் ஏற்கனவே மயிலிறகுகள் காணாம போனது எப்படி, யாரு எடுத்தானு ஒரு கேள்வி இருக்கா, இதைப்பார்த்ததும் சட்டுன்னு ஒரு ஸ்பார்க் உள்ளுக்குள்ள! அதுமேல டைரி வேற இருந்துச்சா… உடனே என்னால வெற்றிக்கிட்ட சொல்ல முடியல, அவனை சமாளிச்சு வெளியே அனுப்பிட்டு தான் பார்த்தேன்…” எனவும்,

“ வேற என்ன பார்த்தீங்க….” என்று அனுரதி இனிய படபடப்புடன் கேட்க,

“வேற என்னவா, டைரியை தான் பார்த்தேன்…வேற என்னடி…என்ன வச்சிருக்க இன்னும்…” என்று விக்ரம் ஆர்வமாக, அவனை சமாளித்து அடக்கிவிட்டு மீண்டும் கேள்வியை தொடர்ந்தாள். அவளுக்கு நிறைய தெரிய வேண்டியிருந்தது.

“அப்படின்னா…இந்த விஷயம் தெரிஞ்சபின் தான் ஒருவாரம் ஊருக்கு போனிங்க…” என்றவளின் முகம் சற்று வாடி போனது.

இதமாய் அவள் கையை பிடித்தவன்,

“ஒருவாரம் அதுவும் அந்த நேரத்துல உன்னை விட்டு பிரிஞ்சு இருந்தது ரொம்பவே கஷ்டமா இருந்துச்சு, ஆனா அப்போ என் நிலைமை ரொம்ப மோசம் ரதி, நீ ஹைதராபாத் போய் பிரிஞ்சு இருந்ததுல தான் உன்னைய இப்படி பிரிஞ்சு இருக்க முடியாதுன்னு தோனுச்சு, எப்பவும் நீ வேணும்னு தோனுச்சு, அப்போ தான் உன் மேல இருக்கிறது காதல்னு புரிய ஆரம்பிச்சுது, அப்போ நீ வேற கோபமா இருந்தியா, உன்னைய எப்படி சரி பண்றதுன்னு யோசிச்ச நேரம், இந்த விஷயம்! நீ என்னைய இத்தனை வருஷமா விரும்புறது தெரிஞ்சா எப்படி இருக்கும், சொல்ல முடியாத சந்தோஷம்! அதேநேரம் இவ்வளவு அன்பை வச்சிட்டு இருந்தவளை , கல்யாணம் பண்ணி எந்த எதிர்பார்ப்பும் வைக்காதனு சொன்னா, உனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்திருக்கும். உன்னோட முகத்தை பார்க்க எனக்கு அவ்வளவு கில்டியா இருந்துச்சு, அப்புறம் நீ என்மேல வச்சிருக்க அன்பு வேற, அதை ரசிக்க தனிமையும் தேவைப்பட்டுச்சு, அதுதான் ஓடிட்டேன் , ஆனால் அதே அன்பு தான் உன்னைய பேஸ் பண்ணிக்கலாம் ரெண்டு அடி அடிச்சா கூட வாங்கிக்கலாம்னு என்னைய திரும்பி உன்கிட்ட சீக்கிரமா ஓடி வர வச்சது “ என்று உணர்ச்சி வசத்தோடு பேசியவனை பார்த்து அவள் புன்னகைக்க,

அவள் கைகளை தன் இருகைகளாலும் அணைத்து பிடித்துக் கொண்டவன்,

“ஐயம் சாரி ரதி….” என்றான்.

“ப்ச்…” என்று அவன் இதழில் ஒருவிரலை வைத்து பேசாதே என்பதாய் தலையாட்டினாள்.

“நான்தான் உங்ககிட்ட சொல்லவே இல்லையே, உங்களை எனக்கு பிடிக்கும்னு! அப்புறம் எப்படி உங்களுக்கு தெரியும், அப்புறம் சும்மா சும்மா சாரி சொல்லக்கூடாது என்கிட்ட கூட…” என்றாள் மிரட்டலாய்,

தொடர்ந்து , “நான் அன்னைக்கு கோவில்ல கோபப்பட்டது கூட நீங்க வரலைன்னு இல்லை, உங்க வேலை எப்படினு எனக்கு தெரியும், அன்னைக்கு உங்களுக்கு மறக்கிற நிலையில இருந்தேன்னு தான், கல்யாணம் ஆகி கூட உங்களை நான் பாதிக்கவே இல்லைனு என்மேலயும் சேர்த்து தான் கோபம். ஏதோவொரு வெறுமை மனசு முழுக்க , அதிலிருந்து விடுபட தான் ஊருக்கு ஒடுனேன். ஆனா அங்கேயும் முழுக்க உங்க ஞாபகம் தான், எப்போ ஊருக்கு வந்து உங்களை பார்ப்போம்னு இருந்துச்சு, அப்போ இடையில் வந்த உங்க மெசேஜ்லா தான் எனக்கு துணையே! அப்புறம் கோபம் போயிட்டாலும் நீங்க எப்படி இப்படி பண்ணலாம்னு ஒரு வீம்பு தான், அதையும் இங்க வந்ததும் பிடிச்சு வைக்க முடியல….” என்று விட்டு சிரிக்க,

“கேடி டி நீ…” என அவனும் சிரித்தான்.

காரியத்தில் கண்ணாய் , “சரி சொல்லுங்க, ஏற்கனவே தெரியும்! அப்போ நேத்து நான் உங்ககிட்ட லவ் சொல்ல போறேன்னு உங்களுக்கு தெரியும் தானே.. அப்புறம் ஏன் அவாய்ட் பண்ணிங்க… அதுமட்டும் இல்லை, இன்னும் சில சமயத்தில் கூட என்கிட்ட க்ளோஸா வரும்போதெல்லாம் சட்டுன்னு நீங்க விலகுறதா எனக்கு தோனுச்சு…ஏன் அப்படி?” என்றாள்

கணவன் மனைவிக்கு இடையே இந்த தெளிவான கருத்து பரிமாற்றம் இருந்தாலே விஷயங்களை தவறாய் புரிதல் ஒழிந்து பாதி பிரச்சினை தீர்ந்துவிடும் என்பதை உணர்ந்தவளாய்! 

இதற்கு பதில் சொல்லுமுன் ஏதோ தயக்கம் வந்து அமர்ந்துகொண்டது விக்ரமாதித்தியனிடம், சிறு பதற்றம் கூட இருந்தது,

அனுரதிக்கு வியப்பு தான்! விக்ரமாதித்தியன் தயங்குகிறானா என்று! அவள் யோசித்து கொண்டிருக்கும் பொழுதே அவன் நீண்ட மூச்சை இழுத்து விட்டு கொண்டு பேச ஆரம்பித்திருந்தான்.

“அது….எனக்கு ஒரு பயம், உன் காதல் தெரிஞ்ச பிறகு தான் உன்னைய தேடுறதா நீ யோசிச்சிடுவியோனு, எனக்கு நீ ஊர்ல இருக்கும் போதே என் மனசு புரிஞ்சிடுச்சு, அதை உன்கிட்ட சொல்ல நேரம் பார்த்து இருந்தப்போ தான் , உன் காதல் தெரிஞ்சுது, ஆனால்…அதை சொல்லாம உன்கிட்ட வரவும் என்னால முடியல,அதான் முதல்ல இப்படி உட்கார்ந்து எல்லாத்தையும் பேசி முடிச்சிடலாம்னு நினைச்சேன், அப்புறம் கடை பெயர் பார்த்ததும் உனக்கு தெரிஞ்சிடும், அதான் இதெல்லாம் முடியட்டும் நினைச்சேன் …”என்றவன் ஒருவித அலைப்புறுதலுடன் அவள் கைகளை பிடித்துக்கொண்டு,

“நான் உன் காதல் தெரியிற முன்னாடியே உன்னைய லவ் பண்ண ஆரம்பிச்சு, அதையும் புரிஞ்சுகிட்டேன் அனு, உன் லவ்காக உன்னைய அக்சப்ட் பண்ணிகல…உனக்கு புரியுதுல்ல…” எனவும்,

அதுவரை அவனை குறுகுறுவென பார்த்து கொண்டிருந்தவள் , சத்தமாய் சிரிக்க ஆரம்பித்தாள்.

“இதுதான் இவ்வளவு நாளா உங்க தலைகுள்ள ஓடுச்சா… ஆதி… எனக்கு உங்களோட ஒவ்வொரு செய்கையும் பதிமூணு வருஷமா தெரியும். இதை என்னால புரிஞ்சுக்க முடியாதா… உங்களோட சின்னமுகம் மாற்றம் கூட எதுக்குன்னு எனக்கு தெரியும், இதுக்கு போயா இவ்வளவு டென்சன்…” என்றவாறே இன்னும் சிரிக்க,

இவ்வளவு நாள் மனதில் போட்டு அழுத்தியது மொத்தமாய் வடிய, அவள் சிரிப்பதை ஆசையாய் பார்த்திருந்தவன்,

“இன்னும் ஒரு தடவை கூப்பிடு…”என்றான் காதலுடன்,

நொடியில் புரிந்து, சட்டென்று முகம் சிவந்தாலும், “ஆதி…” என்றாள் கிசுகிசுப்பாய்,

“ம்…..” என்றபடியே நெருங்கி அமர்ந்தவனை பார்த்து செல்லமாய் முறைத்தவள், ஊஞ்சலில் இருந்து இறங்கி, அவனையும் கைபிடித்து ,

“வாங்க…”வென உள்ளே இழுத்து சென்றாள்.

“என்னடி….”என்றவாறே அவள் பின்னே வந்தவனும் அதற்குமேல் பேசாமல் அவள் என்ன செய்ய போகிறாள் என்று அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கவனிக்க ஆரம்பித்தான்.

“டைரி மட்டும் தானே பார்த்திருப்பீங்க…” என்றவாறே சென்றவள் அடுத்து செய்தவைகளை பார்த்து அவன் விழிகள் ஆச்சர்யத்தில் விரிந்து கொண்டே சென்றன…

டைரி, குட்டி சணல்பை ,இருகைகளையும் சேர்த்து அள்ளமுடியாமல் நெஞ்சோடு சேர்த்து கொண்டு வந்த மயிலிறகுகள், அவளது துணிகளுக்கிடையே பதுங்கியிருந்த அவனது பழைய டீசர்ட், கடைசியாக ட்ரெசிங் டேபிளில் இருந்த ஜோடி தலையாட்டி பொம்மைகள் அனைத்தையும் மெத்தையில் கடை பரப்பினாள்!

தலையாட்டி பொம்மையை கையில் எடுத்தவள்,

“இது நான்…இது நீங்க….” என்றாள் சிரிப்புடன்,

“இது நான் ட்வெல்த் லீவுல செஞ்சது, இது ரொம்ப ஸ்பெஷல் தெரியுமா….நான் பொம்மை செய்ய கத்துகிட்ட பிறகு முதல்ல செஞ்சது இது ரெண்டும் தான், அதுவும் செஞ்சதும் நம்ம தான் இதுன்னு பெயர் வச்சப்போ தான் என் மனசு எனக்கு புரிஞ்சுது…”என்றாள் அழகிய நாணத்துடன்,

பின் மயிலிறகுகளை ஒரு ஓரமாய் ஒதுக்கிய வாறே,

“எனக்கும் சின்னவயசில மயிலிறகு பிடிக்கும், ஆனால் யாருமே எனக்கு கொடுத்ததில்லை. ஏன் அப்பாகூட விக்ரம்க்கு பிடிக்கும்ல, வழியில பார்த்தேன் வாங்கிட்டு வந்தேன்னு உங்களுக்காக தான் வாங்கிட்டு வந்து கொடுப்பாரு, அந்த நேரத்தில் எல்லாம் அவ்வளவு கடுப்பு வரும், அந்த கடுப்பில தான் முதல்ல எடுக்க ஆரம்பிச்சேன், அப்புறம் எங்கிட்ட நிறைய மயிலிறகு இருக்கனும்னு ஆசையில, அப்புறம்….. உங்க மேல உள்ள ஆசையில…” என சிவந்த முகத்துடன் சற்று தடுமாறிய படியே முடித்தாள்.

சின்ன சிரிப்பு அவனிடம்,

“இந்த டீசர்ட் பழசாயிடுச்சுன்னு அத்தைக்கிட்ட சொல்லி தூக்கிப்போட சொன்னிங்க…”

“இந்த கூலிங்கிலாஸ் நீங்க காலேஜ் படிக்கிறப்போ இங்க லீவுக்கு வந்துட்டு போனபோது விட்டுட்டு போயிட்டிங்க…”

“எப்படியும் வெளியில விட்டுட்டு போயிருக்க மாட்டேன், அப்புறம் எப்படி…” என அவன் புருவம் உயர்த்தி கேட்க,

“அது….எப்பவும் நீங்க ஊருக்கு போனபிறகு யாருக்கும் தெரியாம உங்க ரூமுக்கு போயிட்டு வருவேன், உங்களோட பெர்ப்யூம் ஸ்மெல் ரூம் பூரா இருக்கும்..” என்றவள் கண்களை மூடி அந்நொடிகளுக்கு பயணமாகி அவன் வாசத்தை அனுபவிக்க, இம்முறை இமை கூட தட்டாமல் அவளையே பார்த்திருந்தான் விக்ரமாதித்தியன்.

“இது உங்க பேனா, தீர்ந்து போய் டேபிள் அடியில கிடந்துச்சு…” என அவளே தொடர்ந்தாள்.

“இந்த கர்ச்சிப் கொடியில இருந்து பறந்து வந்து கீழ கிடந்துச்சு, பொறுப்பே இல்லாம கிளிப் குத்தாம போட்டு இருந்தாங்க, அதான் நான் எடுத்துட்டு வந்துட்டேன்…” என வரிசையாக குட்டிப்பையில் இருந்ததை காட்டினாள்.

கடைசியாக டைரியை எடுத்தாள். அதுவரையில்லாத மௌனம் வந்து அவளிடம் ஒட்டிக்கொண்டது.

வயலட் நிற டைரியில் லாவண்டர் நிற பக்கங்கள்! முதல் பக்கத்தில் ஒரு குட்டி மயிலிறகு ஒட்டியிருக்க, அடுத்த பக்கத்தில் ஆதி, ரதி என்ற ஆங்கில வார்த்தைகளில் முதல் எழுத்தான “A R “ இதய வடிவத்திற்குள், பூவிற்குள் , இதயவடிவ கொக்கியில் பிணைந்தபடி என விதவிதமாய்!

அடுத்து அவனுடைய புகைப்படங்கள்! அவன் மாடியில் நடந்தபொழுது, ஜன்னல் கம்பிகளின் பின் நின்றபொழுது,பால்கனியில் தேநீர் அருந்தும் பொழுது! வண்டியை நிறுத்துவிட்டு வீட்டிற்குள் செல்லும்போது, அறையில் அலைபேசியில் பேசும்போது, கோவிலில் இருந்து வீட்டிற்கு முன்னால் நடக்கும்பொழுது!……. என அனைத்தும் அவனே…!

ஒவ்வொரு பக்கத்தையும் வலிக்காமல் தடவியவாறே புரட்டியவள் கண்களில் அப்படி ஒரு மென்மை. கடைசிப்பக்கத்தில் ஆதி,ரதியில் இருந்த    ‘A R’ ஊத ஸ்கெட்ச்சில் பொன்னிற விளிம்போடு தீட்டப்பட்டிருக்க, அதைப் பார்த்ததும் காலையில் பார்த்த கடைபெயர் கண்முன் வந்தது. அவனை பார்க்காமல் வெட்கத்தோடு அதை மேலே தூக்கியவள், இதழ் பதித்து மூடிவைத்தாள்.

அதன்பின் தான் நிமிர்ந்து அவனை நோக்கியவள் கவனித்தாள் அத்தனை நேரமும் கண்களில் சொல்லமுடியா பாவத்துடனும், உதட்டில் உறைந்த புன்னகையுடனும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன் இதையெல்லாம் பார்த்து ஒன்றுமே சொல்லவில்லையென! கேள்வியுடன் பார்த்தவளை நோக்கி அதற்காகவே காத்திருந்ததை போல எழுந்து சென்றவன். அவளை எழுப்பி இறுக அணைத்தான்.

எழும்பே நொறுங்கிவிடும் அளவிற்கு இறுக்கமாய்!

மூச்சுமுட்ட நெளிந்தவாறே திமிறியவள்,

“வலிக்குது….ஆதி” என்றாள் சிணுங்கலாய்,

செல்லமாய் அவள் நெற்றியில் இதழ் பதித்தவன், அப்படியே தொடர ஆரம்பிக்க, முறைத்தபடி அவனை விலக்கியவள்,

“நான் இங்க என் பொக்கிஷத்தை யெல்லாம் காமிச்சா, அதைப்பத்தி ஒன்னும் சொல்லாம, என்ன பண்றீங்க…” என முறைத்தபடியே கேட்க,

“அதைவிட முக்கியமான வேலை! என் பொக்கிஷத்தை பார்க்கிறேனே…! “ என்றவன் திரும்ப அணைத்து அவள் உச்சியில் கன்னத்தை வைத்து கொண்டான்.

“ரதி….நான் எவ்வளவு சந்தோஷமா, கர்வமா பீல் பண்றேன் தெரியுமா…உனக்கு ஏன்டா என்னை இவ்வளவு பிடிச்சிருக்கு…அப்படி நான் என்ன பண்ணேன்…” என்று கேட்டான் ஆழ்குரலில்,

.”தெரியலையே… ஆனா பிடிக்கும், ரொம்ப,இப்போ இன்னும் பிடிக்குது…” என்றாள் சிரிப்புடன்,

அவனும் அவளை மாதிரியே, “எனக்கும் இப்போ இன்னும் பிடிக்குது…” என்றான் ஆத்மார்த்தமாய்,

உடனே ,” அப்புறம் ஏண்டி முறைச்சிட்டே திரிஞ்ச…”என்று கேட்க,

“ம்க்கும்…நீங்கமட்டும் பார்வையில காதல் ரசத்தை அள்ளி தெளிச்சீங்களாக்கும், சின்ன பிள்ளைகளா இருக்கும் பொழுது தான் ஆகல, அப்புறமாச்சும் ஒழுங்கா பேசியிருக்கலாம் , முறைச்சிட்டு திரியிறவங்ககிட்ட நானா வந்து எப்படி பேச, அதுவும் லவ் பண்ண ஆரம்பிச்சதும் சுத்தம், பாத்தாலே படபடப்பா ஆகிடும், திருட்டுத்தனமா மட்டும் தான் பார்க்க முடியும்….” என்று அவள் சொல்லிக்கொண்டே போக,

ரசனையாய் பார்த்துக்கொண்டே அவள் விரல்களை சொடுக்கு எடுத்து கொண்டிருந்தவன், அப்படியே விரல் பிடித்து முத்தம் வைக்க, சிலிர்ப்புடன் பேச்சை நிறுத்தி அவன் முகம் பார்த்தவளிடம்,

“பேசியது போதும்….” என்று மெல்லிய குரலில் கிசுகிசுத்து விட்டு அடுத்த நொடி அவளை கைகளில் ஏந்திக்கொண்டான்.

நாணத்துடன் அவன் கழுத்தில் கைகோர்த்தாள். இத்தனை காலமாக பொக்கிஷமாய் மனபெட்டகத்தில் பாதுகாத்த காதலுடன் அவனது மயிலிறகு வருடலான நேசமும் சேர்ந்து கொள்ள, பூரிப்புடன் அவன் நெஞ்சில் முகம் புதைத்து கொண்டாள்.

                  ***

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement